Monday, December 28, 2009

எல்லாம் அவன் செயல்?


நாளைக்கு வினாயகர் சதுர்த்தி.


வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோயில் கடந்த ஒரு வாரமாகவே சிறப்பு பூஜைகள் மற்றும் பாட்டுக் கச்சேரி என பரபரப்பாக இருந்தது. கோயிலுக்குள்ளே நடப்பதை வெளியிலிருப்போரும் கேட்பதற்காக
தெரு முழுக்க ஒலிபெருக்கி வைத்து சத்தமாக ஒலி'படுத்தி'க் கொண்டிருந்தார்கள்.


கோயில் பக்கத்திலேயே வீடு இருக்கிறது எவ்வளவு பிரச்சினைன்னு ஏதாவது விழா வரும்போதுதான் தெரியும்னு மனைவிகிட்டே படிச்சி படிச்சி சொன்னேன். அவ கேக்கலை. இதோ விழா வந்துடுச்சு. பசங்களால்
படிக்க முடியல, தூங்க முடியல.. வீட்டில் சாதாரணமாக பேசும்போது கூட, பொதுக்கூட்டத்தில் 'மைக்' முன்னால் பேசும் தலைவர் போல் கத்திக்கத்திதான் பேச வேண்டியிருக்கு.


லட்சார்ச்சனைன்னு உண்டியல் எடுத்து வந்த கோயில் விழாக்குழுவினரிடம் ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கும்படி சொல்லியும் பார்த்துவிட்டேன். அவர்களோ அதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் - மனுசன்னா கடவுள் பக்தி வேணும் சார் - என்று ஒரு மினி பிரசங்கமே செய்துவிட்டு - மறக்காமல் ஆயிரம் ரூபாய் நன்கொடை (வற்புறுத்தி) வாங்கிச் சென்று விட்டார்கள்.


இப்படியெல்லாம் சொல்வதால், எனக்கு கடவுள் பக்தி இல்லையென்று நினைக்க வேண்டாம். கண்டிப்பாக உண்டு. தினமும் ஒரு ஐந்து நிமிடம் (மட்டும்) கடவுளுக்காக ஒதுக்குகிறேன். இன்னிக்கு ஆபீஸ் போகும்போதும் கோயில் வாசல்லே நின்னு வேண்டிக்கிட்டுதான் வந்தேன். "கடவுளே... இந்த மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பா. இப்படி ஊரையே கூட்டி சத்தம் போட்டு பக்தியை காட்டினாதான் நீ ஒத்துப்பியா? இவங்க எல்லாரையும் ஒட்டுமொத்தமா உன்னால் மாத்தமுடியலேன்னா, எனக்காவது ஒரு வழி காட்டு".


****


"யப்பா சுரேஷ். மேனேஜர் ரொம்ப நேரமா தேடிட்டிருந்தாரு. போய் பாத்துடு ஒரு தடவை" - அலுவலகத்துக்குள் நுழைந்தவுடனேயே பக்கத்து சீட் ரமேஷ் சொல்லிட்டான்.


எதுக்கு இந்த ஆள் காலங்கார்த்தாலே என்னை தேடுறாரு? கணக்கு வழக்குலே ஏதாவது தப்பு கண்டுபிடிச்சிட்டாரா?. சரி போய்த்தான் பாப்போம் - கதவைத் தட் தட் தட்டி உள்ளே போனேன்.


"வாங்க சுரேஷ். உக்காருங்க".


"பரவாயில்லை சார். சொல்லுங்க. ஏதாவது பிரச்சினையா"?


"உங்க வேலையில் ஏதாவது பிரச்சினை கண்டுபிடிக்க முடியுமா என்ன? அதெல்லாம் ஒண்ணுமில்லே".


"பின்னே எதுக்கு என்னை தேடினீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா சார்"?


"இந்த ஆபீஸ்லே லஞ்சம் வாங்காத ஒரே ஆள் நீங்கதான். அது உங்களுக்கே தெரியும்".


"ஆமா சார். அதுக்கு"?


"அதுதான் பிரச்சினையே. இதோ பாருங்க சுரேஷ். நானும் உங்களை நிறைய தடவை ஜாடை மாடையா சொல்லிட்டேன். நீங்கதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்".


"அதுக்காக என்னையும் லஞ்சம் வாங்கணும்னு சொல்றீங்களா சார்? அதெல்லாம் என்னால் முடியாது? நான் மான ரோஷம் உள்ளவன்".


"உங்களுக்கு நம்ம காண்ட்ராக்டர்களையெல்லாம் தெரியும். பெரிய அளவிலே தொடர்பு வைச்சிருக்கிறவங்க. உங்களை வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்பர் போடவும் முடியும் அவங்களாலே".


"அது எப்படி ட்ரான்ஸ்பர் செய்துடுவாங்கன்னு பாத்துடறேன் நானும்".


"இவ்ளோ சொல்லியும் நீங்க பிடிவாதம் பிடிக்கறது நல்லாயில்லே சுரேஷ். சரி ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. இந்தாங்க உங்க ட்ரான்ஸ்பர் லெட்டர். நீங்க உடனடியா அங்கே போய் ஜாயின் பண்ணனும்னு கம்பெனியோட உத்தரவு".


"சரி. நான் போய்க்கறேன் சார். எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லை. லஞ்சம் வாங்கறதவிட இது எவ்வளவோ பெட்டர். ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. என்னை இந்த மாதிரி மாத்தினது யாருன்னு தெரிஞ்சிக்கலாமா"?


"உங்களுக்கு தெரிஞ்சவர்தான். கணேஷ் காண்ட்ராக்டர்ஸ் முதலாளி கணேஷ்".


*****



Read more...

Tuesday, December 22, 2009

ஈரோடு சங்கமம், டாக்டர் விஜய், FeTNA-2010 மற்றும் சில...

மறுபயனாகு கூறுகள் - மென்பொருள் துறையில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ஒன்றுதான் இது. ஆங்கிலத்தில் - Reusable Components.

ஒரே மாதிரி வடிவமைப்போ, மென்பொருள் ஆணைகளோ பலமுறை பயன்படுத்தும் நிலை வருமாயின், முன்னால் செய்து வைத்த வேலையிலேயே மிகச்சிறிய அளவுக்கு நகாசு வேலை செய்து - அப்படியே
பயன்படுத்துவதற்குப் பெயர்தான் மறுபயனாகு கூறுகள்.

புதிதாக ஒன்றை உருவாக்கும் நேரம், உழைப்பு அதற்காக ஆகும் செலவு இவை அனைத்தும் மிச்சமாகையால், இந்த மாதிரியான மறுபயனுக்கான வேலைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பல நிறுவனங்களில் சிறப்பு
பரிசுகளைக் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.

இப்படி ஒரு துறையில் ஊக்கப்படுத்தும் ஒரு வேலையை, இன்னொரு துறையில் ஒருவர் பயன்படுத்தினால் - அவரை இந்த உலகம் தூற்றுகிறது. வாருகிறது. சேற்றை அள்ளி பூசுகிறது.

யார் அவர்? அது என்ன துறை? விடை இடுகையில்.

*****

ஈரோடு சங்கமம் தொடர்பான இடுகைகளை படிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. ஒரு மிக நல்ல ஆராக்கியமான கூட்டத்தை நடத்திய ஈரோடு மற்றும் தமிழக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டியது நம் கடமை. நீண்ட நாள் நிலைத்து நிற்கும்படியான சிறுசிறு ப்ராஜெக்டுகளை கண்டுபிடித்தால் - உடலால் உதவிட முடியாத வெளிநாட்டிலிருக்கும் என் போன்றவர்கள் கண்டிப்பாக பொருளுதவி செய்வோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

********

குளிர் இங்கே வாட்ட ஆரம்பித்துவிட்டது. போன வாரயிறுதியில் 10"க்கு பனி வேறு.

வெளியில் போகும்போது அடுக்கடுக்கா ஆடைகளை போட்டுக் கொண்டு, கொலை செய்யப் போவதைப் போல், முகத்தை மூடும் மங்கி குல்லா (அதுக்கு சரியாத்தான் பேரு வெச்சிருக்காங்கன்னு வீட்லே சொல்றாங்க!), கையுறை இதையெல்லாம் மாட்டிக் கொண்டு - மறுபடி வீட்டுக்கு வந்து இதையெல்லாம் (எல்லாத்தையும்னா, எல்லாத்தையும் இல்லேப்பா!!!) கழட்றதுக்கே நேரம் சரியா போயிடுது. இதுலே எங்கே பதிவு, இடுகை, பின்னூட்டமெல்லாம்!!!.

குளிரினால் பெரிய உபயோகம் என்னன்னா (இதெல்லாம் போன வருடமே சொன்னேன்னு நினைக்குறேன்!!!) - சட்டையை நெருப்புப் பெட்டியில் தேய்க்க வேண்டாம், அங்கங்கே கிழிஞ்சி இருந்தாலும் பரவாயில்லே, சொல்லப் போனா சட்டையே வேண்டாம் - அட. மேலேதான் குளிராடை (ஸ்வெட்டர்) போட்டிருப்போமே!!!.

*****

ஃபெட்னா-2010னுக்கான (FeTNA-2010) திட்டமிடும் பணிகள் துவக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு திட்டக்குழுக்களில் உதவிட தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர். இங்கிருக்கும் நண்பர்கள் - உதவிட
நினைத்தால் சொல்லுங்கள். (ஃபெட்னா பற்றிய விவரங்களுக்கு www.fetna.org பார்க்கவும்).

*****

மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு இன்னேரம் விடையை கண்டுபிடிச்சிருப்பீங்க. அது டாக்டர் விஜய். வேணும்னா முதல் பத்தியை மறுபடி படிச்சிக்கோங்க. நான் இங்கே அதை விளக்கவில்லை.

*****

வீட்டில் காபி என்று கொடுத்த டிகாக்ஷன்
காலை அலுவலகத்துக்கு புறப்படும் டென்ஷன்

முன்னால் செல்லும் வண்டியின் புகை
சடாரென்று கடக்கும் பாதசாரியின் கண்ணில் தெரியும் பகை

சரியாக நாம் வரும்போது மாறும் சிவப்பு
மேலே கூறிய எல்லாவற்றாலும் சரியான கடுப்பு

இவற்றிற்கெல்லாம் இருக்கு உங்ககிட்டே மாத்திரை
இந்த இடுகைக்கு நீங்க போடும் ஓட்டு முத்திரை

ஓட்டு போடுவோம்! பயன் பெறுவோம்!!!
(நான் என்னைச் சொன்னேன்!!!)

******

Read more...

Wednesday, December 16, 2009

கககா கிக்கீகூகூ கெகெக்கே குகூகெகே கவுஜ!!!

நண்பர்கள் குழாம் -
எனக்கு இரண்டு உண்டு.


இரண்டிலும்
எல்லாரையும்
நன்றாக கலாய்ப்பேன்
நானும்
கலாய்க்கப்படுவேன்.


இரண்டிலும்
இடியாப்பத்திலிருந்து
இத்தாலியன் பீட்ஸா வரை
அனைத்தையும்
ஒரு கை
பார்ப்போம்.


இரண்டிலும்
அறுவை ஜோக்கிலிருந்து
அடல்ட்ஸ் ஒன்லி
ஜோக்ஸ் வரை
எல்லாவற்றையும்
அலசுவோம்.


இரண்டிலும்
புத்தம் புதிய
படங்களிலிருந்து
பழைய படங்களை வரை
அனைத்தையும்
பார்த்து
விமர்சிப்போம்.


இப்படி இரு குழாமிலும்
இவ்வளவு ஒற்றுமை
இருக்கிறதே,
ஏதாவது ஒரு
வேற்றுமையாவது
இருக்கிறதா என்று
பார்த்தேன்.


பளிச்சென்று
தெரிந்தது ஒரு
வேற்றுமை.


ஒரு குழாமில்
நான் சகதமிழன்

மற்றொன்றில்
சாலா மதராஸி...

***********

Read more...

Sunday, December 13, 2009

FeTNA-2010 : ஊர் கூடி இழுக்கும் பிரமாண்ட தேர்...

நேற்று (12/12/2009), Connecticut Glastonbury-யில் வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் (FeTNA) கூட்டம் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கூட்டத்தில், கனெக்டிகட் தமிழ் சங்கத்தின் தலைவி திருமதி.ஸ்ரீமதி ராகவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.



FeTNAவின் தலைவர் முனைவர் திரு.முத்துவேல் செல்லையா அவர்கள் - இந்த பேரவையின் வரலாற்றினையும், ஆண்டு விழாவின் சிறப்பினையும், சென்ற முறை அட்லாண்டாவில் நடைபெற்ற கூட்டத்தின் வெற்றியையும் சொல்லி, அதைவிட இந்த முறை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டிய அவசியத்தையும் கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு.நல்லதம்பி (மறைந்த நடிகர் திரு.என்.எஸ்.கிருஷ்ணனின் புதல்வர்) தன் பெற்றோரின் வாழ்க்கையிலும், திரைப்படங்களிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.



விழாவில் பேசிய முனைவர் திரு.பழனி சுந்தரம் அவர்கள் - இந்த விழாவினை வெற்றிகரமாக நடந்த அனைத்து தமிழர்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.




மேலும், ஜூலை மாதம் நடக்கவிருக்கும் விழாவில் பங்கேற்கவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் இன்னும் முடிவாகவில்லையென்றும் கூறினார். ஆனாலும், பலரை இன்னும் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறி ஒரு பட்டியலை வாசித்தார்.


திரு.அப்துல் கலாம் அவர்கள் (இவரை மூன்று வருடங்களாக விழாவுக்கு வரவழைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்), பேரூர் ஆதீனம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், HCL தலைவர் ஷிவ் நாடார், PepsiCo தலைவி இந்திரா நூயி, எழுத்தாளர் சிவசங்கரி, இறையன்பு IAS, இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், நடிக/ நடிகையர் சூர்யா, ஜோதிகா, விக்ரம், விவேக், வடிவேலு, கஞ்சா கருப்பு, மதுரை முத்து - ஆகிய பலரும் வர வாய்ப்பு இருப்பதாக அறிவித்தார்.


முனைவர். திரு முத்துவேல் செல்லையா, முனைவர் திரு.பழனி சுந்தரம், FeTNAவின் முன்னாள் தலைவர் திரு. நாச்சிமுத்து சாக்ரடீஸ், தமிழ்மணம் சங்கரபாண்டி மற்றும் பலருடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது.

இதே மாநிலத்தில் இருக்கும் - பிரபு (இவரும் பதிவராம். ஆனால் கடந்த ஒரு வருடமாக ஒன்றும் எழுதவில்லையாம்!), சுகன் மற்றும் மோகன் என்று சில தமிழர்களின் நட்பும் கிடைத்தது.

குடி என்பது எனக்கு 'குடி'த்தனத்தில் மட்டுமே இருப்பது என்பதால் ஒன்றும் குடிக்காமல், அங்கிருந்த அருமையான உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு, சுமார் 8.30 மணிக்கு புறப்பட்டு வந்துவிட்டேன்.


*****


(வந்திருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி)


(இ-வ திரு. நல்லதம்பி, திரு.முத்துவேல் செல்லையா, திரு.பாலகிருஷ்ணன், திரு.பழனி சுந்தரம்).


(முனைவர் திரு.முத்துவேல் செல்லையா பேசுகிறார்).



(முனைவர் திரு.பழனி சுந்தரம் பேசுகிறார்).



Read more...

Tuesday, December 8, 2009

பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது...

பெண்களைப் பற்றிய செய்திகளில் நாம் பார்ப்பதுதான் இந்த வாக்கியம் - "சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயர்/வயது மாற்றப்பட்டுள்ளது). பேரு மட்டும்தான் மாத்தணுமா, அந்த செய்தியிலே இன்னும் எதையெல்லாம் மாத்தலாம்னு யோசிச்சப்போ உதிச்சதுதான்(!!) இந்த இடுகை. படிச்சிட்டு உதைக்க வராதீங்க.

*****

நேற்று காலை சுமார் 8 மணியிருக்கும் (நேரம் மாற்றப்பட்டுள்ளது).

திருவல்லிக்கேணியில் பெரிய தெரு (தெரு மாற்றப்பட்டுள்ளது).

தன் வீட்டில் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இட்லி, கெட்டி சட்னியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"ஏண்டி, இது என்ன கெட்டி சட்னியா? இந்த இட்லியை மனுசன் சாப்பிடுவானா?" என்று மனைவியை பார்த்து கத்தினார். (சத்தம் அதிகரிக்கப்பட்டுள்ளது).

"ஏங்க. இதுக்கென்ன குறைச்சல்". உள்ளே ஒரே ஒரு பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. (பாத்திரங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

"நீ இங்கே வாடி முதல்லே." (மரியாதை குறைக்கப்பட்டுள்ளது).

"நான் வர்றது இருக்கட்டும். முதல்லே இதுக்கு பதில் சொல்லுங்க." உள்ளேயிருந்து ஒரு ஸ்பூன் பறந்து வந்தது. (ஆயுதம் சைஸ்/எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

சுரேஷ் அதை தடுக்கும்முன் அந்த ஸ்பூன் அவர் தலையில் பட்டு, ச்சின்ன காயம் உண்டானது. (காய அளவு குறைக்கப்பட்டுள்ளது).

அந்த காயத்தைப் பார்த்த அவர் மனைவி, உள்ளேயே மெல்ல சிரிக்கும் ஓசை கேட்டது. (சிரிப்பொலி குறைக்கப்பட்டது).

சுரேஷ் வலிதாங்க முடியாமல் "ஆ" என்ற ஒரு எழுத்தையே நீளமாக சொன்னார். (டெசிபல் குறைக்கப்பட்டது).

"சாரிம்மா. இனிமே நான் இப்படி சொல்ல மாட்டேன். என்னை மன்னிச்சிடு" - சுரேஷ் தழுதழுத்தார். ( அழுகை குறைக்கப்பட்டது).

"சரி பரவாயில்லை விடுங்க. ஆனா, இப்போ என்னை திட்டினதுக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித் தந்தே ஆகணும்". (புடவை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

"அதுக்கு நீ என்னை இன்னும் நல்லாவே அடிச்சிருக்கலாம்" - மனதில் பேசினார் சுரேஷ் (குரலோசை குறைக்கப்பட்து).

"அப்போ இந்தாங்க." உள்ளேயிருந்து ஒரு குச்சி வெளிப்பட்டு சுரேஷை தட்டியது. (ஆயுதம் / எஃபெக்ட் குறைக்கப்பட்டது).

"ஐயய்யோ.. என்னை விட்டுடு". சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறி நடந்தார். (ஓட்டம் குறைக்கப்பட்டது).

*****

பின்குறிப்பு : இது என் டயரியில் எழுதவேண்டியது. (இடம் மாற்றப்பட்டுள்ளது).

Read more...

Sunday, December 6, 2009

கைப்பேசியில் கூப்பிடுபவர்களது மேட்டரை ‘கட்' செய்யுங்கள்!

1. ஆபீஸுக்குத்தான் பைக்குலே / கார்லே போயிட்டிருக்கேன். இன்னும் அரை மணி நேரம் ஆகும். பேசலாம். சொல்லுங்க.

2. இப்பத்தான் ரயிலிலிருந்து இறங்கினேன். தண்டவாளம் கடக்கறதுக்காக நிக்குறேன்.

3. வீட்டுக்குத்தான் வந்துட்டிருந்தேன். இப்போ பெட்ரோல் பங்க்லே பெட்ரோல் போட்டிட்டிருக்கேன்.

4. பஸ்லே / ரயில்லே போயிட்டிருக்கேன்.

5. பேங்க்லே / மருத்துவமனைலே இருக்கேன்.

*****

நண்பர்கள் யாரையாவது கைப்பேசியில் கூப்பிட்டால் நான் கேட்கும் முதல் கேள்வி - பிஸியாயிருக்கீங்களா?. அப்போ அவங்க மேற்கூறிய பதில்களில் ஏதாவது ஒன்றை கூறினால், மேற்கொண்டு பேசாமல் உடனடியாக அழைப்பை துண்டித்து விடுவேன்.

அதே போல், நான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது யாராவது கூப்பிட்டாலும் அதை எடுக்காமலும், அப்படியே எடுக்க வேண்டியிருந்தால் வண்டியை ஓரத்தில் நிறுத்தியே அந்த அழைப்பை எடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறேன்.

ஓட்டுனர் கைப்பேசியில் பேசிக்கொண்டு வண்டியை ஓட்டுவதுதான் பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இது எல்லாருக்கும் தெரியும். அதில் அந்த ஓட்டுனரது தவறு 50% என்றால் மீதி மறுமுனையில் பேசுபவரதாகும்.

வண்டி ஓட்டிட்டிருக்காரே, நாம் இப்போது பேசினால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதுன்னு தெரிஞ்சி அழைப்பை துண்டித்தாலே, விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதுன்றது என் கருத்து.

*****

மேலே சொன்ன பதில்களில் முதல் இரண்டு - இவ்வகையானதே.

பேசுபவருக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் பிரச்சினை வரக்கூடும் என்ற உணர்வு இருந்தால், அழைப்பவர் கண்டிப்பாக அழைப்பை துண்டித்து விடுவார். அது எத்தகைய விஷயமாக இருந்தாலும், அவர் வீடோ / அலுவலகமோ போய் சேரும் சிறிது நேரம் காத்திருத்தலில் ஒன்றும் குடி முழுகிப்
போய்விடாது என்று உணர வேண்டும்.

மூன்றாவது பதில் இன்னும் அபாயமானது. எல்லா பெட்ரோல் பங்கிலும் - கைப்பேசியை பயன்படுத்தாதீர்கள் என்று போட்டிருப்பார்கள். இங்கேயும் கவனமாக இருத்தல் அவசியம்.

கடைசி இரு பதில்களில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இல்லையென்றாலும், அந்தப் பக்கம் பேசுபவரால் மற்றவர்களுக்கு எவ்வளவு தொந்தரவு ஏற்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

*****

தண்டனைகள் கடுமையானாத்தான் குற்றங்கள் குறையும்னு விவேக் சொன்னது போல், கைப்பேசியில் பேசிக்கொண்டே விபத்து ஏற்படக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும். அப்படியே, அழைப்பின் அந்தப்பக்கம் பேசியவருக்கும் தண்டனை தந்தா இன்னும் நல்லா இருக்கும். அழைப்பை ‘கட்' செய்யாத குற்றத்திற்காக, அவரது மேட்டரை ‘கட்' செய்துவிட்டால், மறுபடி வேறு யாராவது வண்டி ஓட்டும்போது அழைத்து பேசமாட்டார் என நம்பலாம்.

*****

Read more...

Wednesday, December 2, 2009

Fetna-2010 மற்றும் நொறுக்ஸ்...

குளிர் காலம் ஆரம்பிச்சிடுச்சு இங்கே. தங்ஸாலெ சஹானாவை பள்ளிக்கு நடத்தி கூட்டிட்டு போகமுடியல. காலையில் 9 மணிக்கு நாந்தான் போய் விடவேண்டியிருக்கு. அதுக்காக மேனேஜர்கிட்டே இனிமே காலையில் வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகும்னு சொல்லப் போனேன்.

மேனேஜர்: லேட்டுன்னா, எப்போ வருவே?

நான்: கரெக்டா 9.10க்கு தினமும் வந்துடுவேன்.

மேனேஜர்: ம்? (கோபத்தோடு என்னைப் பார்க்க...)

நான்: (பின்மண்டையை சொறிந்தவாறே) : கோபப்படாதீங்க. தினமும் சரியா 9.10க்கு வந்துடுவேன். வேலையை சரியா செய்துடறேன். பாவம் தங்ஸ் குளிர்லே நடக்க முடியல. அதனால்தான்...

மேனேஜர்: இவ்ளோ நாளா எத்தனை மணிக்கு ஆபீஸ் வந்துட்டிருந்தே?

நான்: அது வந்து.. அது வந்து..

மேனேஜர்: நான் சொல்றேன்... 9.30.. எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டிருந்தியா?... @#$%% @#%@@

(இன்னும் அங்கேயே நின்னுக்கிட்டிருக்க நான் என்ன லூஸா... எஸ்கேப்....)

***********

போன வாரம் இங்கே நன்றி சொல்லும் நாள். அதாங்க Thanksgiving day. அன்னிக்கு ஒரு நாளு தொலைக்காட்சிப் பெட்டி முதல் சாம்பார் கரண்டி வரை எல்லாம் விலை குறைப்பு (அப்படின்னு சொல்லி) செய்து விப்பாய்ங்க.

வைகுண்ட ஏகாதசி அன்னிக்கு விடியற்காலையில் சொர்க்க வாசல் திறக்கறதுக்கு முன்னாடி கோயில்லே மக்கள் கூடறா மாதிரி, இங்கேயும் எல்லா கடைகளுக்கு முன்னாடி கும்பல் சேந்துடுவாங்க. பொருட்களை வாங்க வர்றவங்களுக்கு நடுவே - வாங்கறவங்களை பாக்க வர்றவங்கன்னு சரியா கும்பல்.

நாங்களும் வருஷம் தவறாமே காலையில் 4.30 மணிக்கு குளிர்லே நண்பர்களோட எல்லா கடைகளுக்கும் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோம்.
அப்படி இந்த வருடம் வாங்கின பொருட்கள்.

ஒரு 42” வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
ஒரு மைக்ரோவேவ் பெட்டி
ஆப்பிளின் பாட்டு கேட்கும் குட்டி பெட்டி
நாலைஞ்சு எலிக்குட்டி, விசைப் பலகை
மற்றும் பல பொருட்கள்.

இவ்வளவையும்... வெயிட் வெயிட்... நான் வாங்கலை. என் கூட வந்த நண்பன் வாங்கினான். அவன்கிட்டேந்து வாங்கி நான் கார்லே வைச்சேன். அவ்வளவுதான்...

**********

வட அமெரிக்கப் பேரவையின் 2010ஆம் ஆண்டுக்கான விழாவின் ஆரம்பம் வரும் டிசம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது. இடம், நேரம் மற்றும் விவரங்கள் கீழே.

அண்ணன் பழமைபேசி ஏற்கனவே விவரமா இடுகை இட்டுட்டாரு. ஒருக்கா படிச்சிக்கோங்க.

கூட்டத்திற்கு நான் போகலாம்னு இருக்கேன். மக்கள் யாராவது வர்றீங்கன்னா சொல்லுங்க. அட தப்பிச்சி போகறதுக்கு இல்லீங்க. பாக்கறதுக்கு வசதியா இருக்கும்னு சொல்ல வந்தேன்.

December 12 th, 2009

4.30 p.m

Bombay Grill [Address: 2333 Main St, Glastonbury, CT 06033, same as old 'Ambassador of India', now under new management]

CTVOC updates followed by a performance by Thiru Nallathambi, son of Late NS Krishnan and Tmt TA Mathuram

Wine and Dine : 7 p.m [South Indian Dinner]

Admission: Free for donors, $ 20 per head for non-donors*

RSVP: by Dec 5th 2009, by email [N Kuppuraj, nkuppuraj@gmail.com]

***********

இந்த சிச்சுவேஷனை உன்னிப்பா கவனிங்க..

இரவு சுமார் 8 மணி இருக்கும்.
அன்று முழு நிலவு நாள்.
நிலவு வெள்ளையா பிரகாசமா மேலே.
நல்ல இலையுதிர் காலம். எல்லா மரமும் மொட்டையா இருக்கு.
மொட்டையா இருக்குற மரக்கிளைகளுக்கு நடுவே நிலவின் வெளிச்சம் பாய்ந்து கொண்டிருக்கிறது.
முன்னே ஒத்தையடிப் பாதை.
காரில் நானும் தங்ஸும் தனியே போயிட்டிருக்கோம்.
பாதையில் எங்க காரைத் தவிர வேறு வண்டிகளே இல்லை.

இந்த சிச்சுவேஷன்லே உங்களுக்கு என்ன பாட்டு தோணும்?

எனக்கு...

ஒரு பழைய படத்துலே... சிவக்குமார் & சரிதா..சரிதாவுக்கு ஏதோ பிரச்சினை. சிவக்குமார் ஒரு பாட்டு பாடி அவங்களை தூங்க வைப்பாரு.அப்போ ஒரு வெள்ளையம்மா - மொட்டை மரங்களுக்கு நடுவே - சர்சர்ருன்னு சுத்தி வந்து ஆடுவாங்க.

ஒரு தடவை பக்கத்துலே உக்காந்திருந்த தங்ஸை திரும்பி பாத்தேன்.

அதுக்கப்புறம் வீடு வந்து சேர்றவரைக்கும் அவங்களை பாக்கலை...

***********

Read more...

Thursday, November 19, 2009

Five Q - தங்கமணிகள் எப்படி பயன்படுத்தறாங்க?

நேத்து நம்ம நண்பர் வால்பையன் அஞ்சு கேள்விகள்னு ஒரு மிகவும் நல்ல, பயனுள்ள இடுகை போட்டிருந்தாரு. வர்ற பதில்களுக்கேற்ப வேறே கேள்விகளைக் கேட்டு, பிரச்சினையோட மூல காரணத்தை
கண்டுபிடிக்க உதவும் உத்தி. அலுவலகங்களிலெல்லாம் கண்டிப்பா பயன்படும்.

கட் கட் கட். அட ஷாட் மாறுதுங்க.

இதே உத்தியை தங்கமணிகள் வீட்டுலே எப்படி பயன்படுத்தறாங்கன்னு பாப்போம்.

அங்கேயாவது கேள்விகளைக் கேட்கணும். இங்கே இவங்க வாயே திறக்காமே - எப்படி உண்மையை கண்டறியறாங்கன்னு ஒரு உதாரணத்தோட பாப்போம். இதிலே வர்ற ரங்கமணி, தங்கமணியை வடிவேலு, கோவை சரளாவா நினைச்சிக்கூட பாக்கலாம். நல்லா இருக்கான்னு சொல்லுங்க...

****

ஒரு வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்காங்க. எல்லோரும் உக்காந்து பேசிட்டிருக்கும்போது, அந்த வீட்டு ரங்கமணி மெதுவா பேச்சை ஆரம்பிக்கிறாரு.

போன வாரம் நம்ம நண்பர் சுரேஷ் குடும்பத்தினர் வந்திருந்தபோது, நாந்தான் அவங்களுக்கு என் கையாலே சமோசாவும், பால் பாயசமும் செஞ்சி கொடுத்தேன். சாப்பிட்டுட்டு ரொம்ப நல்லாயிருக்குன்னு பாராட்டினாங்க.

தங்ஸ்: ம்?

சரி. சமோசா நான் பண்ணல. ஆனா கடையிலேந்து வாங்கி வந்தது நாந்தானே.. வாங்கிண்டு வந்தாதானே உன்னாலே அதை செய்ய முடியும்?

தங்ஸ்: ம்? (இப்போ குரல் கொஞ்சம் ஜாஸ்தியாகுது!)

சரி சரி. இப்போ என்ன ஆயிடுச்சுன்னு இப்படி குரலை உயர்த்துறே? பால் பாயசமும் நான் செய்யலேதான். அது ரெடிமேட்தான். ஆனா ஃப்ரிட்ஜ்லேந்து எடுத்துக் கொடுத்தது நாந்தானே?

ம்? (இன்னும் கொஞ்சம் ஜா)

சரிம்மா. என்னை ஒருத்தர் பாராட்டிட்டாருன்னா உனக்குப் பிடிக்காதே? இதோ பாருப்பா, அவங்க என்னய பாராட்டலே. என் தங்ஸைதான் பாராட்டினாங்க. போறுமாம்மா? இப்போ திருப்திதானே?

ம்? (இன்னும் கொஞ்சம் ஜா)

அட என்னடா இது? உன்னைத்தான் பாராட்டினாங்கன்னு சொன்னேன். அது தப்பாவே இருந்தாலும் இப்படி கோபப்படலாமா? சரி உண்மைய சொல்லிடறேன். ஏதோ தகராறுலே வந்தவங்க கன்னாபின்னான்னு
எங்களை திட்டிட்டுதான் போனாங்க... இப்ப ஓகேவா?

ம்? (இன்னும் கொஞ்சம் ஜா)

இப்படி வீட்டுக்கு வந்தவங்க முன்னாடி என் மானத்தை வாங்கித்தான் ஆகணுமா? ஒரே ஒரு பொய் சொன்னா என்ன ஆகிடப்போகுது. இதோ பாருப்பா. நான் மறுபடி முதல்லேந்தே சொல்லிடறேன். எங்களுக்கு
சுரேஷ்னு ஒரு நண்பரே கிடையாது. யாரும் எங்க வீட்டுக்கும் வரலே. நாங்களும் அவங்களுக்கு எதுவும் செய்து தரலே.

போறும்மா. இனிமே ம்? சொல்லாதே. எனக்கு ரொம்ம்ம்ம்ப பயமாயிருக்கு. இப்ப நான் என்ன சொல்லிப்புட்டேன்னு என்னை ரொம்ப மிரட்டறே. இனிமே நான் இவங்க முகத்துலே எப்படி முழிப்பேன்? பொண்டாட்டி என்னை கத்தறதை வெளியேல்லாம் போய் சொல்லிடுவாங்களே? கடவுளே!!!

(அழுதுகொண்டே எழுந்து அறைக்குள் ஓடுகிறார்).

தங்ஸ் : 10, 9, 8, ...

வீட்டுக்கு வந்தவர், தங்ஸிடம் : என்னங்க, இப்படி அழுதுகிட்டே ஓடுறாரு. நீங்க என்னடான்னா, 10, 9, 8ன்னு எண்ணிக்கிட்டு இருக்கீங்க?

தங்ஸ்: (கையால் இருங்க இருங்கன்னு செய்கை காமிச்சிக்கிட்டே) : 4, 3, 2, 1 என்றபின் 'டொம்' எனவும், அறைக்குள்ளேயிருந்து 'டொம்' என சத்தம் கேட்கிறது.

விருந்தினர்: ஐயய்யோ. உள்ளே ஏதோ சத்தம் கேக்குது. என்ன விழுந்ததுன்னு போய் பாருங்க.

தங்ஸ்: விடுங்க. அது ஒண்ணுமில்லே.

விருந்தினர் : அட என்னங்க இப்படி சொல்றீங்க. உங்க கணவருக்கு ஏதாவது ஆகியிருக்கப்போகுது.

தங்ஸ்: அவருக்கு சினிமாலே வர்ற ஹீரோயின்னு நினைப்பு. அவங்கல்லாம் அழுதுகிட்டே உள்ளே ஓடிப்போய் கட்டில்லே 'தொம்'முன்னு விழுவாங்கல்ல. அதே மாதிரிதான் இவரும் அழும்போதெல்லாம் செய்வாரு. அதை கண்டுக்கிடாதீங்க.

விருந்தினர் : கட்டில்லே விழுந்தா இப்படி சத்தம் கேக்குமா? பயங்கரமா கேட்டுச்சே.

தங்ஸ்: நம்ம வீட்டுலே கட்டிலே இல்லேன்னு எவ்ளோ தடவை சொன்னாலும் இவரு கேக்க மாட்டேங்கறாரே. நான் என்ன செய்ய?

*****

Read more...

Tuesday, November 17, 2009

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!!!






மேலே இருக்குற படங்களையெல்லாம் பாத்தீங்கல்லே! எப்படி டெர்ரரா இருக்குதுன்னு. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்னு சொன்னா, யாரு கேக்குறாங்க.

அந்த படங்கள் சொல்றத இங்கே பாட்டா படிச்சிருக்கேன் பாருங்க. எல்லாம் ஏதோ ஒரு சினிமா பாட்டோட உல்டாதான் (அது சரி, ஒரிஜினல் பாட்டு எழுதத் தெரிஞ்சா, நான் ஏன் இங்கே பொட்டி தட்டிட்டிருக்கேன்!!). என்னென்ன பாட்டுன்றத நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.

நல்லாயிருந்தா நாலு வார்த்தை சொலிட்டு உங்க மன பாரத்தை இறக்கி வெச்சிட்டு போங்க!!!

*********

தாக்காதே என்னை தாக்காதே
ஜல்லி கரண்டியால என்னை தாக்காதே
இழுக்காதே என்னை இழுக்காதே
லுங்கி கிழியப்போது என்னை இழுக்காதே

வேணாம் வேணான்னு நான் அழுதேன்
நீ தானே என்ன சாத்திப்புட்டே!
போடா போடான்னு என்னை விரட்டி
சந்துல நீ தானே மொத்திப்புட்டே !

நல்லா இருந்த என் சட்டையை
நாராக கிழிச்சிபுட்டே!
கறுப்பா இருந்த என் கண்களை
கலரா மாத்திபுட்டே !
***********
பார்த்து பார்த்து கண்கள் பயந்திருக்கு
நீ வருவாய் என
பயந்து பயந்து கண்கள் சிவந்திருக்கு
நீ வருவாய் என

பேசிக்கிட்டே நீ வருவாயா - காதை கொடுக்கிறேன்
சாந்தமாக நீ வருவாயா - ஜோக்கு அடிக்கிறேன்
வேகமாக நீ வருவாயா - காப்பி தருகிறேன்
கோபமாக நீ வருவாயா - சாம்பல் ஆகிறேன் (நீ வருவாய் என)
**********
சப்பாத்தி கட்டை உடையும் நேரமிது
தங்கமணி அழைக்குது ஆஆஆஆஆஆ
கருப்பு சட்டை கிழியும் நேரமிது
லுங்கியும் கிழியறதுக்குள்ளே வாஆஆஆஆ

தரையிலே தூக்கிப் போட்டு மிதித்திடவே
இரு காலும் துடிக்குது
தரதரன்னு இழுக்கையில்
புது சுகம் பிறக்குது (சப்பாத்தி)

********
அம்மாடி... இதுதான் உதையா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அட ராமா... இது எப்போ முடியுமோ?

முதுகுலே ஏதோ டம்டமுன்னு கேட்குது
தலையிலே ஏதோ லொட் லொட்டுன்னு விழுகுது

போடுங்க போடுங்க இன்னும் போடுங்க
வேணும் நல்லா வேணும்
சொல்ற பேச்சை கேட்டு நடந்துக்காட்டி
மண்டை ரெண்டா உடையும்
ஆஆஆஆஆ
***********

Read more...

Friday, November 13, 2009

நொறுக்ஸ் - வெள்ளி - 11/13/2009

போன மாதம் ஒரு நாள் எங்க மாநில தமிழ் சங்கத்திலே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - ஒரு இன்னிசை கச்சேரியும், ஈரோடு மகேஷின் சிரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஈரோடு மகேஷ் : நல்லா சிரிப்பாத்தான் பேசுறார். வருடா வருடம் இங்கே வராப்பலயாம். இந்த வருடம்தான் எங்களுக்குத் தெரியும். வழக்கம்போல் எதையும் தயார் செய்து வைத்துக் கொள்ளாமல், அந்தந்த சமயத்துக்கேற்ப ஜோக்குகளை அள்ளித் தெளித்து கூடவே நல்ல மேற்கோள்களோடு பேசினார்.

நடிக்க வரலேன்னா என்ன செய்துட்டிருப்பீங்க? கலையுலகத்துலே உங்க லட்சியம் என்ன? - நடிகைகளைப் பார்த்து இப்படி வரலாற்று சிறப்புமிக்க கேள்விகளைக் கேட்கும் தொகுப்பாளர்களைப் போல் - இடைவேளையில் வெளியே வந்த மகேஷை மடக்கி நாங்களும் கேள்விகள் கேட்டோம். எப்படி எதையும் தயார் செய்துக்காமே கடகடன்னு ஜோக்கா பொளந்து கட்றீங்க? - கார்ல் மார்க்ஸையெல்லாம் எப்படி மேற்கோள் காட்டி பேசறீங்க? - இன்னுமா உங்களுக்கு கல்யாணம் ஆகலே?.

அரங்கத்தில், நாங்கள் எதிர்பார்க்காத - தங்கமணி எதிர்பார்த்த - ஒரு கடை இருந்தது. ப்ரின்ஸ் ஜுவல்லரி. நிகழ்ச்சி ஆரம்பிக்க கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க - இங்கே தங்ஸும் அவர் நண்பிகளும் ப்ரின்ஸில் நின்னுட்டு வெளியே வரவே மாட்டேன்னுட்டாங்க.

கடை எங்கும் போகாது, நிகழ்ச்சி முடிஞ்சதும் நிறைய வாங்கித் தர்றோம்னு (ஏமாத்தி) உள்ளே கூட்டிட்டு போய் - வெளியே வரும்போது (10 மணி) - நல்ல வேளை, கடை மூடியிருந்தது.

கடை மட்டும் திறந்திருந்தா, எங்க நிலைமை ரொம்பவே கஷ்டமாயிருக்கும்!!!






**********

சஹானாவோட வகுப்பில் வாரந்தோறும் ஒருவரை - student of the week - அப்படின்னு தேர்ந்தெடுக்குறாங்க. சத்தம் போடாமே, சொல்ற பேச்சை கேட்டு, நல்ல புள்ளையா நடக்குறவங்களுக்கு இந்த 'விருது' கிடைக்குது. சில வாரம் யாருக்குமே கிடைக்காமையும் இருக்குது.

இன்னிக்கு அவனுக்கு கிடைச்சுது, இன்னிக்கு அவளுக்கு கிடைச்சுதுன்னு அப்பப்போ சொல்லிட்டே இருப்பாங்க.

இப்படியே எல்லாருக்கும் கிடைக்குதே. உனக்கு எப்போ அந்த விருது கிடைக்கும்? அப்படின்னு போன வாரம் கேட்டேன். கூடவே - மிஸ் சொல்ற பேச்சை கேட்டு நடந்தாதானே கிடைக்கும்? எப்பவும் கத்திக்கிட்டே, பக்கத்தில் இருப்பவரோட சண்டை போட்டுட்டிருந்தா எப்படி விருது கிடைக்கும்? அப்படின்னேன்.

அதுக்கு சஹானா - அதெல்லாம் ஒண்ணுமில்லே. எல்லாருக்கும் வரிசையா கொடுத்து வர்றாங்க. ஸ்கூல் (இந்த வருடம்) முடிய இன்னும் நிறைய நாளிருக்குல்ல. கண்டிப்பா எனக்கும் ஒரு நாள் குடுப்பாங்க - அப்படின்னுட்டாங்க.

ரொம்ம்ம்ப தெளிவா இருக்காங்கப்பா!!

********

வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் (Fetna) அடுத்த ஆண்டு விழா ஜூலை 2010ல் கனெக்டிகட்டில்தான் நடைபெறுகிறதாம். அரங்கம் நம்ம வீட்டு பக்கத்திலேதான். சரி ஒரு மூணு நாள் அங்கனயே டேரான்னு முடிவு பண்ணியிருக்கோம்.

*******

சமீபத்தில்(!!) வெளியான ஆறு (சூர்யா, திரிஷா) படத்தை வெகு சமீபத்தில்தான்(!!) பார்த்தேன். ஐசுவர்யாவும் சரி, மத்தவங்களும் சரி - படத்துலே கெட்ட வார்த்தைகளை சரமாரியா பயன்படுத்தறாங்க. cut எதுவுமில்லாமல் எல்லாமே தெளிவா கேக்குது வேறே. அதையெல்லாம் இப்போ கெட்ட வார்த்தையில்லேன்னு சொல்லிட்டாங்களா என்ன?

**********

மீண்டும் சஹானா!!!

பொம்பள புள்ளன்றது சஹானா விஷயத்துலே சரியாத்தான் இருக்கு. ஸ்கூல்லே, தொலைக்காட்சியில் இங்கேல்லாம் பாத்து - நகப்பூச்சு, உதட்டுச் சாயம், உயர்-செருப்பு இதெல்லாம் பெண்களுக்கு கட்டாயம்னு அம்மணி தெரிஞ்சிக்கிட்டாங்க. (கேட்டாலும் வாங்கிக் குடுக்கலைன்றது வேற விஷயம்!!).

எந்த கடைக்குப் போனாலும், பெண்களுக்கான பகுதிக்கு சென்று - எந்தெந்த பொருட்களை எங்கெங்கே(!!) தடவிக்கணும்/போட்டுக்கணும்னு விளக்குறாங்க.அதோட இல்லாமல், அந்த அக்காவை பாரு, அந்த மாதிரி காதுல மாட்டறது வாங்கணும், இந்த ஆண்டியை பாரு இந்த மாதிரி செருப்பு வேணும்னெல்லாம் கேக்குறாங்க.

அதனால் இப்பல்லாம் எங்கே போனாலும், நான் அங்கிருக்கும் அக்காவையும், ஆண்டியையும் தைரியமாய்(!!) பாக்க முடியுது. தங்ஸ் கேட்டாலும், நம்ம பாப்பாவுக்காக - அவங்க வளையலையும், கம்மலையும் பாத்தேன். அவ்வளவுதான். வேறொண்ணுமில்லைன்னு சமாளிச்சிடறேன்.. ஹிஹி..

******

Read more...

Thursday, November 5, 2009

ஆபீஸில் தூங்கும் பாட்ஷா!!!

பத்திரிக்கைகளில் வரும் ஜோக்குகளில், ஆபீஸில் தூங்குவது பற்றிய ஜோக் கண்டிப்பாக ஒன்றாவது இருக்கும். மக்களும் விதவிதமா யோசிச்சி எழுதுவாங்க. ஹிஹி. நானும் அதே மாதிரி ஏதாவது எழுதலாம்னு யோசிச்சதோட விளைவுதான் இந்த இடுகை.

******

இதே சப்ஜெக்ட்டில் நான் இரண்டு நாள் முன்னாடி போட்ட ட்விட்டுகளை பார்த்துவிட்டு - தலைப்பில் சொன்ன அந்த கதைக்குப் போகலாம். (ட்விட்டருக்கு ஆள் சேக்கணுமே!!! அதுக்குதான் - அந்த சினிமாக்காரங்களை மாதிரி - ஒரு விளம்பரம்!!!).

தூக்கம் வர்றவனுக்கு - ஆபீஸ் மேஜை - பஞ்சு மெத்தை! ஹ!

மேனேஜர்! இந்த நாள் உன் டைரியில் குறிச்சி வெச்சிக்கோ. எப்படி என் தூக்கத்தை நீ கெடுத்தியோ, அதே மாதிரி உன் தூக்கத்தை கெடுத்து, உன்னை நடு ஹால்லே முழிமுழின்னு முழிக்க வெக்கலே... (டப்.. தொடையை தட்டி) என் பேர் ச்சின்னப் பையன் இல்லே.

யாரு தூங்குனா கண்ணு மூடி குறட்டை வந்து வாயிலேந்து பயங்கரமா ஜொள்ளு வழியுதோ - அவந்தான் தமிழ்! (ச்சின்னப்பையன்னு போடமாட்டேன்!!)

காலை கீழேயே வெச்சேன்னா - 5 நிமிஷம் தூங்கப்போறேன்னு அர்த்தம். டேபிள் மேலே தூக்கி வெச்சேன்னா - 5 மணி நேரம்னு அர்த்தம்

சேர்ந்தே இருப்பது ஆபீஸும் தூக்கமும். சேராமல் இ தூக்கமும் வேலையும். சொல்லக்கூடியது சாயங்காலம் எழுப்பு. சொல்லக்கூடாதது தூக்கத்தில் உளறல்

ஆபீஸ்லே இன்னிக்கு நான் தூங்கறேன்.. நாளைக்கு என் பையன்.. அப்புறம் என் பேரன் தூங்குவான். இதெல்லாம்.. எனக்கு என்ன பெருமையா???

ஆபீஸ் வந்தவுடன் தூங்கணும்னு... அந்த ஆண்டவன் சொல்றான்... விஷ்க்.. விஷ்க்... இந்த ச்சின்னப்பையன் தூங்கறான்... விஷ்க்.. விஷ்க்...

******

தலைப்புக்கான கதை:

பாட்ஷா வேலை பார்க்கும் இடத்தில் அவரது தம்பி மேனேஜராக இருக்கிறார். ஒரு நாள் பாட்ஷா அலுவலகத்தில் நன்றாக குறட்டை விட்டு தூங்கி விடுகிறார். அந்த குறட்டை சத்தத்தால் பலரது தூக்கம் கெடுகிறது. தூக்கமின்மையால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

இனி...

ரயில் போகும் சத்தம்... தடக் தடக்... தடக் தடக்... என்று கேட்கிறது.

பாட்ஷா தூக்கக் கலக்கத்தோடு அமர்ந்திருக்க - தம்பி வெளியிலிருந்து வந்து பேசுகிறார்.

ஆபீஸ்லே நாலு பேர் தூங்கவே முடியாம முழிச்சிக்கிட்டே இருக்காங்க. கெஸ்ட் ஹவுஸ்லே மூணு பேர், தூக்கம் இப்ப வருமா அப்ப வருமான்னு படுத்து கிடக்கறாங்க. டாக்டர்ஸ் அவங்க இன்னும் 24 மணி தூங்க மாட்டாங்கன்னு கெடு கொடுத்திருக்காங்க. அந்த மூணு பேர்ல நம்ம முதலாளியும் ஒருத்தரு.

நம்ம வீட்டு டிவியில் நாலு மொக்கை படங்களை வரிசையா போட்டப்போ ராத்திரி முழுக்க கண்முழிச்சி பாத்துக்கிட்டே இருந்தீங்க. இந்த ஊரே நின்னு வேடிக்கை பாக்க, கொட்டற மழையிலே பேப்பர் கப்பல் விட்டு விளையாடவே பொறந்தா மாதிரி, ராத்திரி முழுக்க தூங்காமே விளையாடிக்கிட்டே இருந்தீங்க.
நேத்து நீங்க தூங்கவிடாமே அலையவிட்ட நம்ம ஆபீஸ் ஆட்களை ட்ரீட் பண்ண டாக்டர்ஸ் மிரண்டு போய் நிக்கறாங்க. இது சாதாரண ஆள் விட்ட குறட்டை சத்தமில்லே. நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்திலேயும் தூக்கவெறி ஊறிப்போன ஒருத்தனால்தான் இப்படி தூங்கமுடியும்றாங்க.

உங்களால் தூக்கம் கெட்டுப் போன யாராவது ஒருத்தன் ரிசைன் பண்ணாலும், நானே உங்களை வேலை விட்டு தூக்க வேண்டியிருக்கும். அண்ணே... சொல்லுங்க... நீங்க யாரு... பாம்பேலே நீங்க எந்த ஆபீஸ்லே தூங்கிட்டிருந்தீங்க? இந்த தூக்கம்தான் உங்க வாழ்க்கையாயிருந்ததா. அப்போ நீங்க இங்கே முழிச்சிட்டிருந்தது வேஷமா? வேஷம் கலைஞ்சி
போச்சுன்னு பயமா இருக்கா? ஏன் ஒண்ணும் பேசாமே இருக்கீங்க? அப்போ, எங்ககிட்டே நீங்க எதையோ மறைக்கிறீங்க. சொல்லுங்க.. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். நீங்க யாரு? பாம்பேலே நீங்க எங்கே தூங்கிட்டிருந்தீங்க? சொல்லுங்க.

இதைக்கேட்ட அம்மாவுக்கு கோபம் வந்துவிடுகிறது.

சிவா.. என்னடா? விசாரணையா? அவன் வேலையை பணயம் வெச்சி ஆபீஸ்லே தூங்கினதுக்கு பாராட்டு பத்திரமா? யார்கிட்டே பேசறே? இப்படி ஒரு தூக்கம் என்னாலே தூங்க முடியலியேன்னு நான் ஏங்காத நாளே கிடையாது.

இதோ பாரு. உன் மேனேஜர் புத்தியை வாசற்படிக்கு வெளியே விட்டுட்டு, அவன் தம்பியா இந்த வீட்டுக்குள்ளே வர்றதா இருந்தா வா, இல்லே அவன் ஒருத்தனையே என் புள்ளையா நினைச்சிப்பேன். நீ அப்படியே போயிடு.

அம்மா, தம்பியிடம் இப்படி கேட்டுக் கொண்டிருக்கையில், பாட்ஷா தூக்கக் கலக்கத்துடன் அறைக்குள் போய் - கதவை சார்த்திக் கொள்கிறார்.

பின்னணியில் ‘சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். சொல்லுங்க சொல்லுங்க' என்ற குரல் ஒலித்தபடியேயிருக்க, டபக்கென்று படுக்கையில் படுத்து குறட்டை விட ஆரம்பிக்கிறார். கொர் கொர்...

- சுபம் -

********

Read more...

Tuesday, November 3, 2009

வெள்ளி மாலை Vs ஞாயிறு மாலை

வெ.மா : அரை மணி நேரம்தான் ஆகும். அடுத்த வாரத்துக்கான துணிகள் எல்லாத்தையும், இந்த வாரயிறுதிலேயே அயர்ன் பண்ணி வெச்சிடறேன்.

ஞா.மா : சரி விடு. ஒரு நாளைக்கு அஞ்சு நிமிஷம்கூட ஆவாது. அன்னன்னிக்கு பண்ணிண்டா போச்சு!!!

*****

வெ.மா: நூலகத்திலேந்து வாங்கி வந்த புத்தகம் ஒண்ணு காணோம். வீட்டை நாளைக்கு தலைகீழா புரட்டி அதை எப்படியாவது தேடி எடுக்கறேன் பாரு.

ஞா.மா: என்ன. ரெண்டு டாலர் ஃபைன் கேப்பாங்க. அவ்ளோதானே? கொடுத்துட்டா போச்சு. அப்புறம் அந்த புத்தகம் கிடைச்சா, நாமே வெச்சிக்கலாம்.

*****

வெ.மா: நீல கலர் கார், கார் மேக கலர் மாதிரி கருப்பா ஆயிட்டு வருது. இந்த வாரயிறுதியில் வண்டியை தண்ணீர்-கழுவல் (water wash) பண்ணியே ஆகணும்.

ஞா.மா: வர்ற வியாழன்லேந்து மழைன்னு போட்டிருக்கான். வண்டியை கொஞ்ச நேரம் மழையில் நிக்க வெச்சா தானா சுத்தமாயிட்டு போகுது.

*****

வெ.மா : ஒரு காலுக்கான வெள்ளை காலுறையை மட்டும் காணோம். நாளைக்கு அதை தேடியே ஆகணும். இன்னொண்ணை தனியா எப்படி மாட்டிண்டு போறது?

ஞா.மா : ஒரு கால்லே கருப்பு காலுறையும், இன்னொரு கால்லே வெள்ளை காலுறையும் மாட்டிண்டு போனா யாருக்கு தெரிய போகுது? அப்படியே தெரிஞ்சாலும், அப்பத்தான் பாத்தா மாதிரி காட்டிக்க வேண்டியதுதான்.

*****

வெ.மா: ஒட்டடை நிறைய வந்துடுச்சு. நாளைக்கு வீட்டை முழுக்க சுத்தம் பண்ணிடவேண்டியதுதான். பக்கத்து வீட்டுலேந்து ஒட்டடை குச்சியை வாங்கி வைம்மா.

ஞா.மா: ச்சே பாவம் அந்த சிலந்திங்க. நம்மை விட்டா அதுக்கு வேற எது கதி? அதையெல்லாம் ஒழிக்க வேண்டாம். இப்போதைக்கு அப்படியே விட்டுடுவோம்.

*****

வெ.மா: இதுவரை பாக்காத படம் ஏதையாவது பாக்கணும். நம்ம மக்கள் பரிந்துரைத்த படங்கள் சில இருக்கு.

ஞா.மா: எவ்ளோ தடவை ஆனாலும் தலைவரோட படங்களைப் பாத்தா (பாட்ஷா, படையப்பா etc) இப்பவும் உடம்பு புல்லரிக்குது பாத்தியா!!!

*****

Read more...

Monday, October 26, 2009

டைரக்டர் விசுதான் கைப்பை வாங்க உதவி பண்ணனும்!!!

ஒண்ணுமில்லேங்க. ஒரு கைப்பை. ஒரே ஒரு கைப்பை வாங்கணும்னு தங்கமணி சொன்னாங்க. சரி வாம்மா போகலாம்னு சொன்னேன். அதுக்கு - இருங்க. கடைக்குப் போறதுக்கு முன்னாடி என் கண்டிஷன்களையெல்லாம் சொல்றேன். கேளுங்கன்னாங்க.

இதென்னம்மா, மணல்கயிறு எஸ்.வி.சேகர் மாதிரி எட்டு கண்டிஷன் போடப்போறியா... ச்சீச்சீ. அவரை மாதிரி எட்டெல்லாம் கிடையாது. என்னோடது வெறும் அஞ்சே அஞ்சு கண்டிஷன்ஸ்தான். கொஞ்ச நேரம் பேசாமே நான் சொல்றதை கேளுங்க.

சரி சரி. சொல்லும்மா சொல்லு.

******

கண்டிஷன் நம்பர் 1: Size

கைப்பை பெரிசா கைப்பெட்டி மாதிரியும் இருக்கக்கூடாது. ச்சின்னதா பர்ஸ் மாதிரியும் இருக்கக்கூடாது. நடுவாந்தரமா இருக்கணும்.

அவ்ளோதானே. வெரி சிம்பிள். வா கடைக்குப் போகலாம்.

இருங்க. நான் இன்னும் மிச்ச நாலு கண்டிஷன்களை சொல்லவே இல்லையே?

சரி. சொல்லு.

கண்டிஷன் நம்பர் 2: நீளம்

கைப்பையை தோள்லே மாட்டினா, நீளமா கால் வரைக்கும் வரக்கூடாது. அதனால் தோள்லே மாட்ட முடியாதவாறு சின்னதாவும் இருக்கக்கூடாது.

ஏம்மா. இப்பதான் எல்லாத்திலேயும் adjustable மாடல் இருக்குமே. நமக்கு எவ்ளோ நீளம் வேணுமோ, அவ்ளோ வெச்சிக்க வேண்டியதுதானே?

எனக்கு adjustable வேண்டாம். வாங்கும்போதே சரியானதா வாங்கிடணும். வாங்கித்தர முடியாதுன்னா இப்பவே சொல்லிடுங்க... என்ன?

சரி சரி வாங்கித் தர்றேன். அடுத்த கண்டிஷனை சொல்லு.

கண்டிஷன் நம்பர் 3a: கலர்.

கொஞ்சம் dark கலர்தான் வேணும். அதுக்காக ரொம்ப darkஆ இருக்கக்கூடாது.

கறுப்பு ஓகேவா?

எனக்கு தமிழ்லே பிடிக்காத ஒரே கலர் - கறுப்பு. அதனால் அது வேணாம். brown ஓகே.

கண்டிஷன் நம்பர் 3b:

எந்த கலரா இருந்தாலும், ரொம்ப பளபளான்னு இருக்கக்கூடாது. அதுக்காக மங்கின கலராவும் இருக்கக்கூடாது.

அப்போ நடுவாந்திரமா இருக்கணும். சரியா?

எப்படி கரெக்டா சொல்றீங்க?

அதைத்தானே முதல்லேந்து சொல்லிட்டு வர்றே? ம். சரி. மேலே..

கண்டிஷன் நம்பர் 4: Cost

ஆஹா.. இப்பத்தான் எனக்கு தேவையான விஷயத்துக்கு வந்திருக்கே. இந்த கண்டிஷனை நான் சொல்றேன்.

சரி சொல்லுங்க.

உனக்கு என் க்ரெடிட் கார்டை கொடுத்துடறேன். உனக்கு எவ்ளோக்கு வாங்கணும்னு தோணுதோ நீ வாங்கிக்கோ. அப்புறம் எந்த கேள்வியையும் கேக்க மாட்டேன்.

அதெல்லாம் வேணாம். நான் ரொம்ப காஸ்ட்லியால்லாம் வாங்க மாட்டேன். அதனால் எனக்கு கார்டெல்லாம் வேணாம்.

ஏம்மா? நாந்தான் திட்ட மாட்டேன்னு சொல்றேன்ல.

காரணத்தை சொல்றேன். அவசரப்படாதீங்க. ஏன்னா, அதுதான் எனது அடுத்த கண்டிஷன்.

கண்டிஷன் நம்பர் 5:

நான் வாங்கப்போற கைப்பை, ஒரு வருஷத்துக்கு மேலே உழைக்கக்கூடாது.
அப்படின்னா, என்ன ஒரு வருஷத்துலே அதை கிழிச்சிடப் போறியா?

கிழிக்க மாட்டேன். அதுக்காகத்தான் ரொம்ப விலை கொடுத்து வாங்க மாட்டேன்னு சொன்னேன்.

அப்புறம்?

நான் எந்த கைப்பையையும் ஒரு வருஷத்துக்கு மேலே பயன்படுத்த மாட்டேன். அதனால், விலை கொஞ்சம் கம்மியா வாங்கி, அதை ஒரு வருஷத்துக்கு மட்டுமே பயன்படுத்தி, அடுத்த வருஷம் மறுபடியும் புதுசா வேறே ஒண்ணு வாங்கணும். அதான். இப்ப புரிஞ்சுதா?

மனதில்: விளங்கிடும். இந்த கண்டிஷனுக்கெல்லாம் உட்பட்டு ஏதாவது கைப்பை கிடைக்கும்னு நினைக்கிறே? ஒரு வருஷம் தேடினாலும், நோ சான்ஸ்...

வாயில்: ரொம்ப நல்லா புரிஞ்சுதும்மா. ஒரு ரெண்டு நாள் தேடினா போதும். கிடைச்சிடும்னு நினைக்கிறேன். இன்னிக்கே தேட ஆரம்பிச்சிடுவோம். நீ உடனே கிளம்பு. போகலாம்.

*****

டைரக்டர் விசுதான், எஸ்.வி.சேகரை ஏமாத்தி கல்யாணம் செய்து வெச்சா மாதிரி, எனக்கும்... வெயிட் வெயிட்.. கல்யாணம் செய்து வெக்கச் சொல்லலே... ஒரே ஒரு கைப்பை வாங்கித்தர சொல்றேன். அவ்ளோதான். செய்வாரா?

*****

Read more...

Sunday, October 25, 2009

ச்சின்னப் பையன் 25

பிரபலங்கள்தானே 25 போடணும் நாம எதுக்காக போடணும்னு ஒரு கேள்வி இருந்தாலும் - நம்மை பற்றி நமக்கே சரியாக தெரியாத போது வேறே யார் எழுதமுடியும்னு நினைச்சதாலும் - பதிவு போட்டே ரொம்ப நாளாச்சு, எதையாவது போடணும்றதாலும் - ட்விட்டரில் 104 பேர் பின் தொடர்ந்தாலும் தனியா புலம்பற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமோன்னு நினைக்கற
அளவுக்கு பொலம்பறதாலும் - அங்கே உளர்னதுலே எனக்கு பிடிச்ச நான் போட்ட 25 ட்விட்டுகளை இங்கே பதிவா போட்டுட்டேன்!!! (யப்பா. ஒரு வழியா அந்த வாக்கியம்
முடிஞ்சிடுச்சு!!!).

*****

1. ச்சின்ன வயசிலே நான் ரொம்ப brightஆ இருந்தேன்னு சொல்வாங்க. அது சரிதான். நான் அப்பவே ujalaவுக்கு மாறிட்டேன்னு அவங்களுக்கு தெரியாது!

2. நானும் ஒரு பேராசிரியர்தான். அவர் அறையிலும் நான் ட்விட்டரிலும் தனியா பேசிட்டிருக்கோம். யாரும் கேக்கறா / படிக்கறா மாதிரி தெரியல!!!

3. கொடை வள்ளல்னு கேள்விப்பட்டு வந்தவங்களுக்கு குடை கிடைத்தது. அது குடை வள்ளல்தாங்க. தப்பா ப்ரிண்ட் பண்ணிட்டாங்க என்றார். காலை வணக்கம்

4. காலை வணக்கம்! வலது கால் செருப்பை வலது காலிலும், இடதை இடதிலும் போட்டுட்டு போனா, இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் இனிய நாளே!!!

5. As I am suffering from lot of work in Office, I am applying for leave for 2 days - Thurs & Friday. Will update everything on Monday. Thanks

6. ஆபீஸ் நேரத்தை பயனுள்ளதாய் கழிக்க, கொஞ்ச நேரம் வெளியே ஷாப்பிங் போறேன்... மறுபடி 1.5 மணி நேரம் கழித்து சந்திப்போம்... நன்றி வணக்கம்

7. காலை வணக்கம். கலைஞர் கடிதம் எழுதறாரா? அம்மா ஓய்வெடுக்கறாங்களா? மருத்துவர் அடுத்த போராட்டமா? அப்போ எல்லாம் asusualதான்.

8. கலைஞர் தாட்ஸ் - படிப்பை குடும்பத்தோட படிச்சா கட்டணத்துலே ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா????

9. குளிர்காலம் ஆரம்பிச்சிடுச்சு. காலையில் எழுந்துக்கவே சோம்பலா இருக்கு. ஒரு ஆறு மாசம் லீவ் போடமுடியுமான்னு பாக்கணும்!!!

10. #delayedtweets ச்சே அப்பா ரொம்ப மோசம். குடும்பத்தில் யாரும் பதவிக்கு வந்தா முச்சந்தியில் வெச்சி அடிங்கன்றாரே. நான் அமைச்சர் ஆகவே முடியாதா?

11. கலைஞர் தாட்ஸ் - பரிட்சையின் கேள்வித்தாள் முரசொலியில் 'அவுட்' ஆயிடுமா?

12. கலைஞர் தாட்ஸ் - படிப்பை குடும்பத்தோட படிச்சா கட்டணத்துலே ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா????

13. #delayedtweets மெகா சீரியல்னு ஏதோ ஒண்ணு ஆரம்பிக்கிறாங்களாம். அதை எவன் பாக்கப் போறான்.. நாடகம்னா 13 எபிசோட்தானே வரணும்?

14. நாளைக்கு தலைவர் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டம் பண்ணப்போறாராம். என்ன ஆகுமோ தெரியலியே!!! #delayedtweets

15. 10.40am. இன்னிக்கு வீட்லேதானே இருக்கேன். அப்புறமும் ஏன் தூக்கம் தூக்கமா வருது?

16. ராஜபக்சேவுக்கு திருக்குறள் மட்டும்தானா? உளியின் ஓசை குறுந்தகடு கிடையாதா? எ கொ கலைஞர் இது?

17. ஒரு பு.அடுப்பு ஊதுகிறது -> ஒரு ஃபுல்லுக்கே இப்படியா உளர்றது? #sequelsthatwillneverbe

18. 1000 த.வா.அ.சிகாமணி -> 1000 தடவை உதை வாங்கினாலும் திருந்தாத ரங்கமணி #sequelsthatwillneverbe

19. எனக்கு 20 உனக்கு 18 -> எனக்கு சரக்கு உனக்கு சைட்டிஷ் #sequelsthatwillneverbe

20. ச்சின்னப்பையன் தாட்ஸ் - இதை ஏதாவது நர்சரி பள்ளியிலாவது ஒரு பாடமா வைக்கமுடியுமான்னு பாக்கணும்

21. நாலே வரின்னாலும் ஆங்கிலப்படத்தில் தமிழ்ப் பாடல். கேட்டீங்களா? நம்ம ஏஆர்ஆர் கலக்கல். குறுகுறு பார்வையிலே http://couplesretreatsoundtrack.com/

22. அமெரிக்கர்களை விடுங்க.. வட இந்தியர்களையே நம்மாட்கள் கடவுள் போலதான் பாக்கறாங்க... இந்த தாழ்வு மனப்பான்மை எப்பத்தான் போகுமோ???

23. இன்னிக்கு 6 மணி நேரம் மீட்டிங். நிறைய பேரு தொடர்ச்சியா பேசுவாங்க. பார்வையை அவங்க மேலே விட்டுட்டு, மனசை இந்தியாவுலே விட்டுட வேண்டியதுதான்...

24. "வயிற்றுக்கும் தொண்டைக்கும்...உருளுதடி"... "அம்மா.. நீ பண்ண சீடையெல்லாம் காணாமே போச்சுன்னியே... அப்பாதான் அதை சாப்பிட்டிருக்காரு"

25. 3000lb capacity கொண்ட மின்தூக்கியில் 140lb மட்டுமே உள்ள நான் தனியா பயணம் செய்தா, மின்தூக்கி திட்டுமா? திட்டாதா?

********

Read more...

Friday, October 2, 2009

உபோஒ - மறுபடியுமா???

ஒரு ச்சின்ன அறிவிப்பு: மக்களே, இந்த இடுகையை படிச்சபிறகு, இதற்கு முந்தைய இடுகைகளையும் பாருங்க. படிக்காமே விட்டிருந்தீங்கன்னா, ஒரு தடவை அவைகளையும் படிச்சிடுங்க... நான் பிரஷர் குக்கர் விக்கலே.. ஆனாலும் சிரிப்புக்கு க்யாரண்டி தர்றேன்.... ஹிஹி...

*****

மொட்டை மாடி. ஒரு மனிதன். கையில் கைப்பேசி மற்றும் கணிணி. உட்கார்ந்து கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.

"ஹலோ, கமிஷனர்?"

"யெஸ். யார் நீ?"

"நான் யாருன்றது அப்புறம் இருக்கட்டும். நான் சொல்றத கவனமா கேளுங்க. இந்த சென்னையில் ஏதோ ஒரு இடத்துலே அஞ்சு பாம் வெச்சிருக்கேன். அது பத்தி பேசணும். மறுபடி பத்து நிமிடம் கழிச்சு கூப்பிடறேன்".

"வெயிட். வெயிட். நீ. தப்பா சொல்றேன்னு நினைக்கிறேன்... அஞ்சு இடத்துலே பாமா? அல்லது ஒரே இடத்துலே அஞ்சு பாமா?"

"ஹாஹா.. வெரி குட். நல்லா கவனிக்கறீங்க. நான் சொன்னது - ஒரே இடத்துலே அஞ்சு பாம்".

டொக்.

*****

மொட்டை மாடி மனிதன் தன் கணிணியை உயிர்ப்பித்து - நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் மறுஒலிபரப்பை பார்த்துக் கொண்டிருக்கிறான். நடுநடுவே தன் கைக்கடிகாரத்தையும்.

*****

அங்கே கமிஷனர் அலுவலகம் பரபரப்பாகிறது. எல்லோரும் வார் ரூமில். எல்லாக் கதவுகளையும் இழுத்து பூட்டிவிடுகிறார்கள். கமிஷனரின் தொலைபேசி, ஸ்பீக்கரில் பொருத்தப்படுகிறது.

சரியாக பத்து நிமிடம் கழித்து தொலைபேசி அழைப்பு வருகிறது.

இந்த அழைப்பை ட்ரேஸ் பண்ணுங்க - கமிஷனர்.

"ஹலோ. யார் நீ?"

பின்னணியில் கிரிக்கெட் சத்தம் கேட்கிறது.

"நான் யாராயிருந்தா என்ன? நான் சொல்லப் போற மேட்டர்தான் முக்கியம் கமிஷனர். சீக்கிரம் நான் சொல்றத கேளுங்க. நான் மேட்ச் பாக்கணும்.".

"சாம்பியன்ஷிப் போட்டியில்தான் இந்தியா இல்லையே? அப்புறம் ஏன் நீ மேட்ச் பாக்கணும்? நீ என்ன பாகிஸ்தானியா? நியூஸிக்காரனா? ஆஸ்திரேலியனா அல்லது இங்கிலாந்துக்காரனா?"

"நல்லா யோசிக்கிறீங்க.. ஏன் நான் ஒரு இந்தியனாவோ, தமிழனாவோ, சென்னைவாசியாவோ அல்லது மைலாப்பூர்காரனாவோ இருக்கக்கூடாதா என்ன?"

"டேய் விளக்கெண்ணெய்... நீ சொன்ன எல்லாருமே இந்தியந்தாண்டா... அதை ஏன் தனித்தனியா சொல்றே..."

"சரி அதை விடுங்க. நான் வைச்சிருக்கிற அந்த அஞ்சு பாம்களை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே கண்டுபிடிச்சு உங்க அலுவலகத்துக்கே கொண்டு வந்து பிரிச்சிப் பாத்துட்டீங்கன்னா அது வெடிக்காது. அப்படி செய்யாமே அதை அங்கேயே திறந்துட்டீங்கன்னா, கண்டிப்பா வெடிச்சிடும்."

தொலைபேசியை ம்யூட்டில் போட்டு - "இந்த அழைப்பை ட்ரேஸ் பண்ணிட்டீங்களா? எங்கேந்து வருதுன்னு தெரிஞ்சுதா?"

"சார். சொன்னா ஆச்சரியப்படுவீங்க. இந்த கால் இதே கட்டிடத்திலிருந்துதான் வருது சார்..."

"அப்படியா?"

வார் ரூமில் சுற்றும்முற்றும் பார்க்கிறார்கள். எல்லோரும் படபடவென்று தங்கள் கணிணியில் தட்டிக்கொண்டிருக்க, ஒருவர் மட்டும் தன் கைப்பேசியை காதில் வைத்து - கையால் மூடியவாறே - ஏதோ கேட்டுக்
கொண்டிருக்கிறார்.

கமிஷனர் அவரிடம் போய் டக்கென்று அவர் தொலைபேசியை பிடுங்கி, காதில் வைத்து கேட்கிறார்.

"திடீர்னு வேனை நிறுத்திடறாங்க. பாதிரியார் பதட்டப்பட்டு பார்க்கிறார். வெளியே போலீஸ் வந்து கதவைத் தட்டுது. எல்லாரும் கீழே இறங்கினப்புறம், போலீஸ் வேனுக்குள்ளே ஏறி என்னவோ தேடறாங்க... ஒரு நிமிஷம் இருங்க.. குக்கரை இறக்கிட்டு வந்துடறேன்..."

"என்னய்யா இது? யாரு போன்லே? என்ன சொல்லிட்டு இருக்காங்க?"

"சார் சார்... சாரி சார்... இது என்னோட மனைவிதான் சார். நீங்க நினைக்கிற மாதிரி அந்த குண்டு வைச்ச ஆள் நானில்லே சார்..."

"சரி.. போன்லே என்ன சொல்லிட்டிருந்தாங்க உங்க மனைவி?"

"அது வந்து... அது வந்து.. நேத்திக்கு நான் கோலங்கள் பாக்கலே. அதனால் அதோட கதையை என்கிட்டே சொல்லிட்டிருந்தாங்க. மன்னிச்சிடுங்க சார்.. இனிமே இந்த மாதிரி நடக்காது."

"அடச்சே... மரியாதையா போனை கட் பண்ணிட்டு, வேலைய பாரு.. வேற யாராவது போன் பண்ணி என்கிட்டே விளையாடறதா இருந்தா இப்பவே சொல்லிடுங்க. நானா கண்டுபிடிச்சேன்னா, தொலைச்சிடுவேன்.."

அப்போது ஒரு காவலாளி ஒருவரை இழுத்து வந்து - "சார். நம்ம கட்டிட மொட்டை மாடியில் இவன் உக்காந்திருந்தான் சார். சந்தேகமாயிருக்கவே பிடிச்சி இழுத்துட்டு வந்திருக்கேன்".

"சபாஷ். நல்ல வேலை பண்ணீங்க. டேய், உன் போனைக் குடு" என்று வாங்கி அதிலிருந்து போயிருக்கும் அழைப்புகளை பார்க்கிறார்.

"உனக்கு என்ன தைரியம் இருந்தா, எங்க கட்டிடத்திலிருந்து எனக்கே போன் பண்ணி குண்டு வெச்சிருக்கேன்னு சொல்லுவே. மரியாதையா சொல்லிடு. அந்த அஞ்சு குண்டு எங்கே வெச்சிருக்கே. எத்தனை மணிக்கு வெடிக்கும்?"

"சார். என்னை மன்னிச்சிடுங்க. நான் குண்டெல்லாம் எங்கேயும் வைக்கலே. நான் குரியர் டெலிவரி பண்றவன். உங்க ஆபீஸுக்கு அஞ்சு பெரிய பார்சல் வந்திருக்கு. அதை என்னாலே தூக்கிட்டு இந்த வெயில்லே வரமுடியல. அதனால் இந்த ஐடியா பண்னேன். அதாவது, இந்த இடத்துலே அஞ்சு பாம் இருக்குன்னும், அதை இங்கே கொண்டு வந்துதான் திறந்து பாக்கணும்னும் சொன்னா, நீங்களே போய் உங்க பார்சலை டெலிவரி எடுத்துடுவீங்கன்னு நினைச்சி, இந்த தப்பை பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. இனிமே இந்த மாதிரி தப்பை பண்ணவே மாட்டேன்".

"மொதல்லே இவனை தூக்கி லாக்கப்புலே போடுங்க. அப்பதான் புத்தி வரும். Mission Accomplished. எல்லாருக்கும் நன்றி. நீங்கல்லாம் உங்க வேலையை பாக்கலாம்."

அரை மணி நேரத்தில் பிரச்சினையை தீர்த்த கமிஷனரை பாராட்டி எல்லோரும் எழுந்து நின்று கைதட்ட - தலையாட்டிக் கொண்டே கமிஷனர் வெளியே செல்ல - பின்னணி இசையில் 'சம்பவாமி யுகே யுகே...'.

முற்றும்.

*****

Read more...

Wednesday, September 30, 2009

யார் நீங்க? யார் நீங்க?

மருத்துவமனை. அறை எண் 46. ஒருவர் முழுவதுமாக போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறார். பக்கத்தில் ஒரு பெண் - கண்களில் கண்ணீரை துடைத்தவாறே அமர்ந்திருக்கிறார். அப்போது கதவைத்
தட்டியவாறே ஒருவர் அறைக்குள் நுழைகிறார். (இவரை பார்வையாளர் என்று அழைப்போம்).

பார்வை: என்ன ஆச்சு இவருக்கு?

பெண்: ஒண்ணும் ஆகலே. இப்பத்தான் போனாரு.

பார்வை: ஐயய்யோ. என்னங்க இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க? என்ன பிரச்சினை?

பெண்: அவரு ஒரு வாரமா போகாததுதான் பிரச்சினை. டாக்டர்கிட்டே சொல்லி, அவர்தான் மாத்திரை கொடுத்து இவரை போக வெச்சிருக்காங்க. நீங்க உக்காருங்க.

பார்வை: அடச்சே. மாத்திரை கொடுத்து மேட்டரை முடிச்சிட்டீங்களா? ஏங்க உங்களுக்கு இதயமே இல்லையா? கொடுத்துட்டு ஏன் இப்படி அழுதுட்டு உக்காந்திருக்கீங்க?

பெண்: ம். அதுவா. அது வேறே விஷயம்.

பார்வை: அப்படியா. கொஞ்சம் இருங்க. வெளியே போய் போலீஸை கூப்பிட்டு, உங்களையும், மாத்திரை கொடுத்த அந்த டாக்டரையும் பிடிச்சி உள்ளே போட வைக்கிறேன்.

பெண்: நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. நான் சொல்ல வந்தது என்னன்னா...

அவர் சொல்வதற்குள், அறைக்குள் டாக்டர் வருகிறார். எல்லோருக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு, படுத்திருப்பவரின் கால் பக்க போர்வையை மட்டும் விலக்கி, ஒரு ச்சின்ன சுத்தியலால் முட்டியின் கீழ் தட்டிப் பார்க்கிறார்.

பார்வை: தட்டவேண்டியது அவரையில்லே டாக்டர். போலீஸ்கிட்டே சொல்லி, உங்களையும் இந்த பெண்ணையும்தான் முட்டிக்கு முட்டி தட்டச் சொல்லணும்.

சுத்தியல் அடி, கிச்சு கிச்சு மூட்டியதால், படுத்தவர் போர்வையை விலக்கி, எழுந்து உட்காருகிறார்.

பார்வை: (படுத்திருப்பவரைப் பார்த்து) : யார் நீங்க?

டாக்டர்: (படுத்திருப்பவரைப் பார்த்து): யார் நீங்க?

படுத்திருப்பவர்: (பெண்ணைப் பார்த்து, பார்வையாளரை காட்டி): யார் இவரு?

பெண் (பார்வையாளரைப் பார்த்து): ஆமா, யார் நீங்க?

டாக்டர் : இது என்னோட மருத்துவமனை. இங்கே நாந்தான் முதல்லெ கேள்வி கேப்பேன். (படுத்திருப்பவரைப் பார்த்து) உங்ககிட்டேந்து ஆரம்பிக்கிறேன். யார் நீங்க? இங்கே ஏன் படுத்திருக்கீங்க?

படு: டாக்டர், என் பேர் சுரேஷ். நான் ரமேஷை பார்க்க வந்தவன். ரொம்ப டயர்டா இருந்ததால், படுத்தவுடன் தூங்கிட்டேன். மன்னிச்சிடுங்க.

டாக்டர்: அப்போ பேஷண்ட் ரமேஷ் எங்கே?

பார்வை: ஆஹா.. ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காதீங்க டாக்டர். ரமேஷை நீங்களும் இந்த பொண்ணும்தானே மாத்திரை கொடுத்து தீர்த்து கட்டினீங்க? மரியாதையா எல்லா உண்மையையும் சொல்லிடுங்க.

டாக்டர்: யாரு இவரு? வந்ததிலேந்து ஏடாகூடமா ஏதேதோ சொல்லிட்டு இருக்காரு?

பார்வை: யாரை ஏமாத்தப் பாக்குறீங்க? ஏம்மா, நீயாவது இவர்கிட்டே உண்மையை சொல்லிடு.

பெண்: டாக்டர், இவரு யாருன்னே எனக்குத் தெரியல. இப்பத்தான் உள்ளே வந்தாரு. வந்ததிலேந்து உளறிக்கிட்டே இருக்காரு.

பார்வை: நான் உளர்றேனா? அட்றா அட்றா... உங்க மேலே தப்பில்லேன்னா... ரமேஷ் எங்கே? நீங்க எதுக்கு அழுதுட்டிருக்கீங்க? அதையாவது சொல்லுங்க.

பெண்: நான் ஒண்ணும் அழலே. கண்ணுலே தூசி விழுந்து, போகவே மாட்டேங்குது. அவ்ளோதான்.

பார்வை: பாத்தீங்களா.. கடைசி வரைக்கும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவே மாட்றாங்க. ரமேஷ் எங்கே? பாடியை என்ன பண்ணீங்க?

அறைக்குள் இருக்கும் ஓய்வறையின் கதவு திறந்து, ஒருவர் வெளியே வருகிறார்.

பார்வை: டாக்டர். இந்த சதியில் இன்னொருத்தருக்கும் பங்கு இருக்கா? இவருக்கு ஏன் பேஷண்ட் ட்ரஸ் மாட்டியிருக்கிங்க? ஆள் மாறாட்டம் பண்றீங்களா? எனக்கு இப்பவே எல்லா உண்மையும் தெரிஞ்சாகணும்.

டாக்டர்: இவரு இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிட்டிருந்தாருன்னா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும்.

சுரேஷ்: டாக்டர், இவரு யாரு?

டாக்டர், ரமேஷ், பெண் மூவரும்: (ஒரே குரலில்): அதைத்தான் நாங்க கடந்த பத்து நிமிஷமா கேட்டுட்டிருக்கோம். அவர் சொல்லவே மாட்டேங்குறாரு.

பார்வை: நான் யாருங்கறது இருக்கட்டும். (சுரேஷைப் பார்த்து) நீங்க யாரு? இந்த அறையில் என்ன பண்றீங்க?

சுரேஷ்: இது என்னோட அறை. நான் இந்த அறையில்தான் அட்மிட் ஆகியிருக்கிறேன். இப்ப சொல்லுங்க. உங்களுக்கு என்ன வேணும்?

பார்வை: (பாக்கெட்டை துழாவிக் கொண்டே) எனக்கு அப்பவே சந்தேகம் வந்தது. இருந்தாலும் ஒரு தடவை செக் பண்ணிடறேன். ஒரு நிமிஷம் இருங்க.

டாக்டர்: இதான் உங்களுக்கு லாஸ்ட் சான்ஸ். இப்பவாச்சும் நீங்க யாருன்னு சொல்லலேன்னா நடக்கறதே வேறே.

பார்வை: உங்க பேர் ரமேஷ்குமார்தானே? இது அறை 64தானே?

சுரேஷ்: இல்லே. என் பேர் ரமேஷ். இது 64 இல்லே... 46ம் அறை.

பார்வை: ஓ அப்படியா.. ஐ ஆம் சாரி. நாந்தான் அறை மாறி வந்துட்டேன்னு நினைக்கிறேன்...

ஆளாளுக்கு கையில் கிடைத்ததை எடுத்து அடிக்கும்முன், கதவைத் திறந்து பார்வையாளர் எஸ்கேஏஏஏப்.

*****

Read more...

Tuesday, September 29, 2009

நொறுக்ஸ் - செவ்வாய் - 09/29/09

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜோதா அக்பர் திரைப்படம் பார்க்க வரமாட்டேன்னு சொல்லிட்டிருந்த நண்பரை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். போகும்போது, போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த நண்பர் கார் மீது மற்றொரு கார் இடித்து விபத்து. அன்றிலிருந்து, எங்கு சென்றாலும் என்னை அழைப்பதை குறைத்துக் கொண்டார் அந்த நண்பர். அந்த விபத்துக்கு நானும் ஒரு காரணம்தான் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.


அதே போல், சென்ற மாதம் சஹானாவின் பிறந்த நாள் விழாவுக்காக, பக்கத்து ஊரிலிருந்து ஒரு நண்பரை அழைத்திருந்தோம். வர்றேன், வந்துட்டே இருக்கேன்னு சொன்ன நண்பர் கடைசி வரை வரவேயில்லை. பிறகு பார்த்தால், எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது - விபத்து. கவனக்குறைவால் இவர் வேறொரு வண்டியில் போய் இடித்துவிட்டாராம்.


இந்த விபத்துக்கு நீ பொறுப்பு கிடையாது. உங்க வீட்டுக்கு வரும்போது நடந்திருந்தாலும், என்னுடைய தப்புதான் அது - என்று நண்பர் கூறிக்கொண்டிருந்தாலும், மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது. சில நாட்களுக்கு என்ன செய்வதென்றும் புரியவில்லை...:-((


*********


தினமும் காலையில் நடக்கும் 5.30 மணி மீட்டிங்கில், கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் கலந்து கொள்ளவில்லை. தூக்கத்தில் 6.15 மணியைப் பார்த்து, 5.15தானே ஆகுது, இன்னும் பத்து நிமிடம் தூங்கலாம்னு தூங்கி, எழுந்து பாத்தா, மணி 6.45 ஆகிவிட்டிருந்ததே காரணம்.


பஞ்சும் நெருப்பும் பக்கத்து பக்கத்துலே இருந்தாக்கூடப் பரவாயில்லே... இந்த அஞ்சும் ஆறும் ஒரே மாதிரி இருக்கிறதை - ஒரு அரசாணை போட்டு மாத்தமுடியுமான்னு கேட்டு சொல்லுங்கப்பா.... அவ்வ்வ்..


*********


ரொம்ப நாள் கழிச்சி தங்ஸுக்கு மிகவும் முக்கியமான ஒரு சந்தேகம் வந்தது. எங்களுக்கு தாலி, மெட்டி இந்த மாதிரியெல்லாம் இருக்குற மாதிரி, ஆம்பளைங்களுக்கு ஒண்ணும் இல்லையே? அவங்களுக்கு கல்யாணமாயிடுச்சுன்னு எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு கேட்டுட்டாங்க..


பொம்பளைங்க ஷாப்பிங் போனாலோ, அல்லது சும்மாவே வெளியே போனாலோ தனியா போறீங்க. அப்போ உங்களுக்கு கல்யாணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்கத்தான் அதெல்லாம். ஆம்பளைங்களை கொஞ்ச நேரமாச்சும் தனியா விடறீங்களா? இல்லையே? எங்கே போனாலும் கூடக்கூட வந்துடறீங்கல்லே... அப்புறம் எங்களுக்கு எதுக்கு தனியே ஒரு குறியீடு? பொண்டாட்டி கூட இருந்தா, கல்யாணமாயிடுச்சுன்னு நினைச்சிக்க வேண்டியதுதான் - அப்படின்னு சொன்னேன்.


சரிதானே?


*********


சஹானா பாட்டுக்கு பாடகி சின்மயிக்கு விருது கிடைத்திருக்காம். இதில் எனக்கு ஆச்சரியமேயில்லை. சஹானாவுக்குதான் பரிசு கிடைக்கும்னு முன்னாடியே தெரியும். பின்னே சத்யா இல்லேன்னா மகேஷ்னு பாட்டு எழுதியிருந்தா அதுக்கெல்லாம் பரிசு கிடைக்குமா என்ன?... :-))

என்ன மகேஷ் அண்ணே, சரிதானே?

********

இந்தியாவிலிருந்து திரும்பி வரும்போது பத்து கிலோவுக்கு புத்தகங்கள் வாங்கி வந்திருந்தேன். சுஜாதா, சாரு, ஜெயமோகன், பாரா, ஜெஃப்ரி ஆர்ச்சர் இவங்களையெல்லாம் விமானத்தில் படிக்க ஆரம்பித்து, இங்கே வீட்டில் ஓய்வறைக்கு உள்ளே, வெளியே, துணி துவைக்கப் போகும் இடத்தில் கிடைக்கும் ஒரு மணி நேரத்தில் - இங்கெல்லாம் படித்துப் படித்து, முடித்தேன்.

இனிமே 'உள்ளே' சுடோகுதான் போடணும்.... :-((

******

டாக்டர் விஜய் மட்டும்தான் அவரோட அரசியல் பிரவேச முடிவை மாத்திக்க முடியுமா என்ன?... நான்கூட சென்ற இடுகையில் கூறியபடி - நபோஒ - பதிவர்களின் பார்வையில் - இடுகையை நேரமின்மையால்
எழுதவில்லையென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்.


இருந்தாலும், அடுத்த வருடம் தமிழக அரசின் சார்பில் சிறந்த படமாக உபோஒ தேர்ந்தெடுக்கப்படப்போவதால், அதைப் பற்றி எழுதலேன்னாலும், அதோட உல்டா நபோஒ -வைப் பற்றி ஏதாவது எழுதியே
ஆகவேண்டுமென்பதால் ... இப்படியெல்லாம் பின்னூட்டம் வந்திருந்தால் எப்படியிருக்கும்னு ஒரு சிறு கற்பனை...


**


இது ஒரு சிறந்த ஆணாதிக்கப் பதிவு. இதையேதான் நாங்க ஆட்டோகிராஃப் படத்துலேந்து சொல்லிட்டு வர்றோம். இதையே ஒரு பெண் தொலைபேசி, வீட்டிலே ஆம்பளை இருக்கறதா பதிவு எழுதக்கூடாதா... இல்லே அப்படி எழுதினாதான் நல்லா இருக்காதா...


ஹாஹா... நண்பா.. மத்தியானம் 12 மணிக்கு எந்த பெண் வீட்டு வேலை பாக்கறாங்க... அப்பதான் டிவிலே சீரியல் ஓடிட்டிருக்குமே.... ஒரு வேளை விளம்பர இடைவேளையில் அப்படி நடக்கும்னு எழுதியிருந்தீங்கன்னா... ஓகே...


சுத்தமா ஒத்துக்கவே முடியாத பதிவு... ஒரு புருஷன் எப்படிப்பட்ட கொம்பனா இருந்தாலும், எப்படித்தான் குரலை மாத்தி பேசினாலும், அவனோட மனைவியால் உடனடியா கண்டுபிடிக்கப் படுவான். இங்கே
அந்தப் பெண் அப்படி கண்டுபிடிக்கலேன்றதாலே, இந்த பதிவே டோட்டல் பீலா.... வர்ட்டா...


தலைவா... அவன் வீட்டு சமையல்லேந்து ஒரு நாளைக்கு தப்பிச்சிட்டான்... ஆனா மறுபடி அடுத்த நாள் மாட்டித்தானே ஆகணும்... என்னவோ போங்க...


அவரை எங்க வீட்டுக்கும் தொலைபேசி இப்படியே செய்யச் சொல்லுங்களேன்...


பொம்பளைங்கன்னாலே வீட்டு வேலை செய்யத்தான்னு முடிவு பண்ணிட்டீங்களா... இது வேலைக்காகாத பதிவு...


இந்த பதிவுலே அந்த எதிர் வீட்டு ஜன்னலுக்கு என்ன வேலைன்னே தெரியல. கடைசி வரை, அவங்களுக்கு இதனால் என்ன நன்மைன்னே புரியல... சும்மா அவங்க கால்ஷீட் கிடைச்சிடுச்சுங்கறதால் அவங்களையும் கதையில் சேத்துக்கிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.... சரிதானே?

************

Read more...

Wednesday, September 23, 2009

நம்மைப் போல் ஒருவன்...!!!


நண்பகல் 12 மணி. அந்த உயர்ந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஒருவன் ஏறிக் கொண்டிருக்கிறான். கையில் மதிய உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில், கைப்பேசி மற்றும் ஒரு சிறிய கணிணி. மாடியில் கிடக்கும் ஒரு கிழிந்த பாயில் உட்கார்ந்து - சுற்றும் முற்றும் பார்த்து - சோம்பல் முறித்தவாறே - கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.




அதே வேளையில், நகரில் ஒரு வீட்டில் ஒரு பெண் வீட்டுவேலை செய்துகொண்டிருக்கிறார். அப்போது தொலைபேசி அடிக்கிறது. எடுத்துப் பேசினால் - "உங்க புருஷனைப் பத்தி ஒரு விஷயம் சொல்லப் போறேன். அதை கேக்கறதுக்கு நீங்க தயாரா இருக்கீங்களான்னு நான் பாக்கணும். உங்க வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க. ஒரு பத்து நிமிஷம் கழிச்சி மறுபடியும் கூப்பிடறேன்". அந்தப் பெண் - ஹலோ, ஹலோவென்று சொல்லச் சொல்ல, தொலைபேசி வைக்கப்படுகிறது.




மொட்டை மாடி மனிதன், தண்ணீர் குடித்தவாறே தன் கைப்பேசியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கிறான். பத்து நிமிடம் கழித்து - மறுபடி கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.



"நீ யாரு? என் புருஷனைப் பத்தி எனக்குத் தெரியாத எதை சொல்லப் போறே?"



"நான் யாருன்றது முக்கியமில்லே. நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியம். ஆனா அதுக்கு முன்னாடி கவனமா கேளு. நான் சொல்ற இந்த நாலு பொருட்களை எடுத்து உங்க வீட்டு காம்பவுண்ட் சுவற்றுக்கு வெளியே வைக்கணும். உன்னுடைய கைப்பையிலிருந்து கைக்குட்டை, அலமாரியிலிருந்து உன் சென்ட் - அதாவது நாத்தமருந்து, இன்னிக்கு காலையில் நீ செய்த சாம்பார் மற்றும் உன் புருஷனோட ஒரு பழைய பனியன் - இந்த நாலு பொருட்களையும் வெளியே வெச்சிட்டு வா. அடுத்து 30 நிமிஷம் கழிச்சி மறுபடி கூப்பிடுறேன்."



"நீ சொல்றத கேக்கலேன்னா?"



"எனக்கு ஒண்ணும் நஷ்டம் கிடையாது. உன் புருஷனைப் பத்தி ஒரு நல்ல விஷயம் சொல்லலாம்னு பாத்தேன். அப்புறம் அந்த ரகசியம் உனக்குத் தெரியாமலேயே போயிடும். பரவாயில்லையான்னு முடிவு பண்ணிக்கோ."



டொக்.



"ஹலோ, ஹலோ"



*****



மொட்டை மாடி. இப்போது வேறொரு எண்ணை அழுத்துகிறான்.



"ஹலோ"



"உன் வாழ்நாளிலேயே உனக்குப் பிடிச்ச செய்தி ஒண்ணு சொல்றேன். கேட்டுக்க தயாரா இருக்கியா?"



"யார் நீ? என்ன செய்தி அது?"



"உடனே உன் வீட்டு ஜன்னலிலிருந்து வெளியே எட்டிப் பார். எதிர் வீட்டிலிருந்து ஒருவர் சில பொருட்களை எடுத்து வந்து வெளியே வைப்பாங்க. அடுத்த பத்து நிமிடங்களுக்கு அப்படியே பாத்திட்டு இரு. நீ ரொம்ப நாளா எதிர்பார்த்தது நடக்கும்."



*****



எழுந்து போய் வெளியே நகரத்தைப் பார்க்கிறான். மொட்டை மாடியிலிருந்து நல்ல வியூ. ஆனால், உச்சி வெயில் மண்டையை பொளக்கவே, மறுபடி வந்து நிழலில் உட்கார்ந்து - படபடவென்று நெட்டி முறித்தவாறே - மதிய உணவுப் பொட்டலத்தை பிரித்து நிதானமாக சாப்பிட ஆரம்பிக்கிறான்.



*****



முதலில் பார்த்த பெண் வீடு.



"தொலைபேசியிலே பேசினது யாருன்னே தெரிய்லியே. இவரோட பேசலாம்னா ஸ்விச்ட் ஆஃப்னு வருது. எங்கே போய் தொலைஞ்சாரோ தெரியலே. சரி, அவன் சொல்றத கேக்குறத தவிர வேறே வழி தெரியல. அந்த நாலு பொருட்களையும் எடுத்து வெளியில் வெச்சிடுவோம்."

பொருட்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார்.



*****



இரண்டாவதாக பார்த்த பெண் (எதிர்) வீடு:



"ஹலோ.."



"ஆமா. நீங்க சொன்ன மாதிரியே எதிர் வீட்லே அவங்க பொருட்களை எடுத்து வெளியே வெச்சாங்க. அந்த பொருட்கள் கிட்டே வந்த தெரு நாய்கள், வாசனை பார்த்தவுடன், அலறி அடித்து ஓடிடுச்சுங்க. இனிமே அதுங்க இந்த தெருவுக்கே வராதுன்னு நினைக்கிறேன்".



டொக்.



*****



மறுபடி முதல் வீடு:



"நான் சொன்ன மாதிரியே செஞ்சதுக்கு நன்றி".



"உனக்கு எப்படி தெரிஞ்சுது."



"ஹாஹா.. நடக்கறதை நான் பாத்துக்கிட்டே இருக்கேன்".



"நீ யாருன்னு சொல்லு. நாய்களை ஏன் இந்த தெருவை விட்டு துரத்தினே?"



"பொதுமக்களுக்கு பிரச்சினை பண்ணுதுன்னு நகராட்சியே நாய்களை பிடிச்சிட்டு போகுது. நானோ வெறும் துரத்தித்தானே விட்டேன். அவங்க பண்ணா சரி. அதுவே நான் பண்ணால் தப்பா?"



"அது சரிதான். நாய்ங்களால் எங்களுக்கு பிரச்சினைதான். அதுக்கு எதுக்கு எங்க வீட்டை செலக்ட் பண்ணே? நீ யாரு"



"கடைத் தெருவுலே, சூப்பர் மார்க்கெட்லே ஜோடியா ஷாப்பிங் பண்ணும்போது புருஷனை பொண்டாட்டி திட்டிக்கிட்டே வருவாங்களே - அவனை மாதிரி நானும் ஒரு அப்பாவி மனுஷந்தான். நாய்களால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன். அவங்களை துரத்த என்ன வழின்னு யோசிக்கும்போதுதான், இந்த ஐடியா எனக்கு தோணிச்சு. நான் யாருன்னு உங்களுக்கு தெரிய வேண்டியதில்லே. இனிமே நீங்க கொஞ்ச நாளைக்கு தெருவுலே பயமில்லாமே நடமாடலாம். சம்பவாமி யுகே யுகே..."



டொக்.



*****



"அப்பாடா. அந்த மூணு பொருட்களால் வீட்லே பயங்கர கப்பு. என்னாலேயே தாங்கவே முடியல. பாவம் அந்த நாய்ங்க என்ன பண்ணும். ஓடியே போயிடுச்சுங்க. ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா. எல்லாம் அவளோட பொருளாவே எடுத்துப் போட்டா, என் மேலே சந்தேகம் வந்துடும்னுதான், என்னோட பனியனையும் எடுத்துப் போடச் சொன்னேன். இனிமே நிம்மதியா வீட்டுலே இருக்கலாம். ஐயய்யோ.. லஞ்ச் அவர் முடிஞ்சிடுச்சே. கீழே மேனேஜர் கத்துவாரே. போய் வேலையை ஆரம்பிக்கணும்".



ட்ரிங்.. ட்ரிங்..



"என்னங்க. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவீங்கல்லே. வரும்போது உங்களுக்கு புது பனியன் வாங்கிட்டு வந்துடுங்க. இன்னிக்கு இன்னொரு சமாச்சாரம் நடந்துச்சு. சாயங்காலம் சொல்றேன். வெச்சிரட்டா"



டொக்.



மாடியிலிருந்து மெதுவாக கீழிரங்கிப் போக, காமிரா அவர் பின்னால் zoom out ஆகிறது.



சுபம்.



*****



பின்குறிப்பு : இந்த கதையை பதிவர்கள் விமர்சனம் பண்ணா எப்படி இருக்கும். அதுதான் என்னோட அடுத்த இடுகை.... விரைவில்...



*****

Read more...

Friday, September 18, 2009

ரெண்டு பேருக்கு கெட்டது பண்ணனும்னா, தோசைகூட சுடலாம்!!!

என்னோட நண்பர்கள் பலருக்கு (வட இந்தியர்கள்) அருமையா சமைக்கத் தெரியும். அடிக்கடி நடக்கும் வாரயிறுதி சந்திப்பு - அவங்க வீட்டிலே நடந்ததுன்னா, அவங்கவங்க மனைவிகளை சமையலறையிலேயே விடமாட்டாங்க. ஆண்களே விதவிதமா சமைச்சிக்கிட்டிருக்க,
மனைவிகள் வெளியே உட்கார்ந்து வம்படிச்சிக்கிட்டிருப்பாங்க.


எனக்கோ சமையல்னா - சிந்துபைரவி படத்துலே சுலட்சணா கேக்கறா மாதிரி - கத்திரிக்கா கிலோ என்ன விலைப்பா?. அதனால், ஒவ்வொரு முறை சந்திப்பிலிருந்து வந்தபிறகும் தங்ஸ் மெல்ல - பாத்தீங்களா உங்க நண்பர்களை. வீட்டுலே எப்படி வேலை செய்யறாங்கன்னு.
நீங்களும் இருக்கீங்களே? - ன்னு ஆரம்பிப்பாங்க.


எதையாவது சொல்லி சமாளிக்கணுமே? அதனால் நானும் - ஹேய். லூஸ்லே விடும்மா. பையன் உங்க எதிரே நல்லா வேஷம் போடுறான். நாமெல்லாம் போயிட்டா எந்த வேலையும் செய்ய மாட்டான். கணிணி,
தொலைக்காட்சின்னே இருப்பான். இதெல்லாம் கண்டுக்காதேன்னு சொன்னாலும் விடமாட்டாங்க.


ஆரம்பத்திலே மெல்லமா கேட்டவங்க, போகப்போக - மெல் - மெ - ச - சத் - சத்த - சத்தமா கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.


என்னடா இது வம்பா போச்சுன்னு உடனடியா ஒரு மினி சந்திப்பு போட்டு (ஆண்கள் மட்டும்!) - ஏம்பா, இப்படியெல்லாம் பண்றீங்க. உங்களாலே எனக்கு தினமும் வீட்டிலே மண்டகப்படி நடக்குது. கொஞ்சம் பாத்து பண்ணுங்கன்னு சொன்னேன். பயபுள்ளைங்க முடியாதுன்னாட்டாங்க. உன் நிம்மதியை பாத்துக்க, நாங்க எங்க நிம்மதியை கெடுத்துக்கணுமா? மனைவியை வேலை செய்னு சொல்லப்போய், இனிமே நீங்க வெளியேதான் படுக்கணும்னு வீட்டை விட்டு துரத்திட்டா என்ன பண்றது?... ஆள விடுடா சாமின்னு கெளம்பி
போயிட்டாங்க.


நானோ இதுக்கு ஒரு வழி கண்டுபிடிச்சே ஆகணும்னு முடிவோட இருந்தேன். வேலையை விட்டுட்டு வேறே ஊருக்குப் போயிடலாமான்னுகூட யோசிச்சேன். ஆனா அங்கேயும் சமையல் செய்யற ஆம்பளைங்க நண்பர்களா வந்துட்டா மறுபடி இதே பிரச்சினைதானே வரும்னு அந்த
முடிவையும் கைவிட்டேன். சாலையில் நடந்துபோகும்போது, எதிரே யாரோ எதுக்கோ சிரிச்சாக்கூட - ஐயோ, இவனுக்கு சமைக்கத் தெரியாதாம்னு சொல்லி, என்னைப் பார்த்து சிரிக்கறமாதிரியே தோணும். இவ்வளவு ஏன், கனவுலே நமீதா வந்து - வாப்பா ச்சின்னப் பையா, ஒரு பாட்டு பாடலாம்னு சொன்னாக்கூட, அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணும்மா... புளிக்குழம்பு வெச்சிட்டு வந்துடறேன்னு சொல்ற அளவுக்கு சமையல் பிரச்சினை என்னை வாட்டிக் கொண்டிருந்தது.


மெதுவா, சரி - சமையலுக்கு மனசளவுலே நான் இன்னும் தயாராகலை. கொஞ்சம் வயசாகணும். இப்போதைக்கு பாத்திரம் வேணா தேய்ச்சி தர்றேன். ஓகேவா? - அப்படின்னு தங்ஸ்கிட்டே கேட்டு அதை செய்ய ஆரம்பிச்சேன்.


ஆரம்பத்துலே அப்பப்போ செய்துக்கிட்டிருந்த அந்த வேலை, பிறகு அப்பப் - அப் - அடி - அடிக் - அடிக்கடி - தின - தினமும்னு ஆயிடுச்சு.


நீயும் பொம்மை, நானும் பொம்மைன்னு சோகமா பாடிக்கிட்டே பாத்திரம் தேய்ச்சிக்கிட்டு இருந்தவன் - தங்ஸின் குரல் குறைய ஆரம்பித்ததால், சந்தோஷத்தில் - ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறதுன்னு பாட ஆரம்பித்தேன்.


அவ்ளோதான். எல்லா பிரச்சினையும் முடிஞ்சிடுச்சு - சமைக்காமேயே தப்பிச்சிடலாம்னு மனப்பால் குடிச்சிக்கிட்டு நிம்மதியா இருந்தேன். பொறுக்குமா ஆண்டவனுக்கு.


எல்லா பாத்திரங்களையும் பளபளன்னு தேய்ச்சி முடிச்சிட்ட ஒரு நல்ல மாலை வேளையில், ஒரு நண்பன் தொலைபேசினான் - என்னய்யா. இப்படி பண்றே? நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாவேயில்லைன்னு கதற ஆரம்பிச்சிட்டான்.


இல்லையே.. எல்லாம் பளபளன்னு ஜொலிக்குதே? அங்கேந்து நீ எப்படி நல்லாயில்லேன்னு சொல்லலாம். வேணா இங்கே வந்து பாருன்னு - நானும் பதிலுக்கு கத்தினேன்.


அப்புறம்தான் புரிஞ்சுது - என் வீட்டுவேலையின் திறமைகளை தங்ஸ் - நண்பன் மனைவியிடம் சொல்லி - அங்கே அவனுக்கு பெண்டு நிமித்திட்டாங்க.


உன்னை காட்டி இது நாள்வரைக்கும் நான் தப்பிச்சிட்டிருந்தேன். இப்போ திடீர்னு நீ பாத்திரம் தேய்க்க ஆரம்பிச்சிட்டியாம். அது எனக்கு பிரச்சினையாயிடுச்சுன்னு ஒரே புலம்பல். பையனுக்கும் சமையல் நஹி. வீட்டு வேலையும் செய்யாமே தப்பிச்சிட்டிருந்தான். ஆம்பளையா
பொறந்துட்டு வீட்டு வேலையும் செய்யாமே இருக்கணும்னா முடியுமா? நாந்தான் அவனுக்கு அறிவுரை கூறினேன்.


அதெல்லாம் முடியாது. நீ பாத்திரம் தேய்க்கறத நிறுத்துன்னு கட்டளையிட்டான். நானும் - முடியாது. முதல்லே அவங்கள (மத்த நண்பர்களை) நிறுத்தச் சொல்லு. அப்புறம் நான் நிறுத்தறேன்னு நாயகன் பாணியில் சொன்னேன்.


இப்படியாக, நான் ஒருத்தன் ச்சின்னச்சின்ன வேலைகளை செய்யறதாலே, வேறெங்கேயோ இன்னொருத்தனுக்கு ஆப்பு கிடைக்குதுன்னு நினைச்சிப் பாத்தப்போ ரொம்ப, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது.


நல்லா தூங்கிக்கிட்டிருந்த தங்ஸை தட்டி எழுப்பி - நாளையிலேந்து நான் தோசை சுட கத்துக்கப் போறேன்னு சொன்னேன்.


ரெண்டு பேருக்கு கெட்டது பண்ணனும்னா, தோசை சுடறதுலே தப்பேயில்லே!!!

*****

Read more...

Thursday, September 17, 2009

Cinema Paradiso

எச்சரிக்கை: இது ஒரு அக்மார்க் சுயபுராண (சோக கொசுவத்தி!) இடுகை. டமாஸ் 'மாதிரி'க்கூட இருக்காது.

*****

நண்பர் ஜாக்கி சிபாரிசு செய்யும் ஆங்கில / உலகத் திரைப்படங்களை எங்க ஊர் நூலகத்தில் தேடி வாங்கி பார்ப்பது வழக்கம். பார்த்தே ஆக வேண்டிய படம்னு அவர் சொன்னது எல்லாமே முற்றிலும் நிஜம்தான்றது இதுவரைக்கும் நான் கண்ட உண்மை. மிக்க நன்றி ஜாக்கி!


அவரு சிபாரிசு செய்யறதுலே 18+ படங்களை மட்டும் நான் தேடிப் பார்க்கிறேன்னு சிலர் நினைக்கலாம். ஆனா அது தவறு!!!.


அப்படி அவர் போன மாதம் சொன்ன படம் சி.பா. மூன்று வாரங்களாக முன்பதிவு செய்து வைத்து நேற்றைக்குத்தான் கைக்கு கிடைத்தது.


பார்த்தேன்...
ரசித்தே...
சிரித்...
அழு...


திரைப்பட விமர்சனத்தை ஜாக்கி அண்ணன் சொல்லிட்டாரு. அதுக்கு மேலே imdbயிலேயும் இருக்கு. நாம வேறே ஆங்கிள்லே இதைப் பத்தி பார்ப்போம்.


இந்த திரையரங்கத்திற்கு வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கு. இங்கேயே உன் வாழ்க்கையை கழித்து விடாதே. ரோமுக்குப் போ. உழை. பெரிய ஆளாக வேண்டும். திரும்பி வரவே கூடாது. அப்படி வந்தாலும் என்னைப் பார்க்காதே - என்றெல்லாம் சொல்லி நாயகனை ஊக்குவித்து, ஊரை விட்டு அனுப்புகிறார் ஆல்ஃப்ரெடோ. அப்படிப்போன அந்த நாயகன், ஒரு வெற்றிகரமான இயக்குனரா திரும்பி வர்றாரு.


மேற்கண்ட வசனங்களைக் கேட்ட பிறகு - இதே மாதிரி இதற்கு முன்னால் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறோமே என்று யோசித்துப் பார்த்தேன்.

சில வருடங்களுக்கு முன் படித்த - மைண்ட் ட்ரீ நிறுவனர் சுப்ரடோ பக்ஷியின் (Mindtree - Subroto Bakshi) ஒரு உரையென்பது நினைவுக்கு வந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த அவரது தாய் - என் பக்கத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்காமல், வெளியே போய் வேலையைப் பார் - Go kiss the world - என்றிருக்கிறார். அவரது முழு உரை இங்கே இருக்கிறது.


இப்படி நாயகனுக்கு அவனது நண்பன் ஆல்ஃப்ரடோவும், சுப்ரதோவுக்கு அவரது அம்மாவும் இருந்தமாதிரி நமக்கு யாராவது உந்துசக்தி கொடுத்தாங்களான்னு யோசித்தேன்.


உடனே நினைவுக்கு வந்தவர் - வேறு யார் - அப்பாதான்.


அப்போது டைப்பிஸ்டாக ஒரு ச்சின்ன அலுவலகத்தில் இருந்தேன். திடீரென்று ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்த அப்பா, என் டேபிளில் ரூபாய் பதினாராயிரம் வைத்து (4 பேரிடம் கடனாக வாங்கியது) - உடனே போய் ஒரு கணிணி பயிற்சிக்கு கட்டிட்டு வா, நாளையிலிருந்து போய் படி - என்றார். இந்த வேலை சரிப்படாது, எதிர்காலத்தில் கணிணிதான் எல்லாத்துக்கும் (சொன்ன வருடம் 1994).

உடனே இரண்டு வருட கணிணி பயிற்சியில் சேர்ந்தேன். அந்த பயிற்சி முடிக்கும் முன்னரே, குருவாக இருந்த பிதா, தெய்வத்திடம் போய்விட்டார்.
பிறகு உந்துசக்தியாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்த உறவினர்கள் சிலர் சற்று பிந்தி நின்றும், வேறு சிலர் பக்கத்து சந்தில் மறைந்து நின்றும் வேடிக்கை பார்த்தார்கள்.


சரி. மறுபடி சினிமாவுக்கு வருவோம்.


என் தந்தையுடன் (என்னுடைய) சிறிய வயதில் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன் - ஆங்கிலம் (சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி), இந்தி சினிமாக்களோட சில தமிழ் படங்களும். திருவல்லிக்கேணி ஸ்டார் திரையரங்கத்தில் 'முகல்-ஏ-ஆசம்' பார்க்கச் சென்ற போது நடந்த
சம்பவம் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது.


அன்றைக்கு தியேட்டரில் சரியான கும்பல். படம் ஹவுஸ் ஃபுல்னா பாத்துக்குங்க. படத்தை முதல் ரீல்லேந்து பாக்கணும்னு அடிதடி செய்து உள்ளே போயிட்டோம். படமும் ஆரம்பிச்சுது. முதல் பாட்டு வந்துச்சு. (ஒரு 6 - 7 சூப்பர் ஹிட் பாட்டுகள் இருக்குன்னு நினைக்கிறேன்). எங்கப்பா - ஹீரோ, ஹீரோயினோட சேர்ந்து கத்தி பாட ஆரம்பிச்சிட்டாரு.

நானோ பயங்கர டென்சனாயிட்டேன். நான் இவரோட வரலை, இவர் யாரோ நான் யாரோன்னு சொல்லிடலாம்னு யோசனை பண்ணிட்டே இருந்தேன். திடீர்னு பாத்தா அரங்கத்தில் நிறைய பாடகர்கள் உருவாயிட்டாங்க. குறைந்த பட்சம் ஒரு 20 - 30 பேர் பாட ஆரம்பிச்சிட்டாங்க. ஒவ்வொரு பாட்டுக்கும் பயங்கர சத்தம். எல்லோருக்கும் எல்லாப் பாட்டும் மனப்பாடம். மதுபாலாவோட திரையில் சேந்து பாட முடியாத சோகத்தை பெரிசுங்க திரையரங்கத்துலே பாடி தீர்த்துக்கிட்டாங்க.


இடுகையை முடிச்சிட வேண்டியதுதான்.


இந்த திரைப்படத்தின் கடைசியில் நாயகன் - ஆல்ஃப்ரெடோ கொடுத்த பரிசைப் பார்ப்பது போல் ஒரு காட்சி. முதலில் புரியாவிட்டாலும், அந்த பரிசு என்னவென்று புரிந்தபிறகு - சான்ஸே இல்லே சான்ஸே இல்லேன்னு சொல்லிக் கொண்டு - ஒவ்வொரு தடவை என்னுடைய Aptech சான்றிதழைப் பார்க்கும்போது கண்கலங்குவது போலவே - நாயகனுடன் சேர்ந்து நானும் கண்கலங்கினேன்.

*****

Read more...

Monday, September 7, 2009

ஒரு நாடகம் போடறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?


நாடகம்னு சொன்னவுடன் - ஒரு முழு நீள நகைச்சுவை நாடகமோ அல்லது ஜவ்வாக இழுக்கப்படும் தொலைக்காட்சி சீரியலோ - போட்டேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. ஒரு பத்து நிமிடமே வரக்கூடிய ஒரு சிறிய நாடகத்தை, ஒரு விழாவில் போட முயற்சி செய்து, எப்படியல்லாம் கஷ்டப்பட்டேன்னு இங்கே சொல்லியிருக்கேன்.



இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஒரு விழா கொண்டாடலாம்னு தீர்மானிச்சாங்க. சரி நமக்குத்தான் (வீட்லே) சுதந்திரமில்லே, அட்லீஸ்ட் நாட்டோட சுதந்திரத்தையாவது கொண்டாடுவோம்னு திருமணமான ஆண்கள் எல்லாம் மேற்படி விழாவில் கலந்துக்கலாம்னு முடிவெடுத்தோம்.



விழான்னு சொன்னவுடனேயே - தங்ஸ், நீங்க எந்த போட்டியிலேயும் கலந்துக்காதீங்க. எங்க பேரையும் கொடுத்து தொலைச்சிடாதீங்க. வெறும்னே போய் சாப்பிட்டு வந்தா போதும்னு சொல்லிட்டாங்க. இனிமே அமைதியா இருந்து பிரயோஜனமில்லே. பொங்கி எழுடா ச்சின்னப்பையான்னு சொல்லி - நேரா விழாக்குழுவினர்கிட்டே போய் - எனக்கு ஒரு பத்து நிமிட
ஸ்லாட் கொடுங்க. ஒரு நாடகம் போடப்போறேன்னு சொல்லி நேரத்தை வாங்கிட்டேன்.



நாலு பேர் நடிக்கக்கூடிய அந்த நாடகத்துக்காக, மூணு பேரை தயார் செய்ய (ஹிஹி அந்த நாலாவது ஆள் நாந்தான்!) ஒவ்வொருத்தராய் கேட்க ஆரம்பித்தேன். அப்பத்தான் தெரிஞ்சுது... உலகத்திலே நிறைய பேர் என்னைப் போலவே கூச்ச சுபாவமுள்ளவங்கன்னு... மூணு பேர் கிடைக்கவேயில்லை. சரி வேறே வழியில்லாமே நானே நாலாவதாரம் ( நன்றி: உலக நாயகன்)
போட்டுடலாம்னு முடிவு செய்தேன். விழா ஏற்பாடு செய்தவரோ - இந்த ஊர்லே கடலே இல்லேன்னாலும், நீங்க நாலாவதாரம் போட்டா, கண்டிப்பா சுனாமிதான் - அப்படின்னு எச்சரிக்கை செய்தவுடன், முயற்சியை கைவிட்டேன்.



இப்படி நான் ஒரு நாடகம் போட முட்டி மோதிக் கொண்டிருக்கும்போது, போட்டியாக இன்னொரு குழு - மூணு பேர் நடிக்கக்கூடிய சிறிய நாடகம் போடப்போறோம்னு கிளம்பியது. மேட்டர் என்னன்னா அவங்களுக்கும் ஒரு ஆள் கிடைக்காமே, என்னை நடிக்க முடியுமான்னு கேட்டாங்க. என்னடா, நாமே தனி கம்பெனி வைத்து நாடகம் போடலாம்னு பாத்தோம்,
அப்படியிருக்கும்போது மத்தவங்க நாடகத்தில் நம்மால் நடிக்க முடியுமா - அப்படி நடிச்சா நம்ம திறமைக்கு ஏதாவது பங்கம் வந்துடுமா என்று ஆயிரமாயிரம் கேள்விகள் மனசுக்குள் சுழன்றி சுழன்றி அடித்தது. கடைசியில், என்ன ஆனாலும் பரவாயில்லை, அவங்க நாடகத்தில் நடித்துவிடலாம்னு முடிவு செய்தேன்.



அடுத்தது ஒத்திகை.


சொந்த வேலைகளைச் செய்வதற்கு ஏற்ற நேரம் - ராகு காலமோ, யமகண்டமோ கிடையாது - அலுவலக நேரம்தான்றது என் கொள்கை. சில பேருக்கு அது புரிவதேயில்லை. நாடக ஒத்திகையை மாலை நேரத்தில்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.



அலுவலக நேரத்தையே குடும்பத்தோடு செலவு செய்யவேண்டுமென்ற உயர்ந்த கொள்கை உடைய நான், மாலை நேரங்களில் அவர்களை பிரிந்து எப்படி ஒத்திகைக்குப் போவேன்? ஆனாலும், பூனைக்கு வாழ்க்கைப்பட்டா மியாவ்னு சொல்லித்தானே ஆகணும்? ரெண்டு நாள் மாலையில் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போய் நாடக ஒத்திகை பார்த்தோம். என் நடிப்பைப்
பார்த்த அந்த வீட்டு/பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பயத்தில் அரண்டு போய்விட்டதாய் அடுத்த நாள் நண்பர் சொன்னார். பாத்திரத்தில் ஒன்றிப் போயிருந்ததால், நான் எதையும் கவனிக்கவில்லை.



அந்த நாடகத்தின் ஸ்க்ரிப்ட் மேல் நாங்கள் வைத்த அபார (அவ)நம்பிக்கையால், விழாவின்போது உரக்க சிரித்து, கைதட்ட நாலைந்து பேரை தயார் செய்தும் வைத்திருந்தோம். ஆமா.. கரகாட்டக்காரன்லே - இவரு வாசிக்கறத பாத்தா தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரியும் - அந்தம்மா ஆடறத பாத்தா பத்மினி மாதிரியும்னு வருமே - அதே மாதிரிதான் ஆனா
இங்கே பணமெல்லாம் கொடுக்கலே. சும்மாவே கைதட்டுங்கன்னு சொல்லிட்டோம்.



ஆயிற்று. சுதந்திர தின விழா நாளும் வந்தது.


எங்கள் நாடகம் போட்டபிறகு அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். ஒரே ஆரவாரம்தான். புகைப்பட வெளிச்சத்தில் அந்த மாலை நேரத்திலேயே முழு நிலவு வந்ததுபோல் அந்த அறை முழுக்க வெள்ளை வெளிச்ச மழை.


இப்படியெல்லாம் எழுதணும்னு எனக்கும் ஆசைதான். ஆனால், எங்கள் ஸ்லாட்டுக்கு முன்னர் இருந்த நிகழ்ச்சிகள் தாமதமாகிவிட்டதால், கடைசி நேரத்தில் எங்கள் நாடகத்தையே போடவிடாமல் விழாக்குழுவினர் தடுத்துவிட்டார்கள்.



சரி சரி.. .படிக்கிற எல்லாரும் உச்.. உச்.. என்று வருத்தப்படுவது எனக்கு தெரியுது. என்ன பண்றது சொல்லுங்க... அவங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான்.


இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு முன்னரே தெரியுமாததால், நான் இன்னொரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துகொண்டு, அதை வெற்றிகரமாக (!!) செய்தும் முடித்தேன்.


அது என்னன்றீங்களா, நம்ம கடை ஆரம்பிச்ச புதுசுலே நிறைய எழுதின - இன்னார் மென்பொருள் நிபுணரானால் - அதே மாதிரி வட இந்தியர்களுக்காக ‘முன்னாபாய் PMP'ன்னு பேர் மாற்றம் செய்து தயாரித்த ஒரு சிறிய கான்செப்ட் ( நன்றி க.போவது யாரு, அ.போவது யாரு...).



அந்த கான்செப்ட் செய்து முடித்தபிறகு தட்டினாங்க பாருங்க - தட்டோ தட்டுன்னு தட்டுறாங்க... கல்யாணப்பரிசு தங்கவேலு மாதிரி நினைச்சிக்காதீங்க. நிஜமாவே கைதான் தட்டினாங்க... நான் பேசினதுக்கு ஆதாரமா ஒரு புகைப்படத்தைப் போட்டுட்டு (அவங்க கைதட்டினதுக்கு ஆதாரம் கிடையாது. நீங்க நம்பித்தான் ஆகணும்!) இந்த சிறிய பதிவை முடிச்சிக்கிறேன்.



வருங்காலத்திலே நாடகம் போடணும்னா யாரையும் நம்பாமே நாலாவதாரமோ அஞ்சாவதாரமோ நானே போட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். என்ன சொல்றீங்க?



Read more...

Friday, August 21, 2009

சென்னையில் 3வது வாரம் - போளி டோண்டு பாக்கமுடியல!!!

சரி சரி. தலைப்பைப் பாத்துட்டு வந்தவங்க எல்லாம் வாங்கப்பா... உங்களுக்கான மேட்டர் இந்த இடுகையில் எங்கேயோ இருக்கு. அப்பத்தானே முழுக்க படிப்பீங்க?

****

உண்மைத்தமிழன் அண்ணாச்சி மற்றும் சில பதிவர்களை மாதிரியே - எங்க வீட்டிலும் ஹாத்வே இணைய இணைப்பு இருந்தது. ஒரு சுபமுஹூர்த்த நன்னாளில் அவர்கள் தொழிலையே விட்டுவிட்டு ஓடிவிட - அடுத்த இணைப்பு கொடுக்க 10-15 நாட்கள் ஆகும்னு மற்றவர்கள் சொல்லிவிட - நான் தினமும் அரை மணி நேரத்துக்கு மட்டுமே கடைக்குப் போய் இணையத்தை மேய வேண்டியதாயிற்று. நெம்ப கஷ்டம்!!!

********

சென்னையில் இருக்கும்போது, ஒரு பதிவர் நண்பர் என்னை கைப்பேசியில் கூப்பிட்டு - எங்கே இருக்கீங்க, பின்னணியில் இவ்ளோ அமைதியா இருக்கே... தூங்கிட்டிருந்தீங்களா? - அப்படி இப்படின்னு கேட்டுட்டே இருந்தாரு. பொய் சொல்லவே பிடிக்காத எனக்கு அப்போ பொய் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம். அடுத்த பத்தி படிச்சீங்கன்னா, நான் எங்கே இருந்தேன்னு புரியும்.

அலுவலகத்தில் ஒரு பெரிய மீட்டிங். தொலைபேசியிலும் (கான்ஃபரென்ஸில்) நிறைய பேர் இருந்தாங்க. ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று தொலைபேசியில் - ஓய்வறையில் தண்ணீர் ஃப்ளஷ் (flush) செய்யும் சத்தம் கேட்டது. யாரோ ஒருவர் ஓய்வறையில் இருந்துகொண்டே மீட்டிங்கில் கலந்துகொண்டிருந்தார் போல.

எங்க தலைவர் எங்களிடம் - நல்லவேளை, எல்லாரையும் வீடியோ கான்ஃப்ரன்ஸில் வாங்கன்னு நாம கூப்பிடலே. நாறிப்போயிருக்கும் - அப்படின்னவுடன், சிரித்து சிரித்து சிரித்துக் கொண்டேயிருந்தோம்.

வெ*பூ, இப்ப தெரிஞ்சுதா, அப்ப நான் எங்கே இருந்தேன்னு!!!

*****

திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு அறிவிப்பு பலகை வெச்சிருக்காங்க. அந்த பலகையில் - தஞ்சாவூருக்கு இன்னும் இவ்ளோ தூரம் இருக்கு, இப்போ இந்த ஊர்லே இருக்கோம் - இப்படியெல்லாம் விஷயம் இருக்கும்னு நினைச்சீங்கன்னா, எச்சி போட்டு உடனே அதை அழிச்சிடுங்க. அப்படி ஒரு 'தூர வழிகாட்டி' எங்கேயுமே காணலே.

அப்படின்னா அந்த பலகையில் என்ன எழுதியிருக்காங்கன்னு கேக்குறீங்களா - “ நான், நீ என்றால் உதடு ஒட்டாது. நாம் என்று சொன்னால் மட்டுமே உதடு ஒட்டும். நெடுஞ்சாலைத் துறை” அவ்வளவுதான். இதையே திரும்பத் திரும்ப நெடுஞ்சாலை முழுக்க மஞ்ச கலர்லே எழுதி வெச்சிருக்காங்க.

எனக்கு தோன்றிய கேள்விகள்:

1. குடும்பக் கட்டுப்பாடு, பெண் சிசுக்கொலை, மரம் வளர்ப்போம் - இதைப் பற்றி ஒரு வாக்கியத்தை எழுதி வைத்தாலாவது ஏதாவது பயன் கிடைத்திருக்குமென்று நம்பலாம்.

2. கலைஞர் மொத்தமே இந்த ஒரு பொன்மொழியைதான் சொல்லியிருக்கிறாரா? நாம் தெரிந்து கொள்வதற்காக வேறு எதையுமே சொல்லவில்லையா?

3. இதே அறிவிப்பு பலகைகளில், அடுத்த ஊர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று ஒரு ச்சின்ன எழுத்திலாவது எழுதியிருக்கலாமே?

4. இவ்வளவு செலவு செய்து வைத்த இந்த பலகைகளை - நாளை ஒரு வேளை ஆட்சி மாற்றம் வந்தால், விட்டு வைப்பார்களா?

5. இதே பழமொழியை ஒரு வேளை அம்மா ஆட்சிக்கு வந்தால் எப்படி உல்டா செய்து வைப்பாங்கன்னு ஒரு கற்பனை. ”சென்னை, பெங்களூர்லே ஓய்வு எடுத்தால் அது ஓய்வு கிடையாது. கோட நாட்டில் ஓய்வெடுத்தால் மட்டுமே அது ஓய்வு”.

*****

ஊருக்கு வந்தப்பிறகு எந்த பதிவரை தொலைபேசி எங்க ஏரியா நங்கநல்லூர்னு சொன்னாலும், உடனே அவங்க கேட்பது - டோண்டு ஐயாவை பாத்தீங்களா?

சரின்னு ஒரு நாள் அவருக்கு தொலைபேசினேன். அடுத்த நாள் நடைப்பயிற்சிக்கு வரும்போது வீட்டுக்கு வந்துடறேன்னு சொன்னவர், அதே மாதிரி காலை சுமார் 7.45க்கு வந்துவிட்டார்.

திருவல்லிக்கேணி, நங்கநல்லூர், நோய்டா, எங்கே பிராமணன், மொழிபெயர்ப்பு, ஃப்ரெஞ்ச், இஸ்ரேல் - அப்படி இப்படின்னு பல்வேறு விஷயங்களைத் தொட்டு படபடவென்று பேசிக் கொண்டிருந்தார் இந்த 60+ வாலிபர். பல்வேறு பதிவுகளில் படித்த மாதிரியே - செய்யும் தொழிலிலும், பதிவுகளிலும் நல்ல ஈடுபாட்டோடு இயங்கி வரும் இவரிடம் பேசும்போது - இவருடைய உற்சாகம் கண்டிப்பாக நம்மையும் பற்றிக்கொள்ளும்.

என்ன ஒரே ஒரு ஆசை இருந்தது. அவர் வரும்போது ‘போளி' (ஒரு இனிப்பு சாப்பாட்டு ஐட்டம், தெரியும்தானே?) வாங்கி அவர்கையில் கொடுத்து - ஹையா ஐயா, நான் ‘போளி' டோண்டுவை பாத்துட்டேன்னு சொல்ல நினைத்தேன்.

ஹிஹி.. உலகமறிந்த நம் ஞாபகமறதியால் அதை வாங்கி வைக்க மறந்துவிட்டேன்...

அதனால் என்ன ... அடுத்த தடவை வரும்போது இதை செய்துவிட வேண்டியதுதான்.

*****

Read more...

Monday, August 17, 2009

இரு சம்பவங்களும் பின்னே என் சபதமும்...

முதலில் ஒரு சிரிப்பான சம்பவம்.

அடுத்த நாள் வீட்டில் நடக்கவிருந்த ஒரு ச்சின்ன விசேஷத்திற்காக, சிற்றுண்டி ஆர்டர் செய்வதற்காக ஒரு ச்சின்ன உணவகத்திற்குப் போயிருந்தேன். ஒரு பத்து பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய ஒரு சிறிய ஹால். அப்போது கடை காலியாகத்தான் இருந்தது. நட்ட நடுவில்
ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நான் நுழைந்தவுடன்,

அவர்: வாங்க, வணக்கம்.

நான்: நான் ஏழாவது தெருவிலிருந்து வர்றேன்.

அவர்: சரி

நான்: நாளை காலைக்காக பதினைஞ்சு டிபன் சொல்லணும்.

அவர்: சொல்லுங்க. எவ்ளோ மணிக்கு ரெடியா இருக்கணும்? டிபன்னா என்னென்ன வேணும்?

நான்: 4 இட்லி, 1 வடை. சட்னி, சாம்பார் தனியா கொடுத்துடுங்க. ஒரு எட்டு மணிக்கு வந்து வாங்கிக்கறோம். எவ்ளோ ஆகும்னு சொல்லுங்க.

அவர்: ஒரு நிமிஷம் இருங்க. முதலாளி இப்ப வந்துடுவாரு. வந்தவுடனே நீங்களே கேட்டுக்குங்க.

நான்: அப்ப நீங்க?

அவர் (சிரித்தவாறே) : நான் இங்கே சாப்பிட வந்தவன். பாக்கி சில்லறைக்காக நிக்கறேன் அவ்ளோதான்.

(எனக்கு சரியான கடுப்பு)

நான்: அப்போ இவ்ளோ நேரம் எதுக்கு கேள்வியெல்லாம் கேட்டீங்க?

அவர்: என்னை யாருன்னு நீங்கதானே முதல்லே கேட்டிருக்கணும். நீங்க ஏன் கேக்கலே?

நான்: அது வந்து.. நீங்க பாக்கறதுக்கு மேனேஜர் மாதிரி இருந்தீங்க.. .அதான் கேக்கலே...

இதற்குள் கடையிலிருந்து ஆள் வந்துவிடுகிறார். நான் மறுபடி முதலிலிருந்து எல்லாவற்றையும் ஒப்பிக்க, கடைக்காரரோ பதிலை என் பக்கத்தில் நிற்பவரைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் கடைக்காரரைப் பார்த்து: இதோ பாருங்க. இட்லி வடை இவருக்கு (என்னைக் காட்டி). நான் இங்கே சாப்பிட வந்து, சில்லறைக்காக நிக்கறேன். என்னை முதல்லே வெளியே அனுப்பிட்டு, அவர்கிட்டே கணக்கு பேசிக்குங்க.

கடைக்காரர் சிரித்துக் கொண்டே அவருக்கு சில்லறை கொடுக்க, அவர் என்னைப் பார்த்து - ஏங்க, நான் பாக்கறதுக்கு நிஜமாவே மேனேஜர் மாதிரியா இருக்கேன்?

நான் : நான் அப்படித்தான் நினைச்சேன். நீங்கதான் வெள்ளையும் சொள்ளையுமா இருக்கீங்களே?

அவர்: மறுபடி ஒரு தடவை நல்லா பாத்து சொல்லுங்க..

நான்: அட... ஆமாங்க...

அவர்: உங்களுக்கு தெரியுது. எங்க முதலாளிக்குத் தெரியல. இன்னிக்கே ஆபீஸுக்குப் போய் என்னை மேனேஜர் ஆக்குடான்னு கேக்கப் போறேன்.

இந்த சம்பவம் முழுக்க மனுசன் சிரிச்சிக்கிட்டே இருந்தாரு. அந்த நகைச்சுவை உணர்வு, டைமிங் சென்ஸ், கலகலப்பு - இதெல்லாமே ஸ்வைன் மாதிரி பக்கத்தில் இருப்பவருக்கு டக்குன்னு ஒட்டிக்கிற அளவுக்கு இருந்தது.

வீட்டுக்கு வந்தப்புறம்கூட எல்லார்கிட்டேயும் சொல்லி சொல்லி சிரிச்சிக்கிட்டே இருந்தேன்.

*********

இப்போ ஒரு வருத்தமான சம்பவம். இது நடந்து சில வருடமாயிடுச்சு.

ஒரு தடவை ஒரு ச்சின்ன தெருவில் என் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, எதிரில் வந்த ஒரு கார், என் பக்கத்தில் வரும்போது டக்குன்னு வலது பக்கம் கொஞ்சம் திரும்ப, நான் திடீர் ப்ரேக் அடிச்சி தெருவோரத்தில் நின்றிருந்த ஒருவரை இடித்துத் தள்ளிவிட்டு
வண்டியோடு கீழே விழுந்தேன்.

என் பைக்கின் 'பின்னே பார்க்கும்' கண்ணாடி உடைந்துவிட, எனக்கு கைகளிலும், நான் தள்ளி விட்டவருக்கும் கை, கால்களிலும் சிராய்ப்பு. நான் கஷ்டப்பட்டு எழுந்து வண்டியை எடுத்து நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தால், அவரோ அழுதுகொண்டிருந்தார்.

நான் டென்சனாகி அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க என்னை மேலும் டென்சனாக்கிய விஷயம் அவர் செய்கையில் பேசியபோதுதான் தெரிந்தது. அவர் வாய்பேச இயலாதவர்.

ஒண்ணுமில்லே. நீங்க போங்கன்னு செய்கையில் காட்டியவாறே அவர் நகர, என் வண்டி நகராமல் அடம் பிடித்தது. அதைப் பார்த்த அவர், நான் மறுப்பதையும் கண்டுகொள்ளாமல் எனக்கு உதவ முற்பட்டார்.

என் வண்டியை தள்ளியவாறே பக்கத்தில் ஒரு மெக்கானிக் கடைக்கு வந்த அவர், கண்ணாடியை சரிசெய்யவும்தான் தெரிந்தது, அவர் ஒரு மெக்கானிக் என்பதும் அது அவரோட கடையென்பதும்.

அன்னிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தே ஆகணும்னு நினைச்ச அவர், வண்டியை சரிசெய்ததற்கு காசு வாங்கமாட்டேன்னு சிறிது நேரம் அடம் பிடித்தாலும், காசை அவர் பாக்கெட்டில் திணித்து, மறுபடி மன்னிப்பு கேட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அப்படிப்பட்ட ஒரு ஆளை இடித்துத் தள்ளிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அடுத்த ஒரு வாரத்திற்குப் போகவேயில்லை.

அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவெடுத்தேன். இனிமேல் இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தால், யாரையும் இடிக்காமல் தனியாக ஒரு இடத்தில் போய்தான் விழவேண்டும் என்று சபதமே செய்துவிட்டேன்.

நாமதான் ஒரு சபதத்தைப் போட்டுவிட்டால், அதை நிரூபிச்சே தீருவோம்ல... தங்கமணி பின்னால் அமர்ந்திருக்க ஓரிரு முறை ( நிறைய தடவை??) யாரையும் இடிக்காமல் நாங்க மட்டும் பைக்லேந்து விழுந்து எழுந்தோம்.

அப்புறம்தான் என் சபதத்தை தங்கமணி நம்பினார்.

அப்ப நீங்க?

********

Read more...

Thursday, August 13, 2009

சென்னையில் இரண்டாவது வாரம் (கோவை, திருப்பூர் விசிட்!)

வடிவேலுவை நல்ல்ல்ல்லவன்னு சொன்னவங்க மாதிரி - மொதல்லே ஒரு ஆறு பேரு திருப்பூர்லே... சுத்தி நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க... அப்புறம் பக்கத்து ஊர்லே (கோவை) இருக்கறவருக்கு தொலைபேசி - நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா. இங்க ஒருத்தன் மாட்டியிருக்கான்னாங்க. அவங்களும் - நாங்க எல்லாரும் இங்கேதாம் இருக்கோம். அவரை பஸ் ஏத்தி விடுங்க. நாங்க பாத்துக்குறோம்னாங்க. சரின்னு இவங்களும் பஸ்(லே) ஏத்தி அவங்களே டிக்கெட்டும் எடுத்து அனுப்பி வெச்சாங்க.. சரின்னு அங்கே போய் இறங்கினா.. அங்கே ஒரு பத்து பேரும்மா... மாத்தி மாத்தி பேசறாங்க...


இப்படி நகைச்சுவையா சொன்னாலும் நேர்லே பார்த்தேயிராத ஒருத்தனுக்காக (ஏன் பாக்க முடியல, கழுத்து வலியான்னு கேக்கப்படாது!), ஞாயிறிலும் வேலையில் பிஸியாயிருந்த திருப்பூர் நண்பர்கள் மற்றும் ஓய்வு நாளிலும் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்த கோவை நண்பர்கள் - எனக்காக சில மணி நேரங்கள் செலவழித்தது மனது நெகிழ்ந்தது.


இவர்களைப் பற்றி சில பாயிண்டுகள்... கோர்வையா எழுதாமே பின்னே முன்னேன்னு எழுதியிருக்கேன். ஏதாவது வித்தியாசம் காட்டணுமே!!!

பாசக்கார மனுசங்க. அப்படியே அன்பாலே நனைச்சிட்டாங்க... ஹிஹி அப்புறம் மழையிலும்.

விருந்தோம்பலுக்கு மறுபெயர் இவங்கதான். இவங்கள பாக்க வர்றவங்க தங்கள் பர்ஸை வீட்லேயே வெச்சிட்டு வந்துடலாம்... வெளியே எடுக்க விடவே மாட்டாங்க... :-)

கம்பங்கூழ். கேள்விப்பட்டு மட்டும் இருந்த இதை குடிக்கச் சொன்னாங்க. ஆஹா ஆஹா.. அற்புதமான சுவை. மறக்கவே முடியல.(செய்முறை இணையத்தில் கிடைக்குதான்னு பாக்கணும்!).

நான் பழகுவதற்கு ரொம்ப இனிப்பானவன்னு கோவையில் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. சந்திப்பு ஏற்பாடு செய்திருந்த பூங்காவில் ஏகப்பட்ட எறும்பு எங்களை சுத்தி!!! 'அவங்களாலேயே' வேறே இடம் தேடிப் போக வேண்டியதாயிற்று.

சஞ்சய் சுக்கு காப்பி(ன்னு) கொடுப்பாரு. (ஆனா அதை யாரும், இது உப்புமாவான்னு கேக்கப்படாது!!).

எனக்கு அல்வா கொடுக்கணும்னு கடைகளில் தேடியிருக்காங்க ஒரு சகோதரி. கருணை உள்ளம் கொண்ட கடைக்காரர் அதற்கு மறுத்துவிட்டதால், வேறு இனிப்பு ஐட்டங்களை வாங்கி வந்துட்டாங்க... அவ்வ்வ்... அடுத்த முறை வந்தா வீட்டுக்கே வரச்சொல்லியிருக்காங்க.. ஸ்பெஷல் அல்வா கொடுப்பாங்களாம்...

வந்துடறேம்மா... வந்துடறேம்மா... - இதையே ஒரு நூறு தடவை சொல்லிப்பாருங்க. என்னைப் பார்க்க ஊர் விட்டு ஊர் வந்திருந்த வால்பையன் அவரோட தங்ஸ்கிட்டே இப்படித்தான் வாங்கிக் கட்டிண்டிருந்தாரு.

திருப்பூர் மக்கள் - பதிவர் சந்திப்புக் குழுன்னே ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க.. அதுக்கு தலைவர், பொருளாளர் அப்படின்னெல்லாம் ஆட்களை நியமிச்சி, சந்திப்பின்போது பில் செட்டில் பண்ண பொருளாளர் பர்ஸில் கை வைச்சிடறாங்க!!!

எல்லாத்துக்கும் மேலே - (கோவை) பதிவர் சந்திப்பில் மொக்கையான விஷயங்களை பேசாமே - பல ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வழிமுறைகளை விவாதிக்கிறார்கள். விரைவில் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளின் அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம். வாழ்த்துக்கள் நண்பர்களே!

கடைசியானாலும் குறைவில்லாத ஹிஹி.. last but not least... பின்னிரவானாலும் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லையென்றால் மற்றவர்கள் உதவுவதும், யாராவது ஒருவருக்கு தொலைபேசினால் மற்ற நண்பர்களுக்கு கான்ஃபரன்ஸ் போட்டு உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதுமாக - கோவை பதிவர்கள் ஒரு நல்ல குழுவாக செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதொரு விஷயமே.

*****

Read more...

Monday, August 10, 2009

Lemon Tree திரைப்படம் - தமிழ் நடிகர்களின் பார்வையில்!!!

சென்ற மாதம் மொட்டை மாடியில் Lemon Tree உலகத் திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் 40 பேர் வந்திருப்பார்கள். படம் ஓடிக்கொண்டிருந்தபோதே சில பேர் வருவதும், போவதுமாக இருந்ததால் யார் யார் வந்தார்கள் என்று அப்போது தெரியவில்லை. ஆனால், இருட்டில் சில தமிழ் நடிகர்களும் அங்கு வந்து படத்தைப் பார்த்திருக்கின்றனர். அது எப்படி எனக்குத் தெரியும்னு பாக்குறீங்களா? இந்த இடுகையை படிங்க.

படத்தைப் பாத்துட்டு வந்த சில நடிகர்கள் பக்கத்துலே இருக்குற ஜுஸ் கடையில் எலுமிச்சை ஜூஸ் குடிச்சிக்கிட்டே, அந்த படத்தை எப்படி உல்டா செய்யலாம்னு பேசிக்குறாங்க. நடிகர்கள் பேரை இங்கே சொல்லவில்லை. ஆனா நீங்க கண்டுபிடிச்சிட மாட்டீங்களா என்ன?!!!

படத்தோட கதை தெரியாதவங்க, எஸ்ரா எழுதிய இந்த விமர்சனத்தை பார்த்துவிடவும்.

*****

”படத்தோட முக்கிய பாத்திரங்கள் மொத்தமே மூணு நாலு பேர்தான். எல்லாத்தையும் நானே பண்ணிடுவேன்”.

”அது சரி. உங்க லெவலே வேறே. ஆமா.. எனக்கு ஒரு சந்தேகம். படத்துலே ரெண்டு பேர் முத்தம் கொடுக்கிற மாதிரி ஒரு காட்சி வருதே. அதெப்படி எடுப்பீங்க? உங்களை நீங்களே முத்தம் கொடுத்துப்பீங்களா?”

”இதோ பாருங்க. நான் நடிக்க ஆரம்பிச்சிட்டா”..

”உங்க நடிப்பை நீங்களே பாக்கமாட்டீங்களா?”

”அட.. அது உங்க டயலாக். எனக்கு கோத்து விடாதீங்க. நான் நடிக்க ஆரம்பிச்சிட்டா பாத்திரத்தோட ஒன்றிப்போயிடுவேன். அப்போ இதெல்லாம் பிரச்சினையேயில்லை. உங்களுக்குத்தான் பயங்கர பிரச்சினை.”

”ஏன்?”

”பறக்கறா மாதிரி ஒரு சீனும் இல்லையே படத்துலே. என்ன பண்ணுவீங்க?”

”அட இதென்னங்க கேள்வி. அந்த அமைச்சர் வீட்டுக்கும், எலுமிச்சை தோட்டத்துக்கும் நடுவே வேலி இருக்கில்லே, அதை பறந்து பறந்து தாண்டறா மாதிரி சில சீன்ஸ் போட்டு, சண்டை காட்சியும் வெச்சிட்டா... பூந்து விளையாடிடுவேன்ல..”

”சண்டைன்னதும்தான் ஞாபகம் வருது. அமைச்சரை தீர்த்துக் கட்ட தீவிரவாதிங்க வர்றாங்கன்னு ஒரு சீன் வெக்கணும். எனக்கு ஒரு பெரிய மழைக்கோட்டும், ரெண்டு பெரிய துப்பாக்கியும் ஏற்பாடு பண்ணிக்கறேன். என்ன, ரெண்டு நாள் தூங்காமே இருந்து கண்ணு ரெண்டையும் சிவப்பாக்கிக்கணும். அவ்ளோதான்.”

”அண்ணே.. உங்களுக்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கு.”

”என்னப்பா?”

”உலகத்துலே எவ்ளோ எலுமிச்சை மரங்கள் இருக்கு... அதுலே எவ்ளோ காய்கள் காய்க்குது. எவ்ளோ எலுமிச்சையை ஊறுகாய்க்குப் பயன்படுத்தறாங்க.. எவ்ளோ எலுமிச்சையை தலைக்குத் தேய்ச்சிக்க பயன்படுத்தறாங்க... அப்புறம் ஜூஸ் போட, லாரிக்கு முன்னாடி மாட்ட எவ்ளோ தேவைப்படுது... அப்படி இப்படின்னு நிறைய புள்ளிவிவரங்களை எடுத்து வெச்சிக்கோங்க... ஒரு பத்து நிமிடம் தொடர்ச்சியா பேசணுமில்லே..”

”யப்பா. நல்லவேளை சொன்னே.. நான் இப்பவே போய் இந்த தகவல்களையெல்லாம் சேகரிக்கிறேன்... வர்ட்டா...”

”இந்த படத்துலே எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் புரியல...”

”ஏண்டா இந்த படத்தை பாக்க வந்தோம்னா?”

”அட அதில்லே... அடுப்பு (கேஸ்) பத்தவைக்க ஏன் லைட்டரை பயன்படுத்தறாங்க... ஒரு தடவை அதை முறைச்சி பாத்தா போதுமே... சும்மா பத்திக்குமில்லே..”

”சரி சரி தலைவா. என்னை அப்படி முறைச்சி பாக்காதீங்க... பயமா இருக்கு. ”

”என்கிட்டே சூப்பர் ஐடியா இருக்கு.”

”என்ன அது?”

”எலுமிச்சை சாம்பார், எலுமிச்சை ரசம், எலுமிச்சை கறி இப்படியெல்லாம் செய்து சாப்பிட்டா, ‘அது'க்கு நல்லது அப்படின்னு ஒரு செய்தியை படத்துலே சொல்லி, படத்தோட பேரு ‘எலுமிச்சை முடிச்சு' அப்படின்னு வெச்சிட்டா தமிழ்லே படம் பிச்சிக்கிட்டு ஓடும்.”

”என்ன ஆனாலும் சரி. இந்த படத்தை அப்படியே சுட்டு தமிழ்லே எடுத்தா நான் நடிக்க மாட்டேன்.”

”ஏம்பா? நடிக்கறதையே விட்டுடப் போறியா?”

”இல்லீங்ணா. நான் தெலுங்கு படங்களை மட்டும்தான் சுடுவேன்னு சத்தியமே செஞ்சிருக்கேன். அதனால் எலுமிச்சை மரமோ, மாங்கா மரமோ முதல்லே அதை தெலுங்குக்கு அனுப்பிட்டு அப்புறம் அதோட தமிழ் பதிப்புலேதான் நான் நடிப்பேன்.”

”விளங்கிடும். இந்த படத்தை நான் எடுத்தேன்னா அதோட டைட்டில் ‘எங்க ஊரு எலுமிச்சைக்காரன்'. மரங்களுக்கு நடுவே ஓடி ஆடி ஒரு காதல், ரெண்டு காமெடி, நாலு பாட்டு - அவ்ளோதான்.. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு.”

*****

இப்படியே இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூஸ் கடைக்காரர் - ”மொத்தம் இருநூறு ரூபா ஆச்சு. யாரு கொடுக்கப் போறீங்க” - அப்படின்னதும், டக்குன்னு எல்லோரும் தங்கள் கைப்பேசியை எடுத்து காதில் வைத்தவாறே - “அப்படியா.. ஓகே ஓகே.. ரெடியாயிருங்க. இப்பவே வர்றேன்..” என்றவாறே எஸ்கேப்பாக - ஜூஸ் கடைக்காரர் @#$$@#%%#%@.

****

Read more...

Thursday, July 23, 2009

சிறுவர் அணித் தலைவர்...!!!

இரண்டு நாட்களுக்கு முன்னாடி, தமிழக துணை முதல்வர் ஆலந்தூர் வழியா காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்தாராம். அதற்கு கிண்டியிலிருந்தே ஏகப்பட்ட வரவேற்பு பலகைகள், ஃப்ளெக்ஸ் போர்டுகள், சாலையின் நடுவில் தோரணங்கள்னு ஒரே அமர்க்களம்தான்.


வேளச்சேரியிலிருந்து கிண்டி வருவதற்கே இவ்வளவு வரவேற்பு, தடபுடல் அப்படின்னா, எதிர்காலத்துலே இன்னும் என்னல்லாம் நடக்கும்னு யோசிச்சேன். அதுவும் கட்சியின் சிறுவர் அணித் தலைவர் பள்ளியில் படிக்கும்போது, அவரது தொண்டர்கள் அவருக்கு எப்படி வரவேற்பு கொடுப்பாங்கன்னு யோசிச்சதுலே வந்ததுதான் இந்த இடுகை.


எனக்குத் தெரிஞ்சது கொஞ்சம்தான். உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லிட்டுப் போங்க.

*****

ஃபீஸ் கட்ட வரும் ஃபீனிக்ஸ் பறவையே... வருக வருக..

டெர்ம் ஃபீஸ் கட்ட வரும் டெர்மினெட்டரே... வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்...

மந்த்லி டெஸ்ட் எழுத வரும் மகானே... வாங்க வாங்க

அர்ரியர்ஸ் எக்ஸாம் எழுத வரும் அறிஞரே.. நீவிர் நீடூழி வாழ்க...

சயன்ஸ் ப்ராக்டிகல்ஸுக்கு வருகை தரும் சமாதானப் புறாவே... வாழ்த்தி வணங்குகிறேன்...

கணக்கு பரிட்சையில் பாஸ் செய்த கலியுக வள்ளலே... உங்கள் தொண்டர்கள்...

எட்டாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்ற எட்டாவது அதிசயமே... பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...

தண்ணி குடிக்க வரும் தன்னிகரல்லா தலைவரே... சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

கடந்த கால வரலாறு படிக்கும் வருங்கால முதல்வரே... வாழ்க வாழ்க...

*****

Read more...

Tuesday, July 21, 2009

என் கவுஜக்கு மனசாட்சியின் உடனடி பதில்!!!

விகடன்
குமுதம்
குங்குமம்

எல்லாத்திலேயும்
ஒரே மாதிரியான
பேட்டிகள்,
செய்திகள்.

அட்டையைக்
கிழித்துவிட்டால்
எது எந்த
பத்திரிக்கைன்னு
தெரியாதாம்..

அட்டைக்குப் பதிலா
புத்தகத்தையே
கிழிச்சிட்டா...

நேரமும் மிச்சம்..
பணமும் மிச்சம்...

*****

சன்
ஜெயா
ராஜ்
சிரிப்பொலி
ஆதித்யா

எல்லாத்திலேயும்
ஒரே மாதிரியான
நகைச்சுவைக் காட்சிகள்,
பாடல்கள்,
விளம்பரங்கள்.

லோகோவைத்
தூக்கிட்டா
எது எந்த
சேனல்னு
தெரியாதாம்.

லோகோக்குப் பதிலா
டிவியையே
தூக்கிட்டா..



...




...




...




டிவியை தூக்கிடுவியா நீ?
மகனே..

அப்புறம் வீட்லே
தங்கமணி கையாலே
உனக்கு
டின்னுதாண்டி..

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP