Monday, October 28, 2019

கைப்பேசி வழிப்பறியா?


சமீபத்தில் ஒரு நாள், நங்கநல்லூரில், மணிரத்னம் / பிசிஸ்ரீராம் படக்காட்சி போல இருந்த, வெளிச்சம் குறைந்த ஒரு சாலையில், ரண்டக்க ரண்டக்க என்று மனதில் பாடியவாறு நடந்து கொண்டிருந்தேன்.

ஆள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. ஒரு மிக முக்கிய தொலைபேசி அழைப்பை (மோடி இல்லை. அதற்கு முந்தைய நாள்தான் அவருடன் பேசியிருந்தேன்) எதிர்பார்த்திருந்ததால், கைப்பேசியை கையிலேயே வைத்து, அடிக்கடி எடுத்து பார்த்தவாறு போனபோது, எதிரில் ஒரு ஸ்கூட்டரில் ஒரு பெண் வண்டி ஓட்ட, பின்னாடி ஒரு பையன் அமர்ந்து வந்தார். ஜானவாசக் கார் மாதிரி இது ஜானவாச ஸ்கூட்டர் போலன்னு நினைத்தேன். மிகவும் மெதுவாக ஓட்டி வந்த அந்தப் பெண், வெயிலும் இல்லையே, ஏன் இப்படி முழுக்க மூடியவாறு வண்டியை ஓட்டிப் போறாங்கன்னு நினைத்தவாறு - ரண்டக்க...

நம்மைக் கடந்து போகும்போது, அந்தப் பெண் ‘மொபைல்’னு கத்தியது கேட்டது. சரி, அவங்க மொபைல் விழுந்துடுச்சு போல; இல்லையே எதுவும் விழுந்த மாதிரி தெரியலையேன்னு நினைத்து, நான் ’பாட்டு’க்கு போயிட்டிருக்கேன். நமக்குப் பின்னால், ’க்றீச்’சென்று தரையில் கால்களை தேய்க்கும் சத்தமும் (அந்தப் பெண் வண்டியை நிறுத்தறாங்க!!), அந்தப் பையன் இறங்கி என் பின்னால் வரும் சத்தமும், எனக்கு முன்னால் அவனுடைய நிழலும் (முறையே) கேட்டது / தெரிந்தது.

இந்த இடத்தில் 5 நொடிகள் freeze பண்றோம். எவ்வளவு செய்திகளைப் படிக்கிறோம். கைப்பேசி வழிப்பறி நம் நண்பர்களுக்கே ஆகியிருக்கு என்னும் தகவல்களெல்லாம் நினைவுக்கு வர, *Freeze முடிந்தது* கையில் இருந்த கைப்பேசியை உடனடியாக பேண்ட் பாக்கெட்டில் போட்டுட்டேன்.

என்னைக் கடந்து, எனக்கு முன் ஓடிய அந்தப் பையனை, ஸ்கூட்டரில் வந்து அந்தப் பெண் வண்டியில் ஏற்றிப் போயிட்டார்.

கேள்விகள்:
* மொபைல்னு ஏன் கத்தினாங்க?
* கீழே விழுந்திருந்தா, அதைத் தேடியது போலவும் இல்லையே?
* வீட்டிலேயே மறந்துட்டு வந்ததற்கான எச்சரிக்கைன்னா, அந்தப் பையன் இறங்கி ஓடி வந்தது ஏன்?
* என் கைப்பேசியைப் பார்த்துதான் மொபைல்னு கத்தினாங்களா?
* அதைப் பறிக்கத்தான் அந்தப் பையன் ஓடிவந்தானா?

இப்படி பல சந்தேகங்கள்.

கைப்பேசி போயிருந்தாலாவது, வீட்டில் சொல்லி, ஒரு புது கைப்பேசிக்கு அனுமதி வாங்கி, வாங்கியிருப்பேன். அதுவும் இல்லை. இந்த காலத்து பசங்க, எதைத்தான் ஒழுங்கா செய்றாங்க?

ம்ஹும்.

***


Read more...

Sunday, July 7, 2019

பிறந்த நாள் வாழ்த்துகள்!!நண்பர்கள் / சொந்தக்காரர்கள் அப்படின்னு பல பேருக்கு தினம் தினம் பிறந்த நாள் / திருமண நாள்னு பல சிறப்பு நாட்கள் வருகின்றன. அதில் என்ன பிரச்னைன்றீங்களா? அதில் ஒண்ணும் பிரச்னையில்லை. அதுக்கு அந்தந்த வாட்சப் க்ரூப்பில் இருக்கும் பலர் வாழ்த்துகள் / வாழ்த்துக்கள்னு (அவங்கவங்க சார்புக்கேற்ப!!) வாழ்த்துவாங்க. சரி. இதில் என்ன பிரச்னைன்றீங்களா? ஹிஹி. இதிலும் ஒண்ணும் பிரச்னையில்லை. 

அப்போ எதுக்குடா இந்த பதிவுன்றீங்களா? விஷயத்துக்கு வர்றேன். இந்த வாழ்த்துக்கு  நன்றி சொல்றாங்க பாருங்க. அதுதான் விஷயம். 

இப்போ கல்யாண வீடுகளில் சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருப்போம். (சரி. மடங்களில் / கோயில்களில்!!). ஒரு இனிப்போ, பாயசமோ பரிமாறிக் கொண்டிருக்கும்போது, நமக்கு முன் இலைக்கு வரும்போது அது முடிஞ்சிடும். எடுத்துட்டு வர்றேங்கன்னு போவார். எடுத்துட்டும் வருவார். ஆனா, நம் இலையை விட்டுட்டு அடுத்த இலையிலிருந்து துவங்கிப் போயிடுவார். கேட்டால், ஒருவருக்கு ஒண்ணுதாங்க / ஒரு கரண்டிதாங்கன்னு சொன்னாலும் சொல்லிடுவாரோன்னு பக்கத்து இலையையே முறைச்சிப் பார்த்திருட்டிருப்போம். 

அதுபோலவே இந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்வதும். முதலில் நான் இதை கண்டுகொள்ளவில்லை. நான் வாழ்த்து சொல்றதோட என் கடமை முடிந்ததுன்னு விட்டுட்டு வந்துடுவேன். நன்றி சொல்றாங்களோ இல்லையோ பார்ப்பதில்லை. 

போன ஆண்டு ஒரு புதிய குழுவில் சேர்ந்திருந்தேன். சரி. பேரும் சொல்லிடறேன். துவக்கப்பள்ளி 1-5 வகுப்பில் கூடப் படித்தவர்கள். ஆண்/பெண் என வகுப்பில் அனைவரையும் ஒருவர் கண்டுபிடித்து சேர்த்திருந்தார். நான் சேர்ந்தபிறகு, இன்னும் ஓரிருவரே பாக்கின்னு சொல்லிட்டிருந்தாங்க. 

சேர்ந்த புதிதில் அனைத்து பிநா, திநாக்கும் பறந்து பறந்து வாழ்த்து சொல்லிட்டிருந்தேன். ஒரு முறை ஒருவர் யாரோ ஒரு பொண்ணுக்கு நன்றி சொல்ல மறந்துட்டாரு போல. டக்குன்னு ஒரு கமெண்ட் வந்துச்சு. ’ஏண்டா, புதுசா வந்தவங்க வாழ்த்துக்கு நன்றி சொல்லுவே, எங்களுக்கு சொல்ல மாட்டியா?’. வந்த வேகத்தில் கமெண்ட் டெலீட்டும் ஆயிட்டுச்சு. ஆனாலும் நான் படிச்சிட்டேன். 

அன்றிலிருந்து அந்த க்ரூப்பும் ம்யூட்டில் போயிடுச்சு. யாருடைய பிநாதிநா’க்கும் வாழ்த்து சொல்வதில்லை. ஆனா வேறு பல குடும்ப க்ரூப்களில் சொல்ல வேண்டிய கட்டாயம். அந்த பொண்ணு மாதிரி, நமக்கு நன்றி சொல்றாங்களான்னு பார்ப்போம்னு சும்மா பார்க்கத் துவங்கினேன். (தேவையில்லாத ஆணின்னு பிறகே புரிந்தது!!)

ட்விட்டரிலாவது மக்கள் DMல் நன்றி / ட்வீட்டை Like போல செய்திடுவார்கள். ஆனா நமக்குன்னு வாய்ச்சிருக்கிறாப்போல வாட்சப் க்ரூப்களில்:

* நாம வாழ்த்து சொல்வதற்கு முன் தனித்தனியாக அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருப்பவர், நமக்குப் பின் ‘அனைவருக்கும் மிக்க நன்றி’ன்னு முடிச்சிடுவார். நம்ம பேர் தனியா வராது. அவ்வ்..

* சுமார் 20-25 பேருக்கு தனித்தனியா நன்றி சொல்பவர், சரியாக நம்ம பேரை மட்டும் விட்டுடுவார். இது மட்டும் 3-4 தடவை நடந்திருக்கு. சரி, நாம நம் கடமையை செய்வோம் பலன் வேண்டாம்னு விட்டாச்சு. ம்ம்..

* நமக்கு முன் அனைவருக்கும் நன்றி சொல்பவர், நாம் சொன்னபின், காணாமலேயே போய்விடுவார். ஒன்லி அப்ளை நோ ரிப்ளை. சரி போகுது.

* ஓரிருமுறை நமக்கு மட்டும் நன்றின்னு சொல்லாமல், Sure / OK & இன்னபிற பதில்லாம் போடுவாங்க. அடேய்ஸ்.. எனக்கு மட்டும் ஏண்டா இப்படி...

இது மாதிரி பல வகைகள். ஓரிரு முறை நன்றிப்பான்னு தனியா குறிப்பிட்டும் பதில் போட்டிருக்காங்க. அதையும் சொல்லிடறேன். 

சரி இவ்ளோ சொல்றியே, உன் பிநாதிநா வாழ்த்துக்கு நீ நன்றி சொல்றியான்னு கேட்டா, ஹிஹி. என் பிநாதிநாவை நான் எங்கும் ரிஜிஸ்டர் செய்யவில்லை. FBயில் / ட்விட்டரில் வராது. ட்விட்டரில் ஒரே ஒருவர் மட்டும் நினைவில் வைத்து வாழ்த்துவார். 2 நாள் முன்னாடி அவருக்கும் ஒரு warning கொடுத்து, TLல் வாழ்த்த வேண்டாம்னு சொல்லிடுவேன். பிரச்னை சால்வ்ட். 

வெகு நெருங்கிய சொந்தங்கள் கூப்பிட்டு சொல்லிடுவாங்க. பிற சொந்தக்கார வாட்சப்பில் பலருக்கு என் பிநாதிநா நினைவிருந்தாலும் சரியா அந்தந்த நாட்களில் மறந்துடுவாங்க. பிறகு வேறொரு நாளில் நேரில் பார்த்தால் வாழ்த்திடுவாங்க. 

அவ்ளோதாங்க பதிவு. 
படித்த அனைவருக்கும் *தனித்தனியான* நன்றி.
வணக்கம்.

***

Read more...

Tuesday, May 21, 2019

10ம் வகுப்பு பிரச்னைகள்!


இந்தியாவுக்கு வரும்போது #மகளதிகாரத்தின் 4ம் வகுப்பு சேர்க்கைக்காக பள்ளிகள் தேடல் பிரச்னைகளைப் பற்றி எழுதிய மூன்று பதிவுகள் இங்கே. 


காலச்சக்கரம் கடகடன்னு உருண்டு இப்போ அவங்க 10வது வந்தாச்சு. இந்த வகுப்பில் வரும் பிரச்னைகள், அடுத்து 11க்கு வேறு பள்ளி பார்க்கணும். அதில் என்ன பிரச்னைகள்னு இங்கே பார்ப்போம். 

ட்யூஷன்:

9வது முடிந்த அடுத்த நாளிலிருந்தே பல நண்பர்கள் 10வதுக்கு ட்யூஷன் சேர்ந்துட்டாங்க. அவங்க கணிதத்தில் 3 பாடம் முடிச்சிட்டாங்க. கணினி முழுக்க கத்துக்கிட்டாச்சுன்னு ஒரே புலம்பல். அதெல்லாம் வேண்டாம். ஒழுங்கா விடுமுறையை எஞ்சமாய் பண்ணு. திட்டமிட்டபடி ஹரிபுத்தர் எல்லா புத்தகங்களும் படி / படங்களைப் பாரு. விடுமுறையில் கொடுத்த assignments மட்டும் முடிச்சா போதும். படிப்பது பிறகுன்னு சொல்லியாச்சு.

பள்ளி திறந்தபிறகு மறுபடி ட்யூஷனுக்கான peer pressure. சரி, ட்யூஷன் இல்லாமல் எவ்வளவு % எடுப்பே? ட்யூஷன் சேர்ந்தா எவ்வளவு கிடைக்கும்? இல்லாமல் 90% சேர்ந்தா 95%. சரி நமக்கு 90% போதும். என்ன வேணுமோ நானே சொல்லித் தர்றேன். Question Bank வாங்கிப் படிப்போம். சொல்லிக் கொடுக்கதானே பள்ளியில் வாத்திமாருங்க இருக்காங்க. எல்லாரின் வாட்சப் எண் வாங்கு. எந்நேரமும் சந்தேகம் இருந்தா கேட்பேன்னு (லார்ட் லபக் தாஸ்!!) சொல்லு. பிறகு பார்த்துக்கலாம்னு ட்யூஷன் பேச்சை நிறுத்தியாச்சு. 

வயலின்:

சாதாரண நாட்களிலேயே ஒரு நாளைக்கு 1மணி நேரம் வாசிக்க வைக்க படாதபாடு படுவோம். அதுவும் இப்போ Boardexam வேற. வயலின் வாசிக்க முடியுமா? வகுப்புக்கு போகமுடியுமான்னு பல கேள்விகள். என் கேள்வி. வயலின் வாசிப்பதால் எவ்வளவு % மார்க் போகும்?. அவர் பதில். வாசிக்கலேன்னா 95% வாசிச்சா 90%. போதும். 90% போதும். ஒழுங்கா வாசி.  இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. கிளம்பு, வயலின் வகுப்புக்குப் போகலாம்னு கிளப்பியாச்சு.

11வது:

இந்த பள்ளியில் 10வது வரைக்குமே உள்ளது. லுருவில் பெரும்பாலும் (அனைத்து?) பள்ளிகளிலும் இதே நிலைதான். 11வதுக்கு வேறொரு பள்ளி. அதுக்கு 10வது படிக்கும்போது அக்-நவம்பரில் போய் பேர் கொடுத்துட்டு (admission) வரணும். வெறும் பேர் மட்டும் கிடையாது, ஒரு நுழைவுத் தேர்வு எழுதிட்டு, token advance admission fees கட்டணும். ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ரூ.25,000. 

இப்போ மூன்று பள்ளிகளில் admission போடறோம்னு வைங்க, ரூ.75000 போச்சு. இதில் ஒரு பள்ளியில்தான் சேரப் போறோம். பாக்கி ரூ.50000 போயே போச்சு. நல்ல வியாபாரம் இல்லே!!. சரி ஒரே ஒரு பள்ளியில் மட்டும் register பண்ணுவோம்னா, பிறகு அங்கு நாம் கேட்கும் அறிவியல் பிரிவு கிடைக்கலேன்னா, வரலாறு / பொருளாதாரம்னு வேற ஏதாவது எடுக்கச் சொல்லிட்டா, பிடிக்காமல் படிக்க வேண்டியதாப் போயிடும்னு புலம்பல். சரி, இதுக்கு என்ன பண்றதுன்னு பார்ப்போம்னு சொல்லி வெச்சிருக்கு. 

Class test:

பள்ளி துவங்கி 2ம் நாளே class testஆம். அவ கூப்பிட்டு சொல்றா. நான் இப்ப படிக்கணுமே?. இப்போ நான். அதெப்படி இப்படி எதுவுமே சொல்லித் தராமல் test வைப்பாங்க. நாளைக்கு நான் வர்றேன் பள்ளிக்கு. டீச்சரைப் பார்த்து கேட்கறேன். இப்போ அவங்க. வேண்டாம். நானே பார்த்துக்கறேன். பல பேர் ட்யூஷன் போவதால், அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு அவங்க நினைச்சிருக்கலாம். எகொஇச? மறுபடி நான். அப்படி அவங்க test வெச்சி அதில் நீ ஒண்ணுமே எழுதலேன்னா பரவாயில்லை. நான் வந்து பிறகு பேசறேன்னு அடக்கியாச்சு. பிறகு அந்த testம் இல்லை. வசந்தியாம். 

அடுத்த அறிவுரை. இனி இந்த மாதிரி வசந்தியெல்லாம் பல வரலாம். எதையும் ஆராயாமல் நம்ப வேண்டாம். நம் இலக்கு boardexam மட்டும்தான். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதுக்கு மட்டும் படின்னு சொல்லி அடக்கியாச்சு. வரவர பள்ளி வகுப்புகளிலும் fakenews வசந்திகள் பரவ ஆரம்பிச்சிடுப்பா!!

இப்பதான் வருசம் துவங்கியிருக்கு. இன்னும் அடுத்த ஆண்டு தேர்வு வரும்முன் வேறு என்னென்ன பிரச்னைகள் வருமோ? அதுக்கு இன்னொரு பதிவுடன் வர்றேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். 

***

Read more...

Friday, January 26, 2018

Twitter Likes & RTs

Twitter Likes & RTs

Twitterல் Likeகள் Favஆக இருந்த காலத்தில் + நம் Favகள் அடுத்தவர்களின் TLல் வராமல் இருந்த காலத்தில், ‘இதை ஏன் Fav செய்திருக்கீங்க’ என்னும் கேள்வி ஒரு முறைகூட வந்ததில்லை. இத்தனைக்கும் அடுத்தவர் Fav Tlக்குள் போயும் பார்க்கமுடியும்.

ஆனால், எப்போ Fav என்பது Like ஆனதோ + நம் Likeகள் அடுத்தவர் TLல் வரத் துவங்கியதோ, அப்போதே கேள்விகளும் துவங்கிவிட்டன?

* இதை ஏன் Like செய்தீங்க?
* நீங்க இதை ஆதரிக்கிறீர்களா?
* உங்களுக்கு இது ஒப்புதல்தானா?
* தெரியாமல் Like செய்துட்டீங்களா?

அடியேன், ட்வீட்களை Like செய்வதற்கான காரணங்கள்.

1. பொதுவாக Likeஐ bookmarkகளாகவே பயன்படுத்துகிறேன். ஒரு காணொளி / fb சுட்டி இருக்கு. இப்போ படிக்க/பார்க்க முடியாது. பிறகு படிக்க/பார்க்கலாம்னு Like செய்துவைக்கிறேன். அந்த குறிப்பிட்ட ட்வீட், ஜாதி/மத/ரசிக/மாபியா/LGBT (இது ஒரு புதிய தலைப்பு!), இப்படி எந்த தலைப்பாகவும் இருக்கலாம். அந்தத் தலைப்பில் எந்தத் தரப்பாகவும் இருக்கலாம். பிறகு படித்துவிட்டு Unlike செய்துட்டாப் போச்சு. இது வெறும் அடியேனின் விருப்பம்தானே.

2. அடியேனைப் புகழ்ந்துவரும் (ம்கும்!!) ட்வீட்கள். காக்கைக்கும் தன் இது பொன் இதுன்ற மாதிரி இவை நிரந்தரமாக என் Likeல் இருக்கும்.

3. ஒரு Convoவை முடிப்பதற்காக + பதில் ஒன்றும் இல்லையென்றால் Like. இது அனைவரும் செய்வதே. இதெல்லாம் அடுத்தவர் Tlல் வந்தால், நான் என் செய்வது?

4. நம் காது ஆடும் ட்வீட்கள். அதாவது, கன்னட TLலிருந்து, மத்வ / ராகவேந்திர / ஹரிதாச ட்வீட்கள் இவையும் நிரந்தரமாக நம் Likeல் இருக்கலாம்.

இவ்வளவுதான் Like விஷயம். அடுத்து RT.

RT கண்டிப்பாக அனைவரின் Tlலும் வரும் என்பதால் இதில் கவனமாக இருக்கிறேன்.

1. சில விபுசி / நல்ல / தேவையான / பொதுஅறிவு வளர்க்கக்கூடிய (அப்படி ஏதாவது இருக்கா ட்விட்டரில்?!) ட்வீட்டுகளை RT செய்வது வழக்கம்.

2. குறிப்பிட்ட பிரிவினரை பழிக்கும் ட்வீட்கள் சில RT செய்து, தவறை உணர்ந்து, பின் அவற்றை RT செய்வதை விட்டுவிட்டேன்.

3. தமக்கு வரும் @களை எல்லாம் சிலர் RT செய்தவாறே இருப்பர். அடியேன் அப்படி செய்வதில்லை. (ம்கும்.. வர்ற 1-2 @க்கு இதுவேறயா).

4. வெறும் +ve ட்வீட்களை மட்டுமல்லாமல், சில -ve ட்வீட்களையும் RT செய்திருக்கிறேன். எனக்கு கருத்து இல்லையென்றாலும் / என்ன சொல்வதென்று தெரியாததாலும், நம் TLல் இருக்கும் சிலரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக செய்வது இது.

5. யாருடைய Tlஐயும் spam ஆக்கக்கூடாதுன்னு கவனம் செலுத்தறேன்.

அவ்வளவுதான். வேறு ஏதாவது சொல்றதுக்கு இருக்கா இதில்?

***


Read more...

Sunday, December 24, 2017

சொந்தங்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்...

சொந்தங்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்...


அமெரிக்காவில் இருந்தவரை, இந்தியாவில் நடக்கும் எந்தவொரு குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் வரவேண்டிய அவசியம் இருக்காது. அன்றைக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மட்டுமே. நீங்க மட்டும்தான் இங்கே இல்லை. We miss youன்னு இங்கேயிருந்து சொல்வாங்க. சரி சரின்னு அழைப்பை துண்டித்து, Seinfeld பார்க்க உட்கார்ந்துடுவோம். 

ஆனா, இந்தியா வந்தபிறகு நிலைமை வேற. நெருங்கிய / தூரத்து உறவினர்களின் சின்ன / பெரிய / மிகப்பெரிய நிகழ்ச்சிகளுக்கு (அவங்க கூப்பிட்டா!) போகவேண்டிய கட்டாயம். கூப்பிடாமல் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் போவதில்லைன்னு என் மாமனார் மேல் சத்தியம் செய்திருக்கேன். ஒரு வேளை கூப்பிட்டு போகாமல் இருந்துட்டா? அதைப் பற்றிய பேச்சு / பிரச்னை தனி. 

சரி, நீ உன் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி நடத்திருக்கியா? அதுக்கு எல்லாரையும் கூப்பிடுவியா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள்தானான்னு கேள்வி வரும். எல்லா கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் விடை காண்போம். மேலே (கீழே!) படிங்க. 

அது சரி, நெருங்கிய / தூரத்து சொந்தங்கள் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உன்னை கூப்பிடணும்னு அவசியம்தானான்னு கேட்பீங்க. மிகச்சரி. அவசியம் இல்லைதான். ஒரு திருமணம்னா, மாப்பிள்ளை, பொண்ணு & அந்த தாலி (அல்லது மோதிரம்) மட்டுமே இருக்கணும். நானெல்லாம் அநாவசியம் என்றே நினைப்பேன். ஆகவே, யாரும் கூப்பிடலேன்னா நமக்கு ஒன்றும் பிரச்னையில்லை. 

ஒரு கசின். மிகவும் நன்றாகவே பேசுவார். ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் பார்த்தால், நாள் முழுதும் பேசிக்கொண்டும் இருப்போம். ஆனால் அவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு நமக்கு அழைப்பு இருக்காது. ஏற்கனவே சொன்னாற்போல் நமக்கு ஒன்றும் பிரச்னையில்லை. அடுத்த சந்திப்பில் பார்க்கும்போது அவரும் நன்றாக பேசுவார், நானும். 

ஆனால், யாரேனும் என்னை அழைக்காமல் விட்டுவிட்டால் நமது இன்னொரு கசினுக்குப் பிடிக்காது. அவன் எப்படி உன்னை அழைக்காமல் விடலாம் என்று கிளம்பிவிடுவார். இவரும் நம் அண்ணன்தான். நல்லவர்தான். நம் வீட்டு நிகழ்ச்சிகளில் பற்பல உதவிகள் செய்தவர். நமக்கு அழைப்பு இல்லாத நிகழ்ச்சிகள் அவருக்கும் பிடிக்காது. அந்த நிகழ்ச்சி நடத்துபவரைக் கூப்பிட்டு, ஏன் இவனை மட்டும் கூப்பிடலை. இந்தா தொலைபேசி எண், கூப்பிடு அவனை என அவரிடம் சொல்லிவிடுவார். 

இது எப்படி எனக்குத் தெரியும்னா, ஒரு முறை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நமக்கு அழைப்பு இல்லை. எல்லாம் நன்மைக்கேன்னு நாம சும்மா இருந்தாச்சு. திருமணத்திற்கு 2 நாள் முன்னால், அந்த மாப்பிள்ளையின் தந்தை தொலைபேசியில் அழைத்து, தப்பா நினைக்காதே. உன்னை கூப்பிடாமல் விட்டுப்போச்சு. கட்டாயம் மகன் திருமணத்திற்கு வந்துடுன்னுட்டார். சரி, பெரியவரே கூப்பிட்டபிறகு போகாமல் இருக்கமுடியுமான்னு போய் 2 நாளும் விழாவை சிறப்பித்து வந்தாச்சு. பிறகு சில நாட்கள் கழித்து அவரை இன்னொரு இடத்தில் பார்த்தபோது - உன் (மேற்சொன்ன நல்ல அண்ணன்) உன்னைக் கூப்பிடச்சொல்லி 4முறை சொல்லிட்டான். ஆகவே உன்னை கூப்பிட்டேன் - என்றார். 

அன்றிலிருந்து ஒரே ஒரு வழிதான் பின்பற்றுவது. சொந்தங்களில் ஏதாவது நிகழ்ச்சி வந்து, நமக்கு அழைப்பு இல்லைன்னா, இந்த அண்ணனிடம் - அந்த கடைசி ஒரு வாரத்தில் - பேசக்கூடாதுன்ற முடிவு. உன்னை கூப்பிட்டாங்களான்னு இவர் கண்டிப்பா கேட்பார். அதன்பிறகு நடக்கப்போவதுதான் நமக்குத் தெரியுமே.

நிற்க. 

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரையில் சொந்த பந்தங்கள் அனைவருக்கும் நேரில் போய் பத்திரிக்கை கொடுப்பது நல்ல பழக்கம்தான். ஆனால் நேரமேயில்லாமல் அனைவரும் வேகமாக ஓடுகிற இந்த காலத்தில், இதெல்லாம் சரிப்படுமா? எனக்கு உறவினர் யாரேனும் தொலைபேசி, உங்க விலாசம் சொல்லுங்க, அந்தப்பக்கம் வந்து பத்திரிக்கை கொடுக்கணும்னு சொன்னால், நான் சொல்வது இதுதான். ”உங்களை வரவேண்டாம்னு சொல்லலை. தலைக்குமேல் உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும். பேசாமல் மின்னஞ்சலோ / வாட்சப்போ அனுப்பிவிடுங்க. நான் கண்டிப்பா வந்துடுவேன். சிரமம் வேண்டாம். எனக்குப் பிரச்னையில்லை”. சிலர் சரின்னு வாட்சப்பிடுவாங்க. அது போதும்னு நானும் போய் வந்துடுவேன். 

ஆனா, நமக்கு வாய்த்தவர்கள் அப்படியில்லை. ஒரு முறை அடியேன் செய்த புதுமனை புகுவிழா. அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய 2 வாரத்தில் நடத்த நிச்சயிக்கப்பட்டது. வந்தவுடன் ஒரு சிறிய அறுவை சிகிச்சை வேறு. ஒவ்வொருவருக்கா தொலைபேசத் துவங்கினேன். இந்த மாதிரி பிரச்னை, நீங்க கண்டிப்பா வந்துடணும். எல்லாமே சுமுகமா போயிட்டா பிறகு எப்படி? நம் தூரத்து உறவினர் ஒருவர் பிரச்னை செய்தார். ”நேரில் வந்து கூப்பிட்டாதான் வருவோம். என்ன மரியாதை தெரியாம இருக்கீங்க?”. ”சார், இந்த மாதிரி இந்த மாதிரி ஆகவே..”. ”நோ நோ. ரிஜட்டட்”. கடைசியில் நான் சொல்லிட்டேன். ”நீங்க பெரியவங்க. நான் என் பிரச்னையை சொல்லிட்டேன். பெரியவங்களா வந்து ஆசிர்வாதம் செய்ய முடிந்தா நல்லது. இல்லேன்னா அங்கேயிருந்தே சொல்லிடுங்க. நன்றி”ன்னு வெச்சிட்டேன். மனுசன் வந்தாரான்னு கேட்பீங்களே? ஹிஹி. ஆள் வரவில்லை. சரி விடுங்க. இதெல்லாம் ஜகஜம்தான்னு விட்டாச்சு. 

சரி கூப்பிட்ட மற்றவர்கள் வந்தாங்களான்னு கேட்டால், அது ஒரு தனி பிரச்னை. கேளுங்க. 

RSVP என்னும் மேட்டர் நம்ம மக்களுக்கு என்றைக்கும் தெரியப்போவதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்திருக்கு. நீங்க வர்றீங்களா இல்லையான்னு சொல்லணுமா வேண்டாமா? 500-600+ பேர் வரக்கூடிய திருமண நிகழ்ச்சிக்கு இந்த RSVP தேவையில்லை. ஆனா ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு?. 

ஒரு முறை நம் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். வெறும் 20 பேர்தான் சாப்பாட்டுக்கு. அதில் அழைக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் 6 பேர். கண்டிப்பா வந்துடுவோம் ஜமாய்ச்சிடலாம்னு சொன்னவங்க யாருமே நிகழ்ச்சிக்கு + சாப்பாட்டுக்கு வரவில்லை. நிகழ்ச்சி அவங்க வீட்டிற்கு பக்கத்து தெருவில்தான். இதனால் எனக்கு அவமரியாதை, அவமானம் இதெல்லாம் கிடையாது. மீந்து போகும் சாப்பாட்டிற்கு என்ன கதி? வரலைன்னு சொன்னா தப்பா நினைச்சிப்பாங்களோ? சரி வர்றோம்னு சொல்லிடுவோம். பிறகு போகவேண்டாம். அடேய். சாப்பாடு வீணாயிடும்னு நினைச்சிப் பாருங்கய்யா!!

மறுபடி நிற்க. நாம் செய்த சில குளறுபடிகளையும் சொல்றேன்.

ஒரு கசின் சகோதரி. அவருடைய கணவர் நம்மிடம் நல்லா ஜாலியா பேசுவார். ஒரு காலத்தில், அவருடைய வட்ட திருமணங்களுக்கெல்லாம் எனக்கு பத்திரிக்கை வந்துகொண்டிருந்தது. ஒரு முறை என்ன ஆச்சுன்னா, வீட்டில் இருந்த ஒரு பரிசை Giftwrap செய்து வைம்மா என்று அம்மாவிடம் சொல்ல, அவரும் செய்து வைக்க, நாமும் அதைப் போய் அவருடைய சகோதரரின் திருமணத்தில் கொடுத்துட்டு வந்தோம். ஓரிரு நாட்கள் கழித்துப் பார்த்தால், கொடுக்கணும்னு நினைத்த பரிசு இன்னும் வீட்டிலேயே இருந்தது. அப்படின்னா, நாம் அவருக்கு எதை Giftwrap செய்து கொடுத்தோம்?. கண்டுபிடிக்கவே முடியவில்லை.

சில நாட்கள் கழித்து இன்னொருவர் மூலம் தெரியவந்தது. நம் வீட்டில் பழைய audio cassetteகள் போட்டு வைக்கும் ஒரு டப்பா. தவறுதலாக அம்மா அதைக் கொண்டு போய் Giftwrap செய்துவர, அதையே கொடுத்திருக்கிறோம். மிகப்பெரிய தவறுதான். அடுத்த ஒரு மாதத்தில் அந்த கசினின் கணவரிடம் போய் மன்னிப்பு கேட்டு வந்தேன். ஆனால், தவறு தவறுதானே. நடந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்டாலும் இன்றுவரை அந்த கசின் கணவர் அதை மறக்கவில்லை. மறக்கக்கூடிய தவறா நாம் செய்திருக்கிறோம்?.

வேறொரு நிகழ்ச்சி. இதே போல் இன்னொரு கசின் சகோதரி. அவர் கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். நம் வீட்டு நிகழ்ச்சி. கசின் & அவர் கணவரைக் கூப்பிடணும். நான் என்ன செய்தேன்னா, கசின் கணவருடன் பேசிவிட்டு, அவர் பெயரிலேயே பத்திரிக்கையை அனுப்பிட்டேன். ஆனால் நிகழ்ச்சிக்கு அவர்கள் இருவரும் வரவில்லை. என்னடான்னா, வீட்டில் என் அப்பா அம்மா இருக்காங்க. அவர்களையும் கூப்பிட்டு, அவர்கள் பெயரிலேயே பத்திரிக்கை கொடுத்திருக்கணும். அப்படி குடுக்காததால் நான் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லைன்னு இன்னொருவர் மூலமாக சொல்லியனுப்பினார். 

நான் கசின் சகோதரியை கூப்பிடணும். கணவருடன் இருக்காருன்னு அவரை கூப்பிட்டேன். அடுத்து அவர் வீட்டில் அனைவரையும் கூப்பிடணும்னா அது முடியுமா? நாம் செய்தது ஒரு சிறிய நிகழ்ச்சி. வந்தா வரட்டும் வரலேன்னா போகட்டும் நான் சொல்லிட்டேன். செய்தது சரியா தவறான்னு தெரியல. வழக்கம்போல் நம் வீட்டில் சிலர் அது தவறுன்னும் சிலர் அது சரிதான்னு சொல்லிட்டிருந்தாங்க. சரி விடுங்க. 

இன்னொரு சம்பவம். நம் வீட்டுத் திருமணம். சொந்தங்களை ரெயில் / பேருந்து நிலையங்களிலிருந்து கூட்டி வர / கொண்டு போய் விட என்று ஒரு Vanஐ இரு நாட்களுக்கும் நிறுத்தி வைத்திருந்தேன். Transport-In-charge என்று ஒரு கசினையும் நியமித்து வண்டி வேணும்னா இவரைத் தொடர்பு கொள்ளவும் என்று அனைவருக்கும் சொல்லியிருந்தேன். முந்தைய நாள் இரவு ஒரு குழு வண்டி எடுத்துப் போயிருக்க, இன்னொரு உறவினர் குழு வண்டி இல்லை என்று கோபித்துக் கொண்டனர். இந்த கசின் நம்மிடம் சொல்லாமல் பிரச்னையை தீர்க்கப் பார்க்க, பிரச்னை தீரவில்லை. நாளை நாங்கள் திருமணத்திற்கு வரமாட்டோம்னு சண்டை போட்டு அந்தக் குழுவினர் போய்விட்டனர். பிறகு வந்தாங்கன்றது வேறு விஷயம். இந்த பிரச்னை தெரிந்து, திருமணம் ஆன ஒரு வாரத்தில், அந்த குழுத்தலைவருக்கு தொலைபேசி நான் மன்னிப்பு கேட்டேன். இதுவும் நம் தப்புதான். எல்லாம் ஒரு படிப்பினைதானே?

ஒரு தூரத்து சொந்தம். பல நாள் கழித்து ஒரு நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. சந்தோஷமா போய் சாப்பிட்டு(!!) வந்தாச்சு. ஓர் ஆண்டுக்குப் பிறகு அவங்க வீட்டிலேயே இன்னொரு நிகழ்ச்சி (புமபுவி) வந்தது. அதற்கு நமக்கு அழைப்பில்லை. அது பரவாயில்லை. ஆனால், சில நாட்கள் கழித்து அந்த புது வீட்டிற்கே நாம் போக வேண்டிய நிலைமை. அப்போது அவங்க சொல்லிட்டாங்க. ”சாரிப்பா. உன்னை இந்த வீட்டு புமபுவி’க்கு கூப்பிடலை. மறந்துபோச்சு”. நானும் “அச்சச்சோ. சாரி எல்லாம் எதுக்கு? ஒண்ணும் பிரச்னையில்லை. இன்னும் கட்டப்போற அடுத்தடுத்த வீடுகளுக்கு மறந்துடாதீங்க”ன்னு ஒரு மொக்கை ஜோக் அடிச்சி நான் (மட்டும்!) சிரிச்சாச்சு. ஆனா பக்கத்தில் இருந்த ஒரு கசின் விடுவாரா? “ஆமா நீங்க போன ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டீங்க. இந்த நிகழ்ச்சிக்கு இவனை கூப்பிடலைன்னு என்னிடம் சொல்லி வருத்தப்பட்டான்”ன்னு சும்மா அடிச்சி விட்டுட்டாரு. நமக்கு வாய்த்த கசின்கள் இப்படிப்பட்ட ரகம். என்னத்த செய்றது. 

தன் வீட்டில் எந்த நிகழ்ச்சிக்கும் நம்மைக் கூப்பிடாத கசின் ஒரு முறை என்னிடம் - ”என்னடா, கூப்பிட்டாதான் நிகழ்ச்சிக்கெல்லாம் வருவியா? நாம அப்படிதான் பழகியிருக்கோமா?” என்றெல்லாம் கேட்டார். சாதாரண நாள் என்றால் யார் வீட்டிற்கும் போவதற்கு தயங்காதவன் நான். வெறுமனே தொலைபேசிவிட்டு, ஒரு நல்ல காபி வேணும். வீட்டில் இருப்பீங்களா. இதோ வர்றேன்னு சொல்லி பல முறை பலர் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். ஆனா திருமணம், புமபுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு? அவரிடம் நான் சொல்ல நினைத்தது - “அடேய். நான் என் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டும் நீங்க யாரும் வரவில்லை. பிறகு நிகழ்ச்சி எப்படி நடந்ததுன்னும் கேட்கவில்லை. அப்படியிருக்கும்போது கூப்பிடாமல் யார் வருவாங்க சொல்லு”. ஆனால் வழக்கம்போல் இதைக் கேட்கவில்லை. 

இவ்வளவு பேசிவிட்டு ‘மொய்’ மறந்துட்டேன் பாருங்க. மக்கள் இந்த மொய் விஷயத்தில் ஏன் இவ்வளவு டென்சன் ஆகுறாங்கன்றது நமக்கு என்றைக்கும் புரியாத விஷயம். அவன் திருமணத்தில் அவன் எனக்கு இவ்வளவுதான் / இதுதான் கொடுத்தான். அதனால் நானும் இவ்வளவுதான் கொடுப்பேன். அவன் சக்திக்கு எவ்வளவோ கொடுக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. திருமணங்கள் / நிகழ்ச்சிகள் முடிந்தும் எப்போதும் ஓயாத பேச்சுன்னா அது மொய் பற்றியதுதான். 

ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு / பத்திரிக்கை வருது. தவிர்க்க முடியாத காரணங்களால் நம்மால் போகமுடியவில்லை. அந்த சமயத்தில், மொய் மட்டும் யாரிடமாவது கொடுத்து அனுப்பணுமா? இதற்கு நம் சொந்தங்கள் பலர் சொல்லும் பதில் - யெஸ். நீ வரலேன்னாலும் பரவாயில்லை. மொய் கொடுத்து அனுப்பு. என் கேள்வி - ஏன்?. நான் போகாத நிகழ்ச்சிகளுக்கு நான் மொய் / பரிசு கொடுப்பதில்லை. தகராறு ஆனா ஆகட்டும்னு விட்டுடறது. மிடியல. 

இப்போதைக்கு இங்கே நிறுத்திக்குவோம். சொல்வதற்கு இன்னும் பற்பல சம்பவங்கள் இருப்பதால், அடுத்த பாகம் வந்தாலும் வரும்.

***

Read more...

Thursday, September 21, 2017

சென்னை - பயணக் குறிப்புகள்

சென்னை - பயணக் குறிப்புகள்

திருச்சி கல்யாணத்துக்கு (கபடி விளையாட) நான் வேணா போறேனேன்னு விஜய் சொல்வதுபோல், எந்த ஒரு சின்ன வேலை இருந்தாலும், சென்னைதானே (எந்த ஏரியாவா இருந்தாலும் ஒரு ரவுண்ட் திருவல்லிக்கேணி போயிடலாம்னுதான்!!) நான் போறேன்னு கிளம்பிடுவேன். ஆகவே இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது சென்னை வந்து போய்விடுவது வழக்கம். 

சென்ற ஞாயிறும் இப்படிதான் (சில ஆண்டுகள் கழித்து) பிருந்தாவனில் கிளம்பிப் போனேன். வீட்டிலிருந்து ரெயில் நிலையம் BMTCல் போகும்போதே பிரச்னை துவங்கிடுச்சு. பேருந்தில் யாருடையதோ பணத்தை pickpocket அடிச்சிட்டாங்களாம். ஒரே கூச்சல். பேருந்தை காவல் நிலையத்துக்கு விடுங்கன்னு சத்தம். போக 2.50, வர 2.50, சாப்பிட தயிர் சாதம்னு த்ரிஷா ஆண்டி சொல்வதைப் போல், போக வர SMS ticket, ரெயிலில் சாப்பிட உப்புமா இதைத்தவிர சில சில்லறை மட்டுமே வைத்திருந்த நான், மறுபடி இன்னொரு பேருந்து பிடிக்கணுமா, காசு இருக்கான்னு பார்க்க நினைக்கையில் - பிரச்னை எப்படியோ தீர்வாகி வண்டி சரியாக ரெயில் நிலையத்துக்குப் போயிடுச்சு. 

பிருந்தாவனில் பயணம் <எப்படி இருக்கும்னு மக்கள் நினைப்பது>பிருந்தாவனில் பயணம் <நிஜமாக எப்படி இருக்கும்>


பயணிகளை விட அதிகமாக இருக்கும் வியாபாரிகளை வேடிக்கை மட்டுமே பார்த்து - காதில் தாசர் பாடல்களுடன் சென்னை போய் சேர்ந்தாச்சு. 

விடியலில், திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் & கடற்கரையில் ஒரு நடைப்பயிற்சி. பின்னர் ஒரு சில மடங்கள், கோயில்கள். மாலையில் பாரதி சாலையில் பழைய புத்தகக் கடைகளை ஒரு சுற்று பார்த்துவிட்டு, climaxஆக மீசைக்காரர் கோயில். இதற்கு நடுவே எந்த வேலைக்கு (விழாவிற்கு) சென்றோமோ அங்கே போய் தலைமை தாங்குவது - இதுவே நம் பொதுவான அட்டவணை. கோயிலில் புளியோதரை & வேறு ஏதாச்சும் வாங்கி சாப்பிடுவது பற்றிய தகவல் இங்கு தேவையில்லாதது.

நாம் முன்னர் இருந்த தெருக்களில் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள் இருந்த தெருக்களில் (யாருன்னு கேட்டு பழைய autographகளை கிளறக்கூடாது!) சுற்றும்போது - cinema paradiso படத்தில் 30 ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு வரும் Directorஐ பழைய முகங்கள் பார்த்து அடையாளம் கொள்ளும் - அதே போல் நம்மையும் ஓரிருவர் பார்த்து சிரித்தால் (ஹாஹான்னு இல்லை. சும்மா புன்னகை மட்டுமே), நமக்கு ஒரு திருப்தி. 

கோயிலுக்குப் போய்வருவது ஒரு நண்பர் வீட்டிற்குப் போவதுபோல். என்ன, அடியேன் மகளோடு மட்டும் அங்கு போகமுடியாது. என்ன பிரச்னைன்றீங்களா? சென்ற கோடையில் இருவரும் கோயிலுக்குப் போய் மீசைக்காரரை பார்த்துவிட்டு வந்தபிறகு, பங்கேற்கப் போயிருந்த விழாவில் அனைவரிடமும் - அப்பா, கோயிலில் அழுகிறாரு. இனி அவரோடு கோயிலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவரை (மட்டும்) பார்த்தா அது தானா வருது. நான் என்ன செய்ய? 

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கும் இடம் ஆகையால் மாடுகள் ரொம்ப அதிகமா இருக்குன்னு சொல்வாங்க. சாணிகளை ஓரமா போய் போடுங்கன்னும் அவைகளிடம் சொல்ல முடியாது. ஆகவே எல்லா தெருக்களிலும் மாடுகள் மற்றும் சாணிகள். இதுகூட ஓகேதான்(?!?). ஆனா இந்த மனுசங்க போடுற குப்பைகளையாவது ஓரமா / தொட்டியில் போடலாமே? ம்ஹும். எங்கு பார்த்தாலும் குப்பைதான். கோயில் விழா / ரதம் ஆகிய நாட்களில் மட்டுமே சுத்தம் / ப்ளீச்சிங் பவுடர் போலிருக்கு. 

திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் சுற்றியபோது கவனித்த இன்னொரு விஷயம். ஏகப்பட்ட மருத்துவர்கள் / மருத்துவமனைகள். மழை பெய்துகொண்டிருந்த அன்றைய விடியலில் ஏதாவது ஒரு மருத்துவர் கிடைத்திருந்தால் / மருத்துவமனை திறந்திருந்தால், தங்க நேரத்தை (Golden hour) தவறவிட்ட அடியேன் தந்தையாரை காப்பாற்றியிருக்கலாம். ம்ம்.

***


Read more...

Saturday, September 9, 2017

நானே நானா.. தனியாதான் பேசுறேனா..


நானே நானா.. தனியாதான் பேசுறேனா..

ட்விட்டரில் 3599 பேர் நம்மை பின்தொடர்ந்தாலும், 5க்கும் குறைவான ஆட்களே நம்மிடம் தொடர்ந்து பேசுவாங்க. மற்றவர்கள் ம்யூட்டில் போட்டு வைத்திருப்பார்கள்னு நம்புறேன். #BlockNarendraModi போல #MuteChPaiyanன்னு இதுவரை tag பார்த்ததில்லை. இது பிரச்னையில்லை. நிஜவாழ்க்கையிலும் நம் பேச்சை யாரும் கேட்பதேயில்லைன்னு நினைக்கிறேன்.

அட, எல்லார் வீட்டிலும் இதே பிரச்னைதான்பா. யார் வீட்டில்தான் குடும்பத்தலைவர் (ரேசன் அட்டையின்படி!!) பேச்சை கேட்குறாங்க? ம்ம். அதுவும் பிரச்னையில்லை. குடும்பத்துக்கு வெளியில் - உறவினர், நண்பர்கள் ஆகியோர் (எல்லாரும் அல்ல, பெரும்பாலும்) நாம் பேசறதைக் காது குடுத்து கேட்குறாங்களா இல்லையான்னே தெரிய மாட்டேங்குது.

அது எப்படி உனக்குத் தெரியும்ன்னு கேட்டா, சில பல உதாரணங்களைத் தர்றேன் பாருங்க. 

நம் சொந்தக்கார் ஒருத்தர். போன வாரம் நடந்த அண்ணன் பெண் திருமணத்தில் பார்த்தவர் - உனக்கு கன்னடம் எழுதப் படிக்க தெரியுமான்னார். அடியேனைப் பார்த்து அவர் இந்தக் கேள்வியைக் கேட்டது - கடந்த 4 ஆண்டுகளில் இது சுமார் 10வது முறை. செம கடுப்பு. முதலில் ஆமாங்க. தெரியும்னு சொல்ல ஆரம்பிச்சி - பிறகு ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இதே கேள்வியால் கோபப்பட்டு - அந்த சமயத்தில் என்ன பதில் தோணுதோ அதைச் சொல்லத் துவங்கிவிட்டேன். 

சரி வயசானவர்னு இவரை மன்னித்து விட்டால், நம் சமகாலத்திய வாலிப வயதில் (சிரிக்க வேண்டாம்!) உள்ள ஆபீஸ் நண்பர்களும் அப்படிதான். முன் தின மாலைதான் சொல்லியிருப்பேன். அடுத்த நாள் நான் வர மாட்டேன். லீவ். அடுத்த நாள் காலை 9 மணிக்கு சரியாக அழைப்பு வரும். ஏன்பா பேருந்தில் வரலை? பைக்கில் வரியா? மறுபடி விளக்கவேண்டியிருக்கும். நான் இன்னிக்கு லீவ். 

சரி வாலிப வயதில்தான் இப்படி, சின்ன பசங்களாவது நாம் சொல்றதைக் கேட்கிறாங்களான்னா, அதுவும் இல்லை. 

பெரிய அண்ணன் பையர் ஒருத்தர். 30 வயதிருக்கும். நாங்க ஊரிலிருந்து (அமெரிக்காவிலிருந்து) வந்து சென்னையில் ஒரு 3-4 மாதம் இருந்து, இப்போ பெங்களூர் வந்து 5 ஆண்டுகள் ஆயிடுச்சு. எப்போ திருவல்லிக்கேணி போனாலும், அந்த அண்ணன் வீட்டிற்குப் போய் ஒரு காபி (ஹிஹி) குடிச்சிட்டு வருவது வழக்கம். 

அப்போ அந்தப் பையர் கேட்பார் - நங்கநல்லூரில்தானே இருக்கீங்க? தண்ணீர் பிரச்னை இல்லையே? முதல் 2-3 முறை சொல்லிப் பார்த்தேன். இல்லப்பா, நாங்க லுரு போய் நாளாச்சு. இங்க இல்ல. பையர் நம் பேச்சைக் கேட்பதாகவே தெரியல. அடுத்தடுத்த முறையும் அதே கேள்விதான். இப்பல்லாம் நான் மறுப்பு சொல்றதில்லை. ஆமாம்பா நங்கநல்லூர்தான். அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வா. 

கண்டகண்ட தகவல்களை நாம்தான் நினைவில் வைத்திருக்கிறோமோ? (படையப்பாவில் ரஜினிக்கு எதிரே கால் மேல் கால் போட்டு உட்காரும் அந்த நடிகை பெயர் என்னன்னு கேட்கக்கூடாது) மற்றவர்கள் மேலே சொன்னாற்போல் தேவையானவற்றை மட்டுமே கேட்டு (அல்லது கேட்ட மாதிரி நடித்து) - கவனத்தை எப்போதும் எங்கேயோ வைத்து சுற்றுகிறார்களோ எனத் தோன்றுகிறது. இதில் வயது வித்தியாசம் கிடையாது. 

இவ்வளவு உதாரணங்களுப் பிறகு, இப்பல்லாம் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை (நம்புங்க!). அப்படி பேசினாலும், 

* அவங்க தன் கைப்பேசியைப் பார்த்தாலோ
* வேறெங்கோ நோட்டம் விட்டாலோ
* கொட்டாவி விட்டாலோ
* கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டாலோ

பேச்சை நிறுத்தி / அங்கிருந்து நகர்ந்து விடுவது வழக்கமாக்கிட்டேன். 

சரி நீங்களாவது ஒழுங்கா படிச்சீங்களா - இல்லே, முதல் பாராவிலிருந்து நேரா ஜம்ப் அடிச்சி கடைசி பாராக்கு வந்துட்டீங்களா? 

ஓம் சாந்தி.

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP