மிதிவண்டி - ஒரு கொசுவர்த்தி பதிவு
பக்கத்து வீட்டு நண்பன் ஒரு புதிய மிதிவண்டி வாங்கிவிட்டான். நம் வீட்டிலும் ஒரு வண்டி வேண்டும் என்று நிறைய நாட்கள் கெஞ்சிக் கூத்தாடிய பிறகு, ஒரு நாள் BSA SLR வாங்குவதற்கு அனுமதி கிடைத்தது. ஆனால் அதை வாங்குவதற்கு, வீட்டிலிருந்து ஏதோ ஒரு பொருள் அடகு கடைக்கு சென்றது என்று சில நாட்களுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. நிற்க.
அந்த மிதிவண்டி வாங்குவதற்கு, ஒரு குடும்ப நண்பரும் நானும் பாரிமுனைக்கு சென்றோம். குறளகத்திற்கு எதிரே இருந்த சாலையில் அப்போது வரிசையாக மிதிவண்டி கடைகள் இருந்தன. நாங்கள் ஒவ்வொரு கடையாக ஏறி விலையை விசாரித்த பிறகு, ஒரு இடத்தில் உட்கார்ந்து எந்த கடையில் வாங்கலாமென்று முடிவு செய்து - அந்த கடையில் சென்று எனது வெகு நாள் ஆசையான அந்த மிதிவண்டியை வாங்கினோம்.
முதலிலேயே என் தந்தை சொல்லியிருந்தபடி, பூசை போடாமல் வண்டியை ஓட்டக்கூடாது என்பதால், அந்த மிதிவண்டியை ஒரு ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு எடுத்துவந்தோம். வீட்டில் அந்த வண்டிக்கு மஞ்சள், குங்குமம் தடவி, பூ போட்டு பூசை செய்தபிறகு இரவு 9.30 மணிக்கு ஆசை தீர கொஞ்ச நேரம் ஊர் சுற்றிவிட்டு வந்து படுத்தேன்.
படித்து முடித்ததும் சென்னை பாரிமுனையில் ஒரு வேலை கிடைத்தது. அதற்காக அந்த மிதிவண்டியில் திருவல்லிக்கேணியிலிருந்து அலுவலகத்திற்காக தினமும் பாரிமுனை பயணம். கடற்கரைச் சாலையில் போவது அருமையாக இருக்கும்.
ஒரு நாள் எங்கள் அலுவலக கட்டிடத்திலேயே Aptech கிளை ஒன்றைத் திறந்தார்கள். அலுவலக நண்பர்கள் மூன்று பேர் சென்று பார்த்தோம். அங்கிருந்த Councellor-ஐப் பார்த்தபிறகு, அவருக்காகவே(!!) நாங்கள் மூவரும் அங்கே சேர்ந்து விட்டோம்.
சரி. அலுவலகம் முடிந்தவுடன் கணிணியும் கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியிருக்கும். திடீரென்று எங்கள் அலுவலகத்தை ஆழ்வார்ப்பேட்டைக்கு மாற்றிவிட்டார்கள்.
அதனால், இப்போது மிதிவண்டி மிதிக்கின்ற நேரம் அதிகமாகிவிட்டது.
காலை 6.30 மணிக்கு - திருவல்லிக்கேணி to பாரிமுனை பயணம் - கணிணி வகுப்பிற்காக (7.00 to 9.00)
காலை 9.00 மணிக்கு - பாரிமுனை to ஆழ்வார்பேட்டை - அலுவலகத்திற்கு (9.30 to 5.00)
மாலை 5.30 மணிக்கு - ஆழ்வார்பேட்டை to திருவல்லிக்கேணி - வீட்டிற்கு.
இந்த பயணம் சில நாட்களுக்கு பிறகு இன்னும் அதிகரித்துவிட்டது.
அதாவது, வாரத்திற்கு மூன்று நாட்கள் தியாகராய நகரில் (டி. நகர் என்று சொல்லக் கூடாதாமே!!!) ஒரு பகுதி நேர வேலை ஒப்புக்கொண்டு விட்டேன். அதனால், வாரத்தில் மூன்று நாட்கள் மாலை 5.30 மணிக்கு ஆழ்வார்பேட்டையிலிருந்து தியாகராய நகர் - பின்னர் இரவு 8.30 மணிக்கு திருவல்லிக்கேணி.
ஒரு வருடத்திற்கு மேலாக மேற்கூறிய பயணம் இருந்தது என்று இன்று நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது.
அமெரிக்கா வந்தபிறகு சென்ற வருடம் நயாகராவிற்குப் போயிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்தில் ஒரு மிதிவண்டி வாடகைக்கு எடுத்தோம். கடவுளே, என்னால் ஒரு ஐந்து நிமிடம் கூட மிதிவண்டியை ஓட்டமுடியவில்லை. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி, நண்பர்களெல்லாம் வெறுப்பேற்றி (அவர்களுக்கும் அதே கதைதான்!!!) - தங்கமணி - உங்களுக்கு வயசாயிடுச்சு என்று என்னை ஓட்டி - ஒரு பதிமூன்று வருடத்திற்கு முன்பாக ஒரு நாளைக்கு 15-20 கிமீ ஓட்டியவன், இப்போது கொஞ்ச நேரம் கூட ஓட்டமுடியவில்லை என்று எண்ணும்போது - கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது!!!
1 comments:
Such wonderful/ever-green Flash Backs makes oneself feel good.
Post a Comment