ஒரு அமைச்சரின் ஒரு மாதிரியான பேட்டி!!!
இது ஒரு கற்பனைதாங்க... நிஜமா நடந்தது கிடையாது!!!
பேட்டிக்காக ஒரு அமைச்சரை சந்திக்கப்போகிறார் ஒரு நிருபர். இவர் அமைச்சரைப்போல் இல்லையே என்று சந்தேகத்துடன் இருக்கும்போது, தான் ஒப்பனை செய்யாததால் வேறு மாதிரி தெரிவதாக அமைச்சர் சொல்கிறார். பேட்டியும் துவங்குகிறது...
நிருபர்: சென்ற தீபாவளி சமயத்தில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்கு பேருந்து/ ரயில் எதிலும் இடம் கிடைக்காமல் ஏகப்பட்ட மக்கள் கஷ்டப்பட்டனர். இரண்டு-மூன்று மாதங்களுக்கு முன்பாகவே எல்லாவற்றிலும் இருக்கைகள் நிரம்பி விட்டன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் இந்த வருடமேனும் ஏதாவது செய்யுமா?
அமைச்சர்: எனக்கு வந்த தகவலின்படி, சென்னையிலிருந்து சுமார் 90% மக்கள் தென் மாவட்டங்களுக்குச் சென்றிருக்கின்றனர். இந்த வருடம், அரசாங்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும். அதாவது, 90% மக்கள் சென்னையிலிருந்து வெளியே போவதற்கு பதிலாக, தீபாவளி சமயத்தில், தென் மாவட்டங்களிலிருந்து 10% மக்கள் சென்னைக்கு வந்துவிட்டால் - போக்குவரத்து பிரச்சினையும் இருக்காது, மக்களும் தம் சொந்தங்களுடன் சந்தோஷமாக பண்டிகைகளை கொண்டாடலாம். எப்படி நமது யோசனை?
நிருபர்: (குழப்பத்துடன்)...இல்லையே.... கணக்கு இடிப்பது போல் தெரிகிறதே?
அமைச்சர்: வீட்டிற்குப் போய் நன்றாக சிந்தித்துப் பார்க்கவும். எனக்கு இதுவே மிகச் சிறந்த யோசனையாக படுகிறது. சரி. அடுத்த கேள்விக்குப் போகலாமா?
நிருபர்: ஆனால், இந்த பிரச்சினைக்கு மூல காரணம் - தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் எல்லாம் சென்னை மற்றும் சென்னையை சுற்றியே அமைக்கப்படுகின்றது. அரசாங்கம் தெற்கே ஏறெடுத்துக்கூடப் பார்ப்பதில்லை - என்ற வாதம் குறித்து?
அமைச்சர்: (கோபமாக) எனக்கு இதுதான் புரியவேயில்லை!!! சென்னையும் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது?...சென்னைக்கு ஒரு தொழிற்சாலை வந்தால், அதனால் பயன்படப்போவது தமிழ்நாடுதானே?
நிருபர்: ஆனால் வளர்ச்சி என்பது தமிழ்நாடு முழுவதும் சீராக இருக்கவேண்டும் அல்லவா?
அமைச்சர்: ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன். தமிழ்நாட்டை ஒரு வீடு என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் ஒரு மூலையில்தானே தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும். அனைவரும் அதனருகே சென்று உட்காருவார்கள். வீடு முழுக்க தொலைக்காட்சிப் பெட்டி வைக்கவேண்டுமென்றால், எல்லோரும் எங்கே போய் உட்காருவார்கள்?
நிருபர்: இது சரியான உதாரணமாக தெரியவில்லையே? சரி.. அடுத்த கேள்வி.. இந்த கேள்விக்காவது சரியான பதில் சொல்லுங்கள். சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
அமைச்சர்: இதற்கு சரியான தீர்வை நமது அரசு ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. அதாவது, திரைப்படத் தொழிலை அரசுடமையாக்கிவிட்டால், எல்லா நடிகர்களும் அரசு ஊழியர்களாகி விடுவார்கள். அப்படியே அவர்கள் அரசியலில் ஈடுபட்டு அரசியல்வாதிகளாகி விடலாம். அதற்குப் பிறகு இந்த மாதிரி கேள்விகளே வராது.
மேலும், அரசியல்வாதிகளாகிய நாங்கள் எல்லா இடத்திலும் நடித்துக் கொண்டேயிருக்கிறோம். நடிகர்களாகிய அவர்கள் அரசியல்வாதிகளானாலும், பிறகு எங்களை மாதிரி நடிக்கத்தானே போகிறார்கள். அதனால் அவர்கள் தொழிலை மாற்றுகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
சரி சரி.. எனக்கு நேரமாகிவிட்டது. இப்போது நான் செல்ல வேண்டும். பிறகு சந்திக்கலாம். நன்றி.. வணக்கம்...
----
பின்னுரை:
இதற்கு பிறகு என்ன நடந்ததென்றுதான் உங்களுக்கே தெரியுமே?
'தபதப'வென்று ஒரு வேனில் நான்கு/ஐந்து நபர்கள் (வெள்ளைச் சீருடையில்) வந்து "அமைச்சரை" கூட்டிப் போவார்கள். அப்படி வரும்போதுகூட சொல்வார்களே "இவன் எப்படி தப்பி வந்தான் என்றே தெரியவில்லை... ஏறுடா வண்டியிலே" என்று.
0 comments:
Post a Comment