Sunday, August 21, 2011

பிக்கப் செய்வது எப்படி?


பிக்கப் - இந்த தமிழ்ச்சொல்லை சொன்னாலே, மெரினாவில், கொதிக்கிற வெய்யிலில், சூடான மணலில், குடை பிடித்தவாறு உட்கார்ந்து மாத்தி மாத்தி ‘ம். அப்புறம்?’ என்று கேட்டுக் கொண்டே இருக்கும் ஆட்களே நினைவுக்கு வரும். (நன்றி: நடிகர் விவேக்). அப்படிதான் சொல்வாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்னு கேக்காதீங்க. அது வேறொரு பதிவில். இப்போ பாக்கப்போற பிக்கப் வேறே.

ஊரிலிருந்து ரெயில் / விமானத்தில் வர்றவங்களை ‘பிக்கப்’ செய்வதற்காக வந்து தேவுடு காத்திருப்பதைப் பற்றியதே இப்போ பார்க்கவிருப்பது.

முதல்முறையாக அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் தங்ஸ். சென்னை விமான நிலையத்தில் விடியற்காலையில் சரியான கூட்டம். ஹிஹி. அனைவரும் தங்ஸை வரவேற்க வந்தவர்கள்தான். கட்டில் போட்டுக்கொண்டு பாட்டிகள் ரெஸ்ட் எடுக்க, தாத்தாக்கள் காபி குடித்துக் கொண்டிருக்க, பலர் செய்தித்தாள் பார்த்திருக்க, சிலர் ’Exit'ல் நின்றுகொண்டு,
‘இன்னும் வரலே, இன்னும் வரலே’ என்று நேரடி ஒலிபரப்பு கொடுத்துக் கொண்டிருந்தனர். நாங்கள் வெளியில் வந்ததுதான் தாமதம் - 'குலுகுலுகுலுகுலு’ன்னு குலவி சத்தம். அனைவரும் ஓடி வந்து கை கொடுத்து, கட்டிப் பிடித்து ஒரே களேபரம்தான். ஊர் கண்ணு, உறவு கண்ணுன்னு யாரோ பாடியதா நினைவு.

மற்றவர்களை பிக்கப் செய்ய வந்தவர்கள் அதை மறந்துவிட்டு, ஏதோ திரைப்பட ஷூட்டிங் நடக்குதுன்னு நினைச்சி எங்களையே
பாத்துக்கிட்டிருந்தாங்க. வீட்டுக்குப் போய் போட்ட சத்தத்தில், அடுத்த முறையிலிருந்து யாருமே வருவதில்லை. நாங்களே வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடிச்சி வீட்டுக்குப் போற நிலைமைக்கு வந்துட்டோம். ஆனாலும், அந்த முதல் ‘பிக்கப்’பை என்னால் மறக்கவே முடியாது.

இந்த கும்பல் பிக்கப் ஒரு மாதிரின்னா, ரொம்ப வருஷம் முன்னாடி நடந்தது வேறொரு மாதிரி.

வேலைக்காக நண்பனும் நானும், சென்னை-தில்லி விமானத்தில் அடிக்கடி போய்வந்த காலம். தில்லி வி. நிலையத்தில் இறங்கி வெளியில் வரும்போது, வரவேற்க நிறைய பேர் வந்திருப்பாங்க. அட, அவங்கல்லாம் மற்றவர்களை வரவேற்க வந்தவங்க. எங்களுக்கு தெரிஞ்சவங்க யாருமே கிடையாது.

ஆனாலும் நண்பன் விடமாட்டான். கையை உயர்த்தி, குதித்து குதித்து யாருக்கோ ‘ஹாய்’ சொல்லிக்கொண்டே நடந்து வருவான். டேய், யாருக்குடா கையை காட்டுறே? யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களான்னா, அதெல்லாம் ஒண்ணுமில்லை சும்மா நானே கைகாட்டிக்கிட்டு இருக்கேன் - என்பான். ஏண்டா இப்படின்னா, பின்னே இவங்களுக்கெல்லாம் பிக்கப் செய்ய இவ்வளவு பேர் வந்திருக்கும்போது நாம மட்டும் தனியா ஏன் வரணும்? தவிர, நான் யாருக்கு கைகாட்டுறேன்னு யாருக்குமே தெரியாது. அப்புறம் எதுக்கு பயப்படணும்? நீயும் டாட்டா காட்டிக்கிட்டே வா என்பான். வெளியே வந்து ஆட்டோ பிடிக்கற வரை அவன் ‘ஹாய்’ நிற்காது.

Flash-front.

இந்தியாவில் வந்து இறங்கும்போது நிறைய பேர் பிக்கப் செய்ய வருவாங்க. ஆனா, அமெரிக்கா வந்து இறங்கும்போது யாருமே இருக்கமாட்டாங்க. அந்த நண்பனின் ‘ஹாய்’தான் கைகொடுக்கும். இந்த பிரச்னையை தீர்க்கவும் ஒரு வழி செய்தோம்.

நண்பர் x வரும்போது y போய் பிக்கப் செய்யவேண்டும். அடுத்த தடவை y ஊரிலிருந்து வரும்போது x போய் அழைத்து வருவார். இந்த முறையில் சில தடவைகள் பிக்கப் நடைபெற்றது.

என்ன இருந்தாலும், கிட்டத்தட்ட 20 மணி நேரம் விமானத்தில் பேச, சிரிக்க ஆளில்லாமல் உட்கார்ந்து, வந்து இறங்கியதுமே, ஒருவர் பிக்கப்பிற்கு வந்து, எப்படி இருந்துச்சு பயணம்? ஜன்னல், கின்னலை திறந்துடலியே? பறக்கும்போது ட்ராபிக் ஜாம் ஒண்ணும் இல்லையே? என்று மொக்கை ஜோக் போட்டா, ஊரு விட்டு ஊரு வந்திருக்கோம்ற நினைப்பை கொஞ்சம் குறைக்கலாம். அவ்வளவுதான்.

***

பிகு: ரயில் பிக்கப் பற்றிய நினைவுகள் இன்னொரு பதிவில்.

***

1 comments:

Amutha Krishna August 22, 2011 at 12:54 AM  

அப்படியே ட்ராப் பற்றியும் சொல்லிவிடுங்கள்.குட் பிக்கப்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP