Tuesday, January 27, 2009

ஒரு சதுரங்கப் போட்டியில் கடைசி நிமிடங்கள்...

தேசிய சதுரங்கப் போட்டியில் இன்று இறுதிப் போட்டி. ஆட்டம் ஆரம்பிச்சி இருபது நிமிஷம் ஆயாச்சு.

அங்கே கண்ணாடி போட்டுட்டு ஆடறாளே, அவதான் என் பொண்ணு. அவளுக்கு இப்போ பதினைந்து வயசுதான் ஆகுது. அஞ்சு வயசுலே சதுரங்க விளையாட்டை கத்துக்க ஆரம்பிச்சவ, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு ஏகப்பட்ட பரிசுகளை வாங்கியிருக்கா. அவ்ளோ பரிசுகளை அடுக்கி வைக்கவே எங்க வீட்லே இடமில்லை. எப்பவும் அவளுக்கு இந்த விளையாட்டை பற்றி சிந்தனைதான். அதனால் சரியா படிக்க மாட்டான்னு நினைச்சிக்காதீங்க. படிப்புலேயும் கெட்டிதான் அவ. எப்படியும் பத்தாவது ரேங்கிற்குள் வந்துடுவா. இந்த வெற்றி எல்லாத்துக்கும் அவளோட விடாமுயற்சிதான் காரணம்.

சரி. இந்த மேட்சுக்கு வருவோம்.

இந்த போட்டியின் தகுதிச்சுற்றுகள் எல்லாவற்றிலும் மிகச்சுலபமாக ஜெயித்துவிட்ட என் மகள், இறுதிப்போட்டியிலும் அப்படியே ஜெயித்து விடுவாள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு மிக அதிகமாகவே இருக்குது. கூடியிருக்கும் மக்கள் கூட்டம் மிக உன்னிப்பாக இந்த போட்டியை பாத்துக்கிட்டிருக்காங்க. எப்போதும் போலில்லாமல் இந்த தடவை தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால், இந்த போட்டியை இந்தியா முழுக்க லட்சக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.


கடந்த சில நிமிடங்களாக எதிராளியை 'செக்-மேட்' செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். எதிராளி எப்படியோ தப்பித்து விடுகிறார். சற்றும் மனம் தளராமல் இதோ... இதோ... மறுபடியும் 'செக்' வைக்கிறாள். இப்போ பாப்போம். ஆஹா.. ஆஹா... இது 'செக்-மேட்'டேதான். முடிந்தது. ஆட்டம் முடிந்து விட்டது. எதிராளி தோல்வியை ஒப்புக்கொண்டு என் மகளிடம் கை கொடுக்கிறார்.

என் மகள் ஜெயித்தே விட்டாள்.

நாங்கள் இருக்கையை விட்டு எழுந்து உற்சாகத்தில் கத்திக் கொண்டிருக்கிறோம். எனக்கு கண்கள் பனிக்கிறது. இதயம் கனக்கிறது.பக்கத்தில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் எனக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்கின்றனர். "டேய், ட்ரீட் எங்கேடா? என கேட்கின்றனர். அனைவரையும் பொறுமை காக்கச் சொல்லிவிட்டு நான் என் மகளிடம் ஓடிப்போக முயற்சி செய்கிறேன்.

பின்னாலிருந்து என் மனைவி, "ஏங்க பர்சை எடுத்து, காசு குடுங்க. இவங்க ட்ரீட் கேக்கறாங்க" என்கிறார். நானோ படபடப்பில் இருந்தேன் - "இப்போ என்னம்மா அவசரம், முதல்லே நம் பொண்ணைப் பாப்போம் வா" என்று அவளையும் இழுத்துப்போக முயற்சிக்கிறேன்.

என் அவசரத்தைப் புரிந்துகொள்ளாத அவளோ - "ஏங்க, பாக்கட்லேந்து பர்சை எடுத்து காசை கொடுங்க" - "ஏங்க, பாக்கட்லேந்து பர்சை எடுத்து காசை கொடுங்க" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். "காசை கொடுக்கலேன்னா இவ விடமாட்டா" என்று சொல்லிக் கொண்டே நானும் எடுத்துக் கொடுக்கிறேன்.

அப்போதுதான் கவனித்தேன் - "யார் இந்த பொண்ணு? இவ எப்படி திடீர்னு என் முன்னாடி வந்தா? ஏன் இவளும் என்கிட்டே காசு கேக்கறா?"

"சதுரங்கம் வாங்க வந்த கடையிலே, காசை எடுத்துக் கொடுத்துட்டு சட்டுபுட்டுன்னு வீட்டுக்குக் கிளம்பற வழியை பாக்காமே -- 'பே'ன்னு கடைக்காரி மூஞ்சியை பாத்துக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? -- பின்னாடி வரிசையில் நிக்கறவங்கல்லாம் கத்தறாங்க பாருங்க" - இது மறுபடியும் என் மனைவிதான்.

The End.

*****


பிகு - 1: வழக்கம்போல கனவு / பகல் கனவு மாதிரி கதையை முடிச்சதுக்கு மன்னிச்சிடுங்க.

பிகு - 2: இந்த வாரம்தான் கடைக்குப் போய் சதுரங்கம் வாங்கிட்டு வந்தோம். அதை சஹானாவுக்கு சொல்லிக் கொடுத்து பெரிய சாம்பியனாக்கணும்னு பேசிக்கொண்டோம். அதைத்தான் கதையா போட்டிருக்கேன்... ஹிஹி...

பிகு - 3: லேபிள்லே 'சொந்த கதை'ன்னு போட்டா கண்டுபிடிச்சிடுவீங்கன்னுதான், 'சிறுகதை'ன்னு போட்டிருக்கேன்!!!

Read more...

Monday, January 26, 2009

ஆல்பம் ஜோசியம் பாத்திருக்கீங்களா!!!


கல்யாணம் ஆனப்பிறகு முதல் வாரத்தில் (நிஜ) மாமியார் வீட்டுக்குப் போகும் மாப்பிள்ளைகளுக்கு, சாப்பாடு ஆனப்பிறகு செய்ய வேண்டிய வேலை ஒன்று கண்டிப்பாக இருக்கும். அது என்னன்னா, ‘அந்த' குடும்பத்தாரின் பழைய புகைப்பட ஆல்பங்களை தரிசிப்பது.

குறைந்த பட்சம் ஒரு ஐந்து பேர் - எல்லோர் கையிலும் தலா 2 ஆல்பங்கள் சிறிதும், பெரிதுமாக - புது மாப்பிள்ளையை சுற்றி உக்காந்திருப்பாங்க. பக்கத்தில் புது மனைவி. வேறு வழியேயில்லை, தப்பிக்க முடியாதுன்ற பட்சத்தில், ஒவ்வொரு ஆல்பமா பாக்க ஆரம்பிப்பாரு மாப்பிள்ளை. Slumdog கணக்கா ஒவ்வொரு படத்துப் பின்னாடியும் ஒரு பெரிய்ய கதை சொல்லப்படும். எல்லா புகைப்படங்களையும் பாக்க பாக்க, எல்லாரோட வரலாறும் தெரியும். இப்படியே போயிட்டிருக்கும்போது, திடீர் திடீர்னு சில சோதனைகள் வரும். அது என்னன்னு பாப்போம்.

யாராவது ஒரு புகைப்படத்தை கொண்டு வந்து - “உங்க பொண்டாட்டி இதிலே எங்கே இருக்கான்னு கண்டுபிடிங்க பாப்போம்” அப்படின்னுவாங்க. அது நம்ம ஹீரோயின் ரெண்டாவதோ, மூணாவதோ படிக்கும்போது எடுத்த அரதப்பழசான புகைப்படமா இருக்கும். ஒரு 30-40 குழந்தைகள் ஒருத்தரை ஒருத்தர் இடித்துக்கொண்டு நாலு வரிசையில் நவரசங்களையும் காட்டிக்கிட்டு இருப்பாங்க. நடு நாயகமாக குண்டா ஒரு மிஸ் உட்காந்திருப்பாங்க. சாயங்காலம் ஆபீஸ்லேந்து வரும்போது மனைவிமார்கள் மேக்கப் போடாமே இருந்தாலே, வேறே யார் வீட்டுக்கோ வந்துட்டோம் போலிருக்குன்னு கணவன்மார்கள் திரும்பிப்போயிடற சான்ஸ் இருக்கற வேளையிலே - ச்சின்ன வயசு போட்டோவில் பொண்டாட்டியை எப்படி கண்டுபிடிக்கமுடியும்?.

“என்ன, தெரியலியா? க்ளூ குடுக்கட்டா”ன்னு அடுத்த கேள்வி வந்து விழும். வேறே வழியில்லாமே, சுமாரா இருக்கற ஏதாவது ஒரு குழந்தையை காட்டி, “இதுவா?”ன்னு கேட்டா, பக்கத்திலிருந்து இடுப்பில் ஒரு குத்து விழும். அதுக்குப் பிறகு இன்னொரு குழந்தையை காட்டி, “இதுவா?” - மறுபடி ஒரு குத்து. இப்படியே, வகுப்பில் இருக்கும் 40 பேர்களில் அதிக பட்சம் 19 வாய்ப்புகள் (40ல் 20 சிறுவர்கள்) பயன்படுத்தி தம் பொண்டாட்டியை கண்டுபிடிச்சுடுவாரு மாப்பிள்ளை. உடனே எல்லோரும் “ஏஏஏய்.. மாப்பிள்ளை சரியா சொல்லிட்டாருப்பா... பரவாயில்லையே... சரியான ஆள்தான் நமக்கு கிடைச்சிருக்காரு”ன்னு குதிப்பாங்க. பக்கத்திலேந்து செல்லமா ஒரு கிள்ளு கிடைக்கும்.

அடுத்த புகைப்படம் வரும் - நம்ம ஹீரோயின் பள்ளியில் ஏதாவது ஒரு மாறுவேடப் போட்டியில் கலந்துகொண்டு - ஔவையார், குறத்தி இப்படி ஏதாவது ஒரு வேஷம் போட்டபோது எடுத்த படமாயிருக்கும். மாப்பிள்ளையிடம் அவரோட மாமியார் சொல்வாங்க - “மாப்ளே, இது யாருன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்...”. அந்த படத்தை பாத்தவுடன் தன் பொண்டாட்டிதான்னு தெரிஞ்சாலும் - இவளுக்கு குறத்தியா வேஷம் போடத்தேவையேயில்லே, அப்படியே போய் நின்னிருந்தாலும், முதல் பரிசு கொடுத்திருப்பாங்கன்னு நினைச்சாலும் - கொஞ்ச நேரத்துக்கு யாருன்னு தெரியாத மாதிரி முழிப்பாரு.


”என்னங்க, இப்படி முழிக்கிறீங்க? என் பொண்ணுதான் இது. எவ்ளோ அழகா இருக்கா பாருங்க” அப்படின்னு - காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்ற கணக்கா அம்மா தம் பொண்ணை மெச்சிக்குவாங்க. நம்ம ஹீரோ கடுப்பா உக்காந்திருப்பாரு. மாமியார் வீட்லே போய் கடுப்பை காட்ட முடியுமா... ”ஆமாமா. அப்போ அவ அழகாத்தான் இருந்தா”ன்னு ஒரு ஜோக்(!!) அடிச்சவுடனே, மறுபடி பக்கத்திலிருந்து ஒரு கிள்ளு கிடைக்கும்.


இந்த மாதிரி சில பழைய புகைப்படங்கள் ஆனப்பிறகு, நம் மாப்பிள்ளையோட சொந்த கல்யாண ஆல்பம் பிரிக்கப்படும். ”இவரு உங்ககிட்டே வேலை கேட்டாரே?” - “இவரோட பையந்தான் அமெரிக்காலே பெரிய வேலையில் இருக்காரு. உங்ககிட்டேகூட பயோடேட்டா கேட்டாரே?” - ”இவங்கதான் கல்யாண வேலைகள ரொம்ப உதவியாயிருந்தாரு” - அப்படின்னு ஏகப்பட்ட பேர் மறுபடி மாப்பிள்ளைக்கு நினைவூட்டப் படுவார்கள்.

இப்படியே ஒரு அரை நாள் கழிந்தபிறகு, மறுபடி அந்த எல்லா ஆல்பங்களும் கவனமாக பேக் செய்யப்பட்டு - அந்த வீட்டுக்கு அடுத்த மாப்பிள்ளை வரும்வரை - கண்காணாத ஒரு பெட்டியில் வைத்து பூட்டப்படும்.

Read more...

Sunday, January 25, 2009

படுக்கை நேரத்துக் கதைகள்...



தினமும் படுக்கும்போது சஹானாவுக்கு ஏதாவது ஒரு கதை சொன்னாத்தான் தூக்கமே வருது. ஆரம்பத்துலே புத்தகத்தை வைத்துக் கதை சொல்லிக் கொண்டிருந்தோம். கொஞ்ச நாள்
ஆனப்பிறகு பல கதைகள் 'ரிப்பீட்டே...' ஆகிக்கொண்டிருந்தது. இப்பல்லாம் நமக்கு பயங்கர டயர்டா இருக்கும்போது, ஏதாவது ஒரு மொக்கைக் கதை சொல்லி ‘குட் நைட்'
சொல்லிடுவேன்.

தினமும் இந்த மாதிரி சொல்றதில்லீங்க.... வாரத்தில் ஏழு நாட்கள் மட்டும்தான்.

அப்படி நான் சொன்ன மொக்கைக் கதைகளில் சில இங்கே.

1. ஒரு ஊர்லே டாம் அண்ட் ஜெர்ரி இருந்துச்சாம். அதோட கதை முடிஞ்சி போச்சாம். The end.

2. டாமும் ஜெர்ரியும் சண்டை போட்டுட்டிருந்தாங்க. ஓடினாங்க. ஆடினாங்க. சறுக்கினாங்க. விழுந்தாங்க. கடைசியில் ரெண்டு பேரும் நண்பர்களாயிட்டாங்க. அவ்ளோதான் கதை. The
end.

3. ஒரு ஊர்லே... யாருமே இல்லியாம். அதனால் கதையும் இல்லையாம். The end.

4. ஒரு ஊர்லே எல்லோரும் தூங்கிக்கிட்டிருந்தாங்களாம்.... இப்போ கதை சொன்னா எல்லோரும் எழுந்துடுவாங்க. அதனால் நாளைக்கு சொல்றேன். அவ்ளோதான். The end.

5. ஒரு ஊர்லே சஹானா சஹானான்னு ஒரு பொண்ணு இருந்தாளாம். அவளோட கதைதான் உனக்கு தெரியுமே... அவ்ளோதான்... The end.

6. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா... என்ன ஆச்சுன்னா... ஒண்ணுமே ஆகலியாம். அவ்ளோதான் கதை... The end.

7. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா... ரெண்டு நாள் என்ன ஆச்சுன்னா... மூணு நாள் என்ன ஆச்சுன்னா.... பத்து... The end.

8. ஒரு ஊர்லே ஒரு பாப்பா இருந்துச்சாம். அவ பேரு சஹானா. அவளுக்கு அவங்கப்பா தினமும் கதைகள் சொல்வாராம். ஒரு நாள் என்ன கதை சொன்னாருன்னா... ஒரு ஊர்லே ஒரு
பாப்பா இருந்துச்சாம்... (தொடரும்...) The end.

9. ஒரு ஊர்லே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சிங்கம் இருந்ததாம். அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம். அவ்ளோதான். The end.

10. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா... என்ன ஆச்சுன்னா.. என்ன ஆச்சுன்னா.. என்ன ஆச்சுன்னா... (10-15 தடவை)... The end.

இந்த கதைகளில் எந்த கதை பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க..

இதே மாதிரி இன்னும் என்னென்ன கதைகள் சொல்லலாம்னும் ஐடியா கொடுங்க...


Read more...

Thursday, January 22, 2009

நொறுக்ஸ் - வியாழன் - 1/22/2009


போன மாதம் இந்தியாவில் ஒரு நண்பரிடம் 'பூச்சாண்டியை'ப் பற்றி சொன்னேன். ஒரு ரெண்டு நாள் படிச்சிட்டு யாஹூவில் வந்து கேட்டார் - "பதிவெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. இது உன் வொய்ஃப் எழுதறதுதானே?". அடங்கொய்யா.... ஏன்யா நான் இதெல்லாம் எழுத மாட்டேனா என்றால், மறுபடி "எல்லாமே நல்லா இருக்கே. அதனால கேட்டேன்." என்றார். நல்ல புகழ் பெற்ற கவிஞரையே சந்தேகப்பட்ட இந்த சமூகம் என்னையும் இப்படி கேட்பதில் தவறு
ஒன்றுமில்லைதான்... அவ்வ்வ்...


*****


இந்த ஊருக்கு வந்த புதிதில், சஹானா யூட்யூபில் குச் குச் ஹோதா ஹை (இந்தி) பாடல்களை விரும்பி பார்ப்பார். அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் ஷாருக்கான். ஒரு தடவை வீட்டுக்கு வந்திருந்த நண்பரின் மனைவியிடம், "எங்கப்பா ஷாருக்கான் மாதிரியே இருக்காரு" அப்படின்னு சொல்லப்போக, அவங்க ரொம்ப டென்ஷனாயிட்டாங்க. "ஏங்க, ஷாருக்கான் யாருன்னு உங்க பொண்ணுகிட்டே தெளிவா காட்டினீங்களா? இல்லே வையாபுரி காமெடியை காட்டி இதுதான் ஷாருக்கான்னுட்டீங்களான்னு" ரொம்ப நேரம் கேட்டுட்டிருந்தாங்க. குழந்தை சொன்னா உண்மையாத்தான் இருக்கும்னு மக்களுக்கு யாராவது சொல்லுங்கப்பா!!!


*****


ஒரு நாள் மல்லாக்கப் படுத்துக்கிட்டு விட்டத்தை பாத்திட்டிருக்கும்போது இப்படி சொன்னேன் - "கடவுள், எல்லாருக்கும் விரலை வளர்த்துவிடாமே நல்லவேளை நகத்தை மட்டும் வளர்க்கறான்; தலையை பெரிதாக்காமே நல்லவேளை முடியை மட்டும் பெரிதாக்கறான்; பறக்க விட்டா இடிச்சிக்கிட்டு கீழே விழுந்துடுவாங்கன்னு பயந்துதான் மனிதனை பறக்க விடாமே நடக்க மட்டும் விட்டிருக்கான். காட் இஸ் க்ரேட்".


உடனே தங்ஸும், சஹானாவும் டைரியை எடுத்து - ஊருக்குப் போனா போக வேண்டிய இடங்கள் லிஸ்ட்லே - கீழ்த்திருப்பதியை அடிச்சிட்டு அதுக்குப்பதிலா கீழ்ப்பாக்கம்னு எழுதிட்டாங்க.


*****


இந்தியாலே இருந்து அமெரிக்க கம்பெனிகளுக்கு வேலை பாக்கற மக்கள் சாயங்காலம்/இரவுன்னு வேலை செய்யும்போது, அமெரிக்காலே இருக்கற நாங்க விடிகாலையில் எழுந்து வேலை பாக்கவேண்டியதாயிருக்கு. வழக்கமா 6.30 மணிக்கு
ஆரம்பிக்கிற வேலை, இந்த வாரம் 5 மணிக்கே ஆரம்பிச்சிடுச்சு. அதனால், கடந்த 2 நாளா நண்பர்களோட எந்த பதிவையும் படிக்க முடியல. சனிக்கிழமைதான் எல்லாத்தையும் படிச்சி பின்னூட்டம் போடணும்.


அதோட, அடிச்சி வெச்சிருக்கிற பெரிய பதிவுகள் எதையும் முடிக்க முடியாமே போனதாலும், வலைப்பூ ஈ ஓட்டக்கூடாதேயென்றும் இந்த ச்சின்னப் பதிவு... ஹிஹி...


*****

Read more...

Wednesday, January 21, 2009

30 வகை சாம்பார், ரசம் மற்றும் போராட்டம்...!!!

சென்ற வாரம் இணையத்தில் 30 வகை சாம்பார், ரசம், சப்பாத்தி இன்னும் பலவற்றைப் பார்த்தேன். (ஹிஹி. எதெல்லாம் செய்யலாம்றதுக்கு இல்லே... எதெல்லாம் சாப்பிடலாம்னு ஒரு ஐடியாக்குதான்!!!).

இதே மாதிரி 30 வகை போராட்டம்னு இருந்து, ஒரு நாளைக்கு ஒரு போராட்டம் வீதம் மாசம் முழுக்க என்னென்ன போராட்டம் செய்யலாம்னு ஒரு பட்டியல் போட்டேன். அந்த பட்டியல்தான் இது.

1. கோடிக்கணக்கில் தந்தி அனுப்பும் போராட்டம்

2. கோடிக்கணக்கில் போஸ்ட் கார்ட் அனுப்பும் போராட்டம்

3. கோடிக்கணக்கில் உள்ளூர் தபால் (இன்லாண்ட் லெட்டர்) அனுப்பும் போராட்டம்

4. தொலைபேசியில் பேசி போராட்டம்

5. ஈமெயில் அனுப்பும் போராட்டம்

6. குளிக்காமல் போராட்டம்

7. பச்சைத் தண்ணீர் குளிப்பு போராட்டம்

8. வென்னீர் குளிப்பு போராட்டம்

9. தீக்குளிப்பு போராட்டம்

10. தொலைக்காட்சி பார்க்கும் போராட்டம்

11. தொலைக்காட்சி பார்க்காமல் போராட்டம்

12. திரைப்படம் பார்க்கும் போராட்டம்

13. திரைப்படம் பார்க்காமல் போராட்டம்

14. நடைப்பயிற்சி போராட்டம்

15. மிதிவண்டி ஊர்வலம்

16. பைக் ஊர்வலம்

17. மாட்டு வண்டி ஊர்வலம்

18. மகிழூந்து ஊர்வலம்

19. மூவுருளி ஊர்வலம்

20. சிறைச்சாலை நிரப்பும் போராட்டம்

21. பேருந்து நிரப்பும் போராட்டம்

22. புகைவண்டி நிரப்பும் போராட்டம்

23. விளக்கு எரிக்கும் போராட்டம்

24. விளக்கு அணைக்கும் போராட்டம்

25. சாகும்வரை தண்ணீர் குடிக்கா விரதம்

26. சாகும்வரை காபி/டீ குடிக்கா விரதம்

27. சாகும்வரை உணவு உண்ணா விரதம்

இப்போ ஒரு கேள்வி:

30 நாட்களுக்குண்டான போராட்டம்னு சொல்லிட்டு 27தான் சொல்லியிருக்கேன். அது ஏன்னு சொல்லுங்க. கண்டிப்பா யாராவது பதில் சொல்லிடுவீங்க(!!), இல்லேன்னா நாளைக்கு காலையில் எழுந்து நான் பதில் போடறேன்...


இது பிப்ரவரி மாததுக்கான போராட்டப் பட்டியல், விடுமுறை நாட்களில் போராட்டம் கிடையாது - இதெல்லாம் சரியான பதில் இல்லை(!!!!!!).


கேள்விக்கான பதில்:
27ம் நாள் செய்யும் 'சாகும்வரை உணவு உண்ணா போராட்டம்' நாலு நாள் வரை போகும். அதாவது 27,28,29,30 நாட்கள். இதில் பிஸியாக இருப்பதால், வேறு எந்த போராட்டமும் செய்ய முடியாது.

சரியா சொன்னவங்களுக்கு 1000 பின்னூட்டம் போடலாம்னு பாத்தேன். ஆனா யாருமே சரியா சொல்லலே.. அப்பாடா...!!!

Read more...

Tuesday, January 20, 2009

இந்தியா அமெரிக்காவுக்கிடையே வேறுபாடு!!! (அரசியல் பதிவு அல்ல...)

தலைப்பைப் பாத்து ஏதாவது காரசாரமான அரசியல் பதிவுன்னு நினைச்சி வந்திருந்தீங்கன்னா, என்னெ மன்னிச்சிடுங்க. இது வெறும் தமாசான பதிவுதான். படிச்சிட்டு சிரிச்சிட்டு போங்க...

சில நாட்களுக்கு முன், இங்கிருக்கும் ஒரு அமெரிக்க நண்பருடன் இந்தியா - அமெரிக்காவுக்கிடையே பல விஷயங்களில் உள்ள வேறுபாடுகளைப் பற்றிய பேச்சு வந்தது. அந்த பல வேறுபாடுகளில், சிலவற்றை மட்டும் இங்கே பதிவில் சொல்லியிருக்கேன். அந்த நண்பனிடம் சொன்னது மட்டுமில்லாமல், சொல்ல நினைத்தது கூட இங்கே சொல்லியிருக்கேன். (அடேங்கப்பா.. எவ்வளவு 'சொ'!!!).


அ. நண்பன்: நாங்க சாலையின் வலது பக்கத்தில் வண்டி ஓட்டிக்கிட்டு போவோம்.
நான்: நாங்க இங்கிலாந்து அரசின் முறையை பின்பற்றுவதால், சாலையின் இடது பக்கத்தில் வண்டி ஓட்டிக்கிட்டு போவோம்.
சொல்ல நினைத்தது: எல்லாருமே இடது பக்கமா போனாலும், சில சமயம் போலீஸ்காரங்க இல்லேன்னா, வலது பக்கம் கூட போவோம்.

அ. நண்பன்: எங்க ஊர்லே அதிபருக்குத்தான் எல்லா அதிகாரமும்.
நான்: எங்க ஊர்லே அப்படியில்லே - ஜனாதிபதியைவிட பிரதமருக்குத்தான் அதிகாரம் அதிகம்.
சொல்ல நினைத்தது: எங்க ஊர்லேயும் 'உங்க' அதிபருக்குத்தான் எல்லா அதிகாரமும். அவருக்குப் பிறகு சோனியா காந்தி, பிரதமர் இவங்களுக்கெல்லாம் அடுத்துதான் 'எங்க' ஜனாதிபதிக்கு அதிகாரம்.


அ. நண்பன்: எங்க ஊர் குழாயிலே இடது பக்கம் சுத்தினா சுடு தண்ணீரும், வலது பக்கம் சுத்தினா ஜில் தண்ணீரும் வரும்.
நான்: நான் இதை கவனிச்சதில்லை. ஆனா கண்டிப்பா இதுக்கு எதிர்ப்பதமாத்தான் இருக்கும்னு தோணுது.
சொல்ல நினைத்தது: எங்க வீட்லேல்லாம் பயங்கர வெயில் அடிச்சா, குழாய்லே சுடு தண்ணீர் வரும். (ஏன்னா வீட்டு மேலே இருக்கற டாங்க் சூடாயிடும்). மழை பெஞ்சா அதே குழாய்லே ஜில் தண்ணீர் வரும். அவ்ளோதான். சிம்பிள் டெக்னாலஜி.

அ. நண்பன்: எங்க ஊர் டாய்லட்லே தண்ணீர் ஃப்ளஷ் செய்தா, அது கடிகாரத்தை தலைகீழா சுத்துற மாதிரி (anti-clockwise) சுத்தி ஃப்ளஷ் ஆகும்.
நான்: ஹாஹா. நீ சொல்றத பாத்தா எங்க ஊர்லே இப்படி இருக்காதுன்னு தோணுது.
சொல்ல நினைத்தது: ச்சீச்சீ. அதுக்குள்ளேல்லாம் நான் இன்னும் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கலே. அதனால் எனக்கு தெரியல....


அ. நண்பன்: எங்க ஊர்லே ஸ்விட்ச்சை கீழிருந்து மேலே தூக்கினால் விளக்கு எரியும்.
நான்: அட, அதுக்கு அப்படியே நேரெதிர் எங்க ஊரு. நாங்க கீழே அமுக்கினாத்தான் விளக்கு எரியும், மின்விசிறி சுத்தும்.
சொல்ல நினைத்தது: ஹிஹி. எங்க ஊர்லேல்லாம் (கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும்) ஸ்விட்ச் போட்டா மட்டும் உடனே விளக்கு எரியும்னு சொல்ல முடியாது. ஆற்காட்டார் மனசு வைக்கணும். அப்போதான் எல்லாமே...

அ. நண்பன்: இந்த எல்லா வித்தியாசமுமே இங்கிலாந்து அரசு இங்கேந்து (அமெரிக்காலேந்து) போனபிறகு, அவங்கள மாதிரி நாம இருக்கக்கூடாதுன்ற முடிவிலே செஞ்சது.
நான்: அது சரிப்பா. நாங்க இந்த மாதிரி எதிர்ப்பதமா செய்ய வேண்டிய அவசியமில்லை. இப்ப இருக்கற வழக்கங்களே நல்லாத்தான் இருக்கு.
சொல்ல நினைத்தது: ஏன்யா, எல்லாத்தையும் அவங்களுக்கு எதிர்ப்பதமா பண்ணனும்னு நினைச்சீங்களே, ஒண்ணே ஒண்ணு உங்களாலே மாத்த முடியலியே.. அவங்க சாப்பாட்டை வாயாலே சாப்பிட்டாங்க...


*****

பிகு - 1: கடைசி பாயிண்ட்லே நான் சொல்ல நினைச்சது - நீங்க 'மூக்கிலே' சாப்பிட வேண்டியதுதானேன்னுதாம்பா. யாராவது எதையாவது தப்புத்தப்பா நினைச்சீங்கன்னா, அதுக்கு நான் பொறுப்பில்லே. இப்பவே சொல்லிட்டேன்.

பிகு - 2: இதே மாதிரி இன்னும் பல வித்தியாசங்கள் இருக்கும். தெரிஞ்சவங்க சொல்லுங்க...


Read more...

Monday, January 19, 2009

ஒரு மீட்டிங்கில் நடந்ததும், நிஜம்ம்மா நடந்ததும்!!!

ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஒரு மீட்டிங். மேனேஜர் அவரது 5 சகாக்களுடன் ஒரு அறையில்.


மேனேஜர் : நான் சிறிது வேலை செய்து இந்த மென்பொருளின் டிசைனை உருவாக்கியிருக்கிறேன். இப்போ அதை உங்களுக்கு விளக்கறேன். ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலோ குறைகள் இருந்தாலோ, அதை தயங்காம சொல்லுங்க.


*****

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த அறையில் நடந்தது இது:

சுரேஷ்: கவனத்துடன் மேனேஜர் சொல்வதை கேட்கிறார். பரபரவென்று தன் மடிக்கணிணியில் ஏதோ டைப்புகிறார்.

மாலா: மேனேஜர் சொல்வதை அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொள்கிறார்.

ரமேஷ்: தன் கைப்பேசியை மேஜைக்கு அடியில் வைத்துக் கொண்டு அடிக்கடி அதில் ஏதோ தட்டுகிறார்.

கலா: பென்சிலால் தன் கன்னத்தில் தட்டியபடியே முழு மீட்டிங்கிலும் மேனேஜரையே கவனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஹிதேஷ்: ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவை ‘எக்ஸ்யூஸ் மீ' என்று சொல்லி அறைக்கு வெளியே போய் வருகிறார்.


*****


அந்த அரை மணி நேரத்தில் நிஜம்ம்மா நடந்தது இது:

சுரேஷ்: காலங்கார்த்தாலேந்து இணையத்தையே பாக்கலை. இவர் வேறே மீட்டிங்னு கூட்டிட்டு வந்துட்டாரு. இந்த மீட்டிங்கின் குறிப்புகள் எடுக்கறா மாதிரி மடிக்கணிணியில் தமிழ்மணத்தைப் பாப்போம். அங்கங்கே பின்னூட்டம் போட்டு வைப்போம். அப்பத்தான் காத்து வாங்கிட்டிருக்கிற நம்ம கடைக்கு யாராவது வருவாங்க.


மாலா: இன்னிக்கு சாயங்காலம் ஷாப்பிங் போகும்போது என்னென்ன வாங்கணும்னு ஒரு லிஸ்ட் எழுதுவோம். ரொம்ப நாளா ஒரு வெள்ளை சுடிதார் வாங்கணும்னு நினைச்சிட்டிருக்கேன். இன்னிக்கு எப்படியாவது வாங்கிடணும். இவருக்கு ஒரு கர்சீப் வாங்கி கொடுத்துடலாம்.


ரமேஷ்: இந்த டிசைன் எல்லாம் சரியாத்தான் இருக்கும். அதான் மத்தவங்க கேட்டுக்கிட்டிருக்காங்களே. நான் என் வேலையை பாக்கறேன். இந்த அரை மணி நேரத்திலே ஒரு பத்து மெசேஜாவது ட்விட்டர்லே போடணும். ட்விட்டர் கண்டுபிடிச்சவன் எங்கிருந்தாலும் வாழ்க!!!


கலா: நேத்து கரண்ட் கட் ஆனதால, எந்த சீரியலும் பாக்கவே முடியல. இந்த மீட்டிங் முடிஞ்சதும், தோழிக்கு தொலைபேசி எல்லா சீரியலிலும் என்ன நடந்ததுன்னு கேக்கணும். முக்கியமா கோலங்கள். பாவம் அந்த தேவயானி. ரொம்ப வருஷமா துன்பத்தையே அனுபவிச்சிட்டுருக்கா. அவளுக்கு சீக்கிரத்தில் ஒரு நல்ல காலம் பொறந்தா தெருக்கோடி பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கணும்.


ஹிதேஷ்: இந்த அபிஅப்பா எப்படி இப்படியெல்லாம் எழுதறாரு. ரூம் போட்டு யோசிப்பாரா. என்னாலே சிரிப்பை அடக்கவே முடியல. இப்பத்தான் வெளியே போய் சிரிச்சிட்டு வந்தேன். மறுபடி போனா மேனேஜர் என்ன நினைப்பாரோ? சரி. என்ன நினைச்சா எனக்கென்ன? ஒரு நிமிஷம் வெளியே போய் சிரிச்சிட்டு வந்துடறேன் - சார். எக்ஸ்யூஸ் மீ..


*****


மேனேஜர்: இவ்ளோதான் நான் சொல்ல வந்தது. இப்போ இந்த டிசைன் ஓகேவா, இல்லே ஏதாவது பிரச்சனை வருமான்னு சொல்லுங்க.

சுரேஷ்: இது ரொம்ப அற்புதமான டிசைன்.

மாலா: அரை மணி நேரம் போனதே தெரியல.

ரமேஷ்: நாங்க இவ்ளோ நேரம் உன்னிப்பா கவனிச்சி கேட்டதிலே, எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

கலா: நாம இந்த டிசைனை வெச்சே மென்பொருளை தொடருவோம்.

ஹிதேஷ்: இதை அப்படியே க்ளையண்டுக்கு அனுப்பிடலாம்.


*****


அவ்ளோதான் பதிவு. படிக்கற உங்க கம்பெனியில் நடக்கிற மீட்டிங், இது மாதிரியில்லாமெ வித்தியாசமா இருந்தா, அதை தயங்காமே பின்னூட்டத்தில் சொல்லுங்க...!!!

Read more...

Sunday, January 18, 2009

இரு விரல் கிருஷ்ணாராவ்!!!



Pla Pleass Pleasse Pleea Please mp movee move t the rew requu requess request ahw ahea ahead b4 bef befoo beforr before end of daa day todd todaa today.

மேலே இருப்பதை படிக்க முடியுதா. கடுப்பாயில்லே? எங்க மேனேஜர் திரு. இரு விரல் கிருஷ்ணாராவ் - அதாவது தன் இரண்டு விரலால் மட்டுமே தட்டச்சுபவர் - ஒரு ச்சின்ன வாக்கியத்தை இப்படி தப்பும் தவறுமா தட்டச்சும்போது - அவருடன் மீட்டிங்கில் உட்காந்திருக்கும் எனக்கு பொறுமை போய் பயங்கர கடுப்பாயிருக்கும். மெதுவாக அவரிடம் - உங்க வயர்லெஸ் கீபோர்டை குடுங்க, நான் வேணா தட்டச்சறேன்னு சொல்லிவிடுவேன். அவரும் சிரித்துக்கொண்டே கொடுத்துவிடுவார்.

****

அப்போல்லாம் பத்தாவது முடித்தவுடனே எல்லோரும் போய் சேருவது ஒரு தட்டச்சு பயிற்சிப்பள்ளியில்தான். அதே போல், என் தந்தையின் நண்பரின் இன்ஸ்டிட்யூடில் நானும் போய் சேர்ந்தேன். தட்டச்சு கற்பதற்காகவும் கற்பவர்களை பார்ப்பதற்காகவும், காலை 6-7 வகுப்பிற்கு, 5.45க்கே போய் 7.30 மணி மேல் திரும்ப வருவது பழக்கமாயிற்று. பேசிய நேரம் போக கொஞ்சம் ஆங்கில தட்டச்சும் கற்றதனால், லோயர், ஹையர், ஹை ஸ்பீடு என்று எல்லாவற்றிலும் தேறி, கடமுட கடமுடவென தட்டச்ச கற்றுக்கொண்டேன்.

அதே போல், வருடத்திற்கொருமுறை கோத்ரெஜ் நிறுவனம் நடத்தும் தட்டச்சுப் போட்டியில் கலந்துகொள்ள எங்கள் பயிற்சிப்பள்ளி சார்பாக சிலரை அனுப்பி வைப்பார்கள். அதில் இரண்டு தடவை நானும் போய் தட்டினேன். ஒரு பெரிய ஹாலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் தங்கள் மெஷினோடு டென்ஷனாய் உட்கார்ந்திருப்பார்கள். போட்டி துவங்கியவுடன் ஆயிரம்வாலா சரவெடி போல் அனைவரும் தட்டச்ச, அந்த ஏரியாவே பயங்கர சத்தத்துடன் அதகளப்படும். அந்த சத்தத்தை கண்டு பயப்படாது, ஒருசாய்ந்துவிடாமல் (நன்றி: நர்சிம்) கவனமாக ஒரு நிமிடத்தில் 90 வார்த்தைகள் தட்டச்சி, ஒரு சான்றிதழும் வாங்கினேன்.

****

சிறிது காலம் கழித்து வேலை தேடும் படலத்தை ஆரம்பித்திருந்தபோது, எங்காவது வேலை இருக்குன்னு தெரிந்தால் சொல்லுங்கன்னு அந்த பயிற்சிப்பள்ளியில் சொல்லியிருந்தேன். அப்படி அவர்கள் சொல்லி, ஒரு தடவை ஒரு பெரிய நிறுவனத்தில் தற்காலிக வேலை இருப்பதென சொல்லப்பட்டபோது நானும் இன்னொரு நண்பனும் அங்கே போய் சேர்ந்தோம். முதல் சம்பளம் ரூபாய் 650.

சரி நமக்குத்தான் வேஏஏகமாக தட்டச்ச தெரியுமே, வேலையில் சேர்ந்து ஜமாய்ச்சிப்புடலாம்னு நினைச்சி போனா, அங்கே தட்டச்சற வேலை கம்மியாகவும், மத்த குமாஸ்தா (தமிழில்?) வேலைகள் அதிகமாகவும் இருந்தது. எப்போதாவது தட்டச்சினாலும் வேகமால்லாம் அடிக்க தேவையில்லாமே இருந்தது. என்னடா இது, சிங்கத்தை இப்படி குகையிலே போட்டு அடிச்சி கொடுமை படுத்தறாங்களேன்னு நினைத்திருப்பேன்.

****

இப்போதெல்லாம், இரு விரல் கிருஷ்ணாராவ் என் இருக்கைக்குப் பக்கத்தில் வரும்போது மட்டும் கடகடவென ஏதாவது ஒரு மெயில் தட்டறா மாதிரி தட்டுவேன். சில சமயம் அந்த மெயில் எனக்கே அனுப்பிக்குவேன். (பின்னே, சம்மாந்தா சம்மந்தமில்லாமல் அடிச்சதை வேறே யாருக்காவது அனுப்ப முடியுமா?). அப்படி அவர் பக்கத்தில் இல்லாதபோது, பதிவுகளை படிப்பதற்கும், பின்னூட்டம் போடுவதற்கும் வேகமா தட்டச்ச தேவையில்லையே!!!

Read more...

Thursday, January 15, 2009

கணவன் மனைவி ஒரே அலுவலகத்தில் பணி புரிந்தால்!!!

கணவன் மனைவி இருவரும் ஒரே அலுவலகத்தில் - ஒரே குழுவில் பணி புரிந்தால் நல்லதா, கெட்டதா? கீழே படிங்க.


இங்கே சொல்லியிருக்கிறது எல்லாமே ரங்ஸும், தங்ஸும் மனசிலே நினைக்கறதுதான். அதனால் நீங்களும் இந்த பதிவை மனசிலேயே படிங்க. ஹிஹி...


ஏதாவது ஒரு பிரச்சினையில் ரங்கமணியை தலைவர் திட்டிவிட்டால்:


ரங்ஸ்: அடச்சே, இவ எதிரே என்னை ஏண்டா திட்டறே? இதை சொல்லி சொல்லியே இவ என் மானத்தை வாங்குவாளே? சரி வெளியே வராமெயா இருந்துடுவே. வெச்சுக்கறேன் உன்னை.
தங்ஸ்: நான் திட்டினா என்னை திரும்பி கத்துவீங்களே? இப்போ கத்துங்களேன் பாக்கலாம். உடனே வீட்டுக்கு அனுப்பிச்சிடுவான்.


புதுசா ஒரு பொண்ணு குழுவில் சேர்ந்தா:


ரங்ஸ்: இவ்ளோ நாளா இல்லாமே, இப்பத்தானா இந்த பொண்ணு இங்கே வந்து சேரணும்? தங்ஸ் எதிரே இவகிட்டே சிரிச்சே பேசமுடியலியே??
தங்ஸ்: பாப்போம் இன்னும் எவ்வளவுதான் வழியறாருன்னு. எல்லாத்துக்கும் சேத்து வெச்சி வீட்லே பாத்துக்கறேன்.


புதுசா ஒரு ஆண் குழுவில் சேர்ந்தா:


ரங்ஸ்: டேய் டேய். எந்த சந்தேகமாயிருந்தாலும் என்கிட்டேயே கேளுடா. அவகிட்டே போய் வழியாதே. அவ என் பொண்டாட்டி.
தங்ஸ்: வேலையே செய்யாமே நான் இந்த புது ஆளோட பேசறத பாத்துக்கிட்டே இருக்காரே. வீட்லே போய் என்ன திட்டு விழப்போகுதோ!!!


சாப்பிடும் நேரத்தில்:


ரங்ஸ்: இவ மட்டும் பக்கத்திலே இல்லேன்னா, இந்த சாப்பாட்டை யாருக்காவது தள்ளி விட்டுட்டு பக்கத்து உணவகத்துக்குப் போய் சாப்பிடலாம்னு பாத்தேன். அது முடியலியே.
தங்ஸ்: இவரே என் சாப்பாட்டை இவ்ளோ பிரியமா சாப்பிடும்போது, நான் சாப்பிடாமே இருக்க முடியுமா? பிடிக்கலேன்னாலும் சாப்பிட்டுத்தானே ஆகணும்?


ஆட்குறைப்பு நடைபெற்றால்:


ரங்ஸ்: ஐயா ஐயா. முதல்லே என்னை வேலையை விட்டு தூக்கிடுங்க. இவளோட தொல்லை தாங்க முடியல.
தங்ஸ்: ஐயா ஐயா. முதல்லே என்னை வேலையை விட்டு தூக்கிடுங்க. இவரோட தொல்லை தாங்க முடியல.



Read more...

Wednesday, January 14, 2009

கிபி 2030 - மதுரை மேற்கு - இடைத்தேர்தல்

பத்திரிக்கையில் வந்த தலைப்புச் செய்திகள்:

தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து பொதுத்துறை, தனியார்துறை மக்கள் - மதுரைக்கு மாற்றல் வேண்டி விண்ணப்பம்.


தமிழகத்திலிருந்து, குறிப்பாக மதுரையிலிருந்து டெபாசிட் வரவு அதிகரிப்பு - ஸ்விஸ் வங்கி அறிவிப்பு


இடைத்தேர்தலை முன்னிட்டு நார்வே தூதுக்குழு, ஐ.நா அமைதிப்படை மதுரை வருகை


மதுரை பேருந்து, ரயில் நிலையங்களில் அமைதி நிலவுகிறது. பயணத்திற்கு மக்கள் விமானங்களை பயன்படுத்துகின்றனர்.


இடைத்தேர்தலை முன்னிட்டு மதுரையில் துவக்கப்பட்ட ரிலையன்ஸ் டீக்கடைகளுக்கு நல்ல லாபம்.


வாடிக்கையாளர் நலனுக்காக புடவை, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடைகள் 24x7 திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.


நேற்று அமைதியாக நடைபெற்ற தேர்தலில் 110% வாக்குப்பதிவு.


ஜனநாயக முறைப்படி மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர் - வெற்றி பெற்ற வேட்பாளர் மகிழ்ச்சி


மதுரை கிழக்கில் ஒரு யாகம்

மதுரை கிழக்கில் அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஆயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். உள்ளூர் எம்.எல்.ஏ பூஜையில் பங்குபெற்று சிறப்புரையாற்றினார்.

அர்ச்சனை செய்யும்போது குருக்கள் எம்.எல்.ஏவிடம் "இந்த யாகத்தை எதுக்கு பண்றோமோ, அந்த நல்லது நடக்கணும்னு அம்மன்கிட்டே வேண்டிக்கோங்கோ. அம்மன் நல்லதே செய்வா" என்று கூறினார்.

"இந்த யாகத்தை பண்றதே உலக நலனுக்காகத்தான்" என்று எம்.எல்.ஏ சொல்லி முடிப்பதற்குள், கோயில் தர்மகர்த்தா அவரை இடைமறித்து "சாமி, இந்த யாகத்தை பண்றது நமக்கும் இடைத்தேர்தல் வரணும்றதுக்காகத்தான். நல்லா பூஜை பண்ணுங்க. சீக்கிரம் தேர்தல் வரட்டும்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Read more...

Tuesday, January 13, 2009

சஹானாவும் நானும் (அபியும் நானும் effect)



சில வருடங்களுக்கு முன், எங்க வீட்டுக்கு ஊர்லேந்து உறவினர் ஒருத்தர் வருவாரு. அப்போ அவரோட பொண்ணுக்கு 2-3 வயசிருக்கும். எப்பவும் தன் பொண்ணு புராணமே பாடிக்கொண்டிருப்பார். அவ இப்படி பண்றா, அப்படி பேசறா, அவளுக்கு எங்க வீட்டு தொலைபேசி எண் தெரியும், ரைம்ஸ் சொல்றா - இப்படி. நாங்கல்லாம் (நான், என் சகோதரன்) வந்துட்டான்யா வந்துட்டான்யா - இப்போ அந்த பொண்ணோட லேட்டஸ்ட் கதையை சொல்வாரு பாருன்னு கலாட்டால்லாம் செய்திருக்கிறோம்.


இப்போ காலச்சக்கரம் சுத்தி 2009க்கு வந்துடுச்சு.


கடந்த காலத்துலே நான் மத்தவங்களை கலாய்ச்சதால், கொஞ்சம் கவனமா இருக்கலாம் - சஹானாவைப் பற்றி யார்கிட்டேயும் ப்ளேட் போடக்கூடாது என்று நினைத்தாலும், பேச்சு எங்கெங்கோ சுற்றி சஹானாவில் வந்து முடிந்துவிடும். இங்கே ஊரில் தனியாக இருப்பதும் ஒரு காரணம். இந்தியாவில் யார் வீட்டுக்கு தொலைபேசினாலும் - சஹானா என்ன பண்றா, புதுசா என்ன பேசறான்னு கேட்பதால், நாங்களும் சொல்றதுக்கு ஒரு லிஸ்டே நினைவில் வைத்திருப்போம்.


இங்கே கட் பண்றோம். அடுத்த சீன்.


இந்த ஊருக்கு வந்து முதல் ஒன்றரை வருடங்களுக்கு ஒரு நாள் கூட மட்டமே போடாத நிலையில் ஒரு தடவை போய் எங்க தலயிடம் கேட்டேன் - “ரெண்டு நாள் லீவ் வேணும்”. அவர் - “தாராளமா எடுத்துக்கப்பா. எங்கேயாவது வெகேஷன் போறியா?”. நான் - “இல்லே. இங்கேயேதான் இருப்பேன்”. அவர் - “எதுக்கு லீவ்”. நான் - “சஹானா முதல் தடவையா ஸ்கூலுக்குப் போறா. எனக்கு பயமா இருக்கு”.



வீட்லே பேசறது ஆங்கிலம் இல்லேன்ங்கறதால், முதல் தடவையா பள்ளிக்குப் போய் இவ ஒழுங்கா பேசணுமே. பேசலேன்னாக்கூட பரவாயில்லை. ‘மத்த' விஷயங்களுக்கு வாய் விட்டு மிஸ்ஸை கேட்டு, அவங்களுக்குப் புரிஞ்சு இவளை ஓய்வறைக்கு கூட்டிப் போகணுமே, அப்படி போகறதுக்குள்ளே ஏதாவது விபத்து ஆயிட்டா கஷ்டமாச்சே - இப்படியெல்லாம் எங்க கவலை.


மேனேஜரும் வாய் விட்டு சிரிச்சி, சரி சரி, லீவ் போடு என்று அனுமதி கொடுக்க, நாங்க தம்பதி சமேதராய் பள்ளிக்குப் போய் - சஹானாக்கு சில அறிவுரைகள், மிஸ்ஸுக்கு சில வார்த்தைகள்னு எல்லாம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து டென்ஷனாய் உட்கார்ந்திருந்தோம். ஊருக்கெல்லாம் தொலைபேசி - இவ ஸ்கூலுக்குப் போயிட்டா, நாந்தான் ஆபீஸ் மட்டம் போட்டுட்டு வீட்லே உக்காந்திருக்கேன்னு சொன்னேன்.



அவ்ளோ டென்ஷனா நாங்க இருந்தாலும், இவ ஸ்கூல்லேந்து வந்து ‘Kristen is my best buddy', 'Danish is my best friend' அப்படின்னு சொன்னா. நானும் ரெண்டு நாளுக்கப்புறம் ஒழுங்கா ஆபீஸ் போக ஆரம்பிச்சேன்.


மறுபடியும் கட் பண்றோம். அடுத்த சீன்.


அபியும் நானும் விமர்சனம் எழுதும்போது யாரோ ஒருத்தர் எழுதியிருந்தாரு - “முன்னே பின்னே தெரியாத யாரோ ஒருத்தர்கிட்டே பிரகாஷ்ராஜ் தன் கதையை இப்படி சொல்வாரா?”. வெளியூர்லே இருக்கறதால் எனக்கும் இதே மாதிரி ஆயிருக்கிறது.



தங்ஸ் ஜிம்முக்கு போய்விட நான் சஹானாவை பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு கூட்டிப்போவேன். கோடை காலத்துக்கு இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சில பெரிசுகள், பேச்சுத்துணைக்கு அமெரிக்காவில் ஆள் கிடைக்குமான்னு பார்த்துக் கொண்டே இருப்பதால், தயங்கித்தயங்கி பக்கத்தில் வந்து - நீங்க இந்தியாவா?ன்னு முதல் கொக்கி போடுவாங்க. அப்புறம் அந்த கொக்கியே பிரகாஷ்ராஜ் போடறா மாதிரி மொக்கையா மாறிடும்.


இப்போ கடைசி சீன்.


சஹானா கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டால், நாம தனியா என்ன பண்றது? - அப்படின்னு இந்த படம் பாக்கறதுக்கு முன்னாடியே நாங்க பேசிக்குவோம். அதுக்கான பதிலை இந்த படம் பாத்தபிறகு தங்கமணி சொன்னாங்க. - எங்கே வேணா வாக்கிங் போங்க - யாருக்கு வேணா மொக்கை போடுங்க. ஆனா மொக்கை போட்டுட்டு அவரை அங்கேயே விட்டுட்டு வந்துடுங்க. பிரகாஷ்ராஜ் மாதிரி தினமும் காபி சாப்பிட வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடாதீங்க.


பிகு: பாரம்பரியமிக்க தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏத்தபடி - பூச்சாண்டியில் இந்த 200வது பதிவை - சஹானாவுக்கு டெடிகேட் பண்றேன்... அவ்வ்வ்...

Read more...

Monday, January 12, 2009

தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா...!!!

உ.பாவின் (உற்சாக பானம்) மயக்கத்தால் ஜனகராஜ் திரும்பத் திரும்ப அதையே சொல்வதும், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தலைவர் டென்சனாவதும் அனைவரும் அறிந்ததே. படம் பேரு எனக்குத் தெரியல.


அப்படி உ.பா குடிப்பவரின் பக்கத்தில் உட்கார்ந்து பெப்ஸி, கோக் குடிக்கும்போதும், சைட் டிஷ் கொறிக்கும் போதும், நான் பட்ட அவஸ்தைகளை இந்த பதிவில் சொல்ல முற்பட்டிருக்கிறேன்.


ஒரு சமயம் நோய்டாவில் ஓட்டலில் மூன்று நண்பர்கள் தங்கியிருந்தோம். இரவு பதினோரு மணி. நண்பர்கள் வழக்கம்போல் உ.பாவில். பால்கனி விளக்கை யார்றா போட்டது? என்று கேட்டவாரே நண்பர் ஒருவர் போய் அதை அணைத்து விட்டு வந்தார். ஒரு ஐந்து நிமிடம் கழித்துதான் தெரிந்தது - முன்பு இருந்ததைவிட இப்போது வெளிச்சம் அதிகமாகி விட்டது என்று. நண்பர் புலம்பியவாறே மறுபடி போனார். விளக்கு எரிந்து கொண்டிருந்தது. "அட, இப்பத்தானே அணைச்சிட்டு போனேன்?"ன்னு மறுபடி அதை அணைத்து விட்டு வந்தபிறகுதான் எல்லோருக்கும் தெரிந்தது, முன்பு வெளிச்சம் வந்தது தெரு விளக்கிலிருந்து. எங்கள் அறைப்பக்கத்திலேயே ஒரு தெரு விளக்கு பளிச்சென்று எரிந்து கொன்டிருந்தது. ஸ்டடியா
இருக்கேன், ஸ்டடியா இருக்கேன்னு சொல்லிக்கிட்டு லைட் எங்கே எரியுதுன்னே தெரியலியேன்னு அவரை அடுத்த கொஞ்ச நாளைக்கு ஓட்டிக்கிட்டிருந்தோம்.



சென்னையில் ஒரு தடவை உ.பா கச்சேரி முடிந்தபிறகு சாப்பிட ஆயிரம் விளக்கு சரவண பவனுக்கு போயிருந்தோம். நண்பர் வழக்கம்போல் படு உற்சாகமாயிருந்தார். யாரையாவது கலாய்க்கணும் சத்யான்னு சொல்லிக் கொண்டே, அங்கு வேலை செய்யும் ஒரு நபரை அழைத்தார். கடையில் வைக்கப்பட்டிருந்த - திருமுருக. கிருபானந்த வாரியாரின் படத்தை காட்டி - இவரு யாரு? என்றார். அந்த நபரோ சீரியஸாக - அவர்தான் வாரியார் என்றார். நண்பர் - "இந்த கடை ஓனரா?". "இல்லை". "அப்போ ஏன் அவர் படத்தை இங்கே மாட்டி வெச்சிருக்கீங்க? அதை முதல்லே எடுங்க". அவ்ளோதான். அந்த நபருக்கு புரிந்து விட்டது - நம்ம ஆள் உ.பாவில் இருக்கிறாரென்று. "இங்கேயே இருங்க. ஒரு நிமிஷம் வர்றேன்"னு போய் அவர் மேனேஜரிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். மேனேஜர் வந்தால் நமக்கு டின்னுதாண்டின்னு சொல்லியும், உ.பாவின் ஆசியால் சிரித்துக் கொண்டே நின்ற நண்பரை நெட்டித் தள்ளி வெளியே கொண்டு வருவதற்குள், போதும் போதுமென்றாகிவிட்டது.



மற்றொரு சமயத்தில் தில்லியில் நண்பர்களுடன் (சுமார் 25 பேர்) தங்கியிருந்தபோது, சிறுசிறு குழுக்களாக பிரிந்து மக்கள் வாரயிறுதியை கொண்டாடுவார்கள்(!!!). அதில் ஒரு நண்பருடைய பழக்கம் என்னவென்றால், உ.பா அதிகமாகிவிட்டால் அவருக்கு உற்சாகம் பொங்கிவிடும். பக்கத்தில் இருப்பவர்களுக்கு 'உம்மா' கொடுக்க ஆரம்பித்துவிடுவார். இந்த பழக்கம் தெரிந்த மற்றவர்கள், நிலைமையை சரியாக கணித்து தப்பி ஓடிவிடுவர். புதிதாக கோஷ்டியில் வந்து
சேர்ந்திருக்கும் நபர் யாரையாவது - இவர் நல்லா ஜோக் சொல்வார், சிரித்துக் கொண்டே இருக்கலாம் - என்று சொல்லி, அந்த நண்பர் பக்கத்தில் உட்கார வைத்து விடுவோம். அப்புறமென்ன, சிறிது நேரம் கழித்து நண்பர் ஆரம்பிப்பார். "தம்பி, நீ ரொம்ப கொடுத்து வெச்சவன்". புதிதாக வந்தவர் கேட்பார் "என்ன விஷயம்?". உம்மா கொடுக்க பாய்ந்து கொண்டே இவர் சொல்வார் - "உனக்குதான் இன்னிக்கு நான் முதல்லே உம்மா கொடுக்கப்போறேன்". அடுத்த நாள் காலையில் உம்மா கொடுத்தவர் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டாலும், அடுத்த வாரயிறுதியில் மறுபடி உம்மா கதை தொடரும்.

Read more...

Wednesday, January 7, 2009

நொறுக்ஸ் - புதன் - 01/07/2008

ரங்கமணிகள் பொய் பேசறதுக்கு காரணமே தங்கமணிகள்தான். என்ன? ஆச்சரியமா இருக்கா?
பதில் கடைசியில்.

--------

பெங்களூரிலிருந்து ஒரு நண்பன் தொலைபேசியிருந்தான். அங்கே புதுசா ஒரு கோயில் கட்டப்படுவதாகவும் அதற்காக நான் ஏதாவது ஒரு தொகை கொடுக்கணும்னு சொன்னான். யாருக்காவது தனிப்பட்ட உதவின்னா சரி, கோயில் கட்டறதுக்கெல்லாம் பணம் கொடுக்கமாட்டேன்றது என் பாலிஸி. அதைத்தவிர, அவங்க தலைவரே - புதுசா கோயிலெல்லாம் கட்டாதீங்க. பூஜையெல்லாம் இல்லாமே ஏற்கனவே இருக்கற ஏதாவது ஒரு கோயிலை சரிபண்ணுங்கன்னு சொல்லியிருக்காரு. அப்படி சொன்னவரோட சிஷ்யரே அந்த புதுகோயிலை திறக்க வரப்போறாராம்.


இதெல்லாம் சொல்லி புரியவெக்கிற நிதானத்துலே அந்த நண்பன் இல்லாததால், சரின்னு ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பிவெச்சேன். அடுத்த நாள்லேந்து இன்னிய வரைக்கும் (ஒரு மாசத்துக்கு மேலாச்சு) அந்த 'நண்பன்' என்கிட்டே பேசவேயில்லை. இப்போ என் கேள்விகள்:

1. இந்தியாவிலே இப்பொல்லாம் ஆயிரம் ரூபாயை ஒரு பொருட்டாகவே மதிக்கறதில்லையா?
2. அமெரிக்காவிலே இருக்கறவந்தானே - கு.ப. ஒரு பெரிய அமௌண்டா கொடுப்பான்னு நண்பன் நினைச்சானா?
3. இனிமே அடுத்த கோயில் கட்டறவரைக்கும் என்கிட்டே அவன் பேசவே மாட்டானா?

இது எதுக்கும் எனக்கு பதில் தெரியல. காலம் பதில் சொல்லும்னு நானும் விட்டுட்டேன். நீங்க என்ன சொல்றீங்க?



-----------





'அபியும் நானும்' பட விளம்பரத்தை நான் இந்த வாரம்தான் பார்த்தேன். படத்தலைப்பை ஒரு குழந்தை எழுதியது போல் எழுதியிருந்தது. குழந்தை அபி எழுதினா - 'அப்பாவும் நானும்'னுதானே எழுதியிருக்கணும். அல்லது அபியோட அப்பா (அபிஅப்பா???) எழுதியிருந்தா, அவர் ஏன் குழந்தை மாதிரி எழுதினாரு? அவரோட ச்சின்ன வயசுலேயே எழுதிட்டாரா?

எனக்கு ஒண்ணுமே புரியல. தெரிஞ்சவங்க சொல்லுங்க.


-----------


இதே ஊரில் இருக்கும் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தோம். பேச்சுவாக்கில் நான் சொன்னேன் - "உனக்கென்னப்பா, இந்தியா பக்கத்துலேயே இருக்கறதாலே அப்பப்ப போயிட்டு வந்துடுவே. நாங்கதான் ரொம்ப தூரத்திலே இருக்கோம்"ன்னேன். நண்பன் ஜெர்க்காகி - "என்னது, இந்தியா எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கா? ஏம்பா, நானும் உன்னை மாதிரி அமெரிக்காவில்தானே இருக்கேன்" என்றான்.

நான் சொன்னேன். "உங்க வீட்லேந்து இந்தியா போற தூரத்தைவிட எங்க வீட்லேந்து போறதுக்கு - ரெண்டு மைல் அதிக தூரமாச்சே. அப்போ எங்களைவிட உங்க வீடு இந்தியாக்கு பக்கத்துலேதானே இருக்குன்னு சொல்லணும்".

அடுத்த அஞ்சு நிமிஷத்துக்கு என்கிட்டே யாருமே பேசலை.


----------


முதல்லே கேட்ட கேள்விக்கு பதில்:

தங்கமணிகள் கவனத்தைப் பெறுவதற்காகத்தான் ரங்கமணிகள் பொய் பேசறாங்க. என்ன நம்பமுடியலியா?

ரங்கமணிகள் தொடர்ச்சியாக பேசும்போது(!!!) வழக்கம்போல் தங்கமணிகள் தங்கள் கவனத்தை எங்கேயாவது வெச்சிருப்பாங்க. அப்போ டக்குன்னு நடுவிலே - நீ ரொம்ப நல்லவ, நீ ஒரு பத்து பவுன்லே செயின் வாங்கிக்கோ - அப்படி இப்படின்னு ஏதாவது ஒண்ணு சொல்லி, அவங்க திடுக்கிட்டுத் திரும்பி பாத்தாங்கன்னா, ரங்ஸ் பேசறதை கேக்கறாங்கன்னு அர்த்தம். இல்லேன்னா ரங்ஸ் தனியாத்தான் பேசிக்கிட்டிருக்காருன்னு அர்த்தம்.

என்னப்பா, யாராவது அனுபவத்தை சொல்லுங்க.

Read more...

Tuesday, January 6, 2009

மெக்ஸிகனுக்கு மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் தெரியுமா?

முடி வெட்டும் தொழில் செய்யும் தொடர்ந்தான் இல்லையேல், நமக்கெல்லாம் ஏது அழகு - அப்படின்னு தலைவர் பாடின பாட்டு எல்லாருக்கும் தெரியும். முடி வெட்டினா மட்டும் அழகு வந்துடும்னா, நானெல்லாம் இந்த நேரத்துக்கு எங்கேயோ போயிருக்கணும். சரி அதை விடுங்க. நான் முடி வெட்டிக்கிட்ட அனுபவத்தை இங்கே சொல்றேன். படிங்க. 'அதுவா' போச்சுன்னு பதிவை படிக்காமே நேரா கடைசி பத்திக்குப் போயிடாதீங்க(!!!).


இந்த ஊருக்கு (தற்காலிகமா) வந்த புதுசுலே - முதல் தடவையா முடிவெட்டிக் கொள்ள நண்பனுடன் போயிருந்தேன். நண்பன் ஒரு அட்டகாசமான முடிவெட்டும் நிலையத்திற்கு கூட்டிப்போனான். கேட்டால் 15 டாலர் என்றார்கள். புதுசா அமெரிக்கா வர்றவங்க எல்லாம் செய்யறா மாதிரி நானும் கணக்கு போட்டுப் பாத்தேன். 15 டாலர்னா, 15 X 45 = 675 ரூபாய். நம்ம ஊர்லே கிட்டத்தட்ட 15 தடவை முடிவெட்டிக்கலாமேன்னு யோசிச்சேன். கடையிலிருந்து
தப்பிச்சி வெளியே ஓடக்கூட முடியாது. ஏன்னா நமக்கு மானம் ரொம்ப முக்கியம். இப்படி பல்வேறு எண்ணங்கள் என் மனசிலே ஆறா பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தபோது, கூட இருந்த நண்பன் படாரென்று தன் முடிவை அறிவித்தான். "ஊருக்குப் போய் அடுத்த ஒரு வருஷத்துக்கு முடி வெட்டிக்கொள்ளவே மாட்டேன். ஏன்னா அவ்ளோ பணத்தை இந்த ஒரு தடவையிலேயே செலவழிச்சிட்டேன்".


அப்புறம் அடுத்த ரெண்டு மூணு வருஷத்துக்கு இந்த ஊர்தான்னு ஆனப்புறம் - இருக்கறதிலியே மலிவா யாரு வெட்டுவாங்கன்னு (தலைமுடியைத்தாங்க) கடைகடையா தேடினேன். பக்கத்தில் இருக்கறவங்க கடைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதிலே போக முடிவானபோது - அந்த கடையில் வெட்டறவங்க எல்லோரும் மெக்ஸிகோ நாட்டுக்காரங்கதான்னு தெரிஞ்சுது. மொதல்லே இவங்களுக்கு மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் தெரியுதான்னு பாத்துட்டு, தெரிஞ்சா அவங்ககிட்டே முடிவெட்டிக்கலாம்னு நினைச்சேன். ஆனா அவங்களுக்கு கண்டிப்பா தெரியாதுன்னு நானே முடிவு பண்ணிட்டேன். ஹிஹி..


சரி சரி விஷயத்துக்கு வர்றேன்.


காதலுக்கும் முடிவெட்டறதுக்கும் மொழி தேவையேயில்லைன்னு முடிவு செஞ்சி அந்த கடைக்கே போக ஆரம்பிச்சேன். அந்த கடையில் முடிவெட்ட மெக்ஸிகன் ஆணும் பெண்ணுமாக பத்து பேர் இருப்பார்கள். கசமுசகசமுசன்னு ஸ்பானிஷ்லே பேசிக்கிட்டே இருப்பாங்க.

பரிசுச்சீட்டில் ஒரு கோடி ரூபாய் விழுந்தவனை உடனே கூட்டிப்போய் ஒரு பின்னவீனத்துவ கூட்டத்தில் விட்டால் எப்படி இருக்கும்? இவனுக்கு பரிசு விஷயத்தை சொல்லணும் போல் ஆவலா இருக்கும் - ஆனா அவங்க இதை கேக்க மாட்டாங்க. அவங்க சுவாரசியமா பேசிக்கிட்டிருப்பாங்க. ஆனா இவனுக்கு ஒண்ணும் புரியாது.


ஒவ்வொரு தடவையும் கிட்டத்தட்ட இதே மன நிலையில்தான் நான் முடிவெட்டிக்கொள்ள உட்காந்திருப்பேன். எனக்கு வெட்டுபவர் தன் சகாக்களுடன் சிரித்து பேசிக்கொண்டே தன் வேலையை செய்வார். அவர்கள் பேசிக்கொள்வது என் தலையைப் பற்றியா, அது இருக்கும் வடிவத்தைப் பற்றியா அல்லது அதிலிருந்து வரும் பேன், பொடுகு இவற்றைப் பற்றியா - அல்லது நிஜமாகவே வேறு ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றியா என்று எதுவுமே தெரியாமல் - எப்படா முடிப்பாங்க, கிளம்பி போகலாம்னு உக்காந்திருப்பேன்.


ஒரு தடவை எனக்கு முடிவெட்ட புதுசா ஒரு பெண் வந்தார். சஹானாவோட கார்ட்டூன்கள் புண்ணியத்துலே, எனக்கும் ஸ்பானிஷ்லே துளியூண்டு வார்த்தைகள் தெரியும். அந்த தைரியத்துலே என்ன பண்ணேன்னா, 3ஆம் நம்பர் கத்திரி போடுன்றதுக்கு - ஸ்பானிஷ்லே த்ரேஸ் - அப்படின்னுட்டேன். உடனே அவர் எனக்கு ஸ்பானிஷ் தெரியும்னு நினைச்சி - கடகடன்னு பேச ஆரம்பிச்சிட்டார்.

அலுவலகத்தில் ஆங்கிலத்தில் யாராவது வேகமா பேசினாலே, நமக்கு சூப்பர் ஸ்டார்தான் கை கொடுப்பார். (யாயா, நோ நோ அப்படின்னு சொல்றதுக்கு). இதுலே ஸ்பானிஷ் வேறேயா... அவர் ஒரு ரெண்டு நிமிடம் தொடர்ந்து பேசினபிறகு, "ஐ ஆம் சாரி. நோ ஸ்பானிஷ். ஒன்லி இங்க்லிஷ்" அப்படின்னுட்டேன். இதுவே வேறே பொண்ணாக இருந்திருந்தா கோபத்திலே என் தலையை கோழி கொத்தறா மாதிரி கொத்தி விட்டிருப்பாங்க. பாவம் அந்த பொண்ணு மேற்கொண்டு எதுவும் சொல்லாமே - காரியத்துலே கண்ணா இருந்து வேலையை முடிச்சி என்னை வெளியே அனுப்பிச்சாங்க.

ஊருக்கு வந்த புதுசுலே, பொண்ணுங்ககிட்டே முடி வெட்டிக்க வெக்கப்பட்டு ஆம்பளைங்க கடையா தேடிப்போவோம். இப்ப அப்படியே உல்டாவாயிடுச்சு. ஆம்பள முடி வெட்டறவரு திடீர்னு ஃப்ரீயாயிட்டு, உக்காந்திருக்கற நம்மள கூப்பிட்டாக்கா - யாருமேயில்லாத கடையில டீ ஆத்தறா மாதிரி - சும்மா இருக்கற கைபேசியில் யார்கிட்டேயோ அவசரமா பேசறா மாதிரி பேசிட்டு - வரிசையில் இருக்கற அடுத்த ஆளை அனுப்பிடறதுதான். ஹிஹி...

Read more...

Monday, January 5, 2009

Template for நகைச்சுவை பதிவுகள்:

இது ஒரு டெம்ப்ளேட் பதிவு. கவுண்டமணி-செந்தில், பார்த்திபன்-வடிவேலு நகைச்சுவை பதிவுகள எப்படி எழுதலாம்னு யோசிச்சப்ப தோணிணதுதான் இது. படிச்சி பாத்து சரியா இருக்கான்னு சொல்லுங்க.

கவுண்டமணி - செந்தில்:

மொத்தல்லே உங்களுக்கு பதில் தெரியாத 10 கேள்விகளை தயார் செய்துக்கங்க. உதாரணத்துக்கு சில:
அ. சுரைக்காயிலே ஏண்ணே உப்பு இல்லே?

ஆ. நம்ம தலையிலே எண்ணை போடறோம், முடி வளருது. சைக்கிளுக்கும் எண்ணை போடறோம். ஆனா ஏண்ணே முடியே வளரல?
இ. வீட்லே தொலைக்காட்சியை அணைச்சேண்ணே (கட்டிப் பிடித்தல்) ஆனா அது ஆஃப் ஆகவேயில்லேண்ணே. ஏன்னே தெரியல?


மொத்த பதிவுலே அங்கங்கே செந்தில் கவுண்டரிடம் கேட்பது போல் இந்த சந்தேகங்களை செட் பண்ணிடணும். கவுண்டருடைய பதிலில் அவர் செந்திலை திட்டுவது எல்லாருக்கும் தெரிந்ததே. அதில் அந்த மண்டையா, இந்த மண்டையான்ற வார்த்தைகள் கண்டிப்பா இருக்கணும்.

வழக்கம்போல் பேரிக்கா, மாங்கா இப்படியில்லாமே வயர்லெஸ் மண்டையா, LCD தலையா அப்படி இப்படின்னு புதுசா புதுசா ஏதாவது எழுதணும்.

இவங்களோட பதிவை முடிக்கறதும் சுலபம்தான். ஏதாவது ஒரு கேள்வியில் கவுண்டர் கடுப்பாகி, செந்திலை துரத்திக்கொண்டே ஓடுவதாக பதிவை முடித்து விடலாம்.


வடிவேலு - பார்த்திபன்:


இந்த நகைச்சுவைக்கு தேவையானவை சொல்வழக்கில் உள்ள சில வார்த்தைகள் மட்டும். உதாரணத்திற்கு: கோக்குமாக்கு, எகணெமொகணெ, அமுக்கறாங்கிழங்கு இந்த மாதிரி. உங்களுக்கு தெரியலேன்னா நண்பர் பழமைபேசியிடம் தெரிந்து கொள்ளுங்க.


வடிவேலு பேசும்போது இந்த வார்த்தைகளை பயன்படுத்தி பார்த்திபனிடம் பேசுவதும், பார்த்திபன் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டு வடிவேலுவை 'அவ்வ்வ்' சொல்ல வைப்பதும் கண்டிப்பா செய்யணும்.


விவேக்:


விவேக்கை வைத்து நகைச்சுவை பதிவுகள் எழுதுவதற்கு கண்டிப்பா தேவையான ஒன்று - திரு.அப்துல் கலாம் ஐயா எழுதிய ஏதாவது ஒரு புத்தகம்.


விவேக் நகரத்திலிருந்து கிராமத்திற்கோ, வெளிநாட்டிலிருந்து சென்னைக்கோ வர்றா மாதிரி செட் பண்ணணும். புத்தகத்தில் நாம் படித்ததற்கு எதிராக ஏதாவது சம்பவங்கள் அந்த இடத்தில் நடைபெறுமாறு எழுதிவிட்டு, விவேக் அதை கலாம் ஐயா இப்படியா சொன்னாரு - அப்படின்னு கொஞ்ச நேரத்துக்கு பேசறா மாதிரி நீளமா வசனம் எழுதி தப்பு செய்யறவங்களை திருத்தணும்.


சந்தானம்:


சந்தானம் காமெடி செய்யறா மாதிரி எழுதறதுக்கு முன்னாடி ரெண்டுக்கு மூணு தடவை யோசிச்சுக்கோங்க. ஏன்னா, அதுக்கு டபிள் அல்லது ட்ரிபிள் மீனிங் வசனங்கள் நிறைய தெரிஞ்சிருக்கணும். அந்த மாதிரி நமக்கு நிறைய தெரிஞ்சிருந்தாலும்(!!), அதை பொதுவிலே ஒரு பதிவுலே சொல்றதுக்கு ரொம்ம்ம்ம்ப தைரியம் இருக்கணும். மத்தபடி நீங்க உங்க நண்பர்களை(!!!) திட்டறதையெல்லாம் அப்படியே சந்தானம் தன் கூட்டாளிகளை திட்டறா மாதிரியே பதிவு எழுதிடணும். அவ்வளவுதான்.

Read more...

Sunday, January 4, 2009

திருமண நாள் இனிப்பு...!!!

முன்னுரை:

இந்த கற்பனைக் கதையில் இரண்டு கதாபாத்திரங்கள். கணவன் மற்றும் மனைவி. எந்த வீட்லேயும் கணவன் பேச்சை யாருமே கேக்கறதில்லைன்றதாலே, இங்கேயும் கதை முழுவதும் மனைவி மட்டுமே பேசப்போறாங்க. நடு நடுவே புள்ளி வெச்ச இடத்திலெல்லாம் கணவன் ஏதோ ஒண்ணு சொல்றமாதிரி கற்பனை பண்ணிக்குங்க.


முக்கியமான டிஸ்கி:

இது என் சொந்தக்கதை இல்லை.

-----

காலை 10 மணி:
(ட்ரிங் ட்ரிங்) என்னங்க, நாந்தான் பேசறேன்

....

நீங்க எப்பவுமே பிஸிதான். ஒரு ரெண்டு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க.

...

நம்ம திருமண நாள் வருது. ஞாபகம் இருக்கா?

...

என்னது அடுத்த வாரமா? பக்கத்துலே இருந்திருந்தீங்கன்னா நடக்கறதே வேறே... என் தலயெழுத்து.. நல்லா கேளுங்க. நாளைக்குத்தான் நம்ம திருமண நாள்.

...

சரி சரி... மன்னிச்சிட்டேன். என்ன ஸ்வீட் பண்ணட்டும்னு சொல்லுங்க.....அப்புறம் அது செய்யலியா இது செய்யலியான்னு கேக்கக்கூடாது.

...

சரி இன்னும் கொஞ்ச நேரத்துலே ஒரு ஸ்வீட் செய்துட்டு உங்களை கூப்பிடறேன். பை....

மதியம் 1 மணி:
(ட்ரிங் ட்ரிங்) என்னங்க, நாந்தான் பேசறேன்.

...

நம்ம வீட்லே இருக்கே ஒரு சின்ன சுத்தியல், அது உடைஞ்சி போச்சு.

...

நான் என்ன பண்ணேன். நம்ம கல்யாண நாளுக்குத்தான் ஸ்வீட் செய்யலாமேன்னு மைசூர் பாக் செஞ்சேன். அது என்னடான்னா, கெட்ட்ட்டியா ஆயிடுச்சு. கத்தியாலே அதை துண்டு துண்டா வெட்டவே முடியல. அதனால், சுத்தியாலே ரெண்டு தட்டு தட்டினேன். அது பொடிப்பொடியா ஆயிடுச்சு. பலமா அடிச்சதுலே சுத்தியும் பிச்சிக்கிட்டு வந்துடுச்சு.

...

சரி சரி கத்தாதீங்க.

...

எனக்கு ஒண்ணும் ஆகலே. சரி விடுங்க. வேறே ஏதாவது ட்ரை பண்ணிட்டு மறுபடி கூப்பிடறேன்.

...

மதியம் 3 மணி:

(ட்ரிங் ட்ரிங்) என்னங்க, நாந்தான்.

...

ஒண்ணும் ஆகலே. தொணதொணங்காமே நான் சொல்றத கேளுங்க.

...

நம்ம வீட்லே ஒரு வாணலி இருக்குதில்லே. அத இனிமே பயன்படுத்த முடியாது.

...

யாரும் தூக்கிட்டெல்லாம் போகலே. நாந்தான் கோதுமை அல்வா பண்ணலாம்னு பாத்தேன். எல்லாம் உங்க திருமண நாளுக்குத்தான். அது வாணலியிலே ஒட்டிக்கிட்டே வரவே மாட்டேங்குது. நானும் என்னென்னவோ பண்ணி பாத்துட்டேன். ம்ஹூம். அல்வா வரவேயில்லே. அதனால், அல்வாவோட வாணலியை குப்பைத்தொட்டியில் போட்டுட்டேன்.

...

ரொம்ப சாரிங்க.

...

சரி. இன்னும் ஒரே ஒரு சான்ஸ்தான். ஈஸியா ஒண்ணு பண்ணப்போறேன். நீங்களே அசந்து போயிடுவீங்க பாருங்க. நான் மறுபடி கூப்பிடறேன்.

...

மாலை 5 மணி:
(ட்ரிங் ட்ரிங்) ஹலோ கேக்குதா.

...

நான் தோத்துட்டேன். எனக்கு ஒண்ணுமே செய்ய வரலை. அழுகை அழுகையா வருது.

...

ஒண்ணுமில்லே. ரொம்ப சிம்பிளா இருக்குமேன்னு குலோப் ஜாமூன் பண்ணேன். அதுவும் சரியாத்தான் வந்துக்கிட்டிருந்தது. ஆனா பாருங்க.

...

சொல்றத கேளுங்க. அது உருண்டையாவே இல்லே. பொடிப்பொடியா ஆயிடுச்சு. உங்களுக்கு பொடி குலோப் ஜாமூன் பிடிக்குமா?

...

சரி அது இருக்கட்டும். வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா கொடுத்துடலாம். நம்ம கல்யாண நாளுக்குத்தான் என்ன பண்றதுன்னே தெரியல. நீங்க எதுக்கும் வீட்டுக்கு வரும்போது சக்கரை வாங்கிட்டு வாங்க. எல்லா சக்கரையும் இன்னிக்கு ஒரே நாள்லே தீந்துடுச்சு.

...

அடுத்த நாள் காலை 7 மணி:

என்னங்க எழுந்திருங்க. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.

...

எங்கே வாய திறங்க பாப்போம். இந்த இனிப்பு சாப்பிடுங்க.

...

சக்கரை.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP