Friday, August 26, 2011

விஜய்க்கு கதை சொல்லியவாறு காங்கிரசை வீழ்த்துவோம்.


அது எப்படி விஜய்க்கு கதை சொல்வதால், காங்கிரஸ் வீழும்னு நினைக்கிறீங்கதானே?

மேற்சொன்ன இரண்டும் சில நாட்கள் முன்னாள் டிவிட்டரில் ஓடிய தொடர்கள். பல பேர் புகுந்து விளையாடியதை அறிந்திருக்கலாம்.

அப்படி இரண்டு தொடரிலும் அடியேன் எழுதிய ட்வீட்டுகள் இங்கே.

படித்து பலன் அடையுங்கள்.

***

உறுப்பினர்களைவிட அதிக கோஷ்டிகள், அதைவிட அதிக குழப்பங்கள் கொண்ட காங்கிரஸை வீட்டில் ஓய்வெடுக்க அனுமதியுங்கள். #defeatCongress

ஐபேட்லே பிரச்னைன்னு கூப்பிடறாங்க. இந்த ஆப்பிளை யாரோ கடிச்சிட்டாங்க. அதான் பிரச்னைன்றீங்க. உடனே ஒரு பாட்டு. #StoryToVijay

அதிக வேட்டி விற்பனைக்கு அவர்கள் உதவினாலும், பொதுமக்களுக்கு காலணா பிரயோசனப்பட மாட்டார்கள். #defeatCongress

யாரோட சிகரெட் புகை மேலே போய் நீராவியாகி மழை பெஞ்சி பூமியில் வெள்ளமாய் ஓடுதோ, அவன்தான் தமிழ்னு சொல்றீங்க. #StoryToVijay

We dont expect the PM to react strongly to anything. Atleast REACT, you moron. #defeatCongress

ஹீரோயின் உங்க முன்னாடி நடக்கறா. உங்க சைக்கிள்ளே உலகத்தை சுத்தி வந்து அவ முன்னாடி நிக்கறீங்க. #StoryToVijay

வேட்டி கிழிச்சி சண்டை போடறவங்களை வெட்டி ஆபீஸர்களாக்குவோம். #defeatCongress

Graphics உதவியால் நீங்க நடிக்கறா மாதிரியே காட்டுறோம். #StoryToVijay

காங்கிரஸை ஆரம்பிச்சது ஆங்கிலேயன். அதை அழிப்பது தமிழனாக இருக்கட்டும். #defeatCongress

யாரு அடிச்சி கில்லி பறந்துபோய் நிலாவுலே முட்டி fuse போயி உலகம் இருட்டாவுதோ, அவன்தான் தமிழ்னு வசனம் பேசறீங்க. #StoryToVijay

அடுத்தவன் வேட்டியை கிழிக்கறவன் பைத்தியக்காரன். அவன் கையில் ஆட்சியை கொடுக்கக்கூடாது. #defeatCongress

ஐயா, உங்க வேட்டியை உருவிக்கிட்டு ஓடறான்//பொறுங்க. தலைமைகிட்டே கேட்டு சொல்றேன். #defeatCongress

சார். புதுசா ஒரு கதை சார். கார் விபத்து ஆகும்போது பாரசூட்லே பறந்து போய் விமானத்துலே உக்காந்துடறீங்க. #StorytoVijay

காமராஜர் ஆட்சியை கொடுப்போம். ஏண்டா, உங்களுக்கே சிரிப்பு வரலை. #defeatCongress

ஒரு பழைய மாருதி 800௦௦ வண்டியை ஒட்டிக்கிட்டு நீங்க F1 பந்தயத்துலே ஜெயிக்கிறீங்க சார். #StoryToVijay

சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு காங்கிரஸ் ஜோக்குகளை உருவாக்குவோம். #defeatCongress

பச்சை சட்டை, மஞ்ச சட்டை மாத்தி மாத்தி போட்டு, ரெண்டு வேடத்திற்கும் வித்தியாசம் காட்டுறோம் சார். #StoryToVijay

நாம உப்பு போட்டு சாப்பிடறவங்களா இருந்தா, ஆட்சி செய்ய துப்பில்லாத காங்கிரஸை ஒழிப்போம். #defeatCongress

We dont expect the PM to react strongly to anything. We just need a person who can atleast REACT. #defeatCongress

இப்பவாவது இலங்கையில் எண்ணையை கண்டுபிடிங்க. அடுத்த ஒரு வருடத்தில் அமெரிக்காகாரன் இலங்கையை அழிச்சிடுவான். #defeatCongress

***

Read more...

Sunday, August 21, 2011

பிக்கப் செய்வது எப்படி?


பிக்கப் - இந்த தமிழ்ச்சொல்லை சொன்னாலே, மெரினாவில், கொதிக்கிற வெய்யிலில், சூடான மணலில், குடை பிடித்தவாறு உட்கார்ந்து மாத்தி மாத்தி ‘ம். அப்புறம்?’ என்று கேட்டுக் கொண்டே இருக்கும் ஆட்களே நினைவுக்கு வரும். (நன்றி: நடிகர் விவேக்). அப்படிதான் சொல்வாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்னு கேக்காதீங்க. அது வேறொரு பதிவில். இப்போ பாக்கப்போற பிக்கப் வேறே.

ஊரிலிருந்து ரெயில் / விமானத்தில் வர்றவங்களை ‘பிக்கப்’ செய்வதற்காக வந்து தேவுடு காத்திருப்பதைப் பற்றியதே இப்போ பார்க்கவிருப்பது.

முதல்முறையாக அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் தங்ஸ். சென்னை விமான நிலையத்தில் விடியற்காலையில் சரியான கூட்டம். ஹிஹி. அனைவரும் தங்ஸை வரவேற்க வந்தவர்கள்தான். கட்டில் போட்டுக்கொண்டு பாட்டிகள் ரெஸ்ட் எடுக்க, தாத்தாக்கள் காபி குடித்துக் கொண்டிருக்க, பலர் செய்தித்தாள் பார்த்திருக்க, சிலர் ’Exit'ல் நின்றுகொண்டு,
‘இன்னும் வரலே, இன்னும் வரலே’ என்று நேரடி ஒலிபரப்பு கொடுத்துக் கொண்டிருந்தனர். நாங்கள் வெளியில் வந்ததுதான் தாமதம் - 'குலுகுலுகுலுகுலு’ன்னு குலவி சத்தம். அனைவரும் ஓடி வந்து கை கொடுத்து, கட்டிப் பிடித்து ஒரே களேபரம்தான். ஊர் கண்ணு, உறவு கண்ணுன்னு யாரோ பாடியதா நினைவு.

மற்றவர்களை பிக்கப் செய்ய வந்தவர்கள் அதை மறந்துவிட்டு, ஏதோ திரைப்பட ஷூட்டிங் நடக்குதுன்னு நினைச்சி எங்களையே
பாத்துக்கிட்டிருந்தாங்க. வீட்டுக்குப் போய் போட்ட சத்தத்தில், அடுத்த முறையிலிருந்து யாருமே வருவதில்லை. நாங்களே வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடிச்சி வீட்டுக்குப் போற நிலைமைக்கு வந்துட்டோம். ஆனாலும், அந்த முதல் ‘பிக்கப்’பை என்னால் மறக்கவே முடியாது.

இந்த கும்பல் பிக்கப் ஒரு மாதிரின்னா, ரொம்ப வருஷம் முன்னாடி நடந்தது வேறொரு மாதிரி.

வேலைக்காக நண்பனும் நானும், சென்னை-தில்லி விமானத்தில் அடிக்கடி போய்வந்த காலம். தில்லி வி. நிலையத்தில் இறங்கி வெளியில் வரும்போது, வரவேற்க நிறைய பேர் வந்திருப்பாங்க. அட, அவங்கல்லாம் மற்றவர்களை வரவேற்க வந்தவங்க. எங்களுக்கு தெரிஞ்சவங்க யாருமே கிடையாது.

ஆனாலும் நண்பன் விடமாட்டான். கையை உயர்த்தி, குதித்து குதித்து யாருக்கோ ‘ஹாய்’ சொல்லிக்கொண்டே நடந்து வருவான். டேய், யாருக்குடா கையை காட்டுறே? யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களான்னா, அதெல்லாம் ஒண்ணுமில்லை சும்மா நானே கைகாட்டிக்கிட்டு இருக்கேன் - என்பான். ஏண்டா இப்படின்னா, பின்னே இவங்களுக்கெல்லாம் பிக்கப் செய்ய இவ்வளவு பேர் வந்திருக்கும்போது நாம மட்டும் தனியா ஏன் வரணும்? தவிர, நான் யாருக்கு கைகாட்டுறேன்னு யாருக்குமே தெரியாது. அப்புறம் எதுக்கு பயப்படணும்? நீயும் டாட்டா காட்டிக்கிட்டே வா என்பான். வெளியே வந்து ஆட்டோ பிடிக்கற வரை அவன் ‘ஹாய்’ நிற்காது.

Flash-front.

இந்தியாவில் வந்து இறங்கும்போது நிறைய பேர் பிக்கப் செய்ய வருவாங்க. ஆனா, அமெரிக்கா வந்து இறங்கும்போது யாருமே இருக்கமாட்டாங்க. அந்த நண்பனின் ‘ஹாய்’தான் கைகொடுக்கும். இந்த பிரச்னையை தீர்க்கவும் ஒரு வழி செய்தோம்.

நண்பர் x வரும்போது y போய் பிக்கப் செய்யவேண்டும். அடுத்த தடவை y ஊரிலிருந்து வரும்போது x போய் அழைத்து வருவார். இந்த முறையில் சில தடவைகள் பிக்கப் நடைபெற்றது.

என்ன இருந்தாலும், கிட்டத்தட்ட 20 மணி நேரம் விமானத்தில் பேச, சிரிக்க ஆளில்லாமல் உட்கார்ந்து, வந்து இறங்கியதுமே, ஒருவர் பிக்கப்பிற்கு வந்து, எப்படி இருந்துச்சு பயணம்? ஜன்னல், கின்னலை திறந்துடலியே? பறக்கும்போது ட்ராபிக் ஜாம் ஒண்ணும் இல்லையே? என்று மொக்கை ஜோக் போட்டா, ஊரு விட்டு ஊரு வந்திருக்கோம்ற நினைப்பை கொஞ்சம் குறைக்கலாம். அவ்வளவுதான்.

***

பிகு: ரயில் பிக்கப் பற்றிய நினைவுகள் இன்னொரு பதிவில்.

***

Read more...

Thursday, August 18, 2011

இது ஒரு குப்பை மேட்டர்!


அமெரிக்கா வந்து இறங்கியதும் எங்களுக்குப் பிடிச்சது - சுத்தம். தெரு, பூங்கா, கடைகள் எங்கு பார்த்தாலும் சுத்தம் x 3. குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் போடமுடியாது. அதுமட்டுமல்லாமல், அந்த குப்பைகளை தரம் பிரித்து வெவ்வேறு தொட்டிகளில் போடவேண்டியிருக்கும்.

1. மக்கும் பொருட்கள் தனியாக
2. காகிதங்கள், அட்டை பெட்டிகள் தனியாக
3. இதர குப்பைகள் தனியாக

இப்படி 3 தொட்டிகள் வைத்திருப்பாங்க. அதில்தான் போடணும். ஒவ்வொரு தொட்டிக்கும் அதற்குண்டான குப்பை வண்டிகள் வந்து காலி செய்து எடுத்துட்டு போயிடுவாங்க. இப்படித்தான் 4+ வருடமா நடந்திட்டிருந்தது. ஆனா 2 மாதத்திற்கு முன் திடீர்னு ஒரு மாற்றம். மேலே சொன்ன 1, 2, 3 எல்லாத்தையும் ஒரே தொட்டியில் போட சொல்லிட்டாங்க. காலையில் 5 மணிக்கு ஒரு வண்டி வந்து மொத்தமா அள்ளிக்கிட்டு போயிடும்.

ஏம்மா இப்படி ஆயிடுச்சுன்னு, எங்க வீட்டுக்காரம்மாகிட்டே (house owner!) கேட்டேன். ஒப்பந்தக்காரர் சொன்னபடிதான் செய்யறோம். இந்த குப்பைகளை அவங்க இடத்தில் போய் தரம் பிரிச்சிப்பாங்கன்னு சொன்னாங்க. ஏம்மா, இங்கே பிரித்து எடுத்துட்டு போறது சுலபமா, இல்லே ஊர் குப்பைகள் எல்லாத்தையும் ஒரு இடத்துலே போட்டு அங்கே பிரிக்கறது சுலபமா? யோசிச்சி சொல்லுங்கன்னேன்.

அவங்களுக்கு சுர்ர்ன்னு கோபம் வந்துடுச்சு. ஊர் முழுக்க இப்படித்தான் பண்றாங்க. உனக்கு என்ன போச்சு? சொல்றதை செய்ன்னு சொல்லிட்டாங்க.

சரிதான், எப்படியும் எல்லாத்தையும் ஒரே கண்டெய்னர்லே போட்டு, தூத்துக்குடிக்குதான் அனுப்ப போறாங்க. அதை எதுக்கு இங்கே உட்கார்ந்து வெட்டியா பிரிச்சிக்கிட்டு, செலவு செஞ்சிக்கிட்டுன்னு அந்த செலவையும் குறைச்சிட்டாங்க போலன்னு நினைச்சிண்டேன். அந்தம்மாகிட்டே சொல்லவில்லை.

டிஸ்கி: நிஜம் என்னன்னு எனக்கு தெரியாது. உண்மையாகவே ஓரிடத்தில் குப்பைகளை தரம் பிரித்து அதை உரியமுறையில் சுழற்சி செய்யலாம். ஆனா, அமெரிக்காவிலிருந்து தூத்துக்குடிக்கு இப்படி நிறைய குப்பைகள் வந்து சேர்கின்றன என்று செய்திகளில் பலமுறை படித்துள்ளதால், இப்படி நினைக்கத் தோன்றியது.

***

பலப்பல வருடங்களுக்கு முன் பதிவு துவக்கும்போது ஆர்வக்கோளாறில் ‘ச்சின்னப்பையன்’னு பேர் வெச்சி ஆரம்பிச்சேன். இந்த மாதிரி ‘ச்’ முதலில் வரக்கூடாதுன்னு சிலர் சொன்னாங்க. அப்புறம் மறந்துட்டாங்க. நானும் விட்டுட்டேன். ஆனா இன்னிக்கு ட்விட்டரில் திடீர்னு என் பெயர் பிரச்சினை ’அடி’பட்டிருக்கு.

நண்பர் @tamilravi இப்படி ஒரு ட்விட் போட்டிருந்தாரு.

”@TPKD_ @nchokkan @karthi_1 சோளி சரி.ச்சின்னப்பையன் என்று தமிழ்ச் சொல்லையே சிதைக்கும் கொடுமையையும் பார்த்திருக்கிறேன்.”

இதை படிச்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. அதனால், இன்றிலிருந்து என் பேரை மாத்திக்கிட்டேன். முழுசா இல்லீங்க. அந்த ‘ச்’ மட்டும் எடுத்துட்டேன். அவ்வளவுதான்.

ஆனா நீங்க உங்க ஆதரவை மாத்தாமே தினமும் வந்து போயிட்டிருங்க.

***

Read more...

Monday, August 15, 2011

ஏக் காவ்ன் மே ஏக் கிசான்...


இந்தி பிரசார் சபாவின் ப்ரவேஷிகா தேர்வில் ஒரு நேர்முகத் தேர்வும் உண்டு. கேள்விகள் இந்தியில். பதிலும் இந்தியில் சொல்லணும். இதுக்கு என்னை தயார்படுத்தறேன்னு சொல்லி, வீட்டில் இருந்தவங்க கண்ட கண்ட கேள்வியெல்லாம் கேட்டு பதில் வாங்கினாங்க. தேர்வு நாள் வந்தது. என் முறையும் வந்தது. உள்ளே போனேன்.

ஒரு தாத்தா அமர்ந்திருந்தார். முதல் கேள்வி. இந்தியில்தான்.

”எதுக்கு நீ இந்தி படிக்குறே?”

தேர்வுன்னாலே நாம படிக்காத கேள்விதான் வரும் என்கிற பொதுவான விதி இங்கேயும் பொருந்திவிட்டது. எனக்கு பதில் தெரியல. மேலே கீழே பாக்குறேன். இடம் வலம் பாக்குறேன்.

அவரோ நக்கலாக - ம்? என்கிறார்.

டக்குன்னு எனக்கு பதில் தெரிஞ்சிடுச்சி. சொல்றேன்.

“பூத் கால் மேன் உபயோக் ஹோகா“. (Booth kaal mein upayog hoga).

திடீர்னு பறவைகள் பறப்பதை நிறுத்தின. காற்று வீசுவதை நிறுத்தியது. அலைகள் நின்றுவிட்டன. மனிதர்கள் சிலையாயினர். எங்கும் பேரமைதி. தாத்தா கண்ணைத் திறந்துகொணடே, குண்டலினியை டக்குன்னு மேலே தூக்கிட்ட மாதிரி என்னை அப்படியே பாத்தாரு. அந்த கண்களில் ஆனந்தம், அதிர்ச்சி, சந்தோஷம், சந்தேகம் - இப்படி எல்லாவித உணர்ச்சிகளும்
அப்படியே கொப்பளிக்குது.

நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி நவரசத்தை காட்டுறீங்கன்னு நானும் கண்களாலேயே கேக்குறேன். (அந்த அறையில் இருக்கும்போது இந்தியில்தான் பேசணும் ; ஆனால் இந்த கேள்வியை எப்படி கேட்பதுன்னு எனக்கு தெரியல. அதனால் கண்ணாலேயே கேட்டேன். எப்பூடி!).

அவரு ‘ம்ஹூம்’ அப்படிங்கறாரு. அடுத்த கேள்விக்கு நான் என்னை தயார் படுத்திக்கறேன். அவரோ, தேர்வு முடிஞ்சிடுச்சு. நீங்க போகலாம். நான் மதிப்பெண் போட்டாச்சுங்கறாரு. ஒரு குக்கர் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற பழமொழி எனக்கு ஞாபகம் வந்துச்சு. ‘தன்யவாத்’ (நன்றி) சொல்லிட்டு, நான் வெளியே வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்து நடந்ததை சொன்னேன். வடிவேலு கதையைக் கேட்டு அனைவரும் ‘எஸ்’ஸாவதைப் போல, நான் சொன்ன பதிலைக் கேட்டு இங்கேயும் அனைவரும் ‘எஸ்’ஆக, ஒருவர் மட்டும் நின்று - வெண்ணை, நீ சொன்னது ‘நான் இந்தி எதுக்கு கத்துக்கறேன்னா, இறந்த (கடந்த) காலத்தில் நன்றாக பயன்படும் என்பதால்தான்’ன்னு சொல்லியிருக்கே. @#$$@
@#$$ அப்படின்னு திட்டிப்புட்டாரு. எதிர்காலத்தில்னு சொல்வதற்கு பதில் இறந்த காலத்தில்னு சொல்லியிருக்கேன். அப்பாவாச்சே. திருப்பி எதுவும் சொல்ல முடியல.

ஆனாலும், அந்த தாத்தாவுக்கு என்மேல் தனி பாசம் இருக்கும்போல. தாத்தா, நான் பாசாயிட்டேன்.

அன்னிக்கு ஒரு சபதம் போட்டேன். என் கதி, என் வாரிசுக்கு வரக்கூடாது. அவங்க இந்தி நல்லா படிச்சி பெரிய்ய ஆளாகணும். தப்பில்லாமே பேசணும், எழுதணும்னு. அதுக்காக என்னல்லாம் பண்ணனுமோ, அதை பண்ணனும்னு முடிவு பண்ணேன்.

***

நிற்க. இப்போ சஹானாவுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கணும். இப்பல்லாம் சென்னை பள்ளிகளில் நிறைய பேர் இரண்டாம் மொழிக்கு தமிழுக்கு பதிலா இந்தி அல்லது சமஸ்கிருதம்தான் எடுக்கறாங்களாமே. அதுலேதான் 100க்கு 100 கிடக்குமாம்.

அந்த இரண்டுக்கும் எழுத்து ஒண்ணுதாங்கறதால், நானும் இவங்களுக்கு இந்தி(யும்) சொல்லிக் கொடுப்பதுன்னு முடிவாயிடுச்சு.

உலகத்தில் எங்கே வேணா 'outsourcing' வேலைக்காவும், ஆனா தங்ஸ்கிட்டே மட்டும் ஆகாது. நீங்கதான் சொல்லிக் கொடுக்கணும். அதனால், மரியாதையா உக்காந்து வேலையை பாருங்கன்னு சொல்லிட்டாங்க.

ஒரு checklist உருவாக்கலாம்னு முடிவாச்சு. அதை சுவரில் ஒட்ட வெச்சி, தினமும் போகவர பாத்துட்டிருந்தா, எல்லாம் நினைவில் இருக்கும்னு யோசனை (நான் எனக்குச் சொன்னேன்!). ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து, பல இணையதளங்களை பார்த்து இதை உருவாக்கினேன். நான் நானேதான்.

இதோ இங்கிருப்பதுதான் அந்த checklist. பார்த்து பயன்பெறுங்க.


***


***

Read more...

Saturday, August 13, 2011

தமிழர்னா தமிழ்லேதான் பேசணுமா?


எங்க ஊரே மொத்தம் 10 கிமீ சுற்றளவுதான் இருக்கும். தமிழர்கள் (எனக்குத் தெரிந்து) சுமார் 15 குடும்பங்கள் இருக்கலாம். இது ஒரு தகவலுக்காக சொல்கிறேன்.

***

நாங்க இந்த ஊருக்கு வந்த புதுசு.

அந்த நண்பரை பார்த்தாலே தமிழர் என்று தெரிந்துவிடும். தெரிந்தது. போய் பேசினேன். அட, நீங்களும் தமிழ்தானா என்று பேசினார். தொலைபேசி எண்கள் / மின்னஞ்சல் முகவரிகள் பகிரப்பட்டன. பிறகு சிறிது நாட்கள் இருவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தோம்.

இரண்டாவது சந்திப்பும் நடந்தது. ஒரு பேரங்காடியில் இருந்தவரை சென்று, ஹலோ என்றேன். உடனே ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். நானோ - அட என்னங்க, என்னைத் தெரியலியா, நாம்தான் அன்னிக்கு பாத்துக்கிட்டோமே என்றேன் தமிழில். ஓ சாரி சாரி, மறந்துட்டேன் - என்றவாறு தமிழில் பேசினார். சரி போகுதுன்னு விட்டுட்டேன்.

உலகம் உருண்டைன்னா, எங்க ஊரும் உருண்டைதானே. மூன்றாவது முறையும் பார்த்துக் கொண்டோம். இப்போதும் ஆங்கிலத்தில் கதைத்தார். எனக்கு சரியான கோபம். நான் தமிழில் பேசப்பேச, அவர் ஆங்கிலத்தில் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அது கூட பரவாயில்லை, அவர் கடைசியாக சொன்னது - ஒரு நாளைக்கு 100 பேரை பார்க்கிறோமா, அதனால், யாரு தமிழ்? யாரு ஆங்கிலம்னு தெரியல என்றார்.

இப்போது ஒரு முறை பதிவின் முதல் பத்தியை படிக்கவும். இருப்பதே 10-15 பேர்தான். அதிலும் ரெண்டு தடவை பார்த்து தமிழ்லே பேசியிருக்கோம். அதெப்படி அதுக்குள்ளே என் மூஞ்சி மறக்கும்? இனிமே இவன்கூட பேசப்போறதேயில்லை என்று தங்ஸிடம் கோபத்துடன் கூறினேன்.

இதுக்கு போய் எதுக்கு இப்படி கோவிச்சிக்கிறீங்க என்ற தங்ஸுக்கு நான் சுற்றிய கொசுவர்த்தி இதோ.

தில்லியில் இருக்கும்போது நாங்க 30 பேர் [கன்னிப்பசங்க] ஒரே வீட்டில் இருந்தோம். தமிழ், தெலுங்கு, ஒரியா இப்படி பல மாநிலங்களைச் சேர்ந்தவங்க அங்கே இருந்தோம். ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி. தெலுங்கர்கள் சமாதானமடைந்தாலும், அந்த ஒரியாக்காரர் ’இந்தி’தான் பாக்கணும்னு அடம் பிடிப்பார். இதுக்காகவே, அவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்து, மெட்டிஒலி
பார்க்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டோம்.

அப்படி ஒரியாக்காரரையே தமிழ் பேச வைத்த காலம் போய், இந்த தமிழரை தமிழ் பேச வைக்க வேண்டியிருக்குதே என்று வருந்தினேன்.

கொசுவர்த்தி முடிந்தது.

பிறகு அந்த தமிழரை பார்ப்பதையே தவிர்த்தேன். நம்ம மூஞ்சி மறந்தவங்ககிட்டே நமக்கு என்ன பேச்சு?

அப்புறம் ஒரு நாள் - ஒரு படத்தில், கேப்டனும் சிம்ரனும் ஒரு ஆற்றுப்பாலத்தில் நேருக்கு நேர் சந்தித்ததைப் போல் நானும் அவரை சந்தித்தேன். மாட்டிக் கொண்டேன். ஆனால், இன்ப அதிர்ச்சி. இப்போது தமிழில் பேச ஆரம்பித்தார்.

சிரித்துக்கொண்டே நான் கேட்டது - ஏங்க, இன்னிக்கு 99 பேரைத்தான் பாத்தீங்களா? நான் தமிழ்னு எப்படி தெரிஞ்சுது?

கோபம் வரும்னு நினைத்தாலும், அப்படியில்லை. பகபகவென்று சிரித்த நண்பர் - சரி சரி. மறுபடி மன்னிச்சிடுங்க. இனிமே மறக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.

பிறகு தமிழ் தமிழ் தமிழ்தான்.

வேலை மாறி வேறொரு ஊர் போனபிறகு மின்னஞ்சல் அனுப்ப ஆரம்பித்தார். ஆங்கிலத்தில்.

இப்போது மறுபடி தகராறு செய்ய ஆரம்பித்திருக்கிறேன். தமிழில் தட்டச்சி அனுப்புங்க. இல்லேன்னா பதில் போடமாட்டேன்.

அனுப்பறேன்னு சொல்லியிருக்கார். அனுப்புவார்.

***

Read more...

Monday, August 1, 2011

நன்பேண்டா - 1

சிலபல ஊர்களில், பலசில வருடங்களாக வேலை செய்வதால், வாழ்க்கையில் நிறைய நண்பர்கள் வந்து போவதுண்டு. ஓரிரு வருடங்கள் நட்பு பாராட்டியவர்களும் உண்டு - ஓரிரு நாட்களில் துண்டித்துப் போனவர்களும் உண்டு. பல துன்பமான நேரங்களில் மிகப்பெரிய உதவி செய்தவர்களும் உண்டு - இன்பமான நேரங்களில் காதுக்கினிய(!) வார்த்தைகளால் துன்புறுத்திவிட்டு சென்றவர்களும் உண்டு.

அப்படிப்பட்ட சில (எனக்கு) இன்பமான கணங்களையும், பல (அவர்களுக்கு) இன்பமான கணங்களையும் வரப்போகிற பதிவுகளில் பார்க்கலாம்.

***

ஒரு நெருங்கிய நண்பர். இவரை x என்றழைப்போம். தமிழர்தான். இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுவது, கலாட்டா செய்து பேசிக்கொள்வது என்று நன்றாக பொழுது போய்க் கொண்டிருந்தது.

ஒரு நாள் மதியம், ஒரு கடையில் நாங்கள் மேய்ந்து கொண்டிருந்தபோது, xம் குடும்பத்துடன் வந்திருந்தார். பேச்சுவாக்கில் நான் கேட்டேன் - ”இன்னிக்கு சாயங்காலம் என்ன ப்ரோக்ராம்?. சும்மா இருந்தீங்கன்னா வீட்டுக்கு வாங்களேன்”.

அந்த ஊருக்கு வந்த புதிதில் அதிகப்பிரசங்கித்தனமாய் (நன்றி: தங்ஸ்) எல்லோரிடமும் எங்கே போறீங்க, எங்கே வர்றீங்க, அது என்ன பையிலே - இப்படி ஏதாவது கேட்டுக் கொண்டிருப்பேன்.

அவர் உடனே மறுத்து - ”இல்லேப்பா. இன்னிக்கு ஒரு டின்னர் இருக்கு. நாளைக்கு வேணா வர்றேன். சேர்ந்து சாப்பிடுவோம்” என்றார்.

நான் (மறுபடி அ.பி.) - ”ஹை. வெளியில் சாப்பாடா? ஜாலிதான். எங்கே டின்னர்?”

அவர் - ”அந்த நண்பரை உனக்குத் தெரியாது. ஊருக்கு புதுசா வந்திருக்கார். இன்னொரு நாள் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்".

பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு போனார்.

அதற்குப்பிறகுதான், எனக்கு என் இன்னொரு நண்பர் (y), இரவு தன் வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டிருப்பது நினைவுக்கு வந்தது. ஆனா, அது அன்றைக்குத்தானா, அடுத்த நாளான்னு ஒரு ச்சின்ன சந்தேகம். வீட்டுக்கு ஓடி வந்து மின்னஞ்சல் பார்த்தா - அன்றைக்கேதான். நல்லவேளை, நமக்கும் ஒரு டின்னர் மாட்டிக்கிச்சு. சாப்பாடும் ஆச்சு (அதுதானே முக்கியம்!) பொழுதும் போன மாதிரி ஆச்சுன்னு சந்தோஷமா அந்த வீட்டுக்குப் போனோம்.

நிறைய தமிழ் சினிமா / தொலைக்காட்சி தொடர்கள் பார்க்கிற எல்லோரும் இப்பவே கண்டுபிடிச்சிருப்பீங்க. கரெக்ட்.

நண்பர் xம் அதே வீட்டுக்கு வந்திருந்தார். y என்பவர், எனக்கும் xக்கும் தெரிந்த பொதுவான நண்பர்தான்.

பிறகென்ன, ஹிஹிதான். நான் இல்லேப்பா. அவரு.

இரவு வீட்டுக்குத் திரும்பி வந்த தங்ஸுக்கு அடுத்த 2 நாள் வரை கோபம் போகவில்லை. ”நம்மகிட்டேயே எப்படி பொய் சொல்றாங்க பாருங்க. உண்மையை சொல்லியிருந்தா, நான் என்ன கூடவே வர்றேன்னா சொல்லியிருப்பேன். இப்படி அல்பமா இருக்காங்களே”.

ஹிஹி. தங்ஸுக்கு தெரியாது - y வீட்டுக்குத்தான் போறேன்னு x சொல்லியிருந்தா, நானும் வர்றேன்னு கூடவே கிளம்பியிருப்பேன் - அல்பம் மாதிரி!

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP