Showing posts with label ச்சும்மா. Show all posts
Showing posts with label ச்சும்மா. Show all posts

Sunday, July 7, 2019

பிறந்த நாள் வாழ்த்துகள்!!



நண்பர்கள் / சொந்தக்காரர்கள் அப்படின்னு பல பேருக்கு தினம் தினம் பிறந்த நாள் / திருமண நாள்னு பல சிறப்பு நாட்கள் வருகின்றன. அதில் என்ன பிரச்னைன்றீங்களா? அதில் ஒண்ணும் பிரச்னையில்லை. அதுக்கு அந்தந்த வாட்சப் க்ரூப்பில் இருக்கும் பலர் வாழ்த்துகள் / வாழ்த்துக்கள்னு (அவங்கவங்க சார்புக்கேற்ப!!) வாழ்த்துவாங்க. சரி. இதில் என்ன பிரச்னைன்றீங்களா? ஹிஹி. இதிலும் ஒண்ணும் பிரச்னையில்லை. 

அப்போ எதுக்குடா இந்த பதிவுன்றீங்களா? விஷயத்துக்கு வர்றேன். இந்த வாழ்த்துக்கு  நன்றி சொல்றாங்க பாருங்க. அதுதான் விஷயம். 

இப்போ கல்யாண வீடுகளில் சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருப்போம். (சரி. மடங்களில் / கோயில்களில்!!). ஒரு இனிப்போ, பாயசமோ பரிமாறிக் கொண்டிருக்கும்போது, நமக்கு முன் இலைக்கு வரும்போது அது முடிஞ்சிடும். எடுத்துட்டு வர்றேங்கன்னு போவார். எடுத்துட்டும் வருவார். ஆனா, நம் இலையை விட்டுட்டு அடுத்த இலையிலிருந்து துவங்கிப் போயிடுவார். கேட்டால், ஒருவருக்கு ஒண்ணுதாங்க / ஒரு கரண்டிதாங்கன்னு சொன்னாலும் சொல்லிடுவாரோன்னு பக்கத்து இலையையே முறைச்சிப் பார்த்திருட்டிருப்போம். 

அதுபோலவே இந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்வதும். முதலில் நான் இதை கண்டுகொள்ளவில்லை. நான் வாழ்த்து சொல்றதோட என் கடமை முடிந்ததுன்னு விட்டுட்டு வந்துடுவேன். நன்றி சொல்றாங்களோ இல்லையோ பார்ப்பதில்லை. 

போன ஆண்டு ஒரு புதிய குழுவில் சேர்ந்திருந்தேன். சரி. பேரும் சொல்லிடறேன். துவக்கப்பள்ளி 1-5 வகுப்பில் கூடப் படித்தவர்கள். ஆண்/பெண் என வகுப்பில் அனைவரையும் ஒருவர் கண்டுபிடித்து சேர்த்திருந்தார். நான் சேர்ந்தபிறகு, இன்னும் ஓரிருவரே பாக்கின்னு சொல்லிட்டிருந்தாங்க. 

சேர்ந்த புதிதில் அனைத்து பிநா, திநாக்கும் பறந்து பறந்து வாழ்த்து சொல்லிட்டிருந்தேன். ஒரு முறை ஒருவர் யாரோ ஒரு பொண்ணுக்கு நன்றி சொல்ல மறந்துட்டாரு போல. டக்குன்னு ஒரு கமெண்ட் வந்துச்சு. ’ஏண்டா, புதுசா வந்தவங்க வாழ்த்துக்கு நன்றி சொல்லுவே, எங்களுக்கு சொல்ல மாட்டியா?’. வந்த வேகத்தில் கமெண்ட் டெலீட்டும் ஆயிட்டுச்சு. ஆனாலும் நான் படிச்சிட்டேன். 

அன்றிலிருந்து அந்த க்ரூப்பும் ம்யூட்டில் போயிடுச்சு. யாருடைய பிநாதிநா’க்கும் வாழ்த்து சொல்வதில்லை. ஆனா வேறு பல குடும்ப க்ரூப்களில் சொல்ல வேண்டிய கட்டாயம். அந்த பொண்ணு மாதிரி, நமக்கு நன்றி சொல்றாங்களான்னு பார்ப்போம்னு சும்மா பார்க்கத் துவங்கினேன். (தேவையில்லாத ஆணின்னு பிறகே புரிந்தது!!)

ட்விட்டரிலாவது மக்கள் DMல் நன்றி / ட்வீட்டை Like போல செய்திடுவார்கள். ஆனா நமக்குன்னு வாய்ச்சிருக்கிறாப்போல வாட்சப் க்ரூப்களில்:

* நாம வாழ்த்து சொல்வதற்கு முன் தனித்தனியாக அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருப்பவர், நமக்குப் பின் ‘அனைவருக்கும் மிக்க நன்றி’ன்னு முடிச்சிடுவார். நம்ம பேர் தனியா வராது. அவ்வ்..

* சுமார் 20-25 பேருக்கு தனித்தனியா நன்றி சொல்பவர், சரியாக நம்ம பேரை மட்டும் விட்டுடுவார். இது மட்டும் 3-4 தடவை நடந்திருக்கு. சரி, நாம நம் கடமையை செய்வோம் பலன் வேண்டாம்னு விட்டாச்சு. ம்ம்..

* நமக்கு முன் அனைவருக்கும் நன்றி சொல்பவர், நாம் சொன்னபின், காணாமலேயே போய்விடுவார். ஒன்லி அப்ளை நோ ரிப்ளை. சரி போகுது.

* ஓரிருமுறை நமக்கு மட்டும் நன்றின்னு சொல்லாமல், Sure / OK & இன்னபிற பதில்லாம் போடுவாங்க. அடேய்ஸ்.. எனக்கு மட்டும் ஏண்டா இப்படி...

இது மாதிரி பல வகைகள். ஓரிரு முறை நன்றிப்பான்னு தனியா குறிப்பிட்டும் பதில் போட்டிருக்காங்க. அதையும் சொல்லிடறேன். 

சரி இவ்ளோ சொல்றியே, உன் பிநாதிநா வாழ்த்துக்கு நீ நன்றி சொல்றியான்னு கேட்டா, ஹிஹி. என் பிநாதிநாவை நான் எங்கும் ரிஜிஸ்டர் செய்யவில்லை. FBயில் / ட்விட்டரில் வராது. ட்விட்டரில் ஒரே ஒருவர் மட்டும் நினைவில் வைத்து வாழ்த்துவார். 2 நாள் முன்னாடி அவருக்கும் ஒரு warning கொடுத்து, TLல் வாழ்த்த வேண்டாம்னு சொல்லிடுவேன். பிரச்னை சால்வ்ட். 

வெகு நெருங்கிய சொந்தங்கள் கூப்பிட்டு சொல்லிடுவாங்க. பிற சொந்தக்கார வாட்சப்பில் பலருக்கு என் பிநாதிநா நினைவிருந்தாலும் சரியா அந்தந்த நாட்களில் மறந்துடுவாங்க. பிறகு வேறொரு நாளில் நேரில் பார்த்தால் வாழ்த்திடுவாங்க. 

அவ்ளோதாங்க பதிவு. 
படித்த அனைவருக்கும் *தனித்தனியான* நன்றி.
வணக்கம்.

***

Read more...

Friday, January 26, 2018

Twitter Likes & RTs

Twitter Likes & RTs

Twitterல் Likeகள் Favஆக இருந்த காலத்தில் + நம் Favகள் அடுத்தவர்களின் TLல் வராமல் இருந்த காலத்தில், ‘இதை ஏன் Fav செய்திருக்கீங்க’ என்னும் கேள்வி ஒரு முறைகூட வந்ததில்லை. இத்தனைக்கும் அடுத்தவர் Fav Tlக்குள் போயும் பார்க்கமுடியும்.

ஆனால், எப்போ Fav என்பது Like ஆனதோ + நம் Likeகள் அடுத்தவர் TLல் வரத் துவங்கியதோ, அப்போதே கேள்விகளும் துவங்கிவிட்டன?

* இதை ஏன் Like செய்தீங்க?
* நீங்க இதை ஆதரிக்கிறீர்களா?
* உங்களுக்கு இது ஒப்புதல்தானா?
* தெரியாமல் Like செய்துட்டீங்களா?

அடியேன், ட்வீட்களை Like செய்வதற்கான காரணங்கள்.

1. பொதுவாக Likeஐ bookmarkகளாகவே பயன்படுத்துகிறேன். ஒரு காணொளி / fb சுட்டி இருக்கு. இப்போ படிக்க/பார்க்க முடியாது. பிறகு படிக்க/பார்க்கலாம்னு Like செய்துவைக்கிறேன். அந்த குறிப்பிட்ட ட்வீட், ஜாதி/மத/ரசிக/மாபியா/LGBT (இது ஒரு புதிய தலைப்பு!), இப்படி எந்த தலைப்பாகவும் இருக்கலாம். அந்தத் தலைப்பில் எந்தத் தரப்பாகவும் இருக்கலாம். பிறகு படித்துவிட்டு Unlike செய்துட்டாப் போச்சு. இது வெறும் அடியேனின் விருப்பம்தானே.

2. அடியேனைப் புகழ்ந்துவரும் (ம்கும்!!) ட்வீட்கள். காக்கைக்கும் தன் இது பொன் இதுன்ற மாதிரி இவை நிரந்தரமாக என் Likeல் இருக்கும்.

3. ஒரு Convoவை முடிப்பதற்காக + பதில் ஒன்றும் இல்லையென்றால் Like. இது அனைவரும் செய்வதே. இதெல்லாம் அடுத்தவர் Tlல் வந்தால், நான் என் செய்வது?

4. நம் காது ஆடும் ட்வீட்கள். அதாவது, கன்னட TLலிருந்து, மத்வ / ராகவேந்திர / ஹரிதாச ட்வீட்கள் இவையும் நிரந்தரமாக நம் Likeல் இருக்கலாம்.

இவ்வளவுதான் Like விஷயம். அடுத்து RT.

RT கண்டிப்பாக அனைவரின் Tlலும் வரும் என்பதால் இதில் கவனமாக இருக்கிறேன்.

1. சில விபுசி / நல்ல / தேவையான / பொதுஅறிவு வளர்க்கக்கூடிய (அப்படி ஏதாவது இருக்கா ட்விட்டரில்?!) ட்வீட்டுகளை RT செய்வது வழக்கம்.

2. குறிப்பிட்ட பிரிவினரை பழிக்கும் ட்வீட்கள் சில RT செய்து, தவறை உணர்ந்து, பின் அவற்றை RT செய்வதை விட்டுவிட்டேன்.

3. தமக்கு வரும் @களை எல்லாம் சிலர் RT செய்தவாறே இருப்பர். அடியேன் அப்படி செய்வதில்லை. (ம்கும்.. வர்ற 1-2 @க்கு இதுவேறயா).

4. வெறும் +ve ட்வீட்களை மட்டுமல்லாமல், சில -ve ட்வீட்களையும் RT செய்திருக்கிறேன். எனக்கு கருத்து இல்லையென்றாலும் / என்ன சொல்வதென்று தெரியாததாலும், நம் TLல் இருக்கும் சிலரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக செய்வது இது.

5. யாருடைய Tlஐயும் spam ஆக்கக்கூடாதுன்னு கவனம் செலுத்தறேன்.

அவ்வளவுதான். வேறு ஏதாவது சொல்றதுக்கு இருக்கா இதில்?

***


Read more...

Thursday, September 21, 2017

சென்னை - பயணக் குறிப்புகள்

சென்னை - பயணக் குறிப்புகள்

திருச்சி கல்யாணத்துக்கு (கபடி விளையாட) நான் வேணா போறேனேன்னு விஜய் சொல்வதுபோல், எந்த ஒரு சின்ன வேலை இருந்தாலும், சென்னைதானே (எந்த ஏரியாவா இருந்தாலும் ஒரு ரவுண்ட் திருவல்லிக்கேணி போயிடலாம்னுதான்!!) நான் போறேன்னு கிளம்பிடுவேன். ஆகவே இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது சென்னை வந்து போய்விடுவது வழக்கம். 

சென்ற ஞாயிறும் இப்படிதான் (சில ஆண்டுகள் கழித்து) பிருந்தாவனில் கிளம்பிப் போனேன். வீட்டிலிருந்து ரெயில் நிலையம் BMTCல் போகும்போதே பிரச்னை துவங்கிடுச்சு. பேருந்தில் யாருடையதோ பணத்தை pickpocket அடிச்சிட்டாங்களாம். ஒரே கூச்சல். பேருந்தை காவல் நிலையத்துக்கு விடுங்கன்னு சத்தம். போக 2.50, வர 2.50, சாப்பிட தயிர் சாதம்னு த்ரிஷா ஆண்டி சொல்வதைப் போல், போக வர SMS ticket, ரெயிலில் சாப்பிட உப்புமா இதைத்தவிர சில சில்லறை மட்டுமே வைத்திருந்த நான், மறுபடி இன்னொரு பேருந்து பிடிக்கணுமா, காசு இருக்கான்னு பார்க்க நினைக்கையில் - பிரச்னை எப்படியோ தீர்வாகி வண்டி சரியாக ரெயில் நிலையத்துக்குப் போயிடுச்சு. 

பிருந்தாவனில் பயணம் <எப்படி இருக்கும்னு மக்கள் நினைப்பது>



பிருந்தாவனில் பயணம் <நிஜமாக எப்படி இருக்கும்>


பயணிகளை விட அதிகமாக இருக்கும் வியாபாரிகளை வேடிக்கை மட்டுமே பார்த்து - காதில் தாசர் பாடல்களுடன் சென்னை போய் சேர்ந்தாச்சு. 

விடியலில், திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் & கடற்கரையில் ஒரு நடைப்பயிற்சி. பின்னர் ஒரு சில மடங்கள், கோயில்கள். மாலையில் பாரதி சாலையில் பழைய புத்தகக் கடைகளை ஒரு சுற்று பார்த்துவிட்டு, climaxஆக மீசைக்காரர் கோயில். இதற்கு நடுவே எந்த வேலைக்கு (விழாவிற்கு) சென்றோமோ அங்கே போய் தலைமை தாங்குவது - இதுவே நம் பொதுவான அட்டவணை. கோயிலில் புளியோதரை & வேறு ஏதாச்சும் வாங்கி சாப்பிடுவது பற்றிய தகவல் இங்கு தேவையில்லாதது.

நாம் முன்னர் இருந்த தெருக்களில் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள் இருந்த தெருக்களில் (யாருன்னு கேட்டு பழைய autographகளை கிளறக்கூடாது!) சுற்றும்போது - cinema paradiso படத்தில் 30 ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு வரும் Directorஐ பழைய முகங்கள் பார்த்து அடையாளம் கொள்ளும் - அதே போல் நம்மையும் ஓரிருவர் பார்த்து சிரித்தால் (ஹாஹான்னு இல்லை. சும்மா புன்னகை மட்டுமே), நமக்கு ஒரு திருப்தி. 

கோயிலுக்குப் போய்வருவது ஒரு நண்பர் வீட்டிற்குப் போவதுபோல். என்ன, அடியேன் மகளோடு மட்டும் அங்கு போகமுடியாது. என்ன பிரச்னைன்றீங்களா? சென்ற கோடையில் இருவரும் கோயிலுக்குப் போய் மீசைக்காரரை பார்த்துவிட்டு வந்தபிறகு, பங்கேற்கப் போயிருந்த விழாவில் அனைவரிடமும் - அப்பா, கோயிலில் அழுகிறாரு. இனி அவரோடு கோயிலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவரை (மட்டும்) பார்த்தா அது தானா வருது. நான் என்ன செய்ய? 

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கும் இடம் ஆகையால் மாடுகள் ரொம்ப அதிகமா இருக்குன்னு சொல்வாங்க. சாணிகளை ஓரமா போய் போடுங்கன்னும் அவைகளிடம் சொல்ல முடியாது. ஆகவே எல்லா தெருக்களிலும் மாடுகள் மற்றும் சாணிகள். இதுகூட ஓகேதான்(?!?). ஆனா இந்த மனுசங்க போடுற குப்பைகளையாவது ஓரமா / தொட்டியில் போடலாமே? ம்ஹும். எங்கு பார்த்தாலும் குப்பைதான். கோயில் விழா / ரதம் ஆகிய நாட்களில் மட்டுமே சுத்தம் / ப்ளீச்சிங் பவுடர் போலிருக்கு. 

திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் சுற்றியபோது கவனித்த இன்னொரு விஷயம். ஏகப்பட்ட மருத்துவர்கள் / மருத்துவமனைகள். மழை பெய்துகொண்டிருந்த அன்றைய விடியலில் ஏதாவது ஒரு மருத்துவர் கிடைத்திருந்தால் / மருத்துவமனை திறந்திருந்தால், தங்க நேரத்தை (Golden hour) தவறவிட்ட அடியேன் தந்தையாரை காப்பாற்றியிருக்கலாம். ம்ம்.

***


Read more...

Saturday, September 9, 2017

நானே நானா.. தனியாதான் பேசுறேனா..


நானே நானா.. தனியாதான் பேசுறேனா..

ட்விட்டரில் 3599 பேர் நம்மை பின்தொடர்ந்தாலும், 5க்கும் குறைவான ஆட்களே நம்மிடம் தொடர்ந்து பேசுவாங்க. மற்றவர்கள் ம்யூட்டில் போட்டு வைத்திருப்பார்கள்னு நம்புறேன். #BlockNarendraModi போல #MuteChPaiyanன்னு இதுவரை tag பார்த்ததில்லை. இது பிரச்னையில்லை. நிஜவாழ்க்கையிலும் நம் பேச்சை யாரும் கேட்பதேயில்லைன்னு நினைக்கிறேன்.

அட, எல்லார் வீட்டிலும் இதே பிரச்னைதான்பா. யார் வீட்டில்தான் குடும்பத்தலைவர் (ரேசன் அட்டையின்படி!!) பேச்சை கேட்குறாங்க? ம்ம். அதுவும் பிரச்னையில்லை. குடும்பத்துக்கு வெளியில் - உறவினர், நண்பர்கள் ஆகியோர் (எல்லாரும் அல்ல, பெரும்பாலும்) நாம் பேசறதைக் காது குடுத்து கேட்குறாங்களா இல்லையான்னே தெரிய மாட்டேங்குது.

அது எப்படி உனக்குத் தெரியும்ன்னு கேட்டா, சில பல உதாரணங்களைத் தர்றேன் பாருங்க. 

நம் சொந்தக்கார் ஒருத்தர். போன வாரம் நடந்த அண்ணன் பெண் திருமணத்தில் பார்த்தவர் - உனக்கு கன்னடம் எழுதப் படிக்க தெரியுமான்னார். அடியேனைப் பார்த்து அவர் இந்தக் கேள்வியைக் கேட்டது - கடந்த 4 ஆண்டுகளில் இது சுமார் 10வது முறை. செம கடுப்பு. முதலில் ஆமாங்க. தெரியும்னு சொல்ல ஆரம்பிச்சி - பிறகு ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இதே கேள்வியால் கோபப்பட்டு - அந்த சமயத்தில் என்ன பதில் தோணுதோ அதைச் சொல்லத் துவங்கிவிட்டேன். 

சரி வயசானவர்னு இவரை மன்னித்து விட்டால், நம் சமகாலத்திய வாலிப வயதில் (சிரிக்க வேண்டாம்!) உள்ள ஆபீஸ் நண்பர்களும் அப்படிதான். முன் தின மாலைதான் சொல்லியிருப்பேன். அடுத்த நாள் நான் வர மாட்டேன். லீவ். அடுத்த நாள் காலை 9 மணிக்கு சரியாக அழைப்பு வரும். ஏன்பா பேருந்தில் வரலை? பைக்கில் வரியா? மறுபடி விளக்கவேண்டியிருக்கும். நான் இன்னிக்கு லீவ். 

சரி வாலிப வயதில்தான் இப்படி, சின்ன பசங்களாவது நாம் சொல்றதைக் கேட்கிறாங்களான்னா, அதுவும் இல்லை. 

பெரிய அண்ணன் பையர் ஒருத்தர். 30 வயதிருக்கும். நாங்க ஊரிலிருந்து (அமெரிக்காவிலிருந்து) வந்து சென்னையில் ஒரு 3-4 மாதம் இருந்து, இப்போ பெங்களூர் வந்து 5 ஆண்டுகள் ஆயிடுச்சு. எப்போ திருவல்லிக்கேணி போனாலும், அந்த அண்ணன் வீட்டிற்குப் போய் ஒரு காபி (ஹிஹி) குடிச்சிட்டு வருவது வழக்கம். 

அப்போ அந்தப் பையர் கேட்பார் - நங்கநல்லூரில்தானே இருக்கீங்க? தண்ணீர் பிரச்னை இல்லையே? முதல் 2-3 முறை சொல்லிப் பார்த்தேன். இல்லப்பா, நாங்க லுரு போய் நாளாச்சு. இங்க இல்ல. பையர் நம் பேச்சைக் கேட்பதாகவே தெரியல. அடுத்தடுத்த முறையும் அதே கேள்விதான். இப்பல்லாம் நான் மறுப்பு சொல்றதில்லை. ஆமாம்பா நங்கநல்லூர்தான். அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வா. 

கண்டகண்ட தகவல்களை நாம்தான் நினைவில் வைத்திருக்கிறோமோ? (படையப்பாவில் ரஜினிக்கு எதிரே கால் மேல் கால் போட்டு உட்காரும் அந்த நடிகை பெயர் என்னன்னு கேட்கக்கூடாது) மற்றவர்கள் மேலே சொன்னாற்போல் தேவையானவற்றை மட்டுமே கேட்டு (அல்லது கேட்ட மாதிரி நடித்து) - கவனத்தை எப்போதும் எங்கேயோ வைத்து சுற்றுகிறார்களோ எனத் தோன்றுகிறது. இதில் வயது வித்தியாசம் கிடையாது. 

இவ்வளவு உதாரணங்களுப் பிறகு, இப்பல்லாம் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை (நம்புங்க!). அப்படி பேசினாலும், 

* அவங்க தன் கைப்பேசியைப் பார்த்தாலோ
* வேறெங்கோ நோட்டம் விட்டாலோ
* கொட்டாவி விட்டாலோ
* கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டாலோ

பேச்சை நிறுத்தி / அங்கிருந்து நகர்ந்து விடுவது வழக்கமாக்கிட்டேன். 

சரி நீங்களாவது ஒழுங்கா படிச்சீங்களா - இல்லே, முதல் பாராவிலிருந்து நேரா ஜம்ப் அடிச்சி கடைசி பாராக்கு வந்துட்டீங்களா? 

ஓம் சாந்தி.

***

Read more...

Saturday, May 27, 2017

சிரி சிரி சிரி சிரி...


எங்கே, அதையே கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லுங்கன்னு கவுண்ட்ஸ் மன்னனில் சொல்வதைப் போல் உங்களிடம் சொல்ல முடியாது. ஏன்னா, உங்களுக்கு எப்பவுமே சிரித்த முகம்தான்னு பலர் என்னிடம் சொல்லியிருக்காங்க. இதையே வீட்டில் DW வேறு மாதிரி சொல்வாங்க. அது இப்போ வேண்டாம். நாம மேலே போவோம்.

ஹெல்மெட் மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டும்போது, அது நமக்கான ஒரு தனி உலகம். உள்ளே பேசலாம், பாடலாம். நான் ஏதாச்சும் ஒரு பல்ப் வாங்கிய சம்பவத்தை - அதுதான் ஏகப்பட்டது இருக்கே - நினைச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே போவேன். அப்படி சிரித்தவாறே ஓட்டும்போது, யாருடனாவது - பக்கத்தில் வண்டி ஓட்டுபவரோ அல்லது சாலையோரத்தில் நின்றிருப்பவரோ - கண்ணோடு கண் பார்க்க நேர்ந்துவிடும். அப்படி பலமுறை நேர்ந்திருக்கிறது. சில பேர் சிரிக்க முயல்வார்கள், சிலர் யார்றா இவன், நம்மை பார்த்து சிரிக்கிறான்னு தலை திருப்பிவிடுவார்கள். சிலர், பேருந்தில் நடக்கும் வடிவேலு காமெடியைப் போல், நம்மைப் பார்த்து சிரிக்கிறானா, இல்லே பின்னாடி யாராவது இருக்காங்களான்னு பின்னாடி திரும்பியும் பார்த்திருக்காங்க. இப்படி அண்ணலும் நோக்கி சிரித்து ‘அவளும்’ நோக்கிய உதாரணங்கள் இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயங்கள்.

இப்ப போன வாரம் நடந்தது.

யாரோ ஆண்கள், சிலசமயம் பெண்களைப் பார்த்து சிரித்ததெல்லாம் பிரச்னையில்லை. போன வாரம் அலுவலகத்திலிருந்து வரும்போது - ஹெல்மெட்டுக்குள் சிரித்தவாறே - தூரத்தில் நின்றிருந்த ஒரு போக்குவரத்து காவல் போலீஸைப் பார்த்துட்டேன்.

டக்குன்னு சுதாரித்து, சிங்கம் சூர்யா போல் stiff ஆனாலும், அவர் பார்த்துட்டார். என்னடா, இவன் நம்மைப் பார்த்து சிரிக்கிறானேன்னு, நம்மை நிறுத்தி ஓரம் கட்டுங்கன்னுட்டார்.

சார், ஹெல்மெட் கழட்டுங்க. கைப்பேசியில் பேசிட்டு வர்றீங்களா?
இல்லை சார்.

DL, Insurance?
இதோ.

ஆதார் கார்டும் இருந்துச்சு. ஆனா அவர் கேட்கவில்லை.

சரி போங்கன்னு ஒரு சந்தேகத்துடனேயே அனுப்பி வைத்தார்.

டேய், இவன் எங்கெங்கே போறானோ, அங்கெல்லாம் ஒரு ஆள் போட்டு வைங்கடா. என்னைப் பார்த்து சிரிச்சிட்டான்னு சொல்வாரோன்னு திரும்பிப் பார்த்து (சிரிக்காமல்) போனேன்.

வீட்டில் போய் விஷயத்தை சொன்னா, நான்தான் சொன்னேனே, இனாவானா மாதிரி (அய்யய்யோ, சொல்லிட்டேனே!!)

சிரிச்சிக்கிட்டே போகாதீங்கன்னு, எங்கே கேட்டாதானேன்னாங்க.

சரிம்மான்னு சொல்லி சிரித்தேன்.

***


Read more...

Wednesday, September 7, 2016

நடு விரல் கிருஷ்ணாராவ்

நடு விரல் கிருஷ்ணாராவ்

போன வாரம் ஒரு நாள் பைக்கில் போய்க் கொண்டிருந்தபோது, என் முன்னால் போன பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவர், எனக்கு தன் கையின் ‘நடு’ விரலைக் காட்டிட்டுப் போனார். அதை ஏன் எனக்குக் காட்ட வேண்டும்? இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கேன்னு சந்தேகம். பிறகு நினைவுக்கு வந்தது.

ப்ளாஷ்பேக். ஒரு ஐந்து நிமிடங்களுக்கு முன்:

சாலையோரம் எங்கேயோ வேடிக்கை பார்த்து நின்றவர், என் பைக் பக்கத்தில் வந்தவுடன் திடீர்னு தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டி, Lift, Liftன்னார். ரொம்பவே பக்கத்தில் இருந்ததால், என்னால் வண்டியை நிறுத்த முடியலை. Sorryன்னு சொல்லி, நான் பாட்டுக்கு போயிட்டேன்.

ப்ளாஷ்பேக் ஓவர்.

இப்போ அதே மனிதர்தான், வேறொரு வண்டியில் ஏறி, என் முன்னே போய், எனக்கு அந்த விரலைக் காட்டினார்னு புரிந்தது. எனக்கு செம கோபம். அந்த வண்டியை துரத்திப் போய் (லுரு போக்குவரத்தில் யாரும் யாரையும் துரத்திக்கிட்டெல்லாம் போக முடியாது, ஏன்னா, எல்லாருமே ஊர்ந்துதான் போவாங்க!!), அவருக்கு நானும் இரு விரல்களைக் காட்டினேன். இரு விரல்கள்?

நான் ஹெல்மெட் போட்டிருந்ததால், அந்த 2விரல்களுக்கான விளக்கத்தை நான் சொன்னது அவருக்குப் புரிந்திருக்காது. ஆனா, இந்த ப்ளாக்கை படிப்பவராயிருந்தால், தெரிஞ்சிக்கட்டுமேன்னு இங்கே.

சார், நீங்க நினைக்கிற / காட்டின மாதிரி, நான் அத்வைதம் கிடையாது. அதனால் ஒரு விரல் காட்டாதீங்க. நான் த்வைதத்தை பின்பற்றுபவன். ஆகவே, இரு விரல்களே சரியானதாகும். இனி, எனக்குக் காட்டணும்னா, இரு விரல்களையே காட்டவும். புரியலேன்னா, இந்த படத்தைப் பார்க்கவும்.



இதுதான் நான் அவருக்கு சொல்ல வந்தது.

ஹிஹி..

***

Read more...

Thursday, August 28, 2014

உட்கார்ந்து உட்கார்ந்து உட்காருதல்.

சினிமா போகலாம்னு யாராவது சொன்னாலே கிலி ஆயிடும் எனக்கு. ஏன்? இப்போ வர்ற (ஆங்கிலம் தவிர்த்த) படங்களெல்லாம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுதே. (முதல் ஓரிரு நாட்கள் மட்டுமே 180 நிமிடங்கள். அடுத்தடுத்த நாட்களில் பத்து பத்து நிமிடங்களா குறைச்சி வெளியிடுறாங்கன்றது வேறு விஷயம்!!). அவ்வளவு நேரம் ஓர் இடத்தில் உட்காருதல்ன்றது என்னால் முடியாத காரியம். செமையா போர் அடிச்சிடும்.

மொதல்லேந்தே இப்படித்தானான்னா கிடையாது. (நாள் முழுக்க ஓடும் DDLJ படத்தையெல்லாம் பல முறை அரங்கத்தில் பார்த்ததுண்டு). நடுவில் எப்பவோ நடந்த மாற்றம்தான். அப்போ படங்களே பார்ப்பது கிடையாதான்னா அதுவும் கிடையாது. எப்போவாவது அத்தி பூப்பதுபோல் (அத்தி? ஆத்தி, இது என்ன? எப்போ பூக்கும்? யாருக்குத் தெரியும்!!) பார்ப்பது உண்டு.

அரங்கத்திற்குப் போய் படம் பார்ப்பது போர்னா, வீட்டில் தொடர்ச்சியா படம் பார்ப்பது அதைவிட போர். அமெரிக்காவில் இருந்தவரை (DW பார்த்ததால்) வாரம் ஒரு படம் பார்ப்போம். தினம் அரை மணி நேரம் வீதம் ஒரு வாரத்தில் படம் முடிந்துவிடும். இந்தியா வந்தபிறகு அதுவும் பார்ப்பது கிடையாது.

முக்கால் மணி நேரம் அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரம். அதுக்கு மேல் என்னால் தொடர்ந்து உட்கார முடியாது. முதுகு வலி, பல் வலி இதெல்லாம் கிடையாது. எழுந்து நடக்கணும். அவ்வளவுதான்.

வெவ்வேறு சமயங்களில் எப்படி இப்படி உட்காராமல் சமாளிப்பது? அதுதான் இந்தப் பதிவு. (அப்பாடா, இப்பவாவது பதிவு ஆரம்பிச்சுதே!)

ஆபீஸில் வேலைன்னா பிரச்னையே இல்லை. அப்பப்போ தண்ணீர் குடிச்சாலே போதும். அதுவே என்னை எழுப்பி விட்டுடும். போய் ஒரு முறை போயிட்டு வரவேண்டியிருக்கும். போற வழியில் யாரையாவது பார்த்து பேசினா, அப்படியே பொழுதும் போயிடும்!!

ஆபீஸ் மீட்டிங்க்னா, ஒரு மணி நேரத்தில் நான் மட்டும் எழுந்து நின்றிடுவேன். என்னய்யா ஆச்சுன்னு மக்கள் கேட்பாங்க. ஒண்ணும் இல்லே, கால் வலிக்குது, கொஞ்ச நேரம் நிற்கப்போறேன்னு சொல்லிட்டு நின்றவாறே பேசுவதோ / கவனிப்பதோ (தூங்க மட்டும் இன்னும் பயிற்சி எடுக்கவில்லை. அதுவும் செய்துடணும்!) - ஒரு பத்து நிமிடம் கழித்து மறுபடி உட்கார்ந்து விடுவேன்.

பெங்களூர் வந்தபிறகு வீடு-அலுவலகம்-வீடு அலுவலகப் பேருந்தில். காலைப் பயணம் அரை மணி நேரம் மட்டுமே. ஆனால் மாலையில்? அது அந்த கடவுளுக்குமே தெரியாது. இதுவரையிலான அதிக பட்ச நேரம் ஒன்றரை மணி நேரம். இதிலும் சில நேரங்களில் தூங்கி விடலாம். தூங்கலேன்னா, ஒரு மணி நேரத்தில் எழுந்து நின்றுவிடுவேன். ஆரம்பத்தில் புதிதாகப் பார்த்த சக பயணிகள், பின்னர் பழகிக் கொண்டார்கள். பிறகு இன்னும் நீண்ட நேரம் பயணம் செய்பவர்களும் அவ்வப்போது பேருந்தில் நிற்கத் தொடங்கினார்கள். இன்னும் சில நாட்களில் எல்லாரையும் (தொடர்ச்சியாக உட்கார விடாமல்) நிற்க வைக்க வேண்டும். இதுவே என் குறிக்கோள்.

என்னை உட்கார வைத்து சோறு போடுவேன் என்று சத்தியம் செய்து என்னை மணம் செய்த DW, என் இந்தப் பிரச்னையைத் தெரிந்து கொண்ட பிறகு, வீட்டில் உட்கார விடுவதேயில்லை. என்னங்க, பத்து நிமிடம், இந்த பத்துப் பாத்திரங்களை தேச்சிக் கொடுங்க, ஒரு மணி நேரம் கழிச்சி இந்த துணிகளை மாடியில் போய் காய வெச்சிட்டு வந்துடுங்க. நீங்கதான் உட்கார்ந்துட்டே இருந்தா, போரடிக்குதுன்றீங்க. அதனால்தான் சொன்னேன். இல்லேன்னா, நானே செய்துட மாட்டேனா.

இந்த வாதம் சரியாயிருக்கிற மாதிரியும் இருக்கு, சரி இல்லாத மாதிரியும் இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க?

***


Read more...

Monday, January 6, 2014

பொங்கலோ பொங்கல் காதலோ காதல்.



பொங்கல் மேலான என் காதல் எப்போ ஆரம்பிச்சதுன்னு நினைச்சிப் பார்க்கறேன். மஞ்சளா இருந்தாலும் வெண் பொங்கல்னு சொல்றோமே, அதைப் பத்தின பதிவுதான் இது. சின்ன வயசுலே திருவல்லிக்கேணியில் மார்கழி மாத விடியலில் அம்மாவுடன் 2-3 கோயில்களுக்குப் போகும்போது சுடச்சுட கிடைக்கும். அடி கிடையாது. பொங்கல்தான். பார்த்தசாரதி கோயிலின் பெரிய கதவு திறக்கும்முன்னே அதிலுள்ள சின்ன கதவின் வழியாக ‘பக்தர்கள்’ உள்ளே போவார்கள். நாங்களும். அங்கேயும் அதே பிரசாதம்தான். அப்போதான் பொங்கல் காதல் வந்திருக்கணும். இன்னிய தேதி வரை எந்த வேளையில் எந்த உணவகத்திற்குப் போனாலும், பொங்கல் இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிடறதுதான். 

வெண் பொங்கல் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு எந்தவித விதியும் எனக்குக் கிடையாது. எப்பொங்கலும் சம்மதம். இதுதான் என் கொள்கை. திரவமா இலையில் ஓடக்கூடிய வடிவில் இருந்தாலும், கல்லுமாதிரி வெட்டி சாப்பிடக்கூடியதா இருந்தாலும், அல்லது நடுவாந்திரமாக ஓடியும் ஓடாமலும் இருந்தாலும் எனக்கு ஓகேதான். ஆனால்... என்ன ஆனால்? விதியே இல்லைன்னுட்டு, இப்ப என்ன ஆனால்? ஒரே ஒரு விஷயம் இருக்கு. ஸ்ரீராமஜெயம் மாதிரி ஒரு நாளைக்கு 108 முறை டயட், டயட்னு சொல்லிவந்தாலும், பொங்கல்னு வந்துட்டா டயட்டுக்கு கட்’தான். நெய். இது கண்டிப்பா வேணும்னு சொல்லிடுவேன். ஒரு ஸ்பூன், ரெண்டு ஸ்பூனெல்லாம் கிடையாது. பரோட்டா தின்னும் போட்டியில் சால்னா பக்கெட்டை வெச்சிட்டுப் போன்னு சொல்றா மாதிரி, நெய்யை பக்கத்திலேயே வெச்சிடும்பேன். பொங்கல் மேல் கிரிப் பிரதிட்சணம் செய்றா மாதிரி நெய்யை சுத்திசுத்தி ஊத்திட்டு, வெள்ளி மலையில் தேன் மழைன்னு வர்ணிச்சா, கேட்க ஆளிருக்காது. நானேதான் மெச்சிக்கணும். 

பொங்கலிலே ஒரு குறையிருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோன்னு அன்னிக்கே கவிஞர் பாடியிருப்பதை கேள்விப்பட்டிருப்பீங்க... அது கண்ணதாசா ஜேசுதாஸா?.. சரி விடுங்க. யார் சொன்னா என்ன, மேட்டர்தான் முக்கியம். உலகிலேயே அழகான உணவுப்பொருள் என்னன்னு கேட்டா, நான் என்ன சொல்வேன்? வேறென்ன. பொங்கல்தான். ஏன்? அவ்ளோ அழகா இருப்பதால்தானே, திருஷ்டிப் பொட்டு போல், அங்கங்கே மிளகு போடுறோம். அழகான குழந்தைகளுக்கே ஒரு திருஷ்டிப் பொட்டுதான். ஆனா, பொங்கலுக்கு பல பொட்டுகள். இப்ப புரியுதா?

அமெரிக்கா போய் சமைக்கக் கத்துக்கும்போது, நான் கத்துண்ட முதல் டிஷ் என்னவாக இருக்கும்? நோ. மதிப்பெண்கள் கிடையாது. அது பொங்கல்தான். எல்லாப் பொருட்களையும் குக்கரில் போட்டு மூடி, விசில் வந்தவுடன் இறக்கினா ஆச்சு, இது சுலபம்தானே, அதுக்காகதான் இதை முதலில் கத்துண்டியான்னு கேட்டீங்கன்னா, அது தப்பு. பதிவின் தலைப்பை இன்னொரு முறை பாருங்க.

இவ்வளவு அருமையா சமைச்ச கைக்கு தங்க வளைதான் செஞ்சு போடணும்னு தமிழில் ஒரு வசனம் இருக்கு. இதே போல் ஆங்கிலத்தில் எனக்கு பிடிச்ச வசனம் - Everybody loves raymondன்ற தொலைக்காட்சித் தொடரில் வரும் தாத்தா சொன்னதுதான். உணவுப்பொருள் பெயரை மட்டும் மாத்தியிருக்கேன். Anyone who can cook பொங்கல் like this deserves a hillside full of heavenly scented marigolds and daffodils. அது சரி, பொங்கல் செஞ்சு போட்ட கைக்கு நீ என்ன போடுவேன்னு கேட்டா, அந்த கை மேலேயே ரெண்டு போட்டு, இன்னொரு கரண்டி பொங்கல் போடுன்னு சொல்வேன். 

நாளைக்கே நான் ஆட்சிக்கு வந்தா, என்னென்ன செய்வேன்?

* கல்யாணத்திற்கு பெண் பார்க்கும் படலத்தில், பஜ்ஜி/சொஜ்ஜிக்குப் பதிலாக பொங்கல்தான் போடணும்னு 110 விதியின் கீழ் ஒரு ஆணை போடுவேன். 
* ‘பையன்’ உணவகத்தில் பொங்கல் மட்டும் இலவசம்.
* திரைப்படங்களின் தலைப்பில் பொங்கல் சொல் வந்தால், சிறப்பு வரிவிலக்கு. உதா: 1000 பொங்கல் தின்ற அபூர்வ சிகாமணி, பொங்கலை மீட்ட சுந்தரபாண்டியன், பொங்கல் உனக்காக, பொங்கல் தேசம் ஆகியன.

எனது ஆட்சியின் தாரக மந்திரம்:

பொங்கல் நாமம் வாழ்க!
நாளை நமதே. பொங்கலும் நமதே!

பொங்கல் உடனான உங்க அனுபவத்தையும் பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கோங்க.

***

Read more...

Sunday, December 9, 2012

பஜ்ஜியோ பஜ்ஜி!


நண்பர் ஒருவர் தொலைப்பேசினார். நம் வீட்டிற்கு பக்கத்தில் இருப்பவர்தான். மாலையில் அவர் வீட்டிற்கு தொலைதூர உறவினர்கள் இருவர் வரப்போவதாகவும், அவர்களுக்காக பஜ்ஜி செய்யப் போவதாகவும் கூறினார். நான் ஒண்ணுமே ஜொள்ளவேயில்லை. ஆனாலும், தொலைப்பேசியிலேயே அதை கண்டுகொண்ட நண்பர், பஜ்ஜிகளை செய்து முடித்ததும், சூட்டோடு சூடாக 10 பஜ்ஜிகளை கொடுத்தனுப்பினார். அவர் நாமம் வாழ்க!

மாலையில் மறுபடி கூப்பிட்டார். உறவினர்கள் வந்துவிட்டதாகவும், இருவருக்கு பதில் ஐவர் வந்திருப்பதாகவும், இப்படி திடீரென்று வந்துவிட்டதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று புலம்பினார். நானும் டென்சனாகி விட்டேன்.

அமெரிக்காவில் பக்கத்து வீட்டிற்குப் போவதென்றாலும், முதலில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, சரியாக அந்த சமயத்தில், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே போய் வருவர். திடீரென்று யார் வீட்டிற்கும் போய் கதவைத் தட்டமுடியாது. நண்பர் வீட்டில் டிபன், சாப்பாடு சாப்பிடும் நேரமாக போய் நான் பல நாட்கள் உட்கார்ந்ததெல்லாம் தற்செயலானதேன்னு சொன்னா யாரும் நம்பப் போவதில்லை. ஆகவே நானும் சொல்லவில்லை.

வேறு சில நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். ’இன்னிக்கு 2 டு 4 நான் ஃப்ரீயா
இருக்கேன். வந்தீங்கன்னா கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்’னு சொல்வாங்க. அப்போ சரியா சாப்பாடு நேரமும் முடிஞ்சிருக்கும். மாலை காபி/டிபன் நேரமும் வந்திருக்காது. அந்த கேப்புலே வெறும் பேசிட்டு அனுப்பிடலாம்னு நினைப்பாங்க. ஆனா, நாங்களும் விடாமே எதையாவது வாங்கி சாப்பிட்டுத்தான் வருவோம்னு வைங்க..

நிற்க. இன்றைய பிரச்னைக்கு வருவோம். அதிக விருந்தாளிகள் வந்தா, நண்பர்தானே டென்சனாகணும், நான் ஏன் டென்சன் ஆனேன்னு யாராச்சும் கேட்டீங்களா? முதலில் எங்களுக்கு பஜ்ஜி கொடுத்தாரே, நினைவிருக்கா, இப்போ அதிகம் பேர் வந்துட்டாங்கன்னு அந்த பஜ்ஜிகளை திரும்பிக் கேட்டுட்டா? எலி பிடிக்க வெச்ச மசால்வடையை எடுத்து கஸ்டமருக்கு கொடுக்கற மாதிரி ஒரு ஜோக்கு வருமே, அதைப் போல இவரும் பண்ணிட்டா? அதனால்தான் நான் டென்சனானேன்.

ஆனா பாருங்க, நண்பர் மறுபடி அவர் நண்பர்தான் நிரூபிச்சிட்டாரு. கொடுத்த வாக்கையும், பஜ்ஜியையும் திருப்பி வாங்கமாட்டேன்னு சத்தியமே பண்ணிட்டாரு. இருந்தாலும், மனசு மாறிட்டார்னா என்ன பண்றதுன்னு அவர்கிட்டே பேசி தொலைப்பேசியை வெக்கறதுக்குள்ளே அவற்றை சாப்பிட்டு ஏவ் விட்டாச்சு.

அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமா பட்சணங்களை செய்ங்கன்னு அறிவுரை கூறி, மறக்காமல், அடுத்த வாரம் அவர் வீட்டுக்கு யாராவது வர்றாங்களான்னு கேட்டு அழைப்பை கட் செய்தேன்.

***
 

Read more...

Wednesday, December 28, 2011

கடைசியில் என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்க!



பலமான டிஸ்கி & எச்சரிக்கை:


சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு தகராறைக் குறித்து எழுதும் சுயவிளக்கப் பதிவு இது. சிரிப்பதற்கு விஷயம் ஒண்ணும் இருக்காது. இதை படிக்கலேன்னாலும் ஒண்ணும் ஆயிடாது. நல்ல மூடில் இருக்கிறவங்க, நல்ல பதிவு எதிர்பார்த்து வந்தவங்க நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. தயவு செய்து இந்த பதிவை படிக்காமல் மூடிவிடவும். நன்றி.


இந்த மாதிரி இன்னொரு பதிவும் வராது. அதனால் பயந்து 'unfollow' செய்துடாதீங்க.


***


ஒரு நண்பர் ஒரு நாள் டிவிட்டரில் யாரையோ திட்டிக்கிட்டே இருந்தாரு. திட்டினார்னா பத்து நிமிஷம், இருபது நிமிஷம் இல்லே - நாள் முழுக்க பல ட்வீட்கள் போட்டு திட்டிக்கிட்டே இருந்தாரு. இந்த திட்டல் எதுக்கு / யாருக்குன்னு யாருக்கும் தெரியாததால், TLல் இருந்த பலர் அந்த திட்டுகளை RT செய்தும், அவரை ஏற்றி விட்டுக் கொண்டும் இருந்தனர். நானும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, அந்த திட்டுகள் அனைத்தும் எனக்குதான் விழுந்ததுன்னு மாலையில் புரிந்தது.

சரிதான், மனுஷனை இவ்வளவு டென்சன் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, அவரை டிவிட்டரில் ப்ளாக் / அன்பாலோ செய்துவிட்டேன். அதோடு பிரச்னை தீர்ந்ததென்று நினைத்தேன். அது எவ்வளவு தப்புன்னு பிறகு புரிந்தது.

என்ன தப்புன்னு யோசிக்கிறீங்களா - அவர் நாள் முழுக்க என்னை திட்டியது தப்பில்லையாம். அதை நான் பப்ளிக்கா சொல்லிட்டு, அவரை ப்ளாக் செய்ததுதான் தப்பாம். அதாவது அந்த திட்டுகளை நான் கண்டுக்காமே இருந்திருக்கணுமாம். இப்போ நான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், அவரை அனைவரும் கேள்வி கேக்குறாங்களாம். அது அவருக்கு கஷ்டமா இருக்காம். சாமி, முடியல என்னாலே.

இருங்க. இன்னும் முடியல(!). இன்னொரு நண்பர் இது விஷயமா பஞ்சாயத்து செய்ய வந்தபோது சொன்னது - உங்களை திட்டிட்டோமேன்னு அவர் ரொம்ப வருத்தப்படறாரு. என்ன பண்றதுன்னு தெரியல.

எப்படி எப்படி? திட்டறது என்னை. வருத்தப்படறது அடுத்தவன்கிட்டேயா? நல்லா இருக்குல்லே நியாயம்? இத கேட்டா இன்னும் கதை வளருது.

உங்ககிட்டே மன்னிப்பு கேட்க வந்தா, நீங்க டக்குன்னு மூஞ்சி திருப்பிக்கிட்டு போயிடறீங்களாம். அப்புறம் அவரால் எப்படி பேச முடியும்?. இந்த இடத்தில் நிஜமாவே என்னால் முடியல. பாஸ். இந்த நடிப்பையெல்லாம் நாங்க தங்கப்ப-தக்கம் படத்திலேயே பாத்துட்டோம். தொலைபேசி, கைப்பேசி, மின்னஞ்சல் - இதிலெல்லாம்கூட பேசலாம்னு தெரியுமா? தெரியாதா?.

இப்படி கோபமாவே இருந்தா, உலகத்தில் நட்பு எப்படி மலரும்? அமைதி எப்படி பூக்கும்?. நீங்கதான் விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்து போகணும். - இந்த அறிவுரை எனக்கு.

யப்பா சாமி. நாள் முழுக்க திட்டு வாங்கினவன் நான். அதுக்கு பிறகு எல்லா தப்பும் என் மேலேதானா?. சரி. ஒரே ஒரு தீர்வுதான் இதுக்கு.

தினமும் காலையில் எழுந்து என் தலையை தடவி பாத்துக்கறேன். என்னிக்கு என் தலையில் வடியறது ரத்தம் கிடையாது - தக்காளி சட்னின்னு தோணுதோ, அன்னிக்கு நானே வந்து 'திட்டு வாங்கினதுக்கு' மன்னிப்பு கேட்குறேன்.

எப்பூடி?

***

பல மாதங்களாக draftல் இருந்த பதிவை போட்டாச்சு. நிம்மதி ஆச்சு. இனி அடுத்த பதிவு புது வருடத்தில்.

அனைவருக்கும் இனிய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2012.

***



Read more...

Wednesday, January 5, 2011

டென்சனை குறைங்க! டென்சனை குறைங்க!!

நேற்றைக்கு ரொம்ப நேரம் விவேக் ஜோக்குகளை பார்த்துக்கிட்டிருந்ததால் நானும் ஏதாவது கருத்து சொல்லலாம்னு கிளம்பிட்டேன். படிச்சிட்டு டென்சனாகாதீங்க. ஏன்னா, பதிவே டென்சனைக் குறைப்பது எப்படின்றதுதான்.

நீங்க கடவுள் இல்லை!

உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் நிறைய இருக்குன்னு தெரிஞ்சிக்கோங்க. அப்படிப்பட்ட விஷயங்களுக்காக நீங்க வருத்தப்படாமல், பேசாமே அந்த வருத்தங்களை outsource பண்ணிடுங்க. அதுதான் உடம்புக்கு நல்லது. உதா: வடநாட்டுப் பெண்மணியும் தென்நாட்டுப் பெண்மணியும் தொலைபேசியதை உங்களால் வெறும் கேட்கத்தான் முடியும். வேறெதாவது செய்ய முடியுமா?

தமிழக அரசுக்கு உதவாதீங்க.

டென்சனைக் குறைக்க தண்ணி அடிக்காதீங்க. அதனால் டென்சன் குறையாது. அப்படின்னா, தம் அடிக்கலாமான்னு கேக்காதீங்க. மூச். கூடவே கூடாது. எனக்குத்தான் ஓவியம் வரையத் தெரியாதே. அப்புறம் சுவர் எதுக்குன்னு கேக்காதீங்க. 'சுவர்' கண்டிப்பா தேவை. பாத்துக்குங்க.

மிட்நைட் மசாலா வேண்டாம்.

சீக்கிரம் படுத்து தூங்கற வழியைப் பாருங்க. டென்சனைக் குறைக்கறதுக்கு நீண்ட இரவுத் தூக்கம்தான் நல்ல மருந்துன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதுக்காக ஆபீஸ்லே தூங்காதீங்க. தூங்கினாலும் வேலை போகாமே இருக்க நீங்க ஒண்ணும் பாராளுமன்றத்தில் வேலை செய்யலே!

மிருகமா மாறிடுங்க!

சாப்பிடுற விஷயத்துலே மிருகமா மாறிடுங்கன்னு சொல்ல வந்தேன். பசி எடுத்தபிறகு சாப்பிடுங்க. overload பண்ணாதீங்க. ஆத்துலே போடும்போதே அளந்து போடும்போது, ஆத்துலே (வீட்டுலே) உக்காந்து வயித்துக்குள் போடும்போது அளந்து போடாமே இருக்கமுடியுமா.

நாயைப் பாத்து கத்துக்குங்க.

ஏதாவது ஒரு நாய்க்கு தொப்பை இருந்து பாத்திருக்கீங்களா? ஏன்? அது நாள் முழுக்க ஓடிட்டே இருக்கு. உங்களையும் அதே மாதிரி நாள் முழுக்க ஓடச் சொல்லலே. ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது ஓடுங்க. உடற்பயிற்சி செய்யுங்க.

சைட்லே பாக்காதீங்க!

நேர்மறைன்னு ஒரு வார்த்தை இருக்கான்னு கவலைப்படாமே நேர்மறையா இருங்க / பேசுங்க / யோசிங்க. அப்பத்தான் யார்கிட்டே என்ன (பொய்) சொன்னோம், என்ன பேசினோம்னு நினைவில் வெச்சிக்க வேண்டாம். Excel கோப்பில் நிறைய ஃபார்முலா இருந்தா, சேமிக்கறது கஷ்டம். ஜிம்பிளா இருங்க.

பைத்தியமாயிடுங்க.

தனக்குத்தானே பேசிக்கோங்க. அட, வாய் விட்டு இல்லேங்க. மனசுக்குள்ளே. அப்படி பேச முடியலியா, அமைதியா உக்காருங்க. எவ்ளோ புலன் முடியுதோ அவ்ளோ புலன்களை அடக்கி தினமும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.

ஒரு வேலை ஒரே வேலை

தொகா பெட்டியில் சன் டிவி, ஜெயா டிவின்னு நூறு சேனல்கள் இருந்தாலும், ஒரு சமயத்தில் ஒரு டிவி பாத்தாதான் நல்லாயிருக்கும். அதே மாதிரி ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையை செய்யுங்க. டென்சனை குறைங்க.

*****

Read more...

Monday, November 22, 2010

நான் பார்க்கும் மெகாத் தொடர்கள்!!

ஆபீஸ் முடிந்து குர்காவ்ன்லே மாலை 6.10க்கு வண்டி. தில்லியில் வீட்டுக்கு வர 6.40௦ ஆயிடும். ஆனா 6.30க்கு மெட்டி ஒலி. பத்து நிமிஷ நாடகம் போயிடும். என்ன பண்றது? வீட்டுத் தொலைபேசியை ஸ்பீக்கர்லே போட்டுட்டு தொலைபேசியில் மெஒவை கேட்டுக்கிட்டே ஓடி வீடு வந்து சேருவோம்.

நண்பர்கள்/வீட்டுலே தொடர்ச்சியா நிறைய தொடர்களைப் பார்த்தாலும், நான் பார்த்தது மெஒ & கோலங்கள் மட்டும்தான் (அதுவும் 2006 பிப்ரவரி வரை!). அதுக்கப்புறம் அமெரிக்கா வந்தாச்சு. வந்தவுடன் இங்கேயும் மெகாத் தொடர்கள் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா தமிழ்லே இல்லே. ஆங்கிலத்துலே. (தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாத்து 4.5 ஆண்டுகள் ஆயிடுச்சுங்க!).

இங்கேயும் ஏகப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள். அதுவும் 10-15 வருஷத்துக்கு மேல் ஓடிய தொடர்கள்லாம் இருக்கு. குழந்தையா நடிக்க ஆரம்பிச்சி அதே தொடரில் பெரியவங்க ஆனவங்களும் இருக்காங்க.

இருங்க இருங்க. நம்ம ஊர் தொடர் நாடகங்களுக்கும் இந்த ஊர் தொ.நா’க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

** இங்கிருக்கும் தொடர்கள் எதுவும் தொடர்கதை கிடையாது. அதாவது ஒரு கல்யாணமோ / கரு**யோ, அதையே ஒரு வாரம் வரைக்கும் இழுத்து காட்டறா மாதிரி கிடையாது. ஒவ்வொரு எபிசோடும் ஒரு ச்சின்ன சம்பவம் - அவ்வளவுதான். அன்னிக்கி ஆரம்பிச்சி அன்னிக்கே முடிச்சிடுவாங்க. அதனால் ஒரு நாள் பாக்காமே போனா, அடுத்த நாள் புரியாதுன்னு இல்லே. (ஹிஹி. தமிழ்த் தொடர்களும் அப்படித்தான்னு யாரோ சொல்றது கேக்குது!).

** எந்தத் தொடரும் வருடம் முழுக்க நடக்காது. ஒரு வருடத்திற்கு 3-4 மாதங்கள் மட்டுமே நடக்கும். அப்புறம் அடுத்த வருடம்தான்.

** ( நான் பார்க்கும்) பெரும்பாலான தொடர்கள் நகைச்சுவைத் தொடர்களே. பட்பட்டென்று நிமிடத்திற்கு நிமிடம் வசனங்களாலும், நடிப்பினாலும் சிரிக்க வைக்கும் நாடகங்களையுமே விரும்பி பார்ப்பது வழக்கம்.

** ரொம்ப பழைய மேட்ச் போட்டாலும் அதை நாள் முழுக்க உக்காந்து பார்ப்பதுபோல், இந்த கீழ்க்கண்ட தொடர் நாடகங்களை ஏகப்பட்ட தடவைகள் பார்த்திருக்கேன் / பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

* Everybody loves Raymond - இதைத்தான் முதன்முதலில் பார்க்க ஆரம்பிச்சோம். இன்றைக்கும் என் ஃபேவரைட் இதுதான்.

* Friends - ஹிஹி. ஜெனிக்காக பார்க்க ஆரம்பித்தேன்.

* Seinfeld - மூணு / நாலு விதமான கதைப் பின்னல்கள் - கடைசியில் எல்லாத்தையும் ஒரே கோட்டில் சேர்த்துவிடுவார்கள். இவர்கள் கற்பனைத் திறனுக்கு ஒரு ஜே! வாத்தியாருக்கு மிகவும் பிடித்த தொடர். கற்றதும் பெற்றதும்லே இதை சொல்லியிருப்பார்.

* King of Queens

* Home Improvement

* Yes Dear

* Just Shoot me

* George Lopez

* Prince of Bel Air - நம்ம வில் ஸ்மித் சினிமாவில் நடிக்க வரும்முன்னே நடிச்ச தொடர். நகைச்சுவையில் பிச்சி உதறியிருப்பாரு.

* Hot in Cleveland

சஹானா பார்க்கும் சில சிறுவர்களுக்கான தொடர்களை வேறு வழியில்லாமே பார்க்க ஆரம்பித்து, இப்ப அவ தூங்கிட்டாலும் நாங்க பாக்கறதுதான்.

* Hannah Montana

* iCarly

* Victorious

சில 18+ வசனங்கள் வரும் தொடர்களும் இருக்கு. ஆனா நான் அதையெல்லாம் பாக்கறதில்லை. ச்சின்ன மனசு கெட்டுப் போயிடும்னு வீட்டுலே அனுமதிக்கமாட்டாங்க.

* Two and half men

* Family Guy

இதைத் தவிர நான் பார்க்கும் பிற தொடர்கள் (நாடகங்கள் அல்லாதவை).

* Are you smarter than a 5th Grader? - இதில் நிறைய தப்புதப்பா பதில் சொல்லிடுவேன். அப்புறம் நாந்தான் இந்த ஊரில் 5வது படிக்கலியே, அதான் பதில் தெரியலேன்னு சமாளிச்சிடுவேன்.

* Americas Funny Videos - இது என்னன்னு உங்களுக்கே தெரியும்.

இப்படியாக இங்கே பொழுது போகுதுங்க.


******

* ஒரு குடும்பம்.
* மொத்தம் நாலே பேர்.
* நகைச்சுவைதான் முக்கியம்
* சினிமா, அரசியல் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு நோ

இந்த மாதிரி ஒரு சூழலுடன் தொடருக்கான கதைகள் தமிழில் எழுதணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. ஒரு குழுவா இருந்தா முயற்சி செய்யலாம். நீங்க யாராவது ரெடியா?

*****

Read more...

Friday, March 5, 2010

கதவை திறக்கவே பயமா இருக்கு...!!!

இங்கே குளிர் காலம் முடியும் தருவாயில் - மதியத்தில் 45 டிகிரி F வெயில் அடிக்க - வீட்டிலிருக்கும்போது கொஞ்சமா ஜன்னல் கதவையும், காரில் போகும்போது கண்ணாடியையும் திறந்துக்குறேன்னா - வீட்டுலே அலர்றாங்க. எந்த கதவையும் நீங்க திறக்க வேண்டாம் - 'எல்லாத்தையும்' மூடிட்டு சும்மா இருங்கன்னு அதட்டல் வேறே.

என் வாழ்க்கை முழுக்க நான் இருட்டறையிலேயே இருந்துடுவேனோன்னு பயமா இருக்கு. கதவையும் திறக்க முடியல. அதனால் காத்தும் வரலே. இதுக்கெல்லாம் ஒரே வழி - ஜெய் ச்சின்னப் பையனானந்தாய நமஹ அல்லது ஜெய் சத்யானந்தாய நமஹ. எனக்கென்னவோ ரெண்டாவது பிடிச்சிருக்கு. உங்களுக்கு?

*****

நாலு வருடம் முன்னாடி என் நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல்.

அவர்: வாழ்க்கையில் நிம்மதியே இல்லேப்பா. அதனால் நேத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ சாமியார்கிட்டே போயிருந்தேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கு.

நான்: அட, ஒரே நாள்லேயே நிம்மதி வந்துடுச்சா. ஏதாவது காசு செலவழிச்சியா இல்லே இலவசமா நிம்மதி கொடுத்தாரா?

அவர்: இலவசமா யாரு நிம்மதி தர்றா? ரூ.25,000 செலவழிச்சேன்.

நான்: #$%##$%% அடப்பாவி, அங்கே போய் ரூ.25,000 செலவழிச்சதுக்கு, அந்த பணம் தேவையாயிருக்குற எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு கொடுத்திருந்தா வாயார வாழ்த்தியிருப்பாங்க. அதுலேயே உனக்கு நிம்மதி வந்துருக்குமே.

அவர்: அவரு கடவுளை காட்டுறேன்னு சொன்னாரு. அதுக்காகத்தான் போனோம்.

நான்: (மறுபடி $%#$%%). அவர் சொன்னா, நீ நம்பிடுவியா?. சரி ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். தபால்காரர் ஒரு தந்தி வந்து கொடுக்குறாரு. "பாட்டி சீரியஸ். ஸ்டார்ட் இம்மீடியட்லி". தந்தி கிடைச்சவுடன், நீங்க பாட்டி வீட்டுக்கு போவீங்களா? இல்லே, தபால்காரர் வீட்டுக்கு போய் அழுவீங்களா?

அவர்: இதென்ன கேள்வி? தபால்காரர் வீட்டுக்கு எதுக்கு போகணும்? நான் என்ன லூசா?

நான்: அதை என் வாயால சொல்லணுமா? அந்த தபால்காரர் மாதிரி இந்த சாமியார்களும் ஒரு மிடில்மேன்தான். அவர் பாட்டியை காட்ட மாட்டாரு. நீயாதான் பாட்டி வீட்டுக்கு போகணும். புரியுதா?

*****

சென்னையில் வீட்டுலேயும் சரி, நண்பர்கள் சொன்னதும் சரி - ரெண்டு மூணு நாளா சன் டிவி போடவே பயமா இருக்கு - ஒரே மேட்டரா காமிச்சிட்டிருக்காங்க.

நான் சொன்னது - "இதுக்கு முன்னாடியும் அப்படித்தான். முன்னாடி ஏதாவது போட்டி, பாராட்டு விழான்னா குத்தாட்டம் காட்டுவாங்க. அதை ரசிச்சி பாத்துட்டிருந்தீங்க. இப்பொ நித்தி மேட்டரில் போட்டி எதுவும் இல்லேன்றதால், பயங்கர போரடிக்குது - பயமா இருக்குதுன்னு எதையாவது சொல்றீங்க. இன்னும் ஏதாவது ஒரு சாமியாரோட நகர்படமும் வந்துடுச்சுன்னா, அதை போட்டி மாதிரி செட் பண்ணி போடுவாங்க. அப்போ பாருங்க. நல்லாயிருக்கும்".

*****

எங்க வீட்டுலே தமிழ் சேனல்களை வாங்காமே இருக்க முன்னாடி தொலைக்காட்சி தொடர்கள் காரணமாயிருந்துச்சு. இப்போ சன் டிவி - மேட்டர் டிவி ஆனதிலிருந்து அடுத்த ஒரு வருடத்திற்கு அந்த முடிவில் மாற்ற்மில்லை. காசும் மிச்சம். நிம்மதிக்கும் பங்கமில்லை.

*****

சரி விடுங்க. எவ்ளோ மோசடி சாமியார் வந்தாலும் மக்கள் திருந்தப் போறதில்லே. காசை கொண்டு அங்கே கொட்டத்தான் போறாங்க. நான் ஸ்ரீஸ்ரீ சத்யானந்தாவாக ரெடி. கிளைகள் திறக்கணும்றவங்க மின்னஞ்சல் பண்ணுங்க. பதிவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு பில்லிலும் 10% கமிஷன். அப்படியே ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தை பிடிங்கப்பா. நிறைய வேலை இருக்கு. நான் கிளம்பறேன். வர்ட்டா?

*****

Read more...

Friday, February 26, 2010

திருதராஷ்டிரருக்கு செலவு ரூ.50,000!!!

என்னடா இடுகை இது, சம்மந்தா சம்மந்தம் இல்லாமே இருக்கேன்னு நினைக்காதீங்க. சம்மந்தப்படுத்தி படிச்சி பாருங்க. புரியும்!!!

*****

அமெரிக்கா வந்த புதுசுலே, இங்கே இருக்கும் ஒரு நண்பர்கிட்டேயிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது - Its Blue! - அப்படின்னு. எனக்கு பேரதிர்ச்சி. அட, நேத்திக்கு நாம சுடர்மணி வாங்கினது இவருக்கு எப்படி தெரிஞ்சுது. அதுவும் கலர் வேறே சரியா சொல்றாரே? - போட்டுக்கும்போது ஒளிஞ்சிருந்து பார்த்திருப்பாரோன்னு சந்தேகப்பட்டு - நண்பருக்குத் தொலைபேசினா - அவருக்கு குழந்தை பொறக்கப் போகுதுன்னும் அது ஆண் குழந்தைன்னும் சொன்னாரு.


இங்கே இவங்களுக்கு கள்ளிப்பால் பிரச்சினை இல்லாததாலே, என்ன குழந்தைன்னு மொதல்லேயே சொல்லிடறாங்க. (மொதல்லேயேன்னா... மொதல்ல்ல்ல்ல்லேயே இல்லே. நாலைஞ்சு மாசம் ஆனப்புறம்தான்!!!). ஆண் குழந்தைன்னா blue; பெண் குழந்தைன்னா pink. மக்களும் அதுக்குத் தகுந்தாற்போல பொருட்களை தயாரா வாங்கி வெச்சிடறாங்க. அப்புறம் வாழ்க்கை முழுக்க - ஆம்பளைங்கன்னா ஆம்பள கலர், பொம்பளைங்கன்னா பொம்பள கலர்தான். மாத்தி வாங்கி வந்துட்டா ஒரே கலாட்டாதான் வீட்டுலே.


ஒரு தடவை சஹானா, நீலம் மாதிரி ஒரு குளிராடை போட்டு பள்ளிக்குப் போயிட்டு, பசங்கல்லாம் கிண்டல் பண்ணிட்டாங்களாம் - வீட்டுக்கு வந்து மொதல்லே அதை தூக்கிப் போட்டாதான் ஆச்சுன்னு அழுகை. இங்கே நிறைய இடத்துலே பழைய துணிகளை அன்பளிப்பா வாங்கிக்க கூண்டு வெச்சிருப்பாங்க. அன்னிக்கே போய், அந்த குளிராடையை ஒரு கூண்டுலே போட்டபிறகுதான் நிம்மதி ஆச்சு.


அதே மாதிரி விளையாட்டு பொருட்கள். பெண் குழந்தைகள்னா - டோரா. ஆண் குழந்தைங்கள்னா - டோராவோட ஒண்ணு விட்ட சகோதரன் டியகோ. இதுலேயும் மாத்தி விளையாட முடியாது. மாஆஆஆனப் (மாஆஆஆன = பெரிய மான) பிரச்சினையாயிடும். போன தடவை இந்தியா போயிருந்தபோது ஒரு பையனின் பிறந்த நாள் விழாவுக்குப் போயிருந்தோம். பிறந்த நாள் கேக்லே டோரா. சஹானாவோட கேள்வி - ராகுலோட பிறந்த நாளைக்கு டியகோ கேக் வாங்காமே ஏன் டோரா கேக் வாங்கறாங்க. அவன் திட்ட மாட்டானா?.


நிற்க. (ஏற்கனவே நின்றிருந்தால், உங்கள் வசதி எப்படியோ அப்படியே செய்க...) மறுபடி குழந்தை - மருத்துவமனைக்கே போவோம்.


இங்கே மருத்துவமனைக்கு போனால்லாம், 'டிப்ஸ்' கொடுக்கறது நம்ம இஷ்டம்தான். கட்டாய அன்பளிப்பு கிடையாது. சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையின் 'அன்பளிப்பு' பட்டியல் வெளிவந்ததை பாத்திருப்பீங்க. ஆம்பள புள்ள பொறந்தா ரூ.500, பொம்பள புள்ள பொறந்தா ரூ.400 - அப்படின்னு.


ஒண்ணு ரெண்டு பெத்து வெச்சிக்கிட்டிருக்கிற நமக்கே இவ்ளோ காசு கேக்கறாங்களேன்னு இருந்தா - நம்ம தல திருதராஷ்டிரருக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும். ஒவ்வொரு தடவை மருத்துவமனை போகும்போதும்
காசு கொடுத்துக்கிட்டே வந்தா 100வது குழந்தை பொறந்தபிறகு அவரோட மொத்த அன்பளிப்பு ரூ.50,000 ஆயிருக்கும். அது சரி, அவரு ராஜா, தாராளமா கொடுக்கலாம். ஆனா, நம்ம மக்கள் - பாவம்தானே.


மறுபடி நிற்க. ஒரு ச்சின்ன கற்பனை - திருதராஷ்டிரர் அரசியல்வாதியானால்!!!


1. இணை அரசர், துணை அரசர், இணை-இணை, துணை-துணை அப்படின்னு ஒரு ஐம்பது பேராவது அரசர் பதவியில் இருந்திருப்பாங்களா ?


2. ஒவ்வொருத்தரா வரிசையா அரசராயிட்டே வந்தா, அந்த 100வது மகன் எந்தக் காலத்துலே அரசராவது?


3. இல்லே அஸ்தினாபுரத்தை 100ஆ பிரிச்சி எல்லோரும் அரசரா ஆயிடுவாங்களா?


4. ஸ்விஸ் பாங்க் கிளை ஒண்ணு அஸ்தினாபுரத்துலே திறந்திடுவாங்களா? தனித்தனியா 100 அக்கவுண்ட், அப்புறம் கண்டிப்பா சில பசங்க கூட்டா வேறே அக்கவுண்ட் வெச்சிருப்பாங்க. அதனால், குறைந்த பட்சம் 200 அக்கவுண்டாவது வெச்சிருப்பாங்களா?


5. 100 பசங்கன்னா, பேரப்புள்ளைங்க 200ன்னு வெச்சிக்குவோம். அப்போ, 200 திரைப்பட நிறுவனங்களா?


6. இவ்ளோ நிறுவனங்கள் இருந்தா, படம் எடுக்க கதைக்கு எங்கே போவாங்க? உல்டா, உல்டாவுக்கு உல்டா இப்படியே எடுத்திட்டிருப்பாங்களா?


7. கௌரவ நாடு கௌரவர்களுக்கே - அப்படின்னு ஒரு இயக்கம் ஆரம்பிப்பாங்களா? ஆரம்பிச்சாலும், அவங்க பசங்களை சண்டைப் பயிற்ச்சிக்காக பாண்டவர்கள் பள்ளியில் சேத்துடுவாங்களா?


அவ்ளோதாம்பா இடுகை. துவக்குக நல்லிசையை!

*****

Read more...

Wednesday, December 16, 2009

கககா கிக்கீகூகூ கெகெக்கே குகூகெகே கவுஜ!!!

நண்பர்கள் குழாம் -
எனக்கு இரண்டு உண்டு.


இரண்டிலும்
எல்லாரையும்
நன்றாக கலாய்ப்பேன்
நானும்
கலாய்க்கப்படுவேன்.


இரண்டிலும்
இடியாப்பத்திலிருந்து
இத்தாலியன் பீட்ஸா வரை
அனைத்தையும்
ஒரு கை
பார்ப்போம்.


இரண்டிலும்
அறுவை ஜோக்கிலிருந்து
அடல்ட்ஸ் ஒன்லி
ஜோக்ஸ் வரை
எல்லாவற்றையும்
அலசுவோம்.


இரண்டிலும்
புத்தம் புதிய
படங்களிலிருந்து
பழைய படங்களை வரை
அனைத்தையும்
பார்த்து
விமர்சிப்போம்.


இப்படி இரு குழாமிலும்
இவ்வளவு ஒற்றுமை
இருக்கிறதே,
ஏதாவது ஒரு
வேற்றுமையாவது
இருக்கிறதா என்று
பார்த்தேன்.


பளிச்சென்று
தெரிந்தது ஒரு
வேற்றுமை.


ஒரு குழாமில்
நான் சகதமிழன்

மற்றொன்றில்
சாலா மதராஸி...

***********

Read more...

Wednesday, February 25, 2009

நொறுக்ஸ் - செவ்வாய் - 02/25/2009



"இவ்ளோ பெரிசா வளர்ந்திருக்கியே? இன்னுமா இப்படி?" - அப்படின்னு ஒரு பத்து பேரு சுத்தி நின்னு உங்களை கேட்டாங்கன்னா எப்படி இருக்கும்? - என்னோட அனுபவம் கீழே...


*****




ஒரு வாரம் பதிவு எதுவும் போடலேன்னா நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அந்த நாலு பேரும் பேசிக்கிட்டே, கோச்சிக்கிட்டு ஃபாலோயர் பட்டியலிலிருந்து போயிடுவாங்கன்னு இப்பத்தான் கேள்விப்படறேன்... அவ்வ்வ்... போன வாரம் 61ன்னு இருந்தது இன்னிக்கு 57 ஆயிடுச்சு... அதனால், விடாமே எழுதி தமிழுக்கு மறுபடி தொண்டாற்றலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. எனக்கென்ன போச்சு... படிக்கறவங்களுக்குத்தானே கஷ்டம்!!!!




*****




அலுவலக நேரத்துலே வெளியே போய் ஷாப்பிங் பண்ற சுகமே தனி... என்ன சொல்றீங்க? ஆனா அது யாருக்கும் தெரியாத மாதிரி பண்ணனும்.




ஒரு தடவை இப்படித்தான், நண்பன் சொன்னான்னு அலுவலகத்திலிருந்து கிளம்பி ஷாப்பிங் செய்ய போயாச்சு. ஒரு மணி நேரம் சுற்றிவிட்டு கடகடன்னு திரும்ப வந்தாக்கா, அலுவலக வாசல்லே எங்களுக்கு பலத்த வரவேற்பு. அந்த கட்டிடத்தில் இருக்கும் 200-250 பேரும் வெளியே நிக்கறானுவ. வரும்போதே எங்க மேனேஜர் எங்களை பாத்துட்டாரு. சிரிச்சிக்கிட்டே அவர்கிட்டே போனாக்கா - அரை மணி நேரமா வெளியேதான் நிக்கறோம். fire alarm அடிச்சிருந்துச்சு... நீங்க எப்போ வெளியே போனீங்கன்னாரு...




”ஹிஹி... இப்படி வெளியே நிற்க போரடிச்சுது... இப்பத்தான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடி போனோம்”னு சொல்லி சமாளிச்சோம்....!!!




*****



எல்லாரும் நிறைய பேசிட்ட நம்ம தல ஏ.ஆர்.ஆர் பற்றிய செய்திதான். விருது வழங்கும் விழாவை பார்த்துக் கொண்டிருந்தபோது நான் (கண்டிப்பா நிறைய பேரும்) நினைத்தது, உணர்ந்தது எல்லாத்தையும் உணர்ச்சிபூர்வமா அப்படியே தன் பதிவில் சொல்லியிருக்காரு இவரு. அட்டகாசமா இருக்கு. இங்கே போய் பாருங்க. நண்பர் பேரு விஜயசாரதி.




*****




நான் பொறந்து வளர்ந்ததும் தமிழ்நாட்லேதான். ஒரு நல்ல குடும்பத் தலைவனா கொஞ்ச நாள் இருந்தது தமிழ்நாட்லேதான். இந்திய வாக்காளர் அடையாள அட்டையும், அரசு வழங்கியிருக்கும் ரேசன் அட்டையும் என் பேர்லே இருக்கு. எங்க வீட்லே ஒரு மூணு பேரு இருக்கோம். குறைந்த பட்சம் ஒரு கலைமாமணி அவார்டாவது கொடுப்பாங்களான்னு யாராவது சொல்லுங்க. அதுக்கு எங்கே அப்ளை பண்ணணும்னு ஏதாவது உரல் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.




முதல் ரெண்டு நாளா எல்லார்கிட்டேயும் ரஹ்மான் ரஹ்மான்னு பொலம்பிக்கிட்டிருந்தேன்னா, இப்போ ரெண்டு நாளா ஐஸ்வர்யா தனுஷ்னு பொலம்பிக்கிட்டிருக்கேன்.. முடியல சாமி... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.




*****




தமிழ்மண முகப்பு கீழ் பகுதியில், 'அனுபவம்' தொகுப்பில் ஒரு பதிவு ரொம்ம்ம்ம்ம்ப நாளா அப்படியே இருக்குன்னு நினைக்கிறேன். யாராவது பாத்திருக்கீங்களா????? கீழே படத்துலே வட்டம் போட்டு காட்டியிருக்கேன்... ஒரு ஜெனெரல் நாலெட்ஜ்காக தெரிஞ்சிக்கலாமேன்னுதான் கேக்கறேன்.





*****



ரெண்டு வருஷத்துக்கு முன் ஒரு நீண்ட பயணம் போனபோது ஓய்வுக்காக ஒரு உணவகத்துலே நின்றோம். சஹானாவுக்கு டயபர் (diaper) மாத்தணும்னு சொன்னதால், அவரையும் கூட்டிக்கிட்டு ஒரு டயபரையும் எடுத்துண்டு, 'பராக்கு' பாத்துக்கிட்டே போகும்போது அந்த டயபர் என் பாக்கெட்லேந்து கீழே விழுந்துடுச்சு. அங்கேயிருந்த ஒரு குறும்புக்கார தாத்தா ஒருத்தரு - "அண்ணே, உங்க டயபர் கீழே விழுந்துடுச்சு பாருங்க"ன்னு கத்தி சொல்லிட்டாரு. நான் திரும்பி பாக்கறதுக்குள்ளே, என்னை ஒரு பத்து பேரு பாத்துட்டாங்க.




எல்லார்கிட்டேயும் போய் - அண்ணே, அது நான் போட்டிருந்திருக்கலே... என் பாக்கெட்லேந்துதான் விழுந்துச்சு. நம்புங்க - ன்னு சொல்லிட்டிருக்கவா முடியும்?. அந்த தாத்தாக்கு 'நற நற'ன்னு ஒரு நன்றி சொல்லிட்டு, மத்தவங்களுக்கு ஒரு 'ஹிஹி' சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிட்டேன். வேறே என்ன பண்றது????




*****

Read more...

Thursday, December 25, 2008

எனது வாழ்க்கையில் Morse Code

முன்னுரை:



நேற்றைய பதிவில் மொக்கை கொஞ்சம் ஓவராவே இருந்துச்சுன்னு நினைக்கிறேன் - அதை சரிப்படுத்துவதற்காக இன்றைய பதிவு கொஞ்சம்
டாகுமெண்டரி டைப்பில் எழுதியிருக்கேன்.


--------


ச்சின்ன வயசில் சாரணர் இயக்கத்தில் இருந்தபோது சொல்லிக் கொடுத்த ஒரு மேட்டர் - மோர்ஸ் கோட்.




சாமுவேல் மோர்ஸ் என்பவர் கண்டுபிடுத்த இந்த முறையைக் கொண்டு பழைய காலத்தில் தந்தி தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். எல்லா ஆங்கில எழுத்துகளையும் மற்றும் 0 முதல் 9 வரை உள்ள எண்களையும் குறியீடுகள் மூலம் மொழிபெயர்த்து அதை குறிப்பிட்ட அலைவரிசையில் அனுப்பி இத்தகைய தகவல் பரிமாற்றங்கள் நடந்து வந்தன. தற்போதும் ஹாம் எனப்படும் அமெச்சூர் ரேடியோ பயன்படுத்துபவர்கள் இந்த மோர்ஸ் கோட் மூலம் பேசுகிறார்கள்.




ஹாம் எப்படி இருக்கும்னா - பழைய திரைப்படங்களில் வில்லன் அலமாரியின் கதவைத் திறந்து - ஹெட்செட்டை எடுத்து மாட்டிக்கொண்டு - ஹலோ ஹலோ 305 ஹியர் - அப்படின்னுவாரே, அதே மாதிரிதான் இருக்கும். விக்ரம் படத்தில் கமல் கூட அந்த மாடி வீட்டில் இப்படி ஒரு கருவியை கண்டுபிடிப்பார்.




எல்லா ஆங்கில எழுத்துக்களையும் - டிட் (புள்ளி), டா (கோடு) - இந்த இரண்டு குறியீடுகளின் மூலம் வகைப்படுத்தி உள்ளனர். உதாரணத்திற்கு, A என்பதை
ஒரு டிட், ஒரு டா (சொல்லும்போது : டிட் டா) எனவும் B என்பதை ஒரு டா, மூன்று டிட் (சொல்லும்போது: டா டிட் டிட் டிட்) எனவும் சொல்ல வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்.




இந்த மோர்ஸ் கோட் - மேலே சொன்ன மாதிரி அமெச்சூர் ரேடியோ பயன்படுத்தும் ஆட்களுக்கோ அல்லது ராணுவத்தில் தந்தி தகவல் பரிமாற்றத்தில் இருப்பவர்களோதான் பயன்படும் - எங்களுக்கு எதுக்கு இதை சொல்லித் தருகிறீர்கள்னு கேட்டதற்கு - "ஏதாவது ஒரு காட்டுலே இரவிலே வழிதெரியாமே மாட்டிக்கிட்டாலோ, ஆபத்து காலத்திலோ இது உங்களுக்கு உதவும்" அப்படின்னு சொன்னாங்க.




நம்ம வடிவேலு ஜோக் அப்பவே வந்திருந்ததுன்னா நான் கேட்டிருப்பேன் - "நான் ஏண்டா நடுராத்திரியிலே (சுடு)காட்டுக்குப் போகணும்? அவ்வ்வ்".
இருந்தாலும் அப்ப நல்ல பிள்ளையா இருந்ததால் அப்படியெல்லாம் கேக்காமே ஒழுங்கா அவங்க சொன்னதை கேட்டுக்கிட்டேன்.




அதன்பிறகு பள்ளியில் 9வது படிக்கும்போது நடைபெற்ற ஒரு அறிவியல் கண்காட்சியில் இதை பயன்படுத்தப் போறேன்னு ஆசிரியரிடம் சொன்னேன். ஒரு switch boardல் இரண்டு பல்ப் மாட்டினோம். அதன் மேல் வெவ்வேறு நிற காகிதங்களை ஒட்டினோம். ஒரு பல்பை டிட் (புள்ளி) ஆகவும், மற்றொரு பல்பை டா (கோடு) ஆகவும் பயன்படுத்தி செய்தியை அனுப்ப முயற்சி செய்தோம். என் நண்பன் அதை இயக்கி மோர்ஸ் கோட் மூலம் செய்தியை அனுப்ப, நான் சற்று தூரத்திலிருந்து அந்த செய்தியை கண்டுபிடித்து சொல்வேன். அந்த கண்காட்சிக்காக ஒரு வாரம் பயிற்சி எடுத்திருந்தாலும், கடைசியில் சிறப்பு விருந்தினர் கொடுத்த செய்தியை நான் சரியாக கண்டறியாமல் வழிந்தது தனி கதை...




அதன் பிறகு வேறெங்கும் உதவாத அந்த மோர்ஸ் கோட் எனக்கு திருமணமான பிறகுதான் மிகவும் பயன்பட்டது. அது எப்படின்னு கேக்கறவங்களுக்காக - மோர்ஸ் கோட் பயன்படுத்தி நான் இன்னிக்கு அனுப்பின செய்தியை கொடுக்கிறேன்.




"டிட்டிட்டிட் இன்னிக்கு டிட்டா காபியிலே டிட்டிட் சர்க்கரை டாடா கொஞ்சம் டிட்டிட் கம்மியாயிருக்கே டாடாடா????"



பின்குறிப்பு:

என்னாச்சு, இன்னிக்கு இந்த மாதிரி ஒரு சீரியஸ் பதிவுன்னு கேக்கறவங்களுக்கு - நான் பதிவு எழுத ஆரம்பிச்சி இன்னியிலேந்து ரெண்டாவது வருஷம் ஆரம்பிச்சிடுச்சு... அதுக்குதான் இப்படி...

Read more...

Tuesday, September 30, 2008

கொலம்பஸ்... கொலம்பஸ்...!!!




தனியொரு மனிதனுக்கு ஆணியில்லையெனில், அவனை இந்தியாவுக்கு அனுப்பிடுவோம் - அப்படின்ற திட்டத்தின்கீழ் என் கூட இருந்தவங்க சில பேர் இந்தியாவுக்குப் போயிட்டதாலே - எனக்கு இங்கே ஆணிகள் நிறைய சேந்துடுச்சு...


நீ எவ்ளோ ஆணிவேணா குடு - ஆனா நான் எதுவும் செய்யமாட்டேன் - அப்படின்ற திட்டத்தின்கீழ் நான் இருந்தாலும், சில சமயம் சமாளிக்கமுடியாம போயிடுது.


அதனால், பூச்சாண்டிக்கு ஒரு பத்து நாளைக்கு லீவ் விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனவே, என்னுடைய அடுத்த பதிவு அக்.13ம் தேதிதான்.


இந்த லீவ் லெட்டரை கடந்த ரெண்டு நாளாய் drafts வெச்சிருந்ததாலே, நேத்து அலெக்ஸாலேந்து போன். "அடடா, நீங்க 10 நாள் லீவ் எடுத்துட்டா, மக்கள் என்ன பண்ணுவாங்க? எதைப் படிப்பாங்க?" அப்படின்னு ஒரே தொந்தரவு. அதுமட்டுமில்லாமே, பூச்சாண்டி அவங்க ratingலே, சிலபல லட்சம் கீழே போயிடும்னு பயமுறுத்தல் வேறே.


நான் அதெல்லாம் முடியாதுன்னுட்டேன். நான் ஒரு தடவை முடிவெடுத்துட்டா... அது எப்பவுமே சொதப்பலாதான் முடியும்... ம். ஐ மீன்... முடிவெடுத்ததுதான்.


அதனால், மக்களே நல்லா என்ஜாய் பண்ணுங்க... அப்பப்போ எட்டிப் பாத்து பின்னூட்டம் போடமுடியுதான்னு பாக்கறேன்..


நான் 13ம் தேதி மீட் பண்றேன்...


பை பை!!!

பின்குறிப்பு:

அகில உலக வரலாற்றிலே முதல்முறையாக - ஒரே லீவ் லெட்டர்லே ரெண்டு பேர் லீவ் போடறது இதுதான் முதல் முறையாக இருக்கும்...!!!

பதிவர் நண்பர் அப்துல்லாவும் ஐந்து நாள் லீவ் வேணும்னு என்கிட்டே அனுமதி கேட்டிருந்தார். உங்ககிட்டேயெல்லாம் கேக்காமே நானே லீவ் கொடுத்துட்டேன். என்னெ மன்னிச்சிடுங்க.... அவ்வ்வ்வ்...


Read more...

Friday, August 29, 2008

நிஜமாகவே விடை பெறுகிறேன்...!!!

இவ்ளோ நாளா என்னோட உளறல்களை பொறுத்துக்கிட்டு வாழ்த்தி, ஊக்குவித்து, திட்டி பின்னூட்டமிட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றி...

கொஞ்ச நாள் இந்த பூச்சாண்டிக்கு ஓய்வு கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.
அதனால், பை பை!!!

எல்லோரும் கொஞ்ச நாள் ஜாலியா இருங்கப்பான்னு சொல்லலாம்னு நினைச்சேன் - ஆனா... ஆனா...

அடுத்த மாசம்... வேறொரு இடத்திலேந்து உங்கள் இதே ச்சின்னப் பையன் மீண்டும் வரும்வரை..... நன்றி... வணக்கம்...!!!

Read more...

Monday, August 25, 2008

இப்படிக்கு...

















Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP