பொங்கலோ பொங்கல் காதலோ காதல்.
பொங்கல் மேலான என் காதல் எப்போ ஆரம்பிச்சதுன்னு நினைச்சிப் பார்க்கறேன். மஞ்சளா இருந்தாலும் வெண் பொங்கல்னு சொல்றோமே, அதைப் பத்தின பதிவுதான் இது. சின்ன வயசுலே திருவல்லிக்கேணியில் மார்கழி மாத விடியலில் அம்மாவுடன் 2-3 கோயில்களுக்குப் போகும்போது சுடச்சுட கிடைக்கும். அடி கிடையாது. பொங்கல்தான். பார்த்தசாரதி கோயிலின் பெரிய கதவு திறக்கும்முன்னே அதிலுள்ள சின்ன கதவின் வழியாக ‘பக்தர்கள்’ உள்ளே போவார்கள். நாங்களும். அங்கேயும் அதே பிரசாதம்தான். அப்போதான் பொங்கல் காதல் வந்திருக்கணும். இன்னிய தேதி வரை எந்த வேளையில் எந்த உணவகத்திற்குப் போனாலும், பொங்கல் இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிடறதுதான்.
வெண் பொங்கல் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு எந்தவித விதியும் எனக்குக் கிடையாது. எப்பொங்கலும் சம்மதம். இதுதான் என் கொள்கை. திரவமா இலையில் ஓடக்கூடிய வடிவில் இருந்தாலும், கல்லுமாதிரி வெட்டி சாப்பிடக்கூடியதா இருந்தாலும், அல்லது நடுவாந்திரமாக ஓடியும் ஓடாமலும் இருந்தாலும் எனக்கு ஓகேதான். ஆனால்... என்ன ஆனால்? விதியே இல்லைன்னுட்டு, இப்ப என்ன ஆனால்? ஒரே ஒரு விஷயம் இருக்கு. ஸ்ரீராமஜெயம் மாதிரி ஒரு நாளைக்கு 108 முறை டயட், டயட்னு சொல்லிவந்தாலும், பொங்கல்னு வந்துட்டா டயட்டுக்கு கட்’தான். நெய். இது கண்டிப்பா வேணும்னு சொல்லிடுவேன். ஒரு ஸ்பூன், ரெண்டு ஸ்பூனெல்லாம் கிடையாது. பரோட்டா தின்னும் போட்டியில் சால்னா பக்கெட்டை வெச்சிட்டுப் போன்னு சொல்றா மாதிரி, நெய்யை பக்கத்திலேயே வெச்சிடும்பேன். பொங்கல் மேல் கிரிப் பிரதிட்சணம் செய்றா மாதிரி நெய்யை சுத்திசுத்தி ஊத்திட்டு, வெள்ளி மலையில் தேன் மழைன்னு வர்ணிச்சா, கேட்க ஆளிருக்காது. நானேதான் மெச்சிக்கணும்.
பொங்கலிலே ஒரு குறையிருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோன்னு அன்னிக்கே கவிஞர் பாடியிருப்பதை கேள்விப்பட்டிருப்பீங்க... அது கண்ணதாசா ஜேசுதாஸா?.. சரி விடுங்க. யார் சொன்னா என்ன, மேட்டர்தான் முக்கியம். உலகிலேயே அழகான உணவுப்பொருள் என்னன்னு கேட்டா, நான் என்ன சொல்வேன்? வேறென்ன. பொங்கல்தான். ஏன்? அவ்ளோ அழகா இருப்பதால்தானே, திருஷ்டிப் பொட்டு போல், அங்கங்கே மிளகு போடுறோம். அழகான குழந்தைகளுக்கே ஒரு திருஷ்டிப் பொட்டுதான். ஆனா, பொங்கலுக்கு பல பொட்டுகள். இப்ப புரியுதா?
அமெரிக்கா போய் சமைக்கக் கத்துக்கும்போது, நான் கத்துண்ட முதல் டிஷ் என்னவாக இருக்கும்? நோ. மதிப்பெண்கள் கிடையாது. அது பொங்கல்தான். எல்லாப் பொருட்களையும் குக்கரில் போட்டு மூடி, விசில் வந்தவுடன் இறக்கினா ஆச்சு, இது சுலபம்தானே, அதுக்காகதான் இதை முதலில் கத்துண்டியான்னு கேட்டீங்கன்னா, அது தப்பு. பதிவின் தலைப்பை இன்னொரு முறை பாருங்க.
இவ்வளவு அருமையா சமைச்ச கைக்கு தங்க வளைதான் செஞ்சு போடணும்னு தமிழில் ஒரு வசனம் இருக்கு. இதே போல் ஆங்கிலத்தில் எனக்கு பிடிச்ச வசனம் - Everybody loves raymondன்ற தொலைக்காட்சித் தொடரில் வரும் தாத்தா சொன்னதுதான். உணவுப்பொருள் பெயரை மட்டும் மாத்தியிருக்கேன். Anyone who can cook பொங்கல் like this deserves a hillside full of heavenly scented marigolds and daffodils. அது சரி, பொங்கல் செஞ்சு போட்ட கைக்கு நீ என்ன போடுவேன்னு கேட்டா, அந்த கை மேலேயே ரெண்டு போட்டு, இன்னொரு கரண்டி பொங்கல் போடுன்னு சொல்வேன்.
நாளைக்கே நான் ஆட்சிக்கு வந்தா, என்னென்ன செய்வேன்?
* கல்யாணத்திற்கு பெண் பார்க்கும் படலத்தில், பஜ்ஜி/சொஜ்ஜிக்குப் பதிலாக பொங்கல்தான் போடணும்னு 110 விதியின் கீழ் ஒரு ஆணை போடுவேன்.
* ‘பையன்’ உணவகத்தில் பொங்கல் மட்டும் இலவசம்.
* திரைப்படங்களின் தலைப்பில் பொங்கல் சொல் வந்தால், சிறப்பு வரிவிலக்கு. உதா: 1000 பொங்கல் தின்ற அபூர்வ சிகாமணி, பொங்கலை மீட்ட சுந்தரபாண்டியன், பொங்கல் உனக்காக, பொங்கல் தேசம் ஆகியன.
எனது ஆட்சியின் தாரக மந்திரம்:
பொங்கல் நாமம் வாழ்க!
நாளை நமதே. பொங்கலும் நமதே!
பொங்கல் உடனான உங்க அனுபவத்தையும் பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கோங்க.
***
6 comments:
பிரசாதப் பொங்கல் அனுபவங்களைத் தொடர்ந்து ,காதலில் 'பொங்கல் 'வாங்கிய அனுபவங்களை
எதிர்பார்க்கிறேன்!
+1
வணக்கம்
சிறப்பாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நானும் ஒரு பொங்கல் பைத்தியம் .. அதுவும் A2B பொங்கல்'னா கேட்கவே வேண்டாம். இவ்ளோ சொன்ன நீங்க ஏன் பொங்கலோட கம்பானியன் "வடை"ய மென்ஷன் பண்ணலை? :) :)
அட நீங்களும் ஒரு பொங்கல் பிரியரா? இந்தப் பதிவு பொங்கல் - வெண்பொங்கல் சாபிட்டது மாதிரியே இருக்கு.
பையன்’ உணவகத்தில் பொங்கல் மட்டும் இலவசம்.
:-))))))
பொங்கலிலே ஒரு குறையிருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோன்னு //
இதெல்லாம் என்ன வகை ஜோக்? லுச்சாத்தனமா இருக்கு..
ஆனா என்ன பண்றது.. இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. லூசு மாதிரி சிரிச்சிகிட்டிருக்கேன். முடியல..
:-)))))))))))
Post a Comment