Sunday, March 20, 2016

தாசர் மாபியா - வாட்சப்பில் வினாடிவினா

வாட்சப்பில் வினாடிவினா

போன ஆண்டு நடுவில் ஆரம்பித்தேன் அந்த கேள்வி பதில் நேரம் - குடும்ப வாட்ஸப்பில். எதைப் பற்றி? - வேறென்ன. நம்ம தாசர் பாடல்களைப் பற்றிதான். தாசர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் எழுதிய புத்தங்கள், பாடல்கள் இன்னபிறவைப் பற்றி. அந்த வினாடிவினா நிகழ்ச்சியில், தினம் ஒரு கேள்வி கேட்கப்படும். விடையை எனக்கு தனியாக வாட்சப் செய்ய வேண்டும். பொதுவில் போட்டுவிடக் கூடாது. தினம் இந்த எச்சரிக்கையைச் செய்தும், சில நாட்கள், சிலர் தங்கள் விடையை பொதுவிலேயே போட்டுவிடுவர். பிறகு ‘மன்னிச்சு’ கேட்டும் விடுவர்.

50 நாட்கள் நடத்தியதில், தினமும் சராசரியாக 8-10 பேர் விடையளித்து வந்தனர். பலர் சரியாக. சிலர் சரியாக-தப்பாக. எனினும், மக்களின் பொதுஅறிவுக்காக போட்டியை நடத்தி, தினமும் மதிப்பெண்கள் வழங்கி வந்ததால், மக்களும் ஆர்வத்துடன் கலந்து விடையளித்து வந்தனர்.

அது போன ஆண்டு.

நிற்க.

இந்த ஆண்டு தாசர் பாடல்களைப் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டி, இதற்கான ஒரு அமைப்பில் சென்று சேர்ந்தபோது அவர்களிடம் மேற்கண்ட வினாடிவினாவைப் பற்றி சொன்னேன். உடனே இதை ஏன், நம் அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு செய்யக்கூடாதுன்னு கேட்டு, உடனடியாக ஒரு திட்டமும் தயாரிக்கப்பட்டது. இதற்கான பல்வேறு yahoo, google groupsகளில் விளம்பரம் செய்யப்பட்டு ஆர்வமுள்ள மக்களைத் திரட்டும் வேலையும் நடந்தது.

வாரம் இரு முறை (திங்கள் & வியாழன்) தலா 10 கேள்விகள் கேட்கப்படும். விடையளிக்க அடுத்த மூன்று நாட்கள் கால அவகாசம். விரிவான விடையெல்லாம் கிடையாது. ஓரிரு சொற்கள் மட்டுமே. இதெல்லாம் விதிகளாக சொல்லப்பட்டன.

சென்ற வாரம், முதல் பகுதி கேள்விகள் கேட்கப்பட்டன. இதுவரை 30 பேர் உள்ள குழுவில் 15 பதில்கள் வந்தன. அமெரிக்கா, வட இந்தியாவிலிருந்தும் சேர்ந்திருக்கின்றனர்.

கன்னட தாச சாஹித்யத்தைப் பற்றி மக்களை தினமும் ஒரு சில நிமிடங்களாவது படிக்க, யோசிக்க வைக்கணும்னு இந்த முயற்சி. எவ்வளவு நாட்கள் ஓடுதோ ஓடட்டும்னு துவக்கியாச்சு. இதில் இன்னொரு லாபம் என்னன்னு பார்த்தீங்கன்னா, கேள்விகள் கேட்பதற்காக நானும் நிறைய படிக்க வேண்டியிருக்கு. பொதுநலம் கலந்த சுயநலம். படித்து, கேள்விகளைத் தொகுத்து, வெளியிட்டு, விடைகளை சரிபார்த்து, அவற்றை வெளியிட்டு - முதல் சீசனுக்கு 3 மாதத்துக்காவது போட்டியை நடத்தணும்னு அவா. மற்றவை புரந்தரதாசர் கையில்.

***

Read more...

Thursday, March 10, 2016

கணக்கில் மதிப்பெண் குறைந்தால் பரவாயில்லை.


கணக்கில் மதிப்பெண் குறைந்தால் பரவாயில்லை.

ரஜினி ஜோக்ஸ் என்ற ஜானரில் ஒரு ஜோக் வரும். ஒரு தேர்வில் ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் என்று இருந்தபோது, தலைவர் எல்லா கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டு, ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்கவும் என்று எழுதிவிட்டு வந்தார் என்று இருக்கும்.

அதே போல்..

நேற்று மாலை 4 மணி. ட்ரிங் ட்ரிங். அப்பா, கணக்கு மதிப்பெண் வந்துடுச்சு. நான் 92 எடுத்திருக்கேன்.

சூப்பர்மா. வெரி குட்.

அப்புறம் சிறிது நேரம் கழித்து மறுபடி ட்ரிங் ட்ரிங்.

ஒரு தப்பு நடந்து போச்சுப்பா. நான் இப்பதான் பார்க்கிறேன்.

என்னம்மா?

Part-Bயில் ஐந்து கேள்விகளில் மூன்று எழுதினால் போதும்னு போட்டிருக்கு. தேர்வில் நான் அதை கவனிக்காமல், ஐந்தையும் எழுதியிருந்தேன்.

சரி.

அதை என் மிஸ்ஸும் கவனிக்காமல், எல்லாக் கேள்விகளுக்கும் மதிப்பெண் கொடுத்திருக்காங்க. அதையெல்லாம் சேர்த்துதான் 92 வந்திருக்கு.

நல்லவேளை, மொத்த மதிப்பெண்கள் 100க்கு மேல் போயிருந்தா, கவனிச்சிருப்பாங்க. இப்போ கவனிக்கலை. அதானே?

அதில்லைப்பா. நான் நாளைக்கே போய், இதை சரியா திருத்துங்கன்னு சொல்லிடப் போறேன்.

மதிப்பெண் குறைஞ்சிடுமே பரவாயில்லையாம்மா?

அது ஒண்ணும் பிரச்னையில்லைப்பா. எவ்ளோ குறையுதோ குறையட்டும்.

சரிம்மா. அப்படியே செய்.

இன்று மாலை 4 மணி. ட்ரிங் ட்ரிங்.

அப்பா. கணக்கு மிஸ் எல்லார் முன்னாடியும் என்னைப் பாராட்டினாங்க.

அது சரி. மதிப்பெண் என்ன ஆச்சு.

92லிருந்து 78க்கு வந்துடுச்சு. ஆனாலும் பரவாயில்லை. நான் ஒரு Honest girlன்னு மிஸ் சொன்னாங்க. இப்படியே இருக்கணும்னு சொன்னாங்க. நானும் இப்படியே இருக்கப் போறேன்.

சூப்பர்மா. வாழ்த்துக்கள்.

***

ஒரு Honest Sathyaக்கு Honest பொண்ணுதானே பொறக்கும்னு obvious கமெண்ட்லாம் போட வேண்டாம் மக்களே!!

***


Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP