Tuesday, March 31, 2009

தொலைபேசி லொள்ளுகள்!!!


வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் / உறவினர்களிடம் தொலைபேசுதலில் உள்ள பிரச்சினைகள் என்னன்னு இங்கே பாப்போம்.

*****

போட்டுக் கொடுத்தல்:

ஒரு உதாரணத்திற்கு, xம் yம் நம் உறவினர்கள். x கிட்டே சில தடவை பேசின நான், y கிட்டே பேசலைன்னு வைங்க - என்ன ஆகும், yயை பார்க்கும்போது x போட்டு வைப்பார். "என்ன, உங்க நெருங்கிய உறவினர்னு சொல்றீங்க. அவன் உங்ககிட்டே பேசவேயில்லையா? என்கிட்டேயே நிறைய தடவை பேசிட்டானே?". ஏதோ நம்மாலானதுன்னு பத்த வெச்சிட்டு போயிடுவாங்க.

பொகஞ்சிக்கிட்டே இருக்கற yயிடம் அடுத்த தடவை பேசும்போது - "நீங்கல்லாம் பெரிய
மனுசங்க. நம்மகூடல்லாம் பேச நேரமிருக்குமா?"ன்னுதான் பேச்சே ஆரம்பிக்கும்.

நமக்கும் காடுவெட்டி மாதிரி வாயிலே கெட்ட கெட்ட வார்த்தைகளா வரும். ஆனா, வெளிப்படையா பேசமுடியாது. ஹிஹின்னு வழிஞ்சிக்கிட்டு பேச்சை மாத்தி வேறே ஏதாவது பேச ஆரம்பிக்கணும்.

பயங்கர பிஸி:

நேரில் பார்த்தால் கண்டபடி பாசம் காட்டும் பயபுள்ளைங்க, கண்ணிலிருந்து மறைந்துவிட்டால், நம்மை அப்படி மறந்துடுவாங்க. மின்னஞ்சல் அனுப்பினால், அதற்கும் பதில் வராது. கேட்டால், "மாப்ளே - ஆபீஸ்லே பயங்கர பிஸிடா"ன்னுவாங்க.

மாசத்துக்கு ஒரு மின்னஞ்சல்கூட அனுப்பமுடியாமே அவ்ளோ பிஸியா இருக்கீங்களாடேன்னு கேக்க முடியாது. அப்போ நான் மட்டும்தான் இங்கே சும்மா உக்காந்திருக்கேனான்னும் கோபம் வரும்.

அப்புறம் உண்மை(!) தெரிஞ்சதும் மனம் தெளிவடைஞ்சிடும்(!).

நோ மேட்டர்:

இன்னும் சில பேர் இருக்காங்க. பேசி கொஞ்ச நாள் ஆனா போறும் - வீட்லே கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவாங்க. "பையன் தொலைபேசி ரொம்ப நாளாச்சு. உங்ககிட்டே பேசும்போது எனக்கும் அடிக்கடி பண்ணச் சொல்லுங்க".

சரின்னு தொலைபேசினா - ஒரு நிமிடம்கூட இருக்காது - அதிலேயே பல தடவை - ம். அப்புறம், அப்புறம் என்ன விஷயம் - இப்படிதான் பேச்சு இருக்கும். மேட்டர் என்னன்னா, பேசறதுக்கு விஷயமே இருக்காது. அப்புறம் என்னதுக்கு வெங்காயம் என்னை தொலைபேசச் சொன்னே? இப்படி கேக்கமுடியுமா? கண்டிப்பா முடியாது.

மொக்கை படமாத்தான் இருக்கும்னு முன்னாடியே தெரிஞ்சாலும், நாமும் விடாமே டாக்டர் விஜய் படங்களையெல்லாம் திரையரங்கத்துக்குப் போய் பாக்கறதில்லையா, அதே போல இந்த மாதிரி ஆட்களுக்கும் அடிக்கடி தொலைபேசி மொக்கையை பொறுத்துக்கணும். அவ்ளோதான் விஷயம்.

ரிச்சி ஸ்ட்ரீட்:

சில பேருக்கு ரிச்சி ஸ்ட்ரீட்டோ அல்லது ஏதாவது எலக்ட்ரானிக்ஸ் கடைக்கோ போனாதான் எங்க நினைவே வரும். உடனே ஒரு மின்னஞ்சல் தட்டி விடுவாங்க - "அர்ஜண்ட் மேட்டர். உடனே தொலைபேசு".

நாமளும், பாசக்கார பய, நம்மள தொலைபேசச் சொல்றானேன்னு பேசினா - "எப்ப ஊருக்கு வர்றே. வரும்போது ஒரு எம்.பி3 ப்ளேயர், ஒரு லேப்டாப் இதெல்லாம் வாங்கி வரணும். இங்கே வந்ததும் காசு கொடுத்துடறேன். நீ கவலைப்படாதே" - அப்படி இப்படின்னு ஒரு பட்டியல் வெச்சிக்கிட்டு பேசுவாங்க.

தேர்தல் முடியற வரைக்கும்தான் நம்மகிட்டே தொங்குவாரு, அதுக்கப்புறம் இடம் மாறிடுவாருன்னு மருத்துவரைப் பத்தி தெரிஞ்சாலும் பொறுமையா அவரோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற அம்மா மாதிரி நாமும் சிரிச்சிக்கிட்டே பதில்
சொல்லணும் - "சரி வாங்கிட்டு வர்றேன்".

*****

இன்னும் இதே மாதிரி நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், நம்ம பாலிஸி

இன்னிக்கு _____

நாளைக்கு பால்

நாளன்னிக்கு தயிர்

அதுக்கடுத்த நாள் மோர்

அதுக்கடுத்த நாள் புளித்த மோருங்கறதாலே

அப்படியே துடைச்சிக்கிட்டு போக வேண்டியதாயிருக்கு.

*****


Read more...

Monday, March 30, 2009

கடையோட மாப்பிள்ளை!!! - மேடை நாடகம் மாதிரி - பகுதி 1


ரொம்ப நாளா ஒரு நாடகம் (மாதிரி!) எழுதணும்னு ஒரு ஆசை.


இதுலே என்ன பிரச்சினைன்னா, எஸ்.வி.சேகர், கிரேசி மோகன், காத்தாடி, சோ, ஆர்.எஸ்.மனோகர் - அப்படின்னு எல்லாருடைய நாடகங்களையும் பார்த்திருந்தாலும் - வீட்லேயும் சரி,
நண்பர்கள்கிட்டேயும் சரி - சாதாரணமா பேசும்போதிலிருந்து இந்த நாடகம் (மாதிரி) பதிவு போடுற வரைக்கும் - அந்த முதல் ரெண்டு பேருடைய பாதிப்பு ரொம்பவே ஜாஸ்தியாயிருக்கு.
இருந்தாலும் பரவாயில்லேன்னு எழுத ஆரம்பிச்சிட்டேன்.

இது முதல் பகுதி. வாரத்துக்கு ஒரு பகுதின்னு எழுதி மூணு பகுதியில் முடிச்சிடலாம்னு நினைக்கறேன். எப்படி இருக்குன்னு படிச்சி சொல்லுங்க.

*****

(காட்சி 1 துவக்கம்)

காலை மணி ஏழு. ஒரு வீட்டின் வரவேற்பறை. "கோசலையின் குமரா ஸ்ரீராமா..." என்று அழகிய தமிழில் சுப்ரபாதம் கேட்கின்றது.

மாது - 30 வயது வாலிபன் - பி.காம் படித்தவன் - பெரிய்ய்ய வேலையில் இருக்கிறான் என்று சொல்லத்தான் அவன் அப்பா விருப்பப்படுகிறார். ஆனால் தற்போதைக்கு
வேலையில்லாமல்தான் இருக்கிறான். அம்மாவுக்கோ மாதுவுக்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்று ஆசை.

*****

அப்பா: "ஆண்டவா.. எல்லாரையும் நல்லபடியா காப்பாத்துப்பா."

(சோபாவில் சாய்ந்து படுத்து குமுதம் படித்துக்கொண்டிருக்கும் மாதுவை பார்க்கிறார்).

அப்பா: "ஏண்டா, இவ்ளோ பெரிய பையனா வளர்ந்திருக்கே. காலங்கார்த்தாலே வெட்டியா உக்காந்து குமுதம் படிச்சிண்டிருக்கியே?"

மாது: "அப்பா. இப்பல்லாம் குமுதம் மாதிரி பத்திரிக்கைகளை பெரியவங்க மட்டும்தான் பாக்கவோ படிக்கவோ முடியும். ஆமா. இந்த வாரம் நடுப்பக்கத்தை கிழிச்சது நீதானா? ஒழுங்கா
சொல்லிடு. இல்லேன்னா அம்மாகிட்டே போட்டு கொடுத்துடுவேன்."

அப்பா: "கர்மம் கர்மம். நான் ஏண்டா அதையெல்லாம் கிழிக்கிறேன்?"

மாது: "இல்லே சித்த முன்னாடி டாய்லெட்லேந்து ரகசியமா குமுதத்தை கொண்டு வந்து இங்கே வெச்சியே. நீதான் இதை கிழிச்சிருப்பியோன்னு நினைச்சேன்".

அப்பா: "வேறே வேலையே இல்லே பாரு எனக்கு. ஆமா. வேலைக்குப் போறாமாதிரி ஏதாவது ப்ளான் இருக்கா இல்லையா?"

மாது: "கொஞ்ச நாழி இரு. எல்.ஐ.சி ஆபீஸுக்கு ஃபோன் பண்ணி கேட்டு சொல்றேன். அவங்கதான் குழந்தைலேந்து தாத்தா ஆகற வரைக்கும் எல்லாருக்கும் ஒரு ப்ளான்
வெச்சிருப்பாங்க".

அப்பா: "அதை சொல்லலேடா. உனக்கு வேலைக்கு போறாமாதிரி ஐடியா இருக்கா இல்லையான்னு கேட்டேன்".

மாது: " நான் என்னிலேந்தோ ரெடியாதான் இருக்கேன். வேலைதான் யாரும் தரமாட்டேங்கறா. இப்பதான் எங்கே பாத்தாலும், ரிசஷன், ரிசஷன்றாங்களே. நம்ம வீட்டுக்கு பால் ஊத்தற
கோபாலை நேத்து பாத்தேன். நாலு மாடு வெச்சிருந்தான். அதிலே ரெண்டு மாட்டை வேலையை விட்டு துரத்திட்டானாம். என்னடான்னா, ரிசஷன்றான். அடடா. நல்லவேளை
ஞாபகப்படுத்தினேப்பா. இல்லேன்னா நான் மறந்தே போயிருப்பேன்".

அப்பா: "என்னடா. ஏதாவது இன்டர்வியூ வந்திருக்கா. எங்கேயாவது வேலைக்கு கூப்பிட்டாங்களா? எதை மறந்தே?"

மாது: "கார்த்தாலேந்து நான் காபிகூட குடிக்கலை. இப்பதான் ஞாபகமே வருது. அம்மா.. அம்மா.. காபி ரெடியாம்மா?.."

அப்பா: ம். இதை மட்டும் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ. எப்போ நீ வேலைக்கு போய், எப்போ உனக்கு கல்யாணம் பண்ணி என் பேரன் பேத்திகளை பாக்கப்போறேனோ, எனக்கு
தெரியல.

அம்மா: (காபியோடு என்ட்ரி) "சும்மா காலங்கார்த்தாலே பையனை கரிச்சு கொட்டாதீங்கோ. இந்தாடா காபி. இவன் ஜாதகத்தை பாத்த ஜோசியர் அன்னிக்கே சொல்லிட்டாரு. இவனுக்கு
வேலை கிடைக்காதுன்னு."

அப்பா: "இவனுக்கு வேலை கிடைக்காதுன்னு சொல்றதுக்கு ஜோசியர் எதுக்கு? அவருக்கு காபி, டிபன் வேறே கொடுத்துக்கிட்டு. அதை என்கிட்டே கேட்டா நானே சொல்லியிருக்க
மாட்டேனா?”

அம்மா: "அட, அதில்லேன்னா. இவன் ஜாதகப் பிரகாரம், இவனுக்கு கல்யாணமானாதான் வேலையே கிடைக்குமாம்".

அப்பா: "இவ ஒருத்தி எவனோ சொன்னான்னு. வேலை இல்லாதவனுக்கு பொண்ணு குடுக்க ஜனங்க என்ன அவ்ளோ முட்டாள்களா?"

மாது: "அப்பா, அனாவசியமா அரசாங்க ஊழியர்களோட மாமனார்களை இப்படி திட்டாதீங்க. அவங்களே பாவம் இப்பதான் ரெண்டு மூணு வருஷமா நிம்மதியா இருக்காங்க."

அப்பா: "எனக்கு என்னமோ நம்பிக்கையில்லே. இவனுக்கு வேலையும் கிடைக்கப்போறதில்லே. கல்யாணமும் ஆகப்போறதில்லே. ஏண்டா. இவ்ளோ வயசாறதே. யாரையாவது காதலிச்சு
வீட்டை விட்டாவது ஓடக்கூடாதா?"

மாது: "ஒரு பையனை பாத்து அப்பா பேசற பேச்சா இது? உனக்கு கொஞ்சமாச்சும் ஏதாச்சும் இருக்கா? அம்மாவை விட்டுட்டு நான் எப்படி வீட்டைவிட்டு...?"

அம்மா: "ஏன்னா, என்ன கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமே இப்படி கேட்டுட்டேள்?. குழந்தை பாருங்கோ எவ்ளோ வருத்தப்படறான்னு".

மாது: "ஆமா. என்னை யாரோ ஒருத்தியை இழுத்துட்டு ஓடிப்போகச் சொல்றேளே. அவளுக்கு சமைக்கத் தெரியலேன்னா நான் புவ்வாவுக்கு என்ன பண்ணுவேன்?. வேணும்னா,
அம்மாவையும் எங்களோட அனுப்பு. அம்மா, நீ நல்லா ஓடிவியோன்னோ?"

அப்பா: "பாத்தியாடி பாத்தியா.. குழந்தை குழந்தைன்னியே. அவன் பேசற பேச்சைப் பாரு".

அம்மா: "என்னடா கண்ணா, அப்பாவை விட்டுட்டு நான் எப்படிடா உங்களோட ஓடி வர்றது? நீயே யோசிச்சி பாரு இது சரிவருமான்னு?"

மாது: "ம். அப்படியா. அதுவும் சரிதான். நம்மளையெல்லாம் துரத்திட்டு இவர் மட்டும் ஜாலியா இங்கே எப்படி இருக்கலாம். ம்? அது சரிப்படாது. வேணா இப்படி செய்வோமா? நாம
மூணு பேரு வீட்டை விட்டு ஓடறதுக்கு பதிலா, அப்பாவை துரத்திடுவோம். அவராவது கொஞ்ச நாளைக்கு உன் தொல்லையில்லாமே நிம்மதியா இருக்கட்டும்".

அப்பா:"அடேய் அடேய்.. உன்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னதுக்கு, என்னை ஏண்டா வீட்டை விட்டு துரத்தறே?"

மாது: "அப்போ இனிமே குமுதம் நடுப்பக்கத்தை கிழிக்க மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக்குடு. முதல்லே நான் பாத்துட்டு, எனக்குத் தேவையானதை கிழிச்சதுக்கப்புறம், நீ
எதையாவது கிழிச்சிக்கோ”.

அம்மா: “சும்மா ரெண்டு பேரும் சண்டை போட்டுண்டே இருக்காதீங்கோ. இன்னிக்கு சாயங்காலம் ஜோசியர் மறுபடி வர்றேன்னிருக்கார். ஒரு அருமையான ஜாதகம் வந்திருக்காம்.
பொண்ணோட அப்பா ஒரு கடை வெச்சிருக்காராம். கடையோட மாப்பிள்ளையா இருக்கறதுக்கு ஒரு ஆள் தேடறாங்களாம். பாத்து முடிச்சிடலாம்னு சொல்லியிருக்கார். எனக்கென்னவோ
இது செட்டாயிடும்னு தோண்றது. பாப்போம்”.

(காட்சி 1 முடிவு)

*****

Read more...

Thursday, March 26, 2009

ஆரம்ப முடிவு.. கவுஜ கவுஜ!!!என்னதான் கவுஜ எழுதற திறமையை உள்ளுக்குள்ளேயே மறைத்து வைத்திருந்தாலும், ஆயிரக்கணக்கான(!!!) ரசிகர்கள் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியால், தம் கட்டி இழுத்து
அதை வெளியே கொண்டு வந்துடறாங்க.

நேத்திக்கு ராத்திரி வலது பக்கக் காதுலே மருந்து ஊத்திக்கிட்டு, இடது பக்கமா சாஞ்சிக்கிட்டு படுத்து யோசிச்சதுலே உதயமானதுதான் இந்த கவுஜ.

சரவணபவன் இட்லிய தின்றாமாதிரி கடகடன்னு படிச்சிடாமே, ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து அனுபவிச்சி படிங்க.

இப்பவே ஒரு ரகசியத்த சொல்லிப்புடறேன்.. கவுஜயோட கடைசி பத்திலேதான் மேட்டரே அடங்கியிருக்கு. அதுக்காக நேரா அங்கே போயிடாதீங்க மக்கா.. முதல்லேந்தே படிங்க...
எஞ்சாய்.....

*****ஆரம்பம் சீக்கிரமே
ஆரம்பித்துவிட்டால்
முடிவும் சீக்கிரம்
முடிந்துவிடுமா?


*****

ஆரம்பத்தின் முடிவில்
அதை
ஆரம்ப முடிவென்பதா
முடிவின் ஆரம்பமென்பதா?

இல்லை
முடிவின் ஆரம்பத்தில்
அதை
முடிவாரம்பம் என்றுதான் அழைக்க
முடியுமா?

*****

ஆரம்பிப்பதற்குள்
முடிந்துபோவதை
எப்படி ஆடிவு
என்று சொல்லமுடியாதோ - அதே போல்

முடிந்தபிறகு
மீண்டும் ஆரம்பிப்பதற்கு
மும்பம் என்றும்
சொல்லமுடியாது


*****

ஆரம்பிக்கும்போதே
முடிவை
முடிவெடுத்துடற மாதிரி

முடிந்தபிறகு
ஆரம்பத்தில் இதைத்தான்
முடிவெடுத்தோமான்னு
பாக்கணும்.


*****

ஆரம்பிக்காமலேயே
ஆரவாரம் செய்யறவனவிட
முடிச்சிட்டு
முக்காபுலா பாடுறவந்தான்
முழுமனிதன்

*****

முடிவா ஒண்ணு சொல்லி
முடிச்சிக்கறேன்.
ஆரம்பத்திலிருந்து
ஆராவது இந்த கவுஜய
ஆராய்ஞ்சி எனக்கு விளக்குங்க.

*****


Read more...

Wednesday, March 25, 2009

நொறுக்ஸ் - புதன் - 03/25/2009


கணவன் மனைவி சண்டை போடக் காரணங்கள் என்ன? - பல்லாயிரக்கணக்கான தம்பதிகளிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதில் முடிவு என்னன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கீங்களா? -
விவரம் பதிவில்.


*****


இங்கே வந்த புதிதில், சென்னைக்கு ஒரு முக்கியமான தபால் அனுப்பினேன். ஒரு வாரத்தில் ஊருக்குப் போய் சேரவேண்டிய அந்த தபால், ரெண்டு நாள் கழிச்சி எங்க தபால்பெட்டிக்கே
வந்துடுச்சு. அதை எடுத்துக்கொண்டு தபாலாபீஸுக்குப் போய் - “என்னம்மா, இந்தியாக்கு அனுப்பணும்னு ஒரு தபால் கொடுத்தா, அதை ஒழுங்கா அனுப்பமாட்டீங்களா? திரும்ப எங்க
வீட்டுக்கே அனுப்பிச்சிட்டீங்களே?”ன்னு - மெதுவாத்தான் கேட்டேன். அதுக்கே அந்தம்மாவுக்கு கோபம் வந்துடுச்சு.


“நாலெழுத்து படிச்சவந்தானே? முன்னே பின்னே தபால் அனுப்பிச்சிருக்கியா? இதுகூட தெரியாமே எப்படி வளர்ந்தே?” - அப்படி கேட்டாங்களான்னு ஒரு நிமிடம் யாரும்
சந்தோஷப்படாதீங்க. அப்படியெல்லாம் அவங்க கேக்கலை. ஆனா அவங்க முறைச்சது அந்த கேள்விகளைக் கேட்டமாதிரிதான் இருந்தது.


விஷயம் என்னன்னா, இங்கேல்லாம் ‘அனுப்புனர்' (From) முகவரியை உறையின் இடது-மேல் ஓரத்தில்தான் எழுதணுமாம். நான் இந்தியாவில் எழுதுவதுபோல், இடது-கீழ் பக்கத்தில் என்
இங்கத்திய முகவரி எழுதிவிட்டதால், இங்கிருக்கும் தானியங்கி தபால் பிரிக்கும் இயந்திரம், என்னுடைய கோழி கிறுக்கல் கையெழுத்தைக்கூட ஆய்ந்தறிந்து - கடிதத்தை மறுபடி எங்க
வீட்டுக்கே அனுப்பிடுச்சு. (பட விளக்கம் கீழே).


“இந்த ஒரு தடவை பரவாயில்லை. காசு கொடுக்க தேவையில்லை. மறுபடி இப்படி அனுப்பிச்சீங்கன்னா - நடக்கறதே வேறே” -ன்னு எச்சரிச்சி அனுப்பினாங்க அந்த தபாலம்மா.*****
துடுப்பாட்டம்

இந்தியாவில் இருக்கும்போது, தொலைக்காட்சியில் துடுப்பாட்டத்தை போட்டாங்கன்னா - அது பல வருடங்களுக்கு முன்னாடி நடந்த எந்தவொரு ஆட்டமானாலும் - அது ஏதோ இரண்டு
அணிகளுக்கிடையே நடந்ததாக இருந்தாலும் - ‘லைவ்'வாக நடப்பதுபோல் பரபரப்பாக பார்த்துக்கொண்டிருப்பேன். இங்கே வந்தபிறகு அந்த ஆர்வம் சிறிது குறைந்துபோனது.

உலகக்கோப்பை மற்றும் அதற்குப்பிறகு நடந்த சில முக்கியமான ஆட்டங்களை மட்டும் இணையத்தில் பார்த்தோம். மற்றபடி ஞாபகம் வந்தால், ஸ்கோர் பார்ப்பதோடு சரி.

சில மாதங்களுக்கு முன் - இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளுக்கு நடுவிலும் - கடமை தவறாது நம் அணி அங்கு போய் விளையாடிவிட்டு வந்த பிறகு - கொஞ்ச நஞ்சமிருந்த
ஆர்வமும் போய்விட்டது. இப்போ, இந்த ஐபிஎல் போட்டி தென்னாப்பிரிக்காவுக்கு போறதைக் கேட்டதிலிருந்து சரியான கோபம்தான் வருது.

ங்கொய்யாலே.. இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன்.

*****

மின்தூக்கி கலாட்டாக்கள்

ஒரு தடவை, மின்தூக்கிக்குள் தங்கமணியும் நானும் வழக்கம்போல் பேசிக்கொண்டிருந்தோம். (அட, சண்டை இல்லேப்பா. சாதாரணமாத்தான்!!). ஒரு நிமிடம் கழித்து, யாரோ ஒருத்தர்
கதவைத் திறக்க - பார்த்தால், நாங்கள் ஏறிய தளத்திலேயே நின்றிருக்கிறோம். பேச்சு சுவாரசியத்தில் போக வேண்டிய தள பட்டனை ரெண்டு பேரும் அழுத்தவேயில்லை. வந்தவரோ ஒரு மாதிரி எங்களை பார்த்துக்கொண்டே பட்டனை அழுத்தினார். நாங்க ஏன் அவரைப் பாக்குறோம் - இறங்கி ஓஓடிட்டோம்.

இன்னொரு தடவை, கைப்பேசியில் பேசிக்கொண்டே - மின் தூக்கியில் கீழே போய்க்கொண்டிருந்தேன். கீழ்த்தளத்தில் கதவு திறந்தது. உள்ளே வருவதற்கு ரெண்டு பேர் நின்றிருந்தனர். நானும் அவர்களிடம் - மின்தூக்கி கீழே போகுது. உள்ளே வாங்க - அப்படின்னேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே உள்ளே வந்து - இதுதான் கீழே. இதுக்கு கீழே யாராலும் போக முடியாதுன்னுட்டாங்க. நான் வழக்கம்போல ஹிஹின்னு வழிஞ்சிக்கிட்டு ஜூட்.

*****

மேலே சொன்ன கருத்துக்கணிப்பின் ரிசல்ட் இதோ:

இரண்டு (அல்லது அதற்கு முற்பட்ட) வருடங்களில் நடந்த ஏதாவது ஒரு சம்பவம் குறித்து பேச ஆரம்பித்து சண்டையில் முடிதல் - 33%

ஐந்து (அல்லது அதற்கு பிறகு) வருடங்களில் நடக்கப்போகும் ஏதாவது ஒரு சம்பவம் பற்றி பேச ஆரம்பித்து சண்டையில் முடிதல் - 33%

நம் குடும்பத்துக்கு சம்மந்தமேயில்லாத விஷயங்கள் பற்றி பேசியதில் சண்டை - 33%

அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி பேசியதில் சண்டை - 1%

இந்த ரிசல்ட் சரிதானான்னு அனுபவஸ்தர்கள் சொல்லுங்க.

*****

முக்கியமான பின்குறிப்பு : (பதிவில் முதலில் சொன்ன) பல்லாயிரக்கணக்கான = நான் + தங்ஸ்.

*****

Read more...

Tuesday, March 24, 2009

ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன்!!!

எவ்ளோ நாள்தான் இந்த மாதிரி ச்சின்னச்சின்ன பதிவுகளா எழுதிட்டிருக்கறது. அதனால், நானும் ஒரு பெரிய்ய்ய நாவல் - சுமார் ஐநூறு பக்கம் வர்றா மாதிரி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

அந்த நாவல் எழுதறதுக்கு முன்னாடி - ஒரு வரிக் கதை ஒண்ணை கொஞ்சம் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸா எழுதலாமேன்னு முடிவு செய்து, அதை இங்கே எழுதியிருக்கேன்.

நீங்க இந்த கதையை பாத்து ஓகே பண்ணிட்டீங்கன்னா, இதே மாதிரி - அட, இதே மாதிரி என்ன, இதே கதையை - ஐநூறு பக்கத்துக்கு இழுத்த்த்த்த்த்து எழுதலாம்னு இருக்கேன்.

கொஞ்சம் பாத்து சொல்லுங்க.

*****

ஒரு ஊர்லே ஒரு பாட்டி இருந்தாங்க.

அவங்களுக்கு நாலு பசங்க, மூணு பொண்ணுங்க. எல்லாப் பொண்ணுங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க அந்த பாட்டி.

அந்த நாலு பசங்களும் வேலை வெட்டி இல்லாமே சும்மா ஊர் சுத்திக்கிட்டிருந்தாங்க. சரி வெட்டியாதானே இருக்கோம்னு என்ன பண்ணாங்க - திடீர்னு எல்லோரும் ரௌடி ஆயிட்டாங்க. அந்த ஏரியா முழுக்க அவங்க ராஜ்ஜியம்தான். ஆளுக்கொரு கத்தி வெச்சிக்கிட்டு, கத்தி கத்தி பேசிக்கிட்டு ஜாலியா இருந்தாங்க.

வெய்யில் ஜாஸ்தியாயிருக்கேன்னு ஒரு நாளு எதேச்சையா டாக்டர் விஜய் படம் ஓடுற ஒரு தியேட்டர்லே நுழைஞ்சாங்க. அவரோட ஆட்டம், பாட்டம், நடிப்பு, சண்டை எல்லாத்தையும் பாத்துட்டு அன்னிலேந்து அவரோட அதி தீவிர ரசிகர்களாயிட்டாங்க. ஏதோ ஒரு சரத்குமார் படத்துலே ஒரு பாட்டிக்கு வடிவேலு போட்ட '10' மாதிரி இவங்களும் - 'உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு' அப்படின்னு பச்சை குத்திக்கிட்டாங்க.

தலைவரோட எல்லா விழாக்களிலேயும் கலந்துக்குவாங்க. பேனரெல்லாம் கட்டுவாங்க. பாலாபிஷேகம், தயிராபிஷேகம், பீராபிஷேகம் எல்லாமே பண்ணுவாங்க. கடைசியா அவங்க தலைவரோட ஏதோ ஒரு விழாவுலே கலந்துக்கிட்டு கலாட்டா செய்திட்டிருக்கும்போது - இவங்களோட தொல்லை பொறுக்காமே அந்த அபிமான தலைவரே - 'பேசிக்கிட்டிருக்கேன்ல... சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' - அப்படின்னு கத்திட்டாரு.

அன்னிக்கு மனசு ஒடைஞ்சவங்கதான், அந்த சம்பவத்துக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. பாவம் அந்த பாட்டிதான் தனியொரு ஆளா நாள் முழுக்க உழைச்சி சம்பாதிச்சி எல்லாருக்கும் சாப்பாட்டுக்கு வழி செய்துட்டிருந்தாங்க.

பேதை (7 வயது) , பெதும்பை (11 வயது) , மங்கை (13 வயது) , மடந்தை (19 வயது) , அரிவை (25 வயது) , தெரிவை (31 வயது) , பேரிளம்பெண் (40 வயது) - ஆகிய பெண்களின் ஏழு நிலைகளையும் தாண்டி வந்துவிட்ட அந்த பாட்டி அவங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே உட்கார்ந்து - உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு - இந்த மூணையும் கொஞ்ச நேரம் ஊறவைத்து வடிகட்டி - அதை பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு
சேர்த்து கரகரவென்று நீர் விடாமல் அரைத்துக் கொண்டு - அந்த விழுதை எடுத்து கருவேப்பிலை, சிறிது மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி கலந்து - அரைக்காத பருப்புக்களையும் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டு - பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி எண்ணையில் பொரித்தெடுத்து - அருமையான வெங்காய வடை செய்து - அதை மக்களுக்கு விற்று சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

பக்கத்து மரத்து மேலே ஒரு காக்கா பசியுடன் உட்கார்ந்திருந்தது.

1330 குறள்களை எழுதிய திருவள்ளுவர் - 490வது குறளாக - 'காலமறிதல்' அதிகாரத்திலே சொல்லியிருக்கிறது என்னன்னா - கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. அதாவது காலங்கருதி ஒரு கொக்கு தன் இரைக்காக அசையாமல் வாடி இருப்பதைப் போல் கலங்காமல் இருந்து - தக்க சமயம் வாய்த்தவுடன் பாய்ந்து தன் இரையை கொத்திக்கொள்வது போல் சட்டென்று செய்துவிடவேண்டும்.

இதே அறிவுரையின்படி, அந்த காக்காவும் மரத்தின் மேல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து - ஒரு பெரிய வடைக்காக காத்திருந்தது. அப்படி கிடைத்தவுடன், பறந்து வந்து டக்கென்று அந்த வடையை அபகரித்து திரும்ப மரத்தின் மேல் போய் உட்கார்ந்தது.

நரி இடப்பக்கம் போனா என்ன, வலப்பக்கம் போனா என்ன - மேலே விழுந்து புடுங்காமே இருந்தா சரின்ற பழமொழியில் வர்ற அந்த நரி ஒண்ணு அந்தப்பக்கமா வந்துச்சு.

அவ்வை ஷண்முகி படத்துலே - காதலி காதலி பாட்டு பாடும்போது கமல் வேணும்னே பக்கவாட்டு போஸ்லே - தன் ஓட்டைப் பல்லு காட்டி சிரிப்பாரு. அதே மாதிரி நரியை பாத்த காக்காவும் சைட்லே திரும்பி போஸ் குடுத்துச்சு.

கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க வர்றவங்க எல்லாம் - ஏதோ கச்சேரி செய்யப்போறவங்க போல - ஒரு பாட்டு பாடுங்கன்னு பொண்ணைக் கேக்கறது மாதிரி - நரியும் காக்காவைப் பாத்து - உன் பாடலைக் கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே - பாடு காக்கா, பாடுன்னு கேட்டதால், காக்காவும் பாட தயாரானது.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே....ஏஏஏ.. ஏஏஏ... மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே... .... ...

சுத்தி இருந்த காக்காங்கல்லாம் இப்படி அடி எடுத்துக் கொடுக்க, நம்ம காக்காவும் 'ராக்கம்மா கையத் தட்டு' அப்படின்னு பாட ஆரம்பிச்சது பாருங்க...

ஒரு பெரிய மண்டபத்துலே ரெண்டு பக்கமும் ஏகப்பட்ட பேர் உட்கார்ந்து கைதட்டி பஜனை செய்துகொண்டிருக்கும்போது, நடுவில் வர்ற அவரோட வாயிலிருந்து டக்குன்னு சிவலிங்கம் விழுவதைப்போல், இந்த காக்கா பாட ஆரம்பிச்சவுடனே, அதன் வாயிலிருந்து அந்த வடை கீழே விழுந்தது.

தேர்தலில் எதிர்பாராத விதமா வெற்றி அடைஞ்சிட்டா, அடுத்த தேர்தல் வரும்வரை தொகுதி பக்கமே தலைகாட்டாத அரசியல்வாதிங்க மாதிரி - அந்த நரியும் வடை கிடைச்சது வரை லாபம் - இனிமே அடுத்து பசிக்கும்வரை இந்த பக்கம் வரவேகூடாதுன்னு முடிவு செய்து ஓஓஓடிப்போச்சுது.

அவ்ளோதான் கதை.

*****
கதையைப் பற்றி 'புகழ்ந்து' மறுமொழி எழுதறதுக்கு முன்னாடி ஒரு தடவை லேபிளை பாத்துக்கிடுங்கப்பூ!!!


Read more...

Monday, March 23, 2009

செய்யறதுக்கு வேலை இல்லேன்னா வரக்கூடிய பிரச்சினைகள்...

காலங்கார்த்தாலே அலுவலகம் வந்து - தமிழ்மணம், தமிலிஷ் மற்றும் நமக்குத் தெரிந்த கடைகளுக்கெல்லாம் சென்று விசாரித்துவிட்டு, பிறகு வேலை ஏதாவது இருந்தா ஒண்ணும் பிரச்சினையேயில்லை. அதை செய்து நாளை ஓட்டிவிடலாம்.

இந்த வேலை, வேலைன்னு ஏதோ சொல்றாங்களே, அது மட்டும் இல்லேன்னா, எவ்ளோ பிரச்சினை தெரியுமா? அதைத்தான் இந்த பதிவுலே பாக்கப் போறோம்.
*****


அக்கம் பக்கத்துலே இருக்கறவங்ககிட்டே அதிகபட்சமா ஒரு ஐந்து நிமிடம்தான் பேசமுடியுது. ஏன்னா, அவங்களுக்கு ஏதோ ஒரு வேலை இருந்துகிட்டே இருக்கு. அதுக்கு மேலே பேசிக்கிட்டிருந்தோம்னா, என் மேனேஜர் கிட்டே போட்டுக் கொடுத்துடுவாங்க. அப்புறம் அது பெரிய பிரச்சினை ஆயிடும். அதனால், வேறே ஏதாவதுதான் செய்யணும்.


சரி, இந்தியாவிலே இப்போ மாலை நேரம்தானேன்னு, நண்பர்கள் / சொந்தக்காரங்க யார் வீட்டுக்கு தொலைபேசி மொக்கை போடலாம்னாலும் - சரியா 'கஸ்தூரி' (அல்லது குங்குமம் - இல்லே வேறே ஏதோ ஒண்ணு) பாக்கற நேரத்துக்குத்தான் பேசணுமான்னு திட்டு விழும். காசு செலவு பண்ணி திட்டு வாங்கணுமான்னு யோசிப்பேன். அதனால், இதுவும் முடியாது.


உக்காந்து வேலை செய்யறதுக்கு, அலுவலகத்துலே சக்கரம் வைச்ச நாற்காலி ஒண்ணு குடுத்திருக்காங்க. அதிலே சுத்தி சுத்தி வந்தேங்க அப்படின்னு பாடிக்கிட்டே வேகமா (ஒரே இடத்துலே) சுத்திக்கிட்டு இருக்கலாம்னு பாத்தா - ஒரு பத்து நிமிடத்திலே தலை சுத்துது. இதிலே இன்னொரு பிரச்சினை - கீழே விழுந்து மண்டையில் அடிபடும் அபாயமும் இருக்கு.


எங்க அலுவலகம் ஒரு நாலு மாடி கட்டிடம். வெவ்வேறே இடங்களில் ஏறி-இறங்க மாடிப்படிகள் கட்டி வெச்சிருக்காங்க. கொஞ்ச நேரம் நடக்கலாம்னு ஒரு மாடியிலே ஏறி, கட்டிடத்தின் இன்னொரு பக்கம் போய், மற்றொரு மாடியில் இறங்கி... மறுபடி இந்த பக்கம் ஏறி...இறங்கி...ஏறி... இப்படி செய்துக்கிட்டிருந்தா ஒரு அரை மணி நேரத்துலே காலெல்லாம் பயங்கரமா வலிக்குது... அதனால், இதுவும் நோ.


சரி.. எங்கேயும் போகவேண்டாம். அலுவலகத்தின் சாப்பாட்டுக் கூடத்தில் நிறைய மக்கள் இருப்பாங்க. அங்கே சும்மா போய் கொஞ்ச நேரம் நின்னு வேடிக்கை பாக்கலாம் அப்படின்னா, மக்களை(?!) பாக்க ஆரம்பிச்ச நிமிடத்தில் மனசுலே கவிதை அருவி மாதிரி கொட்டுது (குணா எஃபெக்டில் படிக்கவும்!). ஆனா, அதையெல்லாம் வார்த்தையா வடிக்கிறேன் பேர்வழின்னு ஆரம்பிச்சேன்னா, இருக்கிற சில நண்பர்களும் காணாமே போய்விடுவாங்கன்ற அபாயம் இருப்பதால் அதையும் தவிர்க்க வேண்டியிருக்கிறது.


நம்ம ச்சின்ன அறையில்தானே இருக்கோம்னு கொஞ்சம் கத்திப் பாடக்கூட முடியாது. அப்பப்போ நம்மிடத்துக்கு வர்ற மேனேஜர் - என்ன இப்படி கண்றாவியா பாடறே? வீட்டுக்குப் போய் ஒழுங்கா பாட்டு கத்துக்கிட்டு அப்புறம் வேலைக்கு வா - அப்படின்னு 'ஒரேடியா' அனுப்பிட்டா - அப்புறம் எல்லாமே பிரச்சினைதான்.


சரி இப்போ வேலையில்லாமே சும்மாதானே இருக்கோம்னு வீட்டுக்கு தொலைபேசி தங்கமணியிடம் பேசலாம்னு பாத்தா - "நீங்க வெட்டியா இருக்கீங்கன்னா, நானும் வெட்டியா இருக்கேன்னு அர்த்தமா? தொலைபேசியை வைங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு"ன்னு 'டொக்'. அதனால், இதையும் பண்ணமுடியாது.


இப்படி எதையுமே செய்யக்கூடாதுன்னு ஒரு மனுசனோட கைகளைக் கட்டிப்போட்டா, நான் என்னதான் செய்யறது?

யாராச்சும் ஒரு நல்ல ஆலோசனையை வழங்குங்க.Read more...

Wednesday, March 18, 2009

வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்புவது எப்படி?

இது ஒரு கொசுவத்தி பதிவு.


*****


காலையிலிருந்து மாங்கு மாங்குன்னு (!!) வேலை செய்திட்டிருந்தாலும், அப்போல்லாம் எங்ககிட்டே பேசவே மாட்டாரு எங்க மேனேஜரு. எந்த சந்தேகமும் கேக்க மாட்டாரு. ஆனா, சாயங்காலம் வீட்டுக்குக் கிளம்பறேன்னு சொல்லப் போனாதான் - அந்த வேலையை முடிச்சிட்டியா, இது எப்போ முடியும்? - அப்படி இப்படின்னு இன்னொரு பத்து நிமிடம் இழுத்துடுவாரு. கிளம்பற நேரத்துலே சரியான கடுப்பா இருக்கும்.
எந்த பிரச்சினையுமில்லாமே, நினைச்ச நேரத்துலே எப்படி வீட்டுக்குக் கிளம்பிப் போறது - அப்படின்ற தலைப்புலே நிறைய ஆராய்ச்சிகள் செய்து, சிலவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்து அதில் வெற்றியும் அடைஞ்சிருக்கோம். அந்த மாபெரும் ஆராய்ச்சிகளைப் பற்றிதான் இங்கே சொல்லப் போறேன்.


*****


சொல்லாமலேயே எஸ்கேப்:


இதிலே நிறைய பிரச்சினைகள் இருக்கு. வீட்டுக்குப் போனபிறகோ, அடுத்த நாளோ கூப்பிட்டு - என்னப்பா, சொல்லாமேயே போயிட்டே - எனக்கு ஒரு வேலை செய்யணுமேன்னுவாரு. ரொம்பவே அவசரமான வேலையாயிருந்தா, மறுபடி அலுவலகத்துக்குக் கிளம்பி வர வேண்டியிருக்கும். இல்லேன்னா, அடுத்த நாள் கொஞ்சம் சீக்கிரமா வந்து வேலையை முடின்னு சொல்வாரு.


ஒருவர் சொல்ல, மற்றவர்கள் எஸ்கேப்:


எங்கள் குழுவில் இருந்த ஐந்து பேரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டோம். அதாவது, வீட்டுக்குக் கிளம்பும் நேரமாக பார்த்து யாராவது ஒருவர், மேனேஜரிடம் போய் வேலை சம்மந்தமாக பேசிக்கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒருவர் அவரை பிஸியாக வைத்திருக்க, மற்றவர்கள் தூரத்திலிருந்து கை காட்டிவிட்டு எஸ்கேப்.ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருவராக முறை வைத்துக்கொண்டு - மற்றவர்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் தப்ப வைக்க வேண்டும். இந்த திட்டமும் கொஞ்ச நாளைக்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.


ஆனாலும் இந்த திட்டத்தில், அவரோட கவனம் நம்மேல் திரும்ப நிறைய வாய்ப்பிருப்பதால், அதை எப்படி சமாளிப்பது என்று ஆலோசித்து, ஒரு சிறு முன்னேற்றம் செய்தோம்.


ஒருவர் சொல்ல, ஒருவர் தொலைபேச, மற்றவர்கள் எஸ்கேப்:


மேலே சொன்ன மாதிரியே ஒருவர் மேனேஜரிடம் பேசிக்கொண்டிருக்க, அதே சமயத்தில் இன்னொருவர் மேனேஜருக்கு தொலைபேசி - "சார், அந்த ___ டீடெய்ல் கொஞ்சம் சொல்லுங்க. அந்த பேப்பர் உங்ககிட்டே இருக்கா பாருங்க" - அப்படின்னு அவரை பிஸியா வைத்திருக்க, மற்றவர்கள் வழக்கம்போல் தூரத்திலிருந்து கைகாட்டிவிட்டு எஸ்.


மேனேஜரை மாட்டிவிட்டு எஸ்கேப்:


தினமும் மாலையில் அனுப்பக்கூடிய ஸ்டேட்டஸ் மின்னஞ்சலில், ஏதாவது பொடி அல்லது வெடி வைத்து, மேனேஜருக்கும் - கூடவே அவரோட மேனேஜருக்கும் அனுப்பி வைத்தால் தீர்ந்தது பிரச்சினை. மின்னஞ்சல் அனுப்பிய பத்தாவது நிமிடம், நம்மாளை அவரோட மேனேஜர் கூப்பிடுவார். இவர் கிளம்பி அவரிடத்துக்குப் போனார்னா, நாங்கல்லாம் கிளம்பி அவங்கவங்க இடத்துக்குப் போய்விடலாம்.


ஆனா, இது தினமும் நடக்க வாய்ப்பில்லை. பத்து நாளைக்கு ஒருமுறைதான். இதில் அபாயமும் உண்டு. அடுத்த நாள் காலையில் வந்தவுடன், நமக்கு சூடு விழும் வாய்ப்பும் அதிகம்.


*****


இப்படியாக பல வழிகளை கையாண்டு, ஒரு வழியா அலுவலகத்திலிருந்து தப்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு. அடுத்து என்ன?


*****


ராமாயணம், மகாபாரதம் இதெல்லாம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீங்க. யுத்தத்துக்காக ரெண்டு பக்கமும் ஏகப்பட்ட ஆட்கள் நின்றிருப்பாங்க. 'ஆஆக்ரமண்ண்ண்ண்ண்' அப்படின்னு ஒருத்தர் கத்தியவுடன், எல்லோரும் ஓஓன்னு சத்தம் போட்டுக்கிட்டே ஓடி வந்து சண்டை போட ஆரம்பிப்பாங்க.


அதே மாதிரி காட்சியை நினைச்சிக்கங்க. ஒரு பக்கத்துலே நானு. இன்னொரு பக்கத்துலே யாருன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லே. அலுவலகத்திலிருந்து வந்து வீட்டிற்குள் கால் வைச்சவுடனே, 'ஆஆக்ரமண்ண்ண்ண்ண்'னு சொல்லிட்டு தகராறை ஆரம்பிச்சிடுவாங்க.


"ஏண்டா கொய்யா.. இதுக்காகவா அந்த நல்ல மனுசனை ஏமாத்தி, போக்குவரத்துலே ஏகப்பட்ட பேருக்கு 'கட்' கொடுத்து, வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்தே? இதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா அலுவலகத்திலேயே இருந்திருக்கலாமே?"ன்னு கண்ணாடி முன்னாடி நின்னு என்னையே கேட்டுக்குவேன்.


வேறே என்ன பண்றது?


*****

Read more...

Tuesday, March 17, 2009

ஒரு மென்பொருள் நிபுணர் ஆஸ்கர் விருது பெற்றால்..?!?!?


முன்கூட்டிய முன்குறிப்பு : இது வெறும் நகைச்சுவைப் பதிவு மட்டுமே. தயவு செய்து அனுபவிங்க.. ஆராயாதீங்க... வரிகளுக்கு நடுவே படிக்கவே படிக்காதீங்க.

*****

அற்புதமானதொரு மென்பொருள் தயாரித்ததால், நம் ஹீரோ சுரேஷ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்.

விருது வழங்கும் குழுவினர் அவரை தொலைபேசியில் அழைக்கின்றனர்.

"ஹலோ. யாரு சுரேஷுங்களா?"

"ஆமா. நீங்க யாருங்க?"

"நாங்க ஆஸ்கர் கமிட்டிலேர்ந்து பேசறோம். வாழ்த்துகள். உங்க மென்பொருள் தயாரிக்கும் திறமையை பாராட்டி உங்களை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைச்சிருக்காங்க. அடுத்த ஞாயிறு
நீங்க விழாவுக்கு கண்டிப்பா வரணும்".

"அடுத்த ஞாயிறா? அன்னிக்கு எனக்கு நிறைய வேலை இருக்கே? ஒரு மாசமாச்சு துணி துவைச்சு.. ரெண்டாயிரத்து முன்னூறாவது முறையா தொலைக்காட்சியிலே பாட்ஷா படம்
போடறாங்க. அதை வேறே பாக்கணும்."

"என்னது? பாட்ஷான்னு ஒரு படம் இவ்ளோ தடவை ரிப்பீட்டா போடறாங்களா? அது எங்க ஆஸ்கர் பட்டியல்லே இல்லையே?"

"அட லூஸ்லே விடுங்க. அது ஆஸ்கருக்கெல்லாம் அப்பாற்பட்ட படம். நீங்க கூப்பிட்ட விஷயத்தைப் பற்றி சொல்லுங்க. அதை பேசுவோம்".

"சரி. நீங்க கண்டிப்பா விழாவுக்கு வரணும்".

"எதையும் என்னாலே உறுதியா சொல்ல முடியாது. ஒரு வேளை நான் வரலேன்னா, என் விருதை குரியர்லே அனுப்பி வெச்சிடுங்க. ஷாம்பெயின் பாட்டிலை மறந்துடாதீங்க."

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. வர முயற்சி பண்ணுங்க".

"சரி சரி வைச்சிடுங்க".

*****

ஒரு வழியாக நம்ம ஹீரோ விருது வழங்கும் விழாவுக்குப் போகிறார். எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில், அவருக்கே அந்த விருது கிடைக்கிறது.

*****

"எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. பல்லாயிரக்கணக்கான ட்ரான்ஸாக்ஷன்களைக் கொண்ட ஒரு சர்வரை ரெண்டு நாள் கவுத்தபோதே நான் அதிர்ச்சி அடையலே. இந்தியிலே ஒரு
வசனம் சொல்வாங்க - "மேரே பாஸ் கூகுள் ஹை". என் மடிக்கணிணியிலே கூகுள் இருக்கு. இந்த நேரத்துலே நான் தமிழ்லே ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன். "எல்லாப் புகழும்
காபி/பேஸ்டுக்கே".

*****

சுரேஷின் முதல் மேலாளர் மணிதங்கம் கூறியதாவது:

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சுரேஷை என் நண்பர்தான் கொண்டு வந்து என் முன் நிறுத்தினார். இவர் வேலை செய்த முதல் நாளை எங்கள் யாராலும் மறக்கவே முடியாது.
ஏதோ ஒரு மென்பொருளில் கைவைத்து சரிசெய்யப் போய், இந்தியா முழுக்க இருக்கும் கணிணிகளில் ஏதோ பிரச்சினையை ஏற்படுத்தினார். தொடர்ந்து இரண்டு நாட்கள் யாருமே வேலை செய்ய முடியாமே போச்சு.. அனைவரும் இவரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். இவரை இப்படியே விட்டா, இன்னும் பெரிய பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்து
உலகப்புகழ் பெறுவார்னு எனக்கு அப்போவே தெரிஞ்சி போச்சு.

*****

தமிழ் திரைப்பட நடிகர் ஒருவர் சொன்னது:

இது அமெரிக்க மென்பொருள் தயாரிப்புகளுக்காக கொடுக்கப்படும் விருது. இதில் நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை. தமிழ் மென்பொருளில் விருது கொடுத்தால், பாராட்டும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

*****

சுரேஷின் நீண்ட கால நண்பர்:

சுரேஷ் முதல்லே என்கிட்டேதான் மென்பொருள் கத்துக்க வந்தார். அப்போவே அவரோட ஞானம் என்னை பிரமிக்க வெச்சுது. ச்சின்னதா ஒரு கால்குலேட்டர் மென்பொருள் செய்து
காட்டச் சொன்னேன். 2+2=4000னு காமிச்சப்போவே எனக்குத் தெரிஞ்சி போச்சு - இவரு பெரிய சாதனை பண்ணப்போறாருன்னு. என்னோட நம்பிக்கை வீண் போகலே.

*****

இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் வெளியிட்ட அறிக்கை:

ஆஸ்கர் நாயகன் சுரேஷை இந்தியா பாராட்டுகிற இந்த சமயத்தில், இனிமேல் அவர் தயாரிக்கும் மென்பொருள் எல்லாவற்றிற்கும் டெஸ்ட்-விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது,
அவரோட எந்த மென்பொருளயும் அவர் டெஸ்டிங்குக்கு அனுப்பவே தேவையில்லை. அவைகளை அப்படியே மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.

*****

இணையத்தில் ஒருவர்:

சுரேஷுக்கு ஒரு நல்ல மேடை கிடைத்தது. அதை அவர் நல்லபடியா பயன்படுத்தியிருக்க வேணாமா? சென்னையில் மென்பொருள் நிபுணர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர் அந்த
அரங்கத்தில் சொல்லியிருக்க வேணாமா?

*****

ஆஸ்கர் நாயகன் சுரேஷின் பேட்டி:

எனக்கு இந்த விருது கிடைக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. நான் எப்பவும் வேலை செய்வதைப் போல்தான் இந்த மென்பொருளிலும் வேலை பார்த்தேன்.

முதல்லே, நானும் எல்லோரை மாதிரி வெட்டி-ஒட்டிதான் மென்பொருள் செய்திட்டிருந்தேன். பிறகு எனக்கு கிடைச்ச அந்த முதல் ப்ராஜெக்ட்தான் எனக்கு சரியான வாய்ப்பா அமைஞ்சுது.
என்னாலேயும், அந்த க்ளையண்டாலேயும் அந்த வேலையை மறக்கவே முடியாது. ஏன்னா, அதுக்கப்புறம் அந்த க்ளையண்ட் எங்கேயோ போயிட்டாரு. எங்கேன்னெ கண்டுபிடிக்க
முடியல.

இந்த விருதுக்குத் தகுதியானவங்க இங்கேயே நிறைய பேர் இருக்காங்க. அவங்க மென்பொருள்லே பண்ற பிரச்சினைகள் எல்லாமே லோக்கல்லேயே டெஸ்டர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுகிறது. அப்படி இல்லாமே, உலகளாவிய மென்பொருள்லே நம்ம ஆளுங்க கை வெச்சி 'நச்'சுன்னு பிரச்சினைகளை ஏற்படுத்தினாங்கன்னா, கண்டிப்பா நிறைய ஆஸ்கர் விருதுகளை நாம தட்டிக்கிட்டு வந்துடலாம்.

இப்போதைக்கு இது போதும்.

ஜெய்ஹிந்த்!!!

Read more...

Monday, March 16, 2009

இனிமே யாரையும் வெறுப்பேத்தக் கூடாது...


நான் ஏற்கனவே பார்த்த சினிமா பற்றியோ, கேள்விப்பட்ட சம்பவத்தைப் பற்றியோ யாராவது என்னிடம் விமர்சனம் செய்து கொண்டிருந்தால், அப்போதுதான் முதன்முதலாக
கேள்விப்படுவதைப் போல் கேட்டுக் கொண்டிருப்பேன். அவர் பேசி முடித்ததும் - அந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன்னு சொல்லி விடுவேன்.


”அதை ஏண்டா முதல்லேயே சொல்லலே?. நான் கஷ்டப்பட்டு பத்து நிமிடமா கத்திட்டிருக்கேன். இப்போ வந்து மெள்ளமா நான் முதல்லேயே அந்த படத்தை பாத்துட்டேன்னு
சொல்றியே?”ன்னு ரொம்பவே டென்சனாயிடுவாங்க. “ நீங்க ரொம்ப ஆர்வமா கதை சொல்லிட்டிருக்கும்போது, நான் அந்த ஆர்வத்தை நடுவில் புகுந்து தடுக்க மாட்டேன். அதைத் தவிர, நீங்க ஒழுங்காத்தான் கதை சொல்றீங்களா - இல்லே உங்க சொந்த கற்பனையையும் சேர்த்து கதை விடறீங்களான்னு நான் பாக்க வேண்டாமா”ன்னு சொல்லி கொலைவெறியை தூண்டி விடுவேன்.


இப்படியே மத்தவங்களை வெறுப்பேத்தறது கொஞ்ச நாளைக்கு நல்லபடியா போயிட்டிருந்தது.
ஒரு நாள், The Bucket List அப்படின்னு ஒரு படத்தை பார்த்தேன். அதில் ரெண்டு பெருசுங்க உலகச் சுற்றுலாக்குப் போறாங்க. இந்தியாவுக்குக் கூட வர்றாங்க. இந்தியான்ன்னாலே, எல்லோரும் முதல்லே கேக்கறது - தாஜ்மஹால்தான். அந்த தாஜ்மஹாலுக்கு வர்றாங்க. அவங்க அதை சுற்றிப் பார்த்துக்கிட்டிருக்கும்போது, பின்னணியில் இந்திய இசை இசைக்கிறது.


இப்படியாக படத்தைப் பார்த்து முடித்தபிறகு, சமையலறையில் நின்றிருந்த தங்கமணியிடம் - “ஏம்மா, இந்த படத்தைப் பாரு. இந்தியாலேல்லாம் படப்பிடிப்பு நடத்தியிருக்காங்க.
தாஜ்மஹால் காட்றாங்க. நல்லா இருக்கு படம்”.


நான் படத்தின் கதையை சொல்லிக்கிட்டே இருக்க - அவங்க வெறும் ‘ம்', ‘ம்'னு சொல்லிக்கிட்டே வந்தாங்க.


ம்ஹும். எங்கேயோ பிரச்சினை இருக்கு. நான் சொல்றதை இவங்க கேக்கறாங்களா இல்லையான்னே தெரியலேன்னு நினைச்சிக்கிட்டு - எங்கே, நான் சொன்னதை திரும்ப
சொல்லுன்னுன்னேன். அவங்க - ” இந்த குக்கர் சத்தத்துலே நீங்க சொன்னது என் காதுலேயே விழலே. உங்க மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு, இவ்ளோ நேரம் வெறும்னே ‘ம்'
சொல்லிக்கிட்டிருந்தேன்” அப்படின்னுட்டாங்க... அவ்வ்வ்..


”அப்போ இவ்ளோ நேரமா நான் தனியாத்தான் பேசிக்கிட்டிருந்தேனா? ஏன், காதுலே விழலேன்னா முதல்லேயே சொல்ல வேண்டியதுதானேன்னு” கேட்டா - ” நீங்கதான் கத்தி பேசணும். கடவுள் எனக்கு ரெண்டு காதுதான் கொடுத்திருக்காரு. நான் என்ன ரசூல் பூக்குட்டியா, அங்கங்கே மைக்ரோஃபோன் வெச்சி எல்லா சத்தத்தையும் கேக்க”ன்னுட்டாங்க. அவ்வ்வ்வ்..


சரி சரி தப்பு என்மேலேதான். இனிமே சத்தமாதான் பேசணும்னு ஒத்துக்கிட்டேன். வேறே வழி?


அதோட இன்னொரு முக்கியமான விஷயம் - இனிமே யாரையும் வெறுப்பேத்தக் கூடாதுன்னு முடிவு செய்துட்டேன்.


Read more...

Sunday, March 15, 2009

அலுவலகம் போகும்போது மறக்கும் விஷயங்கள்...


சாதாரணமா எல்லோரும் அலுவலகம் போகும்போது கைக்கடிகாரம், எழுதுகோல், கைக்குட்டை, கைப்பேசி இந்த மாதிரி விஷயங்களை வீட்டுலேயே மறந்து வைச்சிட்டு போயிடுவாங்க.
எங்க அலுவலகத்திலே, இதையெல்லாம் தாண்டி புனிதமா சிலதை மறந்துருக்காங்க. அவை என்னென்னன்னு பாக்கலாம்.

*****

மடிக்கணிணி:

எங்க குழுவிலே ஒருத்தரு தினமும் ஒரு மணி நேரம் வண்டி ஓட்டிக்கிட்டு அலுவலகம் வர்றவரு. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா, சரியான பனி. அதிலே கஷ்டப்பட்டு ஓட்டிக்கிட்டு
அலுவலகம் வந்துட்டாரு. வந்தபிறகு எதையோ தேடிக்கிட்டே இருந்தாரு. என்னன்னு கேட்டா - மடிக்கணிணியை காணோம்னாரு. அதோட பையை மட்டும் வீட்டிலிருந்து பத்திரமா
கொண்டு வந்துட்டாரு. வீட்டுக்கு தொலைபேசி கேட்டா - மடிக்கணிணி வீட்டிலேயே இருக்குன்னு சொல்லிட்டாங்க.

வேறே வழி? மறுபடி அந்த கொடும் பனியில் போய் அந்த மடிக்கணிணியை கொண்டு வந்தாரு. பனியில் வண்டி ஓட்டறதையே தவிர்க்க நினைக்கும் மக்களுக்கு நடுவில், இவரு மட்டும் காலையில் 8 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் வண்டி ஓட்டிக்கிட்டே இருந்தாரு.

காலுறை (சாக்ஸ்):

வழக்கம்போல் ஒரு நாள் மீட்டிங்கில் உட்கார்ந்து தூக்கக் கலக்கத்தில் சாமியாடிக்கிட்டிருக்கும் போது, குனிந்து என் கால்களை பார்த்தேன். பயங்கர அதிச்சி. என்ன, காலுறையே
போடலையான்னு கேக்கறீங்களா? அதாவது பரவாயில்லையே... ஒரு கால்லே கறுப்பு காலுறையும் இன்னொரு கால்லே வெள்ளை காலுறையும் போட்டிருந்தேன். எப்படி இந்த மாதிரி ஆச்சுன்னே தெரியல. வீட்டுலே இருக்கும்போதும் அலுவலக வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அப்படித்தான் ஆகும் என்று நானே சமாதானம் செய்துகொண்டேன்.

அப்புறம் என்ன... அன்னிக்கு நாள் முழுக்க பேண்டை கீழே கீழே இழுத்து யாருக்கும் காலுறை தெரியாதவாறு மறைத்துக் கொண்டிருந்தேன். எனக்கென்னவோ அன்னிக்கு மட்டும்
எல்லோரும் என் கால்களை பாக்குற மாதிரியே இருந்தது.

சப்பாத்து (ஷு):

அட, நானாவது பரவாயில்லே. இன்னொரு மேட்டர் கேட்டீங்கன்னா, ரொம்பவே டென்சனாயிடுவீங்க. அமெரிக்க நண்பர் ஒருவர் ஒரு நாளு ரெண்டு கால்லேயும் வெவ்வேறே சப்பாத்து போட்டுட்டு வந்துட்டாரு. அதையும் அவரா கவனிக்கலே. நாங்கதான் பாத்து சொன்னோம். அன்னிக்குன்னு பாத்து வரிசையா மீட்டிங் இருந்ததாலே அவராலே வீட்டுக்கும் போக முடியல. மனுசன் நாள் முழுக்க நாற்காலியை விட்டு எழுந்திருக்கலியே... தம் அடிக்கக்கூட போகலேன்னா பாத்துக்குங்க...

அன்னிலேர்ந்து நாங்கல்லாம், காலுறை மட்டுமில்லை, சப்பாத்து போடும்போதுகூட தவறு நேர்ந்துடாமே, கவனமா இருக்கிறோம்.

சட்டை:

இப்படியெல்லாம் கூடவா இருப்பாய்ங்கன்னு நினைக்கிற மாதிரி ஒருத்தரு எங்க அலுவலகத்தில் சட்டையே போடாமே வந்துட்டாருன்னா பாத்துக்குங்க.

வெறும் உள்ளாடையோடவே வந்துட்டாரான்னு கேக்கப்படாது. குளிர் காலம்றதாலே குளிராடை போட்டுட்டிருந்தாரு. அலுவலகம் வந்துட்டு அதை அவுத்தா, உள்ளே, வெறும் உள்ளாடைதான் இருக்கு. அலுவலகத்துக்குள்ளேயே குளிராடையோட சுத்திட்டிருந்த அவரு, அப்புறம் மதியத்துக்கு மேலே வீட்டுக்கு ஓடிப்போய் சட்டையை போட்டுக்கிட்டு வந்தாரு.

*****

இப்படி கண்ணுலே படும்படியான ஆடைகள் / பொருட்கள் மிஸ்ஸானா கண்டுபிடிக்க முடிஞ்ச எங்களாலே, கண்ணுலே படாத ஆடைகள் ஏதாவது மிஸ்ஸானா கண்டுபிடிக்க
முடியறதேயில்லே. பிறவியிலேயே ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி துப்பறியும் ஆர்வம் கொண்ட நாங்கள் - பூவே பூச்சூடவா நதியா கண்ணாடி எங்கேயாவது கிடைக்குதான்னு பாத்தோம்.
ஆனா, அதுலே எந்த ஆடைகளுமே கண்ணுலே படாதுன்றதாலே, அதை வாங்கும் முயற்சியை கைவிட்டோம்.
*****

Read more...

Wednesday, March 11, 2009

டாக்டர் விஜய் ரசிகர் மன்றத்தில் சேர விருப்பமா?

கீழ்க்கண்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்லிட்டீங்கன்னா, உங்களுக்கு ரசிகர் மன்றத்தில் ஒரு இடமும், 2016 தேர்தலில் அவர் கட்சி சார்பாக ஒரு சீட்டும் பரிசாக
அளிக்கப்படும்.


ஓகே. ரெடியா? இப்போ கேள்விகளுக்குப் போகலாம்.

*****

1. குளிக்கும்போது சோப்பு எங்கு போடுவீர்கள்?

அ. உங்கள் சொந்த முதுகில்
ஆ. மற்றவர்கள் முதுகில்
இ. சோப்பு போடும் பழக்கமில்லை
ஈ. குளிக்கும் பழக்கமேயில்லை.

2. டாக்டருக்குப் பிறகு தலைவருக்கு மிக விரைவில் கிடைக்கப்போகும் அடுத்த பட்டம் என்ன?

அ. ஆஸ்கர் நாயகன்
ஆ. பாஃப்டா நாயகன்
இ. கோல்டன் க்ளோப் நாயகன்
ஈ. மேற்கூறிய அனைத்தும்

3. கீழ்க்கண்டவற்றில் எந்த ஆயுதத்தை - பயன்படுத்தாமல் - வெறும் காட்டியே - மக்களை கொல்ல முடியும்?

அ. அம்பு
ஆ. வில்லு
இ. கல்லு
ஈ. கொம்பு

4. வசீகரா படத்தில் தலைவர் மிகவும் விரும்பி போட்ட வேடம் எது?

அ. சூப்பர்மேன்
ஆ. ஸ்பைடர்மேன்
இ. ஆர்மிமேன்
ஈ. வாக்மேன்

5. தலைவர் இன்னும் எந்த ஆட்டக்காரராய் படங்களில் நடிக்கவில்லை?

அ. கோலி
ஆ. முதுகு பஞ்சர்
இ. பல்லாங்குழி
ஈ. மேற்கூறிய அனைத்தும்

6. 5 கட்டையில் (சவுண்டா) பாடும்போது, பாடுபவர் எதையெல்லாம் மூடிக்கொள்ள வேண்டும்?

அ. கண்
ஆ. காது
இ. மூக்கு
ஈ. வாய்

7. அடுத்த படத்தில் தலைவர், வில்லனை வேகமாக மிதிவண்டியில் துரத்தும் அசத்தல் சீன் ஒன்று வருகிறது. அந்த காட்சியில் வில்லன் எந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று
எதிர்பார்க்கிறீர்கள்?

அ. புகைவண்டி
ஆ. விமானம்
இ. சாதா கப்பல்
ஈ. நீர்மூழ்கிக் கப்பல்

8. தலைவர் ஓட்டும் அந்த மிதிவண்டியில் என்னென்ன இருக்க வேண்டும்?

அ. இரண்டு சக்கரங்களும் ஒரு கைப்பிடி (ஹேண்டில் பார்) மட்டும்
ஆ. இரண்டு சக்கரங்கள் மட்டும்
இ. ஒரு கைப்பிடி மட்டும்
ஈ. எதுவுமே தேவையில்லை. அவரே ‘புர்ர்ர்ர்'ரென்று வாயில் சத்தம் செய்து கொண்டே மிதிவண்டி ஓட்டுவது போல் ஓடி வில்லனை துரத்தலாம்.

9. பல படங்களில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து தலைவர் போட்ட சண்டைக் காட்சிகளை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். இன்னும் எந்தெந்த விசையை எதிர்த்து அவர்
நடிக்கலாமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

அ. centripetal விசை
ஆ. centrifugal விசை
இ. நியூட்டனின் விதிகள்
ஈ. மேற்கூறிய அனைத்தும்

10. தலைவரின் அடுத்த பட க்ளைமாக்ஸ் வசனத்தில் உங்கள் உதவி தேவைப்படுகிறது. பின்வருவனவற்றில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து 100க்கு குறைவான வார்த்தைகளில் வசனத்தை எழுதுக.

அ. காதல்ன்றது பபுள்கம் மாதிரிங்க...
ஆ. காதல்ன்றது மூக்குசளி மாதிரிங்க...
இ. காதல்ன்றது தேர்தல் மாதிரிங்க...
ஈ. காதல்ன்றது கத்திரிக்கா மாதிரிங்க...

****

அனைத்திற்கும் சரியாக பதில் கூறியவர்களுக்கு மேற்கூறிய பரிசுகள் அளிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தவறான பதில் சொல்பவர்களுக்கு தலைவரின் பட டிவிடிக்கள் தபாலில்
அனுப்பி வைக்கப்படும்.


இந்த பதிவிற்கு பதிலே சொல்லாமல் தப்பிப்பவர்களுக்கு - அவர்கள் ஐபி மூலமாக தொலைபேசி எண் கண்டுபிடிக்கப்படும். அவர்களை தொலைபேசியில் அழைத்து தலைவரின் அனைத்து பட வசனங்களும் வரிசையாக சொல்லிக் காட்டப்படும்.

எப்படி வசதியோ செய்ங்க மக்கா....

Read more...

Monday, March 9, 2009

நொறுக்ஸ் - திங்கள் - 09/03/2009


போன வாரம் அலுவலகத்தில் மின் தூக்கியில் போயிட்டிருக்கும்போது - பக்கத்துலே இருந்த ஒரு வெள்ளையம்மா (வார்த்தை உபயம் நன்றி: நசரேயன்) - உங்க வீட்டுலே குழந்தைங்க இருக்கான்னு கேட்டாங்க. அட, இவங்க ஜோசியம் பாக்கறவங்க போலிருக்கே - இப்படி சரியா சொல்லிட்டாங்களே - நம்ம 'அம்மா'க்கு இன்னும் இவங்களை தெரியாது போலன்னு நினைச்சிட்டிருந்தேன். பிறகு எப்படி அவங்க சரியா சொன்னாங்கன்னு தெரிஞ்ச பிறகு - பயங்கர வெக்க வெக்கமா வந்தது... விவரத்திற்கு கீழே பாருங்க... (அட தரையிலே இல்லேங்க... பதிவில் கீழே!!!)


*****


இந்த ஊர்லே கார்லே போகும்போது ஒலிப்பானை பயன்படுத்த அவசியமே வராது. கடந்த மூணு வருடத்தில் நான் ஓரிரு முறையே அதை பயன்படுத்தியிருப்பேன். அதனாலே, அப்படி ஒரு விஷயம் என் கார்லே இருக்குன்றதே எனக்கு மறந்து போச்சு.

ஒரு தடவை என்ன ஆச்சுன்னா, போக்குவரத்து சிக்னல்லே என்னோட முறை வந்தப்புறம்கூட, சடார்னு பக்கத்திலிருந்து இன்னொரு வண்டி என்னை க்ராஸ் பண்ணிடுச்சு. உடனடி ப்ரேக் அடிச்சதாலே, மயிரிழையில் இடிக்காமே போச்சு அந்த வண்டி. அந்த சமயத்திலும் ஒலிப்பானை அடிக்கணும்ற எண்ணமே வரவில்லை. எனக்கு இதுகூட ஆச்சரியத்தை உண்டுபண்ணவில்லை. மேட்டரை கேளுங்க...

நம்ம ஊர்லே இத மாதிரி நாம மத்தவங்களுக்கு ‘கட்' கொடுத்தாலோ, மத்தவங்க நமக்கு ‘கட்' கொடுத்தாலோ - அவங்களை முந்திகிட்டு நாமளே - “ஓய்.. வீட்லே சொல்லிட்டு வந்துட்டியா”ன்னு ஆரம்பிச்சி - படபடன்னு தேர்தல் வாக்குறுதிகளைப் போல் கொட்டக்கூடிய கெட்ட வார்த்தைகளும் மேற்கூறிய சம்பவத்தின்போது எனக்கு வாயில் வரவில்லை. என்னடா இது, அமெரிக்கா வந்து கெட்ட வார்த்தைகளைக் கூட மறந்துட்டேனான்னு ஒரு சந்தேகம் வந்துடுச்சு. ஹிஹி.. அப்புறம் மனசுலேயே ஒரு தடவை சரிபார்த்தபிறகுதான் சந்தேகம் தெளிவாச்சு.... மனசும் நிம்மதியாச்சு.


*****


சட்டை, பேண்டை மேட்சிங்கா போடணும்னு யார்தான் கண்டுபிடிச்சாங்களோ? நமக்கு இதெல்லாம் சரியே படாது. கண்ணை மூடிட்டு அலமாரியில் கைவச்சா, கையில் மாட்டுற சட்டை, பேண்டை போட்டுட்டு போயிடுவேன். வீட்லே கன்னா பின்னான்னு திட்டுவாங்க. நான் சொல்றது என்னன்னா - ‘என்னை தெரிஞ்சவங்களுக்கு என் பழக்கம் பற்றி தெரியும். என்னை தெரியாதவங்களைப் பற்றி எனக்கு என்ன கவலை?”. அப்பவும் வீட்லே ஒத்துக்க மாட்டாங்க. “ஆள் பாதி, ஆடை பாதி”ன்னுவாங்க. “ஆள் பாதி, (மேட்சிங்) ஆடை பாதி”ன்னு யாரும் சொல்லலியேன்னுவேன்.


நீங்களே சொல்லுங்க, மேட்சிங்கா துணி போடலேன்னா, முட்டையும் தக்காளியுமா வீசப்போறாங்க?


*****


ஒரு ஜோக்:

காலை ஆறு மணி:
கணவன்: (மனைவியிடம்): “ நீ மட்டும் இல்லேன்னா....”
மனைவி: “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க....”

காலை ஒன்பது மணி:
கணவன் (மனைவியிடம்): “ நீ மட்டும் இல்லேன்னா... நான்.... ”
மனைவி: “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க....”

மதியம் 12 மணி:
கணவன் (மனைவியிடம்): “ நீ மட்டும் இல்லேன்னா... நான் எப்படி இருக்கப்போறேன்னு தெரியல.... ”
மனைவி: “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க....”

மாலை 4 மணி:
கணவன் (மனைவியிடம்): “ நீ மட்டும் இல்லேன்னா... நான் எப்படி இருக்கப்போறேன்னு தெரியல.... ”
மனைவி: (கண் கலங்கியவாறே) : “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க....”
கணவன்: ”போகும்போது பத்து நாளைக்கு வர்றாப்பல தோசைக்கு மாவு வெச்சிட்டு எங்கே வேணா போயிட்டு வா”..


*****


சினிமாவில் இடைவேளையின்போது தென்படுற நண்பர்கள் - “என்னடா, சினிமாக்கு வந்தியா?”ன்னா எவ்ளோ கோபம் வரும்? அதே மாதிரிதான், ஒரு வாரமா பேசக்கூட முடியாமே தொண்டை கட்டிண்டு ஜலதோஷத்தில் திக்கித் திணறிட்டிருக்கும்போது - பக்கத்து மாநில நண்பர் ஒருவர் சிரிச்சிக்கிட்டே - “என்ன ஜலதோஷமா?”ன்னார்.


ஏற்கனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு நடந்திட்டிருக்கு. இதிலே நான் வேறே அவரைப் பிடிச்சி திட்டிட்டேன்னா, தகராறு இன்னும் முத்திப் போய் - நெய்வேலி வரை ஊர்வலம், தனியா உண்ணாவிரதம்னெல்லாம் ஆயிடும்னு பயத்திலே - “ஆமா. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க்... பில்டிங் வீக்”ன்னேன்.


இன்னும் அந்த ஜோக்கு அவிங்க மொழியிலே வரலே போலிருக்கு.


*****


விடியற்காலையிலே அமைதியான சூழ்நிலையில் ஏதாவது பாட்டு கேட்டேன்னு வைங்க.. அன்னிக்கு நாள்முழுக்க அதே பாட்டை முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன். எல்லோரும் அதே மாதிரிதான்னு நினைக்கிறேன்.

உதாரணத்துக்கு ‘அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்...'னு கேட்டுட்டா அன்னிக்கு முழுவதும் அதையே பாடுறாப்போல, ஒரு நாள் என்ன ஆச்சுன்னா, காலங்கார்த்தாலே சஹானாவோட ரைம்ஸ் எதையோ கேட்டுட்டேன். மின் தூக்கியில் போகும்போது, மனசுலே பாடுறேன்னு கொஞ்சம் சத்தமா பாடிட்டேன்னு நினைக்கிறேன்.. அதை அந்தம்மா கேட்டுட்டாங்க. அதான் விஷயம்.

அந்த நிகழ்ச்சிக்கப்புறம் - மனசுலே எதையும் நினைக்கிறதுக்கு முன்னாடி சுத்திமுத்தி யாரும் இருக்காங்களான்னு பாத்துக்கிடுவேன். ஹிஹி.

*****


Read more...

Sunday, March 8, 2009

கு கு கூ க கொ...!!!


இது 'சோளி'ன்னு ஆரம்பிக்கிற இந்தி பாடலைப் பற்றிய பதிவு அல்ல.. சிங்கார வேலன்ல வர்ற பாட்டு பற்றியும் அல்ல.. ஏதாவது கெட்ட வார்த்தையை குறிப்பதும் அல்ல. அப்போ
என்னதாண்டா சொல்ல வர்றேன்றீங்களா ?? (இல்லையா?). சரி சொல்றேன்... தலைப்பின் விரிவாக்கம் படிச்சீங்கன்னா உங்களுக்கே புரிஞ்சிடும்.

குளம்பி குடிக்க கூப்பிட்ட கதைகளின் கொசுவத்தி...

*****

”விசைப்பலகையில் கை பட்டா எனக்கு அலர்ஜி. இன்னொரு பத்து நாளைக்கு அதை தொடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு” - அப்படின்னு சொல்லி ரெண்டு கைகளையும்
தலைக்குப் பின்னால் பின்னிக்கிட்டு சும்மா உக்காந்திருக்கற ஆள் இல்லேங்க நானு.


அலுவலகத்திலே நுழைஞ்சிட்டேன்னா மொத்தம் மூணு விஷயங்கள்தான் எனக்குத் தெரியும். முதலாவது - வேலை, ரெண்டாவது - வேலை, மூணாவது - வேலை. அப்படியே வேலையிலே
மூழ்கிடுவேன். கூட இருக்கிற நண்பர்கள்தான் - ரொம்ப நேரம் மூழ்கியிருந்தேன்னா, எனக்கு மூச்சு முட்டும்னு சொல்லி - அடிக்கடி குளம்பி குடிக்கப் போகலாம்னு இழுத்துட்டுப்
போவாங்க.


சில பேருக்கு அலுவலகத்தில் நுழைஞ்சவுடனே ஒரு கோப்பை குளம்பி குடிச்சாதான் வேலையே ஆரம்பிக்க முடியும். வேறே சில பேருக்கு வெவ்வேறே நேரங்கள்லே குளம்பி
குடிக்கணும்னு தோணும். குடிக்க போறவங்க யாரும் தனியா போகமாட்டாங்க. போரடிக்குமாம். அதனால், எல்லோரும் போகும்போது ஒரு குறிப்பிட்ட ஆளைத்தான் கூட்டிட்டு போவாங்க. இப்படி எல்லாருக்கும் கம்பெனி கொடுக்கிற ஆளு - ஹிஹி அது நாந்தான்னு சொல்லித்தான் தெரியணுமாக்கும்.


*****


பக்கத்து இருக்கையிலேயே உட்காந்திருக்கிற தோழிகிட்டேந்து மின்னஞ்சல் வரும். "மேலே (காண்டீனுக்கு) போலாமா?". அதே நேரத்தில் நண்பன்கிட்டேந்து தொலைபேசியும் வரும். "கீழே
கடைக்கு போலாமா?".


நண்பனிடம் - "ஒரு பத்து நிமிஷம் கழிச்சி கீழே வந்துடு. நானும் வந்துடறேன்"னு சொல்லிட்டு - தோழிக்கு - "முன்னாலே போங்க. ஒரு நிமிஷத்துலே நானும் வர்றேன்"னு கேண்டீனுக்குக்
கிளம்பி போயிட்டே இருக்க வேண்டியதுதான்... அங்கே குளம்பி குடிச்சிட்டு நண்பனைப் பார்க்க கீழே கடைக்கு ஓடணும்.


சில சமயம் என்ன ஆகும்னா, ஒரு குழுவோட குளம்பி குடிச்சிட்டு கடையிலிருந்து கிளம்பும்போது, இன்னொரு குழு வந்து - எங்களோட உக்காரு. பத்து நிமிடத்திலே
போயிடலாம்னுவாங்க. “இல்லேப்பா. வேலையிருக்கு. போகணும்” அப்படின்னா டக்குன்னு மம்முட்டியா மாறி - “ நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன்னா யாரு தெரியுமா?
எங்களுக்காக ஒரு பத்து நிமிடம் செலவழிக்க மாட்டியா?”ன்னு வசனம் பேச ஆரம்பிச்சிடுவாங்க.


எனக்கு சரியான கோபம் வந்துடும். ”நண்பன்றீங்க, உங்களுக்காக பத்து நிமிடமெல்லாம் என்னாலே ஒதுக்க முடியாது - வேணும்னா அரை மணி நேரம் இருக்கறேன்”னு - அடுத்த சுற்று குளம்பிக்காக அந்த குழுவோட கடையிலேயே உக்காந்திடுவேன். வேலை இன்னிக்கு வரும், நாளைக்கு போகும் ஆனா நண்பர்கள் அப்படி இல்லையே?.


இப்படி எல்லாமே நல்லாத்தான் போயிட்டிருந்தது.


*****


ஒரு நாள் எங்க மேனேஜர் திடீர்னு கூப்பிட்டாரு - “கீழே கடைக்குப் போலாமா?”. ஹிஹி. நாமதான் யார்றா கூப்பிடுவாங்கன்னு காத்திருக்கோமே?. “கொஞ்சம் வேலை இருக்கு. சரி
வாங்க, வந்து முடிச்சிக்கறேன்”னு சொல்லி அவரோட போய் கடையில் உக்காந்தேன்.


குளம்பி பரிமாறுபவர் திடீர்னு என்கிட்டே வந்து - “அண்ணா, பத்து நிமிடம் முன்னாலே வந்தீங்கல்ல. அப்போ உங்ககூட வந்தவரு இந்த மூக்கு கண்ணாடியை விட்டுட்டாரு. அவர்கிட்டே கொடுத்திடறீங்களா?”ன்னாரு.


”இத பார்றா. உலகத்திலே ஒருத்தர மாதிரியே இன்னும் ஆறு பேர் இருப்பாங்கன்னு சொல்லக் கேட்டிருக்கேன். அதிலே ஒரு ஆளு, இங்கே பக்கத்துலேயே இருக்கான்னு தெரியாமே
போச்சே”னு வழிஞ்சி, பேச்சை மாற்றி அடுத்த டாபிக்குக்கு போய்விட்டேன்.


*****


அதுக்குப்பிறகு, கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிட்டிருந்தேன். ஆனா அப்படி இருக்க விடுவாங்களா நண்பர்கள்? மறுபடி கடை, கடையா வெவ்வேறே நண்பர்களோட குளம்பி குடிக்க கிளம்பியாச்சு!!!

Read more...

Wednesday, March 4, 2009

வாய் விடாமே (முடிஞ்சா) சிரிங்க...!!!


பக்தன்: கடவுளே, எனக்கு அமைஞ்ச பொண்டாட்டி சரியில்லே. எனக்கு ஏன் இப்படிப்பட்ட பொண்ண குடுத்தே?

கடவுள்: அடங்கொன்னியா, பொண்டாட்டி வேணும்னு நீதானே ‘தலைகீழே' நின்னே?

*****

தொண்டர்-1: என்ன, நம்ம தலைவரு எல்லாத்திலேயும் லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தைத்தான் பயன்படுத்துவாரா?

தொண்டர்-2: ஆமா, மணல் கடத்தலைக்கூட சாட்டிலைட் துணையுடன் கண்காணிக்கறார்னா பாத்துக்கோ.

*****

” நேத்து எங்க ஹோட்டலே கொரில்லா தாக்குதல் நடந்தது.”
“பக்கத்து நாட்டுலேந்தா?”
“ம்ஹும். பக்கத்து zooலேந்து”.


*****

" நம்ம கட்சியோட கொள்கை பேரு “உள்ளே வெளியே”வா? அப்படின்னா?"

“பிற கட்சியிலேந்து நம்ம கட்சிக்குள்ளே வர்றவங்க, வெளியே தைரியமா சுத்தலாம்.. அதே நம்ம கட்சியிலேந்து வெளியே யாராவது போனாங்கன்னா, அவங்க “உள்ளே”தான் இருக்கணும்.”

*****

”வேலைக்கு சேரும்போது 24 மணி நேரம் வேலை செய்வேன்னீங்களே?”

“ஆமா. நான் ஒரு வாரத்துக்குதானே சொன்னேன்”.

*****

” நீயும் உன் மருமகளும், சண்டை போடப்போறோம்னு சொல்லிட்டு தினமும் எங்கே பஸ்லே போயிட்டு வர்றீங்க?”

“சென்னை உயர் நீதிமன்றதுக்குதான். சண்டையில் ஏதாவது அடிகிடி பட்டுடுச்சுன்னா, அரசு செலவுலேயே வைத்தியம் பண்ணிக்கலாமே!!!”

*****

”என்னது, உன் பொண்டாட்டி எதிரிலேயே இன்னொருத்தி வந்து, என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னாளா?”
“ஆமா”
“எங்கே நடந்தது இது? எப்போ?”
“கணிணி பாக்கும்போதுதான்... tamilmatrimony.com விளம்பரத்திலிருந்து”

*****

கழக ஆட்சி திரும்ப வந்தபிறகு தலைவர் போட்ட முதல் கையெழுத்து தமிழகத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்கின் நிறங்களை மாற்றியமைக்கும் கோப்பில்தான்.

சென்ற ஆட்சியில் சிக்னல் விளக்குகளில் ஒளிர்ந்த - கரும் பச்சை, பச்சை, இளம் பச்சை - ஆகிய நிறங்களை மாற்றி - கரும் மஞ்சள், மஞ்சள், இளம் மஞ்சள் நிறங்களை நிறுவ ஆணை பிறப்பித்துள்ளார்.

*****

Read more...

Tuesday, March 3, 2009

ஸ்ரீ பார்த்தசாரதி சபா நாடகத்தில் நடித்த அனுபவம்...!!!


எச்சரிக்கை:

நாடகத்தில் நடித்திருக்கிறேன்னவுடனே, எஸ்.வி.சேகர் அல்லது கிரேஸி மோகன் ரேஞ்சுலே நினைச்சிக்காதீங்க. நான் சொல்ல வந்தது படிக்கும்போது பள்ளியின் ஆண்டு விழாவில்
நடித்ததைப் பற்றிதான். எங்க பள்ளியின் விழாக்களெல்லாம் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீ பார்த்தசாரதி சபா வளாகத்தில்தான் நடத்துவார்கள்.

*****

ஐந்தாவது படிக்கும்போது ஒரு நாள் ரொம்ப வற்புறுத்தி என்னையும் ஒரு நாடகத்துலே நடிக்கச் சொன்னாங்க. எல்லாருக்குமே மிகவும் தெரிந்த வசனங்களைக் கொண்ட ‘வீர பாண்டிய கட்டபொம்மன்' நாடகம்தான். ஆரம்பத்திலிருந்தே எனக்கு சந்தேகமா இருந்தது, நம்ம பர்சனாலிட்டிக்கு க.பொ வேடம் சரியாயிருக்குமான்னு. இருந்தாலும் பரவாயில்லே ஒத்துக்கிடலாம்னு பாத்தா அந்த வேடம் எனக்கில்லேன்னுட்டாங்க. அட்லீஸ்ட் ஜாக்சன் துரை வேடமாவது கிடைக்கும்னு நம்பிக்கையோடு இருந்த எனக்கு அவர்கள் கொடுத்ததோ ஒரு காவலாளி வேடம்.


ஜா.துரை உக்காந்திருக்கும்போது, நான் அங்கே வந்து - அவரை வணங்கி, வாழ்க வாழ்க அப்படின்னெல்லாம் சொல்லிட்டு, க.பொ வந்திருக்காக - அப்படின்னு ஒரு வசனம்
சொல்லிட்டு, நாடகம் முடியறவரை ஒரு ஓரத்துலே போய் நின்னுடணும். சரி இதுவும் ஒரு முக்கியமான வேடம்தான்னு மனசை தேத்திக்கிட்டேன். எப்படி முக்கியம்னு கேட்டீங்கன்னா,
நான் (காவலாளி) மட்டும் இல்லேன்னா க.பொ வந்திருக்கிற விஷயமே ஜா.துரைக்குத் தெரியாதே. அப்புறம் சரித்திரப்புகழ் பெற்ற அந்த சந்திப்பே நடக்காமேயே போயிருக்குமே.
இதைவிட முக்கியமான விஷயம் என்னன்னா, இப்படி துக்கடா வேடத்தில் நடிக்க ஆரம்பிச்சாதான், அப்படியே பிக்கப் ஆகி, தொலைக்காட்சி, சினிமா, அரசியல்னு படிப்படியா
முன்னேறி, முதலமைச்சர் பதவி வரைக்கும் போகமுடியும்னு அப்பவே எனக்கு தோணிப்போச்சு. ஒருவழியா ஆசிரியைகிட்டே போய் ‘ஓகே' சொல்ல தயாரானேன்.


இவ்வளவிற்குப் பிறகும் எனக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. துரையா நடிக்க இருந்தது ஒரு பொண்ணு. நூத்துக்கணக்கான பேர் முன்னால் போய் ஒரு பொண்ணை நாம
வணங்குவதா, அப்புறம் எதிர்காலத்துலே சுயசரிதை எழுதும்போது இதை அப்படியே வெளிப்படையா எழுதமுடியுமான்னெல்லாம் என் மனசுக்குள்ளே ஆயிரமாயிரம் கேள்விகள் பிறந்தன. பிறகு அந்த காவலாளி வேடத்திற்கும் போட்டி அதிகரிக்குதுன்னு கேள்விப்பட்டதால், நானே பண்றேன்னு பெரியமனசோடு ஒத்துக்கிட்டேன்.


அதோட பிரச்சினை முடிஞ்சுதான்னு கேக்காதீங்க. இதுவரை சொன்னதைவிட பெரிய்ய பிரச்சினை ஒண்ணு காத்திருந்தது. அது என்னன்னா - காவலாளியோட உடை. அந்த காலத்து
காவலாளிகளெல்லாம் சட்டை, ட்ராயர் போடமாட்டாங்களாமே... அதனால் எனக்கும் ஒரு கவுன் மாதிரி ஏதோ ஒண்ணு கொடுத்துட்டாங்க. சரி வரலாற்றுலே இடம்பெறணும்னா என்ன
வேணா செய்யத் தயாரா இருக்கணும்னு முடிவு பண்ணி, அவங்க சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டிவிட்டு, அந்த நாடகத்தில் வெற்றிகரமாக நடித்துக் கொடுத்தேன்.


அந்த ஒரே ஒரு வசனம் பேசினப்பிறகு, சபையில் ஒரு ஓரத்திலிருந்து பலத்த கைதட்டல். இன்னுமா இந்த ஜனங்க நம்மளை நம்பறாங்கன்னு கண்ணீருடன் திரும்பிப் பாத்தா, அது வேறே யாருமில்ல, என் பெற்றோர்கள்தான். நான் நாடக அரங்கேற்றம் பண்ணி வெற்றிகரமா முதல் வசனம் பேசினதுலே உணர்ச்சி வசப்பட்டு கை தட்டிட்டாங்க. இப்படியாக ஒரு வழியா அந்த நாடகம் முடிஞ்சுது.


எந்த வேலையை செய்தாலும், feedback கேட்டு நம்மை முன்னேத்திக்கணும்னு சொன்னதாலே, நண்பர்கள்கிட்டே - நம்ம நடிப்பு எப்படி இருந்ததுன்னு கேட்டதுக்கு என்மேலே அபாண்டமான குற்றச்சாட்டு ஒண்ணு சொன்னாங்க. அது என்னன்னா - அந்த நாடகத்திலே நான் கண்மூடித்தனமா நடிச்சிருக்கேனாம்.


மேடையில் நடிக்கும்போது ‘பளீர்'னு விளக்குகள் போட்டு கண்கூசறா மாதிரி இருந்ததாலே, 'வேல்' பிடிச்சிக்கிட்டு சும்மாதானே நிக்கறோம்னு, கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டு
நின்னுக்கிட்டிருந்தேன். என் மேல் இருந்த பாசத்திலே, பயபுள்ளைக அதைக்கூட உன்னிப்பா கவனிச்சி என்னை விமர்சனம் செய்து ஓட்டிக்கிட்டிருந்தானுவ.


*****


இப்படி திரும்பினா போட்டோ, அப்படி திரும்பினா போட்டோன்னெல்லாம் இப்போ எடுத்திட்டிருக்கிற மாதிரி அப்போ நினைச்சி பாக்க முடியுமா? அதனால், நான் நடிச்சதுக்கு ஆதாரமா எந்த போட்டோவும் என்கிட்டே இல்லே. அதைவிட, அந்த பார்த்தசாரதி சபா கட்டிடமே இப்போ இல்லே. சில வருடங்களுக்கு முன்னால், அதை இடிச்சி அந்த இடத்திலே அடுக்கு மாடி வீடுகள் கட்டிட்டாங்க.

*****


Read more...

Monday, March 2, 2009

அமெரிக்கர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த கதை...

எங்க அமெரிக்க மேனேஜர் உட்பட குழுவில் உள்ள ஐந்து அமெரிக்கர்கள், ஒரு சீனர் எல்லாரும் போன வாரம் slumdog பாத்துட்டாங்க. அன்னிலேர்ந்து தினமும் கொஞ்ச நேரம் அந்த படத்தைப் பற்றி பேசிட்டிருப்பாங்க.

*****

ஆஸ்கர் விழா முடிஞ்சி ஒரு ரெண்டு நாள் கழிச்சி ஒரு மீட்டிங்கில் இருந்தபோது என்கிட்டே மேனேஜர் கேட்டாரு.

”இந்தியாக்காரங்க கலக்கிட்டாங்களே. விருது விழாவை பாத்தியா?”

”பாக்காமே இருக்க முடியுமா? எங்காளு ரெண்டு விருது வாங்கினாரே?”

“ரஹ்மான் உங்க ஊருதானா?”

“ஆமா. எங்களுக்கு என்ன சந்தோஷம்னா விழாலே அவரு தமிழ்லே பேசினதுதான்”.

”நடுவிலே இந்திய மொழியில் ஏதோ பேசினாரு. அதுதான் தமிழா?”

ஆமான்னுட்டு ஒரு நிமிடம் நம்ம தல பேசினத அப்படியே மொத்தமா பேசிக் காட்டினேன்.

மேனேஜர் - ”அதை மனப்பாடமே பண்ணிட்டியா?"

”எங்க தல பேசினதை மறக்க முடியுமா? எந்தெந்த இடத்திலே பாஸ் (pause) கொடுத்தாரு, எப்படி 'மேரேஜ்'னு சொன்னவுடனே சிரிச்சாரு, எல்லாமே மனப்பாடமா இருக்கு". (பின்னே இருக்காதா, படையப்பா நீலாம்பரி கணக்கா, அதே காட்சியை ஏகப்பட்ட தடவை யூட்யூபில் பார்த்து, ஒவ்வொரு தடவையும் உணர்ச்சி வசப்பட்டிருக்கேனே!!!).

*****

நம்ம ஊரு தொலைக்காட்சி காம்பியரர்கள் கணக்கா ‘டமில்'னு சொல்லிட்டிருந்தவங்களை ‘தமிழ்'னு சொல்லுங்கன்னு திருத்தினேன்.

அமெரிக்கர்கள் ஏற்கனவே 'ரா'வுக்குப் பதிலாக 'ழா'வைத்தான் பயன்படுத்துவாங்க. உதாரணத்திற்கு: 'ராரா சரசகு ராரா' பாட்டு பாடச்சொன்னா, அவர்கள் 'ழாழா சழசகு ழாழா'ன்னுதான் பாடுவாங்க.

அதே அனுபவத்துலே ‘தமிழ்'னும் அழகா சொன்னாங்க. கூடவே - “"எல்லாப் புகழும் இறைவனுக்கே" - சொல்லிக்கொடுத்து அதை மொழிபெயர்த்தும் சொன்னேன்.

மேனேஜர் என்ன பண்ணாருன்னா அதை மறக்கக்கூடாதுன்னு எழுதி வெச்சிக்கிட்டாரு. எங்க அலுவலகத்திலே இன்னொரு பெரிய்ய்ய்ய தல ஒருத்தர் இருக்காரு. தமிழர்தான். அவர்கிட்டே போய் இவரு - "எல்லாப் புகழும் இறைவனுக்கே" - அப்படின்னு சரியா சொன்னதும் அவர் ஆடிப்போயிட்டாராம். "உங்களுக்கு யாரு இதை சொல்லிக் கொடுத்தது"ன்னு ஆச்சரியத்தோடு கேட்டிருக்காரு.

அதுக்கப்புறம் ச்சின்னச்சின்ன ப்ராஜெக்டா இருந்தாலும், அது வெற்றிகரமா முடிஞ்சுதுன்னா, என்னைப் பார்த்து - “எல்லாப் புகழும் இறைவனுக்கே”ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு.

ஏதோ நம்மாலானது இவ்ளோதான்.

*****

மேற்சொன்ன மீட்டிங்குகளில் ஒரு சீனாக்காரரும் இருந்தாரு. "இந்திய படங்கள்லே திடீர் திடீர்னு பாட்டு போட்டு நூத்துக்கணக்கான பேர் ஆட ஆரம்பிச்சிடறாங்க. கதைக்கு சம்மந்தமில்லாத மாதிரி இருக்குது அது" - அப்படி இப்படின்னு பேசி வெறுப்பேத்திக்கிட்டே இருந்தாரு.

நம்ம சோனியாஜியும், மன்மோகன்ஜியும் - மத்த நாட்டு உள்விவகாரத்துலே தலையிடக்கூடாது, இறையாண்மை மதிக்கப்படணும்னு சொல்லியிருப்பதாலே, நானும் சீன நாட்டு விவகாரம் எதுவும் பேசாமல் அமைதி காத்தேன். அந்த மீட்டிங் முடிவில் - "நல்ல தமிழ் படங்கள் DVD இருந்தா குடு. நான் பாக்கணும்"னு சொன்னாரு.

ங்கொய்யாலே.. எங்க படங்களை/இசையை நல்லா ஓட்டின உன்னை பழிக்குப்பழி வாங்கறேன்னு நினைச்சி, கீழ்க்கண்ட படங்களை அவருக்கு சிபாரிசு செய்யலாம்னு இருக்கேன். "இந்த படம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா"ன்னு பாத்து சொல்லுங்க.

ஏகன், வில்லு, குருவி, அழகிய தமிழ் மகன் மற்றும் பில்லா.

****

Read more...

Sunday, March 1, 2009

மனைவிக்கு கணவன் கூறும் அறிவுரைகள் பத்து...!!!


போன வாரம் நடந்த பத்து தொடர்லே என்னாலே கலந்துக்க முடியல. அதனால், சூப்பர் ஸ்டார் தனியா உண்ணாவிரதம் இருந்த மாதிரி, நானும் தனியா இப்போ இந்த பதிவை
போட்டிருக்கேன். இப்போ Over to பதிவு.


*****


வண்டி ஓட்ட கத்துக்கோ:

கார் (அல்லது ஸ்கூட்டி, சைக்கிள் ஏதாவது) ஓட்ட கத்துக்கோ. அப்போதான் மனசுலே தன்னம்பிக்கை வரும். 'மனதில் உறுதி வேண்டும்' பாட்டுலே சுகாசினி எப்படி தைரியமா
ஓட்டிக்கிட்டு போய் வாழ்க்கையில் ஜெயிக்கறாங்கன்னு பாத்தேயில்லே. நான் எது சொன்னாலும் உன் நல்லதுக்குதான் சொல்லுவேன்.

எதையாவது இன்ட்ரெஸ்டிங்கா டிவியில் பாத்துக்கிட்டிருக்கிற என்னை எழுப்பி, ஒரே ஒரு தேங்கா பத்தையோ, கொஞ்சூண்டு கறிவேப்பிலையோ வாங்க அனுப்பாதே. வண்டி ஓட்ட
தெரிஞ்சிருந்துதுன்னா, நீயே போய் வாங்கிட்டு வந்துடலாம். என்னை ஆள விட்டா போதும்!!!


யோகா கத்துக்கோ:

சமீபகாலமா நீ ரொம்ப டென்ஷனாயிடறே. இப்பவே இப்படின்னா, வயசானப்புறம் இதே மாதிரி டென்ஷனானா உடம்புக்குதான் கஷ்டம். அதனால் நான் சொல்றது என்னன்னா, யோகா
கத்துக்கோ. மனசும், உடம்பும் அமைதியாகும். அதிகம் ஒண்ணுமில்லே தினமும் ஒரு அரை மணி நேரம் செலவழிச்சா போதும் - வாழ்நாள் முழுக்க பயனடைலாம்.

ஏம்மா, நாள் முழுக்க கஷ்டப்பட்டு ஆபீஸ்லே வேலை செய்துட்டு வீட்டுக்கு வர்றவனை, ஈவுஇரக்கமே இல்லாமே மொக்கை போடுறியே... அட்லீஸ்ட் யோகா கத்துக்கறேன்னு தினமும்
ஒரு அரை மணி நேரம் அமைதியா இருந்தீன்னா, உனக்கு அமைதி கிடைக்குதோ இல்லையோ, எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப அமைதி கிடைக்கும்
.


நல்லா தூங்கு:

காலங்கார்த்தாலேந்து ராத்திரி வரைக்கும் வீட்டுலே எல்லா வேலையையும் இழுத்து போட்டுட்டு செய்யுறே. கொஞ்ச நேரமாவது ஓய்வெடுக்க வேண்டாமா? மதியம் தூங்க
முடியலேன்னாகூட பரவாயில்லை. ராத்திரி சீக்கிரம் தூங்கப் போயிடு. ஒரு நாளைக்கு 10 மணி நேரமாவது தூங்கினாத்தான், உடம்பு ஆரோக்கியமா இருக்கும்.

ஆபீஸ்லே இருக்கிற பிரச்சினையால் அங்கேயும் இணையத்துலே எதையும் பாக்கமுடியல. வீட்லேயாவது ராத்திரி கொஞ்ச நேரம் கணிணியில் உக்காரலாம்னா, படுக்க வாங்க, படுக்க
வாங்கன்னு படுத்தாதே. நீ போய் படுத்திட்டீன்னா, ஜிடாக்லே யார்கிட்டேயாவது கொஞ்ச நேரம் கடலை போட்டுட்டு வந்து படுத்திடுவேன்.

பாட்டு கத்துக்கோ:

உனக்கு இருக்கிற குரல் வளத்துக்கு நீ சரியான ஆசிரியர்கிட்டே பாட்டு கத்துக்கிட்டிருந்தின்னா, இன்னேரம் சங்கீதக்கடல்லே மூழ்கி முத்துமாலையே எடுத்திருக்கலாம். இப்பவும் ஒண்ணும்
கெட்டுப் போயிடலே. பக்கத்து தெருவுலே ஒருத்தரு பாட்டு சொல்லிக் கொடுக்கறாரு. கத்துக்கறதுன்னா கத்துக்கோ.

முடியலேம்மா. எஃப்.எம் லே கண்றாவி பாட்டு வந்தாக்கா உடனடியா அதை ஆஃப் செய்துடலாம். வீட்லே அது மாதிரி பாடினீன்னா, என்ன பண்றது? ஏ.ஆர்.ரஹ்மானோ, சங்கர்
மகாதேவனோ உச்சஸ்தாயிலே பாடலாம். நீ பாடலாமா? தொடர்ச்சியா தொலைபேசற எல்லார்கிட்டேயும் - “ஒண்ணும் பிரச்சினையில்லே. இவ பாட்டுதான் பாடிக்கிட்டிருக்கா” -
அப்படின்னு எவ்ளோ தடவைதான் சொல்லமுடியும் ஒரு ஆளாலே?

நிறைய சாப்பிடு:

டயட், டயட் அப்படின்னுட்டு சாப்பிடாமே இருந்துடாதே. நிறைய சாப்பிட்டாத்தான் உடம்புக்கு தெம்பு வரும். அதே மாதிரி விதவிதமா சமைக்கவும், சாப்பிடவும் கத்துக்கோ.

எனக்கு தனியா எடுத்து வெச்சிட்டு எவ்ளோ வேணா சாப்பிட்டுக்கோம்மா. எந்த சமையல் செய்தாலும் ஒரே மாதிரி இருக்குதுன்னு, உன் மனசு கஷ்டப்படும்படி என்னாலே சொல்ல
முடியல. ஏதாவது பாத்து செய். நாக்கு செத்து போயிடும்போல் இருக்கு.

The End.

*****

பி-கு : 1: மனைவிக்கு அறிவுரைகள் 10ன்னு சொல்லிட்டு, கம்மியா சொல்லியிருக்கீங்களேன்னு கேக்கறவங்களுக்கு. பத்துதானேன்னு இன்னிக்கு அறிவுரை சொல்லிட்டா, நாளைக்கு
அதுவே கிட்டத்தட்ட 11 மடங்கு அதிகமாகி அர்ச்சனையா மாறி 108ஆ திரும்ப நமக்கே கிடைக்கும். அப்படிப்பட்ட பின்விளைவுகள் திடீர்னு நினைவுக்கு வந்துடுச்சு. அதனால்தான்
பாதியிலேயே நிறுத்துக்கிட்டேன்.


பி-கு : 2 : பதிவை படிச்ச தாய்மார்கள் அனைவரும் எனது நன்றி.. மீண்டும் வருக.

பி-கு : 3: மீசை வெச்சிருக்கிற, மீசை வெட்டிவிட்ட, மீசை வளரவே வளராத, மீசை வளராமலேயே வெட்டிவிட்ட நிகழ்கால / வருங்கால கணவன்மார்கள் எல்லாரும் Ctrl+A
அமுக்கிக்கிட்டு பதிவை இன்னொரு தடவை படிச்சிடுங்க.


Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP