Saturday, January 23, 2010

நான் கட்டிய வீடு!!!நண்பர்கள்
ஒவ்வொரு ஞாயிறும்
அலைந்து திரிந்து
வீட்டைப் பார்க்க

அப்பா
வேகாத வெயிலில்
போய் பார்த்து
முடிவு செய்ய

அண்ணன்
வங்கிகளில் ஏறி இறங்கி
கடனுக்கு
ஏற்பாடு செய்ய

மாமனார்
ஜோசியரிடம்
புதுமனை புகுவிழாவிற்கு
நாள் குறிக்க

தம்பி
வீட்டின் முகப்பு
மாதிரியே
அழைப்பிதழ் அடிக்க

அம்மா
தொலைபேசியிலும்
நேரிலும் போய்
அனைவரையும் அழைக்க

விழா அன்று
விடியலில்
விமானத்தில் ஜாலியாக
போய் இறங்கிய
என்னிடம் எல்லோரும்
சொல்கிறார்கள் -

ஜமாய்ச்சிட்டே!
கலக்கிட்டே!
கஷ்டப்பட்டு கட்டிட்டே
புது வீடு!!

Read more...

Wednesday, January 20, 2010

சாந்தி நிலவ வேண்டும்!!!அவள் பேச
நான் பேச

அவள் பேசப் பேச
நான் பேசப் பேச

அவள் பேசப் பேசப் பேச
நான் பேசப் பேசப் பேச

அவள் கை பேச
என் கை பேச

அவள் கை பேசப் பேச
என் கை பேசப் பேச

அவள் கை பேசப் பேசப் பேச
என் கை பேசப் பேசப் பேச

அவள் கால் பேச
அவள் கால் பேசப் பேச
அவள் கால் பேசப் பேசப் பேச

வீட்டிலிருந்த
கரண்டி பேச
தோசைத் திருப்பி பேசப் பேச
சப்பாத்திக் கட்டை பேசப் பேசப் பேச

இப்போதெல்லாம்

அவள் பேச
நான் கேட்க

அவள் பேசப் பேச
நான் கேட்கக் கேட்க

அவள் பேசப் பேசப் பேச
நான் கேட்கக் கேட்கக் கேட்க

அமைதி
ஓம் சாந்தி ஓம்
சுபம்.

Read more...

Sunday, January 17, 2010

நான் பாதி, நான் பாதி...!!!பல படங்கள்
முழுமையாக
பார்க்கப்படாமல்
விடப்பட்டன
பாதியில்.

பல நட்புகள்
தொடர முடியாமல்
முறிந்தன
பாதியில்.

பல இடுகைகள்
முடிக்க முடியாமல்
‘'டிராஃப்ட்'டில்
கிடக்கின்றன
பாதியில்.

வயலின்
கற்றுக் கொள்ளப் போய்
திரும்பி வந்தேன்
பாதியில்.

விமானம் ஓட்டக்
கற்கவேண்டும் -
வெறும் வார்த்தையிலேயே
நிறுத்தினேன் -
என் சரிபாதியின்
கண்களில்
எக்கச்சக்க கோபம்.

இப்படி எல்லாமே
பாதி பாதியாய் இருக்கிறதே? -
நண்பர்களிடம் தீர்வு
கேட்டேன்.

பாதிப்பேர்
சொன்னார்கள் -
இதற்கு பாதி அல்ல -
முழு காரணமும்
நான்தானாம்.

இந்த பாதி அனுபவத்தை
ஒரு புத்தகமாக
எழுதலாமென்று
நினைத்தேன்.

நான் பாதி, நான் பாதி
என்று தலைப்பிட்டு
ஆரம்பித்த அந்த
புத்தகம்
பாதியில் நிற்கி

Read more...

Tuesday, January 12, 2010

பத்து நிமிஷத்துக்கு முன்னாடி...

பிஞ்சுக் குழந்தைகள்
கை நீட்டி விளையாடக்
கூப்பிடும்போதும்

தாகத்தில் யாரும்
தண்ணீர் தருமாறு
கேட்கும்போதும்

மருத்துவத் துறையிலோ
எந்தத் துறையிலோ
முதலிடத்தில்
தமிழகம் என்று
அறிவிக்கப்படும்போதும்

ஒவ்வொரு தேர்தலிலும்
உங்களுக்கு சேவை செய்ய
எங்களுக்கு ஓட்டு போடுங்கள்
என்று கைகூப்பி
அமைச்சர்கள் வரும்போதும்


திரைப்படங்களில்
நாடகங்களில்
புத்தகங்களில்
எங்கேயானாலும்

பத்து நிமிஷத்துக்கு
முன்னாடி
கூட்டி வந்திருந்தா
காப்பாத்தியிருக்கலாம் என்று
மருத்துவர் கூறும்போது

பதினாறு வருடங்களுக்கு
முன் அதே
பத்து நிமிடங்களுக்கு
இழந்த என் தந்தையோடு
நினைவுக்கு வரப்போகிறவர்

வெற்றிவேல்...

Read more...

Thursday, January 7, 2010

எது முக்கியம்?

எத்தனை கோவில்கள்
சுற்றினோம்
கணக்கில்லை

எத்தனை மருத்துவர்களை
பார்த்தோம்
நினைவில்லை

எத்தனை பரிகாரங்கள்
செய்தோம்
தெரியவில்லை

ஏசுவார்கள் என்று
எதிர்பார்த்து
விசேஷங்களுக்கு
போகவில்லை

ஒவ்வொரு மாதமும்
உன்னை எதிர்பார்த்து
ஒருவருக்கும் தெரியாமல்
தனிமையில் அழுதோம்

என் கண்மணியே
என் செல்லமே

அடச்சீ..
கொஞ்ச நேரம்
தள்ளி உக்காரு..

நாளைக்கும் இதே
ரோதனை
மானாட மயிலாட
பாக்கமுடியாமே
சோதனை...

Read more...

Tuesday, January 5, 2010

தமிழ்ப்பித்தர் தி.வெ.ச!!!

நண்பர் தமிழ்ப்பித்தர் தி.வெ.ச. ஒரு பதிவரும் கூட. அவர் இந்த வாரம் பல மைல்கற்களை தாண்டியுள்ளார். தனது 300வது இடுகையை போட்டிருக்கும் இவ்வேளையில், பதிவுலகத்தில் தன் இரண்டாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார். மணம், குணம், சுவை நிறைந்த (இவைகளில் ஒன்றிரண்டு குறையலாம்!) அவரது பதிவை படிக்க இங்கே செல்.... அட,
அதான் படிச்சிட்டே இருக்கீங்களே... அனைவருக்கும் நன்றி... (ஹிஹி. அது நாந்தான். என் பெயரை தமிழ்ப்'படுத்தினேன்'. அவ்வளவுதான்!).

*****

பல வருடங்களுக்குப் பிறகு தலைவரின் ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை' படித்தேன். அடடா.. அருமை.. அற்புதம்.. இதெல்லாம்தான் எல்லாருக்கும் ஏற்கனவே தெரியுமே.. அதுக்கென்னன்றீங்களா.. நண்பர் நர்சிம்மின் மாறவர்மன் படிக்கும்போதே, நாமும் இந்த மாதிரி ஒரு சரித்திரத் தொடர் எழுதினா என்ன என்று தோன்றும். (டேய். உனக்கெதுக்கு இந்த
வேண்டாத வேலை. சரித்திரமெல்லாம் ஒழுங்கா இருக்குறது போதாதான்னு எல்லாருமே சொல்றது கேக்குது!).

ஆனா விதி வலியது. இப்போ அந்த ஆசை கொழுந்து விட்டு எரியுது. அதனால் கூடிய விரைவில் இங்கே ‘இளவரசன் விஜயன்' நகைச்சுவைத் தொடர் - கதையில் உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ ஒருவர்தான் ஹீரோ!!!.

*****

முன்னாடியே எழுதியிருக்கணும். மறந்துட்டேன். இப்போ எங்க கிராமத்துலே பதிவர்களின் எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. ஹிஹி.. அதிகம்னா ரொம்ப அதிகமில்லே ஜெண்டில்மேன்.. என்னையும் சேர்த்து ரெண்டு பேர். நண்பர் ஆளவந்தான் இங்கே வந்திருக்கிறார். என்னமோ வேலையாம், அது ரொம்ப ஜாஸ்தியாம். அதனால் கொஞ்ச நாளா எதுவுமே எழுதலியாம். (ஆமா.. வேலைன்னா என்ன?!!) ஆளவந்தான் அண்ணே.. நம்ம கிராமத்து பேரை நிலைநாட்ட வேணாமா.. சீக்கிரமா மறுபடி எழுத ஆரம்பிங்க...

*****

என்னை மாதிரி வெளிநாட்டுலே இருக்குறவங்களுக்கு சென்னையில் (அல்லது அவங்கவங்க ஊரில்) என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்படுது - பாலம் வந்துடுச்சா - பைபாஸ் ரோடு போட்டுட்டாங்களான்ற கேள்விகள் இருக்கும். என்னைப் பொருத்தவரை தென்சென்னையில் என்ன நடக்குதுன்னு தேடிக்கிட்டே இருப்பேன். இப்படி எல்லா தகவல்களையும் ஒரே இடத்துலே கிடைக்கறதுக்கு இங்கேதான் போவேன். பல்வேறு தலைப்புகள்லே மக்கள் பேசிக்கிட்டே இருக்காங்க. எனக்கு வேண்டிய தகவல்களுக்கு கேள்வி கேட்டா யாராவது ஒருத்தர் பதிலும் சொல்றாங்க. நல்லா இருக்கு.

*****

கதை நேரத்துலே என்னோட திறமையை முன்னாடியே சொல்லியிருக்கேன். இங்கே இருக்கு. (சகோதரி ரம்யா -> ப்ளீஸ் ஸ்டாப் த சிரிப்பு!). இதோட அடுத்த கட்டம் என்னன்னா, ஊர்லே இருக்கும் ‘பெரிசுங்க' தொந்தரவு தாங்கமுடியாமே புராணக் கதைகள் சொல்லலாம்னு முடிவு பண்ணோம்.

ஹிஹி. அதுக்கு முதல்லே நமக்கு தெரியணுமே. ச்சின்ன வயசுலே படிச்சது
எல்லாம் மறந்து போயே போச்சு!. ரெண்டு புத்தகத்தை வாங்கி முதல்லே நாங்க படிச்சி அப்புறம் சஹானாவுக்கு சொல்லலாம்னு ஆரம்பிச்சா... வந்த ஏகாகூடமான சந்தேகங்களைக் கேட்டு இப்பல்லாம் நான் சீக்கிரம் தூங்கிடறேன். கொர்..கொர்..

1. மேலே அவங்களுக்கெல்லாம் குளிராதா? ஒண்ணுமே (சட்டை!) போட்டுக்காமே நிக்குறாங்களே?

2. தேவர்கள் நல்லவர்கள்னு சொல்றீங்க. அவங்க எதையும் 'share' பண்ணாமே, கெட்டவர்களோட எதுக்கு எப்ப பாத்தாலும் சண்டை போடறாங்க?

3. கடவுளுக்கே ஒரு பெரிய கயிறு கிடைக்கலியா? ஏன் பாம்பை எடுத்து கடையணும்?அந்த ஆமை வேறே.. பாவம்.

4. அவங்கவங்க (கடவுள்கள்!) சிங்கம், பாம்புன்னு வெச்சிருக்காங்க. நான் ஒரு ச்சின்ன பூனைதானே கேக்குறேன். எனக்கு வாங்கித் தர மாட்டேன்றீங்க. ஏன்?

5. தசரதனுக்கு மூணு wife-ஆ? (உண்மையான நம்பரை நான் சொல்லவில்லை!). அது எப்படி?

இதெல்லாம் ஒரு சாம்பிள்தான்.. அவ்வ்..

*****

கடைசி மேட்டருக்கு மட்டும் பின்னூட்டம் போட்டு தப்பிச்சிடாதீங்க... அப்புறம் முதல்லேந்து படிக்கலேன்னு கண்டுபிடிச்சிடுவேன். ஆமா..

*****

Read more...

Sunday, January 3, 2010

JFK பன்னாட்டு விமான நிலையம்


இந்தியா போகும்/வரும்போது மட்டுமே பார்த்திருந்த JFK பன்னாட்டு விமான நிலையத்திற்கு - அவசரமாக இந்தியா செல்லவிருந்த ஒரு நண்பர் குடும்பத்தினரை வழியனுப்ப வேறு சில நண்பர்களுடன் சென்றிருந்தேன்.


இந்திய விமானங்கள் புறப்படும் இடம். இந்தியாவிலிருக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் இருந்ததால் - ஒரு மினி இந்தியாவின் நடுவில் இருப்பதைப் போன்ற உணர்வை தந்தது. அதில் தமிழர்களும் நிறைய இருப்பதால், எசகுபிசகாக ஏதேனும் கமெண்ட் அடிக்காமல் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று.


நூற்றுக்கணக்கான மக்கள் - ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு உணர்ச்சிகள் - ஆகையால் அந்த இடமே ஒரு கலவையான உணர்ச்சிமிக்க ஒரு களமாக இருந்தது. ஒரு ஓரமாக அமர்ந்து - ஒவ்வொருவரும் என்னென்ன நினைத்துக் கொண்டிருப்பர் என்று கற்பனை செய்ய ஆரம்பித்தால் - நேரம் போவதே தெரியவில்லை.


இன்னும் அரை மணி நேரம்தான் - இப்படியே சோகமா மூஞ்சியை வெச்சிக்கிட்டு - இவங்களை விமானத்துக்குள்ளே அனுப்பிட்டா - அப்புறமா வெளியே போய் - 'ஏஏஏஏய்ய்ய்ய்... தங்கமணி ஊருக்குப் போயாச்சு'ன்னு கத்திக்கிட்டே அடுத்த ஒரு மாசம் ஜாலியா இருக்கலாம்னு நினைக்கிற ரங்கமணிகள்...


இவ்ளோ நாளா அமெரிக்கா, அமெரிக்கான்னு ஓவரா சீன் போட்டிட்டுந்தோமே, இப்போ வேலை போயி, இந்தியாக்கே திரும்பி போகணுமே - அங்கேயாவது வேலை கிடைக்குமான்னு தெரியலியேன்னு மனசில் நினைச்சாலும், வெளியே காட்டிக்காமே நின்றிருக்கும் நபர்கள்...


நிஜமான குடும்ப பிரச்சினையால் அவசர அவசமாக ஊருக்குத் திரும்ப தயாராக இருக்கும்போதும், துக்கத்தை அடக்க முடியாமல் வாய் விட்டு அழுதுகொண்டிருந்த ஒரு பெண்....


பல நாட்கள் பிரிவுக்கு சிறு இழப்பீடாக இருக்கட்டும் என்று சுற்றுப்புறத்தை மறந்தவாறு முத்தம் கொடுத்தபடி இருந்த ஒரு ஜோடி..


ஐயய்யோ.. அடுத்த பதினைஞ்சு மணி நேரம் விமானத்துலே இவ பக்கத்துலேயே உக்காந்து போகணுமே - குதிச்சி தப்பிக்கலாம்னு நினைச்சாலும் முடியாதேன்னு கவலையான முகத்தோட நின்றிருந்த ரங்கமணிகள்...


எங்கே போகிறோம், என்ன நடக்கிறது என்பதையே அறியாமல் தத்தித்தத்தி விளையாடி வரிசையில் நின்றிருந்தவர்களை சிறிது நேரம் தங்கள் கவலைகளை மறக்கச் செய்து விளையாடிய ச்சின்னஞ்சிறு குழந்தைகள்...


இவன் கண்ணே ஒரு மாதிரி இருக்கே - அவன் போக்கே சரியில்லையே என்று அனைவரையும் தம் சந்தேகக் கண்களால் துளைத்தெடுத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் காவலர்கள்..


மகள்/மருமகளின் பிரசவத்திற்காக வந்து, மூன்று முதல் ஆறு மாதம் வரை அமெரிக்காவை சுற்றிப் பார்த்துவிட்டு அவர்களை பிரிய மனமில்லாமல் இந்தியா பயணப்பட தயாராக நிற்கும் வயதானவர்கள்.


இவ்வாறாக பல்வேறு மக்கள் எங்களைத் தாண்டி போய்க் கொண்டிருக்க, நண்பர் உள்ளே போக வேண்டிய நேரமும் ஆயிற்று.


அவரை வழியனுப்பிவிட்டு வெளியே வந்து, திரும்பி ஒரு தடவை அந்த பிரம்மாண்டமான நிலையத்தை பார்த்தேன். தாமிரை இலை தண்ணீர் போல் - பற்றற்ற நிலையில் உள்ள முனிவரைப் போல - இவர்களும் கடந்து போவார்கள் என்று வந்து போகும் மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு கட்டுப்படாமல் - முழு நிலவொளியில் வெளிச்சமாய் நின்றிருந்தது விமான
நிலையம்.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP