Wednesday, May 14, 2008

நடிகர்களை மக்கள் கண்டுக்காமெ விட்டுட்டாங்கன்னா!!!

முன்னுரை:

'படப்பிடிப்பில் நடிகரைக் காண ரசிகர்கள் அலைகடலென திரண்டனர்' - 'துணிக்கடை திறப்புக்கு வந்திருந்த நடிகையைக் காண வந்த மக்கள் அடிதடி, போலீஸ் தடியடி' - இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி நாம் செய்திகளில் பார்க்கலாம்.

நம் மக்களுக்கு திடீரென்று ஞானம் வந்துடுச்சுன்னு(!!) வெச்சிப்போம். அதாவது யாரும் எந்த நடிகரையோ / நடிகையையோ படப்பிடிப்பில் / விழாவில் கண்டுக்காமெ விட்டுட்டாங்கன்னா, அந்த நடிகர்கள் என்ன செய்வாங்கன்னு ஒரு சிறு கற்பனை.

டிஸ்கி:

இந்த பதிவில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. அவை யாரையாவது குறிப்பிடும்படி இருந்தால், அது தற்செயலானதுதான்.


இனி பதிவு.


'சுவாமி சத்யானந்தா - புகழ்பெற்ற சாமியார்' - புது போர்டு பளபளக்கிறது. சாமியாரைப் பார்ப்பதற்கு முன் நுழைவுத்தாளை நீட்டுகின்றனர். 'மூன்று கேள்விகள் - மூவாயிரம் ரூபாய்' . கேள்விகளை முன்கூட்டியே எழுதிவைத்துக்கொள்ள வேண்டும். உள்ளே போய் முழிக்கக்கூடாது என்று சீடர்கள் சொல்கின்றனர்.


புகழ்பெற்ற நடிகர் அவர். சரசரவென்று வருகிறார். நுழைவுத்தாளை பூர்த்தி செய்துவிட்டு சாமியாரைப் பார்க்க உள்ளே போகிறார்.


வணக்கம் சாமி.
வா மகனே. உட்கார். எப்படி இருக்கிறாய். என்ன பிரச்சினை உனக்கு?



சாமி, என்னைத் தெரிகிறதா?. சரி. ஒப்பனை இல்லாமல் எனக்கே என்னைத் தெரியாது. நானே சொல்கிறேன். சாமி, நாந்தான் நடிகர் ரவிகாந்த். ஒரு வாரமாக பயங்கர குழப்பத்தில் உள்ளேன். மன அமைதிக்காக உங்களை பார்த்துப் போகலாமென்று வந்துள்ளேன்.


அப்படியென்ன குழப்பம். எதுவாயிருந்தாலும் தயங்காமல் என்னிடத்தில் கூறு மகனே...


ஒரு வாரமா என்னை யாரும் கண்டுக்கவே மாட்றாங்க. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல.


கொஞ்சம் விளக்கமா கூறு மகனே.


இந்த பிரச்சினை போன வாரம்தான் ஆரம்பிச்சதுன்னு நினைக்கிறேன். பொதுவா நான் எங்கேயாவது பேச ஆரம்பிச்சாலே மக்கள் எல்லாரும் புரியுதோ இல்லையோ, அமைதியா, ஆர்வமா என் பேச்சைக் கேப்பாங்க. ஆனா போன வாரம்தான் இந்த சம்பவம் நடந்தது.


ஏதோ ஒரு தேர்தல்லே 'வாய்ஸ்' கொடுக்கணும்னு என்னை வரச்சொல்லியிருந்தாங்க. நானும் 'வாய்ஸ்' கொடுத்து ரொம்ப நாளாச்சேன்னு அந்த கூட்டத்துக்கு ரெண்டு/மூணு குட்டிக்கதைகளை ரெடி பண்ணிண்டு போயிருந்தேன்.

'வாய்ஸ்' கொடுத்தியா?

முழுசா கேளுங்க. அன்னிக்கு வீட்டிலே என்ன சாப்பிட்டேன்னு தெரியல. மைக்குக்கு முன்னாலே போய் நின்னு பேச்சை ஆரம்பிக்க போறேன்.. அப்போ பாத்து 'ஏவ்வ்வ்வ்', 'ஏவ்வ்வ்' அப்படின்னு ரெண்டு புளிச்ச ஏப்பம் வந்துடுச்சு. நானும் வீட்லே செய்ற மாதிரி வாயைத் திறந்து நல்லா சத்தமா ஏப்பம் விட்டுட்டேன்.

கூட்டத்திலேயிருந்து ஒருத்தன் 'தலைவ்ர் வாய்ஸ் குடுத்துட்டார்டா' அப்படின்றான். இன்னொருத்தன் 'தலைவரோட வாய்ஸ் சூப்பர்டா' அப்படின்றான். உடனே அங்கே பயங்கர சிரிப்பு மற்றும் கைதட்டல். அதுக்கப்புறம் என்னை பேசவே விடலை. கூட்டத்தில் எல்லோரும் மாத்தி மாத்தி ஏப்பம் விட்டு என்னை வெறுப்பேத்திட்டாங்க. எனக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. அங்கேயிருந்து பேசாமயே திரும்பி வந்துட்டேன்.

நீ அப்படி செய்திருக்ககூடாது மகனே. கோபம்தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம். நீ தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்து உன் கோபத்தை குறைக்கணும். யார் உன்னை வெறுப்பேற்றினாலோ / கோபமூட்டினாலோ நீ எளிதில் கோபமடையாதவாறு உன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சாமி, அப்படி சொல்வது மிகச் சுலபம். ஆனால், செய்வது மிகக்கடினம்.

ரொம்ப சரி. அதற்கு சில நாள் ஆகும். ஆனா முயற்சி செய்யணும். பொறுமை கடலினும் பெரிது. அந்த ஒரு சம்பவத்தை வைத்து, நீ ரொம்ப குழம்பிப்போயிருக்கே. இது எல்லாருக்கும் நடக்கறதுதான்.


இதையும் கேளுங்க, நேத்து முதலமைச்சர் போற வழியிலே நான் திடீர்னு என் வண்டியை நிறுத்தி கீழே இறங்கிட்டு, சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன். நிறைய பேர் போறாங்க வர்றாங்க - ஒருத்தனும் என்னை கண்டுக்கவே மாட்றான்.

அப்போ பாத்து ஒருத்தன் என்கிட்டே தயங்கி தயங்கி வந்தான். சரி ஆட்டோகிராப்தான் கேக்கப் போறான் அப்படின்னு சந்தோஷமாயிருந்தேன். அவன் வந்து - சார், நெருப்பு இருக்குதா? அப்படிங்கறான். நான் யாருன்னு அவனுக்கு தெரிஞ்சா மாதிரியே காட்டிக்கலை. எனக்கு அழுகை அழுகையா வந்தது.


அங்கேயிருந்த போலீஸ்காரரோ - என்ன, வண்டியை எடுக்கறியா, இல்லை 'Tow' பண்ணட்டுமா? அப்படின்றார். எனக்கு பயங்கர அதிர்ச்சியாயிடுச்சு. உடனடியா வண்டியை எடுத்துட்டேன். நம்ம தமிழக மக்களுக்கு ஒரே வாரத்துலே என்ன ஆயிடுச்சு? ஒண்ணுமே புரியலே.


மகனே. மக்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல வேறே பொழுதுபோக்குகள் நிறைய வந்துவிட்டது. அதனால் அவர்களுக்கு திரைப்பட நடிகர்களின் மேல் இருந்த மோகம் குறைந்துவிட்டதுன்னு நினைக்கிறேன். இன்னும் சில நாள் பொறுமையா இருந்தா வெற்றி உனக்கே. மறுபடி எல்லார் பார்வையும் உன் மேல் விழ நான் சொல்ற இந்த ஸ்லோகத்தை தினமும் 1008 தடவை வீட்டில் சொல்லவும். கூடவே இந்த யாகத்தை செய்து விடவும்.

எனக்கு என்ன பயம்னா, என்னை சேந்தவங்களும் என்னை கண்டுக்காமெ விட்டுட்டாங்கன்னா நான் வாழ்க்கையையே வெறுத்துடுவேன். இப்படித்தான் பாருங்க, இவ்ளோ வருஷமா என்னோட இருந்த என் ரசிகர் மன்றத் தலைவரும் ஒரு வாரமா காணாமெ போயிட்டாரு.


அப்படியா?

ஆமா. ஆனா இவ்ளோ நேரம் உங்ககிட்டே பேசினதுலே எனக்கு ரொம்ப திருப்தியா, மனசு லேசானது மாதிரி இருக்கு. வெளியே சொன்னாமாதிரி நீங்க சக்தியானவர்தான்னு ஒத்துக்கறேன். இனிமே நீங்கதான் எனக்கு குருவா இருந்து உபதேசம் பண்ணனும்.

அட, அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. என்னை நல்லா பாரு (சாமியார் தாடியை விலக்கி காண்பிக்கிறார்). நாந்தான் உன்னுடைய ரசிகர் மன்ற தலைவர். இவ்வளவு வருடமா உன் பேரை வெச்சி நான் பந்தா காட்டிட்டிருந்தேன். மக்கள் உன்னையே மறந்துட்டாங்களா, என்னையும் ஒருத்தனும் மதிக்கலை.


எனக்கும் வாழ்க்கை வெறுத்துப்போயிடுச்சு. தினமும் ஒரு பத்து பேராவது என்னை வந்து பாத்து, என்னை புகழ்ந்து பேசலேன்னா, எனக்கு தூக்கமே வராது. சரி அதுக்கு ஒரே வழி சாமியாரா போய்விடவேண்டியதுதான் - மக்களும் வந்து பாப்பாங்க, பணமும் சேரும் அப்படின்னு ராவோட ராவா சாமியாராயிட்டேன். பேசாமே நீயும் சாமியாராயிடு. நல்ல கலெக்சன் ஆகுது. என்ன சொல்றே?


அடப்பாவி.. நீயா?... இதிலே சொல்றதுக்கு என்ன இருக்கு. ஆனா ஒரு கண்டிஷன். நாந்தான் குரு. நீ எனக்கு சிஷ்யன். ஓகேவா...



சரி சரி. நடிப்பே வரலேன்னாகூட உன்னை மக்கள் நடிகனா ஏத்துக்கலையா. அதேபோல் ஒண்ணும் தெரியலேன்னாகூட உன்னை என் குருவா ஏத்துக்கறேன். வா. இந்த காவி உடையை போட்டுக்கிட்டு இங்கே வந்து உக்காரு...



(இரண்டு பேரும் சேர்ந்து)
ஓம்..ஓம்..ஓம்..


5 comments:

பிரேம்ஜி May 14, 2008 at 2:19 PM  

சின்ன பையன்! சிண்டு முடிச்சு விட்டுட்டீங்க.நடத்துங்க.டிஸ்கி போடாமலே இருந்திருக்கலாம் :-))

சின்னப் பையன் May 14, 2008 at 4:57 PM  

வாங்க பிரேம்ஜி -> ஹலோ. இது வெறும் கற்பனைதான் அப்படின்னு சொல்லியிருக்கேன்லே. ஜாலியா சிரிச்சிட்டுப் போயிடுங்க.. அவ்ளோதான்.... :-)))

துளசி கோபால் May 14, 2008 at 5:13 PM  

//?. சரி. ஒப்பனை இல்லாமல் எனக்கே என்னைத் தெரியாது. ...//


இதைத்தான் நேத்து வேற இடத்தில் ஒரு பேட்டியைக் கேட்டதும் மனசுலே தோணுச்சு.:-)))))))

சூப்பர் ச்சின்னப் பையா.

கொளுத்திப்போட்டாச்சு:-))))


பிரேம்ஜி,

டிஸ்கி போடறது ஏன் தெரியுமா?

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை"

சின்னப் பையன் May 14, 2008 at 9:34 PM  

வாங்க துளசி மேடம் -> நன்றி...

குதிருக்குள் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை.... :-))))

Unknown May 18, 2008 at 10:49 AM  

super thalivaaaa. கலக்கீட்டீங்க

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP