Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Friday, December 5, 2008

சந்தில் சிந்து...!!! பகுதி 2 of 2...!!!


கைனடிக் சேலஞ்சர்:



ஒரு கைப்பேசி ஓசியில் கிடைக்குதுன்றதுக்காக என் பழைய கம்பெனியில் இந்த வண்டியை எனக்கு வாங்கிக் கொடுத்தாங்க. சென்னையில் மிகச்சிலரே வைத்திருக்கும் அபூர்வ மாடல் வண்டி இது. நிற்க. வழக்கமான வழக்கப்படி வண்டி வாங்கி பூஜை போட்டவுடன் செய்த முதல் காரியம் அந்த ரெண்டு கண்ணாடியையும் கழற்றியதுதான்.


ஒரு முறை தங்கமணி பின்னாலிருக்க, அவரை அலுவலகத்திற்கு விடப்போய்க்கொண்டிருந்தேன். கத்திப்பாரா - போரூர் ரோடில் கிண்டி அருகிலேயே ஒரு சந்தில் க்ராஸ் செய்ய வேண்டும். சரியான ட்ராஃபிக். பல்வேறு வண்டிகளுக்கிடையே புகுந்து புறப்பட்டு ரோட்டை க்ராஸ் செய்தபோது சடாரென்று ஒரு ஆட்டோ வந்துவிட்டது. சிந்து பாட முயற்சித்தபோது சாலையோரத்தில் இருந்த மணல் வழுக்கி சர்ர்ர்ர்ரென்று போய் விழுந்தோம்.


சமாளித்து எழுந்து நின்று, ஆடைகளில் மட்டுமல்ல, மீசையிலும்கூட மண் ஒட்டவில்லையென்று சொல்லிக்கொண்டு போனோம்.

கார் (இந்தியாவில்):

நங்கநல்லூர் ஆஞ்சனேயா பள்ளியில் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது முதலில் நம்மிடம் சுத்தமாக இல்லாத ஒன்றைத்தான். அது காரோட்டும்போது பொறுமையா இருக்கணும்றது.

ஒரு முறை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தபோது எனக்கு முன்னால் ஒரு ஆட்டோ மிகவும் மெதுவாக போய்க்கொண்டிருந்தது. எதிர்ப்பக்கத்திலிருந்து ஒரு பேருந்து வந்துகொண்டிருந்தது. இப்போ பதிவோட தலைப்பை மறுபடி பாத்துக்குங்க... அப்படி செய்றேன்னு சொல்லி சர்ருன்னு ஒரு க்ளோஸ் ப்ராக்கெட் (")") போட்டா மாதிரி வண்டி ஓட்டி, ஆட்டோவுக்கும் பேருந்துக்கும் நடுவில் போய் அந்தப் பக்கம் நின்னேன்.

வண்டியில் அமர்ந்திருந்த சக கற்றுக்கொள்பவர்கள் படபடவென்று கைதட்ட, கூட இருந்த ஆசிரியரோ வழக்கம்போல் #$@#$ இது உங்கப்பன் வீட்டு வண்டியா, நீ கார் ஓட்டறியா இல்லே ப்ளேன் ஓட்டறியா அப்படி இப்படின்னு திட்டி தீர்த்துட்டார்.

இந்த ஆட்டோ-பேருந்து போல் பல காம்பினேஷன்களுக்கு 'நடுவில்' வண்டி ஓட்டி (மாடு-மாடு, மாடு-சைக்கிள், பேருந்து-சுவர்) கொஞ்சம்போல கற்றுக் கொண்டு அமெரிக்கா வந்து சேர்ந்தேன்.


கார் (அமெரிக்காவில்):


இங்கே சந்துலே சிந்தெல்லாம் பாட முடியாது. ஒருத்தர் பின்னாலே ஒருத்தர்தான் போகணும். அதெல்லாம் நாம விட்டுடுவோமா.. மேலே படிங்க.


ஒரு வாரயிறுதியில் ஊர் சுற்றிப்பார்க்கப் போன இடத்தில் வண்டியை நிறுத்த முற்பட்டபோது... ஏற்கனவே அங்கு நின்றிருந்த காருக்கும், சுவருக்கும் நடுவே இருந்த இடைவெளியில் புகுந்து போயிடலாம்னு நினைச்சி... அந்த கார் மேலே இடிக்கக்கூடாதுன்னு கவனமா இருந்து... வலது பக்கம் சுவற்றில் 'சர்ர்ர்ர்'ன்னு என் காரை தேச்சிட்டேன்.


மிகச்சிறிய டேமேஜே ஆயிருந்தாலும், எனக்கு மேரேஜ் ஆகியிருந்த காரணத்தால், அன்னிக்கு திட்டு அதிகமா விழுந்தது...:-((


அன்னியிலேர்ந்து வழியில் மிகப் பெரிய இடைவெளி இருந்தாலும், நின்னு நிதானமா போறதால் - சந்தில் சிந்து பாடறேன்னு யாரும் என்னை சொல்ல முடியாது.


ரெயில்:


பதிவுக்காக இவ்ளோ விஷயத்தையும் எழுதியபிறகு - தங்ஸிடம் எல்லாத்தையும் சொன்னேன். அதுக்கு அவங்க - "நல்ல வேளை. நீங்க இன்னும் ரெயில் ஓட்டலே. அப்படியே ரெயில் ஓட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சாலும், இப்படித்தான் குறுக்கும் நெடுக்குமா போய் ஏதாவது பிரச்சினை பண்ணிக்கிட்டே இருப்பீங்க" - அப்படின்னு நல்லபடியா வாழ்த்துனாங்க...!!!


Read more...

Thursday, December 4, 2008

சந்தில் சிந்து...!!! பகுதி 1 of 2...!!!


சந்தில் சிந்து பாடறியா? - நீங்க மத்தவங்களையோ / மத்தவங்க உங்களையோ வாழ்க்கையில் ஒரு தடவையாவது சொல்ல கேட்டிருப்பீங்க.

ஒரு நாள் மல்லாக்க படுத்து விட்டத்தைப் பாத்துக்கிட்டு இருந்தபோது, நான் சைக்கிள் கத்துக்கிட்ட நாள்லேந்து கார் ஓட்டற இந்த நாள் வரைக்கும் எப்பல்லாம்/எப்படியெல்லாம் சந்துலே சிந்து பாடியிருக்கேன்னு யோசிச்சேன். அதன் விளைவுதான் இந்த தொடர் பதிவு. ரெண்டு பகுதிகளா இன்னிக்கும் நாளைக்கும் வருது.

தவறாம படிச்சி உங்க பொன்னான வாக்குகளை / பின்னூட்டங்களை அள்ளி வீசுங்க.

ச்சின்ன சைக்கிள்:

ச்சின்ன வயசுலே ச்சின்ன சைக்கிள் விட கத்துக்கிட்டப்போ, சந்தே தேவையில்லை. பெரிய தெருவில் போகும்போதுகூட வளைச்சி வளைச்சி
ஓட்டி யார் மேலேயாவது இடித்துவிடுவேன். அட, கத்துக்கும்போது இதெல்லாம் சகஜம்தானே...


ஒரு நாள் எங்க பெரியப்பா வெள்ளையும் சொள்ளையுமா அலுவலகத்துக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் கிட்ட்ட்ட்டே போய் சைக்கிள் ஓட்டி காட்டறேன் பேர்வழின்னு அவர் மேலேயே இடிச்சி, வேட்டியில் டயர் டிசைன் போட்டுவிட்டேன். எதுவுமே திட்டாமே சிரிச்சிக்கிட்டே அவர் திரும்ப வீட்டுக்குப் போய் வேட்டி மாத்திகிட்டாலும் - இப்போ நினைச்சிப் பாத்தா கண்டிப்பா அன்னிக்கு மனசிலே ஏதாவது திட்டியிருப்பார்னு தோணுது.


பெரிய சைக்கிள்:




சென்னையிலிருந்த தண்ணீர் கஷ்டத்தினால் வாரம் இருமுறை பீச்சுக்கு சென்று அங்கிருக்கும் கிணற்றிலிருந்து குடிநீர் எடுத்து வருவோம். சைக்கிள் கேரியரின் இருபக்கத்திலும் ப்ளாஸ்டிக் குடமும், மேலே ஒரு எவர்சில்வர் குடமும் கட்டிக்கொண்டு போவோம்.


அப்படி ஒரு தடவை தண்ணீர் நிரப்பிக்கொண்டு மூன்று குடத்துடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். வீட்டுக்கருகில் ஒரு கன்றுக்குட்டி நின்றுக் கொண்டிருந்தது. அதற்கும் வீட்டு ப்ளாட்பாரத்துக்கும் சிறிய இடைவெளியே இருந்தது. நம்ம சைக்கிளுக்கு அந்த சின்ன கேப் போதும்னு நினைச்சி அதில் போக - நம்மை தாக்க வருகிறான் என்றெண்ணி அந்த கன்றுக்குட்டி டக்கென்று திரும்பியது.

சரி மொத்தமாக சைக்கிளோடு நான் கீழே விழுந்திருப்பேன்னு நினைச்சீங்களா. அதுதான் இல்லே. நான் ஸ்டெடியா நின்றிருக்க, பின்னாலிருந்த எவர்சில்வர் குடம் தண்ணீரோடு 'டம்'. எங்க அம்மாவுக்கு அந்த குடம் சப்பையானதுகூட பரவாயில்லை - ஆனா அவ்ளோ தண்ணியும்
வீணாப் போச்சேன்னுதான் கவலை...:-((

டிவிஎஸ் சாம்ப்:




ஓட்டிப்பார்றான்னு நண்பன் கொடுத்தபோது சிலபல பேரை அன்னிக்கு தட்டப்போறேன்னு நினைக்கவில்லை. புது வண்டி. சீப்பா கிடைக்குதேன்னு ரெண்டு பக்கமும் 'பின் பக்கம் பார்க்கும்' கண்ணாடியை வாங்கி மாட்டியிருந்தான் அவன். நிறைய வருஷம் சைக்கிள் ஓட்டிய
முன்னனுபவம் இருந்ததால், நீ பின்னாடி உக்காரு நான் ஓட்டறேன்னு சொல்லிட்டு ஓட்ட ஆரம்பித்துவிட்டேன்.


எல்லாம் நல்லாத்தான் போயிட்டுயிருந்தது. 'திடீர்னு' நடுவில் ஒரு காய்கறி மார்க்கெட் வந்துவிட்டது. நம்ம ஊர்லே மார்க்கெட்லே கும்பலுக்கு
கேக்கணுமா.. எங்க வண்டி கண்ணாடி, வண்டியை விட கொஞ்சம் வெளியே நீட்டி இருந்ததால், ஒரு நாலஞ்சு பேரை தட்டி விட்டுக்கிட்டே
போயிட்டிருந்தேன். அதுலே சில பேர் நல்லாவும், பல பேர் நல்ல்ல்லாவும் திட்ட, திட்டத்தெரியாத ஒரு மாடு அதன் கொம்பின் உதவியால்,
எங்கள் வண்டியை முட்டி நிறுத்தியது.


கண்ணாடி இருந்தா இனிமே உன் வண்டியே ஓட்டமாட்டேன்னு சத்தம் போட்டு முதல்லே அவன் வண்டியிலிருந்து அந்த ரெண்டு
கண்ணாடியையும் கழட்ட வெச்ச பெருமை என்னைத்தான் சேரும்.

-------

பைக்கிலிருந்து பெரிய வண்டிகளில் சந்தில் சிந்து - நாளைய பதிவில்!!!

Read more...

Tuesday, November 25, 2008

கெட்டி மேளம்... கெட்டி மேளம்!!!

சிறிய வயதில் உறவினர்களின் திருமணத்திற்குப் போவது படுகுஷியாக இருக்கும். பள்ளிக்கு மட்டம் போட்டுவிடலாம், படிக்கவும் வேண்டாம்.
அதுமட்டுமல்லாமல் திருமண மண்டபத்தில் நம்மை யாரும் கண்டுக்க மாட்டாங்க. நம்ம இஷ்டத்துக்கு சாப்பிட்டு நம்ம இஷ்டத்துக்கு
சுத்திக்கிட்டே இருக்கலாம்.


என்னோட இதே வேவ்லெங்தில் (வார்த்தை நன்றி: பரிசல்) இன்னொரு உறண்பனும் இருந்தான். (உறண்பன் = உறவினன் + நண்பன்). அவனும்
அதே திருமணத்திற்கு வந்துவிட்டால், அப்புறம் எங்களை யாரும் பிடிக்கவேமுடியாது. அப்படி என்னதான் செய்வீங்கன்றீங்களா, அதைத்தான்
இங்கே சொல்லியிருக்கேன். பொறுமையா படிங்க.


ஞானும் அவனும் நடுவில் இன்னொருவரும்:


திருமணத்தை பார்வையிட வந்தவர் யாராவது ஒருவர் தனியாக உட்கார்ந்திருந்தால், நாங்கள் இருவரும் ஒவ்வொருவராக போய் அவரின்
இரண்டு பக்கங்களிலும் உட்கார்ந்து விடுவோம். ஒரு ஐந்து நிமிடம் கழித்து, ஒருவரையொருவர் திடீரென்று பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு -
'டேய், எப்படிடா இருக்கே. பாத்து ரொம்ப நாள் ஆச்சு' என்று ஒருவன் ஆரம்பிக்க, இன்னொருவனும் 'ஹேய்' என்று பேச ஆரம்பிப்பான்.


நடுவில் உட்கார்ந்திருக்கும் அந்த நபர் எங்கள் தொல்லை பொறுக்க முடியாமல் எழுந்து போகும் வரை - நாங்கள் பார்த்த சினிமா,
தொலைக்காட்சி விளம்பரம் என்று சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் எதையாவது பேசிக்கொண்டிருப்போம்.


மனிதர் பயங்கர பொறுமைசாலியாக இருந்து, பத்து நிமிடங்களுக்கு மேல் எழுந்துபோகாமல் இருந்துவிட்டால், நண்பன் பயங்கர டென்சனாகிவிடுவான். அவன் திறமையை நிரூபிக்கும் சவாலில் அவன் தோற்றுப்போனதுபோல் ஆவேசப்பட்டு - நான் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு - ஆங்கிலம், இந்தி என்று வெவ்வேறு மொழிகளில் பேச/உளற ஆரம்பித்து விடுவான். எங்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பவர், அதற்கு மேல் அந்த அறுவையை தாங்கமுடியாமல் கண்டிப்பாக எழுந்து போய்விடுவார்.


தொலைபேசுதல்:


தொலைபேசுதல் அப்படின்னா - ஃபோன்லே பேசுதல் இல்லீங்க. தொலைவிலிருந்து பேசுதல். ஒரு படத்தில் மணிவண்ணன் பேருந்து
நிலையத்தில் நின்றுகொண்டு அங்கிருக்கும் ஒரு பேருந்தில் ஒவ்வொருவராக முன்னால் இருக்கும் நபரை கூப்பிடச்சொல்வாரே, அப்படி
கூப்பிட்டு பேசுவது.


மண்டபத்தில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் ஒரே வரிசையில் வெவ்வேறு மூலையில் உட்கார்ந்திருப்போம். நான் எழுந்து அதே
வரிசையில் நடுவில் உள்ள இன்னொருவரை கூப்பிட்டு - "ப்ளீஸ், அவரை கூப்பிடுங்களேன்" - அப்படின்னு பக்கத்தில் இருப்பவரை காட்டி, அப்படியே கூப்பிட்டு கூப்பிட்டு வரிசையின் கடைசியில் உள்ள நண்பன் பார்த்தவுடனே, வழக்கம்போல் "டேய், எப்படிடா இருக்கே. பாத்து ரொம்ப நாள் ஆச்சு' - என்று ஆரம்பிப்பேன்.


மற்ற விஷயங்கள் எல்லாம் மேலே சொல்லியிருக்கிறா மாதிரிதான். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இங்கே ' நடுவில்' இருக்கும் ஆட்கள் அதிகம். அதனால், எல்லோரும் எழுந்து போவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சிறிது நேரம் கழித்து நாங்களே விளையாட்டை முடித்துக் கொண்டு எழுந்து போய்விடுவோம்.


படுபிஸியாக காட்டிக்கொள்ளுதல்:


அந்த திருமணமே எங்க உழைப்பில்தான் நடக்கிற மாதிரி பயங்கர பிஸியாக நடந்து கொண்டிருப்போம். கல்யாண மேடை, பார்வையாளர்
உட்கார்ந்திருக்கும் இடம், சமையலறை ஆகிய எல்லா இடங்களிலும் இப்படியே நாங்கள் நடையா ஓடிக்கொண்டிருப்பதால், பார்ப்பவர்கள்
அனைவரும் நாங்கள் ஏதோ திருமண வேலையாகத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணுவர்.


அப்படியும் சில பேர் எங்களை நம்பாமல் ஏதாவது வேலை செய்ய கூப்பிடும்போது, நண்பன் படுசீரியஸாக - அந்த மாமா வெற்றிலை வாங்கி
வரச்சொன்னார், இந்த மாமி சுண்ணாம்பு வாங்கி வரச்சொன்னார் - ஒரு ரெண்டு நிமிஷம் இருங்க. கொடுத்துட்டு வந்துடறேன் - அப்படி ஏதாவது சொல்லிவிட்டு எஸ்ஸாயிடுவான்.


சிறிது நேரம் இப்படி 'திருமண வேலைகளை' செய்தபிறகு - முதல் பந்தியில் சாப்பிட்டுவிட்டு - மண்டபத்தில் ஏதாவது ஒரு மூலையில் படுத்திருந்தாலும் - பார்ப்பவர்கள் - "நல்ல வேலை போலிருக்கு. பாவம் சின்னபுள்ள டயர்டாகி படுத்துவிட்டான்" என்று கூறுமளவிற்கு எங்கள் நடிப்பு அப்போதே ஜே.கே.ரித்தீஸுக்குப் போட்டியாக இருந்தது.


பதிவு ஓவர். இனி பின்குறிப்பு மட்டும்தான் பாக்கி.


அதெல்லாம் அந்த காலம். கல்யாணம் ஆனப்பிறகு - இந்தியாவில் நான் கலந்துகொண்ட திருமணங்களில் அங்கே இங்கே சுற்றாமல் மனைவி
பின்னாடியே வாலை (பதிவர் வாலை இல்லீங்க, என் வாலை) சுற்றி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்ததுதான் அதிகம்.

Read more...

Wednesday, October 15, 2008

கார் ஓட்டும்போது ஏற்படும் சிறு பிரச்சினை.. தீர்வு தேவை!!!

இந்தியாவில் இருக்கும்போது எனக்கு இந்த பிரச்சினை இருந்ததில்லை. ஏன்னா, அங்கே நான் கார் ஓட்டினதேயில்லை. அமெரிக்கா வந்தும்கூட கார் வாங்கி சில நாட்களுக்கு இது ஒரு பிரச்சினையாகவே எனக்கு படவில்லை. ஆனால், சமீபகாலமாக ஒரே குழப்பமாக இருக்கிறது. இதை படிக்கும் லட்சக்கணக்கான நண்பர்கள் எனக்கு ஒரு நல்ல தீர்வைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சரி சரி. பிரச்சினை என்னன்னே சொல்ல மாட்றியேப்பான்னு பொறுமையை இழக்கறவங்களுக்கு - ஆல் சைலண்ட்.. நீங்களும் சைலண்ட்...

கார் வாங்கி சில நாட்களுக்கு இரண்டு கைகளாலும் ஸ்டியரிங்கைப் பிடித்து ஓட்டிக்கொண்டிருப்பேன். ஆனால், இப்போதெல்லாம் ஒரே கையே போதுமென்றிருக்கிறது. பிரச்சினை பிரச்சினைன்னு முதல்லேந்து சொல்லிக்கிட்டிருக்கேனே - அது என்னென்னா - வண்டி ஓட்டும்போது அந்த சும்மா இருக்கிற கையை (ஸ்டியரிங் பிடிக்காத கை) வைத்துக்கொண்டு என்ன செய்வது? அவ்ளோதான்.

தினமும் அலுவலகம் செல்லும்போதும், திரும்ப வரும்போதும் பயங்கர தொல்லையாக இருக்கிறது. என்னால் செய்யமுடிந்த சில செயல்களும் அதன் விளைவுகளும் பின்வருமாறு.

1. மீசையை முறுக்குதல்: இடது கையால் வண்டி ஓட்டும்போது, வலது கையை மீசை மேல் வைத்து, அதை முறுக்கி முறுக்கி முறுக்குவது சூப்பராக இருக்கிறது. அடிக்கடி முன்னால் இருக்கும் சிறு கண்ணாடியில் பார்த்தவாறே, மீசையை நேராக்குவது நல்ல பொழுதுபோக்கு.
ஆனால், மீசை நன்றாக முறுக்கியாகிவிட்டது என்ற நிலை வரும்போது அதன் மேல் கை வைக்க மனம் வரவில்லை. அப்பேர்ப்பட்ட சமயத்தில் அந்த கையை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

2. பாட்டுக்கு தாளம் போடுவது: MP3 ப்ளேயரில் ஓடும் பாட்டுக்கு தாளம் போடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு ரெண்டு மூணு பாட்டுக்கு மேல் தாளம் போடுவது போரடிக்கிறது. கை வலிக்கிறது. அதனால், இதை என்னால் தொடர முடியவில்லை.

3. அலைபேசியில் பேசுவது: வண்டி ஓட்டும்போது கையில் அலைபேசி வைத்துக்கொண்டு பேசுவதைப் பார்த்தால், மாமா வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவார். Handsfreeயில் பேசலாமென்றால், மறுபடி அந்த கை சும்மாதானே இருக்கும்?

4. வண்டிக்குள் சுத்தம் செய்வது: கீழே கிடக்கும் பேப்பர், சில்லறை ஆகியவற்றை சுத்தப்படுத்தலாம். ஆனால், வீடாயிருந்தாலும், காராயிருந்தாலும் - சுத்தம் செய்ய வேண்டுமென்றாலே எனக்கு தூக்கம் வந்துவிடுமென்பதால், அதையும் என்னால் செய்ய முடியவில்லை.

5. நகம் கடிப்பது: இரு கைகளிலும் உள்ள நகங்களை கடித்துத் துப்பிவிட்டால் மறுபடி அவை வளர ஒரு வாரமாவது ஆவதால், இதை தினமும் செய்ய முடியவில்லை. கால் நகத்தை என்னால் கடிக்க முடியவில்லை. வேகமாக நகம் வளர ஏதாவது மருந்திருந்தால் தேவலை.

இதைத்தவிர புத்தகம் படிப்பது, சுடோகு போடுவது, மடிக்கணிணியில் ஏதாவது அடிப்பது - இதெல்லாம் வண்டி ஓட்டும்போது என்னால் முடியாத செயல்களென்பதால் இவைகளையும் செய்யமுடியவில்லை.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்னோட பிரச்சினை என்னவென்று. இதற்கு ஏதாவது ஒரு தீர்வு இருந்தால், அதற்காக தயவு செய்து தற்போதைய ட்ரெண்டின்படி தந்தியெல்லாம் அடிக்காமல், இங்கே பின்னூட்டத்திலேயே சொல்லவும்!!!.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP