சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!
சங்கம் 'ரெண்டு' போட்டிக்காக தமிழக அரசியல் தலைவர்களை பேட்டி கண்டால் என்ன சொல்வார்கள் என்று ஒரு சிறு கற்பனை. வழக்கம்போல் எல்லோரும் சேவையில் இருப்பதால், ரெண்டு வாக்கியமாவது சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். இனி அவர்கள் சொன்னவை. ஒரு மாறுதலுக்காக தலைவர்கள் வேறு வரிசையில்.
சு.சுவாமி:
ஒரு வாரத்திலே 'ரெண்டு' வழக்காவது போடலேன்னா, எனக்கு தூக்கமே வராது. இன்னும் 'ரெண்டே' பாயிண்ட்கள்தான் பாக்கி, பாத்துண்டே இருங்கோ, மத்திய அரசை 'ரெண்டே' நாள்லே கவிழ்த்துடுவேன்.
ஆற்காட்டார்:
தமிழகத்தில் மின்சாரத்தடை, சென்னையில் பேனர் பிரச்சினை இந்த 'ரெண்டை' தவிர எதுவேணாலும் கேளுங்க. 'ரெண்டே' 'ரெண்டுலே' (செகண்டுலே) பதில் தர்றேன்.
டி.ஆர்.பாலு:
வருடத்துக்கு 'ரெண்டு' பாலம் கட்ட அடிக்கல் நாட்டணும், வாழ்நாளில் 'ரெண்டு' பாலமாவது கட்டி முடிக்கணும் - இதுதான் எனது குறிக்கோள்.
காங்கிரஸ் தலைவர்:
சொன்னா நம்புங்க. நான் தமிழகத்தலைவரா பொறுப்பேத்து 'ரெண்டு' நாள்தான் ஆகுது. அதுக்குள்ளே என்னோட 'ரெண்டு' லோடு வேட்டி கிழிஞ்சி போச்சு.
விஜயகாந்த்:
எனக்கு மட்டும் 'ரெண்டு' அண்ணன் தம்பிங்க, 'ரெண்டு' மச்சான், 'ரெண்டு' சித்தப்பா பெரியப்பா, 'ரெண்டு' பசங்க இவங்கல்லாம் இருந்திருந்தாங்கன்னா, நான் ஏன் மத்தவங்களுக்கு கட்சியில் சீட்/பதவி இதெல்லாம் கொடுக்கப்போறேன்?
ஜெயலலிதா:
நாங்க தோழிங்க 'ரெண்டு' பேரும் ஓய்வுக்குப் போயிட்டிருக்கோம். இப்போ போய் 'ரெண்டு' போட்டியில் கலந்துக்க சொல்றீங்களே?
கலைஞர்:
சொந்த குடும்பத்தில் பிரச்சினை என்றால் 'இரண்டு' நிமிடம் தொலைபேசியில் முடித்துவிடுகிறேன் என்றும் மக்கள் பிரச்சினை என்றால் 'இரண்டு' வரி கடிதம் எழுதுவேன் என்றும் என்னை பற்றி தவறாக பேசுகிறவர்கள் யாராவது இருந்தால் உடனே வரவும். 'இரண்டு' வருடம் உள்ளே போட்டுவிடுகிறேன்.
பிகு: சங்கம் 'ரெண்டு' போட்டிக்கான எனது 'ரெண்டாவது' இடுகை இது.
Read more...