Friday, November 28, 2008

நொறுக்ஸ் - வெள்ளி - 11/27/08


கார்லே போகும்போது என்னல்லாம் செய்யலாம் அப்படின்னு கொஞ்ச நாள் முன்னாலே பார்த்தோம். மக்களும் நிறைய ஐடியா சொன்னாங்க. ஆனா எதுவுமே செய்யாமே வெறும் சிந்தனை மட்டும் செஞ்சிண்டே போனா என்ன ஆகும்னு பாத்ததிலே, தனியா சிரிச்சிண்டு போனதுதான் மிச்சம். சரி, அப்படி என்னதான் சிரிக்கமாதிரி சிந்தனை பண்ணேன்னு கேக்கறீங்களா? கீழே படிங்க..

என் தம்பி ஆதர்ஷோட (தெரியாதவங்களுக்கு: குட்டி வெண்பூ) ஸ்கூலுக்கு போகணும். அந்த நடிகையை பாக்கறதுக்கு இல்லே.. ஸ்கூல் எப்படி நடத்தறாங்கன்னு பாக்கறதுக்காகத்தான்.

ஏதாவது பெரிய நடிகர் படம் வெளியாகுற அன்னிக்கு அடிச்சிபிடிச்சு கூட்டத்தில் போய் முதல் ஆளா டிக்கெட் வாங்க முயற்சி பண்ணனும். அப்படி போய், கவுண்டர் திறந்துவுடனே அவர்கிட்டே நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கான்னோ அடையாறுக்கு எந்த பஸ்லே போகணும் அப்படின்னு கேக்கணும்.

சென்னையில் ஏதாவது ஒரு ட்ராபிக் போலீஸ்காரரிடம் போய் - "சார், நீங்க செய்ற சேவை மிக மகத்தானது. உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கணும்" அப்படின்னு சொல்லிட்டு நண்பன் "சே, சீஸ்ஸ்ஸ்ஸ்" அப்படின்னு சொல்லும்போது, திடீர்னு ஒரு 50 ரூபாய் எடுத்து அந்த போலீஸ்கிட்டே "சார், இத பிடிங்க" அப்படின்னு குடுக்கணும்.

என் மாமனாரை ஒரு திரைப்படம் எடுக்கச் சொல்லணும். அந்தப் படத்துக்காக பாட்டு எடுக்கற சாக்குலே ஒரு 25 நாடுகளுக்கு போயிட்டு வந்துடணும்.

------------

எங்கேயோ கேட்ட ஜோக் ஒன்று:

மாட்டுச் சந்தையில் ஒருவர் மாடு வாங்க வருகிறார்.

ஏங்க, இந்த மாடு எவ்வளவு?

எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?

வெள்ளை மாடே சொல்லுங்க.

அது 5000ரூ.

அப்ப பழுப்பு?

அதுவும் 5000ரு தான்.

இந்த மாடுங்க எவ்ளோ பால் கறக்கும்?

எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?

வெள்ளை மாடே சொல்லுங்க.

அது நாளைக்கு ஒரு பத்து லிட்டர் கறக்கும்.

அப்ப பழுப்பு?

அதுவும் நாளைக்கு ஒரு பத்து லிட்டர் கறக்கும்.

இந்த மாடுங்களுக்கு எவ்ளோ வயசாச்சு?

எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?

வெள்ளை மாடே சொல்லுங்க.

அதுக்கு ஆச்சு அஞ்சு வயசு.

அப்ப பழுப்புக்கு?

அதுக்கும் அஞ்சு வயசுதான் ஆகுது.

(இதே மாதிரி பல கேள்விகள் கேட்டபிறகு)

என்னங்க, எது கேட்டாலும் முதல்லே வெள்ளையா பழுப்பான்றீங்க... ஆனா பதில் ரெண்டுதுக்கும் ஒண்ணுதானே சொல்றீங்க?

ஏன்னா, வெள்ளை மாடுங்க என்னுது.

அப்ப பழுப்பு மாடுங்க?

அதுவும் என்னுதுதான்.

(கேள்வி கேட்டவர் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்).

--------------

நாளைக்கு வட அமெரிக்கா பதிவர் சந்திப்பு நியூ ஜெர்ஸியில் திட்டமிட்டபடி நடைபெறுகிறது. அறிவிப்புக்கு இங்கே செல்லவும். இந்த பக்கம் இருக்கும் பதிவர்கள், அனானிகள் கண்டிப்பாக வரவும்.

------------

சென்ற வாரம் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தோம். அங்கு வந்திருந்த இன்னொரு தமிழ் தெரியாத தமிழ் சிறுமியிடம் தங்ஸ் "கத்தக்கூடாதும்மா. பாப்பா தாச்சி" என்றார். அந்த சிறுமி "what is தாச்சி?" என கேட்க, தங்ஸோ "பாப்பா தாச்சி means பாப்பா sleeping" என்றார். அப்போது நான் "அப்போ புள்ள தாச்சின்னா?" என்று கேட்டேன். அது புரியாமல் அந்த சிறுமி ஓடிவிட, தங்ஸின் பார்வையை பார்க்க முடியாத நானும் வேறுபக்கம் ஓடினேன்.


----------


Read more...

Thursday, November 27, 2008

கேப்டன் மென்பொருள் நிபுணரானால்!!!

கேப்டன் மேனேஜரா இருந்து செய்த ஒரு மென்பொருள்லே ஒரு பெரிய பிரச்சினை. போட்டுத் தாக்கறதுக்கு கம்பெனி முதலாளி கூப்பிட்டனுப்புகிறார்.

இனி கேப்டன் - முதலாளி பேச்சு.

ஏன் இந்த மென்பொருள்லே இவ்ளோ தவறுகள் வந்துச்சு?

செய்தவனை (developer)ஐ கேளுங்க.

இவ்ளோ தவறுகள் வரும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?

தெரியும்.

ஏன் அப்பவே எங்களுக்கு சொல்லலே?

முதல்லே எனக்கு பதவி உயர்வு கொடுங்க. அப்போதான் சொல்வேன்.
இப்பவே சொன்னா, அதை என்னோட மேனேஜர் தன்னோட ஐடியான்னு
சொல்லிடுவாரு.

ஆனாலும், சில அருமையான தவறுகளை கண்டுபிடிச்சிருக்கீங்க. எப்படி?

testerஐ கேளுங்க.

க்ளையண்ட் சொல்றதெல்லாம் உங்களுக்கு புரியுதா இல்லையா?

requirement வாங்குனவன கேளுங்க.

எதைக் கேட்டாலும் வேறே யாரையோ கேளுன்றீங்களே, உங்க டீம்லே இப்போ எவ்ளோ பேரு இருக்காங்க. அவங்க யார்யாரு?

இப்போதைக்கு என் டீம்லே ரெண்டு பேர்தான். அவங்க என் மனைவி, மச்சான் தான். எல்லாத்தையும் அவங்கதான் பாத்துக்கறாங்க.

எல்லாத்தையும் அவங்கதான் பாத்துக்கறாங்கன்னா, உங்களுக்கு இந்த மென்பொருளைப் பத்தி என்னதான் தெரியும்?

முன்னாடியே சொன்னா மாதிரி எனக்கு பதவி கொடுங்க. அதுக்கப்புறம்தான் நான் எதுவும் வெளிப்படையா சொல்வேன்.

பதவி உயர்வு, பதவி உயர்வுன்றீங்களே, அப்படி பதவி உயர்வு கொடுத்தா வேறே என்னதான் செய்வீங்க?

இந்த ப்ராஜெக்ட்லேந்து வரக்கூடிய ரிப்போர்ட்ஸ், மெயில்ஸ் எல்லாத்தையும் உங்க வீட்டுக்கே வந்து கொடுப்பேன். நீங்க அலுவலகத்துக்கே
வரவேண்டாம்.

சுத்தம். அப்பகூட மென்பொருள் தவறுகளை குறைப்பேன்னு சொல்ல மாட்டீங்க. இனிமே உங்க கிட்டே பேசி பிரயோஜமில்லை. நீங்க பேசாமெ
ராஜீனாமா செய்துட்டு போயிடுங்க.

தமிழ்லே எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை - ராஜீனாமா.

பேசாதீங்க. ராஜீனாமான்றது தமிழ் வார்த்தையா இல்லையான்னே உங்களுக்கு தெரியல. இந்தாங்க கடிதம். உங்களை வேலையை விட்டு தூக்கிட்டோம். போயிட்டு வாங்க. அக்குங்....( நாக்கை மடக்கி கண்ணடிக்கிறார்)... ச்சீ.. உங்ககூட சேந்து எனக்கும் இந்த பழக்கம் வந்துடுச்சு...

Read more...

Wednesday, November 26, 2008

டேய்!! தண்டவாளத்தை நடந்து கடக்காதீங்கடா!!!

பலமான எச்சரிக்கை:

நக்கலும், நையாண்டியும் எப்போதும் இருக்கும் பூச்சாண்டியில் முதல்முறையாக ஒரு சோகப்பதிவு. பல நாட்களாக போடலாமா, வேண்டாமா என்றெண்ணி மனதில் உள்ள சோகத்தை கொட்டிவிட முடிவு செய்து போடப்படும் பதிவு. இன்னிக்கு சந்தோஷமா இருக்கறவங்களும், இருக்கப் போறவங்களும் மற்றும் இளகிய மனசுக்காரங்களும் தயவு செய்து படிக்கவேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

---------

டேய். இங்கே வாடா. நீயும் வாடி. கையை பிடிங்க. தண்டவாளத்தைத் தாண்டி அந்தப்பக்கம் வீட்டுக்குப் போகணும்.

அப்பா... அப்பா... இந்தப் பக்கம் பாருங்கப்பா.. ரெயில் வந்துடுச்சுப்பா...

தடக்.. தடக்... தடக்... தடக்..

-------------

செய்தி: 2007ல் ரெயிலில் அடிபட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை - தமிழ் நாட்டில் 1979 - சென்னையில் 870.

-------------

சென்னையில் எங்கள் அடுக்கு மாடி வீட்டில் பின்பக்கம், சஹானாவுக்கு இரண்டு குட்டி நண்பர்கள் இருந்தார்கள். இரண்டு வயது வித்தியாசத்தில் அழகான அண்ணன் தங்கை. பள்ளி முடிந்தபிறகு எங்கள் வீட்டுக்கு வந்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள். சஹானாவின் பொம்மைகளை வீடு பூராவும் பரத்தி, தினமும் நாங்கள் பலமுறை சுத்தம் செய்யவேண்டியிருக்கும்.

--------------

தினமும் இணையத்தில் தினமலர், தினகரன் படிக்கும்போது பார்க்கும் செய்தி - தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இன்னார்
மரணம்ன்றது. சென்னை புறநகரில் அடிக்கடி நடக்கும் விபத்து இது. யார் இறந்தார்கள், எந்த ஊர் என்று மட்டும் பார்த்துவிட்டு அடுத்த
செய்திக்கு போய்விடும் அளவுக்கு பழகிப்போய்விட்ட ஒரு செய்தி. இது எனக்கு மட்டுமல்ல, அந்தப்பக்கம் இருப்பவர்களுக்கும், புறநகர்
ரெயில் பயன்படுத்துவோருக்கும் அப்படித்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

-----------

சென்ற வருடத்தில் ஒரு நாள் வழக்கம்போல் அலுவலகத்திலிருந்து அம்மாவுக்கு தொலைபேசியிருந்தேன். தொலைபேசி எடுத்தவுடன், அம்மா -
ஓ வென்று அழ ஆரம்பித்து விட்டார்கள்.

"என்னம்மா ஆச்சு, உடம்பு சரியில்லையா?. சொல்லுங்க. எனக்கு ஒண்ணும் புரியல".

" நம்ம __குட்டி... நம்ம _குட்டி.... நேத்து ரெயில்லே அடிபட்டு.... ராத்திரியே..... ".... இன்னிக்கு தினகரன்லே வந்துருக்கு பாரு" -

அழுதுகொண்டே தொலைபேசியை வைத்துவிட்டார்கள்.

----------

அலுவலகத்தில் நுழைந்த அரை மணியில் இந்த செய்தி. உடனே லீவ் போட்டுவந்து, சஹானாவின் பழைய ஆல்பத்தைத் தேடி எடுத்து
__குட்டியைப் பார்த்து அழுது மயக்கம் போடாத குறைதான். என் தந்தை மறைந்தபோதுகூட நாங்கள் அவ்வளவு அழுததில்லை.

அந்த விபத்து நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும் அந்த ஆல்பத்தைப் புரட்டும்போதும், __குட்டியை பார்க்கும்போதும்
அழாமல் இருக்கமுடியவில்லை. அப்படியே அடுத்த இரண்டு நாளுக்கு மூட் அவுட்டாவதையும் தடுக்க முடியவில்லை.

--------

டேய்.. ஒரு அஞ்சு நிமிஷத்தில் ஒண்ணும் குடிமுழுகிப் போகாதுடா... தண்டவாளத்தை நடந்து கடக்காமே, படியிலோ சுரங்கப்பாதையிலோ
போய் பழகுங்கடா...

Read more...

Tuesday, November 25, 2008

கெட்டி மேளம்... கெட்டி மேளம்!!!

சிறிய வயதில் உறவினர்களின் திருமணத்திற்குப் போவது படுகுஷியாக இருக்கும். பள்ளிக்கு மட்டம் போட்டுவிடலாம், படிக்கவும் வேண்டாம்.
அதுமட்டுமல்லாமல் திருமண மண்டபத்தில் நம்மை யாரும் கண்டுக்க மாட்டாங்க. நம்ம இஷ்டத்துக்கு சாப்பிட்டு நம்ம இஷ்டத்துக்கு
சுத்திக்கிட்டே இருக்கலாம்.


என்னோட இதே வேவ்லெங்தில் (வார்த்தை நன்றி: பரிசல்) இன்னொரு உறண்பனும் இருந்தான். (உறண்பன் = உறவினன் + நண்பன்). அவனும்
அதே திருமணத்திற்கு வந்துவிட்டால், அப்புறம் எங்களை யாரும் பிடிக்கவேமுடியாது. அப்படி என்னதான் செய்வீங்கன்றீங்களா, அதைத்தான்
இங்கே சொல்லியிருக்கேன். பொறுமையா படிங்க.


ஞானும் அவனும் நடுவில் இன்னொருவரும்:


திருமணத்தை பார்வையிட வந்தவர் யாராவது ஒருவர் தனியாக உட்கார்ந்திருந்தால், நாங்கள் இருவரும் ஒவ்வொருவராக போய் அவரின்
இரண்டு பக்கங்களிலும் உட்கார்ந்து விடுவோம். ஒரு ஐந்து நிமிடம் கழித்து, ஒருவரையொருவர் திடீரென்று பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு -
'டேய், எப்படிடா இருக்கே. பாத்து ரொம்ப நாள் ஆச்சு' என்று ஒருவன் ஆரம்பிக்க, இன்னொருவனும் 'ஹேய்' என்று பேச ஆரம்பிப்பான்.


நடுவில் உட்கார்ந்திருக்கும் அந்த நபர் எங்கள் தொல்லை பொறுக்க முடியாமல் எழுந்து போகும் வரை - நாங்கள் பார்த்த சினிமா,
தொலைக்காட்சி விளம்பரம் என்று சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் எதையாவது பேசிக்கொண்டிருப்போம்.


மனிதர் பயங்கர பொறுமைசாலியாக இருந்து, பத்து நிமிடங்களுக்கு மேல் எழுந்துபோகாமல் இருந்துவிட்டால், நண்பன் பயங்கர டென்சனாகிவிடுவான். அவன் திறமையை நிரூபிக்கும் சவாலில் அவன் தோற்றுப்போனதுபோல் ஆவேசப்பட்டு - நான் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு - ஆங்கிலம், இந்தி என்று வெவ்வேறு மொழிகளில் பேச/உளற ஆரம்பித்து விடுவான். எங்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பவர், அதற்கு மேல் அந்த அறுவையை தாங்கமுடியாமல் கண்டிப்பாக எழுந்து போய்விடுவார்.


தொலைபேசுதல்:


தொலைபேசுதல் அப்படின்னா - ஃபோன்லே பேசுதல் இல்லீங்க. தொலைவிலிருந்து பேசுதல். ஒரு படத்தில் மணிவண்ணன் பேருந்து
நிலையத்தில் நின்றுகொண்டு அங்கிருக்கும் ஒரு பேருந்தில் ஒவ்வொருவராக முன்னால் இருக்கும் நபரை கூப்பிடச்சொல்வாரே, அப்படி
கூப்பிட்டு பேசுவது.


மண்டபத்தில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் ஒரே வரிசையில் வெவ்வேறு மூலையில் உட்கார்ந்திருப்போம். நான் எழுந்து அதே
வரிசையில் நடுவில் உள்ள இன்னொருவரை கூப்பிட்டு - "ப்ளீஸ், அவரை கூப்பிடுங்களேன்" - அப்படின்னு பக்கத்தில் இருப்பவரை காட்டி, அப்படியே கூப்பிட்டு கூப்பிட்டு வரிசையின் கடைசியில் உள்ள நண்பன் பார்த்தவுடனே, வழக்கம்போல் "டேய், எப்படிடா இருக்கே. பாத்து ரொம்ப நாள் ஆச்சு' - என்று ஆரம்பிப்பேன்.


மற்ற விஷயங்கள் எல்லாம் மேலே சொல்லியிருக்கிறா மாதிரிதான். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இங்கே ' நடுவில்' இருக்கும் ஆட்கள் அதிகம். அதனால், எல்லோரும் எழுந்து போவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சிறிது நேரம் கழித்து நாங்களே விளையாட்டை முடித்துக் கொண்டு எழுந்து போய்விடுவோம்.


படுபிஸியாக காட்டிக்கொள்ளுதல்:


அந்த திருமணமே எங்க உழைப்பில்தான் நடக்கிற மாதிரி பயங்கர பிஸியாக நடந்து கொண்டிருப்போம். கல்யாண மேடை, பார்வையாளர்
உட்கார்ந்திருக்கும் இடம், சமையலறை ஆகிய எல்லா இடங்களிலும் இப்படியே நாங்கள் நடையா ஓடிக்கொண்டிருப்பதால், பார்ப்பவர்கள்
அனைவரும் நாங்கள் ஏதோ திருமண வேலையாகத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணுவர்.


அப்படியும் சில பேர் எங்களை நம்பாமல் ஏதாவது வேலை செய்ய கூப்பிடும்போது, நண்பன் படுசீரியஸாக - அந்த மாமா வெற்றிலை வாங்கி
வரச்சொன்னார், இந்த மாமி சுண்ணாம்பு வாங்கி வரச்சொன்னார் - ஒரு ரெண்டு நிமிஷம் இருங்க. கொடுத்துட்டு வந்துடறேன் - அப்படி ஏதாவது சொல்லிவிட்டு எஸ்ஸாயிடுவான்.


சிறிது நேரம் இப்படி 'திருமண வேலைகளை' செய்தபிறகு - முதல் பந்தியில் சாப்பிட்டுவிட்டு - மண்டபத்தில் ஏதாவது ஒரு மூலையில் படுத்திருந்தாலும் - பார்ப்பவர்கள் - "நல்ல வேலை போலிருக்கு. பாவம் சின்னபுள்ள டயர்டாகி படுத்துவிட்டான்" என்று கூறுமளவிற்கு எங்கள் நடிப்பு அப்போதே ஜே.கே.ரித்தீஸுக்குப் போட்டியாக இருந்தது.


பதிவு ஓவர். இனி பின்குறிப்பு மட்டும்தான் பாக்கி.


அதெல்லாம் அந்த காலம். கல்யாணம் ஆனப்பிறகு - இந்தியாவில் நான் கலந்துகொண்ட திருமணங்களில் அங்கே இங்கே சுற்றாமல் மனைவி
பின்னாடியே வாலை (பதிவர் வாலை இல்லீங்க, என் வாலை) சுற்றி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்ததுதான் அதிகம்.

Read more...

Monday, November 24, 2008

ஆற்காடு வீராசாமி மென்பொருள் நிபுணரானால்!!!


1. என் இருக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் ஜன்னலிலிருந்து காத்தே வரமாட்டேங்குது. அதனால் என்னால் சென்ற ஆறு மாதங்களாக சரியாக வேலை செய்ய முடியவில்லை.


2. இந்த அலுவலகத்தில் முதல் மாடியில் வேலை செய்பவர்களுக்கு வாரந்தோறும் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். மேல் மாடியில் இருப்பவர்களுக்கு 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும்.


3. நான் வேலை செய்யற இந்த ப்ராஜெக்ட் தோல்வி அடைஞ்சதாலே, இந்த கம்பெனிய ஊத்தி மூடிடுவாங்களான்னு யோசிச்சி யோசிச்சே, ராத்திரியெல்லாம் தூக்கம் வர்றதில்லே.


4. எங்க ப்ராஜெக்ட்லே கடந்த ரெண்டு மாசத்துலே 300 தவறுகள்தான் செய்திருக்கிறோம். அதே அந்த ப்ராஜெக்ட்லே 54,234 தவறுகள் செய்திருக்காங்க.

5. ஒரு வாரம் நல்ல மழை பெஞ்சா போதும். இந்த ப்ராஜெக்டை உடனே முடித்து விடலாம். (மனதில்: ஒரு வாரம் மழை பெஞ்சா ஊரே குளமாயிடும். மக்களை வீட்டுக்கு அனுப்பாமே, ஆபீஸ்லேயே பூட்டி வெச்சி வேலை வாங்கிடுவேன்!!!).

6. கோடையில்தான் எல்லாரும் லீவ் போட்டுண்டு ஊருக்குப் போயிடுவாங்க. அதனால் வேலை பாதிக்கும். ஆனால், இந்த தடவை குளிர் காலத்துலேயே நல்ல வெயில் அடிச்சதால், லீவ் போட்டுட்டாங்க. ஆள் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப் படுகிறது.

7. இந்த ப்ராஜெக்ட் எவ்ளோதான் சொதப்பலா போனாலும் எனக்கு பிரச்சினையில்லை. நானா ராஜீனாமா பண்ண மாட்டேன். எங்க தலைவர் என்ன சொல்றாரோ அதன்படிதான் செய்வேன்.

8. மென்பொருளில் வரும் தவறுகள் குறித்து க்ளையெண்டே ஒண்ணும் சொல்றதில்லை. சிலர் வேண்டுமென்றே அவர்களை தூண்டி விடுகின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

9. நான் வேலையே செய்யாமே எப்பவும் மேனேஜர்கூடவே இருக்கறேன்றதெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டு. சனி, ஞாயிறுகளில் நான் எப்பவும் எங்க வீட்லேதான் இருப்பேன். அவர்கூட இருக்க மாட்டேன்.

10. இந்த கம்பெனியில் மாசத்துக்கு ஐநூறுக்கு குறைவா தவறுகள் செய்றவங்களுக்கு தினமும் மூணு கப் காப்பி வழங்கப்படும். அதுக்கு மேலே ஒவ்வொரு நூறு தவறுகளுக்கும் ஒரு காபி குறைக்கப்படும். ஆயிரம் தவறுகள் செய்றவங்க, அவங்க வீட்லேந்து காபி கொண்டுவந்து இங்கே இருக்கறவங்களுக்கு கொடுக்கணும்.

11. அடுத்த ஜூன் 30க்கு மேல் நம்ம மென்பொருள்லே எந்த பிரச்சினையும் வராது.

12. எங்க டீம்லே இருக்கற ஒருத்தர் இப்போதான் இன்னொரு கம்பெனிக்கு போயிட்டு வந்தார். அங்கெல்லாம் நம்மை விட மோசமா மென்பொருள் பண்றாங்களாம். நாம எவ்வளவோ பரவாயில்லை.

Read more...

Thursday, November 13, 2008

வட அமெரிக்க பதிவர்கள் தேசிய மாநாடு 2008!!!

வட அமெரிக்கப் பதிவர்கள் சார்பில் ஒரு மாபெரும் தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் நாள்: நவம்பர் 29, 2008 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

இடம்: நியூ ஜெர்ஸி. (இப்போதைக்கு மாநாட்டுத் திடல் இருக்கும் இடம் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது - அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்).

தலைமை வகிப்பவர்: திரு. பாஸ்டன் பாலா

முன்னிலை: திரு. இலவசக்கொத்தனார்

வரவேற்புரை: திரு. கே.ஆர்.எஸ்

மக்கள் தொடர்பு: திரு. இளா

மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இன்னும் சிலரை சாட்டிங்கில் அழைக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது.

சிரஞ்சீவிகாரு கூட்டத்தில் போட்டதைப்போல் முட்டை வீசத் தயாராக இருப்பவர்கள், தயவுசெய்து அந்த முட்டைகளை முன்கூட்டியே எங்களுக்கு அனுப்பிவிட்டால் உபயோகமாக இருக்கும். (அழுகாத) தக்காளி கிடைத்தாலும் நலம்.

மேலும், மாநாட்டை வாழ்த்தி குறைந்த பட்சம் ஒரு லட்சம் தந்திகளாவது எதிர்பார்க்கிறோம்.

அனைவரும் வருக!!! ஆதரவு தருக!!!

Read more...

நொறுக்ஸ் - வியாழன் - 11/13/2008

ரெண்டு வடை வாங்க 50 ரூபாய் கொடுக்கலாம் அல்லது 100 ரூபாய் கொடுக்கலாம். ஆனா யாராவது 1300 ரூபாய் கொடுப்பாளோ???? கொடுத்துட்டாளே.... விவரம் பதிவின் கடைசி செய்தியாக...

-------------

நாம சுவாசிக்கறது பிராண வாயு. மரங்கள் சுவாசிக்கறது கரி அமில வாயு. நமக்கும் மரங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்னு எனக்கு சின்ன வயசுலே தெரிஞ்சதுலே இந்த பாயிண்ட்தான் முக்கியமானது.


இந்த ஊர்லே வந்து தெரிஞ்சிக்கிட்ட இன்னொரு வித்தியாசம் - குளிர் காலம் வரவர நாம உடுத்தற துணியோட தடிமன் (or தடிப்பு) அதிகமாயிட்டே போகுது; ஆனா, மரத்தோட ஆடையான இலை குறைஞ்சிக்கிட்டே போய் மொட்டையாயிடுது. (சரி சரி, கை
தட்டாதீங்கப்பா!!!).


இவைகளைத் தவிர இன்னும் பல வித்தியாசங்கள் இருந்தாலும், நம்மை 'யாராவது' - மசமசன்னு மரம் மாதிரி நிக்காதீங்க - அப்படின்னு 'பாசமா' சொல்லும்போது கோபம் வராமே, சந்தோஷமா இருக்கே - ஏன்னு யாராவது சொல்றீங்களா????

-------------------

ஓட்டுனர் உரிமம் வாங்கிய அனுபவம்:


சென்னை ஆலந்தூரில்:

ஒரே காரில் ஒரு பத்து பதினைந்து பேர் ஓட்டிக் காண்பிக்கணும். ஒருவர் வண்டியை ஓட்ட, மற்றவர்கள் தங்கள் பைக்கிலோ, வேறொரு காரிலோ பின்னாலேயே தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு சின்ன ஊர்வலம் மாதிரி எல்லோரும் போய்க்கொண்டிருந்தோம். வண்டி ஓட்டுவதற்கு என் முறை வந்தபோது - பக்கத்தில் அமர்ந்திருந்த கண்காணிப்பாளர் - வண்டியை ஸ்டார்ட் பண்ணி போங்க - என்றார்.

நானும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முற்பட்டபோது - வண்டியிலிருந்து ஒரு மாதிரி புர்புர்ரென்று சத்தம் வந்தது. அமைதியாக அவர் சொன்னார் - வண்டி ஸ்டார்ட் ஆகித்தான் இருக்கு. "இதை ஏன்யா முன்னாடியே சொல்லலே" - அப்படின்னு நான் சொல்லியிருப்பேன்னு நினைக்கிறீங்க... கரெக்ட்.. நானும் அப்படியேதான் நினைச்சேன். ஆனா சொல்லலே... :-)


அவரோ ரோட்டையே பாக்கலே. தன் கையில் இருந்த நோட்டில் ஏதோ எழுதிக்கிட்டே இருந்தார். நான் கியர் மாத்தி 1,2,3,4 போனவுடன், வண்டியை ஓரம் கட்டுங்க என்று கூறிவிட்டார். அவ்வளவுதான். ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்.


அமெரிக்காவில்:

ஒரு பத்து நிமிடம் சந்து பொந்தாக சுற்றிவிட்டு திரும்ப புறப்பட்ட இடத்துக்கே வந்தோம். இப்போது கண்காணிப்பாளர், வண்டியை பின்பக்கமாக ஓட்டி நிறுத்துங்க (back parking) என்றார். நானும் ஸ்டைலாக பின்பக்கம் போய் வண்டியை நிறுத்தினேன்.


சரியாக இரண்டு கோடுகளுக்கு நடுவில் நிறுத்தவேண்டும். நானும் வண்டியை நிறுத்தியபிறகு கோட்டை பார்த்தேன். இரண்டு பக்கமும் இரு கோடுகளும் சிறிது தூரம் தள்ளி இருந்தது. சரி, ஒரு பெரிய லாரி நிறுத்தவேண்டிய இடத்துலே நாம வண்டியை நிறுத்தியிருக்கோம்.
அதனால்தான், இரண்டு பக்கமும் கோடு தள்ளியிருக்கு அப்படின்னு நினைச்சிக்கிட்டு ஒரு மிதப்போட அந்த கண்காணிப்பாளரைப் பார்த்தேன்.


"ம்ஹும். நீங்க ஃபெயில். பத்து நாள் கழிச்சி மறுபடி வாங்க" - அப்படின்னுட்டார். என்னடான்னு பாத்தா, கீழே இருக்கற படத்தை பாருங்க. அதே மாதிரி நான் சரியா கோட்டு மேலேயே வண்டியை நிறுத்திட்டேன். அவ்வளவுதான்.
--------------

ஒரு முறை அலுவலக விஷயமாக என்னையும் சேர்த்து நண்பர்கள் மூன்று பேர் சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்தோம். ரயில் புறப்பட்டு செக்கிங், இரவு சாப்பாடு எல்லாம் ஆனது. படுக்கப்போகும்போது வண்டி ஏதோவொரு நிறுத்தத்தில் நின்றபோது, நண்பன் பசிக்கிறதென்று போய் எல்லோருக்கும் வடை வாங்கி வந்தான்.

சிறிது நேரம் கழித்து டிடிஆர் இரண்டாவது தடவை செக்கிங் செய்வதற்கு வந்துவிட்டார். இந்த மாதிரி இரண்டு தடவை செக்கிங் செய்வது அன்று மட்டுமா அல்லது தினமுமா என்று தெரியவில்லை.


வடை வாங்கிய நண்பன் பரபரவென்று தன் பர்ஸை நோண்டிக்கொண்டிருந்தான் - "மாப்ளே, டிக்கெட் தொலைஞ்சு போச்சுடா!!!". அதன்பிறகு டிடிஆரிடம் கெஞ்சி கூத்தாடி, பேரம் பேசி ஒரு வழியாக பிரச்சினையை தீர்த்தோம்.


மறு நாள் காலை நண்பன் சொன்னான். " நான் ரெண்டு பத்து ரூபாய் நோட்தான் வைத்திருந்தேன். அவை இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அப்படின்னா, நான் நம்ம டிக்கெட்டை கொடுத்துத்தான் வடை வாங்கியிருக்கேன் போல!!!".

Read more...

Wednesday, November 12, 2008

கனவு... கனவு... கனவு...

என்னுடைய கனவில் என்னுடைய குடும்பம் தவிர, நடிக(??) நடிகையர், கூட வேலை பார்க்கும் அமெரிக்க இந்திய நண்பர்கள், பரிசல் மற்றும் அறிமுகமாகி போன வாரம்தான் முகத்தைப் பார்த்த சிங்கை நாதன் வரைக்கும் அனைவரும் முறை வைத்துக்கொண்டு வந்து போவார்கள்.

நான் விடும் குறட்டையால் (தங்கமணியும், சஹானாவும்தான் அப்படி சொல்வார்கள், ஆனால் நானாவது குறட்டை விடுவதாவது என்று மறுத்துவிடுவேன்!!!) என் கனவில் சிறிய ஜெர்க் எப்பவும் இருக்கும். ஆனாலும், அந்த ஜெர்க்கை பொருட்படுத்தாமல், நண்பர்களும், உறவினர்களும் என்னுடன் பேசிக்கொண்டிருப்பர்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மேற்கூறிய அனைத்து நண்பர்களுடனும் - நான் பிறந்து வளர்ந்து 25 வருடம் வாழ்ந்த வீட்டில்தான் பேசிக்கொண்டிருப்பேன். அந்த வீட்டை விட்டு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டாலும், கனவில் அந்த வீட்டில் இருக்கும்போது, அங்கிருந்த மாடிப்படிக்கட்டுகள், எங்கள் அறையில் இருந்த அலமாரிகள், பெரிய பெஞ்சு, கோலி விளையாடிய குழிகள் எல்லாமே தெள்ளத்தெளிவாக வந்து போகும்.
பதிவு போட ஆரம்பித்தபிறகு, ரொம்ப நேரம் (நாள்) யோசித்து ஒரு மேட்டரை எப்படி முடிப்பது என்று தெரியாமல் இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் கனவில் அந்த ஃபினிஷிங் டச் கிடைத்துவிடும். (ரொம்ப டூ மச்சா இருக்குன்றீங்களா, ஆனா இது நிஜம்தாங்க!!!). ஆனா, காலையில் எழுந்தவுடன் அவை மறந்துவிடும். பிறகு எதையோ மொக்கையாக எழுதி பதிவை வெளியிடுவது வழக்கம்.

வேறெங்கேயோ கூட படித்திருக்கிறேன் (ஒருவேளை சுஜாதாவோ) - அதாவது, தூங்கும்போது பக்கத்தில் ஒரு நோட்டும் பேனாவும் வைத்துக்கொண்டு, தூக்கத்திலேயே எழுந்து - நாம் காணும் கனவை அதில் எழுதுவதாக. சரி, நாமும் அப்படியே செய்வோமென்று சில நாட்கள் நோட்/ பேனா இரண்டையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்கினேன்.

மொட்டை மாடியில் (கனவில்) விளையாடும் கோலி மற்றும் கிரிக்கெட்டில் இருந்த ஆர்வத்தினால் - காலையில் எழுந்து பார்த்தால் - பக்கத்திலிருந்த நோட்டில் ஒன்றுமே இருக்காது. இரவில் கண்ட கனவும் கொஞ்சமாய் நினைவில் இருக்கும் அந்த நேரத்தில் எழுத சோம்பேறித்தனப்பட்டு சிறிது நேரம் கழித்து யோசித்தால், சுத்தமாய் எதுவுமே நினைவிலிருக்காது.
இப்படியாக போயிட்டிருக்கும்போது, திடீர்னு ஒரு நாள் அந்த நோட்டைப் பார்த்தேன். ஏதேதோ எழுதியிருந்தது. ஆஹா, நாம்கூட இரவு கனவு முடிந்ததும் உடனேயே எழுந்து எழுதிவிட்டிருக்கிறோமென்று சந்தோஷப்பட்டுக்கொண்டே அந்த நோட்டைப் பார்த்தால் - அவ்வ்வ்.... எதுக்காக அப்படி எழுதியிருக்கிறேனென்றே தெரியவில்லை.

அதாவது எழுதியது இருக்கு - கனவு மறந்து போச்சு. அப்படி நான் எழுதியதைத்தான் மேலே படத்தில் உள்ளது. உங்களுக்கு ஏதாவது புரிஞ்சா, அதைப் பத்தி நீங்களே ஒரு பதிவு எழுதிடுங்க.... அவ்வ்வ்வ்..

Read more...

Tuesday, November 11, 2008

நொறுக்ஸ் - செவ்வாய் - 11/11/2008


இந்த கேள்விகள் ரங்கமணிகளுக்கு:

வாரயிறுதியில் குடும்பத்தில் அமைதியா சண்டை, சச்சரவில்லாமே இருக்கணுமா?
இரண்டு நாளும் நீங்க அமைதியா கணிணியில் அமர்ந்தாலும், 'யாரும்' உங்களை #%$% திட்டாமே இருக்கணுமா?

நிறைய பேர் ஆமா, ஆமான்னு குதிக்கறது தெரியுது... பதில் பதிவின் கடைசியில்...

-----------------

தினமும் வகுப்பறையில் நுழைந்தவுடன் சஹானா நேராக ஆசிரியையிடம் சென்று, 'குட் மார்னிங்' சொன்னபிறகு, வீட்லே நடந்த ஏதாவது ஒரு விஷயத்தைப் பத்தி சொல்லிவிட்டுதான் தன் நண்பர்களைப் பாக்கப்போவாங்க.

ஒரு நாள், நண்பர்களைப் பார்த்த குஷியில், ஆசிரியையை மறந்துவிட்டு ஓட, ஆசிரியையோ கூப்பிட்டு, "சஹானா, கேன் யூ சே குட் மார்னிங்?(குட் மார்னிங் சொல்ல தெரியுமா?) என்று கேட்டார்.

ஓடிக்கொண்டிருந்த சஹானா, ஒரு நொடி நின்று திரும்பி "யெஸ்" (தெரியும்) என்று கூறிவிட்டு மறுபடி ஓடிவிட்டார்.

ஆசிரியை என்னிடம், "தப்பு என்னுதுதான். நான் குட் மார்னிங்னு சொல்லியிருக்கணும். தெரியுமான்னதுக்கு அவ தெரியும்னு சொல்லிட்டு ஓடிட்டா" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

-----------------

இப்போ எந்த நிலமையில் இருந்தாலும்,
பழசை மறக்கவேகூடாதுன்னு சொன்னாங்க.
நானும் ச்சின்ன வயசில் இருந்தா மாதிரி -
வெறும் **ட்டியோட வெளியே போனேன்.
அதுக்குப்போய் என்னை லூசுன்னு சொல்றாங்க.

பிகு: இது எழுதினது மட்டும்தான் நான். 'அது' நானில்லை.

------------------

உங்க எல்லாருக்கும் ஒரு கேள்வி:
CFL விளக்குகள். இதன் பயன்களைப் பற்றி நிறைய பேர் நிறைய பதிவுகளை போட்டிருப்பீங்க / படிச்சிருப்பீங்க... எல்லா பதிவுகளிலேயும் இந்த CFL விளக்குகளை, குண்டு விளக்குகளோடு ஒப்பிட்டு வருகின்றனர். என்னோட கேள்வி என்னன்னா, இந்த CFLஐயும் நீளமா நம்ம வீடுகள்லே இருக்கும் 'ட்யூப் லைட்'ஐயும் ஒப்பிடறா மாதிரி எங்கேயாவது படித்திருக்கிறீர்களா? இருந்தா, அதோட உரல் கொஞ்சம் கொடுங்க. நன்றி...

-------------------

'யாரும்' சொல்றதுக்கு முன்னாடியே, வெள்ளி இரவோ, சனி காலையிலோ ஒரு தடவை, மாமனார் வீட்டுக்கு தொலைபேசி எல்லார்கிட்டேயும் "எப்படி இருக்கீங்க? என்ன விஷயம்?" அப்படி இப்படின்னு ஒரு ரெண்டு நிமிஷம் பேசிடுங்க... அவ்ளோதான்.

கவனத்துடன் ஒரு டிஸ்கி : இது என்னுடைய அனுபவமல்ல...!!!

Read more...

Monday, November 10, 2008

நொறுக்ஸ் - திங்கள் 11/10/08

நிறைய குட்டி குட்டி மேட்டர்கள் கையில் இருப்பதால் (NO வெண்பூ, NO Bad Meaning!!!), இந்த வாரம் பூச்சாண்டியில் நொறுக்ஸ் வாரமாக (கு.ப. 3 பதிவுகள்) கொண்டாடப்படுகிறது.
----------------------

எல்லா குழந்தைகளையும் போல், சஹானாவும் இரண்டு வயது இருக்கும்போது பேச ஆரம்பித்திருந்தார். நமக்குத் தெரிந்தது ஏதாவது கற்றுக்கொடுப்போம் என்றெண்ணி நானும் அவரிடம் பேச முற்பட்டபோது, அவருக்கு நான் எதுவும் சொல்லித் தரக்கூடாது என்று எங்கள் வீட்டில் எனக்குத் தடை போட்டுவிட்டார்கள். ஏன்னு கேக்கறீங்களா?. காரணம் பதிவின் கடைசியில்.
---------------------

மனைவி: ஏங்க, நடிகர் சூர்யாவே "என்னை கொஞ்சம் மாற்றி"ன்னுதான் பாடறார். நீங்க என்னடான்னா, உங்க பழக்கவழக்கங்களை கொஞ்சம்கூட மாத்திக்காமே, எப்பவும் என்னையே மாறச் சொல்றீங்களே?
கணவன்: ஜோதிகா மாதிரி ஒரு மனைவி கிடைச்சான்னா, கொஞ்சம் என்ன, நான் முழுசாவே என்னை மாத்திக்கிட்டிருப்பேன்.
(டம், டம், டமால், டப்)

பிகு: இது என் அனுபவமல்ல. ஒரு ஜோக்தான்.
---------------------

என்னுடன் வேலை பார்க்கும் நான்கைந்து அமெரிக்க நண்பர்களிடம் கண்ட பழக்கம் இது.

காலையிலிருந்து எல்லோரும் சேர்ந்தே உட்கார்ந்து மீட்டிங்கில் பேசியிருப்போம். ஆனாலும், சிறிது நேரம் கழித்து எதிரெதிரே பார்க்க நேர்ந்தால் - "ஹாய், சத்யா, ஹவ் ஆர் யூ?" - என்பார்கள். அடப்பாவிகளா, இவ்ளோ நேரம் சேர்ந்துதானே பேசிக்கிட்டிருந்தோம். மறுபடியும் முதல்லேர்ந்து ஆரம்பிக்கிறீங்களா என்று நினைத்தாலும், "ஃபைன், ஹவ் அபௌட் யூ?" என்று சொல்லுவேன்.

மத்த நாடுகள்லேயும் இப்படித்தான் நலம் விசாரிக்கறாங்களான்னு தெரியல.
----------------------

பெண்களுக்கு ஞாபகசக்தி அதிகமாணுமா?

உடனே திருமணம் செய்துவிடுங்கள்.

திருமணமான பெண்கள்தான் ச்சின்னச்சின்ன விஷயங்களை

ரொம்ப நாள் ஞாபகம் வைத்துக்கொள்கிறார்கள்.

பிகு: இப்போ நான் சொன்னது. இதுக்கு முன்னால் வேறே யாராவதுகூட சொல்லியிருக்கலாம்.
----------------------

யார் வந்து "உன் பேர் என்ன?" என்று கேட்டாலும், இரண்டு கைகளை தரையிலோ, மேஜையிலோ ஊன்றிக்கொண்டு - "என் பேர் சஹானா... எனக்கு... இன்னொரு பேரு இருக்கு... வர்ஷா... வர்ஷா..." (... போட்ட இடத்திலெல்லாம் சிறிய இடைவெளி விட்டு படிக்கவும்) - இதைத்தான் நான் சஹானாவுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாரமாக சொல்லியதில், தத்தக்கா புத்தக்கா என்று சொல்ல ஆரம்பித்திருந்தார். ஆனால், வீட்டில் எல்லோரும் என்னை #$%#$ திட்டி சஹானாவுக்கு வேறெதுவும் சொல்லித்தராதே என்று கூறி என் கட்டுக்கடங்காத ஆவலை கட்டுப்படுத்தி விட்டனர்... :-(((

Read more...

Tuesday, November 4, 2008

தொதொ பார்ப்பதற்குமுன் செய்ய வேண்டிய செயல்கள் 10!!!

தொதொன்னா என்னன்னு குழம்பிடாதீங்க. தொதொ = தொலைக்காட்சித் தொடர். இப்போ தலைப்பை இன்னொரு தடவை படித்துவிட்டு பதிவுக்கு போயிடுங்க...

1. வீட்டிலுள்ள தொலைபேசியை, கைபேசியை அணைத்து விடவேண்டும். தொலைபேசியை அணைக்க முடியாத பட்சத்தில், மிமிக்ரி செய்யத் தெரிந்தால் நலம். அப்போதுதான் - நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும் - என்று சொல்லி தேவையில்லாத அழைப்புகளை உடனே வெட்டிவிட முடியும்.2. சமையலறையில் பாதியில் விட்ட வேலைகளை விரைவில் முடித்துவிடவும். துவக்காத வேலைகளை தொதொக்குப் பிறகு துவக்கவும். இதில் குக்கர்தான் முக்கியம். அதன் ஒலி தொதொவின் ஒலியை கேட்கவிடாமல் செய்துவிடும்.


3. தொலைக்காட்சியின் ரிமோட்டை பார்வையிலேயே வைத்துக்கொள்ளவும். ரிமோட் தேடுவதற்கு ஒரு கருவியே இருக்கிறது - முடிந்தால் அதையும் வாங்கி வைத்துக்கொள்ளவும். இதனால் நேரவிரயத்தை தவிர்க்கமுடியும்.


4. கைப்பை, பர்ஸ், சில்லறை ஆகிய எல்லாவற்றையும் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளவும். வீட்டிலுள்ளவர்களோ அல்லது கோவில் போன்ற விழாக்களுக்கு கலெக்ஷன் செய்ய வருபவர்களுக்கோ கொடுக்கத் தேவைப்படும். இதனால், தொதொ அதிக நேரம் தவறவிடாமல் பார்க்கலாம்.


5. குடிக்க தண்ணீர், பேனா -> இவற்றையும் அருகிலேயே வைத்துக்கொள்ளவும். தொதொ பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் கொரியர் ஆள் வருவார். கடிதம் நமக்கு இல்லையென்றாலும், குமார் வீடு இதுவா /மாடிக்கு எப்படி போவது என்று கேட்பார் அல்லது குடிக்க தண்ணீர் கேட்பார்.


6. மின்சார அட்டை, கேபிள் அட்டை, பால் அட்டை, காஸ் (gas) அட்டை போன்ற எல்லாவற்றையும் உடனே எடுக்கக்கூடிய இடத்தில் வைக்கவும். இந்த ஆட்கள் வந்தால், அவர்களை உடனடியாக பேசி அனுப்ப வசதியாக இருக்கும்.


7. வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்களுக்கான மருந்து/தண்ணீரை எடுத்து வைத்துவிடவும். படிக்கும் வயதினர் இருந்தால், அவர்கள் தங்கள் வீட்டுப்பாடத்தை செய்துவிட்டார்களா என்று பார்த்துக்கொள்ளவும். சரியாக தொதொ பார்க்கும்போது அவர்களுக்கு நினைவு வந்துவிட்டு, உங்களை உதவிக்குக் கூப்பிட்டால் தொதொ புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....


8. தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகிதமோ ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். இவையில்லாமல் தொதொ பார்ப்பது அபாயகரமானது.


9. இயற்கையின் அழைப்புகள் - அவை அழைக்காவிட்டாலும் நீங்கள் அழையா விருந்தாளியாக 'போய்' முடித்துவிடவும். பிறகு, தண்ணீர் குடிப்பதை குறைத்துக்கொள்ளவும். தொதொக்கு நடுவில் மீண்டும் அழைப்பு வந்துவிட்டால் கஷ்டம்.


10. தொதொ ஆரம்பிக்குமுன்பே, அன்றைய செய்தித்தாள், அந்த வாரத்திய விகடன், குமுதம் இவற்றை தேடி பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். என்னேரமும் பக்கத்து ஃப்ளாட்டிலிருந்தோ, வீட்டிலிருந்தோ யாராவது வந்து ஓசியில் படிக்க கேட்கலாம்.

------------------

இவ்ளோ முன்னேற்பாடுகள் செய்தபிறகும் ஆற்காட்டார் தயவில் தொதொ பார்க்கமுடியாமல் போய்விட்டால், கவலையேபடாமல் காத்திருந்து அடுத்த நாள் பாருங்கள். கதை என் வலைப்பூ கௌண்டர் (counter) போல் நகராமல் அங்கேயே இருக்கும்.

Read more...

Monday, November 3, 2008

ச்சின்னப் பையன் மென்பொருள் நிபுணரானால்!!!

கடலையால் துறை மாறின கதையை ஏற்கனவே சொல்லியிருக்கேன். அப்படி மென்பொருள் உலகுக்கு வந்தபிறகு நான் செய்த முதல் ப்ராஜெக்ட் - சென்னையில் ஒரு முன்னணி பள்ளிக்கு மென்பொருள் செய்ததுதான்.


அந்த பள்ளிக்கு கல்விக் கட்டணம் (ஃபீஸ்), கணக்கு வழக்கு, சம்பளப் பட்டுவாடா, நூலகம் மற்றும் பல துறைகளுக்கு மென்பொருள் செய்து கொடுப்பதாக ஏற்பாடு. அங்கிருந்த ஒரு ஆசிரியர்தான் எங்களுக்குண்டான முக்கிய தொடர்பு. அவரின் உதவியோடும் பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களின் துணையோடும், மூன்று மாதங்கள் உழைத்து மென்பொருள் செய்துவிட்டோம்.


புது கல்வியாண்டில் பள்ளி திறக்கும்போது கல்விக் கட்டணம் வாங்க எங்கள் மென்பொருளையே பயன்படுத்த வேண்டுமென்று பள்ளியில் கூறிவிட்டதால், இரவு பகலாக வேலை செய்து தயாராக இருந்தோம்.முதல் நாள் காலை 8 மணிக்கு கட்டணம் வாங்கும் வேலையை துவக்க வேண்டும். நாங்கள் 7 மணிக்கே பள்ளிக்குச் சென்று எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தோம். மென்பொருள் பயன்படுத்தப்படும் முதல் நாளைப் பார்ப்பதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மற்றும் எங்களுக்கு படியளக்கும் முதலாளி ஆகிய அனைவரும் ஆஜர்.8 மணிக்கு முன்பாகவே சுமார் பத்து பேர் கட்டணம் கட்டுவதற்கு வந்துவிட்டிருந்தனர். கட்டணம் கட்டிவிட்டு அலுவலகம் போக வேண்டிய அவசரம் அவர்களுக்கு. சரி, துவங்கலாம் என்று முதல் ஆளிடம் கட்டணம் வாங்க ஆரம்பித்தோம்.எடுத்தவுடனே மென்பொருளில் ஒரு பிரச்சினை. ரிசீப்ட் (Receipt) எண் ஒன்றுக்குப் பதிலாக பத்து என்று பதிவானது. அந்த தாளைப் பார்த்த தலைமை ஆசிரியர் அந்த தவறை உடனே திருத்தி அந்த நபருக்கு இன்னொரு ரிசீப்ட் கொடுக்க வேண்டுமென்று சொல்லி - தற்காலிகமாக கட்டணம் வாங்கும் பணியை நிறுத்தி விட்டார். சரியென்று நாங்கள் அங்கேயே வேலை செய்ய ஆரம்பிக்க, அப்போது கட்டணம் கட்ட வரிசையில் நின்றிருந்த மக்களின் எண்ணிக்கை - அதிகமில்லை ஜெண்டில்மேன் - சுமார் 25 இருக்கும்.


பிரச்சினையை கேள்விப்பட்டு அங்கு வந்த - எங்களுக்கு ஆர்டர் வாங்கிக்கொடுத்த - அந்த ஆசிரியர், கோபத்தில் கண்கள் சிவந்துபோய் நம் கேப்டன் போல் நின்றிருந்தார்.காலையிலேயே வந்துவிட்டதால், சிற்றுண்டிகூட சாப்பிடாமலிருந்த நானும் என் நண்பனும் வேர்க்க விறுவிறுக்க வேலை பார்த்துக்கொண்டிருக்க, எங்களை சுற்றி நின்றிருந்த எல்லோரும் தேனீர் குடித்துக்கொண்டிருந்தனர்.ஒரு பத்து நிமிடத்தில் எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு மறுபடி வேலையை துவக்கலாம் என்று நாங்கள் சொன்னோம். சத்தம் போட்டுக்கொண்டே இருந்த - ஏற்கனவே கட்டணம் கட்டிவிட்ட அந்த நபருக்கு - மறுபடி புதுசா ஒரு ரிசீப்ட் போட்டுக் கொடுக்கலாம் - என்று போகும்போது ப்ரிண்டரில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.இவ்வளவு நேரமும் மெதுவாக சலசலத்துக் கொண்டிருந்த அந்த மக்கள் கூட்டம், இப்போது தைரியமாக கத்த ஆரம்பித்துவிட்டனர். தலைமை ஆசிரியர், அவரே முன்சென்று மென்பொருளில் ஏற்பட்டுவிட்ட சிறு பிரச்சினையை, அந்த கூட்டத்திற்கு விளக்கிக்கூறி, கொஞ்ச நேரம் பொறுமை காக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்.இப்படியாக ஒரு அரை மணி நேரம் சண்டை போட்டு மென்பொருள்/ப்ரிண்டர் இரண்டிலும் வந்த பிரச்சினைகளை களைந்த பின், பயந்துகொண்டே மறுபடி கட்டணம் வாங்க ஆரம்பித்தோம். யார் செய்த புண்ணியமோ (சத்தியமாய் நாங்கள் செய்ததில்லை!!!) அதற்கு பிறகு நாங்களே ஆச்சரியப்படும் விதமாக அந்த மென்பொருள் வேலை செய்ய ஆரம்பித்தது.


இவ்வளவு நேரம் பேசாமலிருந்த எங்க முதலாளி, இன்னும் இழுக்கறதுக்கு எங்களுக்கு நாக்கே இல்லைன்ற அளவுக்கு, நாக்கை பிடிங்கிக்கற மாதிரி கேள்விகள் கேட்டு திட்டினார். அவர் நன்றாகத் திட்டி முடித்தபிறகு, இங்க ஒருத்தன் மாட்டியிருக்காண்டா என்று சொல்லி, அந்த 'கேப்டன்' ஆசிரியரிடம் அனுப்பினார். ஒரு பத்து நிமிஷங்க, அவரும் திட்டு திட்டுன்னு திட்டிட்டு, தலைமை ஆசிரியடம், 'சார், நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா? இங்க ஒரு நல்லவன் சிக்கியிருக்கான்' அப்படியென்று எங்களை அவரிடம் அனுப்பி வைத்தார். எல்லா அர்ச்சனையும் முடிய அன்னிக்கு 10 மணி ஆயிடுச்சு.


அதற்கு பிறகு அந்த ஆசிரியரே பல பள்ளிகளிலும், வேறு பல நிறுவனங்களிலும் எங்களை அறிமுகப்படுத்தியதும், எங்கள் மென்பொருள் வழக்கம்போல் எல்லா இடத்திலும் முதலில் சொதப்பி - பின்னர் சரியாக வேலை செய்ததும் வரலாறு.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP