Friday, May 30, 2008

ஹாய் ச்சின்னப்பையன் - ஒரு கேள்வி/பதில் பதிவு!!!

முன் - 1: சின்ன வயசிலிருந்தே எனக்கு ஒரு கேள்வி/பதில் பதிவு போடணும்னு ஆசை. ஆனா, யாரும் கேள்வியே கேக்கமாட்டேன்றாங்க. (Tounge pulling கேள்விகூட கேக்கமாட்றாங்க!!!). எவ்ளோ நாள்தான் காத்திருக்குறது... அதான் 'கலைஞர்' பாணியில் நானே கேள்வி நானே பதில் பதிவு போடலாம்னு...

முன் - 2: சரி சரி.. நாலு சின்ன சின்ன மேட்டர் கையிலே இருக்கும். அதை ஒரே பதிவில் எப்படி போடறதுன்னு யோசிச்சிருப்பே... கேள்வி பதிலா போட்டுட்டே... அப்படின்றவங்க... all silent.
-----

கே: உங்களுக்கு கோபம் வருமா? யாரையாவது பிடித்துத் தள்ளியிருக்கிறீர்களா?

ப: கண்டிப்பாக தள்ளியிருக்கிறேன். ஆனால் கோபத்தில் அல்ல. சிரித்துக்கொண்டேதான். அது எப்படி என்கிறீர்களா?

ஒரு நாள் அலுவலகத்தில் ஓய்வறைக்குப் போவதற்கு, கதவைத் திறக்கப்போனேன். அப்பொழுது பார்த்து பக்கத்திலிருந்து ஒருவர் 'ஹலோ' என்றார். அவருக்கு சிரித்துக்கொண்டே 'ஹாய்' சொல்லிவிட்டு கதவைத் தள்ளப்போனால், அந்த கதவை ஏற்கனவே (உள்ளேயிருந்து) ஒருவர் திறந்துவிட்டார். பிறகென்ன, இவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே, அவரைப் பிடித்து தள்ளிவிட்டேன்.

கே: கையால் தள்ளியிருக்கிறீர்கள், சரி. யாரையாவது தலையால் முட்டி தள்ளியிருக்கிறீர்களா?

ப: ஓ. அதையும் செய்திருக்கிறேன்.

ஒரு தடவை 'வால்மார்ட்'டில் பாப்பாவிற்காக ஒரு சிறிய மிதிவண்டி (இந்த ஊரில் மிதிவண்டியை, 'பைக்' என்கிறார்கள்) வாங்கப்போயிருந்தோம். ஒரு மிதிவண்டி எடுத்து பாப்பாவை ஓட்டிப்பார்க்கச் சொன்னோம். அதன் 'சங்கிலி' சுற்றாமல் அடம் பிடித்தது. நான் பெரிய மிதிவண்டியில் செய்வதுபோல், ஒரு காலை ஒரு 'பெடலில்' வைத்து கொஞ்சம் சுற்றலாம் என்றால், வண்டி 'சர்ரென்று' கொஞ்சம் முன்னே சென்றது.

நானும் நிலை தடுமாறி, நான்கடி தள்ளி முதுகு காட்டி நின்றிருந்த ஒருவர் மீது போய் தலையால் அவரை 'லேசாக' தள்ளி விட்டேன். அதற்கே அவர் 'டென்சன்' ஆகிவிட்டார் என்பது தனி கதை!!!

கே: புகைவண்டியில் போகும்போது, அதனுள்ளே நீங்கள் வேகமாக ஓடியிருக்கிறீர்களா?

ப: NY போய்விட்டு வரும்போது எங்கள் புகைவண்டி கிளம்புவதற்கு சில நொடிகளே இருந்ததால், கடைசி பெட்டியில் ஏறிவிட்டோம். ஒரு மணி நேரம் கழித்து எங்கள் இறங்கும் இடம் வந்ததும், இறங்க முயற்சி செய்தால், கதவு திறக்கவேயில்லை. கதவைத் தட்டி தட்டி பார்த்தோம். ம்ஹூம்.

அப்போது அங்கிருந்த ஒருவர் - இந்த இடத்தில் நடைமேடை சிறிதாக இருப்பதால், கடைசி 5-6 பெட்டிகளில் கதவு திறக்காது என்றும், வேகமாக முன்னால் ஓடி எங்கு கதவு திறந்திருக்கிறதோ, அங்கிருந்து இறங்கிக்கொள்ளவும் என்று கூறினார்.

அவ்வளவுதான். எல்லா பொருட்களையும் தூக்கிக்கொண்டு பெட்டி பெட்டியாக ஓடினோம். ஒரு 5 பெட்டிகள் கடந்த பிறகு, ஒரு பெட்டியில் கதவு திறந்திருந்தது. மூச்சிறைக்க அங்கிருந்து நடைமேடையில் இறங்கிவிட்டோம்.

இறங்கிய பிறகு தங்கமணி "அப்போதிலிருந்தே உள்ளே ஏதோ அறிவித்துக் கொண்டிருந்தார்கள். நீங்க கவனிக்காமே உங்க நண்பர்கிட்டே பேசிக்கிட்டிருந்தீங்க" என்றார். நற நற...

கே: 'இவர் முகத்தில் நான் மறுபடி எப்படி முழிப்பேன்?' - என்று யார் பற்றியாவது நினைத்ததுண்டா?

ப: ஆம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன் நடந்தது இது. என் தாயுடன் ஒரு வங்கிக்குச் சென்றிருந்தேன். அவர் வரிசையில் போய், அங்கிருந்த பணியாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, நான் சற்று தள்ளி உட்கார்ந்திருந்தேன். அந்த பணியாளர் அங்கிருந்தே என்னைப் பார்த்து சிரித்த மாதிரி இருந்தது.

வெளியே வந்தபிறகு கேட்டேன்.

"என்னைப் பற்றி ஏதாவது பேசினீர்களா?"

"ஆம், நீ என்ன வேலை செய்கிறாய் என்று கேட்டார். நானும் சொன்னேன்"

"ம். என்ன சொன்னீர்கள்"

" நீ Data Entry Operatorஆக வேலை பார்க்கிறாய் என்றேன்"

ஒரு சிறிய மென்பொருள் நிறுவனத்தில் 'குழுத்தலைவராக' இருந்த என்னை 'Data Entry Operator' என்று மிகவும் பெருமையாக அந்த பணியாளரிடம் சொல்லியிருக்கிறார் என் தாயார். (மென்பொருள் சம்மந்தப்பட்ட பதவிகளில் அப்போது என் தாயாருக்குத் தெரிந்தது 'Data Entry Operator' ஒன்றுதான்.)

"ஏன், நீ அந்த வேலைதானே செய்கிறாய்?

"அய்யோ.. நீங்கள் அப்படி சொன்னது கூட எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் ஒரு வாரம் முன்னால்தான் நான் அவரிடம் கணிணி பற்றியும், 'Technology' பற்றியும் பயங்கர 'பிலிம்' காட்டியிருந்தேன். அதனால்தான் நீங்கள் அப்படி சொன்னதும், அவர் என்னை பார்த்து 'இதுக்கே' இவ்ளோ 'பில்டப்பா' என்று நக்கலாக சிரித்திருப்பார் என்று நினைக்கிறேன்.. இனிமேல் அவர் முகத்தில் நான் எப்படி முழிப்பேன்?".

அதன்பிறகு அவரை நான் பார்க்கவில்லை.

Read more...

Thursday, May 29, 2008

ஒரு பக்க கதை - அரைபக்க கதை

ஒரு சொற்பொழிவாளர்
பேசிக்கொண்டிருந்தார்.

கிமு-விலிருந்து இன்று வரை
நடந்த நிகழ்ச்சிகள் /
படையெடுப்புகள் /
தலைவர்கள் பிறந்த - இறந்த நாட்கள்
என அனைத்து
முக்கிய நிகழ்வுகளையும்
சுவைபட தேதிவாரியாகக்
கூறிக்கொண்டிருந்தார்.

கூட்டத்தினர் அவரது
நினைவுத்திறனை மெச்சினர்.

ஒரு சிறுவர் எழுந்தான் -
"ஐயா, ஒரு சந்தேகம்".

"என்ன"?

"உங்கள் பெற்றோர் திருமண நாள்
என்னவென்று நான்
தெரிந்துகொள்ளலாமா"?

சபையினர் அமைதி காத்தனர்.
சொற்பொழிவாளரும்தான்.

பின் - 1: மேட்டர் சின்னதுதான். ஆனா ரொம்ப முக்கியமானது, என்ன சொல்றீங்க?

பின் - 2: பதிவு ஏன் ஒரு பக்கமா இருக்குன்றீங்களா?... அதுதான் ஒரு 'பக்க' கதை.. அதாவது ஒரு பக்கமா (Side-ஆ) இருக்கிற கதை!!!

Read more...

Wednesday, May 28, 2008

என்னோட எல்லா கடவுச்சொற்களையும் திருடிட்டாங்க!!!


யாஹூ



ஹாட்மெயில்


ஜிமெயில்


ஆர்குட்


ஐசிஐசிஐ


மற்றும் என்னோட பல கடவுச்சொற்களையும் திருடினது மட்டுமில்லாமல், அதை எல்லாரும் பாக்குற மாதிரி அவங்க தேசியக்கொடியிலேயும் போட்டுட்டாங்க...


நீங்களே பாருங்க... நான் என்ன பண்றது?...




Read more...

Tuesday, May 27, 2008

அமெரிக்காவில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு!!!

முன்னுரை: இந்த கட்டுரையில் வரும் (அமெரிக்காவின்) இடங்களின் பெயர்கள் படிப்பதற்கு வசதியாக ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

JFK விமான நிலையம். சென்னையிலிருந்து வரும் விமானத்திலிருந்து நம் Captain இறங்குகிறார்.

அவருடன் நானும் (ச்சின்னப்பையன்) மற்றும் The News Times நிருபர் ஒருவரும் வண்டியில் ஏறிக்கொண்டோம். JFK-யிலிருந்து Danbury வருவதற்குள் பேட்டியை முடித்துக்கொள்ளுமாறு Captain நிருபரிடம் கூறினார். இனி பேட்டி:


எந்த கட்சியுமே Danbury-யில் அலுவலகம் திறக்காத நிலையில், நீங்கள் மட்டும் அலுவலகம் திறந்திருக்கிறீர்களே, ஏன்?

இங்கே நிறைய தமிழர்கள், என் ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னை அன்போடு அழைத்து, ஒரு அலுவலகம் திறந்தால் கட்சி வளரும் என்று கூறினார்கள். அதோடு இங்கே வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அந்த பிரச்சினைகளை போக்க வேண்டும் என்பதற்காக நான் இங்கே அலுவலகம் திறந்திருக்கிறேன்.

என்ன பிரச்சினைகள் என்று சொல்வீர்களா?

இங்கே நிறைய தமிழ் மக்கள் இருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு கோவில் கிடையாது. பக்கத்திலுள்ள கோவிலுக்கு சுமார் 40 மைல்கள் செல்லவேண்டும். இந்திய திரைப்படங்களைப் பார்க்க வேண்டுமென்றால், வேறொரு திசையில் 30 மைல்கள் தாண்டி செல்லவேண்டும். இவ்வளவு பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு இந்திய பலசரக்குக் கடைதான் இருக்கிறது. அங்கேயும் எப்போதும் பொருட்கள் தட்டுப்பாடுதான். இதையெல்லாம் எதிர்த்து எங்கள் கட்சி போராடும்.

இங்கே எவ்வளவு நாட்கள் இருப்பீர்கள்? என்னென்ன செய்யப்போகிறீர்கள்?

-> இன்றிரவு I-84 Exit 7க்கு அருகில் இருக்கும் Park & Ride அருகே ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்.

-> அதற்காக I-84 Exit 1ல் இருந்து பேரணி புறப்பட்டு, Exit 7ல் முடிவடையும்.

-> கூட்ட முடிவில், அதே Park & Rideல் நம் கட்சிக்காக பாடுபடும் திரு. சதீஷ் அவர்களின் மார்பளவு சிலை திறக்கப்படும்.

-> நாளை நம் Danbury வட்டச் செயலாளர் திரு.ச்சின்னப்பையன் வீட்டில் விருந்து சாப்பிடுகிறேன்.

-> நாளை மாலை Walmartல் shopping செய்துவிட்டு, இரவே சென்னைக்குப் புறப்படுகிறேன். இப்போது எனக்கு சிறிது ஓய்வு தேவை. வணக்கம்.

விமானத்தில் வந்த களைப்பில் Captain சிறிது ஓய்வு எடுக்கிறார்.

பிறகு மாலையில் பேரணி அட்டகாசமாக துவங்கி, பொதுக்கூட்டத் திடலில் முடிகிறது. Captain மேடையில் நின்று கொண்டு கையசைத்து அனைவரையும் உற்சாகப்படுத்துகிறார். அடுத்த ஒரு மணி நேரம் பேசி தொண்டர்களை மகிழ்விக்கிறார். அவர் பேசிமுடித்தபிறகு - "அடுத்து நம் Danbury வட்டச் செயலாளர் திரு.ச்சின்னப்பையன் அவர்கள் பேசுவார்கள்" என்று அறிவிக்கிறார். (கூட்டத்திலிருந்து வரும் கைதட்டல் ஒலி விண்ணை எட்டுகிறது).

நான் கைகூப்பிக்கொண்டே என் இருக்கையை விட்டு எழுகிறேன்.

திடீரென்று டம்-என்று ஒரு சத்தம்.

"வாரயிறுதி ஆச்சுன்னா மதியம் நல்லா மூக்கை பிடிக்க சாப்பிடவேண்டியது.. சாப்பிட்டப்புறம் யானையே நுழைந்தாலும் தெரியாதவாறு வாயை திறந்து போட்டு தூங்கவேண்டியது.. இதிலே கனவு வேறு... கடவுளே... இப்பவாவது கண்ணைத் தொறங்க... உங்க மடியிலே இருந்த மடிக்கணிணி கீழே விழுந்துடுச்சு பாருங்க... போச்சு.. போச்சு.. இனிமே வேலை செய்யுமான்னு தெரியலே.. ஆண்டவா... "

நான் எழுந்து நின்று 'கேப்டன் வாழ்க!!!' என்று ஏன் சொல்கிறேன் என்று புரியாமல் என் தங்கமணி விழிக்கிறார்.

Read more...

Monday, May 26, 2008

குடும்ப அரசியல் - சட்டசபையில் ஒரு நாள்!!!

அப்பா இங்கே பாருப்பா இந்த அக்காவை. எப்போ பாரு மைக்கை தூக்கி என்மேலே அடிச்சிக்கிட்டே இருக்காங்க.

---

அண்ணி, எனக்கு தலை சுத்துது. கொஞ்ச நேரம் இப்படி படுத்துக்கறேன். ஏதாவது வாக்கு அளிக்கணும்னா என் கையை தூக்கி காட்டுங்க. கை தட்டணும்னா என் கையைப் பிடிச்சு மேஜையை தட்டுங்க.

---

இதோ பாருங்க சம்மந்தி, நான் சரியா வரதட்சிணை கொடுக்கலேங்கறதை மனசிலே வெச்சிக்கிட்டு, நான் சபையிலே பேசும்போதெல்லாம் நீங்க வெளி நடப்பு செய்றது கொஞ்சம் கூட நல்லாயில்லே...

---

பங்காளி, உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்கிட்டேதான் வரணும். ஞாபகம் வச்சுக்க. நான் என்ன பேசினாலும், அதை எதிர்த்து குரல் கொடுக்காதே, சரியா?

---

இங்கே இருக்கறவங்க அத்தனை பேர்கிட்டேயும் சொல்லிக்கறேன். நான் தயாரிச்ச படம் பார்க்க எல்லோரும் நாளைக்கு மதியம் 'சத்யம்' தியேட்டருக்கு வந்திடுங்க.

---

அம்மா, நம்ம சித்தப்பா குடும்பத்திலேர்ந்து இன்னிக்கி யாரையும் காணலே?

சித்தப்பா ஒரு படம் எடுக்கறாரில்லே. அதிலே அவர் பெரிய பையந்தான் இயக்குனர். சின்னவன் கதானாயகன். பொண்ணு இசை. அதனாலே, அவங்க குடும்பமே இன்னிக்கு சபைக்கு வரலே.

---

பெரியப்பா, அங்கே மாடத்திலே உக்கார்ந்திருக்காங்களே, அவங்களை நான் விரும்பறேன்.

கவலைப்படாதே மகனே, அவங்களையே உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேன்.

--

மாமா, நம்ம சென்னை கிங்ஸ் ஜெயிச்சிடுச்சு!!!

சூப்பர்டா மாப்ளே...

---

தாத்தா, அடுத்தது நான் பேசட்டுமா?

இருடா பேராண்டி, அவசரப்படாதே. நான் சொல்றேன்.

Read more...

Sunday, May 25, 2008

ஒரு அமைச்சரின் ஒரு மாதிரியான பேட்டி!!!

இது ஒரு கற்பனைதாங்க... நிஜமா நடந்தது கிடையாது!!!

பேட்டிக்காக ஒரு அமைச்சரை சந்திக்கப்போகிறார் ஒரு நிருபர். இவர் அமைச்சரைப்போல் இல்லையே என்று சந்தேகத்துடன் இருக்கும்போது, தான் ஒப்பனை செய்யாததால் வேறு மாதிரி தெரிவதாக அமைச்சர் சொல்கிறார். பேட்டியும் துவங்குகிறது...


நிருபர்: சென்ற தீபாவளி சமயத்தில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்கு பேருந்து/ ரயில் எதிலும் இடம் கிடைக்காமல் ஏகப்பட்ட மக்கள் கஷ்டப்பட்டனர். இரண்டு-மூன்று மாதங்களுக்கு முன்பாகவே எல்லாவற்றிலும் இருக்கைகள் நிரம்பி விட்டன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் இந்த வருடமேனும் ஏதாவது செய்யுமா?

அமைச்சர்: எனக்கு வந்த தகவலின்படி, சென்னையிலிருந்து சுமார் 90% மக்கள் தென் மாவட்டங்களுக்குச் சென்றிருக்கின்றனர். இந்த வருடம், அரசாங்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும். அதாவது, 90% மக்கள் சென்னையிலிருந்து வெளியே போவதற்கு பதிலாக, தீபாவளி சமயத்தில், தென் மாவட்டங்களிலிருந்து 10% மக்கள் சென்னைக்கு வந்துவிட்டால் - போக்குவரத்து பிரச்சினையும் இருக்காது, மக்களும் தம் சொந்தங்களுடன் சந்தோஷமாக பண்டிகைகளை கொண்டாடலாம். எப்படி நமது யோசனை?

நிருபர்: (குழப்பத்துடன்)...இல்லையே.... கணக்கு இடிப்பது போல் தெரிகிறதே?

அமைச்சர்: வீட்டிற்குப் போய் நன்றாக சிந்தித்துப் பார்க்கவும். எனக்கு இதுவே மிகச் சிறந்த யோசனையாக படுகிறது. சரி. அடுத்த கேள்விக்குப் போகலாமா?

நிருபர்: ஆனால், இந்த பிரச்சினைக்கு மூல காரணம் - தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் எல்லாம் சென்னை மற்றும் சென்னையை சுற்றியே அமைக்கப்படுகின்றது. அரசாங்கம் தெற்கே ஏறெடுத்துக்கூடப் பார்ப்பதில்லை - என்ற வாதம் குறித்து?

அமைச்சர்: (கோபமாக) எனக்கு இதுதான் புரியவேயில்லை!!! சென்னையும் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது?...சென்னைக்கு ஒரு தொழிற்சாலை வந்தால், அதனால் பயன்படப்போவது தமிழ்நாடுதானே?

நிருபர்: ஆனால் வளர்ச்சி என்பது தமிழ்நாடு முழுவதும் சீராக இருக்கவேண்டும் அல்லவா?

அமைச்சர்: ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன். தமிழ்நாட்டை ஒரு வீடு என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் ஒரு மூலையில்தானே தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும். அனைவரும் அதனருகே சென்று உட்காருவார்கள். வீடு முழுக்க தொலைக்காட்சிப் பெட்டி வைக்கவேண்டுமென்றால், எல்லோரும் எங்கே போய் உட்காருவார்கள்?

நிருபர்: இது சரியான உதாரணமாக தெரியவில்லையே? சரி.. அடுத்த கேள்வி.. இந்த கேள்விக்காவது சரியான பதில் சொல்லுங்கள். சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அமைச்சர்: இதற்கு சரியான தீர்வை நமது அரசு ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. அதாவது, திரைப்படத் தொழிலை அரசுடமையாக்கிவிட்டால், எல்லா நடிகர்களும் அரசு ஊழியர்களாகி விடுவார்கள். அப்படியே அவர்கள் அரசியலில் ஈடுபட்டு அரசியல்வாதிகளாகி விடலாம். அதற்குப் பிறகு இந்த மாதிரி கேள்விகளே வராது.

மேலும், அரசியல்வாதிகளாகிய நாங்கள் எல்லா இடத்திலும் நடித்துக் கொண்டேயிருக்கிறோம். நடிகர்களாகிய அவர்கள் அரசியல்வாதிகளானாலும், பிறகு எங்களை மாதிரி நடிக்கத்தானே போகிறார்கள். அதனால் அவர்கள் தொழிலை மாற்றுகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சரி சரி.. எனக்கு நேரமாகிவிட்டது. இப்போது நான் செல்ல வேண்டும். பிறகு சந்திக்கலாம். நன்றி.. வணக்கம்...

----

பின்னுரை:

இதற்கு பிறகு என்ன நடந்ததென்றுதான் உங்களுக்கே தெரியுமே?

'தபதப'வென்று ஒரு வேனில் நான்கு/ஐந்து நபர்கள் (வெள்ளைச் சீருடையில்) வந்து "அமைச்சரை" கூட்டிப் போவார்கள். அப்படி வரும்போதுகூட சொல்வார்களே "இவன் எப்படி தப்பி வந்தான் என்றே தெரியவில்லை... ஏறுடா வண்டியிலே" என்று.

Read more...

Saturday, May 24, 2008

மிதிவண்டி - ஒரு கொசுவர்த்தி பதிவு

பக்கத்து வீட்டு நண்பன் ஒரு புதிய மிதிவண்டி வாங்கிவிட்டான். நம் வீட்டிலும் ஒரு வண்டி வேண்டும் என்று நிறைய நாட்கள் கெஞ்சிக் கூத்தாடிய பிறகு, ஒரு நாள் BSA SLR வாங்குவதற்கு அனுமதி கிடைத்தது. ஆனால் அதை வாங்குவதற்கு, வீட்டிலிருந்து ஏதோ ஒரு பொருள் அடகு கடைக்கு சென்றது என்று சில நாட்களுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. நிற்க.

அந்த மிதிவண்டி வாங்குவதற்கு, ஒரு குடும்ப நண்பரும் நானும் பாரிமுனைக்கு சென்றோம். குறளகத்திற்கு எதிரே இருந்த சாலையில் அப்போது வரிசையாக மிதிவண்டி கடைகள் இருந்தன. நாங்கள் ஒவ்வொரு கடையாக ஏறி விலையை விசாரித்த பிறகு, ஒரு இடத்தில் உட்கார்ந்து எந்த கடையில் வாங்கலாமென்று முடிவு செய்து - அந்த கடையில் சென்று எனது வெகு நாள் ஆசையான அந்த மிதிவண்டியை வாங்கினோம்.

முதலிலேயே என் தந்தை சொல்லியிருந்தபடி, பூசை போடாமல் வண்டியை ஓட்டக்கூடாது என்பதால், அந்த மிதிவண்டியை ஒரு ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு எடுத்துவந்தோம். வீட்டில் அந்த வண்டிக்கு மஞ்சள், குங்குமம் தடவி, பூ போட்டு பூசை செய்தபிறகு இரவு 9.30 மணிக்கு ஆசை தீர கொஞ்ச நேரம் ஊர் சுற்றிவிட்டு வந்து படுத்தேன்.

படித்து முடித்ததும் சென்னை பாரிமுனையில் ஒரு வேலை கிடைத்தது. அதற்காக அந்த மிதிவண்டியில் திருவல்லிக்கேணியிலிருந்து அலுவலகத்திற்காக தினமும் பாரிமுனை பயணம். கடற்கரைச் சாலையில் போவது அருமையாக இருக்கும்.


ஒரு நாள் எங்கள் அலுவலக கட்டிடத்திலேயே Aptech கிளை ஒன்றைத் திறந்தார்கள். அலுவலக நண்பர்கள் மூன்று பேர் சென்று பார்த்தோம். அங்கிருந்த Councellor-ஐப் பார்த்தபிறகு, அவருக்காகவே(!!) நாங்கள் மூவரும் அங்கே சேர்ந்து விட்டோம்.

சரி. அலுவலகம் முடிந்தவுடன் கணிணியும் கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியிருக்கும். திடீரென்று எங்கள் அலுவலகத்தை ஆழ்வார்ப்பேட்டைக்கு மாற்றிவிட்டார்கள்.

அதனால், இப்போது மிதிவண்டி மிதிக்கின்ற நேரம் அதிகமாகிவிட்டது.


காலை 6.30 மணிக்கு - திருவல்லிக்கேணி to பாரிமுனை பயணம் - கணிணி வகுப்பிற்காக (7.00 to 9.00)
காலை 9.00 மணிக்கு - பாரிமுனை to ஆழ்வார்பேட்டை - அலுவலகத்திற்கு (9.30 to 5.00)
மாலை 5.30 மணிக்கு - ஆழ்வார்பேட்டை to திருவல்லிக்கேணி - வீட்டிற்கு.


இந்த பயணம் சில நாட்களுக்கு பிறகு இன்னும் அதிகரித்துவிட்டது.


அதாவது, வாரத்திற்கு மூன்று நாட்கள் தியாகராய நகரில் (டி. நகர் என்று சொல்லக் கூடாதாமே!!!) ஒரு பகுதி நேர வேலை ஒப்புக்கொண்டு விட்டேன். அதனால், வாரத்தில் மூன்று நாட்கள் மாலை 5.30 மணிக்கு ஆழ்வார்பேட்டையிலிருந்து தியாகராய நகர் - பின்னர் இரவு 8.30 மணிக்கு திருவல்லிக்கேணி.

ஒரு வருடத்திற்கு மேலாக மேற்கூறிய பயணம் இருந்தது என்று இன்று நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது.

அமெரிக்கா வந்தபிறகு சென்ற வருடம் நயாகராவிற்குப் போயிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்தில் ஒரு மிதிவண்டி வாடகைக்கு எடுத்தோம். கடவுளே, என்னால் ஒரு ஐந்து நிமிடம் கூட மிதிவண்டியை ஓட்டமுடியவில்லை. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி, நண்பர்களெல்லாம் வெறுப்பேற்றி (அவர்களுக்கும் அதே கதைதான்!!!) - தங்கமணி - உங்களுக்கு வயசாயிடுச்சு என்று என்னை ஓட்டி - ஒரு பதிமூன்று வருடத்திற்கு முன்பாக ஒரு நாளைக்கு 15-20 கிமீ ஓட்டியவன், இப்போது கொஞ்ச நேரம் கூட ஓட்டமுடியவில்லை என்று எண்ணும்போது - கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது!!!


Read more...

Friday, May 23, 2008

தொலைபேசியில் பதியும் Voice Messages!!!

உங்களுக்கு தொலைபேசியில் இப்படியெல்லாம் Voice Messages வந்திருந்தால் - சிரிப்பீர்களா, மாட்டீர்களா?

ஹலோ. நாந்தான் பேசறேன்... ச்சீ.. நாயே... நக்காதே.. ஹலோ.. ஹலோ.. சரி நான் அப்புறம் பேசறேன்..

ஏய்.. நாந்தான் பேசறேன். யாருன்னு கண்டுபிடி பாப்போம். மறுபடி போன் பண்ணு...

ஹலோ. ஏம்பா நாந்தான்.. ம்ம்ம்ம்... ஏதோ சொல்லணும்னு போன் பண்னேன். மறந்துட்டேன். உனக்கு ஞாபகம் வந்தா போன் பண்ணு... ஓகேவா..

ம். ஹலோ. லொக்.. லொக்.. இந்த இருமல்... லொக்..லொக்.. எனக்கு போன் பண்ணுங்க..

ஏங்க.. உங்களுக்கு இப்போ ஒரு போன் வந்துச்சு. யார்னு தெரியல.. நான் நம்பர் பாக்கறதுக்குள்ளே கட்டாயிடுச்சு. உங்களை அர்ஜெண்டா போன் பண்ணச் சொன்னாங்க..

ஹலோ.. தம்பி. ஆஆஆ.. ஏண்டா சூடா இருக்குன்னு சொல்லக்கூடாதா?.. அறிவிருக்கா இல்லையா?.. ஹலோ..

ஹலோ.. அண்ணாச்சி.. என்னோடது சீக்கிரம் கட்டாயிடும். நீங்க மறுபடி போன் பண்றீங்களா?..

Read more...

Thursday, May 22, 2008

ATG (Asked To Go) - அரைபக்க கதை

சுரேஷ் தன்னைத்தானே நொந்துகொண்டான்.

கொடியதிலும் கொடியது - தனக்குக் கீழ் வேலை பார்ப்பவனை (ரமேஷ்) - இன்றோடு உன் வேலை முடிந்துவிட்டது என்று வேலையை விட்டுத் தூக்குவது. இப்போது இது எல்லா இடத்திலும் சகஜமாகிவிட்டாலும், இவ்வளவு நாள் நண்பனைப் போல் பழகியவனிடம் இதை எப்படி சொல்வது?

என்ன சொல்லவேண்டுமென்று ஒரு முறை தனக்குத்தானே சொல்லிப்பார்த்துக் கொண்ட பிறகு, தொலைபேசியில் கூப்பிட்டான்.

"ரமேஷ், ஒரு நிமிடம் என் அறைக்கு வரமுடியுமா?"

தொண்டையை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தபோது, சுரேஷின் தொலைபேசி அலறியது. மறுமுனையில் சுரேஷின் பாஸ்.

"சுரேஷ், ஒரு நிமிடம் என் அறைக்கு வரமுடியுமா?"

சுரேஷ், பாஸின் அறைக்குள் நுழைந்தான்.

"சுரேஷ், வாங்க. நான் உங்ககிட்டே ஒரு ஐந்து நிமிடம் பேசணும்..." - தயக்கத்துடன் ஆரம்பித்தார் பாஸ்.

அப்போது அவரின் தொலைபேசி அலறியது...

Read more...

Thursday, May 15, 2008

நான் சொல்லிக்கொடுத்து ஒருவர் +2வில் 1163/1200...!!!

சென்னையில் ஒரு தூரத்து உறவினரின் பெண் நடந்து முடிந்த +2 தேர்வில் 1163 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நேற்று அவர் தாயாரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.

"எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆறாம் வகுப்பிலிருந்து +2 வரைக்கும் இவர் எடுத்த மதிப்பெண்களைக் கூட்டினாலே, அது 1163-ஐ விட கம்மியாகத்தான் இருக்கும்" - இது சந்தடிசாக்கில் தங்கமணி என்னைப் பற்றி அவரிடம் கூறியது.


பிறகு நான் அந்தப் பெண்ணிடம் வாழ்த்துக்கள் கூறிவிட்டு 'ஏதோ, நான் கணக்கு சொல்லிக்கொடுத்து வளர்ந்த பொண்ணு, இவ்ளோ மதிப்பெண்கள் எடுத்திருப்பது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு' என்றேன்.


திடீர்னு என்ன ஆச்சுன்னே தெரியலே, அந்தப் பெண்ணிற்கு கோபம் வந்துவிட்டது.


"என்னது, நீங்க எனக்கு கணக்கு சொல்லிக்கொடுத்தீங்களா? நாம ரெண்டு பேரும் பார்த்தே நான்கு வருடமாயிடுச்சு. நீங்க எப்போ எனக்கு சொல்லிக்கொடுத்தீங்க?..." அப்படின்னுட்டாங்க.

நான், "என்னம்மா, மறந்துட்டியா!! நீ ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் நான் உங்க வீட்டுக்கு வந்திருந்தேன். நீ கணக்கு புத்தகம் காணோம்னு தேடிண்டிருந்தே. அங்கே கீழே கிடந்த புத்தகத்தை நான் கண்டெடுத்து, இங்கே பாரும்மா, கணக்கு புத்தகம் இங்கேயிருக்கு அப்படின்னு சொல்லிக் கொடுத்தேன். ஞாபகம் வருதா..." அப்படியென்றேன்.

அதற்குப்பிறகு அந்தப் பெண் கோபத்தில் கூறியவையெல்லாம் என் காதிலும் விழவில்லை, இந்த பதிவுக்கும் தேவையில்லை!!!

Read more...

Wednesday, May 14, 2008

நடிகர்களை மக்கள் கண்டுக்காமெ விட்டுட்டாங்கன்னா!!!

முன்னுரை:

'படப்பிடிப்பில் நடிகரைக் காண ரசிகர்கள் அலைகடலென திரண்டனர்' - 'துணிக்கடை திறப்புக்கு வந்திருந்த நடிகையைக் காண வந்த மக்கள் அடிதடி, போலீஸ் தடியடி' - இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி நாம் செய்திகளில் பார்க்கலாம்.

நம் மக்களுக்கு திடீரென்று ஞானம் வந்துடுச்சுன்னு(!!) வெச்சிப்போம். அதாவது யாரும் எந்த நடிகரையோ / நடிகையையோ படப்பிடிப்பில் / விழாவில் கண்டுக்காமெ விட்டுட்டாங்கன்னா, அந்த நடிகர்கள் என்ன செய்வாங்கன்னு ஒரு சிறு கற்பனை.

டிஸ்கி:

இந்த பதிவில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. அவை யாரையாவது குறிப்பிடும்படி இருந்தால், அது தற்செயலானதுதான்.


இனி பதிவு.


'சுவாமி சத்யானந்தா - புகழ்பெற்ற சாமியார்' - புது போர்டு பளபளக்கிறது. சாமியாரைப் பார்ப்பதற்கு முன் நுழைவுத்தாளை நீட்டுகின்றனர். 'மூன்று கேள்விகள் - மூவாயிரம் ரூபாய்' . கேள்விகளை முன்கூட்டியே எழுதிவைத்துக்கொள்ள வேண்டும். உள்ளே போய் முழிக்கக்கூடாது என்று சீடர்கள் சொல்கின்றனர்.


புகழ்பெற்ற நடிகர் அவர். சரசரவென்று வருகிறார். நுழைவுத்தாளை பூர்த்தி செய்துவிட்டு சாமியாரைப் பார்க்க உள்ளே போகிறார்.


வணக்கம் சாமி.
வா மகனே. உட்கார். எப்படி இருக்கிறாய். என்ன பிரச்சினை உனக்கு?



சாமி, என்னைத் தெரிகிறதா?. சரி. ஒப்பனை இல்லாமல் எனக்கே என்னைத் தெரியாது. நானே சொல்கிறேன். சாமி, நாந்தான் நடிகர் ரவிகாந்த். ஒரு வாரமாக பயங்கர குழப்பத்தில் உள்ளேன். மன அமைதிக்காக உங்களை பார்த்துப் போகலாமென்று வந்துள்ளேன்.


அப்படியென்ன குழப்பம். எதுவாயிருந்தாலும் தயங்காமல் என்னிடத்தில் கூறு மகனே...


ஒரு வாரமா என்னை யாரும் கண்டுக்கவே மாட்றாங்க. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல.


கொஞ்சம் விளக்கமா கூறு மகனே.


இந்த பிரச்சினை போன வாரம்தான் ஆரம்பிச்சதுன்னு நினைக்கிறேன். பொதுவா நான் எங்கேயாவது பேச ஆரம்பிச்சாலே மக்கள் எல்லாரும் புரியுதோ இல்லையோ, அமைதியா, ஆர்வமா என் பேச்சைக் கேப்பாங்க. ஆனா போன வாரம்தான் இந்த சம்பவம் நடந்தது.


ஏதோ ஒரு தேர்தல்லே 'வாய்ஸ்' கொடுக்கணும்னு என்னை வரச்சொல்லியிருந்தாங்க. நானும் 'வாய்ஸ்' கொடுத்து ரொம்ப நாளாச்சேன்னு அந்த கூட்டத்துக்கு ரெண்டு/மூணு குட்டிக்கதைகளை ரெடி பண்ணிண்டு போயிருந்தேன்.

'வாய்ஸ்' கொடுத்தியா?

முழுசா கேளுங்க. அன்னிக்கு வீட்டிலே என்ன சாப்பிட்டேன்னு தெரியல. மைக்குக்கு முன்னாலே போய் நின்னு பேச்சை ஆரம்பிக்க போறேன்.. அப்போ பாத்து 'ஏவ்வ்வ்வ்', 'ஏவ்வ்வ்' அப்படின்னு ரெண்டு புளிச்ச ஏப்பம் வந்துடுச்சு. நானும் வீட்லே செய்ற மாதிரி வாயைத் திறந்து நல்லா சத்தமா ஏப்பம் விட்டுட்டேன்.

கூட்டத்திலேயிருந்து ஒருத்தன் 'தலைவ்ர் வாய்ஸ் குடுத்துட்டார்டா' அப்படின்றான். இன்னொருத்தன் 'தலைவரோட வாய்ஸ் சூப்பர்டா' அப்படின்றான். உடனே அங்கே பயங்கர சிரிப்பு மற்றும் கைதட்டல். அதுக்கப்புறம் என்னை பேசவே விடலை. கூட்டத்தில் எல்லோரும் மாத்தி மாத்தி ஏப்பம் விட்டு என்னை வெறுப்பேத்திட்டாங்க. எனக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. அங்கேயிருந்து பேசாமயே திரும்பி வந்துட்டேன்.

நீ அப்படி செய்திருக்ககூடாது மகனே. கோபம்தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம். நீ தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்து உன் கோபத்தை குறைக்கணும். யார் உன்னை வெறுப்பேற்றினாலோ / கோபமூட்டினாலோ நீ எளிதில் கோபமடையாதவாறு உன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சாமி, அப்படி சொல்வது மிகச் சுலபம். ஆனால், செய்வது மிகக்கடினம்.

ரொம்ப சரி. அதற்கு சில நாள் ஆகும். ஆனா முயற்சி செய்யணும். பொறுமை கடலினும் பெரிது. அந்த ஒரு சம்பவத்தை வைத்து, நீ ரொம்ப குழம்பிப்போயிருக்கே. இது எல்லாருக்கும் நடக்கறதுதான்.


இதையும் கேளுங்க, நேத்து முதலமைச்சர் போற வழியிலே நான் திடீர்னு என் வண்டியை நிறுத்தி கீழே இறங்கிட்டு, சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன். நிறைய பேர் போறாங்க வர்றாங்க - ஒருத்தனும் என்னை கண்டுக்கவே மாட்றான்.

அப்போ பாத்து ஒருத்தன் என்கிட்டே தயங்கி தயங்கி வந்தான். சரி ஆட்டோகிராப்தான் கேக்கப் போறான் அப்படின்னு சந்தோஷமாயிருந்தேன். அவன் வந்து - சார், நெருப்பு இருக்குதா? அப்படிங்கறான். நான் யாருன்னு அவனுக்கு தெரிஞ்சா மாதிரியே காட்டிக்கலை. எனக்கு அழுகை அழுகையா வந்தது.


அங்கேயிருந்த போலீஸ்காரரோ - என்ன, வண்டியை எடுக்கறியா, இல்லை 'Tow' பண்ணட்டுமா? அப்படின்றார். எனக்கு பயங்கர அதிர்ச்சியாயிடுச்சு. உடனடியா வண்டியை எடுத்துட்டேன். நம்ம தமிழக மக்களுக்கு ஒரே வாரத்துலே என்ன ஆயிடுச்சு? ஒண்ணுமே புரியலே.


மகனே. மக்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல வேறே பொழுதுபோக்குகள் நிறைய வந்துவிட்டது. அதனால் அவர்களுக்கு திரைப்பட நடிகர்களின் மேல் இருந்த மோகம் குறைந்துவிட்டதுன்னு நினைக்கிறேன். இன்னும் சில நாள் பொறுமையா இருந்தா வெற்றி உனக்கே. மறுபடி எல்லார் பார்வையும் உன் மேல் விழ நான் சொல்ற இந்த ஸ்லோகத்தை தினமும் 1008 தடவை வீட்டில் சொல்லவும். கூடவே இந்த யாகத்தை செய்து விடவும்.

எனக்கு என்ன பயம்னா, என்னை சேந்தவங்களும் என்னை கண்டுக்காமெ விட்டுட்டாங்கன்னா நான் வாழ்க்கையையே வெறுத்துடுவேன். இப்படித்தான் பாருங்க, இவ்ளோ வருஷமா என்னோட இருந்த என் ரசிகர் மன்றத் தலைவரும் ஒரு வாரமா காணாமெ போயிட்டாரு.


அப்படியா?

ஆமா. ஆனா இவ்ளோ நேரம் உங்ககிட்டே பேசினதுலே எனக்கு ரொம்ப திருப்தியா, மனசு லேசானது மாதிரி இருக்கு. வெளியே சொன்னாமாதிரி நீங்க சக்தியானவர்தான்னு ஒத்துக்கறேன். இனிமே நீங்கதான் எனக்கு குருவா இருந்து உபதேசம் பண்ணனும்.

அட, அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. என்னை நல்லா பாரு (சாமியார் தாடியை விலக்கி காண்பிக்கிறார்). நாந்தான் உன்னுடைய ரசிகர் மன்ற தலைவர். இவ்வளவு வருடமா உன் பேரை வெச்சி நான் பந்தா காட்டிட்டிருந்தேன். மக்கள் உன்னையே மறந்துட்டாங்களா, என்னையும் ஒருத்தனும் மதிக்கலை.


எனக்கும் வாழ்க்கை வெறுத்துப்போயிடுச்சு. தினமும் ஒரு பத்து பேராவது என்னை வந்து பாத்து, என்னை புகழ்ந்து பேசலேன்னா, எனக்கு தூக்கமே வராது. சரி அதுக்கு ஒரே வழி சாமியாரா போய்விடவேண்டியதுதான் - மக்களும் வந்து பாப்பாங்க, பணமும் சேரும் அப்படின்னு ராவோட ராவா சாமியாராயிட்டேன். பேசாமே நீயும் சாமியாராயிடு. நல்ல கலெக்சன் ஆகுது. என்ன சொல்றே?


அடப்பாவி.. நீயா?... இதிலே சொல்றதுக்கு என்ன இருக்கு. ஆனா ஒரு கண்டிஷன். நாந்தான் குரு. நீ எனக்கு சிஷ்யன். ஓகேவா...



சரி சரி. நடிப்பே வரலேன்னாகூட உன்னை மக்கள் நடிகனா ஏத்துக்கலையா. அதேபோல் ஒண்ணும் தெரியலேன்னாகூட உன்னை என் குருவா ஏத்துக்கறேன். வா. இந்த காவி உடையை போட்டுக்கிட்டு இங்கே வந்து உக்காரு...



(இரண்டு பேரும் சேர்ந்து)
ஓம்..ஓம்..ஓம்..


Read more...

Tuesday, May 13, 2008

இப்போதும் அம்மா ஆட்சிதான் நடக்கிறது!!!


May 14, 2001 - திங்கட்கிழமை

இன்றிலிருந்து சரியாக ஏழு வருடங்களுக்கு முன் நடந்த சமாச்சாரம் இது.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படும் நாள். மதியத்துக்குள் மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு தமிழகத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் நாள்.

தேர்தலில் வெல்லப்போவது - தங்கள் வேட்டியே கழண்டு விழுந்தாலும் அம்மா வந்துதான் ஏதாவது சொல்லவேண்டும் என்று சொல்லும் அமைச்சர்களை உடைய அம்மா கட்சியா அல்லது நாளொரு கலை நிகழ்ச்சியிலும் பொழுதொரு தொலைக்காட்சி விழாவிலும் பங்கேற்று சிறப்பிக்கும் அமைச்சர்களை உடைய ஐயா கட்சியா என்று நிர்ணயிக்கும் நாள்.

இந்த இடத்திலே 'cut' செய்றோம்.
சென்னை நங்கநல்லூரில் ஒரு திருமண மண்டபம். காலை 7.30 மணிக்குள்ளேயே முகூர்த்தம் முடிந்துவிட்டதால் சாப்பிடும் இடம் மட்டும் பரபரப்பாக இருக்கிறது. அனைவரும் தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

அன்று காய்ந்த நாள் (Dry day) என்று தெரியாமல் ஊரிலிருந்து 'கையிருப்பு' இல்லாமல் வந்துவிட்ட நண்பர்களும், சிலபல பெரிசுகளும் சிறிய வானொலிப்பெட்டி வைத்துக்கொண்டு ஆங்காங்கே தேர்தல் நிலவரங்களைக் கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கின்றனர்.
எதிர்ப்பார்த்தபடி அன்று மதியமே முடிவுகள் தெரிந்துவிட்டன. ஒரு தடவை நீங்க, ஒரு தடவை நாங்க அப்படின்னு 'அவங்க' ரெண்டு பேருமே ஒப்பந்தம் போட்டு வைத்துக்கொண்டதைப் போல் இந்த தடவை 'அம்மா' வெற்றி பெற்றுவிட்டார்.

அனைவரும் மாப்பிள்ளையை கலாய்க்கின்றனர். "மாப்ளே, தமிழகத்துலே மட்டுமல்ல, உன் வாழ்க்கையிலும் என்ன நடக்கப்போகுது, யார் ஆட்சி செய்யப்போறாங்கன்னு தெரிஞ்சு போச்சு"!!!.

அவங்க சொன்னாமாதிரியே அந்த மாப்பிள்ளையின் வாழ்விலும் அன்றைய தேதியிலிருந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தே விட்டது. வீட்டில் அம்மா (அவர் மனைவி) ஆட்சி மாற்றம் வேண்டும் என்று அவர் அவ்வப்போது ஏதாவது 'புரட்சி' செய்தாலும், அந்த அம்மாவைப் போலவே இந்த அம்மாவும் இரும்புக்கரம் கொண்டு அந்த புரட்சிகளை அடக்கிவிடுவார்.

தமிழகத்திலாவது ஐந்து வருடத்திற்குப் பிறகு, அந்த 'ஒப்பந்தத்தின்படி' ஆட்சி மாற்றம் நடந்து விட்டாலும், நம் நண்பரின் வாழ்வில் மட்டும் ஏழு வருடங்களானாலும் இன்றைய தேதி வரை 'அம்மா' ஆட்சியென்பது மாறவேயில்லை.

சரி. ஏழு ஆண்டுகளாகிவிட்டது. பொறுத்தது போதும். பொங்கி எழுந்துடலாம் அப்படின்னு அந்த மாப்பிள்ளை (இன்னுமா!!!) நேற்று அந்த அம்மாகிட்டே (மனைவிதாங்க) பேசப்போறார்.
ம்.ம்கூம்.. (கனைக்கிறார்)..

ம். வந்திருக்கிறது தெரியுது... என்ன விஷயம்?

அதாவது... நமக்கு கல்யாணமாகி இன்னியோட ஏழு ஆண்டுகளாகி விட்டது.

அதான் தெரியுமே? அதுக்கென்ன இப்போ?

இவ்ளோ நாளா வீட்லே நீதான் ஆட்சி செஞ்சிண்டுருக்கே. இனிமேலாவது என் கையில் ஆட்சி ஒப்படைக்ககூடாதா?

இதோ பாருங்க. உங்களுக்கு என் இதயத்திலே கண்டிப்பா இடமுண்டு. ஆனா ஆட்சியையோ, ஆட்சியில் பங்கையோ கேட்காதீங்க. ஆமா. சொல்லிட்டேன்.

அதான் உன்னோட கடைசி முடிவா?

(சட்டென்று பின்ணணி இசை மாறுகிறது. மனைவி சென்டிமென்ட் (தமிழில்?) மூடுக்கு தாவுகிறார்.)

இங்கே பாருங்க. ஏழு ஆண்டுகள் மட்டுமல்ல. இன்னும் ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் நாந்தான் உங்களுக்கு மனைவி. அந்த எல்லா ஜென்மங்களிலும் என்னோட ஆட்சிதான். நான் எது செஞ்சாலும் நம்மோட நல்லதுக்குதான் செய்வேன்னு உங்களுக்குத் தெரியாதா, என்ன?

சரி. வாங்க. உங்களுக்குப் மிகவும் பிடித்த 'அல்வா' செஞ்சிருக்கேன். வந்து சாப்பிடுங்க.

( நம் நண்பரும் வழக்கம்போல் செண்டிமென்டுக்கு பணிந்து விடுகிறார்).

இப்படியாக, இப்போதும் இங்கு அம்மா ஆட்சிதான் நடக்கிறது (அப்பாடா, தலைப்பு வந்துடுச்சு!!!)

பிகு: இந்த மாப்பிள்ளை யாருன்னு உங்களுக்கே இன்னேரம் தெரிஞ்சிருக்கும். ஒரு தடவை லேபிளையும் பாத்திருங்க.

Read more...

Monday, May 12, 2008

கிபி 2030 - அட்சய த்ரிதியை.

சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கை:

கடந்த 5 ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், அட்சய த்ரிதியையை முன்னிட்டு தங்கம் வாங்குவதற்கு ஏற்ற நாட்கள் - அட்சய த்ரிதியைக்கு முன்னால் ஒரு வாரமும், பின்னால் ஒரு வாரமும் - ஆக மொத்தம் 15 நாட்கள் என்று புகழ்பெற்ற ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

சென்ற 10 ஆண்டுகளாக தங்கம் விற்பனை வருடத்திற்கு 100% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் விற்பனை அதே அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகர் சங்க அறிக்கை:

அட்சய த்ரிதியைக்கு மக்கள் தங்கள் கணவன் / மனைவிக்கு கீழ்க்கண்ட வண்ணங்களில் ஆடைகள் வாங்கிக்கொடுத்தால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதோடு அவரவர் வாழ்வில் சந்தோஷமாக இருப்பார்கள் என்றும் காலம் காலமாக நம்பப்படுகிறது.

இதனால், கடந்த பல வருடங்களாக அட்சய த்ரிதியை அன்று மக்கள் தங்கள் கணவன் / மனைவிக்கு, பண்டிகைக்கு ஆடைகள் வாங்கித் தருவது அதிகரித்து வருகிறது. அதேபோல, இந்த ஆண்டும் மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆடைகளும் கையிருப்பில் உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அட்சய த்ரிதியை அன்று:

கணவர்கள் மனைவிக்கு - பச்சை நிறத்தில் புடவை, சுடிதார் வாங்கித் தரவேண்டும்.
மனைவிகள் கணவருக்கு - மஞ்சள் நிறத்தில் சட்டை, கறுப்பு நிறத்தில் பேண்ட் வாங்கித் தரவேண்டும்.

அரசு ஊழியர்கள் சங்கத்தின் அறிக்கை:

அட்சய த்ரிதியை தினத்தன்று தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கப்போவதற்காக ஒரு நாள் அரசு விடுமுறை அளித்து சில ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அன்று எந்த கடைக்குப் போய் வரிசையில் நின்றாலும், வெளியே வருவதற்கு அடுத்த நாள் ஆகிவிடுவதால், இந்த ஆண்டிலிருந்து அட்சய த்ரிதியைக்கு இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அளிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் இந்த அறிவிப்பு வராவிட்டால், அடுத்த திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அரசு அறிக்கை:

அட்சய த்ரிதியை கொண்டாட்டங்கள் அதிகரித்து வருவது குறித்து தமிழக சட்டசபையில் கடந்த ஒரு வாரமாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் கீழ்க்கண்டவாறு முடிவு செய்யப்பட்டது.

அட்சய த்ரிதியை ஒரு தமிழர் பண்டிகையே அன்று. அந்த பண்டிகை, வைகாசி** மாத வளர்பிறை மூன்றாம் நாள் கொண்டாடப்படுவதற்கு போதிய சரித்திர சான்றுகள் இல்லை.

அதனால், இந்த ஆண்டிலிருந்து, அட்சய த்ரிதியை வைகாசி மாதத்திற்கு பதிலாக, புரட்டாசி மாத வளர்பிறை மூன்றாம் நாள் கொண்டாடப்படவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அரசு ஆணை இந்த வாரமே வெளியிடப்படும்.

**சந்திரனின் சுழற்சியைக் கொண்ட பஞ்சாங்கத்தின்படி.

Read more...

Friday, May 9, 2008

மாயா மாயா, எல்லாம் மாயா - அரைபக்கக் கதை

ஒரு பிரபல நடிகர் திடீரென்று எல்லாவற்றையும் துறந்து ஆன்மீகவாதியாகிவிட்டார் என்பதுதான் எல்லா ஊடகங்களிலேயும் இன்றைய பரபரப்புச் செய்தி. அவரை பேட்டி காண அனைத்து பத்திரிக்கைகளிலிருந்தும், தொலைக்காட்சியிலிருந்தும் நிருபர்கள் அவரது இல்லத்தில் கூடியிருந்தனர்.

திடீரென்று அறைக்குள் நுழைந்தார் நடிகர். கூடவே அவரது உதவியாளர்.

எல்லோருக்கும் வணக்கம்.

உங்களைப்பற்றி இன்று வெளிவந்திருக்கும் செய்தி உண்மைதானா?

உண்மைதான். சொல்லப்போனால் உண்மை, பொய் எல்லாமே மாயாதான்.

இனிமே உங்க குடும்பம், குழந்தைகள்?

முதலிலேயெ சொன்னாமாதிரி, எல்லாம் மாயாதான்.

இவ்வளவு நாட்களாய் இல்லறத்தில் இருந்துகொண்டே ஆன்மீகவாதியாய் இருந்தீர்கள். இப்போது திடீரென்று எல்லாவற்றையும் துறந்துவிட்டீர்களே, என்ன காரணம்?

இவ்வளவு நாள் எனக்கு தெரியவில்லை. நேற்று திடீரென்று ஞானம் தோன்றியது. இந்த மனைவி, மக்கள், அரசியல், ரசிகர்கள் எதுவும் தேவையில்லை. ஏனென்றால் எல்லாமே மாயாதான். அதனால், எல்லாவற்றையும் துறந்துவிட்டேன்.

அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?

ரிஷிகேசத்தில் நான் கட்டியிருக்கும் ஆசிரமத்தில் இருந்துகொண்டு, இந்த உலகத்திற்கு, எல்லாமே மாயாதான் அப்படியென்று காட்டப்போகிறேன்.

பேட்டி முடிந்தது. நான் போகவேண்டும். அனைவருக்கும் நன்றி.

( நடிகர் திரும்பி உதவியாளரிடம், "மாயா, போகலாமா..." என்று எழுந்து போனார்).

டிஸ்கி: இந்த வார குமுதத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரைக்கும் இந்த கதைக்கும் கொஞ்சம் கூட தொடர்பேயில்லை என்று தயவு செய்து நம்பவும்.

Read more...

Thursday, May 8, 2008

மல்டி குருவி மார்க்கெட்டிங்!!!

ஆறு வித்தியாசங்கள் மாதிரி இது ஆறு ஒற்றுமைகள். நல்லா இருக்கா சொல்லுங்க!!!

காப்பி:

எம்.எல்.எம்: ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் மோசடி செய்த கும்பல் தமிழ் நாட்டுக்கு வரும்.

குருவி: ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் எடுக்கப்பட்ட படம் (Mostlyஆந்திரா) தமிழில் காப்பி செய்யப்பட்டு வெளிவரும்.

பந்தா:

எம்.எல்.எம்: ஏதாவது ஒரு ஹோட்டலில் மக்களை கூட்டி இவுங்க செய்ற பந்தா, அடேங்கப்பா...

குருவி: வித்தியாசமான கதை, மாறுபட்ட கோணம், டாக்டருக்கு ஒரு திருப்புமுனை படம் - இப்படியெல்லாம்தானே விளம்பரப்படுத்தினாங்க..

கூட்டம்:

எம்.எல்.எம்: முன்னாடி எவ்ளோ திட்டத்திலே ஏமாந்தாலும், மக்கள் திரும்ப திரும்ப கூட்டமா போவாங்க.

குருவி: முன்னாடி எவ்ளோ படத்தை பாத்து ஏமாந்தாலும், மக்கள் திரும்ப திரும்ப கூட்டமா போய் ஏமாறுவாங்க.

வசூல்:

எம்.எல்.எம்: வசூல் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. குறைந்த பட்சமே 1 கோடிதான்.

குருவி: மக்கள் நொந்து நூடுல்ஸ் ஆனாலும், 100+, 150+ நாட்களுக்கு குறையாமெ ஓட்டி வசூல் செய்வாங்க.

சமாளிப்பு:

எம்.எல்.எம்: நான் அந்த மீட்டிங்குக்கு போனேன். ஆனா பணமெல்லாம் கட்டலேப்பா. (வயித்தெரிச்சலை கிளப்பாதேப்பா. பத்தாயிரம் போச்சு).

குருவி: வெயில் கொடுமை தாங்கமே, ஏசியில் உக்காரலாமேன்னுதான் அந்த படத்துக்கு போனேன். (குடும்பத்தோட போய் 500 ரூபாய் செலவு செஞ்சி எல்லோருக்கும் தலைவலி வாங்கி வந்தது எனக்குத்தானே தெரியும்).

அடுத்து:

எம்.எல்.எம்: ஒரு ஆறு மாதம் கழித்து மறுபடி ஏதாவது ஒரு மோசடி செய்தி வரும்.
குருவி: ஒரு ஆறு மாதம் கழித்து மறுபடி ஏதாவது ஒரு மொக்கை படம் வரும்.

Read more...

Wednesday, May 7, 2008

ஒரு புதிய வலைப்பதிவர் உருவாகிறார்!!! - ஒரு (பெரிய) ஜாலி கதை

ஹலோ. யாருப்பா அது. என் அலமாரியை நோண்டிக்கிட்டிருக்கிறது?

டாக்டர், நான் சொல்றேன். அவர் என் கணவர்தான். தப்பா எடுத்துக்காதீங்க. அவர் பதிவு போடுவதற்காக ஏதாவது மேட்டர் கிடைக்குமான்னு உங்க அலமாரியை பார்த்துக்கிட்டிருக்கார்.

என்னது, பதிவா? அப்படின்னா. நீங்க எதுக்காக வந்துருக்கீங்க? யாருக்கு என்ன பிரச்சினை?

டாக்டர். பிரச்சினை என் கணவருக்குதான். அவர் ஒரு மென்பொருள் நிபுணர். ஆனா சமீபகாலமா, தமிழ் வலைப்பதிவு உலகத்திலெ நுழைஞ்சி தினமும் ஒரு பதிவு போட்டுண்டிருக்கார். அந்த பதிவை தமிழ்மணம் திரட்டியில் இணைச்சிருக்கார். அந்த பதிவு போடுவதற்கான மேட்டர் தேடுவதில் ரொம்பவே மெனக்கெடறார்.

சோ, அதில் என்ன பிரச்சினை?

பதிவு எழுத ஆரம்பிச்சபிறகு, குடும்பத்தை சரியாவே கவனிக்கமாட்டேங்கிறார். அலுவலகத்தை விட்டு வந்து வீட்டிலேயும் மடிக்கணினி வெச்சிண்டு உக்கார்ந்தார்னா, பக்கத்துலே குண்டு விழுந்தாக்கூட அவருக்கு கேக்காது. அப்படியும் தொந்தரவு செய்தோம்னா, உடனே கோபம் வந்துடும். எரிஞ்சி விழுவார். அதனாலே பி.பி இருக்கோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க ப்ளீஸ்.

இருக்கட்டுமேம்மா... ஆழ்ந்து ஈடுபட்டு ஒரு வேலையை செய்றாருன்னா அதுக்காக சந்தோஷப்படறதை விட்டுட்டு ஏன் வருத்தப்படணும்?

ஒரு பதிவு போடறதுக்காக இவரு பண்றதையெல்லாம் கேட்டீங்கன்னா இப்படி சொல்லமாட்டீங்க டாக்டர்.. உதாரணத்துக்கு சொல்றேன் பாருங்க.

அ) தொலைபேசியிலே ராங் நம்பர் வந்தாக்கூட அரை மணி நேரம் பேசறது.

ஆ) போக்குவரத்து சிக்னல்லே நின்னாக்கூட சுத்திமுத்தி பாத்துக்கிட்டே இருக்கார். அந்த ஒரு நிமிஷத்திலே, பக்கத்துலே நிக்கறவங்ககூட பேச்சு வேறே.

இ) மளிகைக்கடை பொட்டலங்கள் மடிச்சி வர்ற பேப்பர்களை வரிக்கு வரி படிக்கறது.

இதெல்லாம் எதுக்குன்னு நினைக்கிறீங்க? பதிவு போட ஏதாவது செய்தி கிடைக்காதான்னுதான். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு டாக்டர். இவரை தமிழ்மணம் பக்கம் போகாதீங்கன்னு சொல்லுங்க.

(டாக்டர் ஒரு பத்து நிமிடம் வலைப்பதிவு/தமிழ்மணத்தை பற்றி அவருடன் பேசுகிறார்).

அப்படியில்லைமா. இவரு தமிழ்மணம் படிக்க/பதிவு போட ஆரம்பிச்சபிறகுதான் ரொம்ப சுறுசுறுப்பா இருக்காருன்னு சொல்ல வரேன். பலதரப்பட்ட விஷயங்களை தெரிஞ்சிண்டிருக்காரு. இந்திய/உலக அரசியல், திரைப்பட/கலையுலக செய்திகள், பக்தி இலக்கியங்கள்/தமிழ்க்கடவுள் பற்றி, கண்ணதாசன்லேர்ந்து திபெத் பிரச்சினை வரைக்கும் அத்தனையும் இவருக்கு அத்துப்படி ஆயிருக்கு. அது ரொம்ப நல்ல விஷயம். மேலும் இதிலே பயப்படறதுக்கு ஒண்ணுமேயில்லை.

சரி டாக்டர். சாதாரண நாள்லே இவரோட நடவடிக்கைகளைப் பாத்து எனக்கு பயமே இல்லை. ஆனா ஏதாவது போட்டின்னு வந்துட்டா இவர் பணற அட்டகாசம் தாங்கமுடியலை. தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வெச்சிடலாம்னு தோணுது.

போட்டியா? அப்படின்னா?

வலையுலகத்துலே அப்பப்போ சில போட்டிகள் நடக்கும். புகைப்படப்போட்டி, கதைப்போட்டி இப்படி. இப்போகூட பாருங்க, ஒரு சங்கம் துவங்கி ரெண்டு ஆண்டுகள் ஆனதை ஒட்டி ஒரு போட்டி வெச்சிருந்தாங்க. இவரும் அதுக்காக ரெண்டு பதிவுகள் போட்டார்.

அப்படியா?

அந்த போட்டிக்காக பதிவு போடணும்னு என்ன கூத்து பண்ணினாருன்னு தெரியுமா டாக்டர்? ரெண்டு வாரமா யாரோடும் பேசலே. ஓய்வறைக்கு போயிட்டார்னா ரெண்டு மணி நேரம் உள்ளே யோசிச்சிண்டே இருப்பாரு. ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் தனியா பேசிண்டே, சிரிச்சிண்டே இருப்பாரு. இவரோடு சேர்ந்து பாருங்க, நானும் ரெண்டு ரெண்டுன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்.

அவளை விடுங்க டாக்டர். நான் ரொம்ப தெளிவா இருக்கேன். ரெண்டு போட்டிக்கு மட்டுமல்ல, அடுத்தடுத்த வருஷத்துக்கான போட்டிக்கும் நான் இப்பவே பதிவு ரெடி பண்ணிட்டேன். அந்த சங்கத்தோட அஞ்சாவது வருஷத்துக்கான போட்டிக்கு - அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி... அப்படின்னு அஞ்சு பதிவுக்கான செய்திகளை தயாரா வெச்சிருக்கேன்.

சரி டாக்டர், நீங்க இன்னும் பிரச்சினையை உணரலைன்னு நான் நினைக்கிறேன். ஒரு பயங்கரமான உண்மையை நான் இன்னும் உங்ககிட்டே சொல்லவேயில்லை.

அப்படியா, அது என்ன?

இவர் ரெண்டு/மூணு வலைப்பூ வெச்சிருக்கார். இவரோட பேர்லே ஒண்ணு, நண்பர்களோட சேர்ந்து ஒண்ணு, அவங்களுக்கே தெரியாம ஒண்ணு இப்படி. எல்லாத்துலேயும் வேறே வேறே பேர்லே எழுதறார். வேறே யாரும் இவருக்கு பின்னூட்டம் போடலேன்னா, இவரே ரெண்டு பதிவுலேயும் மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டுக்கறார். எனக்கு என்னமோ, அன்னியன் படத்துலே வர்றாமாதிரி 'மல்டிபிள் பெர்சனாலிட்டி' பிரச்சினை இருக்குமோன்னு சந்தேகத்துலேதான் உங்ககிட்டேயே வந்தோம்.

சரிம்மா. இவ்ளோ பிரச்சினையை வெச்சிக்கிட்டு நீங்க முன்னாடியே வந்துருக்கலாம். இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. நான் உடனே வேலையில் இறங்கறேன். சார், நீங்க எனக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுக்கணும். என்ன?

(இப்படி சொல்லிவிட்டு டாக்டர் சீரியஸாக ஏதோ எழுத ஆரம்பிக்கிறார். இந்த கதையை படிப்பவர்களுக்காக அவர் எழுதுவதை Zoomin செய்து காட்டுகிறேன். நீங்களே படித்துக்கொள்ளுங்கள்).

முதல் பூ - தனிப்பதிவு - என் அனுபவங்கள்
ரெண்டாவது பூ - என் நர்ஸோடு சேர்ந்து - வாய் விட்டு சிரி
மூன்றாவது பூ - அனானியாக - கதை, கட்டுரை, அரசியலுக்காக

(இப்படியாக மேலும் ஒரு வலைப்பதிவர் பூ தொடுக்க ஆரம்பித்துவிட்டார்).

Read more...

Tuesday, May 6, 2008

பேராசிரியர் அன்பழகன் Vs ஜார்ஜ் புஷ் - ஒரு கற்பனை தொலைபேசிப் பேச்சு!!!

ஹலோ, நாந்தான் அன்பழகன் பேசறேன். புஷ், எப்படியிருக்கீங்க?
என்னத்தெ சொல்றது, இன்னும் கொஞ்ச நாள்தான், நான் அதிபரா இருப்பேன். அதுக்கப்புறம் வேறே யாராவது வந்துடுவாங்க...

என்ன இப்படி சொல்லிட்டீங்க? நான் ஒரு யோசனை சொல்றேன் கேளுங்க. நீங்க உடனடியா கூட்டணி மாறிடுங்க. அப்படி மாறி, எதிர்க்கட்சியோட கூட்டணி வெச்சிக்கிட்டு தேர்தலை சந்திச்சீங்கன்னா, அடுத்த தேர்தல்லெயும் வெற்றி பெற்று, மறுபடி அதிபரா ஆகிடலாம்.

அப்படியா?

நாங்கல்லாம் அப்படித்தான். தேர்தல் வர்ற்த்துக்கு சரியா ஆறு மாசம் முன்னாடி ஏதாவது சாக்கு சொல்லிட்டு எதிர்க்கட்சிக்கு போயிடுவோம். அப்புறம் என்ன, மறுபடியும் வெற்றிக்கூட்டணிதான்.

அதெல்லாம் இங்கே நடக்காதுங்க.. வேறே ஏதாவது பேசுவோம்.

சரி. நான் இப்போ போன் பண்ணினதே, உங்களுக்கு நன்றி சொல்லத்தான். கொஞ்ச நாள் முன்னாடி நான் எங்க மக்கள்கிட்டே பணப்புழக்கம் அதிகமாயிடுச்சு. நகைக்கடையிலேயும், சாப்பாட்டுக்கடைகளிலேயும் கூட்டம் நிரம்பி வழியுது பாருங்கன்னேன். அதையே காப்பி அடிச்சமாதிரி நீங்களும் இந்திய மக்கள் ஜாஸ்தி சாப்பிடறாங்க அப்படின்னுட்டீங்க.. ஆனா, ஒரு விஷயம் மறந்துட்டீங்க. அமெரிக்காவிலேயும் நிறைய இந்தியர்கள் இருக்காங்க. அவங்களும் அரிசி, கோதுமை நிறைய சாப்பிடுவாங்க.

சோ, அதனாலே?

என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க? அப்போ அங்கேயும் அரிசி, கோதுமை விலை ஏறணுமில்லே? அப்போதானே நீங்க சொன்னது நிஜம்னு ஆகும்.

ஓ, அப்படி வேறே இருக்கோ? ஆனா, அமெரிக்காவிலே இருக்கறவங்க கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறேன்.

இப்படில்லாம் நினைச்சா, நீ அரசியல்லே இருக்க லாயக்கேயில்லை. இதோ பாரு, இப்போதான் நீ நிறைய பேருக்கு Economic Stimulus Pay கொடுத்திருக்கே. இந்தியர்களும் நிறைய பேர் அதை வாங்கியிருப்பாங்க. அதனாலே, இப்போ எல்லார்கிட்டேயும் பணப்புழக்கம் ஜாஸ்தியாகியிருக்கும். நான் சொல்றபடி கேளு. அரிசி விலை போன மாசம் 20lb. 16$ இருந்தது. அதை உடனடியா 26$ ஆக்கிடு. ரொம்பவே பிரச்சினை வந்தாக்கா, 1$ அல்லது 2$ குறைச்சிக்கலாம். இங்கே நாங்க பெட்ரோலுக்கெல்லாம் இப்படித்தான் பண்ணுவோம். என்ன? சொல்றது புரிஞ்சுதா?

சரியா சொன்னீங்க. உடனடியா அப்படியே செய்துடறேன். வெச்சிடட்டா?
சரி. பிறகு பாப்போம். ஜார்ஜ் வாஷிங்க்டன் நாமம் வாழ்க.

என்னது? என்ன சொன்னீங்க?
இதோ பாரு, இப்படி பழைய நல்ல தலைவர்கள் யாராவது ஒருத்தர் பேரை அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கணும். அப்போதான் நாம அரசியல்லே இருக்கமுடியும். சரி. இதெல்லாம் உனக்கு எங்கே புரியபோகுது? வை போனை.

செய்தி: கனெக்டிக்கட்டில், சென்ற மாதன் 20lb. அரிசி 16$, இந்த மாதம் 26$. அதுவும் உடனடியா கிடைப்பதில்லை. 2 நாள் பொறுத்திருந்து வாங்கவேண்டியிருக்கிறது.

Read more...

Monday, May 5, 2008

நீங்க எந்த காலத்துக்கும் போக ஒரு சுலபமான வழி!!!




Read more...

Saturday, May 3, 2008

(டி.ஆர்) பாலு திராவிட முன்னேற்ற கழகம் - தமிழகத்தில் மேலும் ஒரு புதிய கட்சி!!!

தன் மகன்களுக்காக கடிதம் எழுதியதில் அமைச்சர் டி.ஆர்.பாலு விவகாரம் வருங்காலத்தில் என்னவாகும் என்று ஒரு சிறு கற்பனை. கீழே கொடுத்திருப்பதெல்லாம் தினத்தந்தி/தினமலர் பத்திரிக்கைகளில் வெளியாகும் 'தலைப்புச் செய்தி' வாக்கியங்கள். விரிவான செய்திகள் உங்கள் கற்பனைக்கே.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்:

- டி.ஆர்.பாலு அமைச்சர் பதவி மாற்றம். கட்சிப்பணிக்கு அழைப்பு
- டி.ஆர்.பாலு திமுகவிலிருந்து ராஜினாமா.
- பாலு திராவிட முன்னேற்ற கழகம் துவக்கம்.

தேர்தலில்:

- பாதிமுக - திமுக கூட்டணி
- டி.ஆர்.பாலு தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி

தேர்தலுக்குப் பின்:

- மத்தியில் அமையவிருக்கும் கட்சிக்கு திமுக ஆதரவு
- பாதிமுக பாதியிலேயே கலைப்பு - கட்சியினர் தாய்க்கழகம் திரும்பினர்
- டி.ஆர்.பாலு மீண்டும் 'மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை' அமைச்சர் ஆனார்.
- மீண்டும் தன் மகன் கம்பெனிக்கு டி.ஆர்.பாலு கடிதம்
- 'கடிதம் எழுதியதில் என்ன தப்பு?' அமைச்சர் கேள்வி

மக்கள்:

- அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா
- 'பிள்ளையார் கண் அடித்தார்' - தமிழகத்தில் பரபரப்பு (மக்கள் மேற்கூறிய பிரச்சினையை மறந்துட்டாங்கோ!!!)


Read more...

Friday, May 2, 2008

யூகேஜி படித்த சிறுமி கேம்பஸில் தேர்வாகி விட்டால்!!!

யூ.கே.ஜி படித்த ஒரு சிறுமி 'கேம்பஸில்' தேர்வாகி ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்ற வருகிறார். அப்போது என்னவெல்லாம் நடக்கும் என்று ஒரு சிறு கற்பனை.


நேத்து 'கோலங்கள்' பாக்கமுடியலே. அதனாலென்ன, இங்கெயிருக்கிற அங்கிள் எல்லோரும் பாத்திருப்பாங்க. Status Meeting-லே அதெதானே பேசபோறாங்க. அப்போ தெரிஞ்சிக்கலாம்.

---

இதோ பாரும்மா, என்னோட மென்பொருள்லே நீ நிறைய தவறுகளை கண்டுபிடித்திருக்கலாம். அதுக்காக, என் அப்பா அம்மாவை நாளைக்கு அலுவலகத்துக்கு கூட்டிண்டு வான்னு சொல்றதெல்லாம் டூ மச். ஆமா.
---
சிரிப்பே வரலேன்னாகூட அந்த அக்கா சொல்றதுக்கெல்லாம், இந்த அங்கிள் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கறாரு?
---


ஒரு வாரமா தினமும் Meeting போடறாங்க. அதிலே தினமும் பேசினதையே பேசறாங்க. ஏன்னு புரியலையே?
---


தப்பு செஞ்சா கடவுள் கண்டுபிடிச்சுடுவாருன்னு அம்மா சொன்னாங்க. அப்போ 'Test Director'தான் கடவுளா?

---

'Multi Tasking' அப்படின்னா என்ன அங்கிள்னு கேட்டதுக்கு, சுடோகு விளையாடிகிட்டே, பாட்டு கேட்டுகிட்டே, காபி குடிச்சிகிட்டே, தமிழ்மணம் பாத்துகிட்டே, ஜிடாக்லே பேசறதுதான் அப்படின்றாரே, நிஜமாயிருக்குமோ?
---

இந்த ஆண்டி ரொம்ப நல்லவங்க. என் அம்மா மாதிரியில்லே. ஏன்னு கேக்கறீங்களா?. என் அம்மா எவ்ளோ நேரம் கதை சொன்னாகூட எனக்கு தூக்கமே வராது. ஆனா, இந்த ஆண்டி பயிற்சி வகுப்பு (Training) எடுக்க ஆரம்பிச்சவுடனே, எல்லோரும் அமைதியா தூங்க ஆரம்பிச்சிடறாங்க...

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP