Sunday, January 3, 2010

JFK பன்னாட்டு விமான நிலையம்


இந்தியா போகும்/வரும்போது மட்டுமே பார்த்திருந்த JFK பன்னாட்டு விமான நிலையத்திற்கு - அவசரமாக இந்தியா செல்லவிருந்த ஒரு நண்பர் குடும்பத்தினரை வழியனுப்ப வேறு சில நண்பர்களுடன் சென்றிருந்தேன்.


இந்திய விமானங்கள் புறப்படும் இடம். இந்தியாவிலிருக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் இருந்ததால் - ஒரு மினி இந்தியாவின் நடுவில் இருப்பதைப் போன்ற உணர்வை தந்தது. அதில் தமிழர்களும் நிறைய இருப்பதால், எசகுபிசகாக ஏதேனும் கமெண்ட் அடிக்காமல் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று.


நூற்றுக்கணக்கான மக்கள் - ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு உணர்ச்சிகள் - ஆகையால் அந்த இடமே ஒரு கலவையான உணர்ச்சிமிக்க ஒரு களமாக இருந்தது. ஒரு ஓரமாக அமர்ந்து - ஒவ்வொருவரும் என்னென்ன நினைத்துக் கொண்டிருப்பர் என்று கற்பனை செய்ய ஆரம்பித்தால் - நேரம் போவதே தெரியவில்லை.


இன்னும் அரை மணி நேரம்தான் - இப்படியே சோகமா மூஞ்சியை வெச்சிக்கிட்டு - இவங்களை விமானத்துக்குள்ளே அனுப்பிட்டா - அப்புறமா வெளியே போய் - 'ஏஏஏஏய்ய்ய்ய்... தங்கமணி ஊருக்குப் போயாச்சு'ன்னு கத்திக்கிட்டே அடுத்த ஒரு மாசம் ஜாலியா இருக்கலாம்னு நினைக்கிற ரங்கமணிகள்...


இவ்ளோ நாளா அமெரிக்கா, அமெரிக்கான்னு ஓவரா சீன் போட்டிட்டுந்தோமே, இப்போ வேலை போயி, இந்தியாக்கே திரும்பி போகணுமே - அங்கேயாவது வேலை கிடைக்குமான்னு தெரியலியேன்னு மனசில் நினைச்சாலும், வெளியே காட்டிக்காமே நின்றிருக்கும் நபர்கள்...


நிஜமான குடும்ப பிரச்சினையால் அவசர அவசமாக ஊருக்குத் திரும்ப தயாராக இருக்கும்போதும், துக்கத்தை அடக்க முடியாமல் வாய் விட்டு அழுதுகொண்டிருந்த ஒரு பெண்....


பல நாட்கள் பிரிவுக்கு சிறு இழப்பீடாக இருக்கட்டும் என்று சுற்றுப்புறத்தை மறந்தவாறு முத்தம் கொடுத்தபடி இருந்த ஒரு ஜோடி..


ஐயய்யோ.. அடுத்த பதினைஞ்சு மணி நேரம் விமானத்துலே இவ பக்கத்துலேயே உக்காந்து போகணுமே - குதிச்சி தப்பிக்கலாம்னு நினைச்சாலும் முடியாதேன்னு கவலையான முகத்தோட நின்றிருந்த ரங்கமணிகள்...


எங்கே போகிறோம், என்ன நடக்கிறது என்பதையே அறியாமல் தத்தித்தத்தி விளையாடி வரிசையில் நின்றிருந்தவர்களை சிறிது நேரம் தங்கள் கவலைகளை மறக்கச் செய்து விளையாடிய ச்சின்னஞ்சிறு குழந்தைகள்...


இவன் கண்ணே ஒரு மாதிரி இருக்கே - அவன் போக்கே சரியில்லையே என்று அனைவரையும் தம் சந்தேகக் கண்களால் துளைத்தெடுத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் காவலர்கள்..


மகள்/மருமகளின் பிரசவத்திற்காக வந்து, மூன்று முதல் ஆறு மாதம் வரை அமெரிக்காவை சுற்றிப் பார்த்துவிட்டு அவர்களை பிரிய மனமில்லாமல் இந்தியா பயணப்பட தயாராக நிற்கும் வயதானவர்கள்.


இவ்வாறாக பல்வேறு மக்கள் எங்களைத் தாண்டி போய்க் கொண்டிருக்க, நண்பர் உள்ளே போக வேண்டிய நேரமும் ஆயிற்று.


அவரை வழியனுப்பிவிட்டு வெளியே வந்து, திரும்பி ஒரு தடவை அந்த பிரம்மாண்டமான நிலையத்தை பார்த்தேன். தாமிரை இலை தண்ணீர் போல் - பற்றற்ற நிலையில் உள்ள முனிவரைப் போல - இவர்களும் கடந்து போவார்கள் என்று வந்து போகும் மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு கட்டுப்படாமல் - முழு நிலவொளியில் வெளிச்சமாய் நின்றிருந்தது விமான
நிலையம்.

9 comments:

மணிகண்டன் January 3, 2010 at 12:45 PM  

&&&
தாமிரை இலை தண்ணீர் போல் - பற்றற்ற நிலையில் உள்ள முனிவரைப் போல - இவர்களும் கடந்து போவார்கள் என்று வந்து போகும் மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு கட்டுப்படாமல் - முழு நிலவொளியில் வெளிச்சமாய் நின்றிருந்தது விமான
நிலையம்
&&&

hello ??

ஆயில்யன் January 3, 2010 at 1:59 PM  

என்ன பாஸ் ஒரே ஃபீலிங்க்ஸா போச்சு !

நாஸியா January 3, 2010 at 11:48 PM  

ஃபீலிங்க்ஸ் ஆஃப் அமெரிக்கா!

pudugaithendral January 4, 2010 at 12:18 AM  

அமெரிக்காவில் வேலை போன ஒரு பையன் ஏம்மா திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாய் என்று கேட்டு தன் கஷ்டத்தை புலம்புவது போல தெலுங்கில் ஒரு பாட்டு சூப்பர் ஹிட்டாகி இருக்கு.

அந்த ஞாபகம் வந்துச்சு

எம்.எம்.அப்துல்லா January 4, 2010 at 4:11 AM  

எங்கே கொஞ்சம்.....

















சிரிங்க பார்ப்போம் :)

PPattian January 4, 2010 at 4:26 AM  

பாஸ்.. அந்த கடேசி பாரா.. என்ன ஆச்சி பாஸ்?

மத்தபடி.... ஏர்போர்ட்னா எப்டி இருக்கும்னு நச்னு சொல்லிட்டீங்க..

சின்னப் பையன் January 4, 2010 at 6:41 AM  

பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் நன்றி...

கடைசி பாரா -> ஹிஹி... ரொம்ப டூ மச் ஃபீலிங்ஸா இருக்குதோ???? நெக்ஸ்டுலே மாத்திடறேன்...

அறிவிலி January 4, 2010 at 11:13 AM  

//இவர்களும் கடந்து போவார்கள் என்று வந்து போகும் மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு கட்டுப்படாமல் - முழு நிலவொளியில் வெளிச்சமாய் நின்றிருந்தது விமான
நிலையம்.//

வேற எங்கியாவது தெரியாம வந்துட்டனான்னு ஸ்க்ரோல் பண்ணி மேல போய் பாக்க வேண்டியதா போச்சு.

அருமையான எருமை January 4, 2010 at 11:55 AM  

உண்மையிலயே ரொம்ப feelings ஆயிட்டீங்க போல. அடுத்த முறை செல்லும் போது நல்ல வெயில் அடிக்கும் நேரமாக பார்த்து செல்லவும்..அப்பத்தான் முழு நிலவு feelings கம்மியாகும்! :-)
நேரம் கிடைக்கும்போது இங்கும் வந்தால் மகிழ்ச்சி: http://arumaiyanaerumai.blogspot.com/
நன்றி!!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP