Friday, October 31, 2008

2008 புத்தாண்டு தீர்மானங்கள் - ஒரு பின்னோட்டம்

போன வருஷம் வரைக்கும் புத்தாண்டுத் தீர்மானங்கள் அப்படின்னு எதையும் நினைத்ததில்லை. சரி, இந்த வருஷம் இரண்டு விஷயங்கள் செய்யலாம்னு ஆரம்பத்திலே நினைச்சதும், இன்னியோட முடிஞ்ச இந்த பத்து மாசம் வரைக்கும் அந்த
இரண்டு விஷயங்களையும் ஒழுங்கா செய்துட்டு வர்றதாலேயும், இனிமே வருஷா வருஷம் ஏதாவது தீர்மானம் போட்டு அதை நிறைவேற்ற முயற்சிக்கலாம்னு ஒரு தைரியம் பிறந்திருக்கு.


முதல் தீர்மானம்: பூச்சாண்டி


போன வருஷம் மத்தியிலே தமிழ்மணம் பாக்க ஆரம்பிச்சாலும், டிசம்பர் இறுதியில் நாமும் ஏதாவது எழுதுவோம்னு ஆரம்பிச்சேன். டிசம்பர் 24ம் தேதியிலிருந்து பல ஆரம்பகட்ட பிரச்சினைகளைத் தாண்டி, தமிழ்மணத்தில் இணைந்து, முதல் பின்னூட்டம் பெற்ற நாள் ஜனவரி 8.


வாரம் ஒண்ணு அல்லது இரண்டு சிரிப்பு பதிவு போட்டு, இந்த வருஷம் முழுதும் எழுதணும் - தினமும் இரண்டு பேராவது நல்லா சிரிக்கறதுக்கு நாம காரணமா இருக்கணும்னு நினைச்சி ஆரம்பிச்சது, வேகம் பிடிச்சி இன்னியோட 165+ பதிவுகளாயிடுச்சு.

அரை மணி நேரத்துலே அஞ்சு மேட்டர் உருவாகி, ரெண்டு மணி நேரத்துலே டைப் செய்து, அந்த வாரம் முழுக்க பதிவு போட்ட நாட்களும் உண்டு; ஒரே மேட்டரை ஒரு மாசம் வரைக்கும் முடிக்கத் தெரியாமல் இழுத்தடிச்சி வெளியிட்ட நாட்களும் உண்டு.

இந்த தீர்மானத்தாலே சாதிச்ச பெரிய விஷயம் என்னன்னா - உலகமெங்கும் பல இடத்தில் இருந்தாலும், மனம் விட்டு சிரிச்சி பேசக்கிடைத்த நண்பர்கள்.முதல் தடவை பேசும்போதே பலப்பல நாட்கள் பேசியதைப் போல் ஒரு உணர்வை பெற்றுத் தந்ததற்காக இந்த இணையத்துக்கு ஒரு நன்றி.

இதே மாதிரி யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையோட (மொக்கையோட- ந்னு நீங்க சொல்றது கேக்குது!!!) எழுதணும்னு நினைச்சாலும், வருங்காலத்துலே உருப்படியா எதையாவது எழுதணும்னு நினைக்கறதுண்டு.

இரண்டாவது தீர்மானம் : ஒரு வெளிநாட்டு மொழி

ரொம்ப வருஷமாவே ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழி கத்துக்கணும்னு இருந்த ஒரு ஆசை, இந்த வருஷம் புத்தாண்டு தீர்மானமாவே ஆயிடுச்சு.


அர்னால்டும், ஜாக்கி சானும் நமக்கு பிடிச்ச வெளிநாட்டு நடிகர்கள். இதிலே அர்னால்ட் பேசும்
ஆங்கிலம் நமக்குத் தெரியும்றதாலே, ஜாக்கி பேசும் சைனீஸ் கத்துக்கணும்னு ஆசை வந்துடுச்சு.


இங்கே நூலகத்திலிருந்து மாண்டரின் CD வாங்கி காரில் போகும்போதெல்லாம் கேட்க ஆரம்பித்தேன். ஒரு நாலு மாசம் வரைக்கும் மெதுவாக போன அந்த பழக்கம், நம்ம வழக்கமான வழக்கப்படி மெதுவாக குறைந்துகொண்டே வந்தது. யாராவது ஒருவரிடத்தில் பணம் கட்டிப் படித்தாலேயொழிய எதையும் கற்றுக்கொள்ள முடியாது என்றென்ணி இங்கே சைனீஸ் கற்றுக்கொடுக்க யாரையாவது தேடினேன்.


ஆள், பணம், நேரம் இந்த மூன்று காரணிகளில் ஏதோ ஒன்று சரிப்படாமலேயே போனதால், தொடர்ந்து காரிலேயே கேட்டு கற்றுக்கொள்ள முயற்சித்து வந்தேன். இப்படியே போய்க்கொண்டிருந்தபோது சென்ற மாதம் ஒரு ஆள் கிடைத்தார்.


உடனே பயிற்சியில் பணத்தைக் கட்டி சேர்ந்துவிட்டேன்.வாரம் ஒரு நாள் 1.5 மணி நேர வகுப்பு - 2 மாதத்துக்கு இந்த பயிற்சி வகுப்பு. எப்படியும் இந்த வருட முடிவில், மாண்டரின் மொழியில் சரளமாக (இல்லாவிட்டாலும், மெதுவாக) பேச முடியும் என்ற நம்பிக்கை இப்போது வந்திருக்கிறது. பேசுவதற்கு மட்டும்தான் இந்த பயிற்சி. எழுத, படிக்க கிடையாது. அதனால், அடுத்த புதுவருட தீர்மானம் ஒன்று ஏற்கனவே ரெடியாயிடுச்சு.... :-)

பிகு: நானும் ஏதாவது ஒரு சங்கிலித் தொடரை ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன். இதை படிக்கும் மக்களில் ஒரு மூணு பேராவது தங்கள் 2008 தீர்மானங்களின் பின்னோட்டத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டால் நல்லாயிருக்கும்.

Read more...

Thursday, October 30, 2008

இனிமே எந்த ஆயாவுக்கும் ஹாய் சொல்லமாட்டேன்!!!

வருடத்தில் ஒரு நான்கைந்து தடவையாவது நடைப்பயிற்சிக்குப் போறேன்னு கிளம்பறது வழக்கம். ஒரு வாரம் வரைக்கும் போகும் அந்த பயிற்சி மெதுவாக அப்படியே மறக்கப்பட்டுவிடும். அப்படி போன மாதம் ஒரு வாரம் விடியற்காலையில்
நடந்தபோது, தினமும் பார்த்த ஒரு ஆயாவைப் பற்றிய பதிவுதான் இது.

அந்த ஆயா, காலை 6.30 மணிக்கெல்லாம் சுறுசுறுப்பாக எழுந்து வேலைக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றுகொண்டிருப்பார். ஒரு கையில் காபி கோப்பை. காதல் தேசம் படத்தில் ஒரு பாட்டில் வினீத்தும் அப்பாஸும் ஆவி பறக்க காபி குடிப்பார்களே, அந்த மாதிரி இந்த ஆயா கையில் இருக்கும் சாயா (காபி?) கப்பிலிருந்து ஆவி பறந்துகொண்டிருக்கும்.

சுமார் 60 வயசுக்கு மேலிருக்கும் அந்த ஆயாவை பார்க்கும்போதெல்லாம், எங்க பாட்டி ஞாபகம் வந்துவிடும். நடந்துகொண்டே கொசுவத்தி சுத்திவிட்டாலும், கால்கள் மட்டும் தன்னிச்சையாக சரியான பாதையில் போய், மறுபடியும் சரியாக எங்க வீட்டுக்கே வந்து விட்டுவிடும். வீட்டுக்கு வந்த பிறகுதான் சுயநினைவு திரும்பி, கொசுவத்தியை ஆஃப் செய்வது வழக்கம்.



ச்சின்ன வயசில் (எங்க ச்சின்ன வயசில்தாங்க, பாட்டியோட ச்சின்ன வயசில் இல்லே!!!), நானும் என் தம்பியும் எப்போது பாட்டி வீட்டிற்குப் போனாலும், 5 பைசா கொடுப்பார்கள் - திரும்பி வரும்போது கடையில் பிஸ்கட் அல்லது சாக்லெட் வாங்கி சாப்பிடுவதற்கு. இப்போ மாதிரியே அப்போ இருந்த நிதி அமைச்சரிடமும் மந்திரக்கோல் இல்லாததாலும், பிஸ்கட்/சாக்லெட் விலை ஏறிக்கொண்டே போனதாலும், பாட்டி கொடுக்கும் அந்த 5 பைசா - 10, 25, 50ஆகி அதிகபட்சமாக 1 ரூபாயில் வந்து நின்றது.


கொஞ்ச நாளைக்குப்பிறகு - காசெல்லாம் வேண்டாம், நான் திரைப்படத்திற்கு கூட்டிப்போகிறேன் என்று சொல்லிவிட்டார். அதே மாதிரி என்னையும், தம்பியையும் நிறைய பக்திப் படங்களுக்கும் கூட்டிச் சென்றார். சென்னையில் பாரகன், ப்ளாசா, பைலட், ஸ்டார் ஆகிய அரங்கங்களில் நிறைய படம் பார்த்திருக்கிறோம். அப்படிப் பார்த்ததில் ஒரே ஒரு சம்பவம் இன்றும் நினைவில் இருக்கிறது.அதை மட்டும் சொல்லிவிட்டு, கொசுவத்தியை முடிச்சிடறேன்.

ஒரு முறை ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் 'பக்த துருவ மார்க்கண்டேயா' படம் பார்க்கப் போயிருக்கிறோம். பயங்கரக்கூட்டம். பாட்டி என்னையும், என் தம்பியையும் கைகளில் பிடித்துக்கொண்டு பெண்கள் வரிசையில் டிக்கட் வாங்க நின்றிருக்கிறார்கள். அப்போவும் என்னால் 'மீ த பஷ்டு' சொல்லமுடியவில்லை.... 'மீ த லேட்' என்று நீண்ட வரிசையில் 25 அல்லது 30 ஆளாக நின்றிருந்தோம்.

எப்போதும் எங்கேயும், நாம் நிற்கும் வரிசையைத் தவிர மற்ற எல்லா வரிசையும் வேகமாக முன்னேறும் - என்ற விதிப்படி எங்கள் வரிசையில் யாரோ தாய்க்குலம் தகராறில் ஈடுபட - ஆண்கள் வரிசை மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தது.

நானோ தவித்துக்கொண்டிருந்தேன். காரணம், முதல் நாளே பள்ளியில் நான் பாட்டியுடன் படம் பார்க்கப்போவதாகவும், திங்கட்கிழமை வந்து கதை சொல்வதாகவும் பக்கத்து சீட் பையனிடம் சொல்லியிருந்தேன். இப்படி டிக்கட் கிடைக்காமல் போய்விட்டால், அந்த நண்பன் முகத்தில் எப்படி முழிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு வழியாக எங்கள் வரிசையும் முன்னேறி, பாட்டி எங்களுக்கு டிக்கெட் வாங்கினார்கள்.

நானும் பயங்கர சந்தோஷத்துடன் தம்பியிடம் - "அப்பாடா, ஒரு வழியா படம் பாத்துடுவோம். இனிமே பிரச்சினையில்லே...!!!" என்று கூற, போட்டுக்குடுத்தே பேர் வாங்கும் அவனோ பாட்டியிடம் "இவன் ஏற்கனவே இந்த படம் பாத்தாச்சாம்" என்று கூறிவிட்டான். பாட்டியும் - "என்ன, இந்த படத்தை முன்னாடியே பார்த்துவிட்டாயா?" என்று கேட்க நான் தம்பியை முறைத்தபடி - "இல்லை பாட்டி, நாம்தான் இப்போ டிக்கட் வாங்கிவிட்டோமே. அதனால், படம்
பார்த்தா மாதிரிதான்" என்று கூறி சமாளித்தேன்.



அன்றும் அதே ஆயா அதே இடத்தில் நின்றிருந்தார். பக்கத்தில் வரும்போது பார்த்தால், அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நானும், சரி, இவ்ளோ பக்கத்துலே வந்தும் பார்த்துண்டே இருக்காரேன்னு 'ஹாய்' சொன்னேன்.

அவரும் ஏதோ சொன்னா மாதிரி இருந்தது ஆனால் ஒன்றும் புரியவில்லை. சரி ஹாய்தான் சொல்லியிருப்பார் என்று நினைத்துகொண்டு அவரை தாண்டி போகும்போதுதான் கவனித்தேன் - காதில் ஐபாட் வைத்துக்கொண்டு பாட்டு கேட்டுக்/பாடிக்கொண்டிருந்தார்.தனக்குத்தானே பாட்டு கேட்டுக்கொண்டிருந்த ஒரு ஆயாவிடம் போய் ஒரு ஹாய் வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு எனக்கு அன்னிக்கு தூக்கமே வரலை.

சூப்பர் ஸ்டார், கட்சி ஆரம்பிக்கலாமா வேணாமான்னு முடிவெடுக்கமுடியாமே கஷ்டப்படறா மாதிரியெல்லாம் கஷ்டப்படாமே, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முடிவை நான் உடனே எடுத்துவிட்டேன் --- இனிமே எந்த ஆயாவுக்கும் ஹாய் சொல்லமாட்டேன் - அப்படின்னு.

Read more...

Wednesday, October 29, 2008

சமைக்கப் போறீங்களா? GPS வாங்குங்க!!!

புதுசா சமையல் செய்றவங்க - அது பேச்சிலர்களின் சொ(நொ)ந்த சமையலாகட்டும் அல்லது புதிதாக திருமணமாகி புருஷனுக்கு சமைச்சுப் போட முயற்சி செய்யும் தங்கமணிகளாகட்டும் - என்ன செய்வாங்கன்னா, அடுப்பு பத்தவச்சப்புறம்தான் சமையலுக்குத் தேவையான பொருட்களை தேடுவாங்க.


ஒரு முறை பயன்படுத்திய பொருளை மறுபடி அதே இடத்தில் வெச்சாத்தான் அடுத்த முறை கிடைக்கும்ன்றது மனசுக்குத் தெரிஞ்சாலும் புத்திக்கு எட்டாததாலே, தினமும் இந்த தேடல் படலம் தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கும்.


இந்த மாதிரி ஆட்களுக்காகத்தான் ஒரு புதிய கருவி கண்டுபிடிக்கலாம்னு இருக்கேன். அது பேரு GPS - Grocery Positioning System. இந்த கருவி, மளிகை சாமான்கள் வீட்லே எங்கெங்கே இருக்குன்னு சொல்றதோட, சமையல் செய்யும் முறையையும் சொல்லிக் கொடுக்கும்.


நீங்க கீழே படிக்கப்போற 10 பாயிண்டுகளும், பேச்சிலர்களுக்கான வெர்ஷனாகும். பேச்சிலி (பெண்பால்) அல்லது தங்கமணிகளுக்கான வெர்ஷன் எப்படியிருக்கும்னு படிக்கறவங்க யாராச்சும் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.


1. ஃப்ரிட்ஜைத் திறந்து மேல்தட்டில் கை விடவும். முதலில் இருக்கும் பெரிய வெள்ளை டப்பாவை வெளியே இழுக்கவும். அதுதான் பால் டப்பா.


2. அலமாரியில் முதலில் தெரியும் சிகப்பு டப்பாவை எடுக்கவும். உள்ளே ச்சின்னச்சின்ன சதுரமாக வெள்ளைப் பொருள் தென்பட்டால், அதுதான் சர்க்கரை டப்பா. அல்லது வெள்ளைப் பொடியாக இருந்தால் அது உப்பு டப்பா.


3. பக்கத்தில் இருக்கும் கூடையில் கைவிடவும். பச்சையாய், நீளமாய் இருக்கும் பொருள்தான் பச்சை மிளகாய். கூடையில் பச்சை மிளகாய் கிடைக்காவிட்டால், மேஜைக்கு கீழே உள்ள குப்பைத்தொட்டியில் பார்க்கவும். உள்ளே கிடக்கும் பச்சை மிளகாய்களில் இரண்டை சட்டென்று எடுத்து, யாரும் பார்க்குமுன் கழுவிவிட்டு, அதை பயன்படுத்தவும்.


4. கண்ணில் தெரியும் சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும். வீட்டை விட்டு வெளியே போய், பக்கத்து வீட்டு கதவை தட்டி, காப்பிப்பொடி கேட்கவும். நாம் சிறிது நாட்களாய் காப்பிப்பொடியே வாங்குவதில்லை.


5. கொறிப்பதற்காக முந்திரி பருப்பு தேடுகிறீர்களா? பின்பக்க அலமாரியில் கீழ்த்தட்டில் சிகப்பு மூடியுடைய டப்பாவை எடுக்கவும். டப்பா கிடைக்கவில்லையெனில், வீட்டிற்குள் சோபா (sofa) பக்கத்தில் கிடைக்கும். நேற்று சைட்டிஷ்க்கு பயன்படுத்தியிருப்பீர்கள்.


6. இந்த நேரத்துலே உப்புமாவா? அதெல்லாம் வேணாம். போய் டிவி போடுங்க. மானாட மயிலாட ஓடிக்கிட்டிருக்கும். அதை பார்த்தாலே பசி அடங்கிவிடும்.


7. அலமாரியில் உருண்டையாக பசுமாடு படம் போட்ட டப்பா இருந்தால் அதுதான் வெண்ணெய். அதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். எலி படம் போட்டிருந்தால், அது எலி பாஷாணம். கவனமாக கையாளவும்.


8. இப்போ எதுக்கு மேக்கி? ஃப்ரிட்ஜ்லே இந்த வாரம் செய்த சாதமும், போன வாரம் செய்த குழம்பும் அப்படியேயிருக்கு. அதை அவனில் சுடவைத்து சாப்பிடவும்.


9. பச்சை ப்ளாஸ்டிக் டப்பாவில் இருப்பது கடலை பருப்பு. அது கையிருப்பு குறைவாக இருப்பின், நீல ப்ளாஸ்டிக் டப்பாவில் இருக்கும் துவரம் பருப்பைப் போட்டு அட்ஜஸ்ட் செய்யவும். பிரச்சினை ஒன்றுமில்லை. நாம்தானே சாப்பிடப் போகிறோம்.

10. சாதத்துக்கு வைக்கப்போறீங்களா? குழம்பு சாதம் சாப்பிடணும்னா, குக்கர்லே இரண்டு டம்ளர் தண்ணீர் போட்டா போதும். குழம்பு சாதம் குடிக்கணும்னா, நாலு டம்ளர் தண்ணீர் போடுங்க.

Read more...

Thursday, October 23, 2008

நடைப்பயிற்சி செய்வது ரங்கமணிகளுக்கு மிகவும் நல்லது!!!

தினமும் நடைப்பயிற்சி செய்வது எல்லோருக்கும் - குறிப்பாக ரங்கமணிகளுக்கு மிகவும் நல்லது.

ரங்கமணிகளுக்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல் நல்லது?? ரங்கமணியா (திருமணமான ஆணா) இருக்கறவங்க மட்டும் அடுத்த பாராவை படிங்க. அப்படி இல்லாதவங்க பாயிண்ட் #1லேந்து ஆரம்பிங்க...

கீழே பத்து பாயிண்டுகள் கொடுத்திருக்கேன். ஒவ்வொரு பாயிண்டும் 'அதே...'ன்னு முடிஞ்சிருக்கும். நீங்க செய்ய வேண்டியது என்னன்னா... ஒவ்வொரு 'அதே...'வுக்கு பிறகும் 'ரங்கமணி வீட்லே இருந்தா...' அப்படின்னு சேத்து படிச்சிட்டு, சித்த நேரம் விட்டத்தை பார்த்து சிந்தனை பண்ணுங்கோ... அப்புறம் ஒரு பெரிய பெருமூச்சு விட்டுட்டு, அடுத்த பாயிண்டை படிங்கோ...


1) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் - தன்னோட அல்லது தன் அப்பாவோட பிறந்த நாள் நினைவில் இருக்கா? அது என்னிக்கி? - அப்படின்னு கேக்கமாட்டாங்க. அதே...

2) தெருவுலே கிடக்கிற குப்பையை யாரும் சுத்தம் செய்ய சொல்லமாட்டாங்க. அதே...

3) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் - நம்மோட லொடலொடன்னு பேசமாட்டாங்க. அதே...

4) ரெண்டு மூணு நாளா ஷேவ் செய்யலேன்னாக்கூட - எதிர்லே வர்ற யாரும் நம்மை திட்டமாட்டாங்க. அதே...

5) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் - நம்மை சினிமாவுக்கோ, உணவகத்துக்கோ கூட்டிப்போக வேண்டுமென்று வற்புறுத்த மாட்டார்கள். அதே...

6) வழியில் இருக்கும் உணவகத்திலோ, டீக்கடையிலோ - பத்துப் பாத்திரம் தேச்சிட்டுப் போங்க - அப்படின்னு யாரும் தொந்தரவு செய்யமாட்டாங்க. அதே...

7) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் - தன்னோட தலைவகிடு, மேக்கப் இதெல்லாம் சரியாயிருக்கான்னு கேட்டு தொந்தரவு பண்ணமாட்டாங்க... அதே...

8) வழியில் நாம் பார்க்கும் எந்த குழந்தைக்கும் நாம் தலை வாரிவிடவோ, *ட்டி போட்டுவிடவோ, ஆடை மாற்றவோ தேவையில்லை. அதே...

9) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் நம்மகிட்டே - உப்பு, புளி, மிளகாய் இதெல்லாம் ஆயிடுச்சு. வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல மாட்டாங்க. அதே...

10. எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் நம்மகிட்டே - "வெளியே வந்தாகூட என்ன எப்போ பாத்தாலும் தொலைபேசிலே பேசிட்டிருக்கீங்க?. என்கிட்டே கொஞ்ச நேரம் பேசுங்க" - அப்படின்னு சொல்லமாட்டாங்க. அதே...

இப்போ சொல்லுங்க... நடைப்பயிற்சி ரங்கமணிகளுக்கு ரொம்ப நல்லதுதானே???



Read more...

Wednesday, October 22, 2008

பதிவர் சந்திப்பு - சிறப்பு படங்களுடன்!!!



மேலே படத்தில் தோன்றுபவர்கள் - ஒண்ணு நான், இன்னொண்ணு சில நாட்கள் முன்பு வரை பதிவு போட்டு கலக்கிட்டிருந்த - பதிவர் நண்பர் பிரேம்ஜி. இரண்டு பேரில் எது நான், எது பிரேம்ஜிங்கறது பதிவின் கடைசியில் சொல்றேன்.


பிரேம்ஜி அடுத்த வாரம் சென்னைக்கு திரும்பறார். லீவுக்கு இல்லே. அமெரிக்காவை விட்டுட்டு. ரொம்ப நாளா மொக்கை போட்டிருக்கோமே, சரி ஊருக்கு போறதுக்கு முன்னாடி ஒரு தடவை பாத்துக்கிடுவோம்னு சென்ற 5ம் தேதி (சென்னை பதிவர் சந்திப்பு நடைபெற்ற தினம்) எங்க
ஊரிலேருந்து புறப்பட்டு அவர் ஊருக்கு (120 மைல்கள்) சென்றோம்.


போய் சிறிது நேரம் பேசி முடித்தபிறகு - சாப்பாடு. பிரேம்ஜியின் தங்கமணி அருமையாக சமைத்திருந்தார். நல்ல்ல்ல்ல்ல்லா சாப்பிட்ட பிறகு, அங்கிருந்து புறப்பட்டு பக்கத்திலிருந்த ஒரு கோயிலுக்குச் சென்றோம். அங்கேயே புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு - (பிரேம்ஜி ஒரு
அருமையான SLR காமிரா வைத்திருக்கிறார். அதனால், அங்கே என்னோட ச்சின்ன காமிராவை நான் வெளியே எடுக்கவேயில்லை!!!)


அவர்களை புகைவண்டி நிலையத்தில் இறக்கிவிட்டு, நாங்கள் மறுபடி 120 மைல்கள் பயணித்து வீடு வந்து சேர்ந்தோம்.


----

வீட்டுக்கு திரும்ப வரும்போது, நானும் தங்கமணியும் பேசிக்கொண்டது.

நான்: ஏம்மா, பிரேம்ஜியோட படமெல்லாம் எடுத்திருக்கோம். நானும் என் படத்தை இணையத்திலே போடலாம்னு இருக்கேன்.

என் தங்க்ஸ்: எதுக்கு படத்தை போடணும்?

நான்: சில நண்பர்கள் கேட்டிருக்காங்க. அதைத்தவிர லட்சக்கணக்கான பேர் கேக்காம தினமும் நினைச்சிட்டிருக்காங்க. அதுக்காகத்தான். அது தவிர, நான் என்ன இட்லிவடையா, அஞ்சு வருஷம் மூஞ்சியையே காட்டாமே இருக்கறதுக்கு...

என் தங்க்ஸ்: எதுக்கும் ஒரு தடவை பின்விளைவுகளை நினைச்சி பாத்துக்கங்க.

நான்: என்ன சொல்ல வர்றே?

என் தங்க்ஸ்: இவ்ளோ நாளா உங்க முகம் தெரியாமே உங்களை அஜீத், சூர்யா ரேஞ்சுக்கு நினைச்சிருந்தாங்கன்னு வைங்க - நாளைக்கு படத்தை பாத்தபிறகு - இதை பாக்கவா நாம் படத்தை கேட்டோம்னு நொந்துக்கற அளவுக்கு அவங்களை கொண்டு வந்து விட்றாதீங்க.
அவ்ளோதான் நான் சொல்லுவேன்.

நான்: சேச்சே.. அவ்ளோ மோசமா நினைக்க மாட்டாங்கம்மா. ஒரு வேளை அப்படி நினைச்சாலும், யாரும் வெளிப்படையா பின்னூட்டத்திலே சொல்ல மாட்டாங்கன்ற நம்பிக்கையிலே நான் படத்தை போடத்தான் போறேன்.

என் தங்க்ஸ்: என்னமோ செய்ங்க.

நான்: ரொம்ப நன்றிம்மா..

----




அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

Read more...

Monday, October 20, 2008

கடைசிப் பெயர் அல்லது Last Name!!!

அர்னால்ட் ஸ்வாஜ்ஜெனிகருக்கு பெரிசாயிருக்கும்...
மடோன்னாவுக்கு இருக்காது...

இப்படி இன்னும் சில நபர்களைக் குறித்து சொல்லப்படும் இந்த ஜோக்குக்கு விடை என்ன என்பது உங்களுக்குத் தெரிந்தேயிருக்கும். அதுதான் இந்த பதிவின் தலைப்பில் இருக்கும் - கடைசிப் பெயர் அல்லது sur name அல்லது Last name.

கடைசிப் பெயர் - நம்ம ஊர்லே இதைக் கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா, இங்கே எங்கே போனாலும் முதல்லே உங்க பேர் என்னன்னு கேக்காமே, உங்க கடைசிப் பேர் என்னன்னுதான் கேக்கறாங்க. அதுக்கு என்ன இப்போன்னு நீங்க கேக்கலாம். இருங்க. சொல்றேன்.

என் பெற்றோர் எனக்குப் பேர் வைக்கும்போது - ரொம்ப பெரிசா வெச்சது மட்டுமில்லாமே, அதை வார்த்தை வார்த்தையா பிரிச்சி வேறே வெச்சிட்டாங்க. முதல் பேர்லே ரெண்டு பகுதியும், கடைசிப் பேர்லே ரெண்டு பகுதியும், ஆக மொத்தம் நாலு வார்த்தைகள். அதாவது,
6+9+10+8=33 ஆங்கில எழுத்துக்களைக் கொண்டது என் முழுப்பேரு.

என்னோட முதல் பேரோட முதல் பகுதி (சத்யா) உங்க சில பேருக்கு தெரிந்திருக்கும். கடைசிப் பேர்லே முதல் பகுதி ஒரு ஊரில் உள்ள இடத்தின் பேரு (கடைசி பேர்ன்றதாலே அதை இந்த பதிவின் கடைசியிலே சொல்றேன்!!!). இரண்டாம் பகுதி எங்கப்பா பேரு.

நிற்க. (ஏற்கனவே நின்றிருந்தால் உட்கார்க). இப்போ இந்த கடைசிப் பேராலே என்னென்ன பிரச்சினை வந்திருக்குன்னு பாக்கலாம்.

ஒரு தடவை, இங்கே ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு போய் வேலையை முடிச்சிட்டு, என் பேர் சொல்லிக் கூப்பிடுவாங்கன்னு உட்காந்திருந்தேன். வழக்கம்போல், கண்ணை ஏதோ ஒரு இடத்திலே குத்தி வெச்சிட்டு, மனசை இந்தியாவிலே எங்கேயோ சுத்தவிட்டிருந்தேன்.
அந்த ஆள் என்னோட கடைசி பேரை (முதல் பகுதியை) சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருந்தார் நானோ - ஆஹா, நாம பொறந்த இடத்தை யாரோ ஒருத்தர் எவ்ளோ அழகா சொல்றாரு பாருப்பா - அப்படின்னு சும்மா உக்காந்திருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சிதான் தெரிஞ்சுது -
அடடா, நம்ம பேரை சொல்றதுக்கு பதிலாதான் ஐயா அப்படி சொல்லிக்கிட்டிருக்காருன்னு. எழுந்து அவர்கிட்டே போனேன். அவரும் 'இது உங்க பேருதானே. ஏன் சும்மா முறைச்சிக்கிட்டு உக்காந்திருந்தீங்க?'ன்னாரு. எனக்கு பயங்கர வெக்கமா போயிடுச்சு. நம்ம கேப்டனுக்கு
தமிழ்லே பிடிக்காத அந்த ஒரு வார்த்தையை சொல்லிட்டு வெளியே வந்துட்டேன்.

அதே மாதிரி இன்னொரு தடவை ஒரு மருத்துவமனைக்குப் போயிருக்கும்போது, அங்கிருந்த நர்ஸம்மா - "உன்னோட கடைசி பேரு (முதல் பகுதி) உச்சரிக்க ரொம்ப கஷ்டமாயிருக்கு. அதுக்கு பதிலா முதல் பேரை (முதல் பகுதி) - சத்யான்னு - சொல்லி கூப்பிடவா" அப்படின்னாங்க. அடக்கஷ்ட காலமே, அதான்மா என் பேரு - அப்படின்னு நினைச்சிக்கிட்டு, "ஓ, அதுக்கென்ன, தாராளமா கூப்பிடுங்க" - அப்படின்னேன்.

இன்னொரு சந்தர்ப்பத்துலே நடந்தது இது. மேஜைக்கு அந்தப்பக்கத்திலிருந்து கேக்குறாரு ஒருத்தரு. "குடும்பத்துலே நீங்க மூணு பேரு ( நான், மனைவி மற்றும் குழந்தை). ஆனா, மூணு பேரோட கடைசி பேரும் வெவ்வேறா இருக்கே. அது எப்படி. குடும்பப்பேரு ஒண்ணுதானே
இருக்கணும்".

நானும் தொண்டையை கனைச்சிக்கிட்டு - "ஐயா, கடைசிப் பேருன்றது எங்களைப் பொருத்தவரை குடும்பப்பேரு கிடையாதுங்க. அது, அவங்கவங்க அப்பா பேருதான். எனக்கு - எங்கப்பா பேரு. என் மனைவிக்கு - அவங்கப்பா பேரு. என் பொண்ணுக்கு - என்னோட முதல்
பேரு. அதனால்தான், எல்லாமே வெவ்வேறா இருக்கு" - அப்படின்னேன்.

"இல்லையே. இந்தியாலே ஷர்மா, குப்தா அப்படின்னு குடும்பப்பேர் இருக்கே. அது எப்படி?" என்றார்.

சரி. இன்னிக்கு இது ஆவறதில்லே அப்படின்னு நினைச்சிக்கிட்டு - இந்திய பழக்கவழக்கங்கள், வட-தென்னிந்தியர்களின் பெயர்களில் உள்ள வித்தியாசங்கள் அனைத்திலும் ஒரு சிறிய சொற்பொழிவு நிகழ்த்தவேண்டியதாயிற்று.

அதன்பிறகுதான் அவர் சமாதானமாகி எங்களை வெளியே போகவிட்டார்.

----

சரி இவ்ளோ சொல்லிட்டு என்னோட கடைசி பேர்லே முதல் பகுதி என்னன்னு சொல்லாமே இருக்க முடியுமா? அது 'Triplicane'.

ஐந்தாவது படிக்கும்போது, என்னோட பேர் மற்றும் அதே இனிஷியலோட இன்னொருவன் வந்துவிட, என்ன பண்றதுன்னு தெரியாம, இனிஷியல்லே கூட ஒரு எழுத்து சேர்க்கறேன்னு பெற்றோர்கள் சேத்துவிட்டதுதான் இந்த 'Triplicane'.

தற்போது சென்னையில் வருமானவரி அலுவலகத்தில் வேலை செய்யும் அந்த சத்யாவை பார்க்கும்போதெல்லாம் - உன்னாலே என் பேரையே மாத்திக்கிட்டேனே? எனக்கு மட்டும் வருமான வரி போடாமே இருக்கக்கூடாதா? என்று வேண்டுகோள் வைப்பது வழக்கம்.

அவரும் வழக்கம்போல் சிரித்துக்கொண்டே - "வேணும்னா ஒரு சாப்பாடு வாங்கித் தர்றேன் - அவ்ளோதான் என்னாலே முடியும்" அப்படின்னு அங்கிருக்கும் கேண்டீனுக்கு கூட்டிப்போய்விடுவார்.



Read more...

Saturday, October 18, 2008

சினிமா சினிமா, கிருஷ்ணா, சினிமா சினிமா

பதிவின் தலைப்பை முகுந்தா முகுந்தா பாணியில் படிக்கவும். மாட்டிவிட்ட பரிசலுக்கு நன்றி...

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நாலைஞ்சு வயசிருக்கும்னு நினைக்கிறேன். அப்போ பாத்த படங்கள்னு நினைவுக்கு வருவது - சென்னை பைலட் தியேட்டரில் பக்த துருவ மார்க்கண்டேயா (பாட்டியுடன்). சத்யம்-ல் லாரல் ஹார்டி (அப்பாவுடன்). இதைப்பற்றி விரிவான ஒரு கொசுவத்தி பதிவு அடுத்த வாரம் வருது. (வருங்காலப் பதிவுக்கு இப்பவே உரல் கொடுக்கமுடியுமான்னு யாராவது சொல்லுங்கப்பா!!!).

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கஜினி கணக்காக விடாமுயற்சியுடன் முயன்று பார்த்த படம் தசாவதாரம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

புதையல். இதுதான் நான் இணையத்தில் கடைசியாகப் பார்த்த தமிழ் படம். பிங்க் சட்டை, பச்சை பேண்ட் என்று கலக்கல் ஸ்டைலில் அரவிந்த்சாமி நடித்த படம். நல்லா வாய் விட்டு சிரிச்சி ( நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா) பார்த்தேன். கணிணியின் பவர்ப்ளக்கை சொருகாமல், பேட்டரியில் பார்த்ததால்தான், படம் இருட்டாக (வெளிச்சம் கம்மியாக) இருந்ததென்று கடைசியில் உணர்ந்தேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பாட்ஷா.

ஒவ்வொரு தடவை பாட்ஷா பாத்தப்புறமும் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தும். என்னன்னா, செம பசியாயிருக்கும். பசியைக்கூட மறந்து அந்த படத்தை பார்ப்பதுதான் காரணம்.
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரொம்ப நாட்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் இணையத்தில் தமிழ்முரசு பார்த்தேன். காதலில் விழுந்தேன் படத்தைப் பற்றிய சர்ச்சை - ஒரு முழுப் பக்கத்தில் படங்களுடன் கூடிய செய்தி. ஒரு வெட்டி (NOT நம்ம வெட்டி) படத்துக்கு இவ்ளோ பிரச்சினையா அப்படின்னு கொஞ்ச நேரத்துக்கு கோபம் இருந்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

சில நல்ல சீன்கள் வரும்போது மட்டும், ஒரு பூவை க்ளோசப்பிலோ அல்லது ஒரு புலி மானைத் துரத்தி கொல்வது போலவோ காட்டி நம்மை ஏமாற்றும் அந்த தொழில் நுட்பம் என்னை மிகவும் தாக்கும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

குமுதமோ அல்லது இணையமோ - சினிமா செய்திகளை கடைசியில்தான் படிப்பேன். பேட்டி போக எல்லா இடத்திலும் ஒரே கிசுகிசு மேட்டர்தான். நமக்கு ஒரு நயா பைசா பிரயோசனம் இல்லாத மேட்டரை படிச்சி என்ன ஆகப்போகுது சொல்லுங்க.

7.தமிழ்ச்சினிமா இசை?

இசையைப் பொறுத்தவரை நமக்கு பாட்டு வரிகள் புரியணும், கேட்பதற்கு இனிமையா இருக்கணும், வாத்திய இரைச்சல் குறைவா இருக்கணும் - அவ்ளோதான்.

அது - தேவா (உதா: மனம் விரும்புதே உன்னை, நலம் அறிய ஆவல்) இருந்தாலும் சரி, இளையராசா (ஏகப்பட்ட பாடல்கள்) இருந்தாலும் சரி, ரகுமான் (உதா: என்னவளே அடி என்னவளே) இருந்தாலும் சரி.

இதே ரீதியில் இருக்கும் பாடல்கள் எப்போவும் காரில், வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

கஜினிக்குப் பிறகு முகுந்தா முகுந்தாதான் ஸஹானா விரும்பிக் கேட்கும் பாடல் என்பதால் அந்த பாட்டு அடிக்கடி வீட்டில் ஒலிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நல்ல படம்னு எங்கேயாவது விமர்சனம் படித்தால், தேடிப்பார்த்துவிடுவேன்.

மலையாளம் - கத பறயும் போள், தன்மத்ரா
இந்தி - சக் தே இந்தியா, லகான், முன்னாபாய் MBBS
ஆங்கிலம் - விரும்பிப்பார்ப்பது நகைச்சுவை/திகில் படங்கள்.

சென்ற வாரம் க்வாரண்டைன் (Quarantine) பார்த்தேன். பயங்கர திகில் படம். பெரிய அரங்கில் மொத்தமே 5 பேர்தான் அமர்ந்திருந்தோம். அடிக்கடி பக்கத்தில், பின்னால் யாரோ வந்து நிற்பதுபோலவே இருந்தது. படம் முடிந்ததும், விட்டாப் போதும்டா சாமி என்று ஓடிவந்துவிட்டேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியா டிக்கட் வாங்கி, நேரடியா உக்காந்து பார்ப்பதைத் தவிர எனக்கு சினிமாவுடன் எந்த தொடர்பும் கிடையாது.

அதனால், கிளைக்கேள்விகள் N/A.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு படத்தின் தயாரிப்பு செலவு 1000 கோடியாகும். (இதில் ஹீரோ மற்றும் டைரக்டர் இவங்களோட சம்பளம் மட்டும் 950 கோடியாகும்).

ஒரு பாட்டுக்கு 30 ஆடைகள் மாற்றி, 40 நாடுகள் செல்வார்கள்.

கொரியாவிலிருந்தோ, நைஜீரியாவிலிருந்தோ ஒரு பாடகரை கொண்டு வந்து தமிழ்ப்படத்தில் பாடவைப்பார்கள்.

கட்டவுட்களுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்.

அரசு மானியம் பெற்று திரையிடப்படும் படங்கள் வெளியாகும் நாளன்று அரசு விடுமுறை அளிக்கப்படும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


பால், பீர் விலை குறைய வாய்ப்புண்டு.

பதிவர் மற்றும் வாசகர் சந்திப்புகளை பரிசல் ஏதாவது ஒரு திரையரங்கத்தில் வைத்துக்கொள்ளலாம்.

உடனடியா எல்லா டாஸ்மாக் கடைகளையும் பக்கத்து திரையரங்கத்திற்கு மாற்றிவிடலாம்.

மதன்ஸ் திரைப்பார்வையில் - ஆங்கிலத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட தமிழ் படங்களுக்கு விமர்சனம் செய்வதைவிட - நேரடியாக அந்த ஆங்கிலப்படத்துக்கே விமர்சனம் செய்யலாம்.

அலுவலகத்தில் எல்லோரும் தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி விவாதிப்பார்கள் (இப்போவும் அப்படித்தான். இன்னும் அதிகமாயிடும்!!!).

-----

இந்த பதிவை படிக்கிறவங்க - இன்னும் இந்த தொடரை எழுதாதவங்க - கண்டிப்பா எழுதணும்னு கேட்டுக்கறேன்.... :-))



Read more...

Friday, October 17, 2008

நெருப்பில்லாமேகூட புகையும்...!!!

ஊரு விட்டு வரும்போது அம்மா - வாரத்துக்கொரு தடவை எண்ணைய் தேச்சி குளின்னு சொன்னா மாதிரியே - வண்டி வாங்கும்போது, மூணு மாசத்துக்கு ஒருதடவை வண்டிக்கு எண்ணைய் மாத்தணும்னு நண்பர்கள் சொன்னாங்க.

அதேமாதிரி கடந்த ரெண்டு வருஷமா எண்ணைய் மாத்தற விஷயம் அமைதியா நடந்துக்கிட்டிருக்கும்போது, போன மாதம் ஒரு சம்பவம் நடந்து போச்சு. அன்னிக்கு நான் எண்ணைய் மாத்தின விஷயம் இந்த ஊரெல்லாம் தெரிஞ்சி - எல்லோரும் ரொம்ப ஆச்சரியமா பாத்தாங்க. இதுக்கெல்லாம் காரணமாயிருந்த (எண்ணைய் மாத்தின) அந்த மெக்கானிக்குக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கேன்.

சரி. விஷயத்துக்கு வர்றேன்.

அன்னிக்கு கார்த்தாலே 10 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட். (இங்கே எல்லாத்துக்கும் அப்பாயிண்ட்மெண்ட்தான்). அரை மணி நேரத்துலே எண்ணைய் மாத்தற வேலை முடிஞ்சிடுச்சு. நானும் வண்டியை உருட்டிக்கிட்டு அலுவலகத்திற்கு வந்துட்டேன் (சுமார் 2 மைல்கள்).

தினமும் அலுவலகத்தில் நுழையும்போது அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் பல சூப்பர் கார்களைப் பார்த்து என் காதில் புகை வருவது வழக்கம். ஆனால், அன்னிக்குன்னு பார்த்து என் காதில் மட்டுமல்லாது, என் காரிலிருந்தும் புகை வரத்துவங்கியது. சரி, கொஞ்ச நேரத்தில்
சரியாகிவிடும்னு பார்த்தால், அந்த புகை நிற்கவேயில்லை.

என்னடான்னு முன்னாடி பேனட்டைத் திறந்து பார்த்தால் - பொது இடத்திலே அடிக்கமுடியாதுன்றதாலே, ஏகப்பட்ட பேர் என் காருக்குள்ளே உக்காந்து தம் அடிக்கறாப்லே - வண்டிக்குள்ளே பயங்கர புகை. இன்னும் சிறிது உற்றுப் பார்த்தால் - எண்ணைய் போடும் குழாயின் மூடியே காணோம். அதன் வழியாக எண்ணைய் வழிந்து - வண்டிக்குள்ளே விழுந்து ஒரே புகைமூட்டம். அந்த மூடி உள்ளேயே எங்கேயாவது விழுந்திருக்கிறதா என்று பாப்போம்னு பாத்தால், எங்கேயுமே காணோம். மெக்கானிக் அந்த குழாயை மூடாமலேயே விட்டிருக்கிறார்.

அவருக்கு தொலைபேசி விஷயம் சொன்னால் - அவரோ மிகவும் கூலாக - மறுபடி வண்டி கொண்டுவாங்க, சரி செய்துடலாம்னு சொல்லிட்டாரு. இப்படி புகை வருதே - ஏதும் பிரச்சினை வராதான்னால், அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. புகை அடங்கினப்புறம் வாங்க - அப்படின்னு கட் பண்ணிட்டாரு. சரின்னு சிறிது நேரம் கழிச்சி, மறுபடி வண்டி எடுத்துக்கிட்டு மெதுவா உருட்டிக்கிட்டு போனேன். அப்பவும் புகை அடங்கவேயில்லை.

ஏதோ ஒரு சினிமாவில் ஒரு பாட்டு சீன் வரும் - ஹீரோவும் ஹீரோயினும் ஒரு காரில் (ஸ்லோ மோஷனில்) பாட்டு பாடிக்கிட்டே போவாங்க. சுத்தி நிறைய பேர் வெள்ளை உடையில் டான்ஸ் ஆடுவாங்க - அந்த இடத்திலே பயங்கர புகை போட்டு வெச்சிருப்பாங்க. கிட்டத்தட்ட அதே காட்சி மாதிரிதான் நானும் கார் ஓட்டிக்கிட்டு போனேன். தெருவில் எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். ஒரே ஒரு ஹீரோயின் மட்டும்தான் பாக்கி.

அப்படி புகையோடவே அந்த கடைக்கு மறுபடி போனா, அந்த மெக்கானிக் சிரிச்சிக்கிட்டே - "ஹிஹி, உங்க எண்ணைக்குழாயின் மூடி இங்கேதான் இருக்கு. நான் அதை மூட மறந்துட்டேன். ஒரு அஞ்சு நிமிஷம் உக்காருங்க. சுத்தம் செய்து கொடுத்திடறேன்" - அப்படின்னு
சொன்னா மாதிரி செய்து கொடுத்தார்.


ஆனாலும், காரின் உள்ளே விழுந்திருந்த எண்ணையின் விளைவால், அடுத்த ரெண்டு மூணு நாள் புகையோடவே வண்டி ஓட்டிக்கிட்டிருந்தேன்.

அதான் மேட்டரு...

அப்போ நெருப்பில்லாமேகூட புகையும்தானே???

Read more...

Thursday, October 16, 2008

எனக்கு என் மாமியார் செய்யும் கொடுமைகள் 10...!!!

1. மூக்கிலே விரலை விட்டு நோண்டாதீங்க. எனக்கு அசிங்கமா இருக்கு.

2. துவைக்க வேண்டிய துணிகளையெல்லாம் ஒழுங்கா ரூம்லே இருக்கற கூடையிலே போடுங்க.

3. எனக்கு கொஞ்ச நேரம் உங்க கணிணி வேணும். எப்போ பாத்தாலும் கெக்கேபிக்கேன்னு எதை பாத்து சிரிக்கிறீங்களோ?

4. கார்த்தாலே எழுந்தவுடனே போர்வையை மடிச்சி வெக்கணும்னு தெரியாதா?

5. ஷேவ் செய்தபிறகு வாஷ்பேசினை நல்லா சுத்தப்படுத்தணும்றது தெரியுமா?

6. தினமும் சோபா (sofa) உறையை ஒழுங்குபடுத்தி போடணும்னு தெரியாதா?

7. இப்படி நகத்தை கடிக்காதீங்க. அது ரொம்ப கெட்ட பழக்கம்.

8. சாப்பிட்ட பிறகு மரியாதையா தட்டை எடுத்து கழுவி வைங்க.

9. தும்மும்போது முகத்தை மூடிக்கோங்க.

10. நீங்க சொல்ற அறுவை ஜோக்குக்கெல்லாம் என்னாலே சிரிக்க முடியாது. அதுக்கு வேறே ஆளை பாருங்க.



இப்படியெல்லாம் என்னோட தனிமனித சுதந்திரத்திலே தலையிடறாங்க.




சொந்த வீட்லேகூட நிம்மதியா இருக்கமுடியாம தவிக்கிறேன்..



மேலே சொன்னமாதிரியெல்லாம் என்னை கொடுமைபடுத்தற .... மாமியாருக்கு நிகரான... அந்த ஆள் இவங்கதான்..... அவ்வ்வ்வ்...






Read more...

Wednesday, October 15, 2008

கார் ஓட்டும்போது ஏற்படும் சிறு பிரச்சினை.. தீர்வு தேவை!!!

இந்தியாவில் இருக்கும்போது எனக்கு இந்த பிரச்சினை இருந்ததில்லை. ஏன்னா, அங்கே நான் கார் ஓட்டினதேயில்லை. அமெரிக்கா வந்தும்கூட கார் வாங்கி சில நாட்களுக்கு இது ஒரு பிரச்சினையாகவே எனக்கு படவில்லை. ஆனால், சமீபகாலமாக ஒரே குழப்பமாக இருக்கிறது. இதை படிக்கும் லட்சக்கணக்கான நண்பர்கள் எனக்கு ஒரு நல்ல தீர்வைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சரி சரி. பிரச்சினை என்னன்னே சொல்ல மாட்றியேப்பான்னு பொறுமையை இழக்கறவங்களுக்கு - ஆல் சைலண்ட்.. நீங்களும் சைலண்ட்...

கார் வாங்கி சில நாட்களுக்கு இரண்டு கைகளாலும் ஸ்டியரிங்கைப் பிடித்து ஓட்டிக்கொண்டிருப்பேன். ஆனால், இப்போதெல்லாம் ஒரே கையே போதுமென்றிருக்கிறது. பிரச்சினை பிரச்சினைன்னு முதல்லேந்து சொல்லிக்கிட்டிருக்கேனே - அது என்னென்னா - வண்டி ஓட்டும்போது அந்த சும்மா இருக்கிற கையை (ஸ்டியரிங் பிடிக்காத கை) வைத்துக்கொண்டு என்ன செய்வது? அவ்ளோதான்.

தினமும் அலுவலகம் செல்லும்போதும், திரும்ப வரும்போதும் பயங்கர தொல்லையாக இருக்கிறது. என்னால் செய்யமுடிந்த சில செயல்களும் அதன் விளைவுகளும் பின்வருமாறு.

1. மீசையை முறுக்குதல்: இடது கையால் வண்டி ஓட்டும்போது, வலது கையை மீசை மேல் வைத்து, அதை முறுக்கி முறுக்கி முறுக்குவது சூப்பராக இருக்கிறது. அடிக்கடி முன்னால் இருக்கும் சிறு கண்ணாடியில் பார்த்தவாறே, மீசையை நேராக்குவது நல்ல பொழுதுபோக்கு.
ஆனால், மீசை நன்றாக முறுக்கியாகிவிட்டது என்ற நிலை வரும்போது அதன் மேல் கை வைக்க மனம் வரவில்லை. அப்பேர்ப்பட்ட சமயத்தில் அந்த கையை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

2. பாட்டுக்கு தாளம் போடுவது: MP3 ப்ளேயரில் ஓடும் பாட்டுக்கு தாளம் போடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு ரெண்டு மூணு பாட்டுக்கு மேல் தாளம் போடுவது போரடிக்கிறது. கை வலிக்கிறது. அதனால், இதை என்னால் தொடர முடியவில்லை.

3. அலைபேசியில் பேசுவது: வண்டி ஓட்டும்போது கையில் அலைபேசி வைத்துக்கொண்டு பேசுவதைப் பார்த்தால், மாமா வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவார். Handsfreeயில் பேசலாமென்றால், மறுபடி அந்த கை சும்மாதானே இருக்கும்?

4. வண்டிக்குள் சுத்தம் செய்வது: கீழே கிடக்கும் பேப்பர், சில்லறை ஆகியவற்றை சுத்தப்படுத்தலாம். ஆனால், வீடாயிருந்தாலும், காராயிருந்தாலும் - சுத்தம் செய்ய வேண்டுமென்றாலே எனக்கு தூக்கம் வந்துவிடுமென்பதால், அதையும் என்னால் செய்ய முடியவில்லை.

5. நகம் கடிப்பது: இரு கைகளிலும் உள்ள நகங்களை கடித்துத் துப்பிவிட்டால் மறுபடி அவை வளர ஒரு வாரமாவது ஆவதால், இதை தினமும் செய்ய முடியவில்லை. கால் நகத்தை என்னால் கடிக்க முடியவில்லை. வேகமாக நகம் வளர ஏதாவது மருந்திருந்தால் தேவலை.

இதைத்தவிர புத்தகம் படிப்பது, சுடோகு போடுவது, மடிக்கணிணியில் ஏதாவது அடிப்பது - இதெல்லாம் வண்டி ஓட்டும்போது என்னால் முடியாத செயல்களென்பதால் இவைகளையும் செய்யமுடியவில்லை.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்னோட பிரச்சினை என்னவென்று. இதற்கு ஏதாவது ஒரு தீர்வு இருந்தால், அதற்காக தயவு செய்து தற்போதைய ட்ரெண்டின்படி தந்தியெல்லாம் அடிக்காமல், இங்கே பின்னூட்டத்திலேயே சொல்லவும்!!!.

Read more...

Tuesday, October 14, 2008

நடுநிலைவாதிகள் போடவேண்டிய டிஸ்கி 10...!!!

நடுநிலைவாதிகள் அரசியலை/அரசியல்வாதிகளைப் பற்றி பதிவெழுதும்போது எழுதவேண்டிய டிஸ்கிகள் என்னென்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. நான் கலைஞரை மட்டும் திட்டி எழுதுவதாக நினைக்கவேண்டாம். புரட்சித்தலைவி, கேப்டன்,
சூப்பர் ஸ்டார் யார் முதல்வராக வந்தாலும் இப்படித்தான் எழுதுவேன்.

2. சென்ற ஆட்சிக்காலத்தில் நீ இப்படி எழுதினாயா என்று கேட்கவேண்டாம். நான் இந்த வருடம்தான் வலைப்பூ துவக்கினேன்.

3. என் சட்டைக்குள் நெளியற மேட்டர் இருக்கான்னு பார்க்கவேண்டாம். அதற்கும் என் கருத்திற்கும் சம்மந்தமில்லை.

4. நான் யாருக்கும் அல்லக்கை அல்ல.

5. நான் எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை.

6. இந்த பிரச்சினையை மட்டும் பற்றி பேசுவோம். மற்ற பிரச்சினைகளைச் சொல்லி பதிவை திசை திருப்ப வேண்டாம். அதை வேறு பதிவுகளில் பேசுவோம்.

7. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடுதான். நான் மறத்தமிழன்தான்.

8. என்னைப் பற்றியோ என் உறவினர்களைப் பற்றியோ தரக்குறைவாக எழுதவேண்டாம்.

9. இந்த பதிவுக்கு மட்டும் 'பின்னூட்ட மட்டுறுத்தல்' செய்திருக்கிறேன். 'நல்ல' பின்னூட்டங்கள்
மட்டுமே வெளியிடப்படும்.

௰. நான் அவனில்லை.




Read more...

Monday, October 13, 2008

தங்கமணிகள் மறக்கும் விஷயங்கள் 10....!!!

குடும்பத்தோடு வீட்டை பூட்டிக்கொண்டு எங்கேயாவது வெளியே புறப்படும்போது, எதையோ மறந்துவிட்டு மறுபடி வீட்டிற்குள் போகவேண்டுமென்பார்கள் (அவரவர்) தங்கமணிகள். அப்படி போவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கமுடியுமென்று பாருங்கள். விட்டுப்போனவற்றை சொல்லுங்கள்.

10. வீட்டில் பீரோ / லாக்கர் பூட்டவேண்டியிருக்கும்.

9. வெளியே காயப்போட்டிருக்கும் துணிகளை உள்ளே எடுத்துப் போடவேண்டியிருக்கும்.

8. ஜன்னல் / பால்கனி கதவுகளை மூட மறந்துவிட்டிருப்பார்கள்.

7. கைக்கடிகாரம், செயின், மோதிரம் - இவற்றை மறந்துவிட்டிருப்பார்கள்.

6. வாங்கவேண்டிய மளிகை/இதர பொருட்களின் பட்டியல் வீட்டுக்குள்ளேயே இருக்கும்.

5. வெளியே போகும்போது போடலாம் என்று வைத்திருந்த குப்பையை விட்டிருப்பார்கள்.

4. மேக்கப் மேல் டச்சப் தேவைப்படும்.

3. சமையல் கேஸ், தொலைக்காட்சிப் பெட்டி, அறையில் எரியும் விளக்கு - இவற்றை அணைத்தோமா என்று சந்தேகப்படுவார்கள்.

2. பர்ஸ், பணம், கைபேசி - இவற்றை எடுத்துக்கொள்ள மறந்திருப்பார்கள்.



டாப்-ஒன் காரணம் என்னவாக இருக்கும்?...




கீழே...




சற்று கீழே...




இன்னும் கொஞ்சம்...




1. ரங்கமணி ஓய்வறையில் பிஸ் அடித்துக்கொண்டிருக்கும்போது, அவரையே மறந்து விட்டிருப்பார்கள்.


முக்கியமான டிஸ்கி: முதலாவது காரணம் நிஜம்ம்ம்ம்ம்மா எனக்கு நடந்ததில்லைப்பா.... உங்களுக்கு யாருக்காவது நடந்திருந்தா மறைக்காமே உண்மையை ஒத்துக்கோங்க.... அவ்வ்வ்...

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP