Saturday, October 29, 2011

நீங்க குடுமியெல்லாம் வைக்கத் தேவையில்லை!


சஹானாவை பள்ளியிலிருந்து கூட்டிவர எப்போதாவது நானும் போவேன். ஹிஹி ஆபீஸை கட் அடித்துதான். யாரும் போட்டுக் குடுத்துடாதீங்க. பள்ளிக்கதவு திறக்கும்வரை பெற்றோர்கள் வெளியே தவம் கிடக்க வேண்டிவரும். அப்போது பெரும்பாலும் மக்கள் தங்கள் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருப்பர்.

அன்று ஒரு நாள் நானும் அங்கே காத்திருந்தபோது கூட சில தேசிகளும். நாம்தான் தேசியை ஏறெடுத்து பார்க்கமாட்டோமே (விவரம் இப்போதான் போன பதிவில்!), அதனால் தலைகுனிந்தவாறே கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் ஒருவர் வந்து - ஹலோ!.

ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா. இன்னிக்கு நான் மாட்டிக்கிட்டேன்னு நினைச்சி பார்த்தா, அவர் தேசியில்லை. ஏதோ ஒரு தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்.

“நீங்க இந்தியாவா?”

இல்லை. சத்யா - ன்னு சொல்ல வந்து பிறகு நாட்டை கேட்கிறார் போலன்னு நினைச்சி - யெஸ் என்றேன்.

“பிருந்தாவன் போயிருக்கீங்களா?”

பிருந்தாவன்? நமக்குத் தெரிந்தது எல்லாம் இவையே:

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் - சென்னை - பெங்களூர் மார்க்கத்தில் நிறைய முறை போயிருக்கிறேன். ஆனா அந்த வண்டி பற்றி இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பிருந்தாவன் தோட்டம் - பழைய தமிழ், இந்தித் திரைப்படங்களில் பாட்டுன்னா கண்டிப்பா அது இங்கேதான் நடக்கும். நான் போனதில்லை. ஆனா இவருக்குத் தெரிந்திருக்குமோ? போயிருப்பாரோ? - தெரியல.

இதைத் தவிர வேறெதும் பிருந்தாவன் எனக்குத் தெரியவில்லை.

அதனால், அவரிடமே கேட்டேன் - ”எந்த பிருந்தாவன்?”

”பகவான் கிருஷ்ணர் பிறந்த இடம். மதுரா? பிருந்தாவன்?”

ஆஹா. சரி சரி. “ஆமா. போயிருக்கிறேன். நல்ல இடம். நீங்க இந்தியா வந்திருக்கீங்களா?”

“இல்லை. நான் Ecuador நாட்டைச் சேர்ந்தவன். பிருந்தாவன் போகணும்னு பலவருட விருப்பம். அடுத்த வருடம் கண்டிப்பா போவேன். நான் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் இருக்கிறேன். இங்கே பாருங்க குடுமி”ன்னு திரும்பி குடுமியை ஆட்டிக்(!!) காண்பித்தார்.

”என் பொண்ணுங்க ரெண்டு பேர் இந்த பள்ளியில்தான் படிக்கிறாங்க. பேரு ராதா மற்றும் சுபத்ரா”.

”வாவ். அருமையான பெயர்கள். ரொம்ப அழகா பேர் வைச்சிருக்கீங்க”.

”அடுத்து பையன் பொறந்தா கிருஷ்ணான்னுதான் பேர் வைப்பேன்”.

”ஆஹா. ரொம்ப அட்வான்ஸ்டா பேரெல்லாம் ரெடி பண்ணிட்டீங்க”. இதை நான் சொல்லவில்லை. நினைத்தேன். (எப்படா இந்த கதவைத் திறப்பாங்க?)

“நீங்க பகவான் கிருஷ்ணரை கும்பிடுவீங்களா?” - இது அவர்.

“ஆமா” - நான்.

“அப்போ நீங்களும் வரலாமே. இங்கே பக்கத்தில்தான் ஒரு வீட்டில் பஜனைகள் நடக்குது. அடுத்த தடவை பார்க்கும்போது நான் உங்களுக்கு சில புத்தகங்கள், CDக்கள் தர்றேன். நீங்க குடுமியெல்லாம் வைக்கத் தேவையில்லை.”

அந்த நாளுக்குப் பிறகு கடந்த ஒரு மாசமாய்  சஹானாவை பள்ளியிலிருந்து கூட்டிவர நான் போகவில்லை.

*****

Read more...

Sunday, October 16, 2011

நொறுக்ஸில் இரு விடயங்கள்.ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்தவுடன் சஹானா சொன்னது.

“இன்னிக்கு என் டீச்சர், மொத்த வகுப்பிற்கும் நான்தான் rolemodelனு சொன்னாங்க. அதுக்கு சில நண்பர்கள் கை தட்டினாங்க”.

”அப்படியா?. வெரி குட். என்ன ஆச்சு?”

”வகுப்பில் இருக்கும்போது திடீர்னு யாரோ உள்ளே வந்தாங்க. டீச்சர் அவங்ககிட்டே பேசும்போது, இங்கே நண்பர்கள் எல்லாரும் கசமுச கசமுசன்னு அவங்களுக்குள் பேசிக்கிட்டாங்க. நான் மட்டும் யாரிடமும் பேசாமல் எழுதிக் கொண்டிருந்தேன். அதனால் டீச்சர் - சஹானா மட்டும்தான் பேசாமல் நல்ல புள்ளையா எழுதிட்டிருக்கா. அவதான் இந்த வகுப்பிற்கே rolemodel. நீங்களும் அவளை மாதிரியே இருக்கணும்.”னு சொன்னாங்க.

”சூப்பர். அப்படித்தான் இருக்கணும். அதுக்கு நீ டீச்சருக்கு நன்றி சொன்னியா?”

“இல்லை”

“ஏன்? யாராவது உன்னை பாராட்டினா அவங்களுக்கு நன்றி சொல்லணும். அதுதான் நல்ல பழக்கம்.”

இதுக்கு இவங்க சொன்னதைக் கேட்டு நான் - வேதம்புதிதில் அடி வாங்கிய சத்யராஜ் தலையை அப்படி இப்படி திருப்பியமாதிரி திருப்பிக் கொண்டேன். அப்படி என்ன சொன்னாங்க? பதில் கடைசியில்.

***

ஒரு ஒருவழிப்பாதையில் சரியாக போகும் திசையில் பார்த்தவாறு இருக்கும் வண்டி, அப்படியே பின்னாடி வந்தால் எப்படி இருக்கும்?

ஒண்ணும் புரியலியா? கவலைப்படாதீங்க. இந்த ஒளித்துண்டை பாருங்க. பிறகு பேசுவோம்.எங்க ஊர் நூலகத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஒரு ஒருவழிப்பாதையில் வலது திரும்பணும். அந்த வலதிலிருந்து வண்டி எதுவும் வராது என்பதால், இடது பக்கம் மட்டும் பார்த்துக்கொண்டு திரும்பிவிடுவேன்.

அன்றும் அப்படியே திரும்பியவுடன் பார்த்தால், ஒரு வண்டி ‘ரிவர்ஸில்’ படுவேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. பதற்றத்தில் என்னால் ஒலி எழுப்பவும் முடியவில்லை. சரக்கென்று சாலையோரத்தில் வண்டியை ஓட்டி நிறுத்தினேன்.

எந்த வெண்ணைய் இப்படி போகக்கூடாத பாதையில் நேராக போகமுடியாததால், ரிவர்ஸில் ஓட்டிப்போவது என்று பார்த்தால், அது ஒரு தேசி வெண்ணைய். அப்போதான் என் மனம் சமாதானமடைந்தது. நம்மைத் தவிர வேறு யாரால் இப்படி செய்யமுடியும்?

ஒழுங்கா போகணும்னா, நாலு தெரு சுத்தி வரணும். அதுக்கு இப்படி குறுக்கு வழி கண்டுபிடித்த அந்த தேசி வாழ்க.


****

”நான் யாரிடமும் பேசவில்லை என்பதால்தான் என்னை rolemodelனு சொன்னாங்க. அதுக்கு நான் நன்றின்னு சொல்லணும்னா பேசியாகணும். அப்படி பேசிட்டேன்னா, rolemodel இல்லேன்னு அர்த்தமாயிடும். அதனால்தான், நான் அப்பவும் பேசவில்லை.”

எப்பூடி?

***

Read more...

Thursday, October 6, 2011

நானும் ஒரு தேசிதான்.நான் பார்த்தவரை அமெரிக்காவில், தேசிகளைப் பார்த்து ஒரு அமெரிக்கரோ, மக்கு'வோ (மெக்சிகன்ஸ் - எங்க ஊர்லே அதிகம்), கூட ஹாய் சொல்லிடுவாங்க. ஆனா ஒரு தேசி இன்னொரு அறிமுகமாகாத தேசியை பார்த்தவுடன் ஹாய் சொல்லவே மாட்டாங்க. டக்குன்னு தலையை திருப்பி வேறெங்கோ பார்த்துக்கிட்டே போயிடுவாங்க. அப்படியும் ஒரு தேசி நம்மைத் தேடி வந்து ஹலோ சொல்றான்னா, அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்க முடியும். அது என்ன? கீழே படிங்க.


கடனட்டையை காரிலேயே வைத்துவிட்டு, வால்மார்ட்டில் ச்சும்மா சுற்றிக் கொண்டிருந்த நேரம். எதிரில் ஒரு தேசி. என் கட்டிடத்தில்தான் வேலை பார்க்கிறார். ஆனாலும் ஒரு தடவைகூட பேசியதில்லை. அதனால், நேற்றும் நான் பார்த்தும் பார்க்காத மாதிரி அவரைக் கடந்து சென்றேன்.


திடீரென்று, ஹலோ என்று கை நீட்டினார். சரின்னு நானும். என்ன பேர், ஊர், குடும்பம், குழந்தைகள் அப்படின்னு எல்லாம் பேசி முடித்தபிறகு, முக்கியமான விஷயத்துக்கு வந்தார். நான் ஒய்வு நேரத்தில் ஒரு தொழில் செய்கிறேன். என்கிட்டே நிறைய பேர் வேலை செய்றாங்க என்றார். அப்பத்தான் எனக்கு மண்டையில் பல்பு எரிஞ்சுது. உங்களுக்கு தொழில் செய்ய ஆர்வமிருக்கா என்று கேட்டார்.


நானும், என்ன தொழில் என்று கேட்க, ஒரு மினி அமேசான் நடத்துறேன். நிறைய பணம் கிடைக்குது. உங்களுக்கும் நல்லதுதான் என்றார். என்னை விட்டுடுங்க. நான் வரலே இந்த விளையாட்டுக்கு என்றவுடன், டக்கென்று கேட்டார் - "அப்ப எந்த தொழில்னு ஏன் கேட்டீங்க?"


சமீபகாலமா சிலபல நண்பர்களால்(!) அடைந்த மனஉளைச்சலால் நான் மீனாக மாறிவிட்டேன். இதை என் குழுவினரும், குடும்பத்தினருமே கண்டு சொல்லியிருக்கின்றனர். மீன்? அதாவது, I have become very meanன்னு சொன்னேன். :-)


ஏங்க, நானா வந்து தொழில் பற்றிய பேச்சை எடுத்தேன்? நீங்க சொன்னதால், பேச்சை வளர்ப்பதற்கு என்ன தொழில்னு கேட்டேன்னு சொன்னேன்.


அவரும் விடாமல் - சரி, இந்த தொழிலை ஏன் உங்களால் செய்ய முடியாது? என்றார்.


எனக்கு நேரமே கிடையாது.


இப்படித்தான் எல்லாருமே சொல்றாங்க. அப்படி என்னதான் செய்யறீங்க ஓய்வு நேரத்தில்?


இந்த இடத்தில் நான் சுறாமீனாகிவிட்டேன்.


யோவ், அடுத்தவன் நேரமில்லேன்னு சொன்னா, அவனைப் போய் கேளு. என்கிட்டே வராதே. நான் ஓய்வு நேரத்தில் என்ன செய்யறேன்னு உனக்கு சொல்லத் தேவையில்லை - என்றேன்.


சரி சரி. இப்போ நேரம் சரியில்லை. நான் உங்களை ஆபீஸ்லே சந்திச்சி பேசறேன் - என்றவாறு ஓடிவிட்டார் அந்த தொழிலதிபர்.


இப்போ நிஜமாவே யார் என்னைப் பார்த்து சிரிச்சாலும், எனக்கு சந்தேகமாவே இருக்கு. என்னையும் தொழிலதிபர் ஆக்காமே விடமாட்டாங்களோன்னு. அதனால் நானும் எந்த தேசியைப் பார்த்தாலும், டக்குன்னு வெக்கப்பட்டு தரையை பார்க்க ஆரம்பிச்சிடறேன்.


சரிதானே?


***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP