Saturday, November 27, 2010

சமீபத்தில் மறைந்த இன்னொரு தந்தை!

இந்த தொடரின் முதல் பகுதியில் மென்பொருள் தரக்கட்டுப்பாட்டின் தந்தை என்றழைக்கப்பட்ட Watts Humphrey சமீபத்தில்தான் (அக்.28,2010) மறைந்தார் என்று பார்த்தோம். அவரைத் தொடர்ந்து அடுத்த மாதமே - தரத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மற்றொருவர் காலமானார். அவர் யார்? அதுதான் இந்த பகுதி.

**

தர நிர்ணயத்தில் மென்பொருளின் திட்ட மதிப்பீடு (Estimation) செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஒரு வேலை செய்ய எவ்வளவு நாளாகும்னு கணிக்க முடியலேன்னா - ரொம்ப கஷ்டம். உதாரணத்திற்கு, மென்பொருளில் பல வருட அனுபவம் உள்ளவர்கள் - ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய 30 நாட்களாகும்னு குத்துமதிப்பா சொல்றதை யாராலும் ஏற்க முடியாது. அது 'தரம்' கிடையாது. சரியா? இந்த திட்ட மதிப்பீட்டை அறிவியல் ரீதியா செய்ய கண்டுபிடிக்கப்பட்ட முறைதான் - Function Point முறையாகும். ISOவால் அங்கீகரிக்கப்பட்ட முறை இது. இரண்டாம் (Repeatable) அல்லது மூன்றாவது (Defined) நிலையை அடைய எல்லா நிறுவனங்களுக்கும் CMMi வலியுறுத்தும் முறையும் இதுவே.

அப்படி இந்த முறையில் என்ன இருக்கு? அதையும் பாத்துடுவோம்.

*************

ஒரு மென்பொருளில் இருக்கக்கூடிய தகவல்கள் / வெளியேயிருந்து வரக்கூடிய தகவல் பரிமாற்றங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, ஒவ்வொன்றிற்கும் தகுந்த புள்ளிகள் கொடுத்து, இறுதியாக அந்தப் புள்ளிகளை கூட்டினால் வரும் எண்ணிக்கையை அந்த மென்பொருளின் அளவு (size) என்பார்கள். இந்த புள்ளிகளை கணக்கிட பயன்படுத்தும் 5 காரணிகள்:

Inputs
Outputs
Inquiries
External Interface Files
Internal Logical file

அதாவது, பயனரின் தேவைகளை (Requirements) அக்குவேறு ஆணிவேராக பிரித்து, ஒவ்வொரு தேவைகளையும் மேற்கூறிய ஐந்தில் ஏதாவது ஒன்றில் பொருத்தி ’அளவை’ கண்டுபிடிக்க வேண்டும். அப்படி இந்த ‘அளவைக்’ கண்டுபிடித்துவிட்டால், பிறகு தேவைப்படும் மனித உழைப்பு, அதற்கான செலவு எல்லாமே சுலபமாக கணக்கிட்டு விடலாம்.

இதை ஓரிரு வரிகளில் படித்துவிட்டாலும், நல்ல மனிதவளம் நிறைந்த நிறுவனங்களுக்கே, Function Point முறையை பயன்படுத்தி திட்ட மதிப்பீட்டில் திறமையை வளர்த்துக் கொள்ள ஓரிரு ஆண்டுகள் பிடிக்கும். மேற்கூறிய ஒவ்வொரு காரணிகளையும் கவனமாக கணக்கெடுப்பதற்கு மிகுந்த திறமையும் பயிற்சியும் தேவைப்படும்.

**

இந்த Function Point முறையை கண்டுபிடித்தவர் பற்றி ஒரு சிறு குறிப்பு.

பெயர்: ஆலன் ஆல்ப்ரெக்ட் (Alan Albrecht).

** பிப்ரவரி 2, 1927ல் பிறந்த ஆலன், பல்வேறு ராணுவ கணினித் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்தவர்.

** IBMல் வேலை பார்த்தபோது, Function Pointsஐ கண்டுபிடித்தார்.

** இந்த கண்டுபிடிப்பை உலகம் முழுக்க பல்வேறு கூட்டங்களிலும் அறிமுகப்படுத்தி சொற்பொழிவு ஆற்றிய ஆலன், வேலையிருந்து ஓய்வு பெற்றபிறகுகூட இந்த Function Pointsக்கு ஆலோசகராக இருந்தார்.

** The International Function Point User Group (IFPUG) என்ற அமைப்பைக் கண்டுபிடித்து அதை உலகில் அனைத்து நிறுவனங்களும் பின்பற்றி அதனால் பயன்பெற உதவியாக இருந்தார்.

** இப்படி தன வாழ் நாள் முழுக்க 'Function Point'க்காக செலவழித்த ஆலன், திட்ட மதிப்பீட்டின் தந்தை (Father of Estimation) என்றழைக்கப்பட்டார்.

இந்த பகுதியோட முக்கியத்துவம் என்னன்னு கேட்டீங்கன்னா, ஆலன் சமீபத்தில் நவம்பர் 10, 2010 தேதி அன்று காலமானார்.

**

இந்தப் பகுதிக்கான கேள்வி:

1. Function Pointக்காகவே ஒரு தகுதிச் சான்றளிப்பு (certification) உள்ளது. அதன் பெயர் என்ன?

2. Function Point முறை புதிதாக உருவாக்கப்படும் மென்பொருளுக்கு மட்டும்தான் பயன்படுமா - அல்லது ஏற்கனவே இருக்கும் மென்பொருளில் நகாசு வேலை செய்தால், அதற்கும் பயன்படுமா?

*****

2 comments:

Mahesh November 28, 2010 at 12:36 AM  

கில்லாடி கணக்கா எழுதி கீற.... சுகுரா கீது.

மொதொ கொஸ்டீன்: IFPUG ???

ரண்டாங் கொஸ்டீன் : செய்லாமே தல.... ஒண்ணியும் ப்ரச்னை இல்லியே...

சின்னப் பையன் November 28, 2010 at 8:13 AM  

மகேஷ் அண்ணே -> 50% தப்பா சொல்லிட்டீங்களே! CFPSதான் (Certified Function Point Specialist) சரியான விடை. அதை நடத்துபவர்கள் IFPUG. சரி விடுங்க. மார்ச் போனா செப்டம்பர்.. :-)))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP