Monday, June 30, 2008

சென்னையில் GPS பயன்படுத்தினால்!!!

1. காலை 7 மணிக்கு அறிவுகெட்டவர்கள்தான் சிகப்பு விளக்கில் நிற்பார்கள். அதனால் நிற்காமல் நேராக 1 கிமீ. செல்லவும்.

2. காலை வணக்கம். புறப்படும் முன் பத்து ரூபாய் தாள்கள் சுமார் இருபதை எடுத்துக் கொள்ளவும். அங்கங்கே நிற்கும் 'உறவினர்களுக்குக்' கொடுக்க உதவும்.

3. வலப்பக்கம் திரும்பவேண்டுமென்று நான் சொன்னால், உடனே திரும்பவேண்டும். நீங்க எந்த 'Lane'ல் இருந்தாலும் எனக்கு கவலையில்லை.

4. தங்களின் பயனுக்காக, சென்னைச் சாலைகளில் நெடுங்காலமாக இருக்கும் மேடு, பள்ளங்களையும் எங்கள் 'ஊர்சுற்றி' GPS-இல் சேர்த்துள்ளோம்.

5. உங்கள் வலப்பக்கத்தில் 'மாநகரப் பேருந்து'க்கு இடம் கொடுக்காதீர்கள். பேருந்து நிறுத்தம் வரும் வரையில் சாலையின் வலப்பக்கம் செல்லும் அவர்கள், சட்டென்று உங்களை அணைத்து இடதுபக்கம் கொண்டு போய், பேருந்து நிறுத்தத்தில் உங்களையும் ஏற்றி விடுவார்கள்.

6. பாதசாரிகள் சாலையை கடக்குமிடம் வருகிறது. அவர்கள் வருகிறார்களென்றால், சற்று வேகமாக செல்லவும். அவர்கள் தங்கள் 'வீட்டில் சொல்லிவிட்டு வந்தார்களா' என்று கேட்கவும்.

7. நாந்தான் அப்பவே வலது பக்கம் திரும்பவேண்டுமென்று சொன்னேனே. என்னால் 'மாற்றுப்பாதை'யெல்லாம் கணிக்க முடியாது. உடனே ஒரு U-turn அடிக்கவும். ஒரு வழிச்சாலையாக இருந்தாலும் பரவாயில்லை.

8. உங்களுக்கு ஏதேனும் அவசர வேலையிருந்தால், சிகப்பு விளக்குக்கு அந்தப் பக்கம், யாராவது 'மாமா' இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, இல்லையென்றால் போய்க்கொண்டே இருக்கவும்.


9. போக வேண்டிய இடம் இன்னும் இரண்டு கி.மீ. தூரம் இருக்கும்போது - ஏன் வண்டியை நிறுத்தி கதவை திறந்தீர்கள், திரு.வெண்ணெய்?

10.கடந்த 5 நிமிடமாக நீங்கள் 'ஒலிப்பான்' பயன்படுத்தவில்லை. தேவையேயில்லை என்றாலும், உடனடியாக 'ஒலிப்பானை' நீளமாக அழுத்தவும்.

Read more...

Thursday, June 26, 2008

சூப்பர் ஸ்டார் - மென்பொருள் நிபுணரானால்!!!

Client கிட்டே போய் ஏன் 'ஓடற மென்பொருள் ஓடாமெ இருக்காது... ஓடாத மென்பொருள் ஓடாது' அப்படின்னீங்க... அவன் என்னைப் புடிச்சி கத்தறான்... மென்பொருள் ஓடுமா அல்லது ஓடாதா. ஒழுங்கா சொல்லுன்றான்...

---


என்னங்க, நாமென்ன தமிழ்மணத்திலே பதிவு போடறதுக்கா பொண்ணு எடுத்தோம், தமிழ் கலாச்சாரமே தெரியலேன்றதுக்கு; Java தெரியுதா பாருங்க அந்த பொண்ணுக்கு, அது போதும்.

---

இரண்டும் (modules) ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. ஒன்றும் (மென்பொருள்) அசையாது நின்று போனதுன்னு சொன்னா போதாது சார். உக்காந்து சரி பண்ணுங்க. அதுக்குதான் உங்களை வேலைக்கு வெச்சிருக்கு.
---

நல்ல codingலே ஆண்டவன் நிறைய bugsகளை கொடுப்பான். ஆனா productionலே பிரச்சினை வராதுன்னீங்களே.. இப்போ பாருங்க, சுத்தமா படுத்துடுச்சு. users எல்லாம் கத்தறானுங்க. போய் சரி பண்ணுங்க.

---


எழுதுனது 10 வரி Code. அதிலே 20 தப்பு. இதுக்கு நடுவிலே 40 தடவ 'இது எப்படி இருக்கு, இது எப்படி இருக்கு'ன்னு சொல்லிட்டீங்க... ம். ஒண்ணும் சரியில்லை.
---


இதோ பாருங்க. நமக்குன்னு சில coding standards இருக்கு. நீங்க 'என் coding, தனி coding' அப்படின்னு தனியா எதுவும் செய்யமுடியாது.

---

Client சொல்றான்... Coding பண்றான்.. அப்படின்னு நீங்க பாட்டுக்கு பண்ணமுடியாது. எதுவாயிருந்தாலும் உங்க குழுத்தலைவர்கிட்டே சொல்லிட்டு பண்ணுங்க.

---

அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அதிகமா bugs கொடுக்கற மென்பொருள் நிபுணரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்றீங்க. ரொம்ப சரி.

---

ஏங்க, இவருக்கு மென்பொருள் செய்யத்தெரியலேன்னா பரவாயில்லை.. கோபப்படாதேன்னு சொல்லுங்க.

ஏன், என்ன ஆச்சு?

தினமும் இவர் கோபத்தோட 'விசைப்பலகை'யைப் பார்க்கிறார். அது 'பக்'குன்னு பத்திக்குது. என்னாலே, தினமும் ஒரு புது விசைப்பலகை கொடுக்கமுடியாது.

Read more...

Wednesday, June 25, 2008

கேள்வி-பதில் - இரண்டாம் பகுதி!!!

முன் -1: போன கேள்வி-பதில் பதிவுக்கு கிடைத்த அமோக ஆதரவும், ஆயிரக்கணக்கான பின்னூட்டங்களும்(!!!) அதே மாதிரி இன்னொரு பதிவு போட என்னைத் தூண்டியது. அந்த பதிவைப்போலவே, இந்த பதிவுக்கும் கேள்வி - பதில் இரண்டும் நானே.

முன் -2: சரி..சரி... மறுபடி வேறே ஏதோ நாலு மேட்டர் இருக்கு.. அதை ஒரே பதிவுலே போடறதுக்கு வழிபண்றான்னு நிறைய பேர் கரெக்டா சொல்றது என் காதுக்கு கேட்குது. இனி பதிவு.

-----

கே: பாரதியார் சொன்னா மாதிரி 'அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' செய்திருக்கிறீர்களா?

ப: அச்சச்சோ. அப்படியெல்லாம் செய்ததில்லை. அதற்கு பதிலாக... இதை படியுங்கள்.

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தேன். சரியான மழை. அப்படியே நனைந்து கொண்டே ஒரு ஓரமாக போய் 'புளிச்'சென்று உமிழ்ந்தேன். அடுத்த நொடி என் முகமெல்லாம் என்னுடைய எச்சில். என்னடான்னு பார்த்தால், அன்றுதான் புதிதாக ஒரு 'முகமூடி' வாங்கிப் போட்டிருந்தேன். அதுவரை 'முகமூடி' போட்டு பழக்கமேயில்லாததால், அது போட்டிருந்த நினைவேயில்லாமல் துப்பிவிட்டேன். பிறகென்ன, வழிந்ததை அதே மழையில் கழுவிவிட்டு வீடு போய் சேர்ந்தேன்.

கே: 'சடசட'வென்று பல காவல்துறையினரோ அல்லது பாதுகாவலர்களோ சூழப்பட்டு பயந்திருக்கிறீர்களா?

ப: ஒரு சமயம் அப்படி நடந்திருக்கிறது. நான்கைந்து பாதுகாவலர்கள் சூழ்ந்துவிட்டனர். என்னையல்ல. எங்கள் பாப்பாவை.

இங்கே ஒரு பூங்காவில் ஏதோ ஒரு Ride-ல் நான் மட்டும் உட்காரப்போனேன். தங்கமணியும் பாப்பாவும் கீழேயிருந்து என்னை பார்த்துகொண்டு நின்றனர். என்னை புகைப்படம் எடுக்கவேண்டி தங்கமணி பாப்பாவை விட்டுவிட்டு சிறிது முன்னாடி வந்தார் பாருங்கள் - தபதபவென்று நான்கைந்து பாதுகாவலர்கள் பாப்பாவை சூழ்ந்துகொண்டுவிட்டனர்.

தங்கமணியும் என்னமோ ஏதோவென்று பயந்து பாப்பா பக்கத்திலே போனால், ஒருவர் 'இப்படி பாப்பாவை தனியாக விட்டுவிட்டு போகக்கூடாது' என்று எச்சரித்துவிட்டுப் போனார்.


கே: 'வீட்லே சொல்லிட்டு வந்துட்டியா?' என்று யாராவது உங்களை 'அன்பாக' சொல்லியிருக்கிறார்களா?

ப: ஆம். ஆனால் அப்படி கேட்டவர் என் வண்டியில் என் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார்.

புதரகம் வர்றதுக்காக கார் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். அந்த நிறுவனத்தின் உரிமையாளர்தான் பயிற்சியாளர். அன்று அவர் சொந்த வண்டியையே எடுத்து வந்திருந்தார். ஒரு இடத்தில், வலது பக்கம் திரும்ப வேண்டும். எதிர் வரும் போக்குவரத்திற்காக நிறுத்த வேண்டும். ஆனால், நான் நிறுத்தாமல், மூன்றாவது கியரில் இருந்தபோது அப்படியே சடாரென்று திரும்பிவிட்டேன்.

வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு, அந்த உரிமையாளர் "வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டியா? யார்கூடவாவது மோதறதுக்கு என் வண்டிதான் கிடைச்சுதா? என்று ஆரம்பித்து - வடிவேலுவிடம் பார்த்திபன் "உன் மச்சான் உன்னை எப்படியெல்லாம் திட்டினான்...#$###$#" என்று சொல்வாரே, அந்தளவுக்கு திட்டித் தீர்த்தார்.

கே: ஒருவருக்கு புறையேறினால், வேறு யாரோ அவர்களை நினைப்பதால்தான் அப்படி ஆகிறது - என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

ப: அப்படி ஒரு நம்பிக்கை தங்கமணிக்கு இருக்கிறது. எனக்கு எப்போது புறையேறினாலும் - உங்கள் அம்மா இந்தியாவில் உங்களை நினைக்கிறார் போல என்று கூறுவார். எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

ஆனால், தங்கமணியின் நம்பிக்கையை நான் பாழாக்க விரும்பவில்லை. அதனால், வாரயிறுதியில் வீட்டில் இருக்கும்போது, மாலை சுமார் 3 மணியளவில் (இந்தியாவில் நள்ளிரவு) - நான் 'மாமனார், மாமனார்' என்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு கூறிக்கொண்டே இருப்பேன். ஏதோ என்னால் முடிந்தது!!!


Read more...

Tuesday, June 24, 2008

பையன் திருந்திட்டான் - அரை பக்கக்கதை

என்னங்க, நம்ம பையனைப் பத்தி அப்படி இப்படின்னு நினைச்சோம்லே, அதெல்லாம் தப்புன்னு இப்போ தெரிஞ்சிக்கிட்டீங்களா?

என்னடி சொல்றே? கொஞ்சம் விவரமா சொல்லு.

நம்ம பையன் சுரேஷ், சென்னையிலே வேலை பாத்துக்கிட்டிருந்தாலும், கிராமத்திலே இருக்கிற இந்த வீட்டுக்கே வரமாட்டான். நாலஞ்சு மாசத்துக்கு ஒரு தடவை வந்தாலும், யாரோடவும் பேசாம டிவி பாத்துட்டு அப்படியே கிளம்பிப் போயிடுவான்.

அதனாலே?

கேளுங்க. ரூம்லே இருக்கிற பாட்டி பக்கத்துலேகூட போகமாட்டான். அவங்களுக்கு குடிக்க தண்ணி குடுறான்னா, நீயே போய் குடு, அந்த ரூமுக்கு நான் போகமாட்டேன்னுடுவான்.

இப்போ என்ன சொல்ல வர்றே?

இந்த முறை பாத்தீங்களா? அப்படியே தலைகீழா மாறிட்டான். போன வாரம் வந்தவன், டிவியே போடல. என்கிட்டே ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தான். அவனோட சின்ன வயசிலே நடந்ததையெல்லாம் சொல்லச் சொல்லி நச்சரிச்சான். எனக்கு சமையல்லே கூட ஒத்தாசையா இருந்தான்னா பாத்துக்கோங்களேன்.

ஏண்டி, சரியா பாத்தியா? அவனுக்கு பைத்தியம் கிய்த்தியம் பிடிக்கலியே?

ச்சீ. போங்க. பாவம் சின்னபுள்ள. இன்னும் கேளுங்க. என்கிட்டே மட்டுமில்லேங்க. பாட்டிகூடவும் அவன் ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தான். ரெண்டு நாளா அவங்களுக்கு மருந்து, தண்ணியெல்லாம் அவனே போய் குடுத்திட்டிருந்தான்.

அப்புறம்?

அப்புறம்.... ம்.. கையோட ஒரு காமிரா கொண்டு வந்திருந்தான். நம்ம வீடு, கிணத்தடி, மாடு-கன்னு இதையெல்லாம் படம் பிடிச்சிக்கிட்டு போனான். எனக்கென்னவோ, அவன் நம்மளையெல்லாம் பிரிஞ்சியிருக்கோம்னு ஃபீல் பண்றான்னு நினைக்கிறேன். காலாகாலத்திலே, அவனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டுடணும். என்ன சொல்றீங்க.

ம்..ம்.. போடலாம் போடலாம். முதல்லே எனக்கு சோத்தை போடு.

(ஊரிலிருந்து சென்னை போய்கிட்டுருந்த சுரேஷ் - தன் நண்பனுக்குத் தொலைபேசுகிறார்).

மச்சான், இனிமே ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஊருக்குப் போயிடணும். அம்மா, அப்பா, பாட்டியோட நிறைய பேசணும். பின்னே என்னடா, நீங்கல்லாம் தினமும் ஒரு பதிவா போடறீங்க. எனக்கு எதுவுமே தோண மாட்டேங்குது. இதுக்காவே இந்த தடவை ஊருக்குப் போய் நிறைய மேட்டர் தேத்தியிருக்கேன். நாளையிலேர்ந்து ஐயாவோட பதிவைப் பாரு.

எங்க வீட்டு ஃபோட்டோ, கிராமத்து சமையல், என்னோட சின்ன வயசு நிகழ்வுகள், எங்க பாட்டி காலத்து வாழ்க்கை சூழல் - இப்படின்னு ஏகப்பட்ட சரக்கு என் கையிலே இருக்கு. வர்றேன்.. வர்றேன்... நாளையிலேர்ந்து தமிழ்மணத்தை ஒரு கலக்கு கலக்கறேன் பாரு... வச்சிறட்டா... பை..

Read more...

Monday, June 23, 2008

காருக்குள்ளே கசமுசா!!! - துப்புத் துலக்குகிறார் கவுண்டமணி

"துப்பறியும் நிபுணர்" கவுண்டமணி - போர்டு பளபளப்பாக மின்னுகிறது. வேகமாக உள்ளே நுழைகிறார் செந்தில்.


அண்ணே... அண்ணே...

என்னடா, தேங்கா மண்டையா, என்ன இப்படி ஓடிவர்றே... டாக்டர் விஜய் கட்சி கிட்சி தொடங்கிட்டாரா?

அட.. அவரு தொடங்கத்தான் போறாரு. ஆனா விஷயம் அதில்லேண்ணே..

பின்னே, தசாவதாரத்திலே இன்னும் ரெண்டு வேஷத்தை அதிகரிச்சிட்டாங்களா?

அதுவுமில்லேண்ணே... நான் சொல்ல வந்தது என்னன்னா...

சீக்கிரமா சொல்லுடா மண்வெட்டி மண்டையா... என் டயத்தை வேஸ்ட் பண்ணாமே வந்த விஷயத்தை உடனே சொல்லு.

இத கேளுங்கண்ணே. பெரிய தெருவில் ஒரு புத்தம் புதிய கார் வந்து நிக்குது.

அடேய், பெரிய தெருவுன்னா, ஒரு கார், ஒரு லாரி இதெல்லாம் வந்து நிக்கும்தாண்டா. அதையெல்லாம் சொல்லி இந்த டிடெக்டிவ் நேரத்தை வீணாக்காதே.. ஓடிப்போயிடு...

முழுசா கேளுங்கண்ணே.. அந்த கார் கதவு முழுசா ஏற்றப்பட்டிருக்கு... பத்து நிமிஷமா கார் நல்லா குலுங்கிக்கிட்டிருக்கு. போற வர்ற மக்களெல்லாம் அந்த காரை ஒரு மாதிரி பாத்துட்டுப் போறாங்க.

டேய், தர்பூஸ் மண்டையா, 20-20 மேட்ச் முடிஞ்ச பிறகு, மக்கள் பொழுதுபோக்கறதுக்கு ஒண்ணுமே இல்லாமே ரொம்ப கஷ்டப்படுறாங்க. இத மாதிரி ஏதாவது மாட்டிச்சுன்னா, நின்னு வேடிக்கை பாக்கத்தான் செய்வாங்க.. இதிலே நாம என்ன செய்யணும்னு சொல்றே.

என்னண்ணே ஒண்ணுமே புரியாம பேசறீங்க, காருக்குள்ளே ஏதாவது கசமுசா நடக்குதான்னு நீங்க கண்டுபிடிச்சி, அவங்களை போலீஸ்கிட்டே ஒப்படைச்சீங்கன்னா, நம்மளுக்கும் ஏதாவது பரிசு கிரிசு கிடைக்கும்ணே...

டேய்..டேய்.. நிறுத்து... இங்கே நாந்தான் டிடெக்டிவ். நீ என்னுடைய அசிஸ்டென்ட்தான். ஓகே. இந்த கேஸை நான் எடுக்கறதா முடிவு பண்ணிட்டேன். ஃபாலோ மீ.


பெரிய தெருவுக்குப் போகிறார்கள். அங்கே அந்த கார் நின்றுகொண்டிருக்கிறது. புத்தம் புதிய சிகப்பு நிற கார். குளிர் கண்ணாடி ஏற்றப்பட்டிருக்கிறது. ஒரு பக்கமாக குலுங்கிக் கொண்டிருக்கிறது.


பக்கத்தில் போய் காரைத் தட்டுகிறார்.

டேய்..டேய்... மக்களா.. ஏன் இப்படி அராஜகம் பண்ணுறீங்க... இதை கேட்க யாருமேயில்லையா... அதுக்குக்கூட நாந்தான் வரணுமா....

(காரிலிருந்து சத்தமே இல்லை)

காருக்குள்ளே யாரிருந்தாலும் மரியாதையா வெளியே வந்துடுங்க... இந்த டிடெக்டிவ்க்கு கோபம் வந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.

(மறுபடியும் அமைதி)

ஓகே. சிங்கத்தோட மோதணும்னு வந்துட்டீங்க. வேறே வழியே இல்லை. கொஞ்ச நாளாய் பயன்படாமலிருந்த என் துப்பாக்கிக்கு வேலை வந்துடுச்சு... டேய்.. இப்போ நான் 1,2,3ன்னு பத்து வரைக்கும் எண்ணுவேன். அதுக்குள்ளே மரியாதையா வெளியே வந்துடுங்க. இல்லேன்னா சுட்டுடுவேன்.

(அமைதி தொடர்கிறது. கவுண்டமணி 1,2,3 என்று எண்ண ஆரம்பிக்கிறார்).

ஆறு எண்ணும்போது கார் கதவு திறக்கிறது. ஒருவர் வேர்க்க விறுவிறுக்க காரிலிருந்து இறங்குகிறார்.

ஐயா, சுட்டுடாதீங்க. நான் வந்துட்டேன்.

ம். அப்படி வா வழிக்கு. என்னடா நடக்குது இங்கே?. காருக்குள்ளே யாரெல்லாம் இருக்கீங்க. எல்லாரையும் வெளியே வரச்சொல்லு.. பேரிக்கா மண்டையா, இன்னிக்கு இந்த டிடெக்டிவுக்கு அவார்ட் கன்பர்ம்ண்ட்தாண்டா.

ஐயா.. ஐயா.. என்னை மன்னிச்சிடுங்க. நீங்க நினைக்கிற மாதிரி எந்த தப்புத்தண்டாவும் நடக்கலே. காருக்குள்ளே நான் மட்டும்தான் இருந்தேன். இது புது கார். இன்னிக்குத்தான் வாங்கினேன். அதனாலே பாருங்க, உள்ளேயிருந்து கதவைத் திறக்கவே முடியல. நானும் ரொம்ப நேரமா எல்லா கதவையும், கண்ணாடியையும் திறக்க முயற்சி பண்றேன். ஆனா, திறக்கவே முடியல.

இப்போத்தான் ஒரு வழியா திறக்க முடிஞ்சுது. எங்கே நீங்க சுட்டுடப்போறீங்களோன்னு பயந்துண்டே முட்டி மோதி வேகமா திறந்தேன். டக்குன்னு கதவு திறந்துடுச்சு. உங்களுக்கு ரொம்ப நன்றிங்க. நீங்க இப்படி அதிரடியா பயம் காட்டலேன்னா, நான் இன்னிக்கு பூராவும் இப்படியே முயற்சி பண்ணிண்டிருந்திருப்பேன். நான் வரேன்.

ம்ம்ம்ம்...

கவுண்டமணி கோபமாய் திரும்பி செந்திலைப் பார்க்க, செந்தில் தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்.

Read more...

Sunday, June 22, 2008

சுத்தி சுத்தி வந்தேங்க!! தசாவதாரம் பாக்கலேங்க!!!

போன வாரம் பாப்பாவிற்கு உடம்பு சரியில்லாததால், போகமுடியாத 'தசாவதாரத்துக்கு' இந்த வாரம் போகலாம் என்று முடிவு செய்து புறப்பட்டோம்.


NY Fresh Meadows-ல் உள்ள பாம்பே திரையரங்கம். 62மைல்கள் தூரம் உள்ளதால் 2 மணி நேரம் முன்பே - நண்பர் குடும்பத்துடன் சென்றோம். எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது. கடைசி 2 மைல்கள் இருக்கும்போது, ஒரு விபத்தினால், மாற்றுப்பாதையில் போகச்சொல்லி 'மாமா' சொன்னதால், வண்டியை திருப்பினோம்.


நல்லவேளை, ஒரு நண்பரிடமிருந்து வாங்கிக்கொண்டு போயிருந்த GPSன் உதவி இருந்ததால் - மாற்றுப்பாதையில் போய், கடுமையான போக்குவரத்தில் மாட்டி, வண்டி நிறுத்துவற்காக சரியான இடம் தேடி - திரையரங்கை அடையும்போது நேரம் 12.30. படம் துவங்கும் நேரம் 12. கடைசி 2 மைல்களைக் கடப்பதற்கு மட்டும் 1 மணி நேரமாயிருக்கிறது.


கொஞ்சம் திரும்பி தங்கமணியை பார்த்தேன். நவரசங்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து (அந்த ரசங்கள் உங்கள் கற்பனைக்கே!!!) அவர் முகத்தில் மாத்தி மாத்தி காட்டிக்கொண்டிருந்தார். அந்த ரசங்களைப் பார்த்தபிறகு எனக்கு பேச வார்த்தைகளே வரவில்லை. அதனால் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.


தசாவதாரம் ஒரு நாளைக்கு ஒரு காட்சிதான் என்பதால் வேறுவழியில்லாமல் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, அங்கிருந்து புறப்பட்டு பக்கத்தில் Jackson Heights என்னுமிடத்தில் இருந்த இந்திய கடைக்குப் போய், அங்கேயே சாப்பிட்டு, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பினோம்.


காலையில் போகும்போது ஜாலியாக திரைப்படப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே போன நான், திரும்பி வரும்போது, தங்கமணியின் மேற்கூறிய ரசங்களின் வெளிப்பாடுகளைக் கேட்டுக்கொண்டே வந்தேன்.


வீட்டிற்கு வந்த பிறகு - ஏம்மா, நாளைக்கு இன்னும் கொஞ்சம் முன்னாடியே கிளம்பிடுவோம். என்ன, அப்போதான் படம் ஆரம்பத்திலிருந்து பாக்கமுடியும். ஓகேவா?... என்று சொல்லி முடிக்கக்கூட இல்லை, அதற்குள் என் முதுகில் ஏதோ விழுந்ததால், நான் கீழே விழுந்தேன்.


கீழே விழுந்தால் என்ன, மீசையில் மண் ஒட்டவில்லை... அது போதும் எனக்கு....

Read more...

Thursday, June 19, 2008

அடநானூறு!!!

அட, நான் நூறு அடிச்சிட்டேன் - நில்லுங்க.. இது 'டாஸ்மாக்' நூறு இல்லீங்க... இது நூறாவது பதிவுன்னு சொல்லவந்தேன்.


இப்படி திரும்பிப் பாக்கறதுக்குள்ளே, 100 பதிவுகள் ஆயிடுச்சு... (உனக்கு திரும்பிப் பாக்கறதுக்கு 6 மாசமாச்சான்னு கேக்கப்படாது....)


ஆரம்பத்துலே எல்லோரையும் போலவே எனக்கும் துளசி மேடமும், சீனா ஐயாவும் பின்னூட்டம் போட்டாங்க. அதன் பிறகு அங்கங்கே பலர் போட்ட பின்னூட்டங்கள் கொடுத்த ஊக்கத்திலே பிக்கப்-ஆன இந்த பயணம், இப்போ நூறு பதிவுகள் வரை வந்திருக்கு.


நிறைய பேரை நிறைய இடத்திலே சிரிக்க வைக்கலேன்னாக்கூட, கொஞ்சம் பேரை கொஞ்ச இடத்திலே சிரிக்க வைக்க முயன்றிருக்கேன்னு நினைக்கிறேன்.


நிறைய சொல்லணும்னு நினைச்சாலும், 'பதிவின் நீளம் கருதி' இத்தோட முடிச்சிக்கிறேன்.


நான் மற்றவர் பதிவுகளில் போட்ட பின்னூட்டங்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு. அப்படியிருந்தும், எனக்குத் தவறாது பின்னூட்டமிட்டு, 'ஊக்குவித்த' அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி..

Read more...

Wednesday, June 18, 2008

திரு.கமல் அவர்கள் மென்பொருள் நிபுணரானால்!!!

இதோ பாருங்க, இந்த மென்பொருள்லே நீங்க பண்ண தவறு - உங்க கவனக்குறைவினால்தான். 12ஆம் நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தால் அல்ல...
---

எல்லா எழுத்துருவையும் ஒரே அளவிலே வைங்க. ஏன், ஒரு பக்கத்துலே அந்த எழுத்துரு ரொம்ப பெரிசா இருக்கு, இன்னொண்ணு ரொம்ப சின்னதா இருக்கு. எதையுமே படிக்கமுடியலே.
---


சூப்பர் சாப்ட்வேர் எதுன்னு கேட்டதுக்கு 'ஆண்டி' (Aunty) வைரஸ்ன்னு சொல்றார் சார் இவரு.

---

நீங்க செய்திருக்கிற விளையாட்டு மென்பொருளிலே 'பில் கேட்ஸை' ஒரு கேரக்டரா வைச்சிருக்கலாம். அதனாலே, பில் கேட்ஸுக்கு மென்பொருள் டெமோ காட்டுவேன்னு சொல்றதுல்லாம் ரொம்பவே டூ மச்.

---

அப்போ, உங்க மென்பொருளில் உதவி இல்லேன்றீங்களா?

நான் உதவி இல்லேன்னா சொன்னேன், இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்.---

எப்பேர்ப்பட்ட புதிய வைரஸுக்கும், ஆண்டி வைரஸ் உடனே வந்துடும். அதைத் தேடி நீங்க ஊர் ஊரா அலையவே வேணாம். எந்த கடையில் கேட்டாலும் அந்த ஆண்டி வைரஸ் கிடைக்கும். கவலைப்படாதீங்க.

---

உங்க வேலை கொடுத்த ஆணியை புடுங்கறதுதான். ஆணியை வடிவமைத்தல், சோதித்தல், தரக்கட்டுப்பாடு, பின் ஆய்வு - இதெல்லாம் செய்யறதுக்கு வெவ்வேற ஆட்கள் இருக்காங்க. நீங்க கவலைப்படாதீங்க.

---

இன்னிக்குள்ளே இந்த மென்பொருளை முடிச்சிக் கொடுக்கறேன்னு சொல்லியிருக்கீங்க. எதுக்கு நடு நடுவிலே பாட்டு பாடிக்கிட்டிருக்கீங்க.


---

நீங்க பண்றதுலேயே உருப்படியான வேலை என்னன்னா, எந்த மென்பொருள் செய்தாலும் அதை தமிழ், இந்தி, தெலுங்கு இப்படி எல்லாரும் புரிஞ்சிண்டு உபயோகப்படுத்தறாமாதிரி செய்றதுதான்.

---


ஒழுங்கா ஒரு இடத்திலே உக்கார்ந்து வேலை பாருங்க. எதுக்கு சம்மந்தமில்லாமே, சென்னையிலிருந்து வாஷிங்டன், ஜப்பான் அங்கேல்லாம் போகணும்றீங்க.

---

இந்த மென்பொருள்லே நீங்க இன்னிக்கு ஒரு சிறு தவறு செஞ்சா, கொஞ்ச நாளைக்குப் பிறகு, அதுவே பெரிய பிரச்சினையா மாறி, உங்க வேலையே போற அளவுக்கு வந்துடும். அதனாலே, கவனம் எடுத்து செய்ங்க. சரியா?..

---
நீங்க செய்திருக்கிறது ஒரு சின்ன 'கால்குலேட்டர்' மென்பொருள். அதை வெளியிடறதுக்கு 'பில் கேட்ஸை' கூப்பிடணும்னு சொல்றதெல்லாம் என்னாலே ஒத்துக்க முடியாது.

---

Read more...

Monday, June 16, 2008

அம்மாவுக்கு கடிதம் - அரை பக்க கதை

அன்புள்ள அம்மாவுக்கு,

நீங்கள் தம்பி வீட்டுக்கு சென்றதிலிருந்து இங்கே எல்லோரும் உங்கள் நினைவாகவே உள்ளோம். உங்கள் பேத்தி தினமும் நீங்கள் எப்பொழுது வருவீர்கள் என்று கேட்கிறாள். உங்கள் மருமகளும் உங்களுக்குப் பிடித்த இனிப்பு வகைகளை செய்து வைத்துக்கொண்டு வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள்.

ஒரு மாதம் நீங்கள் தம்பி வீட்டுக்குப் போகிறேன் என்றபோதே நான் தயக்கத்துடந்தான் ஒப்புக்கொண்டேன் என்று உங்களுக்குத் தெரியும். இன்னும் ஒரே வாரத்தில் அந்த கெடு முடியப்போகிறதென்று உங்களுக்குச் சொல்லத்தான் இந்த கடிதம் எழுதுகிறேன். அதனால், வரும் திங்கட்கிழமை நாங்கள் எல்லோரும் உங்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருப்போம்.

என்றும் உங்கள் அன்புடன்...

சுரேஷ்.

கடிதத்தை மடித்து சட்டைப்பையில் வைத்தான் - " நாளைக்கு மறக்காமல் அனுப்பிடணும்".

அலமாரியிலிருந்து நாட்குறிப்பு எடுத்து எழுத ஆரம்பித்தான்.

இன்று அம்மாவுக்கு கடிதம் எழுதினேன். அவர் இல்லாததால், தங்கமணி தினமும் என்னிடம் சண்டை போடுகிறாள். அடுத்த வாரம் அம்மா வந்த பிறகு, அவர்கள் இருவரையும் கோர்த்து விட்டாச்சுன்னா, எனக்கு பிரச்சினை இல்லை. நிம்மதியாக 'தமிழ்மணத்தில்' உட்காரலாம் என்று நினைக்கிறேன்.

Read more...

Sunday, June 15, 2008

தசாவதாரம் - என்னால் முடிந்த விமர்சனம்!!!

முன்:
மூணு நாளா தமிழ்மணத்தில் ஒரே தசாவதாரம் மயம்தான். எல்லோரும் பதிவா போட்டுத் தாக்கிக்கிட்டுருக்காங்க. நாமும் ஜோதியிலே கலந்துக்கலேன்னா நல்லாயிருக்காது. அதனாலே இந்த பதிவை எழுதவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். வந்தது வந்திட்டீங்க, முழுசா படிச்சிட்டு, லேபிளையும் ஒரு தடவை பாத்துடுங்க. இனி விமர்சனம்.

கதை:
மூன்று நாளா அதைத்தானே தமிழ்மணத்தில் படிச்சிட்டுருக்கீங்க... அவங்க சொல்லாதது நான் என்ன சொல்லிடப்போறேன்.

கதை மூலமாக சொல்ல வந்த கருத்து:
அது சஸ்பென்ஸ். நான் என் வாயாலே உங்களுக்கு எப்படி சொல்வேன்.

படத்தில் பாட்டுக்கள்:
படத்தைப் பாத்தவங்களுக்கு நான் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. படம் பாக்காதவங்க யூட்யூப் பாருங்க. அங்கே போட்டிருப்பாங்க.

க்ராபிக்ஸ்:
அதெல்லாம் பதிவில் எழுதினால் புரியாது. நேரில் பார்த்து தெரிஞ்சிக்கோங்க..

க்ளைமாக்ஸ்:
வழக்கம்போல் அது படத்தில் கடைசியில்தான் வருது.

அசின், மல்லிகா:
இவங்களைப் பத்தி தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நல்லாவே தெரியும். இதிலே நான் தனியா சொல்ல என்ன இருக்குது சொல்லுங்க.

டிஸ்கி:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..இந்த வாரம் படம் பாக்கமுடியலை. அதுக்காக, என்னவெல்லாம் சொல்லி பதிவைத் தேத்தவேண்டியருக்கு பாருங்க...

Read more...

Friday, June 13, 2008

ஒரு தமிழ் வலைப்பதிவாளர் - ச.உ. ஆகிறார்!!!

ச.உ = சட்டமன்ற உறுப்பினர்.

சபாநாயகர் to ச.உ:


சபையில் பேசும்போது உங்க முகத்தை காட்டிக்கிட்டே பேசுங்க. முகத்தை மூடினாலும், கொண்டை தெரியுது பாருங்க...
---

கடந்த அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்கீங்க. யாருக்குமே எதுவுமே புரியலே. கேட்டா 'பின்னவீனத்துவம்'ன்றீங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலே!!!
---

தினமலரில் இருப்பதையோ, குமுதம் ரிப்போர்ட்டரில் இருப்பதையோ முழுவதையும் அப்படியே இங்கே படிக்காதீங்க. அந்த செய்தியைப் பற்றிய உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்க.
---

இங்க பாருங்க, சபையிலே உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குத்தான் நீங்க பதில் சொல்லணும். நீங்களா சில கேள்விகளைக் கொண்டு வந்து அதற்கு பதில் சொல்லக்கூடாது.

---

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான், இந்த திட்டத்துக்கு ஆதரவா பேசினீங்க. உடனே, அதே திட்டத்துக்கு எதிரா - உங்க குரலை மாத்தி பேசறீங்க - இது கொஞ்சம் கூட நல்லாயில்லே..

---

புதிய சட்டசபை கட்டடம் எங்கே கட்டலாம்னு கேட்டா, கடற்கரையிலே காந்தி சிலைக்குப் பின்னாலே கட்டலாம்ன்றீங்களே, அங்கேயெல்லாம் கட்டடம் கட்டமுடியாதுங்க...

---

மொதல்லே அவர் என்ன சொல்ல வர்றாருன்னு கேளுங்க. எதுக்கெடுத்தாலும் 'ரிப்பீட்டேய்ய்ய்' அப்படின்னு சொல்லிட்டு இருக்காதீங்க...

---
ச.உ. வேண்டுகோள் to சபாநாயகர்:

'இன்று அதிகம் மேசையைத் தட்டியவர்கள்' பட்டியல் தயாரித்து அனைவரின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

---

வாரம் ஒரு ச.உ. - ஒரு உறுப்பினரை ' நட்சத்திரம்'ஆக தேர்ந்தெடுத்து அவரது தொகுதி வளர்ச்சி பற்றி விவாதிக்கவேண்டும்.

Read more...

Thursday, June 12, 2008

சிவாஜி வாயிலே ஜிலேபி - அரை பக்க கதைஏங்க, இந்த பெரிய பள்ளியிலேதான் நம்ம பையனை சேக்கணுமா, எனக்கு என்னமோ பயமா இருக்கு...

ச்சீ, என்ன பேச்சு பேசறே? இதிலே பயப்படறதுக்கு என்ன இருக்கு? நம்ம சிவாஜியை இந்த பள்ளியிலே எல்.கே.ஜியில் சேத்துட்டோம்னா, +2 வரைக்கும் கவலையேயில்லை. ஒரே பள்ளியிலே படிச்சிடலாம். அதுவுமில்லாமே, எல்.கே.ஜியில் இவங்க படிப்பெல்லாம் சொல்லித்தர மாட்டாங்க. வெறும் பாட்டும், விளையாட்டும்தான். நம்ம பையன் சூப்பரா செட்டாயிடுவான்.

(பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பறையை கண்டுபிடித்துப் போகிறார்கள்).

வணக்கம். என் பேர் Jill. நாந்தான் இந்த வகுப்பு ஆசிரியை. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. உங்க பையன் சிவாஜி ஓரிரு நாட்களில் மற்ற சிறுவர்களுடன் பழகிவிடுவான். இங்கே விளையாடுவதற்கு எல்லா பொருட்களும் இருக்கு.

"சிவாஜி, இங்கே வா. இந்த பிஸ்கட் எடுத்துக்கோ. ஏ,பி,சி,டி எல்லாம் எவ்ளோ அழகா வரிசையா இருக்கு பாரு!!!"

சிவாஜி வாயிலே ஜில் ஏ, பி - என்று வரிசையாக பிஸ்கட்களை போடுகிறார்.

Read more...

Wednesday, June 11, 2008

திடீர் பதிவு போடுவது எப்படி!!!

தேவையான பொருட்கள்:

தினமலர் டாட் காம் - 1 பக்கம்

குமுதம் ரிப்போர்ட்டர் - 1 பக்கம்

சொந்த கருத்து - தேவைக்கேற்ப


செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு புதிய இடுகையைத் துவக்கவும்.

தினமலர் அல்லது குமுதத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துப் போடவும்.

இரண்டு நிமிடம் அதை படிக்கவும்.

நன்றாக புரிந்தபிறகு உங்கள் கருத்தை அதில் போடவும்.

மேலும் இரண்டு நிமிடம் செலவழித்து, சொற்குற்றம் ஏதாவது உள்ளதா என்று பார்க்கவும்.

பதிவை வெளியிடவும்.

வெளியிட்ட பிறகு, பதிவு சரியாக வந்திருக்கிறதா என்று சரி பார்க்கவும்.

கூடவே முதல் பின்னூட்டத்தை போட்டுவிடவும்.

அவ்வளவுதான்.... நான்கே நிமிடத்தில் உங்கள் பதிவு ரெடி...

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை உங்கள் வலைப்பூவைத் திறந்து பின்னூட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கவும்.

ஒரு பின்னூட்டம் கூட வரவில்லையென்றாலும் பரவாயில்லை - யாரும் திட்டவில்லையே என்று சந்தோஷப்படவும்.

அடுத்த திடீர் பதிவில் சற்று (விவ)காரமான கருத்தை வெளியிடவும்.

பதிவு 'சூடாவதுடன்' பல பின்னூட்டங்களும் கிடைக்கும்.

Read more...

Tuesday, June 10, 2008

கிபி 2030 - சிவாஜி வாயிலே ஜிலேபி

முன்:

உன்னை யாரும் கூப்பிடப்போவதில்லை என்று வருத்தப்படாமல், 'சிவாஜி வாயிலே ஜிலேபி' என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டுவிடு என்று பாபாஜி ( நம்ம பதிவுலக பாபா இல்லை) கூறியதால் புகழ் பெற்ற இத்தலைப்பில் இந்த பதிவு.

---

உலகத்திலேயே முதல் முறையாக - சூப்பர்ப் ஆக்டரின் திரைப்படம் ஒன்று சென்னைத் தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகிறது.

சுரேஷும் அவர் பேரனும் தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருக்கின்றனர். பேரன் பீர் பாட்டில்களை தயாராக வைத்துள்ளான்.

"எங்க காலத்திலே நாங்க இப்படியெல்லாம் அபிஷேகம் செய்யமாட்டோம். கொஞ்ச நாள் கழிச்சு உங்க அப்பா காலத்திலே, படம் வெளியிடும் நாள்லே தியேட்டர்லே நடிகர்கள் பேனருக்கு பால், பீர் அபிஷேகம் செய்வார்கள். இப்போ என்னடான்னா, வீட்லேயே டிவிக்கு அபிஷேகம் பண்ண பீரோடு உக்காந்திருக்கே. காலம் ரொம்ப முத்திப்போயிடுச்சு!!!" - இது தாத்தாவின் புலம்பல்.

படம் பார்க்க வந்திருக்கும் தன் நண்பர்கள் எல்லோருக்கும் இனிப்பு வழங்குகிறான் பேரன். " நம்ம தலைவர் படம். எல்லோரும் இனிப்பு எடுத்துக்கோங்க..."

படம் துவங்குகிறது. பெயர் போட்டவுடன், 'விசில்' சத்தம் காதைப் பிளக்கிறது. பேரன் பீர் எடுக்கத் தயாராகிறான்.

திடீரென்று தொலைக்காட்சியில் ஒரு அறிவிப்பு - "தடங்கலுக்கு வருந்துகிறோம்"... "திரைப்படம் அடுத்த அரை மணி நேரம் கழித்து திரையிடப்படும். அதுவரை, பழைய திரைப்படப் பாடல்கள் - கண்டு களியுங்கள்".

"எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி..." திரையில் சிவாஜி தோன்றுகிறார். தாத்தாவுக்கு பயங்கர குஷி. "இதை பாருடா, எங்க தலைவர்... இந்த மாதிரி பாட்டு இப்பொல்லாம் எங்கே வருது?.. தலைவா... நீ சூப்பர்மா.. இரு உனக்கு ஏதாவது தரணுமே.."

சுற்றுமுற்றும் பார்க்கிறார். தட்டில் ஜிலேபி. எடுத்து சிவாஜி வாயில் அடைக்கிறார். "சாப்பிடு தலைவா.. சாப்பிடு..."

Read more...

Monday, June 9, 2008

கிபி 2030 - தலைவர்களின் சிலைகள் - ஒரு பத்திரிக்கைச் செய்தி!!!

தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை இனிமேல் சாலைகளில் நிறுவக்கூடாதென்று உலக வங்கி ஆணையிட்டிருப்பது தெரிந்ததே.


இதனால், முதற்கட்டமாக சென்னையில் தலைவர்களின் சிலைகள் வைப்பதற்காக பத்து மாடி கட்டடம் ஒன்று கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு தளத்திலும் பத்து சிலைகள் இருக்கும்.


கீழ்த்தளத்தில் சிலை அலங்காரத்திற்காகவும், அபிஷேகத்திற்காகவும் பால், பீர், சந்தனம், பூ ஆகியவை விற்கப்படும்.

தங்கள் தலைவர்களுக்காக 'மொட்டை' போடுபவர்களுக்காக முடிதிருத்தும் நிலையங்களும் அதே வளாகத்தில் அமைக்கப்படும்.

அந்த கட்டடத்தைச் சுற்றி இரண்டு நடைபாதைகள் (சாலைகள்) அமைக்கப்படும். சிலைக்கு மாலை அணிவிக்க வரும் அரசியல் கட்சியினர் அந்த சாலைகளில் ஊர்வலம் போக வசதி செய்து தரப்படும்.

கட்டடத்தில் எல்லா சிலைகளுக்கும் 24X7 பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தின் முன்னால் எப்போதும் இரு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும். மேற்கூறிய பாதுகாப்பையும் மீறி ஏதாவது ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டால், அந்த பேருந்தின் மீது கற்கள் எறியவும், பேருந்தையே எரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சிலைக்கு மேலும் (அல்லது பக்கத்திலும்) திறந்தவெளி அல்லது ஜன்னல் இருக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சிலைகள் மேல் காக்கைகள் வந்து உட்கார வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தில் உள்ள காந்தி சிலைக்கு பின்புறம் சிறிது காலி இடம் ஒதுக்கப்படும். மாதம் ஒருமுறை கூடும் தமிழ் வலைப்பதிவாளர்கள் அங்கே சந்திப்பு நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.


இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே எந்த சிலையும் போக்குவரத்துக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதாகும். சென்னையில் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சிலை அப்படி தடையாக இருந்ததும், இரவில் ஒரு லாரி மோதி சேதமடைந்ததும் அனைவரும் அறிந்ததே.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP