Monday, February 27, 2012

என் வாழ்க்கைப் பாதையை மாற்றிய அந்த சுடர்மணி!!



அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும்.(இப்போ மட்டும் என்ன, ஒரு ரெண்டு மூணு வயசு கூட, அவ்வளவுதான்..). குடும்ப நண்பர்கள் ஒரு இருபது பேர் கிளம்பி பிச்சாவரம் போனோம். போயிட்டு வர்ற வழியில் சிதம்பரம் கோயிலுக்கு போயிருந்தோம். அந்தக் கோயில் குளத்தில் குளிக்க அனைவரும் இறங்கினர். (இப்போ அந்த குளத்தில் குளிக்க அனுமதி இருக்கான்னு தெரியல).


அப்போ எனக்கு நீச்சல் தெரியாது. (இப்போ? ன்னு யாரும் கேட்கப்படாது). அதனால் 'தைரியமா' மேல் படிக்கட்டுலேயே உட்கார்ந்து சொம்புலே (சிம்பு'லே இல்லே) தண்ணி மொண்டு குளிக்க ஆரம்பிச்சேன். (கேவலமாதான் இருந்துச்சு. இதெல்லாம் பாத்தா முடியுமா!). திடீர்னு கால் வழுக்கி சில படிக்கட்டுகள் இறங்கி தண்ணிக்குள்ளே போயிட்டேன். சென்ற ஆட்சியில் குளங்களை சரியாக சுத்தம் செய்யாததால்தான் நான் அப்படி வழுக்கிவிட்டேன்னு எனக்கு இப்போ புரியுது. அம்மா வாழ்க.



இந்த மாதிரி சமயத்தில், 'தலைக்கு மேல் போயாச்சு, ஜான் போனா என்ன, முழம் போனா என்ன'ன்னு பழமொழியெல்லாம் சொல்லக்கூடாது. இன்னும் 'விவரம்' தெரியாது வயசு. 'பாக்க' வேண்டியது எவ்வளவு இருக்கு? அதனால், கையை காலை உதைச்சி (என்னோட கை கால்தான்) அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யறேன்.



ஆனா முடியல. கீழே கீழே போறா மாதிரி இருக்கு. அந்த சிறு குளத்தில் இருக்கிற தண்ணி, ஒரு பெரிய கடல் மாதிரி இருக்கு. லியோ டி காப்ரியோ மாதிரி தண்ணிக்குள்ளே 'ஸ்லோ மோஷன்லே' போறேன். அந்த டைட்டானிக் இறுதிக் காட்சியே ஒரு சின்ன தண்ணித் தொட்டியில்தான் எடுத்தாங்கன்னு சமீபத்தில்தான் எனக்கு தெரிஞ்சுது. (யாருப்பா அது,
தண்ணித் தொட்டின்னவுடனே, தமிழக அரசின் புது சட்டசபையான்னு கேக்கறது? அது எண்ணைத் தொட்டி!!)



நீங்க இங்கே ஜாலியா படிச்சிட்டிருக்கீங்க. நானோ அங்கே தண்ணீரில் மூழ்கி மேலே வர கஷ்டப்பட்டுட்டிருக்கேன். அப்போ திடீர்னு என் கையில் ஏதோ தட்டுப்பட்டது. 'மூழ்கறவன் கைகளுக்கு மாட்டினதெல்லாம் தெய்வம்' என்கிற புதுமொழிக்கேற்ப (திடீர்னு நானே யோசிச்சது!), நான் அதை புடிச்சி மேலே வர முயற்சிக்கிறேன்.



ஆனால், யாரோ மேலேயிருந்து 'அதை' என்கிட்டேயிருந்து விடுவிச்சி, என்னை தள்ளி விடப் பாக்கறாங்க. ஆஹா, இது தற்கொலையோ விபத்தோ இல்லைடா சின்னபையா, இது ஒரு அப்பட்டமான கொலைன்னு நானே (மனசில்) சொல்லிக்கறேன்.



ஆனா, நான் விடலை. (பருவத்தை சொல்லலே. விடவில்லை என்பதை சுருக்கி சொன்னேன்). நல்லா புடிச்சி இழுக்கறேன். கூடவே பக்கத்தில் ஒரு 'கால்' தெரியுது. (ஏன் முழுசா தெரியலியான்னு கேக்கக்கூடாது, நான் சொன்னது நம் உடலின் ஒரு பாகம் - கால்).



நான் டக்குன்னு 'அதை' விட்டுட்டு 'காலை' புடிச்சிக்கறேன். தென்னை மரம் ஏறுவதைப் போல (உடனே மரம் ஏறத் தெரியுமான்னு கேட்ககூடாது, ஏன்னா, அதுவும் தெரியாது. அப்போ எதுதாண்டா தெரியும்னு நீங்க சொல்றது கேக்குது. ம்ம். ) ஏறி ஒருவழியா தண்ணிக்கு மேலே வந்துட்டேன். பிறகுதான் தெரிஞ்சுது, நான் புடிச்சி இழுத்தது, எங்க மாமாவோட ஜ**ன்னு.



இப்போ பதிவோட தலைப்பை ஒரு தடவை படிங்க. 'அது' மட்டும் இல்லேன்னா, நானும் இல்லே. இந்த பதிவும் இல்லே.


சரிதானே?



***



Read more...

Saturday, February 25, 2012

சென்னை பள்ளிகள் - பாகம் 3.


பாகம் 1

பாகம் 2
 

இந்திய பார்லிமென்ட் முதற்கொண்டு நம்ம போயஸ் கார்டனுக்கு உள்ளே கூட போய்விடலாம் (ஹிஹி. நான் அந்த தோட்டத்திலேயே - அம்மா/ ரஜினிகிட்டே இல்லே - ஒரு அலுவலகத்தில், ஆறு மாதம் வேலை பாத்திருக்கேன்!). ஆனால் இந்த பள்ளிகள் உள்ளே நுழைய நாங்க பட்ட பாடு இருக்கே. அப்பப்பா. "ஆமா, ஏகப்பட்ட பசங்க படிக்கிற பள்ளிகள், அதுக்கு பாதுகாப்பு இருக்க வேணாமா" என்று கேட்கலாம். அது சரிதான். அதுக்காக, ஆபீஸ் ரூம், முதல்வர் அறை இதுக்கெல்லாம் கூடவா அனுமதி மறுக்கணும்?



* பிரின்சிபல்தான் வரச்சொன்னாங்க,

* ஆபீஸ் ரூமில் விவரங்கள் விசாரிக்கணும்,

* அப்ளிகேஷன் பாரம் வாங்கணும்,



இப்படி எது சொன்னாலும், வாயிற்காப்போன்களுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை ஒன்றே - 'யாரையும் உள்ளே விடாதே'.



ப்ரீகேஜி அட்மிஷங்களுக்கு மட்டுமே தேதிகள், விவரங்கள், படிவங்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற வகுப்புகளுக்கு விவரங்கள் வேண்டுமா - யாருக்குமே தெரியாது. அந்த கடவுளுக்கே வெளிச்.. சாரி. அவருக்கே தெரிந்திருக்காது.



இந்த அட்மிஷன் வேட்டையில் தெரிந்து கொண்ட விஷயம் ஒன்றுதான். பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் - அவர்கள் அங்கேயே இருபது ஆண்டுகளாக வேலை பார்த்தாலும் - அவர்களுக்கு 'வாய்ஸ்' என்று ஒன்று கிடையாது. 'நான் சொன்னாலெல்லாம் கேக்க மாட்டாங்க. நீங்க ஏதாவது பெரிய ஆளோட ரெகமெண்டேஷன் லெட்டர் கொண்டு வாங்க'.


ஒவ்வொரு பள்ளியிலும் (மொத்தம் நான்கு) ஒவ்வொரு ஆசிரியரை பிடித்தோம். ஒருவராலும் உதவ முடியவில்லை. அதுகூட பரவாயில்லை. விவரங்களும் தெரியவில்லை. அட்மிஷன் கிடைக்குமா, கிடைக்காதா, யாரை பார்க்கணும் - எந்த விவரங்களும் தெரியவில்லை. 'ஆபீஸ் ரூமில் நான் சொன்னா ஒண்ணும் நடக்காது'.



தற்போதைய தமிழக முதல்வர் + அமைச்சரவை நிலைமை மாதிரியே இருக்குது இல்லையா? அனைத்து முடிவுகளும் முதல்வர்தான். ஆனால் அவரோ யாரையும் பார்க்கமாட்டார். எப்போதும் பிஸி. :-)


அட, ஆசிரியர்களை விடுங்க. ஒரு பள்ளியில் 'உதவி தலைமை ஆசிரியர்' கிட்டே பேச வாய்ப்பு கிடைத்தது. அவர்கிட்டே விவரங்கள் கேட்டபோது, என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கிறீங்க. கரெக்ட். மேலே சிகப்பு வண்ணத்தில் இருக்கு பாருங்க. அதேதான்.



இவற்றையெல்லாம் தாண்டி அலுவலர்களிடம் பேச வாய்ப்பு கிடைத்தபோது, அவர்கள் சொன்னவைகளில் சாம்பிளுக்கு சில கீழே:



* மாலை நாலு மணிக்கு தொலைபேசுங்க. கண்டிப்பா சொல்றேன். (மூன்றரை மணிக்கே தொலைபேசி சுவிட்ச் ஆஃப்).



* நாளைக்கு பத்து மணிக்கு வாங்க. முடிச்சிடுவோம். (நாளைக்கு அவர் கண்டிப்பாக மட்டம் போட்டிருப்பாரு).



* இவ்வளவு நேரம் பிரின்சிபால் இங்கேதான் இருந்தாரு. பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தீங்கன்னா பாத்திருக்கலாம் (மருத்துவமனைகளில் சொல்வதைப் போல் இருக்கா?)



* நான் ஆபீஸ்ரூமில் சொல்லி வெச்சிடறேன். நீங்க கரெக்டா வந்துடுங்க. (ஆபீஸ்ரூமில் - அப்படி யாரும் சொல்லலியே? நீங்க எதுக்கும் அடுத்த வாரம் வாங்க)



சரி விடுங்க. திட்டாமே இப்படியாவது மரியாதையா சொல்றாங்களேன்னு சொல்லாதீங்க. ஒரு இடத்தில் திட்டு கூட வாங்கியாச்சு.



" நாளை காலை பத்து மணிக்கு டாண்ணு(!!) வந்திடுங்க. அப்ளிகேஷன் பாரம் தர்றேன். கொண்டு போய், பூர்த்தி செய்து ரெண்டு நாட்களுக்குள் தந்துடுங்க" என்று சொன்னவரை நம்பி போனால், 'வெள்ளை பேப்பர் கொண்டு வந்தீங்களா? அதில் ஊர், பேர் எல்லாம் எழுதிக் கொடுங்க' என்றார். 'பேப்பர் கொண்டு வரலீங்க. பாரம் தர்றேன்னு சொன்னீங்களே' என்றால், நான் என்ன 'ஸ்டேஷனரி கடையா நடத்தறேன். போற வர்றவங்களுக்கெல்லாம் பேப்பர் கொடுக்க. பத்து நிமிடத்தில் கொண்டு வந்து தந்தா தாங்க. இல்லேன்னா ஒண்ணும் சொல்ல முடியாது'.



இதுவே நானாக இருந்தால், அங்கு நடந்ததே வேறாக இருந்திருக்கும். (யாருப்பா அது, 'வவாச கைப்புள்ள மாதிரியா'ன்னு கேக்கறது?!!). அங்கிருந்தது தங்க்ஸ் ஆகையால், ஒரு கடைக்கு போய், பேப்பர் வாங்கி, எல்லாவற்றையும் எழுதி போய் கொடுத்துவிட்டு வந்தார்.



இப்போதைக்கு இது போதும். தொடர்ந்து அடுத்த பகுதியில்...



Read more...

Saturday, February 18, 2012

நான் சின்ன பையனா இருந்தபோது!!!

டிவிட்டரில் ஏதாவது ஒரு தொடரில் பங்கு பெறுவதில் ஒரு பெரிய லாபம் - ஒரு பதிவை தேத்திடலாம். அப்படி சமீபத்தில் #wheniwasakid டேக்கில் யான் எழுதிய ட்வீட்டுகள் இதோ.



#wheniwasakid மிஸ், நான் நேத்து உங்களை மார்கெட் பக்கத்துலே பாத்தேனேன்னு சொல்லியிருக்கேன்

#wheniwasakid மிஸ் வீட்டை தாண்டி போகும்போதெல்லாம் பயந்து ஒதுங்கி போயிருக்கேன்

#wheniwasakid பாம்பை போஸ்ட்மேன் வேலைக்கும் பயன்படுத்தலாம்னு நினைச்சேன். (நன்றி இராம நாராயணன்)

#wheniwasakid உம்மாச்சி நிஜமாவே கண்ணை குத்திடுவாரோன்னு நினைச்சி கண்ணை இறுக்க மூடிக்குவேன்

#wheniwasakid அந்த அங்கிள் அந்த ஆண்டியை துரத்தும்போது எதுக்கு திடீர்னு புலியை காட்டுறாங்கன்னு யோசிச்சேன்

#wheniwasakid டாக்டரா, இஞ்சினியரா, வக்கீலா ஆகணும்னு நினைச்சேன். (நன்றி SV.சேகர்)

#wheniwasakid யாரோ கிளியை வளர்த்து என்கிட்டே கொடுக்கப் போறாங்கன்னு நினைச்சேன்.

#wheniwasakid வளரும் பையன் இவன். உயர உயரவே துள்ளுபவன்

#wheniwasakid வண்ணக் கோலங்கள். வண்ணக் கோலங்கள். விதவிதமான வண்ணக் கோலங்கள்.

#wheniwasakid சிறுகச் சிறுக சேமிக்கும் இந்த சிட்டுக் குருவியைப் பாருங்கள். TNSC Bank.

#wheniwasakid பெரியவனானதும் ரெண்டு பெரிய சைக்கிள், மூணு சின்ன சைக்கிள் வாங்குவேன்னு சபதம் செய்தேன்.

#wheniwasakid சைக்கிள் வாடகைக்கு குடுக்கமாட்டேன்னு சொன்ன கடைக்காரரிடம் சண்டை போட்டேன்.

#wheniwasakid இந்தியா இரண்டாவது முறையா கிரிக்கெட் உலகக் கோப்பை ஜெயிச்சுது.

#wheniwaskid தொல்ல மாத்தேன் போ..

****



Read more...

Sunday, February 12, 2012

காலிக்கடைஃபோபியாவும் கடை சார்ந்த விஷயங்களும்




ஹிஹி. வாடிக்கையாளர்கள் யாருமே இல்லாமல் காலியாக இருக்கும் கடைக்குள் நுழைய எனக்கு பயம். அதைத்தான் சொல்ல வந்தேன். ஏன் அப்படி?



நம்ம பர்சனாலிட்டியும், முழுக்கிற முழியும் வெச்சிண்டு எந்த கடைக்குள் நுழைந்தாலும், அங்கே எதையாவது ஆட்டைய போட வந்தவன் மாதிரியே இருப்பதால், அந்த கடைச் சிப்பந்தி யாராவது ஒருவர் பக்கத்தில் வந்து நின்று விடுவார். இதை பாக்கறீங்களா சார்? இது $xyz சார். எந்த ரேஞ்ச்லே வேணும் உங்களுக்கு - இப்படி கேக்க ஆரம்பிச்சிடுவார். அதனால், கும்பல் ஏராளமாய் உள்ள, கடைச் சிப்பந்திகள் மற்றவர்களோடு மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் கடைக்குள் மட்டுமே செல்வேன்.



ஆப்பிள் ஸ்டோர் ஒரு நல்ல உதாரணம். தமிழக சட்டசபைக்கு வெளியே உள்ள இடம் போல் எப்போதும் கும்பலா இருக்கும். (த.ச'விலிருந்து வெளிநடப்பு செய்து வெளியே சத்தம் போட்டுக்கிட்டு கும்பலா நின்றிருப்பாங்கல்லே, அதைச் சொன்னேன்!). எதுவும் வாங்கலேன்னாலும் பரவாயில்லை. ஒண்ணும் சொல்லமாட்டாங்க. ஐபேட், அது இதுன்னு கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரலாம்.



இந்த ஃபோபியா என் குடும்பத்தில் உள்ள சிறிய மெம்பருக்கு சொன்னாலும் புரியாது. அவர் நினைத்த கடையின் உள்ளே போகவேண்டுமென்று அடம் பிடிப்பார். சமாதானம் செய்து இழுத்து வருவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.



இந்த பிரச்னைக்கு கொஞ்ச நாள் கழிச்சி ஒரு ஐடியா கண்டுபிடிச்சோம். எந்த கடைக்குள் போனாலும், உடனே சில பொருட்களை எடுத்து, தள்ளுவண்டியில் போட்டுக் கொள்ளணும். பிறகு ஆற அமர கடையை சுற்றிப் பார்த்துவிட்டு, வரும்போது அந்த பொருட்களை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வெளியே ஓடி வந்துவிட வேண்டியதுதான்.



அப்படியும் சில கடைகளில் விடமாட்டாங்க. வேடிக்கை பார்க்கும்போதே பக்கத்தில் வந்து, சார், உங்க மின்னஞ்சல் முகவரி / தொலைபேசி எண் குடுங்க. நிறைய கூப்பன் அனுப்பறேன். இன்னிக்கு பொருட்கள் வாங்கினா அதிகமான தள்ளுபடி கிடைக்கும் அப்படின்னு மொக்கை போட ஆரம்பிச்சிடுவாங்க. இந்த மாதிரி சமயங்களில்தான் நண்பர்கள் கை கொடுப்பாங்க. எப்படின்றீங்களா? அவங்க வீட்டு முகவரி, அவங்க தொலைபேசி எண் இதெல்லாம் என் நினைவில் 'பளிச்'னு பதிய வைக்கிறாங்களே. பிறகென்ன? அதையெல்லாம் கொடுத்துட்டு எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான். அப்புறம், அந்த கடையின் பாடு, நண்பர்கள் பாடு. எனக்கு ஒண்ணும் தெரியாது.



அதையும் மீறி சில இடங்களில் நிஜமாகவே பொருட்களை வாங்கினால், பில் போடும்போது அந்தம்மா முறைத்துக் கொண்டே - டேய், இன்னிக்கு வாங்கறே. நாளைக்கு மறுபடி வந்து இதை திருப்பிடக் கூடாதுன்னு சொல்ற மாதிரியே இருக்கும். இதனால், கொஞ்ச நாளாவது பயன்படும் என்று நினைக்கும் பொருட்களையே வாங்குவது. இல்லேன்னா வெறும் வேடிக்கைதான். என்ன நான் சொல்றது?



ஆனா அதிலும் சில விதிவிலக்குகள் வந்துவிடும். சில தவிர்க்க முடியாத காரணங்களால் (பின்னே, தங்ஸ்'ஐ திட்டவா முடியும்?) பொருட்களை திருப்பிக் கொடுக்கப் போனால், நான் போகாமல் தங்ஸ்'ஐ அனுப்பிவிடுவேன். ஹிஹி.



கடைசியில் தங்க்ஸ் ஊருக்குப் போகும் தருணமும் வந்தது. முன்னர் நாங்கள் வேடிக்கை பார்த்தபோது முறைத்துப் பார்த்த கடைகளில் போய் பொருட்களை வாங்கினோம். கத்தி-செட் வாங்கும்போது ஒரு சிப்பந்தி முன் அதை ஆட்டிக் காட்டி, பெருமையாய் வண்டிக்குள் போட்டேன். (வாங்கிட்டேன் பாத்தியா!!).



ஆனால், விதி சிரித்தது.



பெட்டிகளின் எடை அதிகமாகி விட்டதால், சில புது பொருட்களை தங்க்ஸ் விட்டுச் சென்றுவிட, அவற்றை நான் தனியாக போய் கடைகளில் திருப்பிக் கொடுக்கணும்.



யாராவது என் கூட வர்றீங்களா, ப்ளீஸ்?



****



Read more...

Tuesday, February 7, 2012

சென்னை பள்ளிகள் - பாகம் 2


பாகம் 1

வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்து பள்ளியில் சேருபவர்களுக்கு மிக முக்கியமான பிரச்னை - ஓய்வறையின் சுத்தம், சுகாதாரம். உடனே சிலர் -

ஆரம்பிச்சிட்டான்யா. இங்கே இருக்கும்போது இதே தூசி, சத்தம் மற்றும் சுத்தத்தில் இருந்தவன்தானே. கொஞ்ச நாள் அமெரிக்கா போயிட்டு வந்தா, இங்கே குப்பை, மாசு அதிகம்னு ஆரம்பிக்கறதா - அப்படின்னு சொல்லலாம். இரண்டு இடங்களிலும் இருந்ததால்தான் அந்த வித்தியாசம் தெரிஞ்சுது. இல்லேன்னா, எங்களுக்கும் தெரிஞ்சிருக்காது. சரிதானே?


மேலும் இன்னொரு பாயிண்ட். இப்பவும் நாங்க (adults) இந்தியாவுக்கு வந்தா, ஓரிரு நாளில் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டாலும், சிறுவர்/சிறுமியர்க்கு மிகவும் கடினம். சாலை, சுற்றுப்புறங்களில் அசுத்தத்தை அவர்கள் பொறுத்துக் கொண்டாலும், 'ஓய்வறை சுத்தம்' இந்த விஷயத்தில் கண்டிப்பாக பிரச்னை செய்வார்கள்.



சென்னையில் எங்க வீட்டின் மேல் குடியிருக்கும் ஒரு நண்பர், சென்ற வருடம் அமெரிக்காவிலிருந்து திரும்பி, தன் இரு குழந்தைகளுக்கு பள்ளி
வேட்டையாடியிருக்கிறார். நங்கநல்லூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்களில் குறைந்தது ஆறு பள்ளிகளை பார்த்து, அங்கே ஓய்வறையை பார்க்க முடியுமாவென்று கேட்டதற்கு அந்த பள்ளிகளில் அதெல்லாம் பார்க்க முடியாது என்றிருக்கின்றனர். அப்படி பார்க்க அனுமதித்த ஓரிரு பள்ளிகளில், குழந்தைகள் (அ)சுத்தம் காரணமாக குழந்தைகள் மறுத்துவிட (ஆஸ்ரம்'மும் இதில் சேர்த்தி) கடைசியில் நங்கநல்லூர் செல்லம்மாள் பள்ளியில் ஓய்வறை ஓரளவு சுத்தமாக இருந்ததால் அங்கு கொண்டு சேர்த்து விட்டார்.



போன பகுதி எழுதும்போது சொல்லாத செய்தி இப்போ. டிவிட்டரில் இருக்கும் நண்பர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். என் குடும்பமும் இந்தியா போயாச்சு. லீவுக்கு இல்லை. அங்கே போய் செட்டில் ஆவதற்கு. ஏன் அந்த முடிவு என்கிற கேள்விக்கு பதில் இன்னொரு பதிவில். இந்த காரணத்தால்தான் பள்ளி ஆராய்ச்சியே துவக்கினோம்.



மேற்படி சென்ற ஆண்டு அதே ஏரியாவுக்கு ஏறக்குறைய அதே வயது குழந்தைகளை சேர்க்கச் சென்ற நண்பர் ஒருவரின் அனுபவங்களை அப்படியே கேட்டு, சுட்டு, அதன்படியே நடக்கலாமென்ற முடிவுக்கு வந்தோம்.



சென்னையிலேயே பிறந்து பள்ளிக்குப் போகும் சிறுவர்/சிறுமியர்களுக்கு ஓய்வறை பிரச்னைகள் இல்லையா? அவங்களுக்கு மட்டும் சுத்தமா இருக்கான்னு கேட்டா அதுக்கும் ஒரு உதாரணம் இருக்கு.



எங்க ஏரியாவில் இன்னொரு பள்ளி. ரொம்ப வருடமா இருக்கு. நல்லா சொல்லித் தராங்கன்னு மக்கள் அங்கே போய் பசங்களை சேர்க்கறாங்க. ஆனா அங்கே இந்த ஓய்வறை சுத்தம் கொஞ்சம் பிரச்னை. இதை அந்த மாணவர்கள் ஓரிருவர் வீட்டில் போய் புகார் சொல்ல, நம் தமிழ் மக்கள் வழக்கம்போல் அவர்களை திட்டி, அட்ஜஸ்ட் பண்ணிண்டு போ என்று சொல்ல, ஒரே ஒரு தந்தைக்கு மட்டும் கோபம் வந்திருக்கிறது. அவர், தன் பையனின், நண்பர்களின், தந்தைகளை தொடர்பு கொண்டு, பள்ளிக்கு போய் கேட்கலாம் என்றதற்கு - என்ன சொல்லியிருப்பார்கள்னு நினைக்கிறீங்க. கரெக்ட். நமக்கெதுக்கு சார் வம்பு, நான் ரொம்ப பிசி, நான் ஊர்லே இல்லை - இந்த பதில்களில் ஒன்றுதான்.



சரின்னு நம்ம நண்பரும் பள்ளிக்குப் போய் புகார் செய்யலாம்னா, பள்ளிக்கு உள்ளேயே அனுமதிக்க வாயிற்காப்போன் மறுத்திருக்கிறார். ரொம்ப நேரம் கேட்டுப் பார்த்த நண்பர், வாயிலில் இருந்தபடியே உரத்த குரலில் சத்தம் எழுப்ப, 'உள்ளேயிருந்து' அனுமதி வந்திருக்கிறது. இவரும் போய் புகார் கூற, பிரச்னையை சரி செய்கிறேன் என்று சொல்லியிருக்கின்றனர். அவ்வப்போது தன் மகனிடம் அப்டேட் கேட்டுக் கொண்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப் போவதாக சொன்னார் நம் நண்பர். அந்த பள்ளியின் பேர் சொல்லவேயில்லையே? மாடர்ன்.



சுத்தம் சுகாதாரம் பற்றிய இன்னொரு பெரிய பிரச்னை இருக்கு. மேலே படிங்க.



பிரின்ஸ் என்றொரு பள்ளி எங்க ஏரியாவில் இருக்கிறது. அங்கு படிப்பவர்கள் குறைவாக மதிப்பெண் எடுத்தாலோ, ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டாலோ, தண்டனை மிகக் கடுமையானதாக இருக்குமாம். (இந்த தகவல்கள் எல்லாம் இணையத்திலேயே - நிறைய விவாத தளங்களில் - இருக்குது). இதைவிட கொடுமை என்னன்னா, (எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும்) மாணவியருக்கு ஏற்படும் பிரச்னைகள். வகுப்புக்கு நடுவில் ஓய்வறைக்கு போகணும்னு சொன்னாலும் அனுப்ப மாட்டாங்களாம். ஏன்? இப்ப என்ன அவசரம்? அதெல்லாம் லஞ்ச் டைம்லே போயிக்கோன்னு சொல்லிடுவாங்களாம்.


இதெல்லாம் சும்மா, அப்படியெல்லாம் இருக்காது, அப்புறம் எப்படி அங்கே நிறைய பேர் (3000௦௦௦+) படிக்கறாங்கன்னு கேட்டா, நாங்க செய்த ஆராய்ச்சியில், பேசிய நண்பர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள்தான் இவை. அவ்வளவுதான்.



தொடரும்...




Read more...

Friday, February 3, 2012

எங்க அலுவலகமும் கருத்துக் கணிப்புகளும்!






எங்க அலுவலகத்தில் அப்பப்போ விதவிதமான கருத்துக் கணிப்புகள் நடக்கும். எல்லாரும் கட்டாயம் பதில் அளிக்க வேண்டுமென்று கூட்டம் போட்டு, தொலைபேசி, மின்னஞ்சல் அனுப்பியெல்லாம் கெஞ்சுவார்கள். நாங்களும் எங்க பொன்னான நேரத்தை செலவிட்டு அதில் பங்கு பெற்று பதிலளித்துவிட்டு, அந்த பதில்களுக்கேற்ப மாற்றத்தை விரும்பி
காத்திருந்தால்... காத்திருந்து காத்திருந்து காலங்கள் போய்விடும். அப்படி நாங்க எதிர்பார்ப்பது மதுரை கருத்துக் கணிப்பின் பின்விளைவுகளைப் போல மாற்றங்களை அல்ல. சிறுசிறு மேம்படுத்துகைகள் (enhancements) மட்டுமே. ஆனா அப்படி எதுவுமே நடக்காதுன்னு பல வருடங்கள் கழித்தே புரிந்தது. அலுவலகத்தில் இதெல்லாம் ஜகஜமப்பான்னு சொல்றீங்க. சரி.
மேலே (கீழே) படிங்க.


Support Departments என்று சொல்லக்கூடிய துறைகளின் வேலையை மதிப்பிடும்படியான ஒரு கக'வில் எப்போதும் ஒரு தமாஸ் நடக்கும். எங்க அலுவலகத்தில் வெளிநாட்டில் இருக்ககூடிய (ஏறக்குறைய) அனைவருக்கும் பிரச்னை தரக்கூடிய துறை ஒண்ணு இருக்கு - அதான் Visa எல்லாம் வாங்கித் தரும் துறை. நிறைய பேர் அந்தப் துறையின் மேல் செம கடுப்புலே இருப்பாங்க. ஆனா, வருடத்திற்கு இரண்டு முறை வரும் இந்த கருத்துக்கணிப்பில், அந்த துறையின் சார்பாக கேள்விகளே இருக்காது. பொத்தாம் பொதுவாக சில கேள்விகளை கேட்டுவிட்டு மிச்சத்தை சாய்ஸில் விட்டுவிடுவார்கள்.


அதுவும் நாம நீட்டி முழக்கி எழுத இடம் கொடுக்காமல், நான்கு பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் கேள்விகளாக கொடுத்து டென்சனாக்கி விடுவார்கள். எதுக்கும் பதிலே கொடுக்காமல், வெளிநடப்பு செய்தாலும் பிரச்னைதான். அடுத்த அப்ரைசல் ->  ஆப்ரைசல்.



ஒரு ஐந்தாயிரம் பேரை கக'வில் பங்கு பெறச் செய்து பதில் பெறுவதும் சுலபமானதல்ல. கொடுத்ததை பூர்த்தி செய்தோமா, அடுத்த வேலையை பார்த்தோமான்னு இல்லாமல் நம்ம ஆட்களும் அதில் சந்தேகமா கேட்டு நோண்டுவாங்க.


ஒரு முறை நடந்த விஷயம். எங்க அலுவலகத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவனம் மூலமாக ஒரு கக நடத்தினாங்க.


அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு கடவுச்சொல் கொடுத்து, அதை வைத்து தளத்தில் பதிலளிக்க வேண்டும். ஒருவருடைய கடவுச்சொல்லை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லிவிட்டார்கள். வழக்கம்போல் பலருக்கு பலவிதமான பிரச்னைகள். ஒருவருக்கு தன் கடவுச்சொல்லை பயன்படுத்தினாலும், கக'க்குள் போகமுடியவில்லை. தன் மேனேஜரிடம் சொல்ல, அவர் தன்னுடைய மேனேஜரிடம் சொல்ல, அவரோ தன் கடவுச்சொல்லை அனுப்பிவிட்டார்.


நம் நண்பரும் அதை வைத்து உள்நுழைய, அந்த மேலாளர் கொடுத்துள்ள பதில்கள் அப்படியே தெரிய வந்திருக்கிறது. அதுவும் எப்படி? அலுவலகத்தை கன்னாபின்னாவென்று திட்டுவதைப் போல், அனைத்தும் மிகக் குறைந்த மதிப்பெண்களைக் கொண்ட / கடுமையான பதில்களை கொடுத்திருக்கிறார்.


நாட்டுப்பற்றைப் போல் அலுவலகப்பற்றைப் பற்றி அருமையாக பேசும் - மிகப் பெரிய பதவியில் இருக்கும் அவரே இப்படி திட்டும்போது நாமும் அப்படியே செய்தால் என்ன என்று அப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது. அப்படி செய்தாலும், ஒன்றும் மாற்றம் இருக்காது என்று அடுத்த வருடத்தில் தெரிந்தது.


அதனால் இப்பல்லாம் கக'ன்னாலே ஜாலியாயிடும். கண்ணை மூடிக்கிட்டு ஏதோ ஒரு பதிலைக் கொடுத்து மூடிவிட்டால், அடுத்த கக வரும்வரை பிரச்னையில்லை. நிஜமான தேர்வுகளிலேயே காசை சுண்டிப் போட்டு பதிலளிச்சவங்க நாங்க. எப்பூடி?


***


பிகு: பதிவு முழுக்க கக = கருத்துக் கணிப்பு. நீங்க வேறேதும் நினைச்சிடாதீங்க.


***



Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP