Saturday, July 23, 2011

#P10KS

ட்விட்டரில்தான் இதை தினமும் போட்டு அறுத்தாச்சே, மறுபடி ப்ளாக்கிலுமான்னு கேக்காதீங்க. இது ரொம்ப நாள் முன்னாடியே அடிச்சி வெச்ச பதிவு. அதனால் தயவு செய்து படிச்சிடுங்க. நன்றி.

***

ஐதராபாத், தில்லி, நொய்டா, இப்போ இருக்கிற டேன்பரி - இப்படி வேலைக்காக போன இடங்களிலெல்லாம், போனவுடனேயே நான் தேடும் இடங்கள் இரண்டு. 1. முடிதிருத்தகம். 2. ஜிம். முதலாவது எதுக்குன்னு உங்களுக்கே தெரியும். இப்போ நாம் பேசப்போவது இரண்டாவதைப் பற்றி மட்டும்.

ஜிம்மை தேடுகிறேன்னு சொன்னவுடன், நான் பீமபுஷ்டி லேகிய விளம்பரத்தில் வருபவரைப் போலவோ, biceps, triceps காட்டியவாறு சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு ABT பார்சல் சர்வீஸில் பறந்துபோறவரைப் போல் (நன்றி: அணில்) இருப்பேன் என்று நினைக்க வேண்டாம்.

என்னுடைய ‘பலத்திற்கு’ ஒரே ஒரு சான்று இதோ.

சென்னையில் டிவிஎஸ்-ஐம்பது என்னை ஓட்டிக் கொண்டிருந்த காலம். வேகமாய் போய்க் கொண்டிருக்கும் பல்லவன் பக்கத்தில் அடிக்கடி வண்டியோடு போவேன். உள்ளேயிருந்து நடத்துனர் - தம்பி, வண்டியோட இதில் ஏறக்கூடாது, அதை விட்டுட்டு வாங்கன்னு சொல்ற அளவுக்கு பேருந்தில் உரசுவேன்.

அட, நானா வரலேங்க. அந்த பேருந்தின் ஈர்ப்பு விசையில் என் ச்சின்ன
வண்டி ஈர்க்கப்பட்டு, நான் ஒருவன் அதன் மேல் இருப்பதையே கணக்கில் கொள்ளாமல், அது பாட்டுக்கு போவதால் வந்த விளைவுன்றது நீங்க புரிஞ்சிக்கணும்னு சொல்லுவேன்.

ஓகே. இப்ப புரியுது. அப்புறம் உனக்கு ஏன் ஜிம் மேல் இந்த அக்கறை? உங்க வீட்டில் யாருக்குமே இல்லாத அக்கறைன்னு பராசக்தி வக்கீல் பாணியில் கேட்டீங்கன்னா? -- ஹிஹி. ஜிம் எந்த தெருவில் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டா, பிறகு அந்த தெருவிலேயே போகாமல், மாற்றுப்பாதையில் போகலாம் பாருங்க அதனால்தான்.

ஆனா அப்படி நடக்கலை. என் வாழ்விலும் விதி விளையாடியது.

கூட இருந்த நண்பர்கள் அன்புத் தொல்லையால் எல்லா ஊரிலும் ஜிம்மில் சேர்ந்தேன். பிறகு சொந்த முயற்சியில், கஷ்டப்பட்டு, அரும்பாடுபட்டு, ஒரே மாதத்தில் போகாமல் நிறுத்தினேன்.

***

இந்த ஊரிலும் ஒவ்வொரு கோடை காலத்திலும் ஏதாவது உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பது வழக்கம். பிறகு அதை நிறுத்த ஏதாவது சாக்கு தேடுவதும் வழக்கம்!.

இப்படியாக இருக்கும்போது இணையத்தில் நண்பர் @nchokkan #P10KS என்ற இயக்கத்தை துவக்கினார். நானும் அதில் இணைந்தேன்.

போங்க போங்க, ஒரு பத்து நாள்கூட நடக்க மாட்டீங்கன்னு ஆசிர்வதித்த தங்ஸின் மூக்கை உடைத்து 51 நாட்கள் நடந்தேன்.

எப்படி இப்படின்னு அவர் ஆச்சரியத்துடன் - வீட்டு வேலைகளைக் கூட மறந்து - (தன்) கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டதால், நானும் என் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டேன்.

***

ஆனால், நான் நடந்ததற்கான உண்மையான காரணத்தை இணைய நண்பர்களுக்காக இதோ சொல்கிறேன். அது, காலை நேரத்தில் என்னுடன் கூடவே நடந்த சக நடைப்பயிற்சியாளினிகள்தான். முதலில் கண்ணோடு கண் நோக்காமல் - பிறகு, நோக்கினாலும் முறைத்து நோக்கி நடந்த அந்த இளம்பெண்கள், போகப்போக நன்றாக சிரிக்க ஆரம்பித்தார்கள்.

கடைசி நாளன்று, நாளை முதல் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிடலாம் என்று பார்த்தேன். பிறகு அவர்கள் நடு ப்ளாட்பாரத்தில் புரண்டு புரண்டு அழுதால், அதைக்கண்டு என் பிஞ்சு மனம் தாங்காது என்பதால், சொல்லிக்கொள்ளாமலேயே விடைபெற்றேன்.

நான் போகாத நாளில், அவர்கள் எப்படி வருத்தப்படுவார்கள் என்றெண்ணியே நான் வருத்தம் கொள்கிறேன்னு சொன்னால், நீங்க வருத்தப்படுவீங்க என்பதால்.. ஸ்ஸப்பா.. இத்தோட முடிச்சிக்கறேன்.

***

பாருங்க, கடைசியில் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லவே மறந்துட்டேன். அந்த இளம்பெண்கள்னு சொன்னேனே,

அவர்கள் இப்பத்தான், சமீபத்தில் ஒரு 30-35 வருடம் முன்னாடி இளம்பெண்களா இருந்தவங்க.

இப்ப திருப்திதானே?

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP