Tuesday, July 9, 2013

அவன் ஓடிய ஓட்டம்.

அட்டகாசமான வானிலை. மெலிதான தூறல். மரங்களின் கீழ் சற்று அதிகமாக. சென்னையில் ஓடுவதற்கு இதைவிட ஒரு அருமையான நாள் இருக்கமுடியாது. இந்த சுபயோக சுபதினத்தில்தான் அவன் HM (Half Marathon - 21.1கிமீ) ஓட முடிவெடுத்தான்.

சென்ற வருட செப்டம்பரிலிருந்து அவன் ஒரு ஆறு மாரத்தான்களில் 10கிமீ ஓடியிருக்கிறான். அதற்கு முன்? பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சற்று தள்ளி நின்றால்கூட, ஓடி அதைப் பிடிக்க சோம்பல்பட்டு அடுத்த பேருந்துக்காக காத்திருப்பவன் அவன். ஏதோ ஒரு நம்பிக்கையில் முதல் முறை 10கிமீயில் பங்கேற்றுவிட்டு, அடுத்த 2 நாட்கள் ’சாய்ந்து சாய்ந்து’ அவன் ஊர்ந்தது ஒரு தனிக்கதை. அடுத்தடுத்த மாரத்தான்களில் பங்கேற்றானே தவிர, ஓடுவதற்கு ஒரு முறையான பயிற்சியோ, தொடர்ச்சியான உடற்பயிற்சியோ செய்தவனில்லை. காரணம். அதேதான். சோம்பல்.

இந்த நிலையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறத் துணிந்தான். பாதி-மாரத்தான். 21கிமீ தூரம். வேகம் இப்போதைக்கு முக்கியமில்லை. பாதி மாரத்தானை பாதியில் நிறுத்திவிடாமல் முழுவதுமாக ஓடி முடிக்க முடியுமா என்று பார்த்திட விழைந்தான். முதலில் தினந்தோறும் ஓட்டப்பயிற்சி. 20 நாட்களுக்கு தினமும் காலையில் ஐந்து கிமீ ஓடினான். (20ம் நாளில் 20x5=100கிமீ தூரத்தில் இருந்தானா என்று கேட்கக்கூடாது!). இதைத்தவிர நாளொன்றுக்கு 10கிமீ மிதிவண்டிப் பயணம். எதிலும் வேகம் கிடையாது. கால் வலிக்காமல், நடுவில் நிற்காமல்/நிறுத்தாமல் ஓட/மிதிக்க முடிகிறதா என்று பார்க்க மட்டுமே செய்தான்.

இப்படியாக ஏதோ செய்து, ‘நான் தயார்’ என்று தனக்குத்தானே அறிவித்துக் கொண்டான். இன்று ஜூலை 7. காலை 5 மணி. ஓடினான். ஓடினான். பெசண்ட் நகர் பீச்சிலிருந்து, மெரினா பீச்சைத் தாண்டி ஓடிக்கொண்டே இருந்தான். 21.1 கிமீ தூரத்தை 2 மணி 50 நிமிடங்களில் கடந்து முடித்தான். இன்னும் சற்று வேகமாக ஓடியிருக்கலாமோ என்று எண்ணினான். பரவாயில்லை. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிக் கொண்டான். இதில் அவன் கற்றுக் கொண்ட பாடங்கள் என்னவென்று ஒரு பட்டியலிட்டான்.

* முதல் 45 நிமிடங்கள் நிறுத்தாமல் / நடக்காமல் ஓடியதே அவனைப் பொருத்தவரை ஒரு சாதனைதான். DRHM தளத்தில் வெளியிட்ட முடிவுகளின்படி முதல் 6கிமீ தூரத்தை 42 நிமிடத்தில் கடந்திருக்கிறான். (கிமீ சராசரி 7 நிமி.). இதனை (நிறுத்தாமல் ஓடுவதை) இன்னும் சற்று நீட்டிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

* (17வது கிமீ வரை) கால் வலியும் இல்லை; மூச்சு வாங்கவும் இல்லை. ஆனாலும் ஏன் ஓடாமல் அடிக்கடி நடக்க ஆரம்பித்தான்? ஓடு என்று புத்தி சொன்னதை மனது கேட்கவில்லை. ஏன் என்ற காரணம் தேட ஆரம்பித்தான்.

* கூட ஓடுபவர்கள் திடீரென்று நிறுத்தி, நடக்க ஆரம்பித்தால் நமக்கும் அப்படி தோன்றுகிறதோ என்று எண்ணினான். அதில் உண்மையும் உண்டு.
* தொடர்ந்து ஓடி, பின்னர் கால்வலி வந்துவிடுமோ என்று எண்ணியும் ஓட்டத்தை மட்டுப்படுத்தியிருக்கலாம்.
* இதே போல் பல காரணங்கள். அனைத்திற்கும் ஒரே ஒரு மூல காரணம். அதுதான் மனம்.

கால்களை பழக்கப்படுத்துவதுடன், மனதையும் பழக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அது எப்படி செய்வது? ஆராய்ச்சிதான் செய்ய வேண்டும்.

அதுவரை செய்யவேண்டியவை என்ன? அடுத்த ஓட்டத்திற்கு இன்னும் 40+ நாட்கள் உள்ளன.

* தினமும் ஓடும் ஓட்டத்தை 5கிமீ’யிலிருந்து அதிகப்படுத்த வேண்டும்.
* உடற்பயிற்சி என்னென்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சி + அவற்றைச் செய்தல்
* உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றி ஆராய்ச்சி + அவற்றைப் பின்பற்றுதல்

அதன் பிறகு? கடவுள் விட்ட வழி.

இதுவரை + இனிமேலும் அவன் ஓடுவதற்கு ஊக்கமளித்து வரும் நண்பர்கள் குழுவிற்கும், அந்தக் குழுவின் தலைவராகிய @JMR_CHNக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்தக் கட்டுரையை முடிக்கிறான்.

நன்றி. வணக்கம்.

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP