தன் கையே தனக்குதவி!!!
கிபி 2030 - சென்னையில் ஒரு அலுவலகத்தில் நண்பர்கள் சுரேஷ், ரமேஷ் இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
சு: பயங்கர தலைவலியா இருக்குடா.
ர: ஏன், என்ன ஆச்சு? ராத்திரி சரியா தூங்கலியா இல்லே ராத்திரி அடிச்சுது இன்னும் தெளியலியா?
சு: அதெல்லாம் ஒண்ணுமில்லேடா, வீட்டிலே பால் தீர்ந்திடுச்சு. கார்த்தாலே காபி குடிக்கலே. அதனாலே, தலைவலி.
ர: ஹேய், என்ன ஜோக்கடிக்கறியா? பால் தீர்ந்துடுச்சுன்னா, ஃப்ரிட்ஜே பால் கடைக்குப் தொலைபேசி சொல்லிடுமே? அவந்தான் 10 நிமிஷத்திலே பால் வந்து கொடுத்துடுவானே?
சு: அட, போன மாசமே அந்த கடையோட தொலைபேசி எண் மாறிடுச்சுப்பா. நாந்தான் அதை ஃப்ரிட்ஜோட settingsலே மாத்தலே.
ர: சரிப்பா, அதில்லேன்னா என்ன, உன்னோட செல்லுலே எஸ்.எம்.எஸ் வருமே?
சு: எனக்குத்தான் தினமும் ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ் வருதே - தத்துவம், அரசியல், வங்கியிலேந்து - அப்படி, இப்படின்னு. அதனாலே, நான் எந்த எஸ்.எம்.எஸ்ஸையும் பாக்கறதேயில்லை.
ர: எஸ்.எம்.எஸ் அனுப்பிச்சி எதுவும் நடக்கலேன்னா, உடனே ஃப்ரிட்ஜ்தான் உன் கைபேசியில் கூப்பிடுமே?
சு: கூப்பிட்டிருக்கும்னு நினைக்கறேன். நான் நேத்து என் ஆளுகிட்டே ஒரு நாலு மணி நேரம் பேசிக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலே, கிட்டத்தட்ட 10-15 கால்கள் வந்திருந்தன. எல்லாத்தையும் பாத்துக்கிட்டே வந்த நான், இதை மிஸ் பண்ணியிருப்பேன்னு நினைக்கறேன்.
ர: உன்னோட கைபேசியை நீ எடுக்கலேன்னா, கைபேசியிலேர்ந்து மெயில் பெட்டிக்கு ஒரு மெயில் போறாமாதிரி செட் பண்ணியிருக்கியே? அந்த மெயிலையாவது பாத்தியா?
சு: என்னோட கைபேசியிலேர்ந்து மெயில் பெட்டிக்கு வர்ற மெயில்களுக்கெல்லாம் நான் ஒரு 'Rule' செட் பண்ணி நேரா அதையெல்லாம் அழிச்சிடுவேன். அதனால, நான் அங்கேயும் பாக்கலை.
ர: உன்னையெல்லாம்.... என்ன பண்றதுன்னே எனக்கு தெரியல...
சு: இந்த தொழில்நுட்பம் இன்னும் வளரலேன்னு நான் நினைக்கறேன். பாரேன், இவ்ளோ வளர்ந்திருந்தும் எனக்கு இன்னிக்கு பால் இல்லாததாலே காபி கிடைக்கலே.
ர: டேய்.. டேய். உனக்கு வந்த எந்த தகவலையும் நீ பாக்காமே, தொழில்நுட்பம் மேலே பழி போடாதே.
சு: சரி சரி. நீ டென்சனாகாதே. எனக்கு ஒரு சந்தேகம். நாம இவ்ளோ வசதிகள் வெச்சிருந்தும், எனக்கு இன்னும் பிரச்சினை இருக்கே. அந்த காலத்துலேயெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு நினைக்கறேன்.
ர: அதுதான் இல்லே. நான் கேள்விப்பட்டது என்னன்னா, அவங்க இதையெல்லாம் விட ஒரு சூப்பர் தொழில்நுட்பம் வெச்சிருந்தாங்களாம். சின்ன வயசிலே, என் தாத்தா எனக்கு சொல்லியிருக்கார்.
சு: அப்படியா, அது என்ன?
ர: அந்த தொழில்நுட்பத்தோட பேரு - 'தன் கையே தனக்குதவி'. அதாவது, தினமும் ஒரு தடவை, அவங்களே ஃப்ரிட்ஜைத் திறந்து பாத்திடுவாங்க. பால் தீர்ந்திருந்துன்னா, உடனே கடைக்குப் போய் வாங்கிட்டு வந்துடுவாங்க. அவ்வளவுதான்.
பி.கு: சிறில் அலெக்ஸின் அறிவியல் போட்டிக்கு என்னுடைய மூன்றாவது இடுகை இது.