Tuesday, September 30, 2008

கொலம்பஸ்... கொலம்பஸ்...!!!
தனியொரு மனிதனுக்கு ஆணியில்லையெனில், அவனை இந்தியாவுக்கு அனுப்பிடுவோம் - அப்படின்ற திட்டத்தின்கீழ் என் கூட இருந்தவங்க சில பேர் இந்தியாவுக்குப் போயிட்டதாலே - எனக்கு இங்கே ஆணிகள் நிறைய சேந்துடுச்சு...


நீ எவ்ளோ ஆணிவேணா குடு - ஆனா நான் எதுவும் செய்யமாட்டேன் - அப்படின்ற திட்டத்தின்கீழ் நான் இருந்தாலும், சில சமயம் சமாளிக்கமுடியாம போயிடுது.


அதனால், பூச்சாண்டிக்கு ஒரு பத்து நாளைக்கு லீவ் விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனவே, என்னுடைய அடுத்த பதிவு அக்.13ம் தேதிதான்.


இந்த லீவ் லெட்டரை கடந்த ரெண்டு நாளாய் drafts வெச்சிருந்ததாலே, நேத்து அலெக்ஸாலேந்து போன். "அடடா, நீங்க 10 நாள் லீவ் எடுத்துட்டா, மக்கள் என்ன பண்ணுவாங்க? எதைப் படிப்பாங்க?" அப்படின்னு ஒரே தொந்தரவு. அதுமட்டுமில்லாமே, பூச்சாண்டி அவங்க ratingலே, சிலபல லட்சம் கீழே போயிடும்னு பயமுறுத்தல் வேறே.


நான் அதெல்லாம் முடியாதுன்னுட்டேன். நான் ஒரு தடவை முடிவெடுத்துட்டா... அது எப்பவுமே சொதப்பலாதான் முடியும்... ம். ஐ மீன்... முடிவெடுத்ததுதான்.


அதனால், மக்களே நல்லா என்ஜாய் பண்ணுங்க... அப்பப்போ எட்டிப் பாத்து பின்னூட்டம் போடமுடியுதான்னு பாக்கறேன்..


நான் 13ம் தேதி மீட் பண்றேன்...


பை பை!!!

பின்குறிப்பு:

அகில உலக வரலாற்றிலே முதல்முறையாக - ஒரே லீவ் லெட்டர்லே ரெண்டு பேர் லீவ் போடறது இதுதான் முதல் முறையாக இருக்கும்...!!!

பதிவர் நண்பர் அப்துல்லாவும் ஐந்து நாள் லீவ் வேணும்னு என்கிட்டே அனுமதி கேட்டிருந்தார். உங்ககிட்டேயெல்லாம் கேக்காமே நானே லீவ் கொடுத்துட்டேன். என்னெ மன்னிச்சிடுங்க.... அவ்வ்வ்வ்...


Read more...

Monday, September 29, 2008

வாழ்க்கையை புரட்டிப் போட்ட கடலை!!!

ஆரம்ப காலத்தில், சென்னையில் ஒரு அலுவலகத்தில் உதவி கணக்கணாய் (Accounts Assistant) வேலை செய்துகொண்டிருக்கும்போது, ஒரு நல்ல மதிய வேளையில் நண்பன் சொன்னான். "மாப்ளே, கீழே ரெண்டாவது மாடியிலே ஒரு கணிணி பயிற்சி நிலையம் தொடங்கியிருக்காங்க. சூப்பரா இருக்குடா".


அப்போது எங்க அலுவலகத்தில் ஒரே ஒரு கணிணி இருந்தது. அதையும் குளிர்சாதன வசதியுடன் ஒரு கண்ணாடி அறைக்குள் போட்டு பூட்டி வைத்திருந்தார்கள். சிறப்பு கட்டணம் கட்டி கோயிலுக்குள் அனுமதிப்பது போல் அந்த அறை பாதுகாக்கப்பட்டிருந்தது." நாமளும் கணிணி கத்துக்கிட்டு அந்த அறையில் உரிமையோட நுழையணும்டா" இது மறுபடியும் நண்பன். "சரி வா போய் பாத்துடலாம்னு" உணவு இடைவேளையில் கீழே போனோம்.


"பணம் அதிகமா கறந்துடப்போறாங்கடா" என்று நான் கூற, அவனோ " நாம எதிலேயும் சேரப்போறதில்லை. அங்கே இருக்கும் ஒரு பொண்ணு சூப்பரா இருக்குது. அதைப் பாத்து கொஞ்ச நேரம் கடலை போட்டுட்டு வந்துடலாம்" என்றபடியே உள்ளே நுழைந்துவிட்டான்.


வெளியே சூப்பராக பெயர்ப்பலகை வைத்திருந்தார்கள். "Aptech - We Change Lives". பயிற்சி நிலையத்துக்குள்ளேயும் அருமையாய் அலங்காரம் செய்திருந்தார்கள். நேராக அங்கிருந்த ரிசப்ஷனிஸ்டிடம் போனோம். "எங்களுக்கு கோர்ஸ் டீடெய்ஸ் வேணும்". அவரும் "உள்ளே போங்க. செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருப்பாங்க" என்றார்.


கண்ணாடி அலுவலகத்தில் நுழைந்து செல்வி முன்னால் உட்கார்ந்ததுதான் தெரியும். அடுத்த 20 நிமிடங்களுக்கு எனக்கும் நண்பனுக்கும் - மஞ்சகாட்டு மைனா நடிகைமுன் நின்ற பிரபுதேவாவைப் போல் - எதுவுமே காதில் விழவில்லை. பிறகு மந்திரித்து விட்ட ஆடுகளைப் போல் - நாளைக்கு வந்து பணம் கட்டுகிறோம் என்று கூறி வெளியே வந்துவிட்டோம்.

அன்று மதியம் எங்களுக்கு வேலையே ஓடவில்லை. "மாப்ளே, நான் கண்டிப்பா கணிணி வகுப்புலே சேரறேண்டா" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தான் நண்பன். "ஏண்டா, அவ அலுவலகத்திலே இருப்பா. நமக்கு வந்து சொல்லிக் கொடுக்கல்லாம் மாட்டா. எதுக்கு வேஸ்டா அங்கே போய் சேர்றே" என்றால், "ஏதாவது ஒரு சந்தேகம் வைத்துக்கொண்டு தினமும் நான் அலுவலகத்திற்குப் போய்விடுவேன்" என்றான்.


மறுநாள் மறுபடியும், "இன்னொரு தடவை போய் பாப்போம். சில சந்தேகங்கள் இருக்கு எனக்கு" என்றான். "இது வேலைக்காகாது. சரியில்லை" என்று புத்தி சொன்னாலும், எப்போதும் போல் மனது கேட்காததால், "சரி, வா போலாம்" என்றேன்.இந்த தடவை கொஞ்சம் தெளிவாக இருந்த நாங்கள் - கேள்வியெல்லாம் கேட்டு சந்தேகங்களை (!!!) தீர்த்துக்கொண்டோம்.

கடைக்கு ரெண்டாவது தடவையா வந்த ஆடுகளை விடவே கூடாதுன்னு அவங்க - ஸ்காலர்ஷிப் தர்றோம், தவணை முறையிலே பணம் கட்டுங்கன்னு - அப்படி
இப்படின்னு நிறைய கவர்ச்சித் திட்டங்களை சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்போவும் மசியாத நாங்கள், "ஒரு வாரம் டைம் கொடுங்க. யோசிச்சி திரும்ப வர்றோம்" அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டோம்.

அடுத்த வாரம் திங்கட்கிழமை காலை அலுவலகத்தில்.

நண்பன்: ஏண்டா, அந்த கோர்ஸ் பத்தி என்ன நினைக்கிறே? சேரப்போறியா?

நான்: நீ முதல்லே சொல்லு. நீ சேரப்போறியா?

நண்பன்: ச்சேசே. நாந்தான் அப்பவே சொல்லிட்டேனே. நான் சும்மா கடலை போடத்தான் போறேன்னு.நான் சேரப்போறதில்லை. நீ கூடதான் பணம்லாம் ஜாஸ்தியாகும்னு சேரமாட்டேன்னு சொன்னே.

நான்: அது அப்ப சொன்னேன். ஆனா இப்ப...

நண்பன்: இப்ப?

நான்: அது வந்து... அது வந்து...

*****

ஒரு நல்ல Cost Accountant அல்லது Chartered Accountant ஆயிருக்கவேண்டியன - கடலையா போடறே, மகனே வா - We Change Lives அப்படின்னு சொல்லிட்டு என் வாழ்க்கையவே மாத்திட்டாங்க... ஆமாங்க. நான் அங்கே மூணு வருட கோர்ஸ்லே சேந்துட்டேன்..... அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் புவியியல்தான்.. ஐ மீன்... வரலாறுதான்...

Read more...

Thursday, September 25, 2008

அரசியல்வாதிகள் சொல்லும் 10...!!!

பின்வரும் வாசகங்களை அரசியல்வாதியாக இருக்கறவர் தன் வாழ்க்கையிலே ஒருமுறையாவது சொல்லலேன்னா, அவர்கிட்டே ஏதோ பிரச்சினை இருக்குன்னு
தெரிஞ்சிக்கலாம். :-)


விட்டுப்போன வாசகங்களை மக்கள் பின்னூட்டத்திலே சொல்லுங்க...

1. என்னோட வளர்ச்சி அவருக்கு பிடிக்கலே. பொறாமைப்படறாரு.

2. எங்களுக்கு ஓட்டு போடுங்க. எல்லாத்தையும் நாங்க பாத்துக்கறோம்.

3. இது போன ஆட்சியினர் ஆரம்பிச்சி வச்சது.

4. எதிர்க்கட்சியினர் எதிரிக்கட்சிகளைப் போல நடந்துக்ககூடாது.

5. எனக்கும் இதுக்கும் கொஞ்சம்கூட சம்மந்தமேயில்லே.

6. என் மனைவி குடும்பத்தினர் பரம்பரை பணக்காரங்க.

7. என் உறவினர்களின் எல்லா செயலுக்கும் நாந்தான் பொறுப்பா?

8. அவங்க மாத்திரம் அப்போ அந்த மாதிரி செய்யலையா?

9. அந்த திட்டத்துக்கு அடிக்கல் போட்டது எங்க தலைவர்.

10.எங்கே வந்து சேரணுமோ அங்கே வந்துட்டேன். இனிமே எனக்கு கவலையேயில்லை.


Read more...

Monday, September 22, 2008

உப்பில்லா பண்டம் புருஷன் வாயிலே - ஒரு உப்புமா பதிவு!!!


சமீபத்தில் தங்கமணி செய்த உப்புமாவில் தலைப்பில் சொல்லியிருக்கும் 'அந்த' ஐட்டம் கொஞ்சம் கம்மியாக இருக்கையில் - இதே உப்புமாவை சுமார் 108 வித சுவைகளில் சாப்பிட்ட அந்த காலங்கள் நினைவுக்கு வந்தன.

கொசுவர்த்தி ஸ்டார்ட்!!!

மூன்றாம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்பு படிக்கும் வரை, படேல் ஸ்கௌட்ஸ் (Patel Scouts & Guides) என்ற சாரணர் அமைப்பில் இருந்தேன். வாரந்தோறும் ஞாயிறன்று காலை 2 மணி நேரம் - சென்னை மெரினா விளையாட்டரங்கத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வென்லாக் பார்க்கில் வகுப்பு/பயிற்சி இருக்கும்.

அந்த பயிற்சியில் ஒரு பகுதியாக, மக்களுக்கு சமையலுக்கு ஒரு சிறு தேர்வு வைத்து ஒரு மெரிட் பேட்ஜ் கொடுப்பார்கள். இந்த பேட்ஜைப் பெறுவதற்கு 99% மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு பண்டம் - உப்புமா.

மாதமொருமுறை யாராவது ஓரிருவர் இந்த சமையல் கலைக்கான பேட்ஜை வாங்கும் முயற்சியில் உப்புமா செய்வர். 'தல'யாக இருப்பவர், அந்த உப்புமாவை டேஸ்ட் செய்த பிறகு, வகுப்பிற்கு வந்திருக்கும் மற்றவர்களுக்கு காலை வேளை சிற்றுண்டி அங்கேயே கிடைத்து விடும்.

அதே பூங்காவில் இருக்கும் கட்டிடத்துக்குப் பின்புறம் திறந்தவெளியில் சமைக்கவேண்டும். கேஸ் ஸ்டவ்வோ ஏன் சாதாரண மண்ணெண்ணெய் ஸ்டவ்வோக்கூட கிடையாது. மூன்று செங்கல்களைப் போட்டு அதன் மேலே வாணலியைப் போட்டு உப்புமா செய்யவேண்டியதுதான். அங்கேயே கிடைக்கும் சுள்ளி, இலை, தழை - இதையெல்லாம் சேகரித்து கையோடு கொண்டு வந்திருக்கும் கற்பூரத்தின் உதவியால் அடுப்பைப் பற்றவைத்துவிடுவார்கள்.அப்படி சமைக்கும்போது காற்று வேகமாக அடித்தாலும் கஷ்டம் - கொழுந்து விட்டு எரியும் அடுப்புக்கு மேல் உப்புமா செய்யவேண்டும். காற்றே இல்லாவிட்டாலும் கஷ்டம் - ஒருவர் உப்புமா செய்ய இன்னொருவர் உட்கார்ந்து அடுப்பை விசிறிக்கொண்டே இருக்கவேண்டும்.


வீட்டிலிருந்து கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம் முதலிய பொருட்களோடு அவையெல்லாம் எந்த வரிசைப்படி உப்புமாவில் போடவேண்டுமென்ற 'பிட்'டும் மக்கள் கையோடு கொண்டு வந்துவிடுவார்கள்.

"டேய், முதல்லே என்ன போடணும்",

"ரவை வறுத்தது போதுமா பார்றா",

"என்ன, கத்தி மறந்துட்டியா?" -

இதெல்லாம் அவர்கள் சமைக்கும்போது கேட்கும் வசனங்கள்.

இப்படி கஷ்டப்பட்டு உப்புமா செய்தபிறகு, அதை செய்தவர்களுக்கும், சாப்பிட்டவர்களுக்கும் கண்ணில் நீர் முட்டிக்கொண்டு இருக்கும். கையோடு கொண்டுவந்திருக்கும் கர்சீப்பில் துடைத்துக்கொண்டே உப்புமாவை சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.

எதுக்கு எல்லார் கண்ணிலும் கண்ணீர்னு பாக்கிறீங்களா? அடுத்த பாராவில் இருக்கு பதில்.

படாத பாடு பட்டு பற்றவைத்த அடுப்பின் புகையில் ஒரு அரை மணி நேரம் சமைத்ததால், சமைத்தவர்கள் கண் சிவந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பார்கள். அப்பேர்ப்பட்ட உப்புமா சாப்பிட்டவர்கள், சில சமயம் கொழ கொழ உப்புமா சாப்பிட்டு வாய் திறக்க முடியாமலும், சில சமயம் பச்சைமிளகாய் காரம் அதிகமாகி, கண் எரிச்சலாலும் கண்ணீர் விட தயாராக இருப்பார்கள்.

இந்த காலகட்டத்தில்தான் சுமார் 100க்கும் மேற்பட்ட சுவைகளில் உப்புமா சுவைத்திருக்கிறேன். உதாரணத்திற்கு சில:

1. உப்பு குறைவு

2. உப்பு அதிகம்

3. காரம் அதிகம்

4. கொழ கொழ

5. அடிபிடித்தது

கொசுவர்த்தி ஸ்டாப்!!!

"என்ன, இன்னும் சாப்பிடாமே என்ன யோசனை?"

"இல்லேம்மா. இப்போ சாப்பிடறேன். சூப்பரா இருக்கு உப்புமா. நீ எது செய்தாலும் அருமையா இருக்கு. எங்கே கத்துக்கிட்டே இந்த மாதிரி செய்றதுக்கு?"

Read more...

Thursday, September 18, 2008

படிக்காமலிருக்க பத்து காரணங்கள்...!!!

1. நான் டாம் அண்ட் ஜெர்ரி பாத்து ஒரு நாளாச்சு.

2. ஒரே ஒரு தடவை ஷமீலுக்கு போன் பண்ணிக்கறேன்.

3. உன்னோட ரேமண்ட் ட்ராமா இப்போ ஆரம்பிச்சிருக்கும்.

4. அப்பா லைப்ரரி போகலான்னாரு.

5. என்னோட ப்ரெட் ஆயிடுச்சு. போய் வாங்கணும்.

6. எனக்கு தூக்கம் வருது.

7. இன்னிக்கு ஸ்கூல்லே என்ன ஆச்சு தெரியுமா?

8. இன்னிக்கு வீடு பெருக்கணும்னு சொன்னியே?

9. எனக்கு கால் பயங்கரமா வலிக்குது.

10. பாட்டிக்கு போன் பண்ணலாமா?


படிக்காமலிருக்க சஹானா சொல்லும் காரணங்களில் இவைதான் உயரப் பத்து (டாப் டென்).

இதையெல்லாம் மீறி படிக்க வைக்கறதுக்குள்ளே தாவு தீந்துடுது!!!

வீட்லே பெரியவங்க சொல்றா மாதிரி - நாங்கல்லாம் அந்த காலத்துலே - அப்படின்னு சொல்ல வேண்டியிருக்கு....:-((((. இருந்தாலும் இந்த ச்சின்ன வயசுலே சொல்ல வேண்டியிருக்கே... அதை நினைச்சாதான் கவலையா இருக்கு....:-)))

Read more...

Monday, September 15, 2008

அப்போ எங்க வீடும் சிங்கப்பூர் மாதிரிதான் - பார்ட் 1


முன்: இந்த பதிவு நம் நண்பர் கிரி அவர்களின் இந்த பதிவைப்போலவே இருந்தால் அது என் குற்றமல்ல!!!

நாங்க இந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகி விட்டது. அதனால் இந்த ஒரு வருடத்தில் இந்த வீட்டைப் பற்றி நான் தெரிந்து கொண்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். புதிதாக வருபவர்கள் என்னை போல பல விஷயங்கள் புரியாமல் சிரமப்படாமல் இருக்க ஓரளவுக்கு உதவியாக இருக்கும்.


அனைத்து அறைகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை, முன்பு கொஞ்சம் அறைகள் குளிர்சாதன வசதிகள் செய்யப்படாமல் இருந்தன அவற்றை தற்போது காணமுடிவதில்லை.

இந்த வீட்டில் நடத்துனர் மட்டும் உண்டு. அவர் பேர் குடும்பத்தலைவி.

அடிக்கடி ஷாப்பிங் செல்ல வேண்டியிருப்பதால், கடனட்டை (ATM அட்டை இருந்தால்கூட ஓகே) கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். கடனட்டை இல்லாதவர்கள் காசை வைத்துக்கொண்டும் செலவழிக்கலாம்.

இங்கேயும் பரிசோதகர்கள் அவ்வப்போது வருவார்கள், நாங்கள் ஷாப்பிங் செய்தவைகளை பரிசோதனை செய்வார்கள்.

வீட்டுக் கதவுகள் சாவி போட்டுவிட்டால் போதும், தானாகவே திறந்து கொள்ளும்.

நடத்துனருக்கு ஓய்வு பெறும் வயது என்ன என்று தெரியவில்லை. மிக மிக வயதானாலும் கூட அவரே நடத்துனராக இருப்பார் எனத் தெரிகிறது.

தமிழகத்தை சேர்ந்த அல்லது தமிழகத்தில் இருந்து இங்கு குடி ஏறியவர்களே இந்த வீட்டுக்கு குடி வந்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க அளவில் ஆண் நடத்துனர்களும் உண்டு.

வீட்டிற்குள் எங்கேயும் ஏற இறங்க முடியாது, ஏனென்றால் வீட்டிற்குள் படிக்கட்டுகளே கிடையாது.

பெரும்பாலான நேரங்களில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டே இருக்கும்.

வரும்போதும், போகும்போதும் முன்பக்க கதவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குதிக்க வேண்டுமென்றால் பால்கனியிலிருந்து குதிக்கலாம்.

வரும்போதும், போகும்போதும் எந்த ஒரு தள்ளு முள்ளும் இருக்காது. பொறுமையாகவே வருவார்கள், போவார்கள்.

வரவேற்பறையில் வயதானவர்களுக்கு முடியாதவர்களுக்கு கர்ப்பிணிகளுக்கு என்று தனி இருக்கைகள் உண்டு.

கார் இருக்கும் தளத்திற்கு செல்ல படிக்கட்டை பயன்படுத்த முடியாதவர்கள் மின் தூக்கியை (lift) பயன்படுத்தலாம்

ஆட்சி மொழியில் ஆங்கிலம் இந்தி மற்றும் தமிழ் உள்ளது. எனவே தமிழிலும் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்வார்கள். சாப்பாடு ரெடி என்ற அறிவிப்பானாலும் 3 மொழியிலும் எழுத பட்டு இருக்கும் (எனக்கு இதை முதன் முதலில் பார்த்த போது
மற்றும் கேட்ட போது நான் அடைந்த சந்தோசத்திற்கும் ஆச்சர்யத்திற்கும் அளவே இல்லை)

தொலைக்காட்சிப் பெட்டிக்கருகே மற்றும் மிக அருகே எதையும் சாப்பிடக்கூடாது மீறினால் அபராதம். தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் இடத்திற்கு ஒரு அடி முன்பு மஞ்சள் கோடு (படமெல்லாம் போடலை) இருக்கும் அதற்க்கு முன்பே அமர வேண்டும் அதை தாண்டி அமர்ந்தால் அபராதம். இந்த அறிவிப்புகள் சமையலறையில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சமையலறையிலும் சாப்பிடக்கூடாது எதையும் குடிக்க கூடாது என்று அறிவித்துக்கொண்டே இருப்பார்கள்.

ஒவ்வொரு சாப்பாட்டின்போதும் என்ன மெனு என்று அறிவிப்பு செய்யப்படும் அதே போல அடுத்த வேளை மெனுவும் கூறப்படும்.

விமான நிலையத்தில் இருந்து இந்த வீட்டுக்கு ரயில் மூலமே வந்து விடலாம்.

மண் தரையே கிடையாது முழுவதும் கார்பெட் இருக்கும் அதனாலேயே தரையில் மண்ணை எங்கும் காண முடியாது.

இங்கு அடிக்கடி மழை பெய்யும்,பல மணி நேரம் தொடர்ந்து மழை பெய்வது இங்கு சர்வசாதாரணம். பால்கனி கதவு சாத்தியிருந்தால் போதும். மழை பெய்ததற்கான அடையாளமே இருக்காது.

தோசை எந்த வித பாதிப்பும் இல்லாமல் தரமாக இருக்கும். புதிதாக தோசை போடப்படுகிறது என்றால் ஏற்கனவே தோசைக்கல்லில் இருக்கும் தோசையின் குறிப்பிட்ட பகுதி வெட்டி எடுக்கப்பட்டு புதிதாக போடப்படும். இதன் மூலம் ஓவ்வொரு முறை போடப்படும் தோசையும் ஒரே மாதிரி உயரத்திலேயே வரும்.

வீட்டை சுத்தம் செய்யும் (வாக்கூம்) பணியாளர்கள் பெரும்பாலும் இந்தியர்களே குறிப்பாக தமிழர்கள்.

வாக்கூம் போடுவது பெரும்பாலும் வாரயிறுதியில் நடைபெறும். பகலில் என்றால் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் எல்லோரும் அலுவலகத்திற்கு சென்றபின் போடப்படும்.

இதுவே அதிகம் ஆகி விட்டதால் இன்னும் பல சுவராசியமான விஷயங்கள், அக்கம் பக்கத்து வீட்டு மக்கள் பற்றி அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

பின் - 1: இன்னும் அடுத்த இடுகையா என்று பயப்பட வேன்டாம். அது ச்ச்ச்சும்மாதான்.....!!!

பின் - 2: பின் - 2 எல்லாம் இல்லை. அவ்ளோதான்...

Read more...

Thursday, September 11, 2008

கடைசி வரை பார்த்து, எழுந்து கை தட்டிய படங்கள் மூன்று!!!

நண்பர்களோடு தில்லி தமிழ்ச்சங்கத்தில் பார்த்த தெனாலி, உயிரோடு உயிராக போன்ற படங்களும் சரி, மனைவியோடு சென்னையில் பார்த்த பட்ஜெட் பத்மனாபன், மிடில்க்ளாஸ் மாதவன், லிட்டில் ஜான் ஆகிய மொக்கை படங்களும் சரி - கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் கடைசி வரை உட்கார்ந்து - இருட்டில் அனானியாக கமெண்ட் அடித்துக்கொண்டுதான் பார்த்திருக்கிறேன்.

அதனால், ட்ரெண்டிலிருந்து சற்று விலகி, கடைசி வரை பார்த்து எழுந்து கைதட்டிய படங்கள் மூன்று என்று இந்த பதிவிடுகிறேன். நல்ல படங்கள் என்று நிறைய் பார்த்திருந்தாலும்(!!!), உடனே நினைவுக்கு வருவது, அடிக்கடி அசைபோடுவது என்ற வகையில் இந்த மூன்றையும் சொல்ல விழைகிறேன்.

அன்பே சிவம்:

இந்தப் படத்தைப் பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை. கமலின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும், அன்பின் அருமையையும் எடுத்துரைத்த படம். இந்த படத்தை நண்பர்களுடன் தில்லியில் விடுதியில் இருந்தபோது குறுந்தகடு வாங்கி பார்த்தது. சும்மா பொழுது போகாமல் பார்க்க ஆரம்பித்தோம். போகப்போக படத்தில் ஐக்கியமாகி முடியும்வரை யாருமே எழுந்துபோகாமல் உட்கார்ந்திருந்தோம்.


படம் முடிந்தபிறகு நிஜமாகவே எழுந்து நின்று கைதட்டியவர்களில் நானும் ஒருவன். இன்றும் எப்போதாவது இணையத்தில் தேடி பார்க்கும் படங்களில் ஒன்று.

தன்மத்ரா

எகிறி, கத்தி, குதித்து, குட்டிக்கரணம் போட்டு, நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி நடிக்கும் தமிழ் நடிகர்கள் பார்க்கவேண்டிய படம்.

ஒரு சிறு மேக்கப்பும் இல்லாமல் நடித்திருக்கும் மோகன்லால், படம் முழுக்க அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.

ஒரு சாதாரண குடும்பத்தலைவனுக்கு அல்சைமர்ஸ் நோய் தாக்கியபின், அவரின் செய்கைகளும், அவர் குடும்பம் படும் பாடும்தான் கதை.

அலுவலகத்தில் சட்டையை கழற்றும்போதும், அங்கேயே கழிவறையில் குளிக்கும்போதும், மற்றும் பல காட்சிகளிலும் மோகன்லால் அனாயாசமாக நடித்திருப்பார்.

வெகு நாட்களாய் இணையத்தில் தேடிக்கொண்டே இருந்தபின், சமீபத்தில்தான் இந்த படத்தைப் பார்த்தேன். கொஞ்சம் கூட நகர முடியாமல் கட்டிப்போட்ட படம் முடிந்தபின், என்னையறியாமல் கைதட்டினேன்.

த க்வீன் (2006)

இளவரசி டயானா கார் விபத்தில் இறந்தபிறகு அடுத்த ஒரு வாரம் அந்த ராஜ குடும்பத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய கதை.

ராணியாக நடித்த ஹெலன் மிர்ரனுக்கு ஆஸ்கர் ( நம்ம தசாவதாரம் ஆஸ்கர் இல்லேங்க!!!) விருதை 2007ம் ஆண்டு பெற்றுத் தந்த படம். இந்த படத்தில் ஹெலனுடைய நடை, உடை, பாவனை ஆகிய எல்லாமே முதல் தரம் (தரம்=Class; தடவை இல்லே...).

பிரதமர் டோனி ப்ளேயராக நடித்தவரும் அருமையாக நடித்திருப்பார்.

படத்தில் நடித்தவர்களின் உடையலங்காரம், இசை, நிஜமாக டயானா இறந்தபோது ஒலிபரப்பப்பட்ட தொலைக்காட்சி காட்சிகளை நடு நடுவே இணைத்து காட்டப்பட்ட விதம் - எல்லாமே சூப்பர்ப்...

இந்த மாதிரி படம் நம் நாட்டில் எப்போது எடுக்கப்போகிறோம் என்று கவலைப்பட்டுக்கொண்டு எழுந்து நின்று கைதட்டினேன்.

Read more...

Monday, September 8, 2008

பாகிஸ்தான்காரன் மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!!!

இப்படி ஒரு பதிவை எழுதவே கஷ்டமாகதான் இருக்கு என்ன செய்ய நேற்று ஊறுகாய் பாட்டிலை (மேட் இன் பாகிஸ்தான்) திறக்கும்போது குப்பென்று பூண்டு வாசனை அடித்தது.


நேற்று நண்பர் வீட்டில் புதிய ஊறுகாய் டப்பா வாங்கியிருப்பதைக்கண்டு சப்பாத்தியோடு தொட்டுக்கொண்டு சாப்பிட அவரது வீட்டிற்குப்போனேன். பாகிஸ்தானியர் அவ்வளோவாக காரம் போடவில்லை என்று வருத்தப்பட்டு இருந்தார், அதை நினைத்து வருத்தப்பட்டேன்.

அவரது ஃப்ரிட்ஜின் ஓரத்தில் அந்த #$# ஊறுகாய் பாட்டிலை வைத்திருந்தார். எனக்கு அதை சாப்பிட்டுப் பார்க்கும் ஆவல் அதிகரிக்கவே, கொஞ்சம் தொட்டு நக்கப்பார்த்தேன். என்னுடைய கை வழுக்கி வழுக்கி விட்டதால் பாட்டிலை திறக்கவேமுடியவில்லை. ஆகையால், எங்கு
புதிய ஊறுகாய் பாட்டில் இருக்கு என்று தேடி அலைந்து சஞ்சய் வீட்டுக்கு சென்றேன். அங்கு ஏற்கனவே அது ஓப்பன் ஆகி இருந்தது, ஒரே ஒரு தடவை அதை நக்கிய பிறகு என்னால் உட்காரமுடியவில்லை.


அது 2008ல் வந்த ருசி ஊறுகாயின் வகையான எலுமிச்சையின் அப்பட்டமான காப்பி என்று தெரிந்தது.

அப்படியே அச்சு அசலாக காப்பி அடித்து இருக்கிறார்கள், இதில் கொடுமையின் உச்சக்கட்டமாக தயாரிப்பு பாகிஸ்தானில் என்று போட்டு இருந்தது, எங்கேயாவது ருசியின் சிறப்பம்சமான பூண்டு வாசனை வருகிறதா என்று பார்க்கவே திரும்பி திரும்பி அதை பத்து முறை நக்கிப்
பார்த்தேன். (நம்புங்கப்பா அதுக்காகவேதான் திரும்ப திரும்ப நக்கினேன்.).


ருசி ஊறுகாய் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதே ஊறுகாய் இன்றும் என்னிடம் இருக்கிறது. அவ்வளவோ அருமையான ஊறுகாயை சுட்டிருக்கிறார்களே நன்றி என்று ஒரு வார்த்தை போடவில்லையே என்ன செய்யலாம்? ஒரு கிண்ணத்தில் வாங்கி வீட்டில் போய் சாப்பிடலாமா என்று கிண்ணம் கேட்டேன். கொடுக்கவில்லை. அதனால் நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை. சரி நம்மால் என்ன செய்யமுடியும் இப்படி ஒரு பாட்டிலை சுட்டுக்கொண்டு வரமுடியுமா? அல்லது ஊறுகாயை சட்டைப்பையில் போட்டுக்கொண்டுதான் வர
முடியுமா என்று பயங்கர பசியில் அவருக்கு ஒரு போன் போட்டேன். அந்த ஊறுகாய் பாட்டிலை எனக்கு அனுப்பமுடியுமா என்று?


இரவு திரும்ப போய் அவரது ஃப்ரிட்ஜைப் பார்த்தால் அந்த பாட்டில் அந்த இடத்திலிருந்து நீக்கப்பட்டு இருந்தது. அதைவிட கொடுமையாக அந்த ஃப்ரிட்ஜே அங்கிருந்து நீக்கப்பட்டு இருந்தது.


அவர் ஏன் அந்த ஊறுகாய் பாட்டிலையும், ஃப்ரிட்ஜையும் நீக்கவேண்டும்?

பிற்ச்சேர்கை: பதிவு சமையலை லைட்டாக டச் செய்வதால் பதிவுலக நீதிப்படி இந்த பதிவை ஆசான் காஞ்சனா ராதாகிருஷ்ணன் ஐயாவுக்கு டெடிக்கேட் செய்கிறேன்.

Read more...

Saturday, September 6, 2008

நூலகம் - அரைபக்கக் கதை

அந்த பெரிய 24x7 நூலகத்தில் ஒரு விடியற்காலை வேளை. நூலகர் செல்வன் தூக்கக்கலக்கத்தில் இருக்கிறார். அப்போது அவர் தோழி செல்வி வேகமாக வந்து அவரை எழுப்புகிறார்.

செல்வி: ஹலோ, எழுந்திரிப்பா. இந்தா சீட்டு. இந்த தகவல தேடித்தா. நம்ம தலைவருக்கு உடனடியா வேணுமாம்.

செல்வன்: என்னம்மா இது காலங்கார்த்தாலே வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டு.. ச்சே ஒரு மனுசனை நிம்மதியா தூங்கக்கூட விடமாட்டேங்கறாங்க... சரி குடு... தேடித் தர்றேன்.

செல்வி: இந்தா. சீக்கிரம்..

(ஒரு பத்து நிமிடம் கழித்து...)

செல்வி: என்னய்யா... இன்னுமா கிடைக்கலே. இவ்ளோ பெரிய நூலகம் வெச்சிருக்கே. இந்த சின்ன தகவலை தேடி கண்டுபிடிக்க முடியலியா. என்னமோ போ...

செல்வன்: இரும்மா. அவசரப்படாதே. தேடிக்கிட்டிருக்கேன்லே..

செல்வி: ரொம்ப பழைய பழைய விஷயமெல்லாம் டக்குன்னு தேடிக்குடுக்குறியே.. இது இப்போ சமீபத்துலே நடந்த ஒரு விஷயம்தானே...

செல்வன்: இதோ பாரும்மா. இங்கே எல்லா புத்தகமும் / தகவல்களும் வருடவாரியாகவோ / தேதிவாரியாகவோ அடுக்கி வைக்கலே புரியுதா. அதனால், சில விஷயங்கள் உடனே கிடைச்சிடும். சிலது ரொம்ப நேரமாகும்.

(இன்னும் ஒரு பத்து நிமிடம் கழித்து)

செல்வன்: இல்லேம்மா. இங்கே இதை பற்றிய தகவல் இல்லை. தலைவரை வேறே யார்கிட்டேயாவது கேட்டு தெரிஞ்சிக்கச்சொல்லு. இந்த நேரத்திலே அவங்க பொண்டாட்டிகூட தூங்கிக்கிட்டிருப்பாங்க. அவங்க எழுந்தப்புறம் கேட்கச்சொல்லு. இப்போ ஆளை விடு. கொஞ்ச நேரம் தூங்கணும்.

செல்வன் இன்னொரு முறை அந்த சீட்டைப் பார்க்கிறான். அதில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது.

"படையப்பாவில் ரஜினிக்கு எதிரே கால் மேல் கால் போட்டு உக்காந்திருந்த நடிகை பேர் என்ன?"

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP