Monday, December 20, 2010

இலவச தொலைக்காட்சி இனிமே கிடையாது!

நாலரை வருடங்கள் முன்பு இந்த வீட்டுக்கு வந்த புதுசு. முன்னால் குடியிருந்தவர் - இந்த மாதயிறுதி வரை என்னுடைய தொலைக்காட்சி இணைப்பே இருக்கும். அடுத்த மாதம் அது துண்டிக்கப்பட்டவுடன் நீ உன்
பேரில் புது இணைப்பு எடுத்துக்கோன்னார். நானும் சரின்னேன்.

ஒரு மாசமாச்சு.
ஆறு மாசமாச்சு.

கேபிள்காரங்க பழைய இணைப்பை துண்டிக்கவேயில்லை. அதற்குண்டான பில்லும் அனுப்பவில்லை.

பணம் கட்டாமே ஓசியில் தொகா பார்ப்பதற்கு என் மனசு கேட்கவேயில்லை. அதனாலே ராத்திரி தூக்கமே வராது. எப்பவும் தொகா என்னை திட்டுற மாதிரியே இருக்கும். நானும் அதை நேருக்குநேர் பார்க்கமுடியாமே, எப்பவும் நிகழ்ச்சிகளை ஒரு பக்கமா உக்காந்துதான் பாப்பேன். (ஏன், 'அங்கே' ஏதாவது பிரச்சனையான்னு யாரும் கேக்கக்கூடாது!).

ஒரு வருஷமாச்சு.
ரெண்டு வருஷமாச்சு.

நானும் யாராவது வரமாட்டாங்களா, தொலைபேச மாட்டாங்களா - தொகாவுக்கான காசு கொடுத்துடுவோம்னு கதவு/தொலைபேசி மேலே விழி வைத்து பாத்துட்டேயிருந்தேன். ம்ஹூம்.

இதற்கு நடுவில் ஒரு தடவை எங்க அடுக்ககம் பூராவும் ஏதோ பிரச்சனை வந்து எல்லா வீடுகளுக்கும் கேபிள் இணைப்பு துண்டாயிடுச்சு. ஒரே நாள்லே எல்லாருக்கும் திரும்ப வந்தாலும் எங்களுக்கு மட்டும் வரவில்லை.

ஆஹா, பணம் கொடுக்காததால் நிறுத்திட்டான்னு மனசு சொன்னாலும், வழக்கம்போல் புத்தி கேட்காததால் (அல்லது புத்தி / மனசு - ஏதோ ஒரு வரிசையில் போட்டுக்குங்க), அந்தப்பக்கம் வந்த பொறியாளர்களிடம் சொன்னேன் - என்னங்க, சரி செய்துட்டேன்னு சொன்னீங்க. எங்க வீட்டுக்கு இணைப்பு வரவேயில்லையே.

அவர்களும் - மன்னிச்சுக்குங்க. இப்ப சரி செய்துடுறோம்னு சொல்லி, அரை மணி நேரத்தில் சரி செய்து கொடுத்துவிட்டார்கள்.

ஆனா, வழக்கம்போல் பில் வரவில்லை.

மூணு வருஷமாச்சு.
நாலரை வருஷமும் ஆயிடுச்சு.

திடீர்னு போன வாரம் ஒரு நாள் தொகாவில் ஏகப்பட்ட பூச்சி(கள்). சரிதான், பெய்த பனியில் எங்கேயோ மின்சாரம் தடைபட்டிருச்சு, இதோ வந்துடும்னு நினைச்சிருந்தோம்.

எனக்கு சரியான கோபம் - "தொகா இல்லாம மனுஷன் எப்படி இருக்கறது? தடங்கலுக்கு வருந்துகிறோம்னாவது போடணுமா இல்லையா. கொஞ்ச நேரத்துலே சரியாகலேன்னா என்ன பண்றேன்னு பாரு"ன்னு டென்சனா இருந்தேன். நான் ஒன்னும் பண்ணமாட்டேன்னு தெரிஞ்சி, வீட்டிலே அமைதியா இருந்தாங்க.

ஒரு பத்து நிமிடத்தில் - டொக் டொக் - கதவுதாங்க. யாரோ தட்டினாங்க.

கேபிள்காரங்க.

பணம் கட்டாமே உங்களுக்கு தொகா வந்துட்டிருந்துச்சு. இப்பத்தான் அதை நிறுத்தினோம்.

ஆஹா.. 4.5 வருஷத்துக்கு மாசம் $40 - ஆக மொத்தம் $2160, கூட அபராதத்தொகையா எதையாவது கேக்கப்போறான். என்ன பண்றதுன்னு நினைச்சிட்டிருந்தபோதே - பயப்படாதீங்க. முன்னாடியே இணைப்பு துண்டிக்காதது எங்க தப்புதான். உங்ககிட்டே பணம் எதுவும் கேக்கமாட்டேன். ஆனா, இனிமே தொகா பாக்கணும்னா நீங்க பணம் கட்டியாகணும்.

சரி சரி. மன்னிச்சிட்டேன். பரவாயில்லை (தப்புதான் நம்ம மேலே இல்லையே!). மாசத்துக்கு எவ்வளவு?

$40௦.

ம்ஹூம். இது ரொம்ப ஜாஸ்தி. என்னாலே முடியாது. (கொய்யால! இது வரைக்கும் எதுவுமே கொடுக்கலியேடா!) நான் அவங்க (இவங்களோட எதிரி!) தொகையை பாத்துட்டு உங்களுக்கு தொலைபேசறேன். அட்டை கொடுத்துட்டு போங்கன்னு சொன்னேன்.

சரி. உங்களுக்காக தொகையில் கொஞ்சம் குறைச்சிக்கறேன். ஒரு வருஷத்துக்கு மாதாமாதம் $20 மட்டும் குடுங்க. அப்புறம் பாத்துக்கலாம்.

சரி. இதுவும் ஜாஸ்திதான். இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்காக நான் இதை எடுத்துக்கறேன்னு சொல்லி தொகா பிரச்சினையை முடித்தேன்.

என்ன பண்றது, நாம கொடுத்து வைத்தது அவ்வளவுதான்னு சொல்லி, இனிமே மாதாமாதம் $20௦ கட்டணும்.

ஆனாலும், தங்க்ஸ் ஒரு ஐடியா கொடுத்தாங்க. ஒரு ரெண்டு மாதம் கழிச்சி இணைப்பை துண்டிக்கச் சொல்லிடலாம். எப்படியும் அவங்க துண்டிக்க மாட்டாங்க. அப்படியே கொஞ்ச நாள் ஓசியில் பாக்கலாம்னாங்க.

யம்மா. ஒரு தடவை சும்மா விட்டான். அடுத்த தடவை மொத்தமா தீட்டிடப் போறான்னு சொன்னாலும், அப்படி செய்துதான் பாக்கலாமேன்னு ஒரு நினைப்பு இருந்துக்கிட்டே இருக்கு.

நீங்க என்ன சொல்றீங்க?

*****

Read more...

Sunday, December 12, 2010

உப்புமாவுக்கு ஒரு அருமையான ரெசிப்பி!

எங்க வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு குட்டிப்பையன் (தென் அமெரிக்கன்) இருக்கான். 4 வயசுதான் இருக்கும். நல்லா துறுதுறுன்னு இருப்பான். இன்னும் குட்டியா இருந்தபோது என்னைப் பார்த்து சிரிச்சிக்கிட்டிருந்த அவன், கொஞ்ச நாளா எங்கே பார்த்தாலும் ஓடி வந்து அடிக்க ஆரம்பிச்சிடறான். அடின்னா எங்க/உங்க வீட்டு அடியில்லே. வடிவேலு வாங்குற மாதிரிதான்.

நானும் ஓரிரு முறையில் சரியாகிவிடும்னு பாத்தால், ம்ஹூம். அப்புறம் நான் அவனைப் பார்த்தாலே ஓட ஆரம்பிச்சேன். அவங்க பாட்டிதான் எப்பவும் மன்னிப்பு கேப்பாங்க. நானும் - சரி விடுங்க. ச்சின்னப் பையந்தானே ( நானில்லை. அவன்) பரவாயில்லைன்னு போயிடுவேன்.

எவ்ளோ நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது - ஒரு தடவை தங்ஸ்கிட்டே சொன்னேன். இப்படி பையன் போட்டு சாத்தறான்னு. அவ்வ். சொல்லாமலேயே இருந்திருக்கலாம். அப்படி இருந்தது அவங்க கேட்ட கேள்விகள்.

அந்த பையன் எதிரே ஏதாவது தப்புத்தண்டா பண்ணினீங்களா?

ஆஹா. ஒரு வேளை அதுவாயிருக்குமோன்னு சந்தேகம் வந்தாலும்.. ச்சீச்சீ. நான் போய் அவன் எதிரே. இல்லேம்மா - என்றேன்.

அவனோட பொருள் எதையாவது எடுத்துக்கிட்டீங்களா?
அவங்கம்மா கிட்டே பேசினீங்களா?

’மை நேம் இஸ் கான்’ விமான நிலைய சோதனை மாதிரி கேள்விகளால் துளைச்சி எடுத்துட்டாங்க. இதுக்கு அந்த பையன் அடிக்கறதே தேவலைன்னு ஆயிடுச்சு.

இப்படியாக டாம்கிட்டே மாட்டின ஜெர்ரி மாதிரி நான் தப்பிச்சி ஓடிட்டிருந்தபோது ஒரு நாள் - மின்தூக்கியில் அவன்கிட்டே வசமா மாட்டிக்கிட்டேன். அவன் என்னை அடிக்க, பாட்டி அவனை அடிக்க - அவன் அழ - (அட, நான் அழலீங்க!) அந்த குட்டி மின்தூக்கியில் ஒரே அடிதடி-ரணகளம்தான்.

பாட்டிக்கும் பேரனுக்கும் நடுவே புகுந்த நான் - விட்டுடுங்க. பாவம் பையன்னு சொன்னா - பாட்டி சொன்னதுதான் சோகம்.

அந்தப் பையனுக்கு ஏதோ மருத்துவ பிரச்சினை. தினமும் நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிடறானாம். அதனால் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ ஆயிட்டான். தினமும் நல்லா அடி வாங்கறான். வயசானா சரியாயிடும்னு மருத்துவர்கள் சொல்றாங்கன்னாங்க.

வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.

முன்னெல்லாம் அவன் அடிக்காக பயந்து ஓடிட்டிருந்த நான், இப்போ அவனையே பார்க்க தைரியமில்லாமல் ஓடி ஒளியறேன்.

*****

ஒரு தகுதிச் சான்றளிப்புக்காக படிக்க வேண்டியிருந்ததால், ரெண்டு வாரமா மென்பொருள் தரம் தொடர் வரவில்லை. அதுக்குள்ளே பல்லாயிரக்கணக்கான (சரி சரி!) மின்னஞ்சல்கள். இனிமே வாரம் ஒரு பகுதி சரியா வந்துடும்னு எல்லாருக்கும் தனித்தனியே சொல்றதுக்குள்ளே மௌஸ் (நாக்கு) தள்ளிடுச்சு.

*****

காலையில் சிற்றுண்டிக்கு சப்பாத்தி வைக்கும்போது - அட, காலையில் சப்பாத்தியா.. ஒரு இட்லி, தோசை இருந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்லுவோம். அப்புறம் கொடுக்கறத வாங்கி சாப்பிட்டு, மதியம் டப்பாவை திறந்தா - காலையில் வேணான்னு சொன்ன அதே சப்பாத்தி வந்திருக்கும். சரி. வீட்டுக்கு போய் சமாளிச்சிக்குவோம்னு அதை சாப்பிடாமேயே எடுத்து வந்திட்டா - திட்டு விழுந்து - மறுபடி சூடு பண்ணி நமக்கே கொடுத்திடுவாங்க. எப்படி இருந்தாலும் அந்த சப்பாத்தியிலிருந்து தப்பிக்க முடியாது.

அதே மாதிரிதான் இந்த ட்விட்டர் ட்விட்டுகளும். ஒழுங்கா அங்கேயே வந்து படிச்சிருந்தீங்கன்னா, நான் மறுபடி இங்கே போடத் தேவையிருந்திருக்காது. என்ன பண்றது, நீங்க அங்கே வரலை, அதனால் அதை மறுபடி இங்கே போடறேன். இங்கேயாவது படிங்க!!.

**

வெயில் காலத்தில் குளிர் காலமே பெட்டர்னு தோணுது. அதே குளிர் காலம் வந்துட்டா, குளிர் காலமே பெஸ்ட்ன்னு தோணுது.

1000 வசதிகள் இருந்தாலும், பக்கத்து வீட்டில் இருக்கும் அந்த 1001 வது வசதி இல்லையேன்னு நினைப்பதுதான் மனித இயல்பு!

டாக்டர் விஜய் அம்மா கட்சியில் சேர்ந்துட்டாருன்னா, அவரோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அம்மா கேரளா போய் சிலைக்கு மாலை போடுவாங்களா?

குளிர் + சூடான தேநீர் + மிக்ஸ்சர் + படிக்கற மூட் இல்லே = கவிதை எழுதிடலாமான்னு தோணுது

உளியின் ஓசை & பெண் சிங்கம் ரெண்டும் இல்லாததால் Netflix எடுக்காமே இருக்கேன்.

குளிருக்கு மங்கி தொப்பி அணிந்தேன். உங்களுக்கு பொருத்தமா இருக்குன்றாங்க வீட்டுலே. எந்த அர்த்தத்துலே சொல்றாங்கன்னே தெரியல

எங்க ஊர்லே, முன்னர் காவல் நிலையம் இருந்த இடத்தில் வங்கி வருது. பணம் போடப் போனா டீ வாங்கிட்டு வரச் சொல்வாங்களோ!

இப்போதைக்கு தமிழில் எனக்குப் பிடித்த இரு வார்த்தைகள் - லீக் மற்றும் (டேப்) ரிலீஸ்

Amount given per Vote should be directly proportional to the number of Tapes released. #JaiHo

வீட்லே இருக்கும்போது மழை பெஞ்சா ஆபீஸுக்கு போகவேணாம். ஜாலி. ஆபீஸில் இருக்கும்போது மழை பெஞ்சா வீட்டுக்கு போகவேணாம். ஜாலியோ ஜாலி!

காருக்குள் சாவி வெச்சி வண்டியை பூட்டிட்டேன். நல்லவேளை நானும் உள்ளேயே இருந்ததால், தொறந்துக்கிட்டு வெளியே வந்துட்டேன்.

*****

இதோ உப்புமாக்கான ரெசிப்பி. பிற்காலத்தில் செய்வதற்காக சஹானா இப்பவே எழுதி அதை அவங்க கோப்பில் சேமித்து வெச்சிட்டாங்க. நீங்களும் இதை பயன்படுத்தி, உப்புமா எப்படி வந்திருக்குன்னு சொல்லுங்க.*****

Read more...

Saturday, November 27, 2010

சமீபத்தில் மறைந்த இன்னொரு தந்தை!

இந்த தொடரின் முதல் பகுதியில் மென்பொருள் தரக்கட்டுப்பாட்டின் தந்தை என்றழைக்கப்பட்ட Watts Humphrey சமீபத்தில்தான் (அக்.28,2010) மறைந்தார் என்று பார்த்தோம். அவரைத் தொடர்ந்து அடுத்த மாதமே - தரத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மற்றொருவர் காலமானார். அவர் யார்? அதுதான் இந்த பகுதி.

**

தர நிர்ணயத்தில் மென்பொருளின் திட்ட மதிப்பீடு (Estimation) செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஒரு வேலை செய்ய எவ்வளவு நாளாகும்னு கணிக்க முடியலேன்னா - ரொம்ப கஷ்டம். உதாரணத்திற்கு, மென்பொருளில் பல வருட அனுபவம் உள்ளவர்கள் - ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய 30 நாட்களாகும்னு குத்துமதிப்பா சொல்றதை யாராலும் ஏற்க முடியாது. அது 'தரம்' கிடையாது. சரியா? இந்த திட்ட மதிப்பீட்டை அறிவியல் ரீதியா செய்ய கண்டுபிடிக்கப்பட்ட முறைதான் - Function Point முறையாகும். ISOவால் அங்கீகரிக்கப்பட்ட முறை இது. இரண்டாம் (Repeatable) அல்லது மூன்றாவது (Defined) நிலையை அடைய எல்லா நிறுவனங்களுக்கும் CMMi வலியுறுத்தும் முறையும் இதுவே.

அப்படி இந்த முறையில் என்ன இருக்கு? அதையும் பாத்துடுவோம்.

*************

ஒரு மென்பொருளில் இருக்கக்கூடிய தகவல்கள் / வெளியேயிருந்து வரக்கூடிய தகவல் பரிமாற்றங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, ஒவ்வொன்றிற்கும் தகுந்த புள்ளிகள் கொடுத்து, இறுதியாக அந்தப் புள்ளிகளை கூட்டினால் வரும் எண்ணிக்கையை அந்த மென்பொருளின் அளவு (size) என்பார்கள். இந்த புள்ளிகளை கணக்கிட பயன்படுத்தும் 5 காரணிகள்:

Inputs
Outputs
Inquiries
External Interface Files
Internal Logical file

அதாவது, பயனரின் தேவைகளை (Requirements) அக்குவேறு ஆணிவேராக பிரித்து, ஒவ்வொரு தேவைகளையும் மேற்கூறிய ஐந்தில் ஏதாவது ஒன்றில் பொருத்தி ’அளவை’ கண்டுபிடிக்க வேண்டும். அப்படி இந்த ‘அளவைக்’ கண்டுபிடித்துவிட்டால், பிறகு தேவைப்படும் மனித உழைப்பு, அதற்கான செலவு எல்லாமே சுலபமாக கணக்கிட்டு விடலாம்.

இதை ஓரிரு வரிகளில் படித்துவிட்டாலும், நல்ல மனிதவளம் நிறைந்த நிறுவனங்களுக்கே, Function Point முறையை பயன்படுத்தி திட்ட மதிப்பீட்டில் திறமையை வளர்த்துக் கொள்ள ஓரிரு ஆண்டுகள் பிடிக்கும். மேற்கூறிய ஒவ்வொரு காரணிகளையும் கவனமாக கணக்கெடுப்பதற்கு மிகுந்த திறமையும் பயிற்சியும் தேவைப்படும்.

**

இந்த Function Point முறையை கண்டுபிடித்தவர் பற்றி ஒரு சிறு குறிப்பு.

பெயர்: ஆலன் ஆல்ப்ரெக்ட் (Alan Albrecht).

** பிப்ரவரி 2, 1927ல் பிறந்த ஆலன், பல்வேறு ராணுவ கணினித் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்தவர்.

** IBMல் வேலை பார்த்தபோது, Function Pointsஐ கண்டுபிடித்தார்.

** இந்த கண்டுபிடிப்பை உலகம் முழுக்க பல்வேறு கூட்டங்களிலும் அறிமுகப்படுத்தி சொற்பொழிவு ஆற்றிய ஆலன், வேலையிருந்து ஓய்வு பெற்றபிறகுகூட இந்த Function Pointsக்கு ஆலோசகராக இருந்தார்.

** The International Function Point User Group (IFPUG) என்ற அமைப்பைக் கண்டுபிடித்து அதை உலகில் அனைத்து நிறுவனங்களும் பின்பற்றி அதனால் பயன்பெற உதவியாக இருந்தார்.

** இப்படி தன வாழ் நாள் முழுக்க 'Function Point'க்காக செலவழித்த ஆலன், திட்ட மதிப்பீட்டின் தந்தை (Father of Estimation) என்றழைக்கப்பட்டார்.

இந்த பகுதியோட முக்கியத்துவம் என்னன்னு கேட்டீங்கன்னா, ஆலன் சமீபத்தில் நவம்பர் 10, 2010 தேதி அன்று காலமானார்.

**

இந்தப் பகுதிக்கான கேள்வி:

1. Function Pointக்காகவே ஒரு தகுதிச் சான்றளிப்பு (certification) உள்ளது. அதன் பெயர் என்ன?

2. Function Point முறை புதிதாக உருவாக்கப்படும் மென்பொருளுக்கு மட்டும்தான் பயன்படுமா - அல்லது ஏற்கனவே இருக்கும் மென்பொருளில் நகாசு வேலை செய்தால், அதற்கும் பயன்படுமா?

*****

Read more...

Monday, November 22, 2010

நான் பார்க்கும் மெகாத் தொடர்கள்!!

ஆபீஸ் முடிந்து குர்காவ்ன்லே மாலை 6.10க்கு வண்டி. தில்லியில் வீட்டுக்கு வர 6.40௦ ஆயிடும். ஆனா 6.30க்கு மெட்டி ஒலி. பத்து நிமிஷ நாடகம் போயிடும். என்ன பண்றது? வீட்டுத் தொலைபேசியை ஸ்பீக்கர்லே போட்டுட்டு தொலைபேசியில் மெஒவை கேட்டுக்கிட்டே ஓடி வீடு வந்து சேருவோம்.

நண்பர்கள்/வீட்டுலே தொடர்ச்சியா நிறைய தொடர்களைப் பார்த்தாலும், நான் பார்த்தது மெஒ & கோலங்கள் மட்டும்தான் (அதுவும் 2006 பிப்ரவரி வரை!). அதுக்கப்புறம் அமெரிக்கா வந்தாச்சு. வந்தவுடன் இங்கேயும் மெகாத் தொடர்கள் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா தமிழ்லே இல்லே. ஆங்கிலத்துலே. (தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாத்து 4.5 ஆண்டுகள் ஆயிடுச்சுங்க!).

இங்கேயும் ஏகப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள். அதுவும் 10-15 வருஷத்துக்கு மேல் ஓடிய தொடர்கள்லாம் இருக்கு. குழந்தையா நடிக்க ஆரம்பிச்சி அதே தொடரில் பெரியவங்க ஆனவங்களும் இருக்காங்க.

இருங்க இருங்க. நம்ம ஊர் தொடர் நாடகங்களுக்கும் இந்த ஊர் தொ.நா’க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

** இங்கிருக்கும் தொடர்கள் எதுவும் தொடர்கதை கிடையாது. அதாவது ஒரு கல்யாணமோ / கரு**யோ, அதையே ஒரு வாரம் வரைக்கும் இழுத்து காட்டறா மாதிரி கிடையாது. ஒவ்வொரு எபிசோடும் ஒரு ச்சின்ன சம்பவம் - அவ்வளவுதான். அன்னிக்கி ஆரம்பிச்சி அன்னிக்கே முடிச்சிடுவாங்க. அதனால் ஒரு நாள் பாக்காமே போனா, அடுத்த நாள் புரியாதுன்னு இல்லே. (ஹிஹி. தமிழ்த் தொடர்களும் அப்படித்தான்னு யாரோ சொல்றது கேக்குது!).

** எந்தத் தொடரும் வருடம் முழுக்க நடக்காது. ஒரு வருடத்திற்கு 3-4 மாதங்கள் மட்டுமே நடக்கும். அப்புறம் அடுத்த வருடம்தான்.

** ( நான் பார்க்கும்) பெரும்பாலான தொடர்கள் நகைச்சுவைத் தொடர்களே. பட்பட்டென்று நிமிடத்திற்கு நிமிடம் வசனங்களாலும், நடிப்பினாலும் சிரிக்க வைக்கும் நாடகங்களையுமே விரும்பி பார்ப்பது வழக்கம்.

** ரொம்ப பழைய மேட்ச் போட்டாலும் அதை நாள் முழுக்க உக்காந்து பார்ப்பதுபோல், இந்த கீழ்க்கண்ட தொடர் நாடகங்களை ஏகப்பட்ட தடவைகள் பார்த்திருக்கேன் / பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

* Everybody loves Raymond - இதைத்தான் முதன்முதலில் பார்க்க ஆரம்பிச்சோம். இன்றைக்கும் என் ஃபேவரைட் இதுதான்.

* Friends - ஹிஹி. ஜெனிக்காக பார்க்க ஆரம்பித்தேன்.

* Seinfeld - மூணு / நாலு விதமான கதைப் பின்னல்கள் - கடைசியில் எல்லாத்தையும் ஒரே கோட்டில் சேர்த்துவிடுவார்கள். இவர்கள் கற்பனைத் திறனுக்கு ஒரு ஜே! வாத்தியாருக்கு மிகவும் பிடித்த தொடர். கற்றதும் பெற்றதும்லே இதை சொல்லியிருப்பார்.

* King of Queens

* Home Improvement

* Yes Dear

* Just Shoot me

* George Lopez

* Prince of Bel Air - நம்ம வில் ஸ்மித் சினிமாவில் நடிக்க வரும்முன்னே நடிச்ச தொடர். நகைச்சுவையில் பிச்சி உதறியிருப்பாரு.

* Hot in Cleveland

சஹானா பார்க்கும் சில சிறுவர்களுக்கான தொடர்களை வேறு வழியில்லாமே பார்க்க ஆரம்பித்து, இப்ப அவ தூங்கிட்டாலும் நாங்க பாக்கறதுதான்.

* Hannah Montana

* iCarly

* Victorious

சில 18+ வசனங்கள் வரும் தொடர்களும் இருக்கு. ஆனா நான் அதையெல்லாம் பாக்கறதில்லை. ச்சின்ன மனசு கெட்டுப் போயிடும்னு வீட்டுலே அனுமதிக்கமாட்டாங்க.

* Two and half men

* Family Guy

இதைத் தவிர நான் பார்க்கும் பிற தொடர்கள் (நாடகங்கள் அல்லாதவை).

* Are you smarter than a 5th Grader? - இதில் நிறைய தப்புதப்பா பதில் சொல்லிடுவேன். அப்புறம் நாந்தான் இந்த ஊரில் 5வது படிக்கலியே, அதான் பதில் தெரியலேன்னு சமாளிச்சிடுவேன்.

* Americas Funny Videos - இது என்னன்னு உங்களுக்கே தெரியும்.

இப்படியாக இங்கே பொழுது போகுதுங்க.


******

* ஒரு குடும்பம்.
* மொத்தம் நாலே பேர்.
* நகைச்சுவைதான் முக்கியம்
* சினிமா, அரசியல் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு நோ

இந்த மாதிரி ஒரு சூழலுடன் தொடருக்கான கதைகள் தமிழில் எழுதணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. ஒரு குழுவா இருந்தா முயற்சி செய்யலாம். நீங்க யாராவது ரெடியா?

*****

Read more...

Tuesday, November 16, 2010

பேஸ்மென்ட் ஸ்ட்ராங்! பில்டிங்கும் ஸ்ட்ராங்!

தரத்தில் கவனம் செலுத்தும் அனைவருக்கும் இந்த ‘தர மேலாண் அமைப்பு’தான் (Quality Management System) பேஸ்மெண்ட். இது கண்டிப்பா ஸ்ட்ராங்கா இருக்க வேண்டியது அவசியம். இந்த தர மேலாண் அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் இதில் இருக்கும் இரண்டு முக்கிய குழுக்களை பாத்துடுவோம்.

முதலாவது - தர நிர்ணயக் குழு (Quality Assurance). இவங்கதான் வேலையை எப்படி செய்யணும்னு சொல்லித் தர்றவங்க.

** திட்டப்பணி வரைவு (Project Planning)
** செந்தரங்கள் உருவாக்குதல் (Standards development)
** பயிற்சிகள் (Trainings)

இதெல்லாம் தர நிர்ணயக் குழுவின் வேலைகளில் சில.

அடுத்தது - தரக் கட்டுப்பாட்டுக் குழு (Quality Control). நடந்த தவறுகளை கண்டுபிடிச்சி, அதை திருத்தச் சொல்றவங்க.

** அகச்சோதனை (Unit Testing)
** அமைப்புச் சோதனை (System Testing)
** குறிமுறை மீள்பார்வை (Code Review)
** வடிவமைப்பு மீள்பார்வை (Design Review)

இதெல்லாம் தரக்கட்டுப்பாட்டுக் குழுவின் வேலைகளில் சில.

சரியா? இப்போ இந்த இரண்டு குழுவிற்கும் ஆதாரமான 'தர மேலாண் அமைப்பின்’ வேலையை விரிவா பாத்துடுவோம்.

** பொருளின் உற்பத்திக்கு என்ன பண்ணனும்?

** அதை செய்யக்கூடிய வழிமுறைகள் என்ன?

** அந்த வழிமுறைகள் சரியா பின்பற்றப்படுகின்றனவா?

** வேலை செய்கிறவர்களுக்கு அதை செய்யக்கூடிய தகுதி இருக்கிறதா? இல்லேன்னா, அவங்களை எப்படி தயார்படுத்துவது?

** உற்பத்தி செய்யப்பட்ட பொருள் நாம எதிர்பார்த்த மாதிரியே வந்திருக்கிறதா?

** வரலேன்னா, அதை எப்படி திருத்தணும்?

** நடந்த தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

** மறுபடி அதே தவறு செய்யாமலிருக்க, என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?

அவ்ளோதாங்க. சிம்பிளா இருக்கில்லே.

இவ்வளவையும் செய்துட்டு, ‘பேஸ்மெண்டை’ ஸ்ட்ராங்காக்கிட்டா - அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் சிலவற்றை பாத்துடுவோம்.

** வேலைகளை துரிதப்படுத்தலாம். எல்லா வேலைகளுக்கும் செந்தரங்களை (standards) உருவாக்கிட்டதால், அவைகளை வேகமாக செய்ய முடியும். இது எப்படி பண்றது? அது எப்படி பண்றதுன்னு யாரும் யோசிக்கத் தேவையில்லை.

** ‘அதிர்ச்சி’களைக் குறைக்கலாம். எல்லா வேலைகளையும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட வழிமுறையில் செய்வதால், வருவிளைவு (output) எப்படியிருக்கும்னு யூகிக்க முடியும். என்ன இப்படி ஆயிடுச்சுன்னு அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை.

** நேரம் மிச்சம். என்ன செய்யப் போறோம், எப்படி செய்யப் போறோம்னு எல்லாருக்குமே தெரியுமாகையால், நேரம் மிச்சமாகும். நேரம்தான் பணம்றது உங்களுக்கு தெரியும்தானே?

** வாடிக்கையாளரின் திருப்தி அதிகரிப்பு.

மற்றும் பல.

***

இத்துடன் 'தரம்' பற்றிய முன்னுரை முடிந்தது. அப்போ அடுத்த பகுதியிலிருந்து???

***

இந்த பகுதிக்கான கேள்விகள்:

** இந்த பேஸ்மென்ட் வீக்கா இருந்தா என்னென்ன பிரச்சினைகள் வரும்?

** பல்வேறு தரச் சான்றிதழ் வாங்கிய நிறுவனங்களெல்லாம் நிஜமாவே ’பிழை’யில்லாமல் மென்பொருளை உற்பத்தி செய்கின்றனவா?

** எப்படியும் தரக் கட்டுப்பாட்டுத் துறை எல்லா தவறுகளையும் கண்டுபிடிச்சிடப் போகுது. அப்புறம் எதுக்கு மத்ததெல்லாம் (தர நிர்ணயக்குழு)?
** இந்தியாவிலேயே முதல்முறையா CMMi சான்றிதழ் யாரு வாங்கினாங்க?

*******

Read more...

Saturday, November 13, 2010

நான் ஒரு நாளும் தலைவன் ஆகமுடியாது!

நான் ஒரு நாளும் தலைவன் (leader) ஆகவேமுடியாதுன்றத இன்னிக்குதான் தெரிஞ்சிக்கிட்டேன். என்ன நடந்தது. வழக்கம்போல் பதில் - இடுகையில்.

****

போன வாரம் ஒரு நாள். சஹானாவை தூக்கி கீழே போடுவதைப் போல் விளையாடிக் கொண்டிருந்தேன். அவரோ கொஞ்சம் கூட பயப்படாமல் சிரித்துக் கொண்டே இருந்தார். பயமா இல்லையாம்மான்னு கேட்டதற்கு - ம்ஹூம். நீங்க என்னை கீழே போடமாட்டீங்கன்னு தெரியும். அப்புறம் நான் ஏன் பயப்படணும்னாங்க.

நான் ஜென் கத்துக்கும் ஒரு ஆசாமியாகவோ அல்லது (ஜோதா) அக்பராகவோ இருந்தால், அந்த நேரத்தில் என் தலைக்குப் பின்னால் ஒரு ஒளிவெள்ளம் வந்து எனக்கு ஞானம் வந்திருக்கும். ஆனா நான் ஒரு ஞான0 ஆகையால், வெறும்னே சிரித்துவிட்டு - பத்து நிமிஷமா பாக்காத ட்விட்டரைப் பாக்க உட்கார்ந்தேன்.

****

எங்க ஊர்லே இருக்கும் நூலகம் இலவசம்தான் என்றாலும், வாங்கிய புத்தகத்தை / குறுந்தகடை தாமதமா திருப்பிக் கொடுத்தா, அபராதம் மட்டும் வாங்கிடுவாங்க. என் மாதிரி சிலர் இருப்பதால், அபராதத்தொகையில் அவங்களுக்கு சரியான வசூல்!

ஒரு ஆறு மாதமா என் அட்டையில் ஒரு $10 அபராதத்தொகை இருந்தது. நானும் சரி, இப்ப கட்டலாம், அப்ப கட்டலாம்னு கட்டாமலேயே இருந்தேன். நமக்கு யாராவது பணம் கொடுக்கணும்னா ஞாபகம் இருக்கும் - அதையே நாம கொடுக்கணும்னா? ம்ஹும்.

இதற்கிடையில் ஒரு நாள் என் நூலக அட்டை காலாவதி ஆயிடுச்சு. அடுத்த தடவை போய் அதை புதுப்பிச்சிட்டு, என் அபராதத் தொகை எவ்ளோம்மான்னு கேட்டா - $0 ன்னு சொன்னாங்க.

இல்லையே, $10 பாக்கி இருந்ததே - அதை கட்டலாம்னுதான் வந்தேன்னு சொன்னேன்.

அப்போதான் சொன்னாங்க - அவங்க மென்பொருளில் ஒரு சிறு பிரச்சினை இருக்காம். அதாவது காலாவதியான அட்டையை புதுப்பிக்கும்போது அதிலிருந்த பழைய பாக்கியெல்லாம் போயே போச்!

இவங்க மென்பொருளை நம்ம கம்பெனிக்காரங்க பண்ணலியே? அப்புறம் எப்படி பிரச்சினை வந்துச்சுன்னு எனக்கு சந்தேகம் வந்துச்சு.

சரி அதை அப்புறமா பாத்துக்கலாம்னு சொல்லிட்டு - சரிம்மா. முன்னாடி $10 பாக்கி இருந்துச்சு. இந்தாங்க புடிங்கன்னு சொன்னா - நோ நோ! கணிணியில் காட்டாத பாக்கியை நாங்க வாங்கிக்க மாட்டோம். அடுத்த தடவையிலிருந்து பாக்கியை உடனுக்குடன் கட்டிடுங்கன்னு சொல்லிட்டாங்க.

கண்டிப்பா இனிமே பாக்கியை உடனே கட்டிடறேன்னு சொல்லிட்டு - அடுத்த தடவை என் அட்டை எப்போ காலாவதி ஆகும்னு ஞாபகமா கேட்டுட்டு வந்தேன்.

****

மென்பொருள் தரத்தைப் பற்றி ஒரு சின்ன தொடர் ஓடிட்டிருக்கு. தனித்தனியா படிச்சீங்கன்னா அப்பப்ப கேள்வி கேளுங்க. மொத்தமா கடைசியில் படிச்சிக்கிறேன்னு சொன்னீங்கன்னா, அதுவும் எனக்கு ஓகேதான். :-))

****

இப்பல்லாம் ஒவ்வொரு வாரயிறுதியிலும் ரெண்டு மணி நேர பயணம் செய்வதால் (பயணம் எதுக்குன்னு தெரியலியா? அதுக்குத்தான் ட்விட்டரில் என்னை பின்தொடரணும்னு சொல்றது!)
- Leadership பற்றிய ஒரு CD புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன்.

நேற்று முதல் முறையா அந்த CDயை கேட்டபோதே - நான் எந்த காலத்திலும் தலைவனாக முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

அப்படி அதில் என்ன சொன்னாங்கன்னா - “ரெண்டு நிமிடத்துக்கு கண்ணை மூடிக்கிட்டு, இது வரைக்கும் வேலையில் நீங்க என்ன சாதிச்சிருக்கீங்கன்னு யோசிங்க”.

கொய்யாலே. புயல் மாதிரி 80 மைல் வேகத்துலே வண்டி ஓட்டிக்கிட்டிருக்கேன் இதுலே ரெண்டு நிமிடம் கண்ணை மூடுனா என்ன ஆகும்?

அப்பவே தெரிஞ்சி போச்சு <தலைப்பு>.

****

Read more...

Sunday, November 7, 2010

சொன்னதையே செய்! செய்வதையே சொல்!!

நிறைய விளம்பரங்களில் - இது ஒரு தரமான பொருள் - அப்படின்னு சொல்லியிருப்பாங்க. இதுலே ‘தரம்’னா என்ன?

** தர நிர்ணயம்
** தரக் கட்டுப்பாடு
** தரப் பொறியியல்
** தர மேலாண் அமைப்பு -

இப்படி பல தொழில்நுட்ப வார்த்தைகளுக்குப் போவதற்குமுன், ‘தரம்’னா என்னன்னு தெரிஞ்சிக்க வேண்டியது அவசியம்.

ஒரு பொருளை வாங்க கடைக்குப் போறீங்க. அந்தப் பொருள்

** நீங்க எதிர்பார்த்த மாதிரியே இருக்கா?
** உங்க தேவைகளை பூர்த்தி செய்யுதா?
** உங்களுக்கு கட்டுப்படியான விலையில் கிடைக்குதா?
** நீங்க எதிர்பார்த்த வாடிக்கையாளர் சேவை கிடைக்குமா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் ‘ஆமா’ன்னு பதில் சொன்னீங்கன்னா, அதை நுகர்வோர் பார்வையிலான ‘தரம்’னு சொல்லலாம்.

இதையே இன்னொரு கோணத்திலிருந்து பாத்தா -

** சரியான பொருளை தயாரிச்சிருக்கோமா?
** சரியான வழியில் தயாரிச்சிருக்கோமா?
** முதல் தடவையே சரியா வந்திருக்கா?
** திட்டமிட்ட நேரத்திலேயே தயாரிக்க முடிஞ்சுதா?

இவை தயாரிப்பாளருக்கான கேள்விகள்னு பாத்தவுடனேயே தெரிஞ்சிருக்கும். எல்லாத்துக்கும் அவர் ‘ஆமா’ன்னு பதில் சொல்லிட்டாருன்னா, அதை தயாரிப்பாளர் பார்வையிலான ‘தரம்’னு சொல்லலாம்.

ஆனா, நடைமுறையிலே எல்லா கேள்விகளுக்கும் ‘ஆமா’ன்னு சொல்ல முடியுமா? எல்லாத்திலேயும் ஏதாவது ஒரு குறை இருக்குமில்லையா?

அதாவது -

தயாரிப்பாளர் தரப்பில் - செய்ய நினைத்த பொருளுக்கும் - உருவான பொருளுக்கும் உள்ள வித்தியாசம் -- (அ)

நுகர்வோர் தரப்பில் - வாங்க நினைத்த பொருளுக்கும் - வாங்கிய பொருளுக்கும் உள்ள வித்தியாசம் -- (ஆ)

(அ) மற்றும் (ஆ) - இந்த இரு வித்தியாசங்களையும் தவிர்ப்பது அல்லது குறைப்பதே - ஒவ்வொரு நிறுவனத்திலிருக்கும் தர நிர்ணயத்துறைக்கான (Quality Assurance) வேலையாகும்.

**

** சொன்னதையே செய
** செய்வதையே சொல்
** இந்த இரண்டையும் நிரூபி
** தொடர்ந்து தரத்தை உயர்த்து

மேலே சொன்ன இந்த நான்கும்தான் இந்தத் துறையின் தாரக மந்திரமாகும்.

இதை அடைய ஒவ்வொரு நிறுவனமும் நிறுவ வேண்டிய ஒன்றுதான் - தர மேலாண் அமைப்பு (Quality Management System).

இந்த தர மேலாண் அமைப்பையும், அதன் உள்கட்டமைப்பையும் அடுத்த பகுதியில் விரிவாக பார்ப்போம்.

**

இந்தப் பகுதிக்கான கேள்விகள்:

** நாய்களுக்கான பிஸ்கட்கள் தரமானவையென்று எப்படி தெரிந்து கொள்வது? (ஒரு பொருளின் தரத்தை நுகர்வோர்தான் தீர்மானிக்கிறார்கள்னு பாத்தோமே!)

** தரத்தை நிறுவுவதற்கும், அதை தொடர்ச்சியாக உயர்த்துவதற்கும் ஒரு நிறுவனத்திற்கு அதிக செலவாகுமே? அவ்வளவு செலவு செய்து தரத்தை எட்டித்தான் ஆகவேண்டுமா?

*****

Read more...

Wednesday, November 3, 2010

மென்பொருள் தர நிர்ணயம் - புதிய தொடர்!

ரொம்ப நாளா ரொம்ப ரொம்ப மொக்கையா எழுதறோமே - வாழ்க்கையிலே உருப்படியா ஏதாவது எழுதலாம்னு நினைப்பு இருந்துச்சு. அதனால் நாம ஏழெட்டு வருசமா வேலை பாத்துக்கிட்டிருக்குற ஒரு துறையைப் பத்தி - அதிலிருக்கும் ஒரே ஒரு விஷயத்தைப் பத்தி ஒரு மினி தொடர் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இடுகை போரடிக்காமே இருக்க என்ன செய்யணுமோ அதை கண்டிப்பா செய்வேன். வாங்க, நேரடியா மேட்டருக்கு போயிடலாம்.

*****

மென்பொருள் தர நிர்ணயத்துறைதான் (Software Quality Assurance) அந்தத் துறை.

ஐ.எஸ்.ஓ (ISO)
சி.எம்.எம்.ஐ (CMMi)
சிக்ஸ் சிக்மா (Six sigma)

இதெல்லாம்தான் அந்த விஷயங்கள்.

**

இதில் முதலாவதா இருக்கிற ISO பற்றியும், மூணாவதா இருக்கிற சிக்ஸ் சிக்மா பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனா நாம் இங்கே பாக்கப்போறது - எனக்கு மிகவும் பிடித்தமான - நடுவில் இருக்கும் CMMi (Capability Maturity Model Integration) பற்றித்தான்.

பொதுவா கொஞ்சம் மென்பொருள் தர நிர்ணயத்தைப் பற்றியும், கூடவே CMMi பற்றியும் எழுதலாம்னு நினைச்சி முதல் இடுகையை துவக்குற நேரத்துலேதான், தர நிர்ணயத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு அதிர்ச்சி தரும் அந்த செய்தி வந்துச்சு. அது என்ன? சொல்றேன். சொல்றேன்.

**

பொருளின் தரம் எப்படி இருக்கணும்னு அதை பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்தான் முடிவு பண்ணனும். இதுதான் நடைமுறை.

ஏய், யாருப்பா அது, உங்க வீட்லே நீ கேக்குற மாதிரி காப்பியோ அல்லது பிசிபேளா பாத்தோ கிடைக்குதான்னு கேக்குறது? சரி சரி. அதைப் பத்தி அப்புறம் பேசுவோம்.

அப்படி வாடிக்கையாளர் எதிர்பார்க்குற தரத்தை - குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் அடைய எல்லா மென்பொருள் நிறுவனங்களும் கடுமையா முயற்சி செய்து கொண்டேயிருக்கின்றன.

அப்படி என்ன முயற்சி செய்றாங்கன்னு நீங்க கேக்கலேன்னாலும், சொல்லவேண்டியது என் கடமை.

** செய்வதை திருந்தச் செய்றது (முதல்தடவையிலேயே தப்பில்லாமே செய்யறது)

** செய்ததையே திரும்பத் திரும்ப செய்யாமே இருக்கறது (Re-use)

** ஒரு வேலையை எப்படிச் செய்யனும்னு செந்தரங்களை (Standards) உருவாக்கி, அதன்படியே அனைவரும் வேலை செய்வது

** பிழைகளை குறைப்பது

இப்படி பல்வேறு வழிகளை எல்லா மென்பொருள் நிறுவனங்களும் பின்பற்றுகின்றன.

மேலே குறிப்பிட்டவற்றை எங்கே ஆரம்பிப்பது, எப்படி செய்வதுன்னு தெரியலேன்னா - அதுக்குத்தான் நாம முதல்லே பாத்த ISO, CMMi இதெல்லாம் இருக்கு.

**

** இந்த ISO, CMMi இதெல்லாம் ஒண்ணுதானா?

** ஏதாவது ஒன்றை எடுத்து பயன்படுத்தினா போறுமா?

** CMMiயில் எத்தனை நிலைகள் இருக்கு?

** இவற்றை மென்பொருள் நிறுவனங்கள் மட்டும்தான் பயன்படுத்தணுமா?

இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் அடுத்தடுத்த இடுகைகளில்... நீங்களும் கேள்விகள் இருந்தா கேளுங்க..

**

இந்த CMMiஐ கண்டுபிடித்த - மென்பொருள் தரத்தின் தந்தை (Father of Software Quality) என்று அழைக்கப்பட்ட - வாட்ஸ் ஹம்ஃப்ரே (Watts Humphrey), சென்ற மாதம் - அக்டோபர் 28ம் தேதி, தனது 83வது வயதில் காலமானார்.

*****

தொடரும்...

*****

Read more...

Tuesday, October 26, 2010

கடவுள் கண்டிப்பா இருக்கார்..!!

ஆத்திகர்கள், நாத்திகர்கள், இருந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்றவங்க - இவங்க யாருக்குமே இந்த பதிவுலே தீனி எதுவும் கிடையாது. வழக்கம்போல் மொக்கைதான். அதனால்...

*****

வீட்டுலே நான் வேலை எதுவுமே செய்யாமே - கால் மேல் கால் போட்டு உக்காந்திருக்கேன்னு - நாக்கு மேல் பல்லு போட்டு பேசறவங்களுக்கு, அவங்க தப்புன்னு நிரூபிக்க ஒரு வலுவான ஆதாரம் கிடைச்சிடுச்சு. கீழே பதிவில்.

*****


ச்சின்ன வயசிலேந்து உலகத்தை வாங்கணும்னு ஆசை. ..ன்னா ..யே இல்லை. உலக உருண்டையைத்தான் சொன்னேன். பள்ளியில் தலைமை ஆசிரியர் மேஜையில் உ.உ ச்சும்மா
கொலுவிற்காக வெச்சிருந்ததை பாத்ததிலிருந்து - வீட்டிலேயும் ஒண்ணு வேணும்னு கேக்கணும்னு பாப்பேன். ஒண்ணு கேட்டா ரெண்டு கிடைக்கும் முதுகுலே. அதனால் கேக்காமே விட்டுடுவேன்.

சமீபத்தில் இங்கே பழைய பொருட்களை விற்கும் கடை ஒண்ணு. வெளியிலிருந்து பாத்தபோதே பெரிய உ.உ ஒண்ணு உள்ளே இருப்பது தெரிஞ்சுது. சரின்னு உள்ளே போனா அங்கே ஒரு தாத்தா உ.உ.வை சுத்தவிட்டு பாத்துட்டிருந்தாரு.

அங்கிருந்ததோ ஒரே ஒரு உ.உ.தான். அதையும் இந்த தாத்தா விடாமே சுத்திட்டிருந்தாரு. ச்சின்ன வயசிலே உலகத்தை சுத்தி வரணும்னு ஆசையோ என்னவோ.. அல்லது காணாமல் போன அவங்க ஊரு ஆண்டிலேண்ட் (like ஆண்டிப்பட்டி) தேடிட்டிருந்தாரோ தெரியல. ரெண்டு.. நாலு.. ஆறு நிமிஷமாச்சு. அவரும் நகர்ற மாதிரியில்லே. அதை வாங்கற மாதிரியும் தெரியல.

இது வேலைக்காகாதுன்னு அவர்கிட்டேயே போய் - ஐயா, நீங்க வாங்கப் போறீங்களா.. இது எனக்கு வேணும்னு கேட்டுட்டேன். மனுசன் அசராம - யெஸ். இது எனக்கு வேணும்னு சொல்லிட்டாரு.

இருந்தாலும் நப்பாசை. கடைக்குள்ளேயே சுத்திட்டிருக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. தங்ஸ் ஒரு பக்கம், நான் இன்னொரு பக்கம்னு நின்னு அவரை கண்காணிச்சிண்டிருந்தோம். ஒரு நிமிஷம் தாத்தா நகர்ந்தாலும் டக்குன்னு அமுக்கிடலாம்னு ப்ளான்.

இன்னொரு பத்து நிமிடம் கழிச்சிதான் தாத்தாவோட 'உலக ஆராய்ச்சி’ முடிஞ்சி, கொஞ்சம் அந்தப்பக்கம் நகர்ந்தாரு.

பழைய படங்கள்லே 'அந்த' மாதிரி காட்சி வரும்போது காட்டுவாங்களே - மான் மேலே புலி பாயறா மாதிரி - அந்த மாதிரி பாய்ஞ்சி உலகத்தை கைப்பற்றினேன்.

அன்று முதல் அவ்வப்போது உலகத்தை சுற்றி சஹானாவுக்கு கண்டம் / நாடு / கடல் போன்ற பல விஷயங்களை சொல்லிக் கொடுப்பதால் - உலகம் சுற்றும் ச்சின்னப் பையன் என்று பெயர் பெற்றேன்.(ஹிஹி. எனக்கு நானே!).

*****

இந்த வார 18+ ஜோக்:

கொறுக்ஸ், மொறுக்ஸ் இந்த மாதிரியெல்லாம் போட்டா கண்டிப்பா 18+ ஜோக் ஒண்ணு போடணும்னு புது சட்டம் போடப் போறாங்களாம். அதனால் பல (சில?) பேர் படிக்கும் பூச்சாண்டியிலும் ‘இந்த வார 18+ ஜோக்’ போடறதா முடிவு பண்ணிட்டேன்.

நல்லா பாத்துக்குங்க.

இந்த வார 18+ ஜோக்.

போட்டாச்சு..

*****

சஹானாவின் பள்ளியில் தினம் ஒரு கடிதம்னு எழுதவைக்கிறாங்க. உங்க அப்பாவுக்கு கடிதம் எழுதுன்னு சொன்னதுக்கு, என்னமா அனுபவிச்சி எழுதியிருக்காங்க பாருங்க.

இதெல்லாம் மண்டபத்துலே யாரும் சொல்லிக் கொடுத்து எழுதினதில்லீங்க. நான் படற கஷ்டத்தைப் பாத்து தானா வர்றதுதான்.நானா எப்படிடா சொல்றதுன்னு தெரியாமே இருந்தப்போ, இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பதால்தான், கடவுள் கண்டிப்பா இருக்கார்னு தெரியுது! (அப்பாடா, தலைப்பு வந்தாச்சு!).

*****

Read more...

Tuesday, October 19, 2010

வாரயிறுதி பயணத்தில் கற்றுக் கொண்டவை!

சென்ற வார இறுதியில் வகிமாவில் ஒன்றான நியு ஹாம்ப்ஷைர் (நியூ Hampshire) மாநிலத்துக்கு மரியாதை நிமித்தமாக (!!) பயணம் போயிருந்தோம். அந்த பயணத்தில் கற்றுக் கொண்ட விஷயங்கள்தான் இங்கே சொல்லப்பட்டிருக்கு. நான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கனும்ற உயர்ந்த நோக்கத்தில்தான் இந்தப் பதிவு.


*****

20 மைல் வேகத்தில் கடக்கவேண்டிய ஒரு கொண்டை ஊசி வளைவை 65 மைல் வேகத்தில் கடந்தால், வண்டியில் இருப்பவர்களும் / இருக்கும் பொருட்களும் நகர்ந்து ஒரே பக்கத்தில் வந்து விடுவர்/விடும்.


ஒரு பெரிய ட்ரக்கின் (லாஆஆஆரி) முன்னால் போய் திடீர்னு நிறுத்தினா (சடன் ப்ரேக் போட்டா), லாஆஆஆரியின் ஒலிப்பான் அதிக பட்ச சத்தத்தில் ஒலிக்கும்.ஒரே அறையில் 8 பேர் மற்றும் 5 குழந்தைகள் "அமைதியாக" இருந்தால், பக்கத்து அறையிலிருந்தும், ஹோட்டல் வரவேற்பரையிலிருந்தும் தொலைபேசி - இன்னும் கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்வர்.கும்பலா இருக்கும்போது மனைவியை கிண்டல் பண்ணிட்டா, பிறகு தனியா இருக்கும்போது பெண்டு நிமிர்ந்து விடும்.65 மைல் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் - 92 மைல் வேகத்தில் போனாலும், காரின் சக்கரம் அந்தரத்தில் பறக்காமல் தரையில் உருண்டுதான் போகும்.அமெரிக்காவில் எந்த மூலைக்கு சென்றாலும் குஜ்ஜூ மக்களின் சாப்பாட்டுக் கடை ஒன்று இருக்கும். சாப்பாடும் அருமையா இருக்கும்.ஹோட்டல் செக்-இன் செய்து ஐந்தே நிமிடத்தில் வம்பு பேச வெளியே வந்தால், மாற்றுச் சாவி வாங்க கட்டிய துண்டோடு போக வேண்டி வரும்.அலறிக்கொண்டிருக்கும் ஒரு அவசர ஊர்திக்கு வழி விடலேன்னா, அந்த ஓட்டுனரின் கெட்ட விரலை பார்க்க நேரிடும்.ஒரே ஒரு காப்பி வாங்கிட்டு அதை by-3 (மூன்றாக பங்கிடுதல்) செய்து குடிச்சா, கடைக்காரி கேவலமா பார்க்கத்தான் செய்வா.ரெண்டு மணி நேர பார்க்கிங்க்னு சொல்றது வண்டிகளுக்குத்தான், மனிதர்களுக்கில்லை.


*****

Read more...

Tuesday, October 12, 2010

ஒரு கால்-செண்டரில் 700 விடியல்கள்!

எ.பு. (எந்திரன் புறக்கணிப்போர்) சங்கத்தில் இருப்பவர்கள் கேட்கும் முக்கியமான கேள்வி - காலை 4 மணிக்கு வேலைக்குப் போவியா? ஹிஹி. நானும் அந்த சங்கத்தில் நிரந்தர உறுப்பினர் என்றாலும், அந்தக் கேள்வியை கேட்கமாட்டேன். ஏன்னா, நான் ஒரு காலத்துலே 2 மணி, 3 மணிக்கெல்லாம் வேலைக்குப் போனவன். அட மதியத்தில் இல்லேங்க.. விடியற்காலையில்.. அதுவும் ஒரு நாள் ரெண்டு நாள் இல்லே.. ரெண்டு வருஷம் இப்படி வேலை செய்தேன்.


சீனாலே யுவான் சுவாங் கூப்பிட்டாக, ஆஸ்திரேலியாவில் ஆப்பம் சுட கூப்பிட்டாகன்னு கசமுச கசமுசன்னு எல்லோரும் பேசிட்டிருக்கிற ஒரு கால் செண்டர். அதில் நாங்க மென்பொருள் நிபுணர்கள். சீனா, ஆஸ்திரேலியான்றதால் இந்தியாவில் விடியற்காலையிலேயே ஷிஃப்ட்.


நாங்க தங்கினது எங்க அலுவலக விடுதியில். ஒரே கட்டிடத்தில் 25-30 (ஆண்) பிரம்மச்சாரிகள். எல்லாரும் வெவ்வேறே வேலை நேரத்தில் அலுவலகம் போய் வருவோம். பகல் நேர வேலைக்குப் போனவர்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, தொகா பாத்துட்டு, மிட்நைட் ஸ்பெஷல்(!!) பார்த்துவிட்டு தூங்கப் போற நேரத்துலே, நானும் இன்னொரு நண்பரும் அலாரம் வெச்சி எழுந்துப்போம். பளிச்சுன்னு குளிச்சிட்டு 1 மணிக்கு கீழே வந்து குளிர்ல வெடவெடன்னு வண்டிக்காக காத்திருக்கணும்.


வெயிற்காலத்துலே தில்லி ராத்திரி நல்லாயிருந்தாலும், குளிரில் ’இரவுத்-தந்தி’தான். இதாவது பரவாயில்லை, ‘டெர்ரர்’ காலத்தில் (ஜன26, ஆக15, திச6) காவல்துறை தொந்தரவு வேறே. இந்த ராத்திரியில் எதுக்கு இங்கே நிக்கிற. ஐடி எங்கே. எந்த ஊர் உனக்கு?.. இப்படி. நமக்கு தெரிஞ்ச இந்தியில் பதில் சொன்னேன்னா, அடுத்த கேள்வி கேப்பாங்கன்னு நினைக்கிறீங்க? ம்ஹூம். ஓடியே போயிடுவாங்க.


அலுவலக வண்டி நம்மை ஏத்திக்கிட்டு, இன்னும் சிலரை பிக்கப் பண்ண அவங்க வீட்டுக்குப் போகும். சில தேவதைகள் காலையிலேயே குளிச்சிட்டு சுத்தபத்தமா வரும்போது, சில வில்லன்கள் குளிக்காமல் வந்துட்டு, வண்டியில் தனிவகை நறுமணத்தை பரப்புவார்கள்.


இப்படியாக அலுவலகத்தில் நுழைந்து, அவரவர் வேலையை பத்தே நிமிடத்தில்(!) முடித்துவிட்டு அக்கடான்னு அமரும்போது ஒரு நண்பர் கணிணியில் காதல் பாடல்கள் (சாஜன், ஏக் துஜே கே லியே etc) போடுவார். உடனே அனைவரும் தங்கள் ஒருதலை, பலதலை, தறுதலைக் காதலை நினைத்துக் கொண்டு சில நிமிடங்கள் சிலையாய் அமர்ந்திருப்பர்.
சிற்றுண்டிக்கான நேரம் வந்தவுடன் அனைவருக்கும் கனவு கலைந்துவிடும்.


ஐந்து மணிக்கு சிற்றுண்டி. இட்லி, பொங்கல், முட்டை, ப்ரெட், பால், பழம்னு எல்லாமே அட்டகாசமா இருக்கும். ஒரு கட்டு கட்டிவிட்டு - கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிடறதுக்கு பார்சலும் கட்டிகிட்டு - கட்டிடத்தை சுற்றி நடைப்பயிற்சிக்குப் போனா ஒரு மணி நேரம் நல்லா பொழுது போகும்.


அப்புறம் மறுபடி மேஜைக்குத் திரும்பி கொஞ்ச நேரம் வேலை. அதையும் பாக்கணுமே...


இந்த விடியற்காலை ஷிஃப்டில் இன்னொரு நல்ல பயன் என்னன்னா - ஆஸ்திரேலியா / நியூசீலாந்து இங்கெல்லாம் கிரிக்கெட் நடந்தா நாங்க எந்த தொந்தரவுமில்லாமே(!) முழுசா பாத்துடுவோம். மேட்ச் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்துடுவோம்.


இப்படி எங்க உலகத்துலே அரை நாள் ஆனபிறகு, வெளியுலகம் விழிக்க ஆரம்பிக்கும். காலை 7 மணிக்கு எல்லாரும் தொலைபேச ஆரம்பிப்பாங்க. சில பேரு அவங்க வீட்டுக்கு, சில பேர் ‘அவங்க’ வீட்டுக்கு. ஹிஹி. அப்போதைய மிஸ்.தங்ஸும் எனக்காக காலையிலேயே எழுந்து ‘திட்ட’ ரெடியாயிருப்பாங்க.


அப்புறம் ஷிஃப்ட் முடிஞ்சி, காலையில் 10 மணிக்கு வீட்டுக்கு வந்துட்டா, மதிய உணவு சாப்பிட்டு மல்லாக்க விட்டத்த பாத்து படுத்தா.. ஆஹா.. சொர்க்கமா தூக்கம் வரும்.


மறுபடி இரவு எழுந்து வேலைக்குப் போக தயாராகி.. மறுபடி வீட்டுக்கு வந்து.. மறுபடி.. இப்படியாக சுமார் 700 விடியல்களை சந்தித்த அந்த கால்-செண்டர் நாட்களை இன்னிக்கு நினைச்சி பாத்தா, இந்த நாள் மட்டுமல்ல.. அந்த நாளும் இனிய நாளே!

*****

Read more...

Wednesday, September 29, 2010

எந்திரன் ரிலீஸன்று தினப்பலன்!

கலைஞர் குழுமத்தில் ஏதோவொரு தொலைக்காட்சி:

இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கு மிகவும் பொன்னான நாள். ஏழு கிரகங்களும் ஒரே வரிசையில் வந்தால் எப்படியொரு அதிசய, நல்ல தினமோ அதை விட மிகவும் அதிர்ஷ்டகரமான நாள். அதனால், ஒவ்வொரு ராசிக்கும் பலன் சொல்லாமல் இன்று மொத்தமாய் அத்தனை பேருக்கும் ஒரே பலன்தான்.

இன்று முழுவதும் நேர்மறையாக சிந்தித்து, நேர்மறையான வார்த்தைகளையே பேசவேண்டியது அவசியம். சூப்பர், அருமை, அற்புதம், வாய்ப்பே இல்லை - ஆகிய சொற்களை தொடர்ந்து சொல்வது சாலச்சிறந்ததாகும். அதை விடுத்து எதிர்மறையான வார்த்தைகளைப் பேசுபவர்களுக்கு கெட்டபயன் உடனேயே கிட்டும் என்பது உறுதி.

உங்களுக்கு உகந்த திசை - ‘மேல்’. மலை, மேடு, உயர்ந்த கட்டிடம் அல்லது கட்டவுட்டுகள் எதன் மீதாவது ஏறுவது நல்லது.

இன்று உங்களுக்கு உகந்த நிறம் - வெள்ளை. வெள்ளை நிறத்திலான பொருட்களை வாங்கி பயன்படுத்துவது மிகவும் நல்லது.

கற்சிலைகளுக்கு மட்டுமல்லாமல், மரச்சிலைகளுக்கும் அபிஷேகம் செய்ய அற்புதமான நாள் இன்று. உங்களுக்கு உகந்த வெள்ளை நிறத்திலுள்ள பால், தயிர், வெண்ணை ஆகியவற்றால் உயரமான மரச்சிலைகளுக்கு அபிஷேகம் செய்தால், ஏழேழு ஜென்மங்களுக்கும் உங்களுக்கு மோட்சம் கிட்டும். நீங்கள் தொலைக்காட்சியில் தோன்றும் வாய்ப்பும் அதிகமாகும்.

வெளியில் செல்ல முடியாத வயதானவர்கள், நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே சன் டிவி பார்த்தால் தனலட்சுமியின் அருள் கிட்டும்.

***********

ஜெயா டிவி:

இன்று உங்களுக்கு ரொம்பவே ஆகாத நாள். வரலாற்றில் கரித்துண்டினால் கூட பொறிக்கக்கூடாத நாள். இப்பேற்ப்பட்ட கெட்ட நாளில் தமிழர்கள் தங்கள் தோஷம் தீர்க்க செய்ய வேண்டிய செயல் - ஒன்றுமேயில்லை. வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டிலேயே அடைந்து கடவுள் வழிபாடு செய்ய வேண்டியதுதான்.

அப்படி வீட்டிலிருக்கும்போது, தொலைக்காட்சி போன்ற மின்சார உபகரணங்களை பயன்படுத்தாமல் இருந்தால் உத்தமம்.

ஒரு வேளை கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்காக தொலைக்காட்சி பயன்படுத்த வேண்டியிருந்தால், ஜெயா டிவியில் பக்திமாலை பார்த்தால், அடுத்த வருடம் தமிழர்களுக்கு நல்லாட்சி கிட்டும்.

********

மக்கள் டிவியில் ஒரு நிரந்தர அறிவிப்பு:

மக்கள் டிவி நேயர்கள் இன்றிலிருந்து ஒரு நாள் சன் டிவியும் ஒரு நாள் ஜெயா டிவியும் மாறிமாறி பார்க்கவும். அடுத்த தேர்தல் உடன்பாடு ஏற்படும்வரை இந்த அறிவிப்பு தொடரும். அதற்குப் பிறகே உங்களுக்கு நல்ல நேரமா, கெட்ட நேரமா என்பது கணித்து சொல்லப்படும்.

*****

Read more...

Sunday, September 26, 2010

தங்ஸ் கேட்கும் கேள்விகள்!

தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல், தொலைபேசியில் எந்த தோழியும் சிக்காமல் பொழுது போகலேன்னா, தங்ஸுக்கு என்னை கேள்வி கேட்பது ரொம்ப பிடிக்கும். அதுவும் எனக்கு பதில் தெரியாதுன்னு தெரிஞ்சும் கேட்கப்படும் கேள்விகள் அவருக்கு ரொம்ப இஷ்டம்!

*****

முதல் (1 of many) கேள்வி - - இந்த புடவை (அல்லது ஏதோ ஒரு ஆடை) எப்போ வாங்கினது சொல்லுங்க. பாப்போம்.?

கேக்கறது வாங்கிக் கொடுக்கறது, கொடுக்கறது வாங்கிப் போட்டுக்கறது மட்டுமே தெரிஞ்ச எனக்கு, எந்த ஆடைக்கும் அதன் ஆடைமூலம் (like ரிஷிமூலம்) நினைவிருக்காதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.

பதில் தப்பாயிருந்தாலும் பரவாயில்லைன்னு - நாமதானே தி. நகர்லே வாங்கினோம் அல்லது சென்னை சில்க்ஸ்லே வாங்கினோம்னு சொல்லிட்டா - க்கும். நீங்க வாஆஆஆங்கிக் கொடுத்துட்டாலும்னு ஒரு புது ராகத்துலே இழுத்து பேசுவாங்க.

சரி சமாளிப்போம்னு - ஏம்மா, நீங்க புடவை ஒரு தடவையா வாங்கறீங்க? வாங்கிட்டு வந்ததை, 4 தடவை மாத்தறீங்க. ஒவ்வொரு தடவையும் எதை வாங்கறீங்க எதை மாத்தறீங்கன்னு நான் எவ்ளோ புடவையை ஞாபகம் வெச்சிக்கறது? - ன்னு கேட்டா, அவங்க - வாங்கின / வாங்காத / மாத்தின / மாத்தாத புடவைகள் எல்லாத்தையும் வரிசையா ஒண்ணு, ரெண்டுன்னு ஔவையார் மாதிரி வரிசைப்படுத்தி பாடி நம்மை இம்சைப்படுத்துவாங்க.

சரிசரி.. இதெல்லாம் நம்ம வீர வாழ்க்கையில் ஜகஜம்தானேன்னு நினைச்சிக்கிட்டு சூனாபானா மாதிரி போயிட்டே இருக்கவேண்டியதுதான்.

*****

அடுத்த (2 of many) கேள்வி - நம்ம கல்யாணத்தன்னிக்கு நான் என்ன வண்ண ஆடை போட்டிருந்தேன், சொல்லுங்க பாப்போம்?

அவ்வ்வ். இதுக்கு முதல் கேள்வியே பரவாயில்லைன்னு ஆயிடும்.

நல்ல கொளுத்துற வெயில் காலத்தில், ஒரு ச்சின்ன மண்டபத்துலே ஒரு ஐநூறு பேரை அடைச்சி வெச்சி, நடு நடுவே மின்சாரத்தை நிறுத்தி, வேர்க்க விறுவிறுக்க ஒருத்தியை(!) பக்கத்துலே நிக்க வெச்சி, கட்றா தாலியை - கொட்றா மேளத்தைன்னு சொல்லும்போது - உஃப்.. இருங்க மூச்சு வாங்குது - நான் ஆடை போட்டிருக்கிறேனான்னே பாக்க தோணாதபோது, பக்கத்தில் நிக்குறவ என்ன வண்ண ஆடை போட்டிருக்கான்னு எப்படி பாக்கறது சொல்லுங்க?

ஆனா, அதெல்லாம் சொன்னா அவங்க ஒத்துக்க மாட்டாங்க. அதனால் எனக்குத் தெரிஞ்ச நாலைஞ்சி வண்ணத்தை சொல்ல ஆரம்பிப்பேன். பச்சை? சிகப்பு? மஞ்சா? கண்டிப்பா இதுலே ஏதாவது ஒரு வண்ணம் சரியா இருக்கும்.

இப்படித்தான் பற்பல கேள்விகளுக்கு - choose the best answer - முறையில் வாழ்க்கை ஓடிட்டிருக்கு. CTBA கண்டுபிடிச்சவன் வாழ்க!!

*****

என்னங்க, இங்கே கொஞ்சம் வாங்க..

ஐயய்யோ! ஏதோ ஒரு கேள்வி கேக்கப்போறாங்க. நான் வெளியே ஓடிப் போகப் போறேன்.. என்னை ஆள விடுங்க. அடுத்த இடுகையில் சந்திப்போம்.

*****

Read more...

Wednesday, September 22, 2010

தென்றல் என்னை வெண்ணை என்ற கதை...

அதுக்கு முன்னால் சென்னை - தில்லி, சென்னை - மும்பை மார்க்கத்தில் பல முறை விமான பயணம் மேற்கொண்டிருந்தாலும், அன்றுதான் என் முதல் முதல் முதல் வெளிநாட்டுப் பயணம்.

எங்க வீட்டு ஆட்களெல்லாம் கதவருகில் நின்றுகொண்டிருக்க, எதிர், பக்கத்து, பக்கத்து-பக்கத்து, எதிர்-பக்கத்து இப்படி எல்லா வீட்டுலேயும் அவங்கவங்க ஜன்னலில் நிக்குறாங்க. என்னை வழியனுப்ப எவ்ளோ பேர் நிக்குறாங்க பாருன்னு பெருமையா சொன்னா - பின்னாடியிருந்து ஒரு குரல் - "நீ எப்ப ஊரை காலி பண்ணுவேன்னு எல்லாரும் காத்திருக்காங்க. அவ்ளோதான்".
சரி சரின்னு சொல்லி ஒரு வழியா கிளம்பி விமான நிலையத்திற்குப் போனேன்.

ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக அண்ணா அறிவாலயத்திலிருந்து எப்போ கூப்பிடுவாங்களோன்னு காத்திருக்கும் மருத்துவர் போல், நானும் ‘பே’ன்னு வேடிக்கை பார்த்துக் கொண்டு, என்னைக் கூப்பிடுவாங்கன்னு செக்-இன் வரிசையில் நின்றிருந்தேன்.

சிறிது நேரம் கழித்து என் முறையும் வந்தது.

கவுண்டரில் (counter) அந்தப் பக்கம் அழகான பெண். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மொசைக் தரையில் ஊற்றிய நெய் மாதிரி அவ்ளோ வழுவழு.

கவுண்டரின் (counter) இந்தப் பக்கம் நான். அந்தப் பெண்ணைப் பார்த்து பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தென்றலைப் போல் தவழ்ந்து வந்தது. சரி சரி. ஒத்துக்கறேன். வெறும் காத்துதான் வந்தது.

அவங்க சொன்னாங்க - "குடுங்க".

ரொம்ப நாளைக்கு முன்னாடியே மனசிலிருந்த கசடுகளையெல்லாம் வெளியே போட்டுவிட்ட காரணத்தால், அதற்கு தப்பர்த்தம் எதுவும் செய்யாமே, பயணச்சீட்டை எடுத்து கொடுத்தேன்.

வெண்டைப் பிஞ்சு விரல்களால் அவங்க மெல்ல மெல்லமாய் கணிணியில் தட்டச்சிய பிறகு, ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு கேட்டாங்க.

"நீங்க சிட்டிசனா?"

பொறந்து, வளர்ந்து, படிச்சு (சரி சரி..) பள்ளிக்கு போய், (ஒரு வழியா) வேலைக்கும் போய் இப்படி வெளிநாட்டுக்குப போகும்போதுதானா இப்படிப்பட்ட சந்தேகம் வரணும்?

நல்லா நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு - நம்ம கேப்டன், அர்ஜுன், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பலருக்கும் மனசுக்குள் வந்தேஏஏஏ மாதரம் சொல்லிட்டு - "எஸ் மேடம். நான் சிட்டிசந்தான்".ன்னு சொன்னேன்.

மறுபடி ரெண்டு நிமிஷம் - அதே கீபோர்ட் - அதே வெண்டைக்காய்.

"நீங்க அமெரிக்கன் சிட்டிசனா?"

மனசிலிருந்த கேப்டனுக்கு கோபம் வர ஆரம்பிக்குது. மெல்லமா இடது காலை தூக்கி பக்கத்திலிருந்த சுவற்றில் வைத்து குதிக்க தயாராகிறார்.

அமெரிக்காவா... அந்த பறங்கியர் தேசத்துக்கு நான் சிட்டிசனா.. நெவர்.. நோ..

"இல்லை மேடம்"

"அப்போ க்ரீன் கார்ட் ஹோல்டரா?" - அடுத்த நெய் - வழுவழு.

அதுக்கெல்லாம் பத்து - பன்னெண்டு வருஷம் ஆகும்னு சொன்னாங்களே. இல்லையா? ஒரு வேளை அதுக்கு இங்கேயே விண்ணப்பம் கொடுக்கறாங்களோ என்னவோ? ஒண்ணும் புரியலியே? சரி ஏதோ ஒண்ணு. இல்லைன்னு சொல்லி வைப்போம்.

"இல்லை மேடம். எனக்கு பத்து - பன்னெண்டு வருஷமெல்லாம் அங்கே இருக்கற மாதிரி திட்டம் இல்லே. ஒரு வேளை அந்த பச்சை அட்டை சீக்கிரம் கிடைக்க நீங்க ஏதாவது ஏற்பாடு பண்ணீங்கன்னா, எனக்கு ஓகேதான்".

” நோ நோ. அதெல்லாம் இங்கே கொடுக்க முடியாது. ”

”சரி மேடம். பின்னே நான் ஊருக்கு போக இன்னும் வேறே ஏதாவது கொடுக்கனுமா? இல்லே நான் போகட்டா? விமானத்துக்கு நேரமாகுது.”

"பாஸ்போர்ட்டை குடுறா வெண்ணை"

******

ஹிஹி. அதுவரை உள்நாட்டிலேயே பயணம் செய்ததால், பாஸ்போர்டை எடுத்துக் கொடுக்கணும்றதே மறந்து போச்சு. பத்திரமா உள்ளே வெச்சிருந்தேன். அப்புறமென்ன, கடகடன்னு வேலையை முடிச்சிட்டு, விமானத்தைப் பிடிக்க உள்ளே ஓடிப் போனேன்.

இதுதாங்க தென்றல் என்னை வெண்ணை என்று சொன்ன கதை..

*****

Read more...

Wednesday, September 15, 2010

விளையும் இலக்கியவாதியை...

விளையும் இலக்கியவாதியை...

அக்கம்பக்கம் பேசியதிலிருந்து
ட்விட் போடுவேன்...

இருபது ட்விட் ஆனபிறகு அதை வைத்து
இடுகை போடுவேன்...

பல இடுகைகள் போட்டபிறகு அதை வைத்து
புத்தகம் போடுவேன்...

ஓரிரு புத்தகங்கள் போட்டபிறகு அதை வைத்து
ஒரு தொகுப்பு போடுவேன்..

பல தொகுப்புகள் போட்டபிறகு..
போட்டபிறகு...

உள்ளேயிருந்து குரல் கேட்டது...

அதைத் தூக்கி பரண் மேலே போடுங்க.

இப்போதைக்கு இந்த தோசையை வாயிலே போடுங்க..
வயிறாவது ரொம்பும்..

விளையும் இலக்கியவாதியை
முளையிலே கிள்ளிட்டாங்க!

**********

இது கண்டிப்பா நான் இல்லை!!!

கஷ்டப்பட்டு யோசித்து(!!)
ஒரு இடுகையை வெளியிட்டேன்...

இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும்
இணைத்தேன்...

புது இடுகைன்னு டிவிட்டரிலும், பஸ்சிலும்
புலம்பினேன்...

ஆர்குட்டிலும், முகநூலிலும்
அலறினேன்.

நெருங்கிய நண்பர்களுக்கு
தொலைபேசி கூறினேன்.

தூரத்து சொந்தங்களுக்கு எஸ்.எம்.எஸ்
தூது அனுப்பினேன்..

யாஹூ, கூகிள் குழுமங்களுக்கு
யாராவது பாருங்கப்பான்னு மின்னஞ்சல் செய்தேன்..

மற்றவர்களுக்கு பின்னூட்டம் போடும்போது
மறக்காமல் இடுகையின் உரலையும் கொடுத்தேன்...

இவ்வளவும் செய்த பிறகு,
இருபதே நிமிடத்தில் என்
இடுகையை தூக்கிவிட்டேன்...

யாராவது screenshot எடுத்து
போடமாட்டாங்களான்னு பார்க்கிறேன்.

அப்படியாவது bigshot
ஆகமுடியுதான்னு யோசிக்கிறேன்.


*****

Read more...

Saturday, September 11, 2010

எந்திரன் வர்றதுக்குள்ளே என்னென்ன பண்ணனும்?

புயல், மழைக்காலங்களில் அவசியமான பொருட்களை முன்னாடியே வாங்கி வெச்சிக்கற மாதிரி, எந்திரன் வர்ற தேதி தெரிஞ்ச இந்த காலக்கட்டத்தில் நாம முன்னெச்சரிக்கையா என்னென்ன செய்யணும்னு தெரிஞ்சிக்கணுமா? நீங்க சரியான இடத்துக்குதான் வந்திருக்கீங்க.

*****
எந்திரன் வர்றதுக்குள்ளே... நிறைய படிச்சி நல்ல server administrator ஆயிடணும்...
விமர்சனம் அடிச்சி அடிச்சி நிறைய servers தொங்கிடப் போகுதே..

எந்திரன் வர்றதுக்குள்ளே... நிறைய மூச்சுக் காற்றை உள்ளே சேமிச்சி வைக்கணும்...
தாத்தா ஐஸோட ஆடும்போது (கபர்தார்!!) நிறைய பெருமூச்சு விடவேண்டியிருக்குமே...

எந்திரன் வர்றதுக்குள்ளே... புது சொம்பு வாங்கி பஞ்சாயத்து பண்ண கத்துக்கணும்...
நல்லாயிருக்கு / இல்லே அப்படின்னு எல்லாருக்கும் அடிச்சிக்கும்போது உதவுமே...

எந்திரன் வர்றதுக்குள்ளே... ஒரு இலக்கியவாதியாயிடணும்...
அப்போதானே பின்னவீனத்துவ / முன்னவீனத்துவ விமர்சனம் எழுதமுடியும்...

எந்திரன் வர்றதுக்குள்ளே... உலக திரைப்படமெல்லாம் பாத்துடணும்...
அப்போதானே எங்கேயிருந்தெல்லாம் சுட்டுருக்காங்கன்னு சொல்ல முடியும்...

எந்திரன் வர்றதுக்குள்ளே... நிறைய மாடுகளை வாங்கணும்...
பால் அபிஷேகம் செய்றதுக்கு எக்கச்சக்க பால் வாங்குவாங்களே...

எந்திரன் வர்றதுக்குள்ளே... இமயமலை போயிட்டு வந்துடணும்...
அப்புறம் அங்கே விகடன், குமுதம் நிருபர்களெல்லாம் வந்துடுவாங்களே...

எந்திரன் வர்றதுக்குள்ளே.. உலக இசையை கரைச்சிக் குடிக்கணும்...
அப்போதான் ‘இசை ஆய்வாளர்கள்’ எழுதறதை புரிஞ்சிக்க முடியும்...

எந்திரன் வர்றதுக்குள்ளே.. ஒரு பெரிய்ய்ய புது ஃப்ரிட்ஜ் (fridge) வாங்கணும்...
சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகாமே இருக்கணுமா இல்லையா?

*****

பிகு: இந்த மாதிரி இடுகைக்கு பிகு போட்டாலே என்ன சொல்லுவாங்கன்னு உங்களுக்கே தெரியுமே? நானும் அவரோட ரசிகந்தான். அவர் படம் முதல் நாளே போய் பாத்துடுவேன். அப்படி இப்படி.. ஹிஹி.. நான் மட்டும் அதை சொல்லக்கூடாதா என்ன?

*****

Read more...

Wednesday, September 8, 2010

அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை!!!ஒரு சின்ன கொசுவத்தி.

மதியம் 3 மணி. தலைவர் எங்க குழுவினரை கூப்பிட்டு பேசுறார்.

"நாளைக்கு காலையில் க்ளையண்டுக்கு இந்த வேலையை முடிச்சி குடுக்குறதா சொல்லியிருக்கேன். நீங்க எல்லோரும் இன்னிக்கு எவ்ளோ நேரமானாலும் வேலை செய்து முடிச்சிட்டுத்தான் போறீங்க. சாப்பாடு சொல்லிடறேன். நம்ம ஆபீஸ் வண்டியிலேயே எல்லாரையும் வீட்டில் விட சொல்லிடறேன்".

சொல்லிட்டு அவர் கிளம்பி போயிட்டார்.

4 மணி.

அவங்க வர்றாங்க.

சத்யா (நான்தான் குழுத்தலைவன்) - "என் புருஷனுக்கு உடம்பு சரியில்லை. நான் போய்த்தான் பாத்துக்கணும். என் பங்கை நான் காலங்கார்த்தாலே வந்து முடிச்சு கொடுத்துடறேன். பிரச்சனை எதுவுமேயில்லை".

நான் - "என்னம்மா, தலைவர் அப்படி சொல்லிட்டு போயிருக்காரே?"

அவங்க - "நான் போயே ஆகணும். நான்தான் நாளைக்கு வந்து வேலை செய்யறேன்னு சொல்றேன்லே. கண்டிப்பா என்னால் இந்த டெலிவரி நிக்காது".

நான் - "சரி, பாத்து செய்ங்க".

அவ்ளோதான். கிளம்பி போயிட்டாங்க.

அடுத்த நாள் காலை 11 மணி. இன்னொரு கூட்டம்.

அவங்க வேலை இன்னும் முடியல.

தலைவர் கேக்குறாரு - "ஏன்?"

அவங்க சொல்றாங்க - "நேத்து சாயங்காலம் சும்மா வெளியே போனா நல்லாயிருக்குமேன்னு நான் சொன்னேன். சத்யாதான் சரி, போயிட்டு வா. நாளைக்கு வேலை செய்தா போதும். ஒண்ணும் பிரச்சினையில்லேன்னு என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாரு. இல்லேன்னா நான் ராத்திரி முழுக்க உக்காந்து இந்த வேலையை முடிச்சிருப்பேன்".

நினைச்சி பாருங்க. என் நிலைமை எப்படியிருக்கும்னு. தலைவர் அந்த கூட்டத்தில் எதுவுமே கேக்கலை. அதற்குப் பிறகும். கேள்வி கேட்டிருந்தால் பதில் சொல்லிட்டு நிம்மதியாயிருப்பேன் - அதைக் கேட்காததினால், அடுத்த ஒரு வாரம் வரைக்கும் தேவையில்லாத மனக்கஷ்டம். அந்த நிறுவனத்திலிருந்து கிளம்பறத்துக்கு அந்த நிகழ்ச்சி ஒரு முக்கிய காரணம்.

அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு. (இப்படி சொன்னா, கொசுவத்தி முடிஞ்சி நிகழ்காலத்துக்கு வந்துட்டோம்னு அர்த்தம்).

********

இந்தியாவில் எங்க அலுவலகத்தில், ஆளெடுக்கும் பணியிலிருக்கும் ஒருவர் என்னிடம் -

"சத்யா, உங்க குழுவுக்கு ஆள் ரெண்டு பேர் வேணும்னு கேட்டிருக்கீங்க. யார், எப்படிப்பட்ட ஆள் வேணும்?"

நான் - " வேலையே செய்யத் தெரியலேன்னாக்கூட பரவாயில்லை. எனக்கு ஆம்பளைங்கதான் வேணும். பொண்ணுங்களே வேணாம்."

அவர் - "ஏன், பொண்ணுங்க மேலே அவ்ளோ வெறுப்பா?"

நான் - "உங்களுக்கு தமிழ் தெரியாது. தெரிஞ்சிருந்தா நாளைக்கு பூச்சாண்டியை படிங்கன்னு சொல்லியிருப்பேன்".

******

Read more...

Thursday, September 2, 2010

ஒரே ஒரு நிமிடம் ஒரு சின்னஞ்சிறு குழந்தைக்காக ஒதுக்கமுடியுமா?

ஊர் விட்டு ஊர் வந்து வேலை செய்யும் எங்களைப் போன்றவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களே சகோதரர்கள், சகோதரிகள். அவர்கள் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி. அவர்கள் கஷ்டமே எங்கள் கஷ்டம். ஊரில், வீட்டினருக்கு தெரியாத எங்களுடைய கஷ்ட நஷ்டங்கள், இங்கிருப்பவர்களுக்கு தெரியும்.


பக்கத்தில் இருக்கும் ஒரு சகோதரிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இதயத்தில் சிறு பிரச்சினை. ஒரு வருடத்தில் அந்த பிரச்சினை தானாகவே சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறினாலும், அவ்வப்போது அக்குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பல்வேறு பரிசோதனைக்கு ஆளாக்குகிறார்கள்.


வயதானவர்களுக்கே அடிக்கடி மருத்துவமனை, பரிசோதனை என்றால் வேதனையாக இருக்கும். இதுவோ சின்னஞ்சிறு குழந்தை. வெளியில் சிரித்துக் கொண்டு பேசினாலும், அந்தக் குழந்தையின் பெற்றோர் மனதுக்குள் படும் வேதனைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மருத்துவ ரீதியாகவோ பண ரீதியாகவோ இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. உணர்வு ரீதியாக ஆதரவு தர மட்டும் எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம்.


ஒரு முறை எனக்கு மிகப்பெரிய பிரச்சினை வந்தபோதும் சரி, அதற்குப் பிறகும் எப்போது கோயிலுக்குப் போனாலும், கடவுளிடம் எதுவும் கேட்காமல், சும்மா அவரை வேடிக்கை பார்த்துவிட்டு வருவது என் வழக்கம். இப்போது இந்த சின்னஞ்சிறு குழந்தையின் நலனுக்காக அவரிடம் வேண்டிக் கொள்கிறேன்.


அதே நோக்கத்துடன் உங்களுக்கும் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். ஒரே ஒரு நிமிடம் உங்களால் ஒதுக்க முடிந்தால், இந்த குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.


எல்லோரும் (அட்லீஸ்ட் எனக்குத் தெரிஞ்சவங்க!) இன்புற்று இருப்பதன்றி வேறொன்றறியேன் பராபரமே!

மிக்க நன்றி.

Read more...

Monday, August 23, 2010

ரொம்ப நாள் கழிச்சி ஒரு நொறுக்ஸ்!


நான் வீட்டுலே இருக்கும்போது, எப்போதும் ஐபாட்லே பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன். அதனால் எந்த வேலை செய்வதற்கும் எவ்ளோ நேரமாகும்னு சொல்லாமே, எவ்ளோ பாட்டு ஆகும்னு சொல்லலாம். அதாவது:ஓய்வறைக்கு - 3 பாட்டு (+25 பக்கங்கள்)


குளிப்பதற்கு - 3 பாட்டு


சாப்பிடும்போது - 2 பாட்டு


அலுவலகம் போவதற்கு - 2 பாட்டு


வீட்டுக்கு வருவதற்கு - 1 பாட்டுஇனிமேதான் கவனமா படிக்கணும்.

தங்கமணி பேச ஆரம்பித்தால் - 150 பாட்டு


நான் பேசணும்னா - ஒரு பாட்டு முடிஞ்சி அடுத்த பாட்டு ஆரம்பிப்பதற்குள்.

*****

நம்ம சென்னையில் தனியார் GPS தயாரிக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்னு ஒரு ச்சின்ன கற்பனை.முதல்லே ‘அவர்’ தயாரிக்கிறாரு. ‘அவர்’ யாருன்னு இதை படிச்சாலே உங்களுக்கு தெரிஞ்சிடும். மத்தவங்க தயாரிப்பு அடுத்தடுத்த இடுகைகளில் வரும்.1. இந்த தெரு எங்கே போகும்னு நான் இப்ப சொல்லமாட்டேன். சொன்னா உங்களுக்கு இப்பவே தெரிஞ்சிடும்.2. இந்த தெருவுலே மொத்தம் 500 வீடு. மொத்த ஆட்கள் 300 பேர் ஆண்கள். 200 பேர் பெண்கள். அதில் என்னோட மாமா பொண்ணும் ஒண்ணு. ம்க்கும்.3. இந்த தெருவுலே கும்பலா இருக்கும். நமக்கு யார் கூடவும் போக பிடிக்காது. தனியாத்தான் போகணும். அதனால் அந்த தெருவுலே போவோம். பத்தாயிரம் செலவானாலும் பரவாயில்லை.4. இந்த தெருவுலே போறதா அந்த தெருவுலே போறதான்னு எனக்கு தெரியல. நடுலே நில்லுங்க. யாரு எந்தப்பக்கம் கூப்பிடறாங்களோ, அந்த பக்கம் போகலாம்.5. பாரிமுனையிலிருந்து தாம்பரம் செல்லும்போது வழியில் சம்மந்தமில்லாமே கோயம்பேடு ஏன் வர்றோம்னு பாக்குறீங்களா? இதோ இடது பக்கம் தெரியுதே, அந்த கல்யாண மண்டபத்தைதான் படுபாவிப் பசங்க இடிக்க இருந்தாங்க. இதைப் பாக்கத்தான் உங்களை கூட்டிட்டு வந்தேன்.6. இங்லிஷ்லே எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - ஒன் வே. நீங்க தைரியமா இதே தெருவிலே போங்க. யாரு என்ன சொல்றாங்கன்னு பாத்துடலாம்.*****தாய்மொழியைப் போலவே ஆங்கிலத்திலும் சரளமாய் பேசிய சஹானா, சில நாட்களாய் (ஆங்கிலத்தில்) தட்டுத் தடுமாறி பேச ஆரம்பித்தார். என்னடா இது, Danburyக்கு வந்த சோதனைன்னு அவங்ககிட்டேயே அதற்கான காரணத்தை கேட்டோம். பிறகு, ஏண்டா அப்படி கேட்டோம்னு நொந்தோம்.அவங்க சொன்னது இதுதான்.நான் பள்ளியில் பேசறமாதிரி வீட்டிலேயும் ஆங்கிலத்தில் பேசினா, உங்களுக்கு புரியறதில்லை. அதனால், உங்களுக்கு புரியற மாதிரி யோசித்து பேசவேண்டியிருக்கு. அதுக்கு நேரமாகுது. அவ்ளோதான். ஓகேவா?அவ்வ்வ்... எனக்கு ஆங்கிலம் தகராறுன்னு அவங்களுக்கும் தெரிஞ்சி போச்சு...*****என் தலையில் இருக்கிற ஆயிரக்கணக்கான முடிகளில் எந்த முடி எனக்கு ரொம்ப பிடிக்கும்னு கேட்டா, நான் எப்படி சொல்வேன்? அதே மாதிரிதான், என் ட்வீட்களும். இருந்தாலும் உங்களுக்காக சில இங்கே.ரோஜா ரோஜா பாடலில் எவ்வளவு ரோஜான்னு எண்ணுகையில், வழியில் குறுக்கிட்ட ஒரு இரு-கால் ரோஜாவைப் பார்த்து எண்ணிக்கையை தவறவிட்டேன்கூட்டத்திலே கோயில் புறா. யாரை இங்கு தேடுதம்மா" - கொய்யாலே. எங்கக்காவை யார்ரா அடிச்சி சாப்பிட்டது?..தண்ணீர் சிக்கனத்தைப் பற்றி பேசினால், அவனவன் அலறி அடிச்சிக்கிட்டு ஓடுறான் - மூக்கைப் பொத்திக்கிட்டு. ஏன்னு தெரியலநாளை மாலை 6 மணிக்கு 'நொந்திரன்' க்ளைமாக்ஸ் உருவான விழாவின் உருவான விழாவின் உருவான விழாவின் உருவான விழா! காணத் தவறாதீர்கள்!*****Read more...

Saturday, July 10, 2010

FeTNA-2010: ஊக்கம் கொடுத்த பாராட்டுகளுக்கு நன்றி...

முதல் நன்றி அண்ணன் பழமைபேசிக்குத்தான். அவரோட இந்த இடுகையைப் பார்த்து, விழாவில் என்னைத் தேடி வந்து பாராட்டியவர்கள் குறைந்த பட்சம் 15 பேர். அனைவருக்கும் நன்றி.

அடுத்தது நான் ஹோட்டல் அறை கொடுத்து, அதில் சுகமாய் தங்கியவர்கள், என்னைக் கண்டுபிடித்து நன்றி சொன்னவர்கள் பலர். அனைவருக்கும் நன்றி.பிறகு கூட வேலை பார்த்த சக தன்னார்வலர்கள், நண்பர்கள், விழாவில் சந்தித்த பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.அனைத்துக்கும் மேலாக இந்த அருமையான வாய்ப்பளித்து, இறுதியில் மேடையேற்றி சந்தன மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, விருதும் கொடுத்த தலைவர்கள் திரு.முத்துவேல் செல்லையா மற்றும் திரு.பழனி சுந்தரம் அவர்களுக்கும் மிக்க நன்றி..(இன்னுமொரு இடுகை புகைப்படங்களுக்காக போடலாம்னு நினைக்கிறேன். இதோட FeTNA-2010 இடுகைகள் முடிவுக்கு வரும்).


Read more...

Friday, July 9, 2010

FeTNA-2010: நான் வாங்கிய திட்டுகள்!!

வீட்டுலே திட்டு வாங்குறது நமக்கு பழக்கமானதுதான். ரெண்டு நாள் தொடர்ந்து திட்டு வாங்கலேன்னா, ஏதோ பிரச்சினைன்னு தோணும். இப்ப அதுவேண்டாம். நாம பேசப்போறது FeTNAவில் நான் வாங்கின திட்டுகளைப்பற்றி.

**********

இந்த விழாவில் என்னுடைய மற்றொரு முக்கிய வேலை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கொடையாளர்களுக்கு தங்குமிட வசதி செய்து கொடுப்பது. தமிழ்லே சொன்னா hotel room booking.

1. ஒரு/இரு படுக்கைகள் கொண்ட அறைகள்
2. ஒரு/இரு/மூன்று இரவுகளுக்கான அறைகள்
3. குழுவினருக்கு ஒரே இடத்தில் அறைகள்
4. தனிப்பட்ட வேண்டுகோள்கள் (சக்கர நாற்காலியில் வருபவர், நாய்க்குட்டியோடு வருபவர் etc.,)

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவரவர்களுக்கு அறை கொடுத்து, வந்து போக வழி, வண்டி நிறுத்த இடத்துக்கான வழி இப்படி எல்லாவற்றையும் அவர்களுக்கு தெரியப்படுத்துவதே என் வேலை.

தனிப்பட்ட முறையில் அனைவரும் கடிதம் போவதால், மிகவும் கவனமெடுத்து இதை செய்தாலும், என்னுடைய தவறால், ஒருவருக்கு நீங்க கூடுதல் இரவு எடுத்திருக்கீங்க, அதற்குண்டான பணத்தை நாளைக்கு வந்து கட்டிடுங்கன்னு அனுப்பிட்டேன்.

அதுக்கு இரவு 11.30 மணிக்கு தொலைபேசி கத்துனாரு பாருங்க.. ஹிஹி.. நமக்கெல்லாம் இது சாதாரணம்தானே.. என்னுடைய தவறுதான். என்னை மன்னிச்சிடுங்கன்னு எவ்வளவோ சொல்லியும் சமாதானமாகாத அவர், பிறகு விழாவில் நேரில் பார்த்தபொழுது மிகவும் நெருங்கிய நண்பராக மாறினார்.

*****

மேலே சொன்னது என்னுடைய தவறென்றால், ஹோட்டல்காரங்க செய்த தவறு நிறைய. அறையில் வெளிச்சம் போதலே, சுடுதண்ணி வரலே, குளிர்சாதனம் வேலை செய்யலே - அப்படின்னு என்கிட்டே புகார்கள் குவிந்தன. ஹோட்டல் அறைகளுக்கு என் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்ததால், இதெல்லாம்கூட என் காதில். மக்கா, அதெல்லாம்
அங்கேயே சொல்லுங்க. நான் வந்து எதுவும் செய்யமுடியாதுன்னு நிறைய பேருக்கு சமாதானம் சொல்ல வேண்டியிருந்தது.

*****

இதைப்போல், ரொம்ப மோசமாக கத்தினவர் இன்னொருத்தர். அவருக்கு இரு படுக்கைகள் கொண்ட அறைக்குப் பதில் ஓரு ப. கொ. அறைதான் கிடைச்சது. இந்த மாதிரி மாத்தி கொடுத்துட்டேன்னு என்கிட்டேயும் ஹோட்டல்காரங்க சொல்லலே.

நட்சத்திர அறிமுக கூட்டத்தில் நானும் இன்னொரு நண்பரும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம்னு பேசவேண்டியதை தயார் செய்து வைத்திருந்தோம். சரியா அந்த நேரம் பார்த்து மேற்படி ஆளு தொலைபேசி கச்சாமுச்சான்னு கத்த, அவரை சமாதானப்படுத்தி வேறொரு அறை வாங்கிக் கொடுக்க ஆள் எதுவும் கிடைக்காமே நானே போக வேண்டியதாகி, இந்த தொகுத்து வழங்கும் வாய்ப்பு பறிபோனது.

நீங்கதான் இதை ( நிகழ்ச்சி தொகுப்பு) செய்திருக்கணும். திடீர்னு இந்த பிரச்சினை வந்தது எதிர்பாராததுன்னு தலைவர் இன்றளவும் சொல்லி வருத்தப்படும் சம்பவம். ரைட் விடுங்க அடுத்த தடவை பாத்துப்போம்னு சொன்னேன்.

*****

இப்படி திட்டினவங்களைத் தவிர பலர் நேரில் தேடி வந்து பாராட்டியது மிக மிக மகிழ்ச்சியடைய வைத்தது.

அப்படி கிடைத்த பாராட்டுக்களும், பரிசுகளும் அடுத்த இடுகையில்.

*****

Read more...

Wednesday, July 7, 2010

FeTNA-2010: திரைக்குப் பின்னால்.. நடந்தது என்ன?

இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெவ்வேறு ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள், ஒலி/ஒளி அமைப்பு இருந்தும் எப்படி இவை அனைத்தும் தங்குதடையின்றி (சிற்சில பிழைகளைத் தவிர) நடந்தேறின?

இவற்றுக்குக் காரணம் மேடைக்குப் பின்னால் 8 பேர் கொண்ட ஒரு குழு. இவர்கள் செய்தது என்ன?

ஒருவர் ஒலி.

ஒருவர் ஒளி.

ஒருவர் வெண்திரையில் விவரங்களைக் காட்ட.

ஒருவர் மேடையில் தேவையான பொருட்களை சேகரிக்க

ஒருவர் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்களை ஒருங்கிணைக்க

ஒருவர் தகவல் பரிமாற்றத்துக்கு

ஒருவர் அவசர தேவைகளுக்கு

இவர்கள் எல்லோருக்கும் மேலாளராக ஒருவர்

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இந்த 8 பேரும் ஒருவரையொருவர் (கம்பியில்லா சாதனத்தின் மூலம்) தொடர்பு கொண்டு - அனைவரும் தயாரா என்று கேட்டபிறகு - மேலாளர் "திரையைத் தூக்கலாம்" என்று சொன்னவுடன் அவரவர் வேலையைத் துவக்க வேண்டும்.

இதில் யாரேனும் ஒருவர் பிரச்சினை என்று சொன்னாலும், திரையைத் தூக்காமல், 'ஒலி'க்காரர் ஏதேனும் ஒரு பின்னணி இசையை போட்டுவிடுவார். ஏதேனும் அறிவிப்பு இருந்தால் அறிவிப்பு செய்ய மற்றொருவர் வந்துவிடுவார். அதற்குள் பிரச்சினை களையப்பட்டு திரையைத் தூக்க ஏற்பாடு செய்யப்படும்.

இதில் இன்னொரு தகவல் என்னன்னா, இந்த 8 பேரும் ஒரே அலைவரிசையில் இல்லை. அரங்கத்தின் கம்பியில்லா அலைவரிசையில் மூவரும், நம் (தனியார்) அலைவரிசையில் பாக்கி பேரும் இருந்தோம். அரங்க அலைவரிசையில் ஆங்கிலேயரும் இருந்ததால் அதில் ஆங்கிலத்திலும், நம் அலைவரிசையில் தமிழிலும் பேசவேண்டும்.

இந்த கூட்டுமுயற்சியில் என்னுடைய வேலை என்னவென்றால், இரண்டு அலைவரிசைக்கும் நடுவில் இருந்து, தகவல் பரிமாற்றம் செய்வது.

இக்குழுவில் ஓரிருவரைத் தவிர பாக்கி அனைவருக்கும் இந்த வேலை புதிதாக இருந்தாலும், ஆரம்ப சில பிழைகளுக்குப்பின், வேலைகள் கடகடவென நடந்தன.

அரங்கத்திலிருந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் யாருக்கும் கடைசிவரை இந்த 8 பேரைப் பற்றி தெரியாவிட்டாலும், இவர்களது ஒருங்கிணைப்பே இந்த இரண்டு நாட்கள் முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற வலுவானதொரு காரணமாகும்.

விழா சுமுகமாக முடிந்தபிறகு வேலை செய்த அனைவரும் பயங்கர திருப்தியாக உணர்ந்தோம். வாய்ப்பளித்த பேரவைக்கு நன்றி கூறி குழுவின் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்.

Read more...

Tuesday, July 6, 2010

FeTNA-2010: மதுரை வீரன் தெருக்கூத்து..

பட்டையை கிளப்புறான், பட்டையை கிளப்புறான் அப்படின்னு போட்டி போட்டு கூவும் ‘அவரோட’ ரசிகர்களும், ‘இவரோட’ ரசிகர்களும் இந்த மதுரை வீரன் தெருக்கூத்தை பார்த்திருக்கணும். இவங்கதான் நிஜமா ப.கி.

நானெல்லாம் சென்னையில் பொறந்து வளர்ந்த ஆளு. கோவில் திருவிழான்னா தெரு முழுக்க ஒலிபெருக்கி வெச்சி பாட்டு போட்டு, பசங்களை படிக்கவே விடாமே தொந்தரவு பண்ணுவாங்க (ஹையா. ஜாலி!). கூத்து எல்லாம் பாத்தது இல்லை. திரைப்படங்களில் பாத்த மாதிரியும் தெரியல. அதனால் இந்த விழாவில் பாத்துடலாம்னு முடிவோட
இருந்தேன்.

முதலிலிருந்தே இந்த கலைஞர்கள் வருவதில் பிரச்சினை இருந்தது. முதலில் விசா பிரச்சினை. பிறகு பயணச்சீட்டு கிடைக்காமல் பிரச்சினை. பிறகு விமானம் தாமதமானதால் பிரச்சினை. பிறகு ஒரு வழியாய் விழாவின் முதல் நாளன்று வந்து சேர்ந்தனர். நிகழ்ச்சி நிரலில் கூத்து முதல் நாள் இரவென்று போட்டிருந்தது. இரண்டரை மணி நேர நிகழ்ச்சி. அவர்கள் அன்றுதான் வந்திருந்ததால், கடைசி நேரத்தில் நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டு, அன்று இரவு நட்சத்திரங்களின் அறிமுகம் என்றும், அடுத்த நாள் கூத்து என்றும் அறிவிக்கப்பட்டது.

அடுத்த நாள் மாலை 4.30௦ மணி நிகழ்ச்சிக்கு, மதியம் 12 மணியிலிருந்தே ஒப்பனை செய்யத் தொடங்குகிறார்கள். 4.30 மணியும் ஆயிற்று. அரங்கில் கூட்டம் அப்புகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கூத்து துவங்குகிறது.

ஆரம்பத்தில், சலசலவென மக்களிடமிருந்து வந்த சத்தம் சிறிது நேரத்தில் அடங்குகிறது. கலைஞர்கள் ஆடுகின்றனர். பாடுகின்றனர். குதிக்கின்றனர். சுழலுகின்றனர். சிரிக்கின்றனர். அழுகின்றனர். மக்களை அங்கிங்கு நகரவிடாமல் நாற்காலியில் கட்டிப் போடுகின்றனர். மக்களும் சும்மா உட்காரவில்லை, உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருக்கின்றனர்.

அப்புறம் வந்துச்சு பாருங்க, மதுரை வீரன் வருகை. அரங்க வாயிலிலிருந்து மேடை நோக்கி வரும் அந்த வீரனுக்கு - அடேங்கப்பா.. மக்கள் அனைவரும் எழுந்து நின்று மதுரை வீரனை வரவேற்கின்றனர். கைதட்டலும், விசில் சத்தமும் காதைப் பிளக்கின்றன. (அப்துல்லா அண்ணனின் விசில் சத்தம் ஒலிபெருக்கியே இல்லாமல் அரங்கம் முழுவதும் பரவுகிறது. நான் பாம்பு மாதிரி.. வெறும் புஸ் புஸ்!) .

ஒரு சிலர் வீரன் முன் நடனமாடத் துவங்க, பலர் அவர்களை பின்பற்ற, ஏகப்பட்ட பேர் முண்டியடிக்க, இவர்கள் எல்லோரையும் தாண்டி வீரன் மேடைக்கு வரவே 20 நிமிடங்களுக்கு மேலானது. மேடையிலும் பலர் (இரு பெண்கள் ஆவேசத்துடன் தலைவிரி கோலமாக) ஆட, நாங்கள் இருப்பது அமெரிக்காவா இல்லை தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமமா என்ற ஒரு சந்தேகம் வந்துவிட்டது. பிறகு அனைவரையும் கீழே அனுப்பிவிட்டு மறுபடி கூத்தை ஆரம்பிக்க சிறிது நேரம் பிடித்தது.

மதுரை வீரன் கதை பரபரவென்று நகர்கிறது. நாயகன் பிறப்பது, பெற்றோரை பிரிவது, நாயகி பிறப்பது, இருவரும் பெரியவர்களாவது என்று ஆடல் பாடல்களுடன் விவரிக்கின்றனர். அனைவரது நடிப்பையும் விவரிக்க அருமை, அட்டகாசம் போன்ற வார்த்தைகள் குறைவே.

ஒன்றரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்ததே பெரிய விஷயம்னு நினைச்சிக்கிட்டிருந்தபோதே, கடமை 'காலிங் சத்யா, காலிங் சத்யா' என்று காதில் ஒலித்தது. அதனால், கூத்தின் முடிவே பார்க்காமல் எழுந்து வெளியே வந்துவிட்டேன். கடைசிவரை பார்த்த நண்பர்கள் கூறியதைக் கேட்டு முடிவை தவறவிட்டதை எண்ணி வருத்தமுற்றேன்.

அடுத்த வாரம் காணொளி வரும்போது பார்க்கவேண்டும் என்று இருக்கும் பலரில் நானும் ஒருவன்.

ஒரு அருமையான கலையை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் முனைவர் ஆறுமுகம் குழுவினருக்கு வணக்கங்களும், இந்த அற்புதமான அனுபவத்தை அளித்த பேரவை அமைப்பாளர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

*****

அடுத்த நாள் கூத்துக் குழுவினர் தங்கியிருந்த இடத்தில் வேறொரு வேலை செய்யப் போயிருந்தபோது அக்குழுவில் பங்குபெற்ற ஒரு கலைஞரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் - இந்தியாவில் கூத்து நடத்தி முடித்தபிறகு மக்கள் மேடையேறி அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்றும், அமெரிக்காவிலும் அப்படி கொடுப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்ததாகவும் கூறினார்.

இங்கிருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு (என்னையும் சேர்த்து) கூத்து நிகழ்ச்சியே புதிதாக இருக்கும்போது, அப்படி பணம் கொடுக்கும் வழக்கம் இருக்கு என்பதே தெரிந்திருக்காது என்பதை விளக்கி, கையில் இருந்த சில நோட்டுக்களை கொடுத்து, கூத்துக்காக பாராட்டிவிட்டு வந்தேன்.

******

பிகு: படங்களை பழமை அண்ணனின் இடுகைகளில் பார்த்துக் கொள்ளுங்கள். (என் படங்களைப் பற்றி.. அது ஒரு பெரிய கதை.. தனி இடுகையில்!).

******

Read more...

Monday, July 5, 2010

FeTNA-2010 : பழமைபேசியையும், நசரேனையும் தோற்கடிச்சிட்டோம்ல!


பேரவைக்காக நான் செய்த பல்வேறு வேலைகளுக்கு நடுவில் (அவை தனித்தனி இடுகைகளில் வரும்!) இலக்கிய வினாடி வினாவில் பங்கேற்பதாகவும் பேர் கொடுத்திருந்தேன்.

பின்னர் தன்னந்தனியாக இருந்தவொரு நேரத்தில் - இலக்கியத்துக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? அதில் நாம் என்ன பதில் சொல்ல முடியும்? - என்றெல்லாம் யோசித்துப் பார்த்தேன். கல்யாணம்ற ஒரு பெரிய சவாலையே ஏத்துக்கிட்டே, இந்த வினாடி வினா முடியாதான்னு எதிரே இருந்தவர் (கண்ணாடியில்) சொன்னார்.


சரி நானும் ஆட்டத்துக்கு வர்றேன்னு சொல்லிய அடுத்த நாளுக்குள் அண்ணன் பழமைபேசி, அணிகளெல்லாம் அறிவிச்சிட்டு பல்வழி அழைப்புகளுக்கான நேரம் காலத்தையெல்லாம் குறிச்சி அனுப்பிட்டார். நானும் இரண்டொரு அழைப்பில் கலந்துகொள்கிறேன். எனக்கு சில பாடத்திட்டங்களை ஒதுக்கி, நீ கண்டிப்பா இதை படிக்கணும்னெல்லாம் சொல்லிட்டாங்க.


அப்பதான் பேரவை விழாவுக்கான வேலைகள் சரியான சூடு பிடித்திருந்த நேரம். நானும் __யாக ஆரம்பித்த காலம். இந்த எனக்கான பாடத்தையும் படிக்க ஆரம்பிச்சேன். நல்லவேளை, செய்யுள், வெண்பா அப்படியெல்லாம் குடுக்காமே எனக்கு உரைநடைப்பகுதிகளை ஒதுக்கியிருந்தாங்க. ஜாலியா பல தடவைகள் படிச்சேன். கொஞ்சம் விட்டுப்(பி)படிப்போம்னு முடிவு செய்தேன். விட்டுட்டேன். ஹிஹி.. உங்களுக்குத்தான் தெரியுமே.. அப்புறம் (பி)படிக்கவேயில்லை.


அதற்குள் விழாவுக்கான நேரம் வந்துவிட்டது. நான் பயங்கர __யாயிட்டேன். நம்ம அணியிலிருக்கிற மத்தவங்க படிக்காமலா போயிருப்பாங்க. அவங்க நம்மளையும் ஜெயிக்க வெச்சிருவாங்கன்னு தைரியம் வந்துடுச்சு (வேறே வழி?). மேலும் எங்க அணியில் அண்ணன் அப்துல்லா இருந்தாருன்றது ஒரு யானையளவு தைரியத்தை கொடுத்திருந்தது. எதிரணியில் அண்ணன் பழமைபேசியும், தம்பி நசரேயனும்.

இங்கே ‘கட்’ பண்றோம். இப்போ விழாவில் இரண்டாம் நாள்.

வினாடிவினா துவங்குகிறது. அட்டகாசமான வடிவமைப்பு. பல்லூடத்தின் சிறப்பான பயன்பாடு. உருவாக்கியவர் திரு. நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள். பலவிதமான கேள்விகள். பதில்கள் கொட்டுகின்றன. மறுபடி ஒரு ஹிஹி. பதில்கள் கொட்டுறது என்கிட்டேயிருந்து இல்லே. என்னைத் தவிர மத்தவங்க எல்லார்கிட்டேயிருந்தும். இப்படி எல்லாக் கேள்விகளும் பாடத்திட்டங்களுக்கு வெளியே (out-of-syllabus) கேட்டா நான் எப்படி பதில் சொல்றதுன்னு, என்னையே நான் சமாதானப்படுத்திக்கிட்டேன்.

நடுவில் ஒரு கேள்வி கேட்டப்போ டக்குன்னு கையத் தூக்குறேன். பக்கத்திலிருந்த அண்ணன் அப்துல்லா, மைக்கை சத்யாகிட்டே கொடுங்க. கையத் தூக்குறாரு. பதில் அவருக்குத் தெரியும்போலங்கறாரு. சட்டை ரொம்ப ச்சின்னதானதால், அதைக் கொஞ்சம் தளர்த்திக்கலாமேன்னு கையைத் தூக்கியது பேராபத்துலே முடிஞ்சுடுச்சு. அப்புறம் வழியறது நமக்கென்ன புதுசா, உண்மையச் சொல்லிட்டு கையை இறக்கிட்டேன்.

கடகடன்னு பறக்குற வினாடிவினா கேள்விகள். எல்லாத்துக்கும் சடசடவென பதில்கள். தமிழார்வலர்கள், அறிஞர்கள் கலக்குறாங்க. அருமையான பதில்களுக்குப் பிறகு நிகழ்ச்சி முடிவடையுது. ஜெயிக்கப் போவது யாரு? வேற யாரு? எங்க அணிதான். 9 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் நாங்க ஜெயிச்சிட்டோம். எல்லோருக்கும் முனைவர் பர்வீன் சுல்தானா சான்றிதழ்கள் வழங்குறாங்க.


மத்தவங்க எல்லாரும் படிச்சி தெரிஞ்சிக்கிட்டு நிகழ்ச்சிக்கு வந்தாங்கன்னா, நான் மட்டும் நிகழ்ச்சிக்கு வந்துட்டு நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். அடுத்த வருடமாவது ஏதாவது உருப்படியா படிக்கலாம்னு ஒரு யோசனை. பாப்போம். டேய் அடுத்த வருடமும் இதே இடுகையை மறுவெளியீடுதான் செய்யப்போறேன்னு அவரு கண்ணாடியில் சொல்றாரு. (மொதல்லே வீட்டிலிருக்கிற கண்ணாடியையெல்லாம் தூக்கணும்...)

*****

பிகு-1 : எனக்குக் கொடுத்த சான்றிதழில் என் பேருக்கு முன்னால் இருக்கிற இரண்டு சொற்களைப் பாத்து சிரிக்கக்கூடாது சொல்லிட்டேன்.

பிகு-2 : இடுகையில் ரெண்டு இடத்தில் __ போட்டிருக்கிறேன். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். ‘பி’யில் துவங்கி ‘ஸி’யில் முடியுற ஒரு சொல். அதை கொஞ்சம் ஓவராத்தான் சொல்லிட்டேன் போல. அவருக்குப் பிடிக்கலே. அவரு போட்டிருக்கிறது நீதானா பாருன்னு உரலைக் கொடுத்த நண்பருக்கு நன்றி..

*****

Read more...

Tuesday, June 29, 2010

FeTNA-2010 : 23ம் ஆண்டு விழா

1 சென்ற வருடம் எங்க ஊர் தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி விழா. முதல்முறையாக நாங்க போனோம். அப்பத்தான் சொன்னாங்க அடுத்த வருடம் பேரவை விழா இதே ஊரில்தான் நடக்குதுன்னு.


2 அடுத்த நாள் பழமைபேசி அண்ணனுக்கு முதல்முறையாக தொலைபேசறேன் - அண்ணே. நான் ஏதாவது உதவி செய்யமுடியுமா?


3 அடுத்த நாள் பேரவை செயலரிடமிருந்து தொலைபேசி வருது. - மிக்க மகிழ்ச்சி. இன்னும் வேலைகள் துவங்கலே. நான் உங்களுக்கு மின்னஞ்சல் செய்யறேன்.


4 ஜனவரி மாதம் - மெதுவா மின்னஞ்சல்கள் வரத் துவங்குகின்றது. தன்னார்வலர்கள் கூட்டத்திற்கு கூப்பிடுறாங்க. ஓரிரு நண்பர்கள் கிடைக்குறாங்க.


5 பிப்ரவரி மாதம் - குழுக்கள் அமைக்கப்படுகின்றன. என்னையும் இரு குழுக்களில் போடுகின்றனர். இரு வாரங்களுக்கொரு முறை தொலைபேசியிலும் மாதமொருமுறை சந்திப்பும் துவங்குகின்றன.


6 மார்ச் மாதம் - குழுக்கள் பரபரப்பாகின்றன. வாரநாட்களில் பல்வழி அழைப்புகள் ஆரம்பம். வாரயிறுதிகளிலும் வேலை வருகின்றது.


7 ஏப்ரல் மாதம் - இப்போது நான் மூன்று குழுக்களில். இரண்டில் தலைமை. வாரத்தில் மூன்று பல்வழி அழைப்புகள். அதில் பேசியவைகளை வைத்து வேலைகள் செய்கிறோம். மின்னஞ்சல்கள் பெருகுகின்றன.


8 மே மாதம்: அனைத்து நாட்களும் பல்வழி அழைப்புகள். ஒரு நாளைக்கு கு.ப 10 மின்னஞ்சல்களுக்கு பதில் போட வேண்டியிருக்கிறது. வாரயிறுதியில் ஒரு நாள் வேலை. வீட்டில் மெதுவாக 'ப்ச்' என முணுமுணுப்புகள் துவங்குகின்றன. அலுவலக வேலைகளுக்கு இதுவரை பங்கமில்லை.


9 ஜுன் மாதம்:அலுவலகம் பல நாட்கள் மட்டம் போட்டு இந்த வேலை செய்யவேண்டிய நிலை. வீட்டில் அன்றாடம் செய்யும் வேளைகளில் சுணக்கம். தினமும் பல்வேறு அழைப்புகள். ஏகப்பட்ட மின்னஞ்சல்கள். வாரமொருமுறை கூட்டம்.


10. ஜுலை 3, 4, 5: ஆறு மாத உழைப்புக்கு பலன் கிடைக்கும் மாதம். இன்னும் மூன்று நாட்களில் விழா. வேலைகள் உச்சக்கட்டத்தில். அனைத்து தன்னார்வலர்களும் தயார் நிலையில்.

**********

இதுக்கு மேல் அடிக்க நேரமில்லை எனக்கு. அதனால் விழாவுக்கு வாங்க. அங்கே சந்திப்போம்.

**********

Read more...

Thursday, June 24, 2010

சிகரெட் நாற்றம் எனக்குப் பிடிக்காது...


ச்சின்ன வயசிலேந்தே எனக்கு இந்த சிகரெட் நாற்றம் (சில பேரு வாசனைன்னு சொல்லுவாங்க!) பிடிக்காது. நல்ல வேளையா எங்க வீட்டுலே யாரும் சிகரெட் பிடிக்க மாட்டாங்க. ஆனா, மத்த பொது இடங்கள்லே சிகரெட் பிடிக்கறவங்களால் எப்பவும் பெருந்தொல்லைதான்.அலுவலகத்தில் அப்பப்போ டீ குடிக்கப் போகும்போது, கூட வர்ற நண்பர்கள் தம் பத்த வைப்பாங்க. அவங்ககிட்டே ”ஏண்டா இப்படி சிகரெட் குடிச்சி உங்க உடம்பை கெடுத்துக்கறது பத்தாமே என் உடல்நலத்தையும் கெடுக்குறீங்க? இந்த கண்றாவியை விட்டுத் தொலையுங்களேன்" - அப்படின்னு நான் சொன்னா ஒருத்தனாவது கேட்டாதானே. சிரிச்சிக்கிட்டே "தம் அடிக்குறதால்தான் எங்களுக்கு மன நிம்மதியே கிடைக்குது. உனக்குப் பிடிக்கலேன்னா தள்ளி நில்லு".
சிகரெட் குடிக்கக்கூடாதுன்னு சிறுவர்கள் பள்ளியில் படிக்கும்போதே சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கணும். சிகரெட் குடிக்கறதால் வரக்கூடிய நோய்கள், சும்மா பக்கத்தில் நின்று அந்த புகையை சுவாசிக்கிறதால் வரக்கூடிய பிரச்சினைகள் - இதையெல்லாம் தெளிவா பசங்களுக்கு புரியற மாதிரி பாடம் நடத்தணும். இதெல்லாம் நான் சொன்னா யாரு கேக்குறாங்க?நான் அடிக்கடி நினைச்சிக்குவேன். இந்த விமான நிலையத்துலே இன்னும் சில இடங்கள்லே, சிகரெட் பிடிக்கறவங்களுக்குன்னு தனியா இடம் ஒதுக்கியிருப்பாங்க. அதே மாதிரி ஒவ்வொரு ஊரிலும் இவங்களுக்கு தனியிடம் கொடுத்துட்டு - அங்கேதான் இனிமே தம் அடிக்கணும்னு சொல்லிடணும்னு.முடிஞ்சா இவங்களுக்காக ஒரு தனி ஊரே உருவாக்கிட்டு - அதுக்கு தம்பரம் (தாம்பரம் மாதிரி!) அப்படின்னு பேரு வெச்சி எல்லாரையும் அங்கே அனுப்பிட்டா, மத்தவங்க இந்த சிகரெட் புகைலேந்து தப்பிக்க முடியும். நான் ஒரு நாள் முதல்வரானா போடும் முதல் கையெழுத்து இந்த தம்பரம் நகருக்குதான் இருக்கும். (அடுத்தது ஸ்விஸ் வங்கி கணக்கு அப்ளிகேஷன்!).
சரி விடுங்க. நாம எவ்வளவு சொன்னாலும் இவங்க யாரும் கேக்கப்போறதில்லே. நம்மாலே முடிஞ்சது இந்த சிகரெட் புகையிலேந்து தப்பிக்க அந்த கடைப்பக்கம் ஒதுங்கிக்குவோம்.
“தம்பி, காஜா பீடி ஒரு கட்டு எடுப்பா...”.
என்ன ஆச்சு? உங்களுக்கும் இருமலா? கொஞ்சம் தள்ளி நிக்கவேண்டியதுதானே?
*****
Read more...

Wednesday, June 23, 2010

நாலு பேர் ஆறு விதமா..

பணம் இன்னிக்கு வரும். நாளைக்கு போகும். அதுக்காக வராமே இருக்கறதா?

எப்போ அமெரிக்காவுக்கு போனானோ அப்பவே உறவினர்களையெல்லாம் மறந்துட்டான்.

வேலை என்ன பெரிய வேலை. இது இல்லைன்னா வேறே வேலையே கிடைக்காதா என்ன?

இரண்டு மூணு நாள் கூட விடுமுறை கிடைக்கலேன்னா, அலுவலகமே இவன் தலையில்தான் ஓடுதா என்ன?

வீட்டுக்கு பெரியவனா முன்னிருந்து நடத்த வேணாமா? இப்படியா தொலைபேசியில் விசாரிக்கறது?

எல்லாம் பணம் பண்ற வேலை. அந்த காலத்துலே எப்படி இருந்தோம்னு நினைச்சி பாக்க வேணாமா?

*****

இப்படி எல்லோரும் எதைப் பத்தி பேசறாங்க? விவரங்கள் இடுகையில்..

*****

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23வது ஆண்டு விழாவில் மாபெரும் பதிவர் சந்திப்பு ஒன்று நடக்க இருக்கிறது. பதிவர்களும், அனானிகளும், மற்றும் அனைவரையும் வருமாறு அழைக்கிறேன்.

உள்ளூர் அண்ணன் விழாவின் பிரச்சார பீரங்கி (மாதிரி!) பழமைபேசியும், வெளியூர் அண்ணன் அப்துல்லா அவர்களும் பங்கேற்கிறார்கள். அனைவரும் வருக, ஆதரவு தருக!!!

*****

ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டு முடிவடையும்போது சஹானாவின் வாத்திகளிடம் ஒரு சின்ன நோட்டு கொடுத்து, சஹானாவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதுமாறு சொல்வோம்.

மூன்றாவது வருடமாக இந்த வருடமும் எழுதி வாங்கியிருக்கிறோம். கடந்த வருடங்களின் குறிப்புகளை இப்போது படித்தாலே பரவசமாய் இருக்கும்போது இன்னும் 15-20௦ வருடங்கள் கழித்துப் படித்தால் எப்படி இருக்கும்? ஏய் யாருப்பா அது பின்னாலே - 15 வருடம் கழிச்சி வா, எப்படி இருந்துச்சுன்னு சொல்றேன்னு சொல்றது?)

*****

ரொம்ப நாளைக்கு முன்னாடியே மின்னூல் கிடைத்தாலும், புத்தகம் வாங்கித்தான் படிக்கணும்னு இருந்தது - சேத்தன் பகத்தின் 2 States. பஞ்சாப் பையனுக்கும், தமிழ் பொண்ணுக்கும் நடுவே ஒரு ’இது’. பல தடைகளைத் தாண்டி ’அது’ எப்படி திருமணத்துலே முடியுதுன்னு புத்தகம்.

போன தடவை இந்தியா போயிருந்தபோது அந்த புத்தகத்தை வாங்கி வந்து - ஓய்வறையில் படிச்சி படிச்சி ஒரு வழியா படிச்சி முடிச்சேன். நிறைய பேர் ஏற்கனவே படிச்சிட்டிருப்பீங்க. கதையில் வர்ற தமிழ்க்குடும்பம் மூலமா தமிழர்களை நல்லா வாரியிருக்காரு சேத்தன்.

கதையில் வர்ற தமிழ் வார்த்தைகளுக்கெல்லாம் பொருள் கேட்கும் என் குழுவிலிருக்கும் (இந்தியப்) பெண்களுக்கு நான் சொல்லும் பதில் வெறும் ‘ஙே’தான். ஏன்னு கேக்குறீங்களா? அட. புத்தகத்தில் அங்கங்கே அக்மார்க் தமிழ் கெட்ட வார்த்தைகள். அதுக்கெல்லாம் பொருள் சொல்லமுடியுமா? அதுவும் பொண்ணுங்க கிட்டே போய்? இந்த விளையாட்டுக்கே நான் வரலேப்பா!!!

*****

இந்த வாரயிறுதியில் சென்னையில் என் கூடப்பிறந்த (கூடன்னா கூடவே இல்லை. ஒரு நாலு வருஷம் தள்ளி!) தம்பிக்கு திருமணம். பல்வேறு காரணங்களால் என்னால் போக முடியவில்லை. வரமுடியாதுன்னு பல மாதங்களாய் சொன்னாலும், கடைசி நிமிடத்தில் <இடுகைத் தலைப்பு> பேசத்தானே செய்வாங்க.

*****

Read more...

Thursday, June 17, 2010

வேலையை துவக்குறதுக்கு முன்னாடி என்ன செய்வீங்க?

தினமும் அலுவலகத்திற்கு போனவுடன் வேலையை துவக்குறதுக்கு முன்னாடி என்ன செய்வீங்க? மக்கள்கிட்டே இப்படி கேட்டா அவங்க என்ன சொல்வாங்கன்னு பாத்துட்டு, கூடவே நான் வேலை ‘பாத்த’ இத்தனை (எத்தனை?) வருட அனுபவத்தில் என்ன நடந்ததுன்னு ஒரு கொசுவத்தி...

*****

மக்கள்: காலையில் வந்ததும் நான் என் மேஜையில் இருக்கும் சாமி படங்களை கும்பிட்டுதான் வேலையை துவக்குவேன்.

கொசு: நான் முதன்முதல்லே வேலை செய்த அலுவலகத்தில் ஒரு வயசான மேனேஜர் இருந்தாரு. அவரு அறைக்குள் நுழைந்தாலே கோயிலுக்குள் நுழைந்த மாதிரி - ஏகப்பட்டு சாமிகளின் படங்கள் இருக்கும். காலங்கார்த்தாலே வந்தவுடன், ஒரு அஞ்சு நிமிடம் பூஜை செய்துட்டு - கற்பூரம் காட்டி, பாதாம் முந்திரி இதையெல்லாம் படைச்சிட்டு பிறகு
அதை எங்களுக்கு கொடுப்பாரு. என்னதான் அவசர வேலையிருந்தாலும் பூஜை செய்யாமே வேலையை துவக்க மாட்டாரு.

அப்போ நான் ரொம்ப வீக்கா இருந்தேனா, அதனால் அவரு இல்லாத நேரத்துலே கடவுளுக்காக வெச்சிருந்த பாதாம், முந்திரியெல்லாம் அப்படியே எடுத்து சாப்பிட்டிருந்தேன்னு அவருக்கு இந்த தேதிவரைக்கும் தெரியாது. நீங்களும் சொல்லிடாதீங்க.

*****

மக்கள்: காலங்கார்த்தாலே சூடா ஒரு காபி அடிச்சபிறகுதான் வேலை.

கொசு: இன்னொரு அலுவலகத்துலே 9 மணிக்கு போனவுடனேயே சுடச்சுட காபி கொண்டு வந்து கொடுத்துடுவாங்க. அதுலே சுக்கு அப்புறம் என்னத்தையோ போட்டு கொடுப்பாங்களா, நாள்முழுக்க நாக்கு அரிச்சிக்கிட்டே இருக்கும். அப்படியும் விடாமே ஒரு கையால் (என்) நாக்கை சொறிஞ்சிக்கிட்டு, இன்னொரு கையால் வேலை செய்துட்டிருப்பேன்னா, என் கடமையுணர்ச்சிக்காக பாராட்டு விழா ஏற்பாடு பண்ணவங்க நிறைய பேரு. (அவங்கல்லாம் யாருன்னு இப்ப கேக்காதீங்க!).

*****

மக்கள்: தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விமர்சன வம்புதான் முதலில். அப்புறம்தான் வேலை.

கொசு: சென்னையில் வேலை செய்த அந்த சமயத்தில் 'மெட்டி ஒலி' ரொம்ப பரபரப்பா ஓடிட்டிருந்தது. கூட வேலை செய்த சில நண்ப / நண்பிகளுக்கு காலையில் வந்தவுடனேயே அதைப்பற்றி பேசலேன்னா வேலையே ஓடாது. ஒரு பத்து நிமிடம் குடுப்பா/ம்மா, மின்னஞ்சல் பாத்துட்டு வந்துடறேன்னு சொன்னா, ம்ஹூம் கேட்டாதானே..


மேனேஜருக்காக பயந்து எல்லோரும் தனித்தனியா கிளம்பி போய், காபி குடிக்குற இடத்துலே உக்காந்து 'மெஒ' பத்தி பேசிட்டம்னா.. ஹிஹி.. அடுத்த அரை மணி நேரத்துலே மறுபடி காபி குடிக்குற வரைக்கும் வேலை நல்லா ஓடும்.

*****

மக்கள்: வீட்டுலே செய்திகளை பார்க்க எங்கே நேரமிருக்கு? அதனால், அலுவலகத்தில் முதல் வேலை அதுதான்.

கொசு: இப்படித்தான் ஒரு நண்பன் இருந்தான். ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகளை (கணிணியில்) திறந்து வெச்சிக்கிட்டு செய்திகளை ஒப்பிட்டு, அலசி, படிச்சப்புறம்தான் வேலையை ஆரம்பிப்பான். ஏதாவது ஒரு நாள் பரபரப்பு செய்திகள் ஒண்ணுமில்லேன்னா, அன்னிக்கு முழுதும் ரொம்பவே கவலையா இருப்பான். இப்படித்தான் நிறைய பேரு பரபரப்புக்காகவே சுத்தறாங்க. சரிதானே?

*****

இன்னும் சில பேரு சொந்த மின்னஞ்சல், அப்புறம் சில பேரு ஓய்வறைக்குப் போய் ஒப்பனை ( நானில்லைங்கோ!) - இப்படியாக பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு ஒரு வழியா வேலையை துவக்க உக்காருவாங்க.

*****

அது சரி. இவ்ளோ சொன்னியே, வேலையை துவக்கறதுக்கு முன்னாடி நீ என்ன செய்வேன்னு கேக்குறீங்களா? அட சும்மா கேளுங்க..

சரி கேட்டாச்சா?...

போங்க பாஸு.. அதை யாராவது வேலை செய்யறவங்ககிட்டே போய் கேளுங்க. ச்சின்னப்புள்ளத்தனமா என்கிட்டே கேட்டுக்கிட்டு...

*****

Read more...

Tuesday, June 8, 2010

பாசம், பொறுமை, சண்டை மற்றும் தமிழ் விழா!

திடீர்னு எங்க வீட்டு பக்கத்தில் இருக்கிற ரெண்டு - மூணு பேரு எங்கிட்டே பேசறத நிறுத்திட்டாங்க. முன்னாடி மெதுவா புன்னகை புரிஞ்சவங்க, பின்னாடி பற்களை கடுகடுன்னு கடிக்கறாங்க. அப்படி என்னதான் ஆச்சு... கீழே படிங்க...

*****

அப்பா வந்துட்டாருடா செல்லம்.
குட் நைட்,
குட் மார்னிங்,
பசிக்குதாடா கண்ணு

அப்படின்னு "அவங்க"கிட்டேயும்

சத்தம் போடாதீங்க. "அவங்க" தூங்கறாங்க
விளக்கை அணைங்க. "அவங்களுக்கு" தொந்தரவா இருக்கில்லே

அப்படின்னு எங்க கிட்டேயும் சொல்லிட்டிருந்தாங்க சஹானா.

(நாங்க = நாங்க. அவங்க = மீன்கள்)

அவங்களுக்கு சாப்பாடு போடறது, தொட்டியை சுத்தம் பண்றது, தூசு தும்பு அவங்களை பாதிக்காமே பாக்குறது - அப்படி இப்படின்னு வேலைங்க கூடிப்போச்சு.

வாங்கின புதுசுலே தொட்டி பக்கத்துலே போனாலே அலறி அடிச்சி ஓடிட்டிருந்த ஸ்வீட்டியும், ப்யூட்டியும் - நாலு வாரத்துலே தைரியமா முன்னாடி வந்து நிக்க ஆரம்பிச்சாங்க.

திடீர்னு ஒரு நாள் ப்யூட்டி குப்புற கவுந்தடிச்சி படுத்திருந்தாங்க. ஒண்ணுமே புரியல. சஹானா அவங்களை மருத்துவர்கிட்டே கூட்டிட்டு போகணும்னு அடம் பிடிக்குறாங்க. அவங்க வாத்தி வீட்டுலேயும் இப்படித்தான் ஆகி, பின்னாடி மருத்துவர்கிட்டே போய் சரிசெய்தாங்கன்னு அழுகை.

நமக்கு இருக்கவே இருக்கு கூகிள். என்ன ஆச்சுன்னு ஆராய்ச்சி பண்ணினா - வயித்துலே காத்து போயிட்டா மீன் அப்படித்தான் கவுந்தடிச்சி படுத்திருக்கும்னும், 90% உயிருக்கு பிரச்சினையிருக்காதுன்னும்
போட்டிருந்துச்சு.

அங்கு போட்டிருந்தபடியே மறுபடியும் தண்ணியை சுத்தம் பண்ணிட்டு, கடவுளை வேண்டிக்கிட்டு இரவு படுக்கப் போனோம்.

காலை 5 மணி.

ப்யூட்டி நினைப்பிலேயே படுத்திருந்து, எழுந்து வந்து பார்த்தால் - ம்ஹூம். பேச்சு மூச்சு இல்லை. சஹானா எழுந்து வர்றதுக்குள்ளே அவங்களை எடுத்து அப்புறப்படுத்தியாச்சு.

மருத்துவர்கிட்டே கூட்டிட்டு போகலாம்னு நான் அப்பவே சொன்னேனேன்னு எழுந்து வந்த சஹானா அழ ஆரம்பிச்சாங்க.

இன்னும் பெரிய தொட்டி, கூடுதல் மீன்கள் வாங்கித் தர்றேன்னு சமாதானப்படுத்தியாச்சு.

இணையத்தில் போட்டிருந்த மாதிரியே - மூழ்கக்கூடிய சாப்பாடு, அடிக்கடி சுத்தம்னு எல்லாமே சரியா செய்தாலும், ப்யூட்டி போனதுலே மனசு ரொம்பவே கஷ்டமா போயிடுச்சு.

நாயை / பூனையை 'ஆம்புலன்ஸ்' வெச்செல்லாம் காப்பாத்த முயற்சிக்கிற அமெரிக்கர்களை கேலி செய்த மனம் - இப்ப மெல்ல மாறுது. அந்த பாசம் புரியுது.

*****

இ.கோ.மு.சிங்கம் அப்படின்னு ஒரு படத்தை பாக்க ஆரம்பிச்சோம். நகைச்சுவை இப்ப ஆரம்பிச்சிடும், அப்ப ஆரம்பிச்சிடும்னு ஒரு 20 நிமிடம் போயிடுச்சு. பொறுமை பொறுமைன்னு எழுந்து போகவிருந்த தங்கமணியை உக்கார வைக்கிறேன்.

படத்துலே வி.எஸ்.ராகவன் மெதுவ்வ்வ்வ்வ்வா நடந்து போய் அந்த தலைவன்கிட்டே ஏதோ கேட்டுட்டு மறுபடி மெதுவ்வ்வ்வ்வா நடந்து வரும்போதே ஏதோ மொக்கையா சொல்லப்போறாருன்னு தெரிஞ்சி போச்சு.

அவரும் "கு*" விட்டுக்கலாம்னு சொல்லிட்டாருன்னு சொன்னவுடனே - இருக்குற ஒட்டுமொத்த பொறுமையும் போய் இதுக்கு "சுறா"வே மேல்னு சொல்லி அதை பாக்க ஆரம்பிச்சிட்டோம்.

ஆரம்ப பத்து, இருபது நிமிடங்கள் மட்டும் பார்த்த தமிழ் படங்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.

*****

சஹானாவை பார்க்கிற அமெரிக்கர்கள் - எப்பவுமே ஏதாவது பேசுவாங்க. அப்புறம் - உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கான்னு சொல்லிட்டு போவாங்க.

அப்படி ஒரு நாள் நாங்க மின்தூக்கியில் போயிட்டிருந்தபோது - கூட நாலைஞ்சு பேர் இருந்தாங்க. அதில் ஒரு அம்மா - மேலே சொன்னதையே சொன்னாங்க.

அதுக்கு நான் சொன்னதைக் கேட்டுதான் - அதுக்கப்புறம் அவங்க யாருமே என்னை பாத்து பேசறத நிறுத்திக்கிட்டாங்க. அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு எனக்கு புரியல. நீங்களே நியாயத்தை கேளுங்க.

சரி - நான் என்ன சொன்னேன்னுதானே கேக்குறீங்க? நான் சொன்னது - "ஆமா. அவ என்னை மாதிரி".

*****

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23ம் ஆண்டு விழா அடுத்த மாதம் வருது. விவரங்களுக்கு http://www.fetna.org/ பார்க்கவும். இங்கே வடகிழக்கில் இருக்கும் பதிவர் நண்பர்களை விழாவுக்கு வருமாறும், தன்னார்வலர்களாக செயல்புரிய முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

அண்ணன் பழமைபேசியை முதல்முறையும், இந்தியாவிலிருந்து வரும் மாண்புமிகு அண்ணன் அப்துல்லா அவர்களை மறுபடியும், பார்க்க ஆவல் கொண்டுள்ளேன். விழாவுக்காக தன்னலம் கருதாமல் உழைக்கும் திரு.விஜய்
மணிவேல் பற்றிய பழமைபேசியின் இடுகை இங்கே.

*****

Read more...

Saturday, May 15, 2010

எனக்கு மட்டும் ஏன் இப்படி?முன்பதிவு, பல்பொருள் அங்காடி இப்படி எங்கே போய் வரிசையில் நின்றாலும், என் வரிசை மட்டும் பிரச்சினையே இல்லாமல் கடகடவென்று முன்னேறி சென்றுவிடுகிறது.

வெகு அவசரமாக போய்க்கொண்டிருக்கும்போது (வீட்டுக்குத்தான்!), வழியில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் ‘பச்சை’யே எரிந்து கொண்டிருக்கிறது. கொஞ்ச நேரமாவது வழியில் நின்னு, இயற்கையை ரசிச்சிக்கிட்டே போகலாம்னா முடியமாட்டேங்குது.

அலுவலகத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டு, தலைவர் திட்டுவாரோன்னு கவலைப்படும்போது - அன்றைய தினம் மற்றொருவர் என்னை விட பெரிய தவறு செய்து மாட்டிக் கொள்கிறார். நான் தப்பித்துக்.

அலுவலகத்தில்/வீட்டில் எந்த தளத்தில் ஏறினாலும், காத்திருக்கத் தேவையேயில்லாமல் அதே தளத்தில் எனக்காக மின்தூக்கி காத்திருக்கிறது.

தமிழ்மணம் தொங்கிப் போனாலும், நான் புதுசா போட்ட இடுகை முகப்புப் பக்கத்தில் வந்தபிறகே அது தொங்குகிறது.

திரைப்படம் ஏதாவது பாக்கப்போனால், எனக்கு சீட்டு கொடுத்த பிறகே, ‘ஹவுஸ்ஃபுல்’ மாட்டுகிறார்கள்.

வண்டியில் பெட்ரோல் தீர்ந்து போகும் சமயம், சரியாக எதிரே ஒரு பெட்ரோல் பங்க் வருகிறது.

வீட்டுவேலை காரணமாக அலுவலகத்திற்கு தாமதமாக வந்தால், அன்று என்னைவிட அனைவரும் தாமதமாக வருகின்றனர். அதே வீட்டுவேலை காரணமாக சீக்கிரம் வீட்டிற்குப் போகவேண்டும் என்று நினைத்தால், என்னைவிட சீக்கிரமாகவே அனைவரும் போய்விடுகின்றனர்.

பேட்டரி தீர்ந்துவிடுகிற மாதிரி இருந்தாலும், வரும் அழைப்பை முழுவதும் பேசி முடித்தபிறகே தொலைபேசி சாகிறது.

கடன்/கைமாத்து வாங்கறவங்கல்லாம் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே பணத்தை சரியா கொடுத்துடறாங்க.

*****

இப்படி எதிலுமே பிரச்சினை இல்லாமே வாழ்க்கை சுமுகமா போயிட்டிருந்தா நான் என்னதான் பண்றது சொல்லுங்க.

இப்போ மேலே சொன்ன பத்து பாயிண்டிலும் பத்து பிரச்சினை இருந்திருந்தா, பத்து இடுகைகள் போட்டு ஹிட்ஸை தூக்கியிருப்பேன்.

ம்ஹூம். பிரச்சினை வர்றதுக்கும் ஏதாவது கொடுப்பினை இருக்கணுங்க. என்ன சொல்றீங்க?

*****

Read more...

Friday, May 14, 2010

FeTNA-2010 விழாவுக்கு கண்டிப்பா வாங்க...
பல்லக்கில் பவனி வரப்போகிறாள் நம் தமிழ்த்தாய், சுதந்திரமாக. எப்போது? வட அமெரிக்க சுதந்திர தின விடுமுறை வரும் ஜூலை 3 - 5 தினங்களில். எங்கே? நம் தாய் பேரரசி அல்லவா. அரண்மனையில்தான் இருக்கும், இந்த அலங்காரத் திருவிழா. அமெரிக்காவில் கனெக்டிகட் என்ற மாநிலத்தில், Waterbury என்ற ஊரில் உள்ள "Palace Theater"ல் நடக்கவிருக்கிறது. அந்த இடம் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி. அந்த அரங்கில் க்லை நிகழ்ச்சிகளும் இருந்தால், இன்னும் எப்படி இருக்கும்!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23வது தமிழ் விழா இது. FeTNA என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது (Federation of Tamil Associations of North
America) 'செந்தமிழ்க் காவலர்' என்று போற்றப்படும் ச.இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவாகவும் இந்த வருடம் அமைந்திருக்கிறது. FeTNA தலைமைக் குழு ஒவ்வொரு வருடமும் ஒரு மாநிலத்தில் இந்தத் திருவிழாவை திட்டமிட்டு அங்குள்ள தமிழர்களுடன் உற்சாகத்துடன் ஒன்றுபட்டு உழைத்து, வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். போன
வருடம் அட்லாண்டா என்ற நகரில், மிக அருமையாக நடத்தியிருந்தார்கள்.

அமெரிக்க மண்ணில் தமிழினம் ஒற்றுமையாக வாழ்ந்து ஒரு அடையாளத்தை ஆழமாக பதிக்க, கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை இந்திய, அமெரிக்க வல்லுனர்களையும், கலைஞர்களையும் வரவழைத்து, எல்லோருக்கும் நல்லுணர்வையும், புல்லரிப்பையும் உண்டாக்கும் வகையில் கொண்டாட இருக்கிறார்கள் FeTNA தலைமையும், வெவ்வேறு குழுக்களும், தன்னார்வத் தொண்டர்களும்.

கனெக்டிகட் தமிழ் குழந்தைகள் 'சங்கே முழங்கு' என்ற பாட்டுக்கு, படியெடுத்து நடந்து, சிறப்பு விருந்தினர்களை வரவேற்று தொடங்கவிருக்கிறது, இந்த பெருவிழா.

இயக்குனர் சிகரங்களில் ஒருவரான பாரதிராஜா, இளமைக்கூட்டம் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிரபல நடிகர் விக்ரம், பிரபல நடிகை த்ரிஷா, சேவைக்கும், சனாதன தர்மத்துக்கும் பெயர் போன தவத்திரு மருதாசல அடிகளார் இளையபட்டம், சிரிக்க வைக்க நடிகர் சந்தானம், சிந்திக்க வைக்க பேராசிரியை பர்வீன் சுல்தானா, கவிதையை சுவைக்க வைக்க கவிஞர் தாமரை என்று சிறப்பு விருந்தினர்கள் இந்தியாவிலிருந்து வருகிறார்கள்.

July 3,4 இரண்டு மாலை வேளைகளிலும் இரண்டு அருமையான கலை நிகழ்ச்சிகள். பாரம்பரியக் கலையை பரிமளிக்க வைக்க புதுச்சேரி தலைக்கோல் குழுவினர் தெருக்கூத்து "மதுரை வீரனை" அமெரிக்க அரண்மனை அரங்கத்துக்கே அழைத்து வருகிறார்கள். மெல்லிசை
இயக்குனர் மன்னர் ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக்குடன், சாதனா சர்கத்துடனும் இணைந்து, இன்னிசை அளிக்கவிருக்கிறார், இரண்டாவது தினம்.

இவற்றை தவிர்த்து அந்தந்த மாநிலங்களிலிருந்து தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், தொடர் மருத்துவ கல்லூரி, வாழ்க்கைத்துணை சந்திப்பு, தொழிலதிபர்கள் வரவேற்பு என்று parallel programs.

20 திருமணங்களைக் கூட ஒன்று சேர்த்து நடத்தி விடலாம். ஆனால், இது போன்ற எல்லா தமிழர்களின் ஆர்வத்துக்கும், திறமைக்கும், வயதுக்கும், கலையுணர்ச்சிக்கும் முக்கியத்துவத்துக்கும் ஏற்ப ஒரு விழா நடத்த பொறுப்பேற்க விரும்பும் மனிதருக்கு ஒரு அசாதாரண திறமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். அதற்கு சொந்தமானவர் முனைவர் பழனி சுந்தரம். அவர்தான் இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர். FeTNAவின்
செயலாளரும் அவர்தான். தலைவராகவும் சீக்கிரம் பொறுப்பேற்க இருக்கிறார். தற்போது தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா, சுந்தரத்துக்கு பலத்த ஆதரவு கொடுத்து, இந்த விழாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் முனைந்து பாடுபடுகிறார்.

இந்த செய்தியை ஆர்வத்துடன் படிக்கும் வாசகர் என்ன செய்யலாம்?
http://www.fetna.org என்ற வலைதளத்துக்குள் புகவும். எல்லா விவரங்களையும்
கூர்ந்து படிக்கவும். விழாவுக்கு போகலாமா / வேண்டாமா என்ற யோசனையிருந்தால் "போகலாம்" என்று உள்மனதிற்கு ஆணையிடுங்கள். உடனே வலைதளத்துக்கு சென்று பதிவு செய்யவும்.

ஆசையிருந்தும் நேரம், தூரம், பணவீக்கம் போன்ற நெருக்கடியால், உங்களால் வர முடியாவிட்டாலும், அமெரிக்காவில் உள்ள உங்கள் உறவினர் / நண்பருக்கு தெரிவியுங்கள். அப்படியும் இல்லையென்றால், உங்கள் வாழ்த்துக்களையாவது FeTNAவுக்கு அனுப்புங்கள்.

"நிதி மிகுந்தவர், நேரம் உள்ளவர் வந்து மகிழுங்கள்.
நேரம் குறைந்தவர், நிதி மிகுந்தவர் தந்து உதவுங்கள்.
நிதி குறைந்தவர் நேரம் மிகுந்தவர் பிறருக்கு சொல்லுங்கள்.
எதுவும் இல்லையென்று நினைப்பவர் (மின்) அஞ்சலில் வாழ்த்துங்கள்".

Please visit : www.fetna.org

Contact : Dr.Pazhani Sundaram (203)-271-2064
Dr.Muthuvel Chelliah (443)-538-5774

"செந்தமிழால் சேர்ந்திணைவோம். செயல்பட்டே இனம் காப்போம்".

Submitted by

Dr.Chitra Vaitheeswaran
Connecticut, USA

*****

Read more...

Tuesday, May 4, 2010

உன்னியும், மீனும் பின்னே ஒரு ஜோக்கும்...


எச்சரிக்கை: இது ஒரு அக்மார்க் சொந்தக்கதை/விளம்பர இடுகை. லேபிளிலும் சொல்லிட்டேன். படிச்சப்புறம் - இடுகையில் கருத்து எதுவுமே இல்லையேன்னு சொல்லக்கூடாது, ஆமா.

*****

சென்ற ஞாயிறு மாலை www.ragact.org சார்பாக திரு.உன்னி கிருஷ்ணன் கர்நாடக இசைக் கச்சேரி எங்க மாநிலத்துலே நடந்தது.

4 மணி கச்சேரிக்கு என் கார் (சொந்த கார்!) போய் சேரும்போது மணி 3.58. அரங்க வாசல்லே சுமார் 50 பேர் நின்னுக்கிட்டிருந்தாங்க. நான் கச்சேரி கேக்க வர்றேன்னதுக்கே இவ்ளோ பேர் என்னை வரவேற்க வெளியே காத்திருக்காங்கன்னா, பாட வர்றேன்னா இந்த ஊரே திரண்டு வந்துடுமேன்னு கவலைப்பட்டேன்.

அங்கிருந்த நண்பர்கிட்டே கேட்டதுக்கு உள்ளே ஒலி/ஒளி சரிபார்க்கும் பணி நடைபெறுவதால்தான் அவங்கல்லாம் வெளியே நிக்குறாங்கன்னு சொன்னாரு. திரும்பி தங்ஸை பாத்தபோது, அவர் உமிழ்நீரை துப்பாமல் விழுங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.

ஒரு வழியா எல்லாம் சரியாகி - உள்ளே போய் - உன்னி உடனடியாக ஆரம்பித்தார். அடுத்த இரண்டரை மணி நேரம் உன்னியின் இசைமழையில் நனைந்தோம்.

கர்நாடக இசை கேட்கும்போது எல்லோரும் ஏன் தலையை அப்படி இப்படி ஆட்டுறாங்கன்னு தங்ஸ் கேட்டாங்க. இசை மழையில் நனையறதால், அந்த தண்ணி தலையில் தேங்கி - அப்புறம் அதனால் ஜல்ப் பிடிச்சிக்கிச்சின்னா கஷ்டமில்லையா, அதனால்தான் தலையை அப்படி இப்படி ஆட்டி, அந்த (இசை) மழைத்தண்ணியை தள்ளி விட்டுடறாங்கன்னேன். நல்லவேளை, எனக்கு இந்தப்பக்கம் இன்னொருத்தர் உக்கார்ந்திருந்ததால், தங்ஸ் என்னை தள்ளி விடலை!.

தொண்டையில் கிச்கிச் இருந்தாலும் அதை சமாளித்து அட்டகாசமாய் பாடினார் உன்னி. தெலுங்கு, கன்னட மொழிகளில் கர்நாடக சங்கீத பாடல்களைப் பாடியவர் ரொம்ப நேரமாய் தமிழிசைப் பாடல்கள்
பாடவேயில்லை. சிந்துபைரவி சுஹாசினி கணக்கா நானும் எழுந்து கேக்கலாம்னு எழுந்து நிற்பதற்குள், அடடா.. தமிழ்ப் பாடல்கள் ஆரம்பமாயின. கடைசியில் அனைத்தும் தமிழ்ப் பாடல்கள். அத்தனையும் அருமை.

இந்த மாலைப் பொழுதை இனிமையானதாக மாற்றியதற்காக உன்னிக்கு நன்றி கூறி - அடுத்த நிகழ்ச்சிக்குள் கிச்கிச்-சிலிருந்து மீண்டு வர வாழ்த்திவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
*****

ரொம்ப நாளாய் ஏதாவது ஒரு 'குட்டி' வாங்கணும்னு சஹானா சொல்லிக் கொண்டிருந்தார். அந்த வேண்டுகோளுக்கு வெளிப்படையாக ஆதரவு தராமல், வெளியிலிருந்து ஆதரவு தந்துகொண்டிருந்தேன். கொஞ்ச நாள் கழிச்சிதான் தெரிஞ்சது அவங்க கேக்குறது ஏதாவது ஒரு விலங்குகுட்டியாம்.

என்ன குட்டி வாங்கலாம்னு அடுத்த சுற்று பேச்சுவார்த்தை துவங்கியது. ஒவ்வொரு நாளும் அவர் ஏதாவது ஒரு விலங்கு சொல்லி - அதை வாங்க முடியாதுன்னு நாங்க சொல்லி - பிறகு அழுகை, திட்டு, அழுகை, சமாதானம் - இப்படி தொலைக்காட்சி சீரியல் மாதிரி ஒரே சீன் பல நாட்கள் நடந்தேறியது.

டைனோசர் குட்டியிலிருந்து ஆரம்பித்து, குதிரை, பன்றி, பூனை, நாய், எலி, அணில், குருவி வரை நம்மூரில் சர்வ சாதாரணமாய் தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் விலங்குகளை (டைனோசர், குதிரை தவிர்த்து!!) வளர்க்கவேண்டுமென்பது சஹானாவின் அவா.

அதுங்கல்லாம் சூசூகக்கா போகும்மா, வீடு நாறிடும். அதுவுமில்லாமே இந்தியன் கவுண்டமணி மாதிரி அதுங்ககிட்டேல்லாம் கடி/அடிபட என்னால் முடியாதுன்னு சொல்லிப் பாத்தாச்சு. ம்ஹூம்.

கடைசியில் ஒரு மனதாக மீன் வாங்குவதென்று முடிவாகி - தொட்டி, மீன்(2) மற்றும் சில அலங்காரப் பொருட்கள் அனைத்தும் வாங்கியாற்று.

அடுத்தது அந்த 2 மீன்களுக்கும் பேர் வெக்கணுமே. அங்கவை, சங்கவைன்னு பேர் வைக்கலாம்னு நினைச்சோம். இந்த மீனோ அமெரிக்க மீன், அதுக்கு எப்படி தமிழ் புரியும்னு நாந்தான் சொல்லி - ஸ்வீட்டி, ப்யூட்டி - அப்படின்னு ரெண்டுக்கும் பேரு வெச்சிருக்கோம். மீனு படத்துலே தெரியுதா?****

டாக்டர் : இந்த ஜலதோஷம் உங்களுக்கு எப்பத்திலிருந்து இருக்கு?

அவர் : நேத்து ராத்திரி சுமார் 10 மணியிலிருந்து 12 மணி வரைக்குள் வந்திருக்கும்னு நினைக்கிறேன் டாக்டர். அந்த சமயத்தில் எனக்கு தெரியல. நானே காலையில் எழுந்து (டிஷ்யூ) பேப்பர் பாத்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

****

Read more...

Friday, April 30, 2010

இமேஜ் டோட்டல் டேமேஜ் (இது தமிழ் தலைப்புதானே!)

நாலு மணிக்கு வீட்டிலிருந்து தொலைபேசி - "என்னங்க. சீக்கிரம் வீட்டுக்கு வாங்க".

மூணு மணியிலிருந்தே நான் பாஸ் எப்படா போவாரு (வீட்டுக்குதாங்க!), நாம எப்படா கிளம்பலாம்னு இருந்தேன். (பாஸ் - அவரோட பாஸ் எப்போ கிளம்புவார்னு ரெண்டு மணியிலிருந்தே காத்திருந்தார்ன்றது இங்கே தேவையில்லாத தகவல்). இந்த டென்சன்லே(!) வீட்டிலேந்து தொலைபேசி வந்துச்சா, டக்குன்னு பாஸுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிட்டு - என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு கிளம்பி வீட்டுக்கு வந்தேன்.

எப்பவும் வீட்டுலேந்து கிளம்பி ஆபீஸுக்கு போறதுக்கு பத்து நிமிடத்துக்கு மேலே ஆகுது.. ஆனா அதே ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்து சேர அஞ்சு நிமிடம் கூட ஆகமாட்டேங்குது. அது ஏன்னு தெரியல.

"என்னம்மா.. என்ன ஆச்சு? ஏன் என்னை அவசரமா ஆபீஸ்லேந்து வரச்சொன்னே? நான் கொஞ்ச நேரம் அங்கே இல்லேன்னா, அழகிரியை காணாத பாராளுமன்றம் மாதிரி எல்லாரும் கத்த ஆரம்பிச்சிடுவாங்க.
தெரியுமில்லே".

"உங்க மேனேஜரை தூக்கத்துலேந்து எழுப்பத்தானே உங்களை காசு கொடுத்து வெச்சிருக்காங்க. இதுக்கே இந்த பந்தா. ம்க்கும்".

"சரி சரி. அதை அப்புறம் பேசலாம். இப்ப என்ன பிரச்சினைன்னு சொல்லு".

"சஹானா, படம் பாக்கணும்னு சொல்றா".

"என்ன, சஹானா படம் பாக்கணும்னு சொல்றாளா? சுறா இன்னும் ரிலீஸே ஆகலியேம்மா? தமிழ்மணத்துலே நிறைய பேர் ச்சும்மா போட்ட விமர்சனத்தை பாத்து ஏமாந்துட்டியா? ஐய்யோ ஐய்யோ"..

"ஹலோ.. கொஞ்சம் (கையை தன் வாய் மேல் வைத்து மூடி சைகை காண்பிக்கிறார்). என்ன சொல்ல வந்தேன்னு கேட்டுட்டு பேசறீங்களா"?

"சரி. சாரி. சொல்லு. என்ன படம் பாக்கணுமாம்".

"அவளோட கார்ட்டூன் படம் ஏதோ பாக்கணுமாம்".

"பாக்கவேண்டியதுதானே? அதுக்கு ஏன் என்னை அவசரம் அவசரமா கூப்பிட்டே? நானும் ஏதோ புது சாமியார் மாட்டிக்கிட்டாரு - யூட்யூப்லே அவரோட படத்தை ரிலீஸ் பண்ணிட்டாங்க போலன்னு அரக்கபரக்க ஓடி
வந்தேன்".

"அதெல்லாம் ஒண்ணுமில்லே. டிவிடி ப்ளேயர்லே டிவிடி மாட்டிக்கிச்சாம். அதை கொஞ்சம் எடுத்துக் கொடுத்துட்டு எங்கேயாவது போங்க".

"அது சரி. டிவிடி ப்ளேயர்லே டிவிடி மாட்டிக்கிச்சு, துணி தோய்க்குற இயந்திரத்துலே துணி மாட்டிக்கிச்சுன்னு - இந்த மாதிரி ஏதாவது ஒரு சிச்சுவேஷன்லேதானே நான் ஒருத்தன் வீட்டுலே இருக்கேன்றதே
உங்களுக்கெல்லாம் நினைவுக்கு வரும். சரி. நகரு எடுக்கறேன்".

"சீக்கிரம் எடுங்க. இன்னும் அரை மணியில் அந்த டிவிடியை போய் நூலகத்தில் கொடுக்கலேன்னா, அஞ்சு ரூபா ஃபைன் கட்டணும்".

"இதோ பாரு. இந்த மாதிரி டென்சன் பண்ணினா எனக்கு வேலை ஓடாது. நிறுத்தி நிதானமா அலசி ஆராய்ஞ்சிதான் நான் எதையும் செய்வேன்".

" நி. நி. அ. ஆ செய்யறதுக்குள்ளே அங்கே பணத்தை அதிகமாக்கிட்டே போயிடுவான். உங்க பணம். உங்க இஷ்டம். எனக்கென்ன"?

"சரி சரி. கத்தாதே. இந்தா இருக்குற 20 ஸ்க்ரூவில் ஒரு அஞ்சு மட்டுமே கழட்டி, இந்த டிவிடியை எடுத்துட்டேன். மொதல்லே போய் கொடுத்துட்டு வாங்க. இனிமே இந்த டிவிடி வாங்கற வேலையெல்லாம் வேணாம்".

"ஓகே. எல்லா ஸ்க்ரூவையும் மறுபடி சரியா மாட்டிட்டீங்களா"?

"ஆயிடுச்சும்மா. ஆள விடு. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும்".

"எங்கே போறீங்க? ஒரு டிவிடிதானே எடுத்தீங்க. இன்னொண்ணை யாரு எடுப்பாங்க? மறுபடி எல்லா ஸ்க்ரூவையும் கழட்டுங்க".

என்னது? இன்னொண்ணா? அதுதாம்மா இதுன்னு சொன்னாலும் - உள்ளே இருந்தது ரெண்டு டிவிடிங்கறதால் - மறுபடி பத்து நிமிடம் செலவழிச்சி அந்த இன்னொரு டிவிடியையும் எடுத்தாச்சு.

*****

"ஏம்மா ஒரே சமயத்துலே ரெண்டு டிவிடியை உள்ளே போட்டே? அப்படி போட்டா படம் தெரியாதுன்னு உனக்கு தெரியாதா"?

"நீ ஒரே சமயத்துலே ஐபாட்லே பாட்டு கேட்டுண்டு, கம்ப்யூட்டர்லே படம் பாத்துண்டு, டிவியில் டிராமா பாக்குறமாதிரி, நானும் ஒரே சமயத்துலே ரெண்டு படம் பாக்கலாமேன்னுதான் டிவிடி ப்ளேயரில் ரெண்டு
படத்தை போட்டேன். இது தப்பா"?

அவ்வ்வ்வ்..

*****

Read more...

Monday, April 19, 2010

தங்கமணி தொலைக்காட்சியில் தோன்றினால்...!!!

இவர்: என் பொண்டாட்டியை தொலைக்காட்சியில் பாட அனுப்பப்போறேன்.
அவர்: ஏன். அவ்ளோ நல்லா பாடுவாங்களா?
இ: சீச்சீ. தொ.கா வை உடனே அணைச்சிடுவேன்ல.

சரி சரி. டென்சனாகாதீங்க. இது பழைய்ய்ய்ய்ய்ய ஜோக்தான். மேலே (கீழே!) படிங்க.

1. தங்ஸ் தொ.கா.யில் பேச ஆரம்பிச்சா, பீப் பீப்னு சத்தம் கேக்க ஆரம்பிச்சிடும். (எல்லாத்தையும் சென்சார் கட் பண்ணிடுவாங்கல்ல.!!).

2. சப்டைட்டில் போட்டாங்கன்னா, அதிலே எப்பவும் '$#$%% #$%% $$###'ன்னுதான் தெரியும். அப்படி என்னதான் பேசுவாங்கன்றது உங்க கற்பனைக்கே.

3. தொ.கா போட்டுட்டு நாம் ஓய்வறைக்கு போயிட்டாலும், தொ.கா நகர்ந்து நகர்ந்து ஓய்வறை கதவுகிட்டே வந்து கத்தும்.. ஐ அம் சாரி... பேசும்.

4. தொ.கா.வில் தோன்றி உங்களுக்கு என்ன பாட்டு போடணும், உங்களுக்கு என்ன நகைச்சுவை காட்சி போடணும்னு கேப்பாங்க. ஆனா, நாம என்ன சொன்னாலும் அதை போடாமே, அவங்களுக்கு பிடிச்சதையே போட்டுக்குவாங்க.

5. தொ.கா ரிமோட்டை அவங்களே எடுத்து வெச்சிக்குவாங்க. நம்மகிட்டே இருந்தா நாமதான் தொ.காவை அணைச்சிடுவோம்ல.

6. தொ.கா சத்தத்தை அதிகரிச்சா, அதிகரிக்கும். குறைச்சா இன்னும் அதிகரிக்கும்.

7. உங்க தொ.கா. வால்யூமை (அந்த ஸ்விட்ச் அவங்க பக்கத்துலேயே இருந்தாலும்) குறைச்சி வைங்கன்னு நம்மை சொல்வாங்க. அப்படியும் நாம கேக்கலேன்னா தொ.கா உள்ளேந்து கரண்டி அனுப்புவாங்க.

8. நிம்மதி எங்கள் சாய்ஸ்... பெப்ஸி எங்கள் சாய்ஸ்.. அப்படின்னு எல்லாமே அவங்க சாய்ஸ்லேயே நிகழ்ச்சிகளை அமைச்சிக்குவாங்க.

இப்படியெல்லாம் தங்கமணிகளைப் பத்தி கண்டபடி சொல்வேன்னு நீங்க எதிர்பார்த்தா... ஐ ஆம் சாரி... Dont put word in my mouths!!!

Read more...

Sunday, April 18, 2010

பார்வதியம்மாள், கல்கி பகவான் மற்றும் சாமியார் அனுபவம் ஒண்ணு!!!

ஒரு வயசான பாட்டியை மருத்துவம் பாக்க அனுமதி மறுத்து விமானத்தில் திருப்பி அனுப்பியாச்சு. வழக்கம்போல் தாத்தா இதைப் பத்தி பேசவே மாட்டாரு.

திமுக ஆதரவு பதிவர்கள் மத்திய அரசை திட்டியும் - காங்கிரஸ் ஆதரவு பதிவர்கள் மாநில அரசு/காவல் துறையை திட்டியும் - கூட்டணிக்கு ஆதரவு தரும் பதிவர்கள் இதைப் பத்தி எழுதாமலும் அல்லது இச்செயலுக்கு ஆதரவு தெரிவித்தும் பதிவு எழுதுங்கப்பா. எல்லாரும் நல்லாவே இருங்க!

*****

சென்ற வாரம் இந்தியா செல்வதற்காக JFK விமான நிலையத்தில் அமர்ந்து கமகமவென்று புளி/தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது - ஒருவர் வந்து பக்கத்தில் அமர்ந்தார் - நீங்க தமிழா? சென்னை போறீங்களா? நானும்தான் - அப்படின்னு ஆரம்பிச்சி வளவளன்னு பேச ஆரம்பித்தார். நான் அங்கே இருக்கேன் - என் பசங்க இங்கே இருக்காங்கன்னு சொல்லிக் கொண்டே போனவர் அடுத்து சொன்னதைக் கேட்டு - நான் தங்கமணியிடம் - கிளம்பு, அந்தப்பக்கம் போய் உக்காருவோம். இங்கே வேணாம்னு சொல்லி அடிச்சிக்கோ பிடிச்சிக்கோன்னு ஓடிப்போனோம்.

அப்படி அவர் என்ன சொன்னாரு?

”எங்களுக்கு எல்லாமே கல்கி பகவான்தான். என் பொண்டாட்டிக்கு எல்லாமே அம்மா பகவான்தான். நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? ரெண்டு பேரும் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க. நாங்க வருடாவருடம் அவங்களை பார்ப்பதற்காகவே இந்தியா போவோம். நீங்களும் வர்றீங்களா?”.

ங்கொய்யாலே. அந்த தெலுங்கு சேனல் வீடியோ பாத்தப்புறம் கூடவா இப்படி அலையறீங்கன்னு கேக்க ஆசை. அப்புறம் அவரு என் மனசையும் மாத்திட்டார்னா என்ன பண்றதுன்னு அந்த இடத்தை காலி செய்தோம்.

ஜெய் கல்கி பகவான்! ஜெய் அம்மா பகவான்!!

*****

இதற்கு முன் இடுகையில் சொன்ன நண்பர் - 3ன் பெயர் திரு.அமிர்த கிருஷ்ணன். ஐசிஐசிஐ வங்கியின் வீட்டுக் கடன் வழங்கித் தரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். சென்னையில் உள்ள இவரது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்க. # தர்றேன்.

*****

சிலபல வருடங்களுக்கு முன், நான் வேலை பார்த்த நிறுவனத்தின் சார்பாக - நிறைய கண்காட்சிகளில் மென்பொருள் கடை போடுவோம். அப்படி ஒரு தடவை - ஒரு பிரபல சாமியார் நடத்தும் ஒரு பயிற்சிக்கூட்டத்திற்காக மும்பை போயிருந்தோம். பத்து நாள் விழாவில் பயங்கரக்கூட்டம். கடைசி நேரத்தில் பயணம் செய்ததால் எனக்கு தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு சிபாரிசின் பேரில் அந்த சாமியாரின் சீடர்களின் அறையிலேயே பத்து நாளும் இருக்க வேண்டியதாயிற்று.

ஒரு நாள் அந்த சீடரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் - “இந்த உலகத்தில் எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால் அனைவரும் நம் சகோதர சகோதரிகள்” என்று கூறினார்.

அத்தோடு அவர் நிறுத்தியிருந்தால், இந்த பத்தியை நான் இங்கே எழுதியிருக்கவே மாட்டேன். அப்படி அடுத்து அவர் என்ன சொன்னாரு?

“ நான் சகோதர சகோதரிகள்னு சொன்னது எல்லா மக்களையும்தான். அழகான பெண்களைத் தவிர”.

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP