Showing posts with label தர நிர்ணயம். Show all posts
Showing posts with label தர நிர்ணயம். Show all posts

Tuesday, July 29, 2014

ஓடிட்டிங் குறுங்கதைகள் : பகுதி ஒன்று.


மென்பொருள் துறையில் ஓடிட்டிங் (இனிமேல் தணிக்கை) பிரிவில் சிலபல ஆண்டுகளாக வேலை செய்ததில் பலரை சந்தித்து பேட்டி கண்ட அனுபவங்கள் சிலவற்றை சொல்லலாம்னு...

முதலில், அதிகம் பேசும் ப்ராஜெக்ட் மேனேஜர்கள்.

ஒரு ஸ்டாம்பை வடிவேலு காட்டியதும், இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வரை பேசும் மேனேஜர் சீனா போல், நம்மகிட்டே யாராவது பேசமாட்டாங்களான்னு சில PMs காத்திருப்பாங்க. அந்த சமயம் பார்த்து நாம (தணிக்கையாளர்) போய் மாட்டினா, அவ்வளவுதான். பேசிப் பேசியே நேரத்தை கழிச்சிடுவாங்க. நாமதான் சூதானமா இருந்து அப்பப்போ ‘Cut. Fast forward’லாம் சொல்லணும்.

உதாரணத்திற்கு: தணிக்கையில் முதல் கேள்வியாக - உங்க ப்ராஜெக்டைப் பற்றி ஓரிரு நிமிடங்களில் நல்லா விளக்கி சொல்லுங்கன்னு சொன்னா போதும். ஆதௌ கீர்த்தனாம்பரதரத்தில்னு ஆரம்பிச்சிடுவாங்க சில PMs.

1857ல் முதல் சுதந்தரப் போர் துவங்கியபோது என்ன நடந்ததுன்னா...

கட் கட்.. அவ்ளோ தூரம் போகவேண்டாம். இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வாங்க..

1889ல் நம்ம நேரு பிறந்தபோது...

சார் சார். இன்னும் கொஞ்சம் இறக்கம் காட்டுங்க...

1919ல் ஜாலியன் வாலா பாக் சம்பவத்தில்..

நோ நோ..

1947ல் இந்திய சுதந்தரம்?

இன்னும்..

1991ல் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு..

பக்கத்துலே வந்துட்டீங்க..

2002?

அய்யய்யோ. அந்த வருடம் மட்டும் வேண்டாம். மேலே மேலே

2014ல் பொதுத் தேர்தல் நடந்தபோது...

யெஸ். அதிலிருந்து வாங்கன்னு கதைச்சுருக்கத்தைக் கேட்டு தணிக்கையைத் தொடர வேண்டியிருக்கும்.

இரண்டு மார்க் கேள்விக்கு இரண்டு பக்கங்களில் எதையாவது எழுதி ரொப்பும் பசங்களைப் போலவே இவங்களும் அதிகமா பேசுவாங்க. 50+ கேள்விகள். 2 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய தணிக்கையை இவங்க பேசிப்பேசியே 3 மணி நேரத்துக்கு இழுத்துடுவாங்க. தேவையில்லாத இந்த தகவல் மழையினால், நமக்குத் தேவையான சில முக்கியமான தகவல்களை விட்டுவிடக்கூடிய அபாயம் இருப்பதால், அவங்க பேச்சையும் கவனத்துடன் கேட்கவேண்டிய கட்டாயம் வந்துடும். அதனால்தான் மேலே சொன்னதெல்லாம்...

இதுக்கு எதிர்ப்பதமாய் வேறு சிலர் இருப்பாங்க... வாயைத் திறந்து நம்ம கையை விட்டு பதிலை இழுக்க வேண்டியிருக்கும். அவர்களைப் பற்றியும் மற்றும் சில சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும் அடுத்தடுத்த பதிவுகளில்...

***

Read more...

Monday, January 10, 2011

ISO 9000 - நானே கேள்வி நானே பதில்!

ISO - ஒரு முன்குறிப்பு?

** ISOவின் விருவாக்கம் - 'International Organization for Standardization'.
** உலகளவில் செந்தரங்களை உருவாக்குவதற்காக ஜெனிவாவில் 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
** 1987ம் ஆண்டு முதல் ISO 9000௦௦௦ செந்தரங்கள் உருவானது.
** 1994, 2000, 2008 ஆண்டுகளில் அந்த செந்தரங்கள் மேம்படுத்தப்பட்டன.

ISO 9000 - யாருக்கெல்லாம் பொருந்தும்?

** தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும். அதாவது சோப்பு டப்பாவிலிருந்து விமானம் வரைக்கும் தயாரிக்கும் அனைவருக்கும் ISO பொருந்தும்.
** மென்பொருள் நிறுவனங்களும் "Product" தயாரிப்பதால் அவர்களுக்கும் பொருந்தும்.
** இதைத்தவிர, (தகவல், தொழில்நுட்ப) சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கும் ISO பொருந்தும்.

ISO 9000, 9001, - இவை இரண்டும் ஒன்றுதானா? வெவ்வேறா? 9000ஐப் போல் இன்னும் என்னென்ன சான்றிதழ்கள் உள்ளன?

ISO 9000 குடும்பத்தில் சில கிளைகள் உள்ளன.

** ISO 9000 - Fundamentals and Vocabulary
** ISo 9001 - QMS - Requirements
** ISO 9004 - QMS - Guidelines for performance improvements

நிறுவனங்கள் இந்த 3 கிளைகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்ற வேண்டிய அவசியம் இருந்தாலும், 9001க்குதான் சான்றிதழ் கொடுப்பார்கள்.

9000௦௦௦ஐப் போல் இன்னும் பல சான்றிதழ்கள் உள்ளன. அவற்றில் சில:

** ISO 14000 - Environment Management Systems
** ISO 15000 - Hazards Analysis and Critical Control Point
** ISO 18000 - Occupational Health and Safety Management

ISO 9001ஐ ஒரு நிறுவனத்தில் எப்படி நிறைவேற்றுவது (implement)?

** மேற்கூறிய 9000, 9001 மற்றும் 9004ல் கூறப்பட்டுள்ள முறைகளை நன்கு படித்து தெரிந்து கொள்ளவேண்டும்.

** நம் நிறுவனத்தின் நடவடிக்கைகள், முறைநெறிகளை நன்று அறிந்து கொண்டு அதை, 9001ல் கூறப்பட்டுள்ள தேவைகளுக்கேற்ப பொருத்த வேண்டும். இந்த வேலைதான் இந்த சான்றிதழ் வாங்கும் வேலையில் மிகவும் கடினமானதும், மிகுந்த நேரம் தேவைப்படும் வேலையுமாகும்.

** அப்படி 9001ல் கூறப்பட்டுள்ள சில விதிமுறைகள் நம் நிறுவனத்திற்கு பொருந்தாது போனால், ஏன் பொருந்தாது என்ற காரணங்களை (exclusions) தனியாக ஆவணப்படுத்த வேண்டும்.

** மேற்கூறிய பொருந்தி வந்த நடவடிக்கைகளை, முறைநெறிகளை நம் நிறுவனத்தில் சரியாக நிறைவேற்ற வேண்டும் (Implement).

** இந்த நிறைவேற்றம் திருப்திகரமாக இருக்குன்னு நினைத்தாலோ, அல்லது நிறுவனத்தில் அனைவருக்கும் ISOவில் பயிற்சி தேவைப்படுமென்று நினைத்தாலோ, சான்றிதழுக்கு பரிந்துரைக்கும் நிறுவனங்கள் ஏதேனுமொன்றை தொடர்பு கொள்ளலாம்.

** அப்படி வரும் நிறுவனங்கள், நம் நிறுவனத்தின் முறைநெறிகளை தணிக்கை செய்து, அதன் வெளியீட்டைப் பொறுத்து மேற்கொண்டு நடவடிக்கைகளை பரிந்துரைப்பார்கள்.

ஒரு தடவை ISO 9001 தரச்சான்றிதழை வாங்கிட்டா, அப்புறம்?

** தரம் - எப்படி ஒரு தரம் (தடவை) மட்டும் செய்யும் வேலையில்லையோ, அதே போல்தான் தரச்சான்றிழும்.

** ISOவைப் பொறுத்தவரை, தணிக்கைகள் ஒவ்வொரு வருடமும் செய்யப்பட வேண்டும்.

** அந்த தணிக்கையில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால், உடனடியாக அவை களையப்பட வேண்டும்.

ISOவின் நன்மைகள் என்னென்ன?

இந்த நன்மைகளை நாம் ஏற்கனவே நிறைய தடவை பாத்துட்டோம். இருந்தாலும் இன்னொரு தடவை இங்கே.

** நம் முறை நெறிகளின் வெளியீட்டின் தரம் உயரும்.
** வாடிக்கையாளரின் திருப்தி அதிகரிப்பு.
** சட்ட / ஒழுங்குமுறைகளின் தேவைகள் நிறைவேற்றம்.
** ஒட்டுமொத்த மேலாண்மையில் முன்னேற்றம்.

*****

Read more...

Sunday, January 9, 2011

கழுகுப் பார்வை - தர நிர்ணயம் - பகுதி 5


கீழே இருக்கிற படத்தை ஒரு தடவை பாத்துடுங்க. ஒரு கட்டிடம் மாதிரி தெரியுதா. ஒரு அடித்தளம்; நான்கு தூண்கள்; ஒரு கூரை இருக்குதா. இதுதான் 'தர'த்தின் கழுகுப்பார்வை.

ஒரு நிறுவனத்தின் அடித்தளம், அதனுடைய 'தர மேலாண் அமைப்பு'தான். அந்த அமைப்பை சரியா நிறுவியிருக்கோமான்னு அடிக்கடி பாத்துக்கதான் ISO, CMMi போன்ற வழிமுறைகள் இருக்கு.

அடுத்து நான்கு தூண்கள். நம்ம தரத்தை தொடர்ச்சியா எப்படி முன்னேற்றலாம்னா இந்த நான்கு தூண்களை வெச்சித்தான்.

(1) Tools - நமக்குத் தேவையான மென்பொருட்களை தயாரித்தோ, சந்தையில் வாங்கியோ பயன்படுத்தினால், நம் வேலைகள் சுலபமாவதோடு வெளியீடுகளிலுள்ள வேறுபாட்டையும் களையலாம்.

(2) Six Sigma - தவறுகள் எதனால் ஏற்படுதுன்னு கண்டுபிடித்து அவற்றை குறைக்க வழி செய்யும் ஒரு முறைதான் இது. புள்ளியியல் (Statistics) முறைகளைப் பயன்படுத்தி மாறும் தன்மையை (Variation) கண்டுபிடிக்கும் இந்த முறை மோட்டரோலா நிறுவனம் கண்டுபிடித்ததாகும்.

(3) Training - புதிய தொழில்நுட்பமோ, மென்பொருட்களோ அல்லது ஏற்கனவே இருக்கும் முறைவழிகளில் (Process) மாற்றங்களோ, எதுவாக இருந்தாலும் - பணியாளர்களுக்கு பயிற்சி அவசியமாகும். இதனால் தவறுகள் குறைவதோடு, தரமும் மேம்படும்.

(4) Metrics - தரத்தில் நாம முன்னேறுகிறோமா இல்லையான்னு பார்க்க எல்லா நிறுவனங்களிலும் நிறை பகுப்பாய்வு (Quantitative Analysis) செய்வார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் மெட்ரிக்ஸ். உதாரணத்துக்கு : Defect variance, Effort variance. இதுக்கெல்லாம் நிறுவனத்தில் ஒரு இலக்கை நிர்ணயித்து - இந்த மெட்ரிக்ஸ் மூலமாக அந்த இலக்கை எட்டுகிறோமா இல்லையான்னு பார்ப்பார்கள்.

இந்த நான்கு தூண்களின் உதவியுடன் பொருட்களின் தரத்தை மேன்மேலும் உயர்த்திக் கொள்ள முடியும்.

இப்போ அடுத்து இன்னொரு படத்தை பாருங்க.


தர மேலாண் அமைப்பில் என்னென்ன இருக்கணும்னு சொல்றதுதான் இந்த படம்.

கீழிருந்து மேலாக:

1. பொருளை உற்பத்தி செய்வதிலுள்ள பல்வேறு நிலைகளை எப்படி செய்வதுன்ற முறைவழிகளை (Process) தெளிவா ஆவணப்படுத்தணும்.

2. அந்த முறைவழிகளை செய்ய உதவும் படிமங்கள் (Forms), படிம அச்சுகள் (Templates), செந்தரங்கள் (Standards) போன்றவற்றை ஆவணப்படுத்தணும்.

3. மேற்கண்ட முறைவழிகளை எப்படி வகுப்பதுன்ற வழியையும் கண்டுபிடிக்கணும்.

4. எல்லாவற்றுக்கும் மேலாக தரக் கையேடு (Quality Manual) ஒன்று உருவாக்கணும். இதுதான் ஒரு நிறுவனம் எப்படி செயல்படுதுன்னு சொல்லக்கூடிய ஆவணமாகும். ஒவ்வொரு நிறுவனத்திலும் ISO பார்க்க விரும்பும் முதன்மையான ஆவணம் இது.

*****

இன்னும் அடுத்த பகுதிகளில் ISO மற்றும் CMMi பற்றி பாக்கப் போறோம். அத்துடன் இந்த தொடர் முடிந்து விடும். அதனால் கேள்விகள் இருந்தா இப்பவே கேட்டுடுங்க.

*****

Read more...

Saturday, November 27, 2010

சமீபத்தில் மறைந்த இன்னொரு தந்தை!

இந்த தொடரின் முதல் பகுதியில் மென்பொருள் தரக்கட்டுப்பாட்டின் தந்தை என்றழைக்கப்பட்ட Watts Humphrey சமீபத்தில்தான் (அக்.28,2010) மறைந்தார் என்று பார்த்தோம். அவரைத் தொடர்ந்து அடுத்த மாதமே - தரத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மற்றொருவர் காலமானார். அவர் யார்? அதுதான் இந்த பகுதி.

**

தர நிர்ணயத்தில் மென்பொருளின் திட்ட மதிப்பீடு (Estimation) செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஒரு வேலை செய்ய எவ்வளவு நாளாகும்னு கணிக்க முடியலேன்னா - ரொம்ப கஷ்டம். உதாரணத்திற்கு, மென்பொருளில் பல வருட அனுபவம் உள்ளவர்கள் - ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய 30 நாட்களாகும்னு குத்துமதிப்பா சொல்றதை யாராலும் ஏற்க முடியாது. அது 'தரம்' கிடையாது. சரியா? இந்த திட்ட மதிப்பீட்டை அறிவியல் ரீதியா செய்ய கண்டுபிடிக்கப்பட்ட முறைதான் - Function Point முறையாகும். ISOவால் அங்கீகரிக்கப்பட்ட முறை இது. இரண்டாம் (Repeatable) அல்லது மூன்றாவது (Defined) நிலையை அடைய எல்லா நிறுவனங்களுக்கும் CMMi வலியுறுத்தும் முறையும் இதுவே.

அப்படி இந்த முறையில் என்ன இருக்கு? அதையும் பாத்துடுவோம்.

*************

ஒரு மென்பொருளில் இருக்கக்கூடிய தகவல்கள் / வெளியேயிருந்து வரக்கூடிய தகவல் பரிமாற்றங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, ஒவ்வொன்றிற்கும் தகுந்த புள்ளிகள் கொடுத்து, இறுதியாக அந்தப் புள்ளிகளை கூட்டினால் வரும் எண்ணிக்கையை அந்த மென்பொருளின் அளவு (size) என்பார்கள். இந்த புள்ளிகளை கணக்கிட பயன்படுத்தும் 5 காரணிகள்:

Inputs
Outputs
Inquiries
External Interface Files
Internal Logical file

அதாவது, பயனரின் தேவைகளை (Requirements) அக்குவேறு ஆணிவேராக பிரித்து, ஒவ்வொரு தேவைகளையும் மேற்கூறிய ஐந்தில் ஏதாவது ஒன்றில் பொருத்தி ’அளவை’ கண்டுபிடிக்க வேண்டும். அப்படி இந்த ‘அளவைக்’ கண்டுபிடித்துவிட்டால், பிறகு தேவைப்படும் மனித உழைப்பு, அதற்கான செலவு எல்லாமே சுலபமாக கணக்கிட்டு விடலாம்.

இதை ஓரிரு வரிகளில் படித்துவிட்டாலும், நல்ல மனிதவளம் நிறைந்த நிறுவனங்களுக்கே, Function Point முறையை பயன்படுத்தி திட்ட மதிப்பீட்டில் திறமையை வளர்த்துக் கொள்ள ஓரிரு ஆண்டுகள் பிடிக்கும். மேற்கூறிய ஒவ்வொரு காரணிகளையும் கவனமாக கணக்கெடுப்பதற்கு மிகுந்த திறமையும் பயிற்சியும் தேவைப்படும்.

**

இந்த Function Point முறையை கண்டுபிடித்தவர் பற்றி ஒரு சிறு குறிப்பு.

பெயர்: ஆலன் ஆல்ப்ரெக்ட் (Alan Albrecht).

** பிப்ரவரி 2, 1927ல் பிறந்த ஆலன், பல்வேறு ராணுவ கணினித் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்தவர்.

** IBMல் வேலை பார்த்தபோது, Function Pointsஐ கண்டுபிடித்தார்.

** இந்த கண்டுபிடிப்பை உலகம் முழுக்க பல்வேறு கூட்டங்களிலும் அறிமுகப்படுத்தி சொற்பொழிவு ஆற்றிய ஆலன், வேலையிருந்து ஓய்வு பெற்றபிறகுகூட இந்த Function Pointsக்கு ஆலோசகராக இருந்தார்.

** The International Function Point User Group (IFPUG) என்ற அமைப்பைக் கண்டுபிடித்து அதை உலகில் அனைத்து நிறுவனங்களும் பின்பற்றி அதனால் பயன்பெற உதவியாக இருந்தார்.

** இப்படி தன வாழ் நாள் முழுக்க 'Function Point'க்காக செலவழித்த ஆலன், திட்ட மதிப்பீட்டின் தந்தை (Father of Estimation) என்றழைக்கப்பட்டார்.

இந்த பகுதியோட முக்கியத்துவம் என்னன்னு கேட்டீங்கன்னா, ஆலன் சமீபத்தில் நவம்பர் 10, 2010 தேதி அன்று காலமானார்.

**

இந்தப் பகுதிக்கான கேள்வி:

1. Function Pointக்காகவே ஒரு தகுதிச் சான்றளிப்பு (certification) உள்ளது. அதன் பெயர் என்ன?

2. Function Point முறை புதிதாக உருவாக்கப்படும் மென்பொருளுக்கு மட்டும்தான் பயன்படுமா - அல்லது ஏற்கனவே இருக்கும் மென்பொருளில் நகாசு வேலை செய்தால், அதற்கும் பயன்படுமா?

*****

Read more...

Tuesday, November 16, 2010

பேஸ்மென்ட் ஸ்ட்ராங்! பில்டிங்கும் ஸ்ட்ராங்!

தரத்தில் கவனம் செலுத்தும் அனைவருக்கும் இந்த ‘தர மேலாண் அமைப்பு’தான் (Quality Management System) பேஸ்மெண்ட். இது கண்டிப்பா ஸ்ட்ராங்கா இருக்க வேண்டியது அவசியம். இந்த தர மேலாண் அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் இதில் இருக்கும் இரண்டு முக்கிய குழுக்களை பாத்துடுவோம்.

முதலாவது - தர நிர்ணயக் குழு (Quality Assurance). இவங்கதான் வேலையை எப்படி செய்யணும்னு சொல்லித் தர்றவங்க.

** திட்டப்பணி வரைவு (Project Planning)
** செந்தரங்கள் உருவாக்குதல் (Standards development)
** பயிற்சிகள் (Trainings)

இதெல்லாம் தர நிர்ணயக் குழுவின் வேலைகளில் சில.

அடுத்தது - தரக் கட்டுப்பாட்டுக் குழு (Quality Control). நடந்த தவறுகளை கண்டுபிடிச்சி, அதை திருத்தச் சொல்றவங்க.

** அகச்சோதனை (Unit Testing)
** அமைப்புச் சோதனை (System Testing)
** குறிமுறை மீள்பார்வை (Code Review)
** வடிவமைப்பு மீள்பார்வை (Design Review)

இதெல்லாம் தரக்கட்டுப்பாட்டுக் குழுவின் வேலைகளில் சில.

சரியா? இப்போ இந்த இரண்டு குழுவிற்கும் ஆதாரமான 'தர மேலாண் அமைப்பின்’ வேலையை விரிவா பாத்துடுவோம்.

** பொருளின் உற்பத்திக்கு என்ன பண்ணனும்?

** அதை செய்யக்கூடிய வழிமுறைகள் என்ன?

** அந்த வழிமுறைகள் சரியா பின்பற்றப்படுகின்றனவா?

** வேலை செய்கிறவர்களுக்கு அதை செய்யக்கூடிய தகுதி இருக்கிறதா? இல்லேன்னா, அவங்களை எப்படி தயார்படுத்துவது?

** உற்பத்தி செய்யப்பட்ட பொருள் நாம எதிர்பார்த்த மாதிரியே வந்திருக்கிறதா?

** வரலேன்னா, அதை எப்படி திருத்தணும்?

** நடந்த தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

** மறுபடி அதே தவறு செய்யாமலிருக்க, என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?

அவ்ளோதாங்க. சிம்பிளா இருக்கில்லே.

இவ்வளவையும் செய்துட்டு, ‘பேஸ்மெண்டை’ ஸ்ட்ராங்காக்கிட்டா - அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் சிலவற்றை பாத்துடுவோம்.

** வேலைகளை துரிதப்படுத்தலாம். எல்லா வேலைகளுக்கும் செந்தரங்களை (standards) உருவாக்கிட்டதால், அவைகளை வேகமாக செய்ய முடியும். இது எப்படி பண்றது? அது எப்படி பண்றதுன்னு யாரும் யோசிக்கத் தேவையில்லை.

** ‘அதிர்ச்சி’களைக் குறைக்கலாம். எல்லா வேலைகளையும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட வழிமுறையில் செய்வதால், வருவிளைவு (output) எப்படியிருக்கும்னு யூகிக்க முடியும். என்ன இப்படி ஆயிடுச்சுன்னு அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை.

** நேரம் மிச்சம். என்ன செய்யப் போறோம், எப்படி செய்யப் போறோம்னு எல்லாருக்குமே தெரியுமாகையால், நேரம் மிச்சமாகும். நேரம்தான் பணம்றது உங்களுக்கு தெரியும்தானே?

** வாடிக்கையாளரின் திருப்தி அதிகரிப்பு.

மற்றும் பல.

***

இத்துடன் 'தரம்' பற்றிய முன்னுரை முடிந்தது. அப்போ அடுத்த பகுதியிலிருந்து???

***

இந்த பகுதிக்கான கேள்விகள்:

** இந்த பேஸ்மென்ட் வீக்கா இருந்தா என்னென்ன பிரச்சினைகள் வரும்?

** பல்வேறு தரச் சான்றிதழ் வாங்கிய நிறுவனங்களெல்லாம் நிஜமாவே ’பிழை’யில்லாமல் மென்பொருளை உற்பத்தி செய்கின்றனவா?

** எப்படியும் தரக் கட்டுப்பாட்டுத் துறை எல்லா தவறுகளையும் கண்டுபிடிச்சிடப் போகுது. அப்புறம் எதுக்கு மத்ததெல்லாம் (தர நிர்ணயக்குழு)?
** இந்தியாவிலேயே முதல்முறையா CMMi சான்றிதழ் யாரு வாங்கினாங்க?

*******

Read more...

Sunday, November 7, 2010

சொன்னதையே செய்! செய்வதையே சொல்!!

நிறைய விளம்பரங்களில் - இது ஒரு தரமான பொருள் - அப்படின்னு சொல்லியிருப்பாங்க. இதுலே ‘தரம்’னா என்ன?

** தர நிர்ணயம்
** தரக் கட்டுப்பாடு
** தரப் பொறியியல்
** தர மேலாண் அமைப்பு -

இப்படி பல தொழில்நுட்ப வார்த்தைகளுக்குப் போவதற்குமுன், ‘தரம்’னா என்னன்னு தெரிஞ்சிக்க வேண்டியது அவசியம்.

ஒரு பொருளை வாங்க கடைக்குப் போறீங்க. அந்தப் பொருள்

** நீங்க எதிர்பார்த்த மாதிரியே இருக்கா?
** உங்க தேவைகளை பூர்த்தி செய்யுதா?
** உங்களுக்கு கட்டுப்படியான விலையில் கிடைக்குதா?
** நீங்க எதிர்பார்த்த வாடிக்கையாளர் சேவை கிடைக்குமா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் ‘ஆமா’ன்னு பதில் சொன்னீங்கன்னா, அதை நுகர்வோர் பார்வையிலான ‘தரம்’னு சொல்லலாம்.

இதையே இன்னொரு கோணத்திலிருந்து பாத்தா -

** சரியான பொருளை தயாரிச்சிருக்கோமா?
** சரியான வழியில் தயாரிச்சிருக்கோமா?
** முதல் தடவையே சரியா வந்திருக்கா?
** திட்டமிட்ட நேரத்திலேயே தயாரிக்க முடிஞ்சுதா?

இவை தயாரிப்பாளருக்கான கேள்விகள்னு பாத்தவுடனேயே தெரிஞ்சிருக்கும். எல்லாத்துக்கும் அவர் ‘ஆமா’ன்னு பதில் சொல்லிட்டாருன்னா, அதை தயாரிப்பாளர் பார்வையிலான ‘தரம்’னு சொல்லலாம்.

ஆனா, நடைமுறையிலே எல்லா கேள்விகளுக்கும் ‘ஆமா’ன்னு சொல்ல முடியுமா? எல்லாத்திலேயும் ஏதாவது ஒரு குறை இருக்குமில்லையா?

அதாவது -

தயாரிப்பாளர் தரப்பில் - செய்ய நினைத்த பொருளுக்கும் - உருவான பொருளுக்கும் உள்ள வித்தியாசம் -- (அ)

நுகர்வோர் தரப்பில் - வாங்க நினைத்த பொருளுக்கும் - வாங்கிய பொருளுக்கும் உள்ள வித்தியாசம் -- (ஆ)

(அ) மற்றும் (ஆ) - இந்த இரு வித்தியாசங்களையும் தவிர்ப்பது அல்லது குறைப்பதே - ஒவ்வொரு நிறுவனத்திலிருக்கும் தர நிர்ணயத்துறைக்கான (Quality Assurance) வேலையாகும்.

**

** சொன்னதையே செய
** செய்வதையே சொல்
** இந்த இரண்டையும் நிரூபி
** தொடர்ந்து தரத்தை உயர்த்து

மேலே சொன்ன இந்த நான்கும்தான் இந்தத் துறையின் தாரக மந்திரமாகும்.

இதை அடைய ஒவ்வொரு நிறுவனமும் நிறுவ வேண்டிய ஒன்றுதான் - தர மேலாண் அமைப்பு (Quality Management System).

இந்த தர மேலாண் அமைப்பையும், அதன் உள்கட்டமைப்பையும் அடுத்த பகுதியில் விரிவாக பார்ப்போம்.

**

இந்தப் பகுதிக்கான கேள்விகள்:

** நாய்களுக்கான பிஸ்கட்கள் தரமானவையென்று எப்படி தெரிந்து கொள்வது? (ஒரு பொருளின் தரத்தை நுகர்வோர்தான் தீர்மானிக்கிறார்கள்னு பாத்தோமே!)

** தரத்தை நிறுவுவதற்கும், அதை தொடர்ச்சியாக உயர்த்துவதற்கும் ஒரு நிறுவனத்திற்கு அதிக செலவாகுமே? அவ்வளவு செலவு செய்து தரத்தை எட்டித்தான் ஆகவேண்டுமா?

*****

Read more...

Wednesday, November 3, 2010

மென்பொருள் தர நிர்ணயம் - புதிய தொடர்!

ரொம்ப நாளா ரொம்ப ரொம்ப மொக்கையா எழுதறோமே - வாழ்க்கையிலே உருப்படியா ஏதாவது எழுதலாம்னு நினைப்பு இருந்துச்சு. அதனால் நாம ஏழெட்டு வருசமா வேலை பாத்துக்கிட்டிருக்குற ஒரு துறையைப் பத்தி - அதிலிருக்கும் ஒரே ஒரு விஷயத்தைப் பத்தி ஒரு மினி தொடர் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இடுகை போரடிக்காமே இருக்க என்ன செய்யணுமோ அதை கண்டிப்பா செய்வேன். வாங்க, நேரடியா மேட்டருக்கு போயிடலாம்.

*****

மென்பொருள் தர நிர்ணயத்துறைதான் (Software Quality Assurance) அந்தத் துறை.

ஐ.எஸ்.ஓ (ISO)
சி.எம்.எம்.ஐ (CMMi)
சிக்ஸ் சிக்மா (Six sigma)

இதெல்லாம்தான் அந்த விஷயங்கள்.

**

இதில் முதலாவதா இருக்கிற ISO பற்றியும், மூணாவதா இருக்கிற சிக்ஸ் சிக்மா பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனா நாம் இங்கே பாக்கப்போறது - எனக்கு மிகவும் பிடித்தமான - நடுவில் இருக்கும் CMMi (Capability Maturity Model Integration) பற்றித்தான்.

பொதுவா கொஞ்சம் மென்பொருள் தர நிர்ணயத்தைப் பற்றியும், கூடவே CMMi பற்றியும் எழுதலாம்னு நினைச்சி முதல் இடுகையை துவக்குற நேரத்துலேதான், தர நிர்ணயத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு அதிர்ச்சி தரும் அந்த செய்தி வந்துச்சு. அது என்ன? சொல்றேன். சொல்றேன்.

**

பொருளின் தரம் எப்படி இருக்கணும்னு அதை பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்தான் முடிவு பண்ணனும். இதுதான் நடைமுறை.

ஏய், யாருப்பா அது, உங்க வீட்லே நீ கேக்குற மாதிரி காப்பியோ அல்லது பிசிபேளா பாத்தோ கிடைக்குதான்னு கேக்குறது? சரி சரி. அதைப் பத்தி அப்புறம் பேசுவோம்.

அப்படி வாடிக்கையாளர் எதிர்பார்க்குற தரத்தை - குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் அடைய எல்லா மென்பொருள் நிறுவனங்களும் கடுமையா முயற்சி செய்து கொண்டேயிருக்கின்றன.

அப்படி என்ன முயற்சி செய்றாங்கன்னு நீங்க கேக்கலேன்னாலும், சொல்லவேண்டியது என் கடமை.

** செய்வதை திருந்தச் செய்றது (முதல்தடவையிலேயே தப்பில்லாமே செய்யறது)

** செய்ததையே திரும்பத் திரும்ப செய்யாமே இருக்கறது (Re-use)

** ஒரு வேலையை எப்படிச் செய்யனும்னு செந்தரங்களை (Standards) உருவாக்கி, அதன்படியே அனைவரும் வேலை செய்வது

** பிழைகளை குறைப்பது

இப்படி பல்வேறு வழிகளை எல்லா மென்பொருள் நிறுவனங்களும் பின்பற்றுகின்றன.

மேலே குறிப்பிட்டவற்றை எங்கே ஆரம்பிப்பது, எப்படி செய்வதுன்னு தெரியலேன்னா - அதுக்குத்தான் நாம முதல்லே பாத்த ISO, CMMi இதெல்லாம் இருக்கு.

**

** இந்த ISO, CMMi இதெல்லாம் ஒண்ணுதானா?

** ஏதாவது ஒன்றை எடுத்து பயன்படுத்தினா போறுமா?

** CMMiயில் எத்தனை நிலைகள் இருக்கு?

** இவற்றை மென்பொருள் நிறுவனங்கள் மட்டும்தான் பயன்படுத்தணுமா?

இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் அடுத்தடுத்த இடுகைகளில்... நீங்களும் கேள்விகள் இருந்தா கேளுங்க..

**

இந்த CMMiஐ கண்டுபிடித்த - மென்பொருள் தரத்தின் தந்தை (Father of Software Quality) என்று அழைக்கப்பட்ட - வாட்ஸ் ஹம்ஃப்ரே (Watts Humphrey), சென்ற மாதம் - அக்டோபர் 28ம் தேதி, தனது 83வது வயதில் காலமானார்.

*****

தொடரும்...

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP