நன்பேண்டா - 1
சிலபல ஊர்களில், பலசில வருடங்களாக வேலை செய்வதால், வாழ்க்கையில் நிறைய நண்பர்கள் வந்து போவதுண்டு. ஓரிரு வருடங்கள் நட்பு பாராட்டியவர்களும் உண்டு - ஓரிரு நாட்களில் துண்டித்துப் போனவர்களும் உண்டு. பல துன்பமான நேரங்களில் மிகப்பெரிய உதவி செய்தவர்களும் உண்டு - இன்பமான நேரங்களில் காதுக்கினிய(!) வார்த்தைகளால் துன்புறுத்திவிட்டு சென்றவர்களும் உண்டு.
அப்படிப்பட்ட சில (எனக்கு) இன்பமான கணங்களையும், பல (அவர்களுக்கு) இன்பமான கணங்களையும் வரப்போகிற பதிவுகளில் பார்க்கலாம்.
***
ஒரு நெருங்கிய நண்பர். இவரை x என்றழைப்போம். தமிழர்தான். இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுவது, கலாட்டா செய்து பேசிக்கொள்வது என்று நன்றாக பொழுது போய்க் கொண்டிருந்தது.
ஒரு நாள் மதியம், ஒரு கடையில் நாங்கள் மேய்ந்து கொண்டிருந்தபோது, xம் குடும்பத்துடன் வந்திருந்தார். பேச்சுவாக்கில் நான் கேட்டேன் - ”இன்னிக்கு சாயங்காலம் என்ன ப்ரோக்ராம்?. சும்மா இருந்தீங்கன்னா வீட்டுக்கு வாங்களேன்”.
அந்த ஊருக்கு வந்த புதிதில் அதிகப்பிரசங்கித்தனமாய் (நன்றி: தங்ஸ்) எல்லோரிடமும் எங்கே போறீங்க, எங்கே வர்றீங்க, அது என்ன பையிலே - இப்படி ஏதாவது கேட்டுக் கொண்டிருப்பேன்.
அவர் உடனே மறுத்து - ”இல்லேப்பா. இன்னிக்கு ஒரு டின்னர் இருக்கு. நாளைக்கு வேணா வர்றேன். சேர்ந்து சாப்பிடுவோம்” என்றார்.
நான் (மறுபடி அ.பி.) - ”ஹை. வெளியில் சாப்பாடா? ஜாலிதான். எங்கே டின்னர்?”
அவர் - ”அந்த நண்பரை உனக்குத் தெரியாது. ஊருக்கு புதுசா வந்திருக்கார். இன்னொரு நாள் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்".
பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு போனார்.
அதற்குப்பிறகுதான், எனக்கு என் இன்னொரு நண்பர் (y), இரவு தன் வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டிருப்பது நினைவுக்கு வந்தது. ஆனா, அது அன்றைக்குத்தானா, அடுத்த நாளான்னு ஒரு ச்சின்ன சந்தேகம். வீட்டுக்கு ஓடி வந்து மின்னஞ்சல் பார்த்தா - அன்றைக்கேதான். நல்லவேளை, நமக்கும் ஒரு டின்னர் மாட்டிக்கிச்சு. சாப்பாடும் ஆச்சு (அதுதானே முக்கியம்!) பொழுதும் போன மாதிரி ஆச்சுன்னு சந்தோஷமா அந்த வீட்டுக்குப் போனோம்.
நிறைய தமிழ் சினிமா / தொலைக்காட்சி தொடர்கள் பார்க்கிற எல்லோரும் இப்பவே கண்டுபிடிச்சிருப்பீங்க. கரெக்ட்.
நண்பர் xம் அதே வீட்டுக்கு வந்திருந்தார். y என்பவர், எனக்கும் xக்கும் தெரிந்த பொதுவான நண்பர்தான்.
பிறகென்ன, ஹிஹிதான். நான் இல்லேப்பா. அவரு.
இரவு வீட்டுக்குத் திரும்பி வந்த தங்ஸுக்கு அடுத்த 2 நாள் வரை கோபம் போகவில்லை. ”நம்மகிட்டேயே எப்படி பொய் சொல்றாங்க பாருங்க. உண்மையை சொல்லியிருந்தா, நான் என்ன கூடவே வர்றேன்னா சொல்லியிருப்பேன். இப்படி அல்பமா இருக்காங்களே”.
ஹிஹி. தங்ஸுக்கு தெரியாது - y வீட்டுக்குத்தான் போறேன்னு x சொல்லியிருந்தா, நானும் வர்றேன்னு கூடவே கிளம்பியிருப்பேன் - அல்பம் மாதிரி!
*****
5 comments:
உங்களுக்கு டின்னர் அழைப்பை வச்சிக்கிட்டு அவரைக் கூப்பிட்டிருக்கீங்க.. :)
அதிகபிரசங்கிதனமான அல்பம்..
அல்பம் அல்பம்
:):) alpam
mega alpam :):)
Post a Comment