Friday, April 30, 2010

இமேஜ் டோட்டல் டேமேஜ் (இது தமிழ் தலைப்புதானே!)

நாலு மணிக்கு வீட்டிலிருந்து தொலைபேசி - "என்னங்க. சீக்கிரம் வீட்டுக்கு வாங்க".

மூணு மணியிலிருந்தே நான் பாஸ் எப்படா போவாரு (வீட்டுக்குதாங்க!), நாம எப்படா கிளம்பலாம்னு இருந்தேன். (பாஸ் - அவரோட பாஸ் எப்போ கிளம்புவார்னு ரெண்டு மணியிலிருந்தே காத்திருந்தார்ன்றது இங்கே தேவையில்லாத தகவல்). இந்த டென்சன்லே(!) வீட்டிலேந்து தொலைபேசி வந்துச்சா, டக்குன்னு பாஸுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிட்டு - என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு கிளம்பி வீட்டுக்கு வந்தேன்.

எப்பவும் வீட்டுலேந்து கிளம்பி ஆபீஸுக்கு போறதுக்கு பத்து நிமிடத்துக்கு மேலே ஆகுது.. ஆனா அதே ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்து சேர அஞ்சு நிமிடம் கூட ஆகமாட்டேங்குது. அது ஏன்னு தெரியல.

"என்னம்மா.. என்ன ஆச்சு? ஏன் என்னை அவசரமா ஆபீஸ்லேந்து வரச்சொன்னே? நான் கொஞ்ச நேரம் அங்கே இல்லேன்னா, அழகிரியை காணாத பாராளுமன்றம் மாதிரி எல்லாரும் கத்த ஆரம்பிச்சிடுவாங்க.
தெரியுமில்லே".

"உங்க மேனேஜரை தூக்கத்துலேந்து எழுப்பத்தானே உங்களை காசு கொடுத்து வெச்சிருக்காங்க. இதுக்கே இந்த பந்தா. ம்க்கும்".

"சரி சரி. அதை அப்புறம் பேசலாம். இப்ப என்ன பிரச்சினைன்னு சொல்லு".

"சஹானா, படம் பாக்கணும்னு சொல்றா".

"என்ன, சஹானா படம் பாக்கணும்னு சொல்றாளா? சுறா இன்னும் ரிலீஸே ஆகலியேம்மா? தமிழ்மணத்துலே நிறைய பேர் ச்சும்மா போட்ட விமர்சனத்தை பாத்து ஏமாந்துட்டியா? ஐய்யோ ஐய்யோ"..

"ஹலோ.. கொஞ்சம் (கையை தன் வாய் மேல் வைத்து மூடி சைகை காண்பிக்கிறார்). என்ன சொல்ல வந்தேன்னு கேட்டுட்டு பேசறீங்களா"?

"சரி. சாரி. சொல்லு. என்ன படம் பாக்கணுமாம்".

"அவளோட கார்ட்டூன் படம் ஏதோ பாக்கணுமாம்".

"பாக்கவேண்டியதுதானே? அதுக்கு ஏன் என்னை அவசரம் அவசரமா கூப்பிட்டே? நானும் ஏதோ புது சாமியார் மாட்டிக்கிட்டாரு - யூட்யூப்லே அவரோட படத்தை ரிலீஸ் பண்ணிட்டாங்க போலன்னு அரக்கபரக்க ஓடி
வந்தேன்".

"அதெல்லாம் ஒண்ணுமில்லே. டிவிடி ப்ளேயர்லே டிவிடி மாட்டிக்கிச்சாம். அதை கொஞ்சம் எடுத்துக் கொடுத்துட்டு எங்கேயாவது போங்க".

"அது சரி. டிவிடி ப்ளேயர்லே டிவிடி மாட்டிக்கிச்சு, துணி தோய்க்குற இயந்திரத்துலே துணி மாட்டிக்கிச்சுன்னு - இந்த மாதிரி ஏதாவது ஒரு சிச்சுவேஷன்லேதானே நான் ஒருத்தன் வீட்டுலே இருக்கேன்றதே
உங்களுக்கெல்லாம் நினைவுக்கு வரும். சரி. நகரு எடுக்கறேன்".

"சீக்கிரம் எடுங்க. இன்னும் அரை மணியில் அந்த டிவிடியை போய் நூலகத்தில் கொடுக்கலேன்னா, அஞ்சு ரூபா ஃபைன் கட்டணும்".

"இதோ பாரு. இந்த மாதிரி டென்சன் பண்ணினா எனக்கு வேலை ஓடாது. நிறுத்தி நிதானமா அலசி ஆராய்ஞ்சிதான் நான் எதையும் செய்வேன்".

" நி. நி. அ. ஆ செய்யறதுக்குள்ளே அங்கே பணத்தை அதிகமாக்கிட்டே போயிடுவான். உங்க பணம். உங்க இஷ்டம். எனக்கென்ன"?

"சரி சரி. கத்தாதே. இந்தா இருக்குற 20 ஸ்க்ரூவில் ஒரு அஞ்சு மட்டுமே கழட்டி, இந்த டிவிடியை எடுத்துட்டேன். மொதல்லே போய் கொடுத்துட்டு வாங்க. இனிமே இந்த டிவிடி வாங்கற வேலையெல்லாம் வேணாம்".

"ஓகே. எல்லா ஸ்க்ரூவையும் மறுபடி சரியா மாட்டிட்டீங்களா"?

"ஆயிடுச்சும்மா. ஆள விடு. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும்".

"எங்கே போறீங்க? ஒரு டிவிடிதானே எடுத்தீங்க. இன்னொண்ணை யாரு எடுப்பாங்க? மறுபடி எல்லா ஸ்க்ரூவையும் கழட்டுங்க".

என்னது? இன்னொண்ணா? அதுதாம்மா இதுன்னு சொன்னாலும் - உள்ளே இருந்தது ரெண்டு டிவிடிங்கறதால் - மறுபடி பத்து நிமிடம் செலவழிச்சி அந்த இன்னொரு டிவிடியையும் எடுத்தாச்சு.

*****

"ஏம்மா ஒரே சமயத்துலே ரெண்டு டிவிடியை உள்ளே போட்டே? அப்படி போட்டா படம் தெரியாதுன்னு உனக்கு தெரியாதா"?

"நீ ஒரே சமயத்துலே ஐபாட்லே பாட்டு கேட்டுண்டு, கம்ப்யூட்டர்லே படம் பாத்துண்டு, டிவியில் டிராமா பாக்குறமாதிரி, நானும் ஒரே சமயத்துலே ரெண்டு படம் பாக்கலாமேன்னுதான் டிவிடி ப்ளேயரில் ரெண்டு
படத்தை போட்டேன். இது தப்பா"?

அவ்வ்வ்வ்..

*****

Read more...

Monday, April 19, 2010

தங்கமணி தொலைக்காட்சியில் தோன்றினால்...!!!

இவர்: என் பொண்டாட்டியை தொலைக்காட்சியில் பாட அனுப்பப்போறேன்.
அவர்: ஏன். அவ்ளோ நல்லா பாடுவாங்களா?
இ: சீச்சீ. தொ.கா வை உடனே அணைச்சிடுவேன்ல.

சரி சரி. டென்சனாகாதீங்க. இது பழைய்ய்ய்ய்ய்ய ஜோக்தான். மேலே (கீழே!) படிங்க.

1. தங்ஸ் தொ.கா.யில் பேச ஆரம்பிச்சா, பீப் பீப்னு சத்தம் கேக்க ஆரம்பிச்சிடும். (எல்லாத்தையும் சென்சார் கட் பண்ணிடுவாங்கல்ல.!!).

2. சப்டைட்டில் போட்டாங்கன்னா, அதிலே எப்பவும் '$#$%% #$%% $$###'ன்னுதான் தெரியும். அப்படி என்னதான் பேசுவாங்கன்றது உங்க கற்பனைக்கே.

3. தொ.கா போட்டுட்டு நாம் ஓய்வறைக்கு போயிட்டாலும், தொ.கா நகர்ந்து நகர்ந்து ஓய்வறை கதவுகிட்டே வந்து கத்தும்.. ஐ அம் சாரி... பேசும்.

4. தொ.கா.வில் தோன்றி உங்களுக்கு என்ன பாட்டு போடணும், உங்களுக்கு என்ன நகைச்சுவை காட்சி போடணும்னு கேப்பாங்க. ஆனா, நாம என்ன சொன்னாலும் அதை போடாமே, அவங்களுக்கு பிடிச்சதையே போட்டுக்குவாங்க.

5. தொ.கா ரிமோட்டை அவங்களே எடுத்து வெச்சிக்குவாங்க. நம்மகிட்டே இருந்தா நாமதான் தொ.காவை அணைச்சிடுவோம்ல.

6. தொ.கா சத்தத்தை அதிகரிச்சா, அதிகரிக்கும். குறைச்சா இன்னும் அதிகரிக்கும்.

7. உங்க தொ.கா. வால்யூமை (அந்த ஸ்விட்ச் அவங்க பக்கத்துலேயே இருந்தாலும்) குறைச்சி வைங்கன்னு நம்மை சொல்வாங்க. அப்படியும் நாம கேக்கலேன்னா தொ.கா உள்ளேந்து கரண்டி அனுப்புவாங்க.

8. நிம்மதி எங்கள் சாய்ஸ்... பெப்ஸி எங்கள் சாய்ஸ்.. அப்படின்னு எல்லாமே அவங்க சாய்ஸ்லேயே நிகழ்ச்சிகளை அமைச்சிக்குவாங்க.

இப்படியெல்லாம் தங்கமணிகளைப் பத்தி கண்டபடி சொல்வேன்னு நீங்க எதிர்பார்த்தா... ஐ ஆம் சாரி... Dont put word in my mouths!!!

Read more...

Sunday, April 18, 2010

பார்வதியம்மாள், கல்கி பகவான் மற்றும் சாமியார் அனுபவம் ஒண்ணு!!!

ஒரு வயசான பாட்டியை மருத்துவம் பாக்க அனுமதி மறுத்து விமானத்தில் திருப்பி அனுப்பியாச்சு. வழக்கம்போல் தாத்தா இதைப் பத்தி பேசவே மாட்டாரு.

திமுக ஆதரவு பதிவர்கள் மத்திய அரசை திட்டியும் - காங்கிரஸ் ஆதரவு பதிவர்கள் மாநில அரசு/காவல் துறையை திட்டியும் - கூட்டணிக்கு ஆதரவு தரும் பதிவர்கள் இதைப் பத்தி எழுதாமலும் அல்லது இச்செயலுக்கு ஆதரவு தெரிவித்தும் பதிவு எழுதுங்கப்பா. எல்லாரும் நல்லாவே இருங்க!

*****

சென்ற வாரம் இந்தியா செல்வதற்காக JFK விமான நிலையத்தில் அமர்ந்து கமகமவென்று புளி/தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது - ஒருவர் வந்து பக்கத்தில் அமர்ந்தார் - நீங்க தமிழா? சென்னை போறீங்களா? நானும்தான் - அப்படின்னு ஆரம்பிச்சி வளவளன்னு பேச ஆரம்பித்தார். நான் அங்கே இருக்கேன் - என் பசங்க இங்கே இருக்காங்கன்னு சொல்லிக் கொண்டே போனவர் அடுத்து சொன்னதைக் கேட்டு - நான் தங்கமணியிடம் - கிளம்பு, அந்தப்பக்கம் போய் உக்காருவோம். இங்கே வேணாம்னு சொல்லி அடிச்சிக்கோ பிடிச்சிக்கோன்னு ஓடிப்போனோம்.

அப்படி அவர் என்ன சொன்னாரு?

”எங்களுக்கு எல்லாமே கல்கி பகவான்தான். என் பொண்டாட்டிக்கு எல்லாமே அம்மா பகவான்தான். நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? ரெண்டு பேரும் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க. நாங்க வருடாவருடம் அவங்களை பார்ப்பதற்காகவே இந்தியா போவோம். நீங்களும் வர்றீங்களா?”.

ங்கொய்யாலே. அந்த தெலுங்கு சேனல் வீடியோ பாத்தப்புறம் கூடவா இப்படி அலையறீங்கன்னு கேக்க ஆசை. அப்புறம் அவரு என் மனசையும் மாத்திட்டார்னா என்ன பண்றதுன்னு அந்த இடத்தை காலி செய்தோம்.

ஜெய் கல்கி பகவான்! ஜெய் அம்மா பகவான்!!

*****

இதற்கு முன் இடுகையில் சொன்ன நண்பர் - 3ன் பெயர் திரு.அமிர்த கிருஷ்ணன். ஐசிஐசிஐ வங்கியின் வீட்டுக் கடன் வழங்கித் தரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். சென்னையில் உள்ள இவரது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்க. # தர்றேன்.

*****

சிலபல வருடங்களுக்கு முன், நான் வேலை பார்த்த நிறுவனத்தின் சார்பாக - நிறைய கண்காட்சிகளில் மென்பொருள் கடை போடுவோம். அப்படி ஒரு தடவை - ஒரு பிரபல சாமியார் நடத்தும் ஒரு பயிற்சிக்கூட்டத்திற்காக மும்பை போயிருந்தோம். பத்து நாள் விழாவில் பயங்கரக்கூட்டம். கடைசி நேரத்தில் பயணம் செய்ததால் எனக்கு தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு சிபாரிசின் பேரில் அந்த சாமியாரின் சீடர்களின் அறையிலேயே பத்து நாளும் இருக்க வேண்டியதாயிற்று.

ஒரு நாள் அந்த சீடரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் - “இந்த உலகத்தில் எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால் அனைவரும் நம் சகோதர சகோதரிகள்” என்று கூறினார்.

அத்தோடு அவர் நிறுத்தியிருந்தால், இந்த பத்தியை நான் இங்கே எழுதியிருக்கவே மாட்டேன். அப்படி அடுத்து அவர் என்ன சொன்னாரு?

“ நான் சகோதர சகோதரிகள்னு சொன்னது எல்லா மக்களையும்தான். அழகான பெண்களைத் தவிர”.

*****

Read more...

Wednesday, April 14, 2010

வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன் மற்றும் ஒரு நல்ல மனிதரைப் பற்றி..

சமீபத்திய சென்னை விஜயத்தில் மூன்று நண்பர்களுடன் செய்த பணவிவகாரத்தில் மூன்று விதமான அனுபவங்கள் கிடைத்தன. பதிவு போட வேறு விஷயம் இல்லாததால் அந்த அனுபவங்கள் இங்கே.

*****

நண்பர் 1 :

அவருக்கு நான் சிறிது பணம் கொடுத்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. கடன் கொடுத்தார் நெஞ்சம்போல் கலங்கி - அதைப் பற்றி மறந்தும் போனேன். ஆனால் நண்பரோ, இந்த முறை சென்றிருந்தபோது - கொஞ்சம் லேட்டாயிடுச்சு. மன்னிச்சிக்கோ - என்றவாறு அந்த தொகையை திருப்பிக் கொடுக்க வந்திருந்தார். நானோ - " நீ மறக்காமே திருப்பிக் கொடுக்க நினைச்சதே பெரிய விஷயம். எனக்கு இந்த பணம் வேண்டாம். உன் பையன் பேர்லே வங்கியில் போட்டு வெச்சிக்கோ. பிறகு பயன்படும்" என்றேன்.

அவரோட நிலைமை கொஞ்சம் சுமார்தான் என்பதால் நான் அந்த பணத்தை வாங்க மறுக்க, அவர் வற்புறுத்த, மறுக்க, வற்புறுத்த.. இப்படியே ஒரு பத்து நிமிடம் போயிடுச்சு.

எவ்ளோ வருடம் ஆனாலும், வாங்கின பணத்தை திருப்பித் தரணும்ன்ற உன்னோட நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா அந்த பணம் எனக்கு வேண்டாம். நீயே வெச்சிக்கோன்னு அடிச்சி சொல்லி, அந்த தொகையை அவரோட பாக்கெட்டுலேயே போட்டுட்டு திரும்பி வந்துவிட்டேன்.

நீதி: (தலைப்பில் முதல் பகுதி : கொடுத்தா வாங்க மாட்டேன்!).

*****

நண்பர் 2 :

"உன்கிட்டே கொஞ்சம் தனியா பேசணும். ஒரு அஞ்சு நிமிஷம் போதும். ஓகேவா?" என்று ஆரம்பிக்கும்போதே பணம் கேக்கப்போறார்னு தெரிஞ்சி போச்சு. சரி என்னதான் ஆகுதுன்னு பாத்துடுவோம்னு போனேன். இதுக்காகவே வெளியூரிலிருந்து வந்திருந்த அவர் - "என் பையனோட பள்ளிக் கட்டணம் இப்ப ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. நீ ஏதாவது உதவி செய்ய முடியுமா"ன்னு கேட்டாரு.

நண்பர்- 1 மாதிரியே இவரும் சுமாரான நிலையில் இருப்பதால் நானும் - "சரி. எவ்ளோ வேணும்னு சொல்லு. பள்ளியின் பேரில் காசோலை கொடுத்துடறேன். அதை அப்படியே நீ அங்கே கொடுத்துக்கோ" - என்று சொல்ல - அதன் பிறகு நண்பர் விட்ட கதையைக் கேட்டு கோபம்தான் வந்தது.

அ). பள்ளியில் காசோலை வாங்க மாட்டாங்க.
ஆ). எனக்கு வேறு சிலருக்கும் காசு கொடுக்கணும்.
இ). நீ உதவி செய்யறேன்னு சொன்னதால்தான் நான் இவ்ளோ தூரம் வந்தேன்.
ஈ) நீ அமெரிக்காவுலே வேலை பாக்குறே. பணம் கொடுத்தா என்னவாம்?

கோயில் கட்ட காசு வேணும்னு கேட்டாலே நயா பைசா கொடுக்காதவன் நான் - ஏதோ பையன் படிப்புக்கு கேட்டதால் கொடுக்கறேன்னு சொன்னேன் - பள்ளியின் பேர்லே காசோலை வேணும்னா வாங்கிக்கோ - இல்லேன்னா ஒரு பைசா கிடையாதுன்னு அடிச்சி சொல்லிட்டேன்.

நண்பருக்கு சரியான கோபம். ஆனா, அதெல்லாம் பாத்தா வேலைக்காகுமா? அமெரிக்காவுலே காசு சும்மாவா வருது.. அதை சம்பாதிக்க எவ்ளோ கஷ்டப்படறோம்னு இங்கே வந்து பாத்தாதான் தெரியும்னெல்லாம் சொல்லணும்னு ஆசை. ஆனா ஒண்ணும் சொல்லலை.

நீதி: (தலைப்பில் இரண்டாம் பகுதி : கேட்டா கொடுக்க மாட்டேன்!).

*****

நண்பர் 3 :

என் வீட்டுக் கடன் விஷயமா ஒருவர் ஒரு வாரம் முழுவதும் அலையா அலைஞ்சார். நிறைய தடவை தொலைபேசி, வேகாத வெயிலில் நுங்கம்பாக்கம், அடையாறு, நங்கநல்லூர், தாம்பரம் அப்படின்னு தொடர்ச்சியா அலைஞ்சி - நான் ஊருக்குத் திரும்பி போவதற்குள் முடிக்க வேண்டுமே என்ற பரபரப்போடு அந்த வேலையை வெற்றிகரமாக செய்தும் கொடுத்தார்.

அவரோட பொழப்பே அதுதான்னு தெரிஞ்சாலும், எனக்காக கஷ்டப்பட்டவருக்கு ஏதாவது செய்யலாம்னு நினைச்சி ஒரு சிறிய தொகைக்கு ஒரு பரிசுக் காசோலை வாங்கி கொடுக்க முற்பட்டேன்.

நண்பருக்கு சரியான கோபம் வந்துடுச்சு. " நான் செஞ்சது என் வேலைதான். அதுக்கு எனக்கு சம்பளம் கொடுக்கறாங்க. மேற்கொண்டு நான் யாரிடமும் பணம் லஞ்சமாக வாங்க மாட்டேன். அது மிகப்பெரிய தப்பு. இப்படி வாங்குற காசு எனக்கு ஒட்டாது" - அப்படி இப்படின்னு பொரிஞ்சி தள்ளிட்டாரு.

ஒரு அஞ்சு நிமிடம் சொல்லலாம் கடைசியில் வாங்கிடுவாருன்னு நானும் போராடி பாக்குறேன்.. ம்ஹூம். மனுசன் அசரவேயில்லை. இந்த காலத்திலும் இப்படி ஒரு ஆளான்னு என்னால் நம்பவே முடியவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவருக்கு வெறும் நன்றியை தெரிவித்து அனுப்பி வைத்தேன். வாழ்க நண்பர் - 3.

நீதி : (தலைப்பில் மூன்றாம் பகுதி : ஒரு நல்ல மனிதரைப் பற்றி!)

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP