காபி குடிக்க தனியாகச் சென்ற மென்பொருள் ஊழியர் டிஸ்மிஸ்!
அதிர்ச்சியூட்டும் ஒரு செய்தியாக, நேற்று பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவன ஊழியர் வேலை நேரத்தில் காபி குடிப்பதற்காக, யாருடனும் செல்லாமல், தனியாகச் சென்ற காரணத்தினால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இது மென்பொருள் துறையினரிடையே பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி தெரிவிக்கையில் - மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலைக்கு நடுவே அவ்வப்போது காபி குடிக்க வெளியே செல்வதுண்டு. அவற்றை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால், தனியாக சென்றதனால் டிஸ்மிஸ் என்பது கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது - என்றார்.
மற்றொரு நிறுவனத்தைச் சார்ந்த ஒரு மென்பொருள் நிபுணர் கூறுகையில் - எந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களும் காபி குடிக்க தனியாகப் போகவே மாட்டார்கள். புதிதாக சேரும் ஒரு ஆண் கூட உடனடியாக ஒரு பெண்ணையும், ஒரு பெண் ஒரு ஆணையும் துணையாகக் கூட்டிக்கொண்டே போவார்கள். அப்படி இல்லையெனில், தங்கள் குழுவில் இருப்பவர்களுடன் போவார்கள். ஒரு முறை போய் வந்த குழுவே, இன்னொரு நண்பர் கூப்பிட்டார் என்பதற்காக உடனடியாக மற்றொரு முறை காபிக்காகப் போவார்களே தவிர, யாரும் தனியாகப் போய் நான் கேள்விப்பட்டதே இல்லை. கண்டிப்பாக அந்த நபரை ஒரு முறை நாங்கள் பார்க்க வேண்டும் என்று எங்கள் நிறுவனத்தில் கேட்டுள்ளோம் - என்றார்.
குறிப்பிட்ட அந்த நண்பர் எந்த ஒரு குழுவிலும் வேலை செய்யத் தகுதியே இல்லாதவர் - என்று கோபத்துடன் மற்றொரு நிபுணர் குறிப்பிட்டார். Team Building என்பது ஒரு கலை. காபி குடிக்கையில் திரைப்படம், கிரிக்கெட், சதுரங்கம் இப்படி சிலரும், நேற்று பார்த்த தொலைக்காட்சி சீரியல்கள் பற்றிப் பலரும் பேசுவார்கள். அப்படியே அவர்களுக்குள் நட்பு உண்டாகி, அது நிறுவனத்தின் வேலைத்திறனை அதிகரிக்கவும் உதவும்.
வேறு சிலர் எப்போதும் தங்கள் மேலாளர்களுடன் காபி (மற்றும் இதர பானங்களைக்) குடிக்கச் சென்று அவரது நம்பிக்கையைப் பெறும் வகையில் நடந்து கொள்வார்கள். அப்படியே அந்த மேலாளர் வேலையை விட்டுச் சென்றால், தன்னுடன் காபி குடித்தவர்களையும் அந்தப் புதிய நிறுவனத்திற்கே கூட்டிச் சென்றுவிடுவார் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட சம்பவமாகும். அதனால் எதிலும், யாருடனும் சேராத இந்த நண்பரை டிஸ்மிஸ் செய்தது சரியே என்று வாதிட்டார்.
இறுதியாக, டிஸ்மிஸ் செய்த அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது - அந்த நண்பர் இனிமேல் காபி கடையிலேயே இருந்தாலும் ஒரு நண்பரோடுதான் போவேன், தனியாகப் போகமாட்டேன் என்று எழுத்துபூர்வமாக ஒத்துக் கொண்டதால், அவரது டிஸ்மிஸ் திரும்பப் பெறப்பட்டது என்று தெரிவித்தனர்.
***
0 comments:
Post a Comment