Showing posts with label துறை மாறுதல். Show all posts
Showing posts with label துறை மாறுதல். Show all posts

Monday, May 11, 2009

ஜெயலலிதா மென்பொருள் நிபுணரானால்...!!!

மேனேஜர்: இந்த ப்ராஜெக்டை நாம ஜாவாலே பண்ணப் போறோம்.

ஜெ: ஜமாய்ச்சிபுடலாம். பிரச்சினையே இல்லை.

மே: கொஞ்ச நாள் முன்னாடி இதையே சொன்னதுக்கு - எனக்கு ஜாவா தெரியாது, அதனால் இதை செய்ய முடியாதுன்னீங்களே?

ஜெ: அது போன மாசம்.

மே: இப்போ எப்படி தெரிஞ்சது உங்களுக்கு ஜாவா?

ஜெ: நேத்து என் நண்பர் ரவி ஜாவா சிடி கொண்டு வந்து காட்டினாரு. அதை ஒரு அரை மணி நேரம் பாத்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன். இவ்ளோ நாளா ஜாவா தெரிஞ்சிக்காமே இருந்தது தப்புதான். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க.

மே: சரி. எல்லா வேலையையும் சீக்கிரமா முடிச்சி தர்றேன்னு க்ளையண்டுக்கு ஏன் மின்னஞ்சல் அனுப்பினீங்க.

ஜெ: அந்த மின்னஞ்சலை நான் அனுப்பலை. என் கணிணியிலேந்து வேறே யாரோ அனுப்பிட்டாங்க.

மே: நேத்திக்கு கேட்டபோது, நாந்தான் அனுப்பினேன்னு சொன்னீங்களே?

ஜெ: நான் அப்படி சொல்லவே இல்லை. உங்களுக்கு 'செலக்டிவ் அம்னீஷியா' இருக்கும்னு நினைக்கறேன்.

மே: சரி விடுங்க. இந்த வேலையை சரியா செஞ்சி முடிப்பீங்களா? ராத்திரியெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

ஜெ: எனக்கு குடும்பம் ஒண்ணும் இல்லை. அதனால் அலுவலகமே கதின்னு கிடப்பேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்க.

மே: உங்க குழுவிலே இருக்கறவங்க கிட்டேயும் நிறைய வேலை வாங்க வேண்டியிருக்கும்.

ஜெ: அது என் பிரச்சினை. பெண்டு நிமித்தி வேலை வாங்கறேன்.

மே: அவங்க வேலை செய்யலேன்னா...

ஜெ: ராவோட ராவா எல்லாரையும் வேலையை விட்டு துரத்திடறேன்.

மே: சரி. உங்களையே இந்த ப்ராஜெக்ட் மேனேஜரா போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாளைக்கே வேலையை ஆரம்பிக்கறோம்.

ஜெ: ப்ராஜெக்ட் என் கைக்கு வந்துடுச்சு இல்லே. இனிமே நான் சொல்றதுதான் இங்கே சட்டம். நீங்க கொஞ்சம் அப்படி சைட்லே உக்காருங்க.

மே: அப்படின்னா...

ஜெ: நாளையிலேந்து நான் மூணு மாசம் லீவ்லே போறேன். திரும்ப வந்தப்பிறகுதான் வேலை ஆரம்பிக்கறோம்.

மே: எதுக்கு இப்ப திடீர்னு லீவ்?

ஜெ: நான் ப்ராஜெக்ட் மேனேஜர் ஆயிட்டேன்னா தமிழ்நாடு, கேரளா இங்கேயிருக்கற கோயில்கள்லே வந்து தரிசனம் பண்றதா வேண்டிக்கிட்டிருந்தேன். அதுக்கு ஒரு மாசம். அப்புறம் ஆந்திராலே போய் ஓய்வு எடுத்துக்கறதுக்கு ரெண்டு மாசம். மொத்தம் மூணு மாசம்... வர்ட்டா... பை......

Read more...

Tuesday, February 3, 2009

DosaSoft - மென்பொருள் நிபுணரின் தோசைக்கடை!!!


இந்த கதையில் மொத்தம் மூணு பேர்.
சா=சாப்பிட வந்தவர்; மு=முதலாளி; தொ=தொழிலாளி.
மு-வும், தொ-வும் முன்னாள் மென்பொருள் நிபுணர்கள்.

**********

சா: எனக்கு பயங்கர பசியாயிருக்குது. உடனே என்ன கிடைக்கும்னு சொல்லுங்க. சூடா இருக்கணும்.


மு: எல்லாமே உடனடியா, சூடா கிடைக்கும். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. நான் கொண்டு வந்து தர்றேன்.


சா: அப்ப சரி, ரெண்டு சப்பாத்தி கொண்டு வாங்க.

(ஒரு பதினைந்து நிமிடம் கழித்து)

மு: மன்னிச்சிடுங்க. சப்பாத்தி மட்டும்தான் இங்கே இல்லே. அதைத் தவிர வேறே என்ன வேணும்னாலும் கிடைக்கும்.


சா: சரி. பரவாயில்லே. எனக்கு ஒரு தோசை கொண்டு வாங்க. நல்லா சூடா, முறுகலா, கொஞ்சமா நெய் போட்டு கொண்டு வாங்க.


(சமையலறையில்)


தொ: நான் இங்கே வேலைக்கு சேர்ந்து ஒரு வாரமாயிடுச்சு. எப்போ எனக்கு ப்ரமோஷன் கொடுக்கப் போறீங்க?


மு: என்னது, ஒரே வாரத்துலே ப்ரமோஷனா?


தொ: ஆமா. என்னை ‘சீனியர் மாஸ்டர் (சரக்கு)' ஆக்கிடுங்க. எனக்குக் கீழே வேலை செய்ய ரெண்டு பேரை போடுங்க. அவங்களை நான் நல்லபடியா வேலை வாங்கி, எல்லா
சிற்றுண்டியையும் தயார் பண்ணிடுவேன். முக்கியமான விஷயம் - அந்த ரெண்டு பேர்லே ஒருத்தராவது பொண்ணா இருக்கட்டும். பக்கத்து கடையிலே பாருங்க. அழகழகா பொண்ணுங்க
தோசை சுடறாங்க. நானும் இருக்கேனே இங்கே உங்களோட!!!


மு: இவ்ளோதானா? வேறே ஏதாவது இருக்கா?


தொ: அப்படியே, இந்த கடையில் வரும் லாபத்தில் எங்களுக்கும் 10% கிடைக்கறா மாதிரி ஏற்பாடு பண்ணுங்க. என்னை ஒரு மூணு மாசம் வெளி நாட்டுக்கு அனுப்பிச்சீங்கன்னா, பல
நல்ல ஐட்டங்களை சமைக்கறதுக்கு கத்துக்கிட்டு வந்துடுவேன்.


மு: இதெல்லாம் உனக்கே ரொம்ப டூ மச்சா தெரியல? ஒழுங்கா முறுகலா ஒரு தோசை சுடற வழியப்பாரு.


தொ: தோசை போட இப்பத்தான் நான் கத்துக்கிட்டிருக்கேன். அதனால் நான் போடற தோசை சரியா வரும்னு சொல்ல முடியாது.


மு: வேலைக்கு சேரும்போது, எல்லா டிபனையும் அருமையா பண்ணுவேன்னு சொன்னியே. முன்னாடி வேலை பாத்த இடத்துலே தோசை, சப்பாத்தி எல்லாம் போட்டிருக்கேன்னு
சொன்னதா வேறே ஞாபகம்.?


தொ: அது வந்து.. அது வந்து... அங்கே வேலை பாக்கும்போது... ரெண்டு வருஷமா அந்த சரக்கு மாஸ்டர் தோசை சுடும்போது, பக்கத்துலே இருந்து பாத்திருக்கேன். அவ்ளோதான்.ஆனா, தோசையைத் தவிர மத்த எல்லா டிபனையும் அருமையா செய்வேன் நான்.


மு: அந்த கதையெல்லாம் இங்கே வேணாம். இப்ப அவர் தோசைதான் கேக்கறாரு. இன்னும் ரெண்டு நிமிஷத்துலே எனக்கு தோசை ரெடியாகணும்.


தொ: முயற்சி பண்றேன். சரியா வரலேன்னா எனக்கு தெரியாது. உங்களை யாரு ரெண்டு நிமிஷத்துலே தோசை ரெடியாயிடும்னு அவர்கிட்டே சொல்லச் சொன்னது? அதெல்லாம்
எவ்ளோ கஷ்டம்னு வேலை செய்யற எனக்குத்தான் தெரியும்.


மு: சரி சரி. கோச்சிக்காதேப்பா... சீக்கிரம் செய்துடு.


தொ: அது சரி. என்னோட திறமைக்கு நான் இன்னேரம் தாஜ் ஹோட்டல்லே தோசை சுட வேண்டியவன். இங்கே வந்து உங்ககிட்டே மாரடிக்க வேண்டியிருக்கு. எல்லாம் என்
தலையெழுத்து.


தொழிலாளி பல தடவை முயற்சித்தும் தோசை முறுகலாகவே வரவில்லை. முறுகலாக இருந்தால் வட்டமாக இல்லை. எல்லாம் சரியாக இருந்தால், அதை கல்லிலிருந்து எடுக்கவே
முடியவில்லை.


(மேலும் அரை மணி நேரம் கழித்து)


சா: என்னப்பா, தோசை வருமா வராதா?


மு: உங்க தோசை அருமையா வந்துக்கிட்டேயிருக்கு. அதை கல்லிலிருந்து எடுக்க வேண்டியதுதான் பாக்கி. நீங்க அதுவரைக்கும் இந்த சட்னியும், சாம்பாரும் சாப்பிட்டுக்கிட்டிருங்க.


சா: நான் ஒரே ஒரு தோசை கேட்டு ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. கண்லேயே காட்டமாட்டேன்றீங்க. என்னை விட்டுடுங்கப்பா. நான் போறேன். இனிமே இந்த கடைப்பக்கம் வரவே மாட்டேன்.


மு: அப்படியா. இப்படி ஒரு நல்ல கஸ்டமரை இழக்க எனக்கு மனசே வரமாட்டேங்குது. சரி, என்ன பண்றது. இந்த ஒரு மணி நேரம் உங்களுக்காக தோசை செய்ய முயற்சித்ததற்கான
பில் இந்தாங்க. வெறும் ஐநூறு ரூபாய்தான்.


சா: என்னது? ஒண்ணுமே சாப்பிடாததுக்கே ஐநூறு ரூபாயா? இது ரொம்பவே அநியாயம்.


மு: அதோட இன்னும் ஒரு ஐந்து நிமிடம் செலவு செய்து - எங்க சர்வீஸ் எப்படி இருந்ததுன்னு சொல்ற இந்த சர்வேயும் பூர்த்தி செய்துடுங்க. இப்போ வந்ததுக்கு மிக்க நன்றி... இதே
மாதிரி நீங்க அடிக்கடி இங்கே வரணும்.

(சாப்பிட வந்தவர் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்).

Read more...

Thursday, November 27, 2008

கேப்டன் மென்பொருள் நிபுணரானால்!!!

கேப்டன் மேனேஜரா இருந்து செய்த ஒரு மென்பொருள்லே ஒரு பெரிய பிரச்சினை. போட்டுத் தாக்கறதுக்கு கம்பெனி முதலாளி கூப்பிட்டனுப்புகிறார்.

இனி கேப்டன் - முதலாளி பேச்சு.

ஏன் இந்த மென்பொருள்லே இவ்ளோ தவறுகள் வந்துச்சு?

செய்தவனை (developer)ஐ கேளுங்க.

இவ்ளோ தவறுகள் வரும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?

தெரியும்.

ஏன் அப்பவே எங்களுக்கு சொல்லலே?

முதல்லே எனக்கு பதவி உயர்வு கொடுங்க. அப்போதான் சொல்வேன்.
இப்பவே சொன்னா, அதை என்னோட மேனேஜர் தன்னோட ஐடியான்னு
சொல்லிடுவாரு.

ஆனாலும், சில அருமையான தவறுகளை கண்டுபிடிச்சிருக்கீங்க. எப்படி?

testerஐ கேளுங்க.

க்ளையண்ட் சொல்றதெல்லாம் உங்களுக்கு புரியுதா இல்லையா?

requirement வாங்குனவன கேளுங்க.

எதைக் கேட்டாலும் வேறே யாரையோ கேளுன்றீங்களே, உங்க டீம்லே இப்போ எவ்ளோ பேரு இருக்காங்க. அவங்க யார்யாரு?

இப்போதைக்கு என் டீம்லே ரெண்டு பேர்தான். அவங்க என் மனைவி, மச்சான் தான். எல்லாத்தையும் அவங்கதான் பாத்துக்கறாங்க.

எல்லாத்தையும் அவங்கதான் பாத்துக்கறாங்கன்னா, உங்களுக்கு இந்த மென்பொருளைப் பத்தி என்னதான் தெரியும்?

முன்னாடியே சொன்னா மாதிரி எனக்கு பதவி கொடுங்க. அதுக்கப்புறம்தான் நான் எதுவும் வெளிப்படையா சொல்வேன்.

பதவி உயர்வு, பதவி உயர்வுன்றீங்களே, அப்படி பதவி உயர்வு கொடுத்தா வேறே என்னதான் செய்வீங்க?

இந்த ப்ராஜெக்ட்லேந்து வரக்கூடிய ரிப்போர்ட்ஸ், மெயில்ஸ் எல்லாத்தையும் உங்க வீட்டுக்கே வந்து கொடுப்பேன். நீங்க அலுவலகத்துக்கே
வரவேண்டாம்.

சுத்தம். அப்பகூட மென்பொருள் தவறுகளை குறைப்பேன்னு சொல்ல மாட்டீங்க. இனிமே உங்க கிட்டே பேசி பிரயோஜமில்லை. நீங்க பேசாமெ
ராஜீனாமா செய்துட்டு போயிடுங்க.

தமிழ்லே எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை - ராஜீனாமா.

பேசாதீங்க. ராஜீனாமான்றது தமிழ் வார்த்தையா இல்லையான்னே உங்களுக்கு தெரியல. இந்தாங்க கடிதம். உங்களை வேலையை விட்டு தூக்கிட்டோம். போயிட்டு வாங்க. அக்குங்....( நாக்கை மடக்கி கண்ணடிக்கிறார்)... ச்சீ.. உங்ககூட சேந்து எனக்கும் இந்த பழக்கம் வந்துடுச்சு...

Read more...

Monday, November 24, 2008

ஆற்காடு வீராசாமி மென்பொருள் நிபுணரானால்!!!


1. என் இருக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் ஜன்னலிலிருந்து காத்தே வரமாட்டேங்குது. அதனால் என்னால் சென்ற ஆறு மாதங்களாக சரியாக வேலை செய்ய முடியவில்லை.


2. இந்த அலுவலகத்தில் முதல் மாடியில் வேலை செய்பவர்களுக்கு வாரந்தோறும் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். மேல் மாடியில் இருப்பவர்களுக்கு 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும்.


3. நான் வேலை செய்யற இந்த ப்ராஜெக்ட் தோல்வி அடைஞ்சதாலே, இந்த கம்பெனிய ஊத்தி மூடிடுவாங்களான்னு யோசிச்சி யோசிச்சே, ராத்திரியெல்லாம் தூக்கம் வர்றதில்லே.


4. எங்க ப்ராஜெக்ட்லே கடந்த ரெண்டு மாசத்துலே 300 தவறுகள்தான் செய்திருக்கிறோம். அதே அந்த ப்ராஜெக்ட்லே 54,234 தவறுகள் செய்திருக்காங்க.

5. ஒரு வாரம் நல்ல மழை பெஞ்சா போதும். இந்த ப்ராஜெக்டை உடனே முடித்து விடலாம். (மனதில்: ஒரு வாரம் மழை பெஞ்சா ஊரே குளமாயிடும். மக்களை வீட்டுக்கு அனுப்பாமே, ஆபீஸ்லேயே பூட்டி வெச்சி வேலை வாங்கிடுவேன்!!!).

6. கோடையில்தான் எல்லாரும் லீவ் போட்டுண்டு ஊருக்குப் போயிடுவாங்க. அதனால் வேலை பாதிக்கும். ஆனால், இந்த தடவை குளிர் காலத்துலேயே நல்ல வெயில் அடிச்சதால், லீவ் போட்டுட்டாங்க. ஆள் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப் படுகிறது.

7. இந்த ப்ராஜெக்ட் எவ்ளோதான் சொதப்பலா போனாலும் எனக்கு பிரச்சினையில்லை. நானா ராஜீனாமா பண்ண மாட்டேன். எங்க தலைவர் என்ன சொல்றாரோ அதன்படிதான் செய்வேன்.

8. மென்பொருளில் வரும் தவறுகள் குறித்து க்ளையெண்டே ஒண்ணும் சொல்றதில்லை. சிலர் வேண்டுமென்றே அவர்களை தூண்டி விடுகின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

9. நான் வேலையே செய்யாமே எப்பவும் மேனேஜர்கூடவே இருக்கறேன்றதெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டு. சனி, ஞாயிறுகளில் நான் எப்பவும் எங்க வீட்லேதான் இருப்பேன். அவர்கூட இருக்க மாட்டேன்.

10. இந்த கம்பெனியில் மாசத்துக்கு ஐநூறுக்கு குறைவா தவறுகள் செய்றவங்களுக்கு தினமும் மூணு கப் காப்பி வழங்கப்படும். அதுக்கு மேலே ஒவ்வொரு நூறு தவறுகளுக்கும் ஒரு காபி குறைக்கப்படும். ஆயிரம் தவறுகள் செய்றவங்க, அவங்க வீட்லேந்து காபி கொண்டுவந்து இங்கே இருக்கறவங்களுக்கு கொடுக்கணும்.

11. அடுத்த ஜூன் 30க்கு மேல் நம்ம மென்பொருள்லே எந்த பிரச்சினையும் வராது.

12. எங்க டீம்லே இருக்கற ஒருத்தர் இப்போதான் இன்னொரு கம்பெனிக்கு போயிட்டு வந்தார். அங்கெல்லாம் நம்மை விட மோசமா மென்பொருள் பண்றாங்களாம். நாம எவ்வளவோ பரவாயில்லை.

Read more...

Monday, November 3, 2008

ச்சின்னப் பையன் மென்பொருள் நிபுணரானால்!!!

கடலையால் துறை மாறின கதையை ஏற்கனவே சொல்லியிருக்கேன். அப்படி மென்பொருள் உலகுக்கு வந்தபிறகு நான் செய்த முதல் ப்ராஜெக்ட் - சென்னையில் ஒரு முன்னணி பள்ளிக்கு மென்பொருள் செய்ததுதான்.


அந்த பள்ளிக்கு கல்விக் கட்டணம் (ஃபீஸ்), கணக்கு வழக்கு, சம்பளப் பட்டுவாடா, நூலகம் மற்றும் பல துறைகளுக்கு மென்பொருள் செய்து கொடுப்பதாக ஏற்பாடு. அங்கிருந்த ஒரு ஆசிரியர்தான் எங்களுக்குண்டான முக்கிய தொடர்பு. அவரின் உதவியோடும் பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களின் துணையோடும், மூன்று மாதங்கள் உழைத்து மென்பொருள் செய்துவிட்டோம்.


புது கல்வியாண்டில் பள்ளி திறக்கும்போது கல்விக் கட்டணம் வாங்க எங்கள் மென்பொருளையே பயன்படுத்த வேண்டுமென்று பள்ளியில் கூறிவிட்டதால், இரவு பகலாக வேலை செய்து தயாராக இருந்தோம்.



முதல் நாள் காலை 8 மணிக்கு கட்டணம் வாங்கும் வேலையை துவக்க வேண்டும். நாங்கள் 7 மணிக்கே பள்ளிக்குச் சென்று எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தோம். மென்பொருள் பயன்படுத்தப்படும் முதல் நாளைப் பார்ப்பதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மற்றும் எங்களுக்கு படியளக்கும் முதலாளி ஆகிய அனைவரும் ஆஜர்.



8 மணிக்கு முன்பாகவே சுமார் பத்து பேர் கட்டணம் கட்டுவதற்கு வந்துவிட்டிருந்தனர். கட்டணம் கட்டிவிட்டு அலுவலகம் போக வேண்டிய அவசரம் அவர்களுக்கு. சரி, துவங்கலாம் என்று முதல் ஆளிடம் கட்டணம் வாங்க ஆரம்பித்தோம்.



எடுத்தவுடனே மென்பொருளில் ஒரு பிரச்சினை. ரிசீப்ட் (Receipt) எண் ஒன்றுக்குப் பதிலாக பத்து என்று பதிவானது. அந்த தாளைப் பார்த்த தலைமை ஆசிரியர் அந்த தவறை உடனே திருத்தி அந்த நபருக்கு இன்னொரு ரிசீப்ட் கொடுக்க வேண்டுமென்று சொல்லி - தற்காலிகமாக கட்டணம் வாங்கும் பணியை நிறுத்தி விட்டார். சரியென்று நாங்கள் அங்கேயே வேலை செய்ய ஆரம்பிக்க, அப்போது கட்டணம் கட்ட வரிசையில் நின்றிருந்த மக்களின் எண்ணிக்கை - அதிகமில்லை ஜெண்டில்மேன் - சுமார் 25 இருக்கும்.


பிரச்சினையை கேள்விப்பட்டு அங்கு வந்த - எங்களுக்கு ஆர்டர் வாங்கிக்கொடுத்த - அந்த ஆசிரியர், கோபத்தில் கண்கள் சிவந்துபோய் நம் கேப்டன் போல் நின்றிருந்தார்.



காலையிலேயே வந்துவிட்டதால், சிற்றுண்டிகூட சாப்பிடாமலிருந்த நானும் என் நண்பனும் வேர்க்க விறுவிறுக்க வேலை பார்த்துக்கொண்டிருக்க, எங்களை சுற்றி நின்றிருந்த எல்லோரும் தேனீர் குடித்துக்கொண்டிருந்தனர்.



ஒரு பத்து நிமிடத்தில் எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு மறுபடி வேலையை துவக்கலாம் என்று நாங்கள் சொன்னோம். சத்தம் போட்டுக்கொண்டே இருந்த - ஏற்கனவே கட்டணம் கட்டிவிட்ட அந்த நபருக்கு - மறுபடி புதுசா ஒரு ரிசீப்ட் போட்டுக் கொடுக்கலாம் - என்று போகும்போது ப்ரிண்டரில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.



இவ்வளவு நேரமும் மெதுவாக சலசலத்துக் கொண்டிருந்த அந்த மக்கள் கூட்டம், இப்போது தைரியமாக கத்த ஆரம்பித்துவிட்டனர். தலைமை ஆசிரியர், அவரே முன்சென்று மென்பொருளில் ஏற்பட்டுவிட்ட சிறு பிரச்சினையை, அந்த கூட்டத்திற்கு விளக்கிக்கூறி, கொஞ்ச நேரம் பொறுமை காக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்.



இப்படியாக ஒரு அரை மணி நேரம் சண்டை போட்டு மென்பொருள்/ப்ரிண்டர் இரண்டிலும் வந்த பிரச்சினைகளை களைந்த பின், பயந்துகொண்டே மறுபடி கட்டணம் வாங்க ஆரம்பித்தோம். யார் செய்த புண்ணியமோ (சத்தியமாய் நாங்கள் செய்ததில்லை!!!) அதற்கு பிறகு நாங்களே ஆச்சரியப்படும் விதமாக அந்த மென்பொருள் வேலை செய்ய ஆரம்பித்தது.


இவ்வளவு நேரம் பேசாமலிருந்த எங்க முதலாளி, இன்னும் இழுக்கறதுக்கு எங்களுக்கு நாக்கே இல்லைன்ற அளவுக்கு, நாக்கை பிடிங்கிக்கற மாதிரி கேள்விகள் கேட்டு திட்டினார். அவர் நன்றாகத் திட்டி முடித்தபிறகு, இங்க ஒருத்தன் மாட்டியிருக்காண்டா என்று சொல்லி, அந்த 'கேப்டன்' ஆசிரியரிடம் அனுப்பினார். ஒரு பத்து நிமிஷங்க, அவரும் திட்டு திட்டுன்னு திட்டிட்டு, தலைமை ஆசிரியடம், 'சார், நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா? இங்க ஒரு நல்லவன் சிக்கியிருக்கான்' அப்படியென்று எங்களை அவரிடம் அனுப்பி வைத்தார். எல்லா அர்ச்சனையும் முடிய அன்னிக்கு 10 மணி ஆயிடுச்சு.


அதற்கு பிறகு அந்த ஆசிரியரே பல பள்ளிகளிலும், வேறு பல நிறுவனங்களிலும் எங்களை அறிமுகப்படுத்தியதும், எங்கள் மென்பொருள் வழக்கம்போல் எல்லா இடத்திலும் முதலில் சொதப்பி - பின்னர் சரியாக வேலை செய்ததும் வரலாறு.

Read more...

Tuesday, August 26, 2008

மணிரத்னம் - மென்பொருள் நிபுணரானால்!!!

கணிணித்திரையை கொஞ்சம் வெளிச்சமா வெச்சிக்கோங்க.. கண்ணு 'டொக்'காயிடப் போகுது.
-----
எதுக்கு அருமையான மென்பொருள் பண்ணிட்டு, லாகின் திரையிலே 'இந்த மென்பொருளில் வரும் அனைத்து திரையும் கற்பனையே' அப்படின்னு போட்டிருக்கீங்க?
-----
100 வரிகள்லே எழுதவேண்டிய கோடிங்கை, எதுக்கு சின்னசின்னதா எழுதி 1000 வரி வரைக்கும் இழுத்திருக்கீங்க?
-----
எதுக்கு அடிக்கடி கூகிள்லே 'பழைய அமெரிக்க மென்பொருள்' அல்லது 'பழைய உலக மென்பொருள்' அப்படின்னு தேடிக்கிட்டிருக்கீங்க?
-----
உங்க மென்பொருள் வேலையே செய்யாமே சுத்தமா படுத்துடுச்சுன்னா, உக்காந்து அந்த பிரச்சினையை தீர்க்கப் பாருங்க. அதை விட்டுட்டு கணிணி பக்கத்துலே போய் 'ஏந்திரு (எழுந்திரு) மென்பொருள் ஏந்திரு'ன்னா, பிரச்சினை எப்படி சால்வாகும்?
-----
நீங்க எதுக்கு அந்த மீட்டிங்குக்குப் போனீங்க? க்ளையண்ட் நீங்க மேனேஜரா,இல்லையான்னதுக்கு 'தெரியலியேப்பா'ன்னு வேறே சொல்லியிருக்கீங்க...
-----
உங்க மென்பொருளோட பயன்பாட்டைப் பாத்துதான் எல்லோரும் எழுந்து நின்னு கைதட்டணும். நடு நடுவே தேசிய கீதத்தைப் ஒலிபரப்பி எல்லோரையும் எழுப்பி நிக்க வெக்காதீங்க...

-----
மீட்டிங்லேயும் சரி.. உங்க அறையிலேயும் சரி... எப்பவும் விளக்கை அணைச்சியே வெச்சிருக்கீங்க. போற வர்றவங்கல்லாம் அடிக்கடி எதிலேயாவது இடிச்சிக்கறாங்க... எதுக்கு இப்படி இருக்கீங்க?

-----
நீங்க செய்யற எந்த மென்பொருள பாத்தாலும் - அதை முன்னாடியே வேறே எங்கேயோ பாத்தா மாதிரியே இருக்கே? ஏன் அப்படி?

Read more...

Tuesday, August 12, 2008

பரிசல் - மென்பொருள் நிபுணரானால்!!!

சென்னையே ஒரு ஆஃப்ஷோர்தான். சென்னைக்கு திருப்பூர் ஆஃப்ஷோர் ஆகமுடியாதான்னு கேக்காதீங்க. மரியாதையா சென்னைக்கு வந்து வேலை பாருங்க.
----

நல்லாத்தானே மென்பொருள்லே வேலை செய்றீங்க, எதுக்கு தினமும் 'மொக்கை' போடுறேன், 'மொக்கை' போடுறேன்னு சொல்லிக்கிறீங்க?


---


மென்பொருள் பெர்பார்மென்ஸ் தூக்கணும்னா, அதுக்கு பலம் தேவையில்லீங்க. நான் ஒல்லியா இருக்கேன்னு சொல்லாதீங்க...
----


நீங்க கவிதை நல்லா எழுதுவீங்கன்னு எனக்கு தெரியும். அதுக்காக கோடிங்கையும் கவிதை மாதிரி மடக்கி மடக்கி எழுதாதீங்க...

--


என்னது, நீங்க முதல்முதல்லே வேலை பாத்த மென்பொருள் 'க்ளிப்பனா'? நான் அந்த மாதிரி ஒண்ணை கேள்விப்பட்டதே இல்லையே?

ஆமா. எனக்கு 'க்ளிப்பர்'ஐ ரொம்ப நாளா தெரியும்றதாலே, அதோட பேரை 'க்ளிப்பன்'னு மாத்திட்டேன்.

---


'சந்திப்பிழை'யெல்லாம் பதிவெழுதும்போது மட்டும்தாங்க பாக்கணும். கோடிங் செய்யும்போது பாத்தா, மென்பொருள் காறித் துப்பிவிடும்.

----

உங்களுக்கு மொத்தம் எவ்ளோ வருட முன்னனுபவம்னுதானே கேட்டேன்? நீங்க முதல் மென்பொருள் செய்த தேதி, முதன்முதல் டெஸ்டிங் செய்த தேதின்னு ஏன் எல்லாத்தையும் தேதிவாரியா சொல்லிக்கிடிருக்கீங்க?

-----

தொடர்ச்சியா வேலை பாக்காதீங்க. கொஞ்சம் ஓய்வெடுங்கன்னுதானே சொன்னேன். எதுக்கு நான் ராஜீனாமா பண்றேன்னு சொல்றீங்க?

---

பின் : இந்த பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு.. (கடைசி 2ஐத் தவிர). இன்னிக்குத்தான் போட நேரம் கிடைச்சது. . விட்டுப்போனவற்றை மக்கள் பின் மூலமாக சொல்லுங்க....


Read more...

Monday, July 14, 2008

ஜோசியர் ஒருவர் மென்பொருள் நிபுணரானால்!!!

1. மென்பொருள்லே பிரச்சினை இருந்தாக்கா, உக்காந்து அதை தீர்க்கற வழிபாருங்க. அதை விட்டுட்டு, இந்த இடத்துக்குப் போ, அந்த கோவிலுக்குப் போ - எல்லா பிரச்சினையும் தீந்துடும்னு சொல்லாதீங்க...

2. இன்னிக்கு எனக்கு உகந்த மென்பொருள் 'விஷுவல் பேசிக்'தான் - அதிலேதான் வேலை செய்வேன்னுல்லாம் இங்கே சொல்லமுடியாதுங்க. நாங்க என்ன சொல்றோமோ அதுதான் செய்யணும்.

3. ஏங்க நாம நடத்தறது வெளிநாட்டுக்கு மென்பொருள் ஏற்றுமதி செய்யற கம்பெனி. நேர்முகத் தேர்வுக்கு வர்றவங்களுக்கு ஜாவா தெரியுமான்னு கேளுங்க. அவங்க ஜாதகத்திலே லக்னம் எங்கேயிருக்கு தெரியுமான்னு கேக்காதீங்க..

4. இந்த மென்பொருள் எப்போ முடிப்பீங்கன்னு க்ளையண்ட் கேட்டதற்கு, 9-க்குள்ளே ஒரு நம்பர் சொல்லுன்னீங்களாமே? ஏங்க, ஒழுங்காவே பேசமாட்டீங்களா?

5. நம்ம எம்.டிகிட்டே பணம் இருக்கும்போதுதான் எல்லாருக்கும் பெரிய கணிணித்திரை வாங்கித் தருவார். உங்களுக்கு இப்போ ரொம்ப நல்ல நேரம்னீங்கன்னா, உங்க கைக்காசை போட்டு வாங்கிக்கோங்க.

6. உங்களை இங்கே மாச சம்பளத்துக்குத்தான் எடுத்திருக்கோம். மூணு கேள்விக்கு 200ரூபாய் கணக்கெல்லாம் வேலைக்காகாது. ஒழுங்கா வேலையை பாருங்க.

7. இந்த மென்பொருள்லே இருக்கிற ரெண்டு மாட்யூல்களை இன்னிக்கே 'இணைச்சி' சரி பார்க்கணும். அதுக்கெல்லாம் நல்ல முஹூர்த்தம் பாத்துக்கிட்டிருக்க முடியாதுங்க.

8. நம்ம கம்பெனியோட வரலாறு எல்லாமே தெள்ளத்தெளிவா நம்ம வலைப்பக்கத்துலேயே போட்டிருக்கு. நீங்க என்னமோ உங்க ஜோசியத்தாலே கண்டுபிடிச்சாமாதிரி பேசிக்கிட்டிருக்கீங்களே?

9. க்ளையண்ட் இந்த வாரத்துக்குள்ளே இந்த பிரச்சினையை முடிக்கணுன்றான். நீங்க என்னடான்னா, 3 மாசத்துக்குள்ளே பிரச்சினை தன்னாலே தீந்துடும்றீங்களே? அது எப்படிங்க தன்னாலே முடியும்?

10. உங்க பக்கத்து க்யூப்லே இருக்கிற குரு, எதிர் க்யூபுக்கு மாறி வந்தாத்தான் உங்களாலே நல்லா வேலை பாக்கமுடியும்றீங்களே - அதெல்லாம் இங்கே நடக்காது.

Read more...

Thursday, June 26, 2008

சூப்பர் ஸ்டார் - மென்பொருள் நிபுணரானால்!!!

Client கிட்டே போய் ஏன் 'ஓடற மென்பொருள் ஓடாமெ இருக்காது... ஓடாத மென்பொருள் ஓடாது' அப்படின்னீங்க... அவன் என்னைப் புடிச்சி கத்தறான்... மென்பொருள் ஓடுமா அல்லது ஓடாதா. ஒழுங்கா சொல்லுன்றான்...

---


என்னங்க, நாமென்ன தமிழ்மணத்திலே பதிவு போடறதுக்கா பொண்ணு எடுத்தோம், தமிழ் கலாச்சாரமே தெரியலேன்றதுக்கு; Java தெரியுதா பாருங்க அந்த பொண்ணுக்கு, அது போதும்.

---

இரண்டும் (modules) ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. ஒன்றும் (மென்பொருள்) அசையாது நின்று போனதுன்னு சொன்னா போதாது சார். உக்காந்து சரி பண்ணுங்க. அதுக்குதான் உங்களை வேலைக்கு வெச்சிருக்கு.
---

நல்ல codingலே ஆண்டவன் நிறைய bugsகளை கொடுப்பான். ஆனா productionலே பிரச்சினை வராதுன்னீங்களே.. இப்போ பாருங்க, சுத்தமா படுத்துடுச்சு. users எல்லாம் கத்தறானுங்க. போய் சரி பண்ணுங்க.

---


எழுதுனது 10 வரி Code. அதிலே 20 தப்பு. இதுக்கு நடுவிலே 40 தடவ 'இது எப்படி இருக்கு, இது எப்படி இருக்கு'ன்னு சொல்லிட்டீங்க... ம். ஒண்ணும் சரியில்லை.
---


இதோ பாருங்க. நமக்குன்னு சில coding standards இருக்கு. நீங்க 'என் coding, தனி coding' அப்படின்னு தனியா எதுவும் செய்யமுடியாது.

---

Client சொல்றான்... Coding பண்றான்.. அப்படின்னு நீங்க பாட்டுக்கு பண்ணமுடியாது. எதுவாயிருந்தாலும் உங்க குழுத்தலைவர்கிட்டே சொல்லிட்டு பண்ணுங்க.

---

அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அதிகமா bugs கொடுக்கற மென்பொருள் நிபுணரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்றீங்க. ரொம்ப சரி.

---

ஏங்க, இவருக்கு மென்பொருள் செய்யத்தெரியலேன்னா பரவாயில்லை.. கோபப்படாதேன்னு சொல்லுங்க.

ஏன், என்ன ஆச்சு?

தினமும் இவர் கோபத்தோட 'விசைப்பலகை'யைப் பார்க்கிறார். அது 'பக்'குன்னு பத்திக்குது. என்னாலே, தினமும் ஒரு புது விசைப்பலகை கொடுக்கமுடியாது.

Read more...

Wednesday, June 18, 2008

திரு.கமல் அவர்கள் மென்பொருள் நிபுணரானால்!!!

இதோ பாருங்க, இந்த மென்பொருள்லே நீங்க பண்ண தவறு - உங்க கவனக்குறைவினால்தான். 12ஆம் நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தால் அல்ல...
---

எல்லா எழுத்துருவையும் ஒரே அளவிலே வைங்க. ஏன், ஒரு பக்கத்துலே அந்த எழுத்துரு ரொம்ப பெரிசா இருக்கு, இன்னொண்ணு ரொம்ப சின்னதா இருக்கு. எதையுமே படிக்கமுடியலே.
---


சூப்பர் சாப்ட்வேர் எதுன்னு கேட்டதுக்கு 'ஆண்டி' (Aunty) வைரஸ்ன்னு சொல்றார் சார் இவரு.

---

நீங்க செய்திருக்கிற விளையாட்டு மென்பொருளிலே 'பில் கேட்ஸை' ஒரு கேரக்டரா வைச்சிருக்கலாம். அதனாலே, பில் கேட்ஸுக்கு மென்பொருள் டெமோ காட்டுவேன்னு சொல்றதுல்லாம் ரொம்பவே டூ மச்.

---

அப்போ, உங்க மென்பொருளில் உதவி இல்லேன்றீங்களா?

நான் உதவி இல்லேன்னா சொன்னேன், இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்.



---

எப்பேர்ப்பட்ட புதிய வைரஸுக்கும், ஆண்டி வைரஸ் உடனே வந்துடும். அதைத் தேடி நீங்க ஊர் ஊரா அலையவே வேணாம். எந்த கடையில் கேட்டாலும் அந்த ஆண்டி வைரஸ் கிடைக்கும். கவலைப்படாதீங்க.

---

உங்க வேலை கொடுத்த ஆணியை புடுங்கறதுதான். ஆணியை வடிவமைத்தல், சோதித்தல், தரக்கட்டுப்பாடு, பின் ஆய்வு - இதெல்லாம் செய்யறதுக்கு வெவ்வேற ஆட்கள் இருக்காங்க. நீங்க கவலைப்படாதீங்க.

---

இன்னிக்குள்ளே இந்த மென்பொருளை முடிச்சிக் கொடுக்கறேன்னு சொல்லியிருக்கீங்க. எதுக்கு நடு நடுவிலே பாட்டு பாடிக்கிட்டிருக்கீங்க.


---

நீங்க பண்றதுலேயே உருப்படியான வேலை என்னன்னா, எந்த மென்பொருள் செய்தாலும் அதை தமிழ், இந்தி, தெலுங்கு இப்படி எல்லாரும் புரிஞ்சிண்டு உபயோகப்படுத்தறாமாதிரி செய்றதுதான்.

---


ஒழுங்கா ஒரு இடத்திலே உக்கார்ந்து வேலை பாருங்க. எதுக்கு சம்மந்தமில்லாமே, சென்னையிலிருந்து வாஷிங்டன், ஜப்பான் அங்கேல்லாம் போகணும்றீங்க.

---

இந்த மென்பொருள்லே நீங்க இன்னிக்கு ஒரு சிறு தவறு செஞ்சா, கொஞ்ச நாளைக்குப் பிறகு, அதுவே பெரிய பிரச்சினையா மாறி, உங்க வேலையே போற அளவுக்கு வந்துடும். அதனாலே, கவனம் எடுத்து செய்ங்க. சரியா?..

---
நீங்க செய்திருக்கிறது ஒரு சின்ன 'கால்குலேட்டர்' மென்பொருள். அதை வெளியிடறதுக்கு 'பில் கேட்ஸை' கூப்பிடணும்னு சொல்றதெல்லாம் என்னாலே ஒத்துக்க முடியாது.

---

Read more...

Friday, June 13, 2008

ஒரு தமிழ் வலைப்பதிவாளர் - ச.உ. ஆகிறார்!!!

ச.உ = சட்டமன்ற உறுப்பினர்.

சபாநாயகர் to ச.உ:


சபையில் பேசும்போது உங்க முகத்தை காட்டிக்கிட்டே பேசுங்க. முகத்தை மூடினாலும், கொண்டை தெரியுது பாருங்க...
---

கடந்த அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்கீங்க. யாருக்குமே எதுவுமே புரியலே. கேட்டா 'பின்னவீனத்துவம்'ன்றீங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலே!!!
---

தினமலரில் இருப்பதையோ, குமுதம் ரிப்போர்ட்டரில் இருப்பதையோ முழுவதையும் அப்படியே இங்கே படிக்காதீங்க. அந்த செய்தியைப் பற்றிய உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்க.
---

இங்க பாருங்க, சபையிலே உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குத்தான் நீங்க பதில் சொல்லணும். நீங்களா சில கேள்விகளைக் கொண்டு வந்து அதற்கு பதில் சொல்லக்கூடாது.

---

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான், இந்த திட்டத்துக்கு ஆதரவா பேசினீங்க. உடனே, அதே திட்டத்துக்கு எதிரா - உங்க குரலை மாத்தி பேசறீங்க - இது கொஞ்சம் கூட நல்லாயில்லே..

---

புதிய சட்டசபை கட்டடம் எங்கே கட்டலாம்னு கேட்டா, கடற்கரையிலே காந்தி சிலைக்குப் பின்னாலே கட்டலாம்ன்றீங்களே, அங்கேயெல்லாம் கட்டடம் கட்டமுடியாதுங்க...

---

மொதல்லே அவர் என்ன சொல்ல வர்றாருன்னு கேளுங்க. எதுக்கெடுத்தாலும் 'ரிப்பீட்டேய்ய்ய்' அப்படின்னு சொல்லிட்டு இருக்காதீங்க...

---
ச.உ. வேண்டுகோள் to சபாநாயகர்:

'இன்று அதிகம் மேசையைத் தட்டியவர்கள்' பட்டியல் தயாரித்து அனைவரின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

---

வாரம் ஒரு ச.உ. - ஒரு உறுப்பினரை ' நட்சத்திரம்'ஆக தேர்ந்தெடுத்து அவரது தொகுதி வளர்ச்சி பற்றி விவாதிக்கவேண்டும்.

Read more...

Friday, May 2, 2008

யூகேஜி படித்த சிறுமி கேம்பஸில் தேர்வாகி விட்டால்!!!

யூ.கே.ஜி படித்த ஒரு சிறுமி 'கேம்பஸில்' தேர்வாகி ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்ற வருகிறார். அப்போது என்னவெல்லாம் நடக்கும் என்று ஒரு சிறு கற்பனை.


நேத்து 'கோலங்கள்' பாக்கமுடியலே. அதனாலென்ன, இங்கெயிருக்கிற அங்கிள் எல்லோரும் பாத்திருப்பாங்க. Status Meeting-லே அதெதானே பேசபோறாங்க. அப்போ தெரிஞ்சிக்கலாம்.

---

இதோ பாரும்மா, என்னோட மென்பொருள்லே நீ நிறைய தவறுகளை கண்டுபிடித்திருக்கலாம். அதுக்காக, என் அப்பா அம்மாவை நாளைக்கு அலுவலகத்துக்கு கூட்டிண்டு வான்னு சொல்றதெல்லாம் டூ மச். ஆமா.
---
சிரிப்பே வரலேன்னாகூட அந்த அக்கா சொல்றதுக்கெல்லாம், இந்த அங்கிள் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கறாரு?
---


ஒரு வாரமா தினமும் Meeting போடறாங்க. அதிலே தினமும் பேசினதையே பேசறாங்க. ஏன்னு புரியலையே?
---


தப்பு செஞ்சா கடவுள் கண்டுபிடிச்சுடுவாருன்னு அம்மா சொன்னாங்க. அப்போ 'Test Director'தான் கடவுளா?

---

'Multi Tasking' அப்படின்னா என்ன அங்கிள்னு கேட்டதுக்கு, சுடோகு விளையாடிகிட்டே, பாட்டு கேட்டுகிட்டே, காபி குடிச்சிகிட்டே, தமிழ்மணம் பாத்துகிட்டே, ஜிடாக்லே பேசறதுதான் அப்படின்றாரே, நிஜமாயிருக்குமோ?
---

இந்த ஆண்டி ரொம்ப நல்லவங்க. என் அம்மா மாதிரியில்லே. ஏன்னு கேக்கறீங்களா?. என் அம்மா எவ்ளோ நேரம் கதை சொன்னாகூட எனக்கு தூக்கமே வராது. ஆனா, இந்த ஆண்டி பயிற்சி வகுப்பு (Training) எடுக்க ஆரம்பிச்சவுடனே, எல்லோரும் அமைதியா தூங்க ஆரம்பிச்சிடறாங்க...

Read more...

Wednesday, April 30, 2008

அரசியல்வாதி ஒருவர் - மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்தால்!!!

என்னது? என்னோட அறையை உடைக்க போறீங்களா? எதுக்கு?

பக்கத்துல இருக்கிற என்னோட அறையிலிருந்து காண்டீனுக்கு ஒரு மேம்பாலம் கட்டப்போகிறோம். அதுக்கு உங்க அறை இடைஞ்சலா இருக்கு.
---

நீங்க உங்க குழுத்தலைவரா இருக்கலாம். ஆனால் ஓய்வறைக்குப் போகும்போதுகூட, உங்க குழுவில் இருக்கறவங்கல்லாம், 'வாழ்க, வளர்க' அப்படின்னு கோஷம் போட்டுக்கிட்டு உங்க பின்னாடி வர்றது கொஞ்சம்கூட நல்லாயில்லே.

---
எதுக்கு என்னோட ஒரு வார சம்பளத்தை பிடித்தம் செய்துட்டீங்க?

கடந்த ஒரு வாரமா நீங்க 9.15க்கு அலுவலகம் வந்து உங்க வருகைக்கு ஸ்வைப் செஞ்சிட்டு, 9.17க்கு வீட்டுக்குப் போயிடறீங்க. அதுக்கெல்லாம் நாங்க சம்பளம் கொடுக்கமாட்டோம்.

---
ஆமா. என் தம்பி நடத்தும் கம்பெனிக்கும் கொஞ்சம் ப்ராஜக்ட்ஸ் கொடுங்கன்னு நாந்தான் நம்ம க்ளெயண்ட்கிட்டே கேட்டேன். அதிலென்ன தப்பு?

---
இங்கே பாருங்க. உங்க மேலெ என்ன குறை சொன்னாலும் உடனே 1970லே, 1980லே அப்படின்னு ஆரம்பிச்சிடாதீங்க. அப்போல்லாம் நம்ம ஊரிலே கம்ப்யூட்டரே இல்லை. புரியுதா?

---
ப்ராஜெக்ட் ஏன் லேட்டா போகுதுன்னு கேட்டதுக்கு, போன குழுத்தலைவர் இருந்தபோது Effort variance 18.5% இருந்ததை, நீங்கள் வந்தபிறகு 16.3% ஆ குறைஞ்சிருக்கு அப்படின்னு நீங்க சொல்றது கொஞ்சம் கூட நியாயம் இல்லை.

---
இதோ பாருங்க. குழுத்தலைவர் சொல்றது உங்களுக்கு பிடிக்கலேன்னா, அவரை கூப்பிட்டு பேசுங்க. அதை விட்டுட்டு விசைப்பலகை, எலிக்குட்டி இதெல்லாம் அவர்மேலே தூக்கி அடிக்கறதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லே.

Read more...

Friday, April 11, 2008

சன் ம்யூசிக் தொகுப்பாளினியை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்தால்???

சன் ம்யூசிக் தொகுப்பாளினி ஒருவர், ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். முதல் நாளே அவரை ஒரு நேர்காணல் (interview) எடுக்கச்சொல்லி விட்டார்கள். அதுவும் தொலைபேசியில். விடுவாரா அவர்?... புகுந்து விளையாடிட்டார்... எப்படின்னு பாருங்க...


பதில்களில் ஒண்ணும் சுவாரசியம் இல்லாலதால், நேர்காணலில் அவர் கேட்கும் கேள்விகள் மட்டும் இங்கே.. பதில்கள் உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்...

இப்போ இன்டர்வியூ ஆரம்பம்.


ட்ரிங்... ட்ரிங்..

ஹலோ...

ஹலோ...


வாழ்க்கையிலே சுகம், துக்கம் ரெண்டுமே சேந்துதாங்க வரும். இந்த இரண்டையும் சரிசமமா ஏத்துக்கிட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுபவங்கதான் மனுசன். இன்னிக்கி காத்தாலே பாருங்க, நான் எழுந்தவுடனே காப்பி குடிக்கலாம்னு பாத்தேன்.. ஆனா, பாலே வரலே. சரி, பரவாயில்லேன்னு சொல்லி காப்பியே குடிக்காமெ நான் வேலைக்கு வந்துட்டேன். இதமாதிரி நீங்களும் இருந்திட்டீங்கன்னா, வாழ்க்கையிலே எந்த பிரச்சினையும் இல்லே. என்ன சொல்றீங்க.. சரி.. இப்போ இந்த நேர்காணலுக்குப் போகலாமா?


ஹலோ, சுரேஷ் இருக்காரா?


அப்படியா, சுரேஷ்தான் பேசறதா... நாங்க மன்னார் அன்ட் மன்னார் கம்பெனியிலேர்ந்து பேசறோம். நீங்க எப்படி இருக்கீங்க சுரேஷ்?


என்ன, ரொம்ப நாளா என் லைனை எதிர்பார்த்துட்டிருந்தீங்களா?... நானே இன்னிக்குத்தான் வேலைக்கு சேர்ந்தேன்!!! நீங்க எப்படி இருக்கீங்க?


ரொம்ப சந்தோஷம்... நானும் நல்லா இருக்கேன்... கொஞ்சம் உங்க டிவி வால்யூமை குறைக்கிறீங்களா? நீங்க பேசறது இங்கே எதிரொலி கேக்குது.


ஓகே.. நேர்காணலை ஆரம்பிக்கலாமா? சுரேஷ், நீங்க முதமுதலா வேலை பாத்த கம்பெனி பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.


ஆஹா.. அப்படியா...இருங்க உங்க வீட்டிலே இதை பத்தி சொல்றேன். ஆமா.. கல்யாணத்துக்குப் பிறகு நீங்க செஞ்ச முதல் டெஸ்டிங் எது?


சோ ச்வீட்... உங்களுக்குப் பிடித்த மென்பொருள் என்னன்னு நான் தெரிஞ்சிக்க முடியுமா?


ஹாஹா... ரொம்ப தமாஷா பேசறீங்க... நீங்க சமீபத்திலே எழுதிய மென்பொருள் என்ன? அதிலேர்ந்து சில வரிகளை சொல்லுங்க பாக்கலாம்.


சரி சுரேஷ்.. உங்களுக்கு நாங்க வேலை கொடுத்தால், எவ்ளோ நாளில் வந்து சேர்வீங்க?


லவ்லி.. இப்படிப்பட்ட ஆளைத்தான் நாங்க தேடிண்டிருந்தோம். இன்னிக்கே உங்களுக்கு ஆபர் லெட்டர் அனுப்பறோம். உடனடியா வந்து வேலைக்குச் சேருங்க.. என்ன... போனை வச்சிடவா.. வீட்லே எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க... பை......

சுரேஷ் ரொம்ப நல்லா பேசினாரு இல்லே... இப்படியே எல்லாரும் இருந்திட்டா, உடனடியா நாங்க செலக்ட் பண்ணிடலாம்...

ஓகே. அடுத்து நாம பேசப்போற நபர் ரமேஷ். அவர்கிட்டே பேசறதுக்கு முன்னாடி ஒரு சிறு இடைவேளை... நான் போய் காபி எடுத்துக்கிட்டு வந்துடுறேன்...சீ யூ... பை...

Read more...

Thursday, April 10, 2008

மருத்துவர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால்???

மருத்துவர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால், எப்படியெல்லாம் பேசுவார்? பாப்போமா??


என்ன.. இந்த மென்பொருள் வேலை செய்யவில்லையா... நேத்து எல்லாம் நல்லா வேலை பண்ணிச்சா?.. இதுக்கு முன்னாடி என்ன உள்ளீடு (input) கொடுத்தீங்க.. இன்னிக்கு காலையிலே வழக்கம்போல வெளியீடு (output) சரியா வந்ததா?


ஆமாங்க... நான் "அரை நிரலர்தான்" (programmer). இப்போதான் 1000 நிரல்களை (programs) எழுதியிருக்கேன்.


என்னது... ஒரு வாரமா எந்த வெளியீடும் (output) வரலியா? முன்னாடியே என்கிட்டே வந்து சொல்றதுக்கென்ன? சரி.. பார்க்கிறேன்.


இந்த மென்பொருள் சரியா வேலை செய்யலேன்னு சொன்னா எப்படி? மொதல்லே நீங்க போய் எல்லா சோதனைகளும் பண்ணிட்டு வாங்க... அதை பாத்தப்புறம்தான் எதையும் செய்யமுடியும்.

ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே வந்திருக்ககூடாதா? இப்போ பெரிய பிரச்சினையாயிடுச்சு. என்னாலெ முடிஞ்சத நான் செய்துபாத்துட்டேன். நம்ம ஆலோசகர்களுக்கு (consultants) சொல்லி அனுப்பிடுங்க.


எவ்வளவு தரம் சொல்றது உங்களுக்கு?. என்னதான் அவசரமா இருந்தாலும், இந்த படிவத்தை நிரப்பிக் கொடுத்தாதான் இந்த மென்பொருளை நான் பார்ப்பேன்.

இதோ பாருங்க.. என்னால் ஆனத நான் செய்துட்டேன். இனிமே ராத்திரி 12 மணி தாண்டினால்தான் இந்த செயல் (process) வேலை செய்யுமான்னு சொல்லமுடியும்.

3 மணிக்கு ஒருதடவை இந்த மென்பொருளோட செயல்திறனை கண்காணிச்சிக்கிட்டே இருங்க. என்ன பிரச்சினை வந்தாலும், உடனே எனக்கு தெரியப்படுத்துங்க. ஓகேவா.

ஆமா. நான் முன்னாடி மருத்துவரா இருந்தேன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?
நீங்க எழுதுற குறிமுறைகள் (code) எதையும் புரிஞ்சிக்கவே முடியலையே!!!

Read more...

Tuesday, April 8, 2008

வழக்கறிஞர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால்???

ஒரு தத்துவம்:

1000 பிழைகள் வாடிக்கையாளருக்குப் போவதில் தப்பேயில்லை... ஆனால், நன்றாக வேலை செய்யக்கூடிய ஒரு ப்ரோக்ராம் அவருக்குப் போகாமல் இருக்கக்கூடாது...

ஒரு விருப்பம்:

அனைத்து மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஜூன் மாதம் முழுவதும் கோடை கால விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.


ஒரு வேண்டுகோள்:

மெ.உ.ஆ (மென்பொருள் உதவி ஆவணம்) 3.2.3அ-இல், செக்ஷன் 25.33.இஅ-இன் படி, இந்த மென்பொருள் இப்படி வேலை செய்யக்கூடாது. அப்படி தவறாக செய்வதால், உடனே அதிக பட்ச கவனம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ஒரு கேள்வி:

போன மார்ச் மாதம், 10ம் தேதி மதியம் 2 மணியிலேர்ந்து 3 மணிக்குள்ளே, நீங்க என் டேடாபேஸ்-லே ரெண்டு மூணு தடவை நுழைஞ்சிருக்கீங்க. ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா???


ஒரு காரணம்:

அந்த நிறுவனத்துக்காக நான் எவ்வளவோ உழைச்சிருக்கேன். அதனால்தான், என்னை அவங்க டெல்லி கிளைக்கெல்லாம் அனுப்பிச்சாங்க. ஆனால், சமீபகாலமாக அங்கே வேறே ஒருத்தரோட ஆதிக்கம் ரொம்ப அதிகமாயிட்டிருக்கு. அது எனக்குப் பிடிக்கலே. அதனால், நான் இப்போ வேறு
நிறுவனத்திற்கு மாறிவிட்டேன். ஆனால், அந்த நிறுவனத்தில் செய்த மென்பொருளைப் பற்றி இங்கு நான் நிச்சயமாக பேசமாட்டேன்.


ஒரு வாடிக்கையாளர்:

என் தாத்தா இவரிடம் ஒரு மென்பொருள் செய்யக்கொடுத்தாரு. இவரு என்னடான்னா, அதை முடிக்காமெ இவ்ளோ காலம் இழுத்தடிச்சிட்டாருங்க...என் பேரனோட காலத்திலாவது எங்களுக்கு அந்த மென்பொருள் கிடைக்குமாங்கறது சந்தேகமா இருக்கு...

ஒரு டிஸ்கி:

தமிழ்மணத்திலே ஒரு வழக்கறிஞர் இருக்காருன்னு தெரியும்.. அவரோட சேத்து, மற்ற எல்லோரும் இதை வெறும் நகைச்சுவையாக எடுத்துப்பீங்கன்னு நெனெக்குறேன்... அப்படிதானுங்களே!!!

ஒரு முன்னோட்டம்:

இப்பவே துண்டு போட்டுடறேன். வேறு பல துறையினரும் மென்பொருள் நிபுணராக வேலை பார்த்தால் எப்படி இருக்கும்னு... என்னோட அடுத்த பதிவுகளில்.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP