Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Sunday, December 6, 2009

கைப்பேசியில் கூப்பிடுபவர்களது மேட்டரை ‘கட்' செய்யுங்கள்!

1. ஆபீஸுக்குத்தான் பைக்குலே / கார்லே போயிட்டிருக்கேன். இன்னும் அரை மணி நேரம் ஆகும். பேசலாம். சொல்லுங்க.

2. இப்பத்தான் ரயிலிலிருந்து இறங்கினேன். தண்டவாளம் கடக்கறதுக்காக நிக்குறேன்.

3. வீட்டுக்குத்தான் வந்துட்டிருந்தேன். இப்போ பெட்ரோல் பங்க்லே பெட்ரோல் போட்டிட்டிருக்கேன்.

4. பஸ்லே / ரயில்லே போயிட்டிருக்கேன்.

5. பேங்க்லே / மருத்துவமனைலே இருக்கேன்.

*****

நண்பர்கள் யாரையாவது கைப்பேசியில் கூப்பிட்டால் நான் கேட்கும் முதல் கேள்வி - பிஸியாயிருக்கீங்களா?. அப்போ அவங்க மேற்கூறிய பதில்களில் ஏதாவது ஒன்றை கூறினால், மேற்கொண்டு பேசாமல் உடனடியாக அழைப்பை துண்டித்து விடுவேன்.

அதே போல், நான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது யாராவது கூப்பிட்டாலும் அதை எடுக்காமலும், அப்படியே எடுக்க வேண்டியிருந்தால் வண்டியை ஓரத்தில் நிறுத்தியே அந்த அழைப்பை எடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறேன்.

ஓட்டுனர் கைப்பேசியில் பேசிக்கொண்டு வண்டியை ஓட்டுவதுதான் பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இது எல்லாருக்கும் தெரியும். அதில் அந்த ஓட்டுனரது தவறு 50% என்றால் மீதி மறுமுனையில் பேசுபவரதாகும்.

வண்டி ஓட்டிட்டிருக்காரே, நாம் இப்போது பேசினால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதுன்னு தெரிஞ்சி அழைப்பை துண்டித்தாலே, விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதுன்றது என் கருத்து.

*****

மேலே சொன்ன பதில்களில் முதல் இரண்டு - இவ்வகையானதே.

பேசுபவருக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் பிரச்சினை வரக்கூடும் என்ற உணர்வு இருந்தால், அழைப்பவர் கண்டிப்பாக அழைப்பை துண்டித்து விடுவார். அது எத்தகைய விஷயமாக இருந்தாலும், அவர் வீடோ / அலுவலகமோ போய் சேரும் சிறிது நேரம் காத்திருத்தலில் ஒன்றும் குடி முழுகிப்
போய்விடாது என்று உணர வேண்டும்.

மூன்றாவது பதில் இன்னும் அபாயமானது. எல்லா பெட்ரோல் பங்கிலும் - கைப்பேசியை பயன்படுத்தாதீர்கள் என்று போட்டிருப்பார்கள். இங்கேயும் கவனமாக இருத்தல் அவசியம்.

கடைசி இரு பதில்களில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இல்லையென்றாலும், அந்தப் பக்கம் பேசுபவரால் மற்றவர்களுக்கு எவ்வளவு தொந்தரவு ஏற்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

*****

தண்டனைகள் கடுமையானாத்தான் குற்றங்கள் குறையும்னு விவேக் சொன்னது போல், கைப்பேசியில் பேசிக்கொண்டே விபத்து ஏற்படக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும். அப்படியே, அழைப்பின் அந்தப்பக்கம் பேசியவருக்கும் தண்டனை தந்தா இன்னும் நல்லா இருக்கும். அழைப்பை ‘கட்' செய்யாத குற்றத்திற்காக, அவரது மேட்டரை ‘கட்' செய்துவிட்டால், மறுபடி வேறு யாராவது வண்டி ஓட்டும்போது அழைத்து பேசமாட்டார் என நம்பலாம்.

*****

Read more...

Tuesday, March 31, 2009

தொலைபேசி லொள்ளுகள்!!!


வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் / உறவினர்களிடம் தொலைபேசுதலில் உள்ள பிரச்சினைகள் என்னன்னு இங்கே பாப்போம்.

*****

போட்டுக் கொடுத்தல்:

ஒரு உதாரணத்திற்கு, xம் yம் நம் உறவினர்கள். x கிட்டே சில தடவை பேசின நான், y கிட்டே பேசலைன்னு வைங்க - என்ன ஆகும், yயை பார்க்கும்போது x போட்டு வைப்பார். "என்ன, உங்க நெருங்கிய உறவினர்னு சொல்றீங்க. அவன் உங்ககிட்டே பேசவேயில்லையா? என்கிட்டேயே நிறைய தடவை பேசிட்டானே?". ஏதோ நம்மாலானதுன்னு பத்த வெச்சிட்டு போயிடுவாங்க.

பொகஞ்சிக்கிட்டே இருக்கற yயிடம் அடுத்த தடவை பேசும்போது - "நீங்கல்லாம் பெரிய
மனுசங்க. நம்மகூடல்லாம் பேச நேரமிருக்குமா?"ன்னுதான் பேச்சே ஆரம்பிக்கும்.

நமக்கும் காடுவெட்டி மாதிரி வாயிலே கெட்ட கெட்ட வார்த்தைகளா வரும். ஆனா, வெளிப்படையா பேசமுடியாது. ஹிஹின்னு வழிஞ்சிக்கிட்டு பேச்சை மாத்தி வேறே ஏதாவது பேச ஆரம்பிக்கணும்.

பயங்கர பிஸி:

நேரில் பார்த்தால் கண்டபடி பாசம் காட்டும் பயபுள்ளைங்க, கண்ணிலிருந்து மறைந்துவிட்டால், நம்மை அப்படி மறந்துடுவாங்க. மின்னஞ்சல் அனுப்பினால், அதற்கும் பதில் வராது. கேட்டால், "மாப்ளே - ஆபீஸ்லே பயங்கர பிஸிடா"ன்னுவாங்க.

மாசத்துக்கு ஒரு மின்னஞ்சல்கூட அனுப்பமுடியாமே அவ்ளோ பிஸியா இருக்கீங்களாடேன்னு கேக்க முடியாது. அப்போ நான் மட்டும்தான் இங்கே சும்மா உக்காந்திருக்கேனான்னும் கோபம் வரும்.

அப்புறம் உண்மை(!) தெரிஞ்சதும் மனம் தெளிவடைஞ்சிடும்(!).

நோ மேட்டர்:

இன்னும் சில பேர் இருக்காங்க. பேசி கொஞ்ச நாள் ஆனா போறும் - வீட்லே கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவாங்க. "பையன் தொலைபேசி ரொம்ப நாளாச்சு. உங்ககிட்டே பேசும்போது எனக்கும் அடிக்கடி பண்ணச் சொல்லுங்க".

சரின்னு தொலைபேசினா - ஒரு நிமிடம்கூட இருக்காது - அதிலேயே பல தடவை - ம். அப்புறம், அப்புறம் என்ன விஷயம் - இப்படிதான் பேச்சு இருக்கும். மேட்டர் என்னன்னா, பேசறதுக்கு விஷயமே இருக்காது. அப்புறம் என்னதுக்கு வெங்காயம் என்னை தொலைபேசச் சொன்னே? இப்படி கேக்கமுடியுமா? கண்டிப்பா முடியாது.

மொக்கை படமாத்தான் இருக்கும்னு முன்னாடியே தெரிஞ்சாலும், நாமும் விடாமே டாக்டர் விஜய் படங்களையெல்லாம் திரையரங்கத்துக்குப் போய் பாக்கறதில்லையா, அதே போல இந்த மாதிரி ஆட்களுக்கும் அடிக்கடி தொலைபேசி மொக்கையை பொறுத்துக்கணும். அவ்ளோதான் விஷயம்.

ரிச்சி ஸ்ட்ரீட்:

சில பேருக்கு ரிச்சி ஸ்ட்ரீட்டோ அல்லது ஏதாவது எலக்ட்ரானிக்ஸ் கடைக்கோ போனாதான் எங்க நினைவே வரும். உடனே ஒரு மின்னஞ்சல் தட்டி விடுவாங்க - "அர்ஜண்ட் மேட்டர். உடனே தொலைபேசு".

நாமளும், பாசக்கார பய, நம்மள தொலைபேசச் சொல்றானேன்னு பேசினா - "எப்ப ஊருக்கு வர்றே. வரும்போது ஒரு எம்.பி3 ப்ளேயர், ஒரு லேப்டாப் இதெல்லாம் வாங்கி வரணும். இங்கே வந்ததும் காசு கொடுத்துடறேன். நீ கவலைப்படாதே" - அப்படி இப்படின்னு ஒரு பட்டியல் வெச்சிக்கிட்டு பேசுவாங்க.

தேர்தல் முடியற வரைக்கும்தான் நம்மகிட்டே தொங்குவாரு, அதுக்கப்புறம் இடம் மாறிடுவாருன்னு மருத்துவரைப் பத்தி தெரிஞ்சாலும் பொறுமையா அவரோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற அம்மா மாதிரி நாமும் சிரிச்சிக்கிட்டே பதில்
சொல்லணும் - "சரி வாங்கிட்டு வர்றேன்".

*****

இன்னும் இதே மாதிரி நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், நம்ம பாலிஸி

இன்னிக்கு _____

நாளைக்கு பால்

நாளன்னிக்கு தயிர்

அதுக்கடுத்த நாள் மோர்

அதுக்கடுத்த நாள் புளித்த மோருங்கறதாலே

அப்படியே துடைச்சிக்கிட்டு போக வேண்டியதாயிருக்கு.

*****


Read more...

Wednesday, November 26, 2008

டேய்!! தண்டவாளத்தை நடந்து கடக்காதீங்கடா!!!

பலமான எச்சரிக்கை:

நக்கலும், நையாண்டியும் எப்போதும் இருக்கும் பூச்சாண்டியில் முதல்முறையாக ஒரு சோகப்பதிவு. பல நாட்களாக போடலாமா, வேண்டாமா என்றெண்ணி மனதில் உள்ள சோகத்தை கொட்டிவிட முடிவு செய்து போடப்படும் பதிவு. இன்னிக்கு சந்தோஷமா இருக்கறவங்களும், இருக்கப் போறவங்களும் மற்றும் இளகிய மனசுக்காரங்களும் தயவு செய்து படிக்கவேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

---------

டேய். இங்கே வாடா. நீயும் வாடி. கையை பிடிங்க. தண்டவாளத்தைத் தாண்டி அந்தப்பக்கம் வீட்டுக்குப் போகணும்.

அப்பா... அப்பா... இந்தப் பக்கம் பாருங்கப்பா.. ரெயில் வந்துடுச்சுப்பா...

தடக்.. தடக்... தடக்... தடக்..

-------------

செய்தி: 2007ல் ரெயிலில் அடிபட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை - தமிழ் நாட்டில் 1979 - சென்னையில் 870.

-------------

சென்னையில் எங்கள் அடுக்கு மாடி வீட்டில் பின்பக்கம், சஹானாவுக்கு இரண்டு குட்டி நண்பர்கள் இருந்தார்கள். இரண்டு வயது வித்தியாசத்தில் அழகான அண்ணன் தங்கை. பள்ளி முடிந்தபிறகு எங்கள் வீட்டுக்கு வந்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள். சஹானாவின் பொம்மைகளை வீடு பூராவும் பரத்தி, தினமும் நாங்கள் பலமுறை சுத்தம் செய்யவேண்டியிருக்கும்.

--------------

தினமும் இணையத்தில் தினமலர், தினகரன் படிக்கும்போது பார்க்கும் செய்தி - தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இன்னார்
மரணம்ன்றது. சென்னை புறநகரில் அடிக்கடி நடக்கும் விபத்து இது. யார் இறந்தார்கள், எந்த ஊர் என்று மட்டும் பார்த்துவிட்டு அடுத்த
செய்திக்கு போய்விடும் அளவுக்கு பழகிப்போய்விட்ட ஒரு செய்தி. இது எனக்கு மட்டுமல்ல, அந்தப்பக்கம் இருப்பவர்களுக்கும், புறநகர்
ரெயில் பயன்படுத்துவோருக்கும் அப்படித்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

-----------

சென்ற வருடத்தில் ஒரு நாள் வழக்கம்போல் அலுவலகத்திலிருந்து அம்மாவுக்கு தொலைபேசியிருந்தேன். தொலைபேசி எடுத்தவுடன், அம்மா -
ஓ வென்று அழ ஆரம்பித்து விட்டார்கள்.

"என்னம்மா ஆச்சு, உடம்பு சரியில்லையா?. சொல்லுங்க. எனக்கு ஒண்ணும் புரியல".

" நம்ம __குட்டி... நம்ம _குட்டி.... நேத்து ரெயில்லே அடிபட்டு.... ராத்திரியே..... ".... இன்னிக்கு தினகரன்லே வந்துருக்கு பாரு" -

அழுதுகொண்டே தொலைபேசியை வைத்துவிட்டார்கள்.

----------

அலுவலகத்தில் நுழைந்த அரை மணியில் இந்த செய்தி. உடனே லீவ் போட்டுவந்து, சஹானாவின் பழைய ஆல்பத்தைத் தேடி எடுத்து
__குட்டியைப் பார்த்து அழுது மயக்கம் போடாத குறைதான். என் தந்தை மறைந்தபோதுகூட நாங்கள் அவ்வளவு அழுததில்லை.

அந்த விபத்து நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும் அந்த ஆல்பத்தைப் புரட்டும்போதும், __குட்டியை பார்க்கும்போதும்
அழாமல் இருக்கமுடியவில்லை. அப்படியே அடுத்த இரண்டு நாளுக்கு மூட் அவுட்டாவதையும் தடுக்க முடியவில்லை.

--------

டேய்.. ஒரு அஞ்சு நிமிஷத்தில் ஒண்ணும் குடிமுழுகிப் போகாதுடா... தண்டவாளத்தை நடந்து கடக்காமே, படியிலோ சுரங்கப்பாதையிலோ
போய் பழகுங்கடா...

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP