Saturday, October 29, 2011

நீங்க குடுமியெல்லாம் வைக்கத் தேவையில்லை!


சஹானாவை பள்ளியிலிருந்து கூட்டிவர எப்போதாவது நானும் போவேன். ஹிஹி ஆபீஸை கட் அடித்துதான். யாரும் போட்டுக் குடுத்துடாதீங்க. பள்ளிக்கதவு திறக்கும்வரை பெற்றோர்கள் வெளியே தவம் கிடக்க வேண்டிவரும். அப்போது பெரும்பாலும் மக்கள் தங்கள் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருப்பர்.

அன்று ஒரு நாள் நானும் அங்கே காத்திருந்தபோது கூட சில தேசிகளும். நாம்தான் தேசியை ஏறெடுத்து பார்க்கமாட்டோமே (விவரம் இப்போதான் போன பதிவில்!), அதனால் தலைகுனிந்தவாறே கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் ஒருவர் வந்து - ஹலோ!.

ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா. இன்னிக்கு நான் மாட்டிக்கிட்டேன்னு நினைச்சி பார்த்தா, அவர் தேசியில்லை. ஏதோ ஒரு தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்.

“நீங்க இந்தியாவா?”

இல்லை. சத்யா - ன்னு சொல்ல வந்து பிறகு நாட்டை கேட்கிறார் போலன்னு நினைச்சி - யெஸ் என்றேன்.

“பிருந்தாவன் போயிருக்கீங்களா?”

பிருந்தாவன்? நமக்குத் தெரிந்தது எல்லாம் இவையே:

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் - சென்னை - பெங்களூர் மார்க்கத்தில் நிறைய முறை போயிருக்கிறேன். ஆனா அந்த வண்டி பற்றி இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பிருந்தாவன் தோட்டம் - பழைய தமிழ், இந்தித் திரைப்படங்களில் பாட்டுன்னா கண்டிப்பா அது இங்கேதான் நடக்கும். நான் போனதில்லை. ஆனா இவருக்குத் தெரிந்திருக்குமோ? போயிருப்பாரோ? - தெரியல.

இதைத் தவிர வேறெதும் பிருந்தாவன் எனக்குத் தெரியவில்லை.

அதனால், அவரிடமே கேட்டேன் - ”எந்த பிருந்தாவன்?”

”பகவான் கிருஷ்ணர் பிறந்த இடம். மதுரா? பிருந்தாவன்?”

ஆஹா. சரி சரி. “ஆமா. போயிருக்கிறேன். நல்ல இடம். நீங்க இந்தியா வந்திருக்கீங்களா?”

“இல்லை. நான் Ecuador நாட்டைச் சேர்ந்தவன். பிருந்தாவன் போகணும்னு பலவருட விருப்பம். அடுத்த வருடம் கண்டிப்பா போவேன். நான் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் இருக்கிறேன். இங்கே பாருங்க குடுமி”ன்னு திரும்பி குடுமியை ஆட்டிக்(!!) காண்பித்தார்.

”என் பொண்ணுங்க ரெண்டு பேர் இந்த பள்ளியில்தான் படிக்கிறாங்க. பேரு ராதா மற்றும் சுபத்ரா”.

”வாவ். அருமையான பெயர்கள். ரொம்ப அழகா பேர் வைச்சிருக்கீங்க”.

”அடுத்து பையன் பொறந்தா கிருஷ்ணான்னுதான் பேர் வைப்பேன்”.

”ஆஹா. ரொம்ப அட்வான்ஸ்டா பேரெல்லாம் ரெடி பண்ணிட்டீங்க”. இதை நான் சொல்லவில்லை. நினைத்தேன். (எப்படா இந்த கதவைத் திறப்பாங்க?)

“நீங்க பகவான் கிருஷ்ணரை கும்பிடுவீங்களா?” - இது அவர்.

“ஆமா” - நான்.

“அப்போ நீங்களும் வரலாமே. இங்கே பக்கத்தில்தான் ஒரு வீட்டில் பஜனைகள் நடக்குது. அடுத்த தடவை பார்க்கும்போது நான் உங்களுக்கு சில புத்தகங்கள், CDக்கள் தர்றேன். நீங்க குடுமியெல்லாம் வைக்கத் தேவையில்லை.”

அந்த நாளுக்குப் பிறகு கடந்த ஒரு மாசமாய்  சஹானாவை பள்ளியிலிருந்து கூட்டிவர நான் போகவில்லை.

*****

7 comments:

சரவணகுமரன் October 30, 2011 at 1:54 PM  

இதுக்காகவே இங்கிருக்கும் இஸ்கான் செல்ல தயக்கமாக இருக்கிறது.

ஸ்வர்ணரேக்கா October 31, 2011 at 3:32 AM  

//நீங்க குடுமியெல்லாம் வைக்கத் தேவையில்லை.//

ரொம்ப சலுகையாக சொல்றாரே...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP