Friday, August 21, 2009

சென்னையில் 3வது வாரம் - போளி டோண்டு பாக்கமுடியல!!!

சரி சரி. தலைப்பைப் பாத்துட்டு வந்தவங்க எல்லாம் வாங்கப்பா... உங்களுக்கான மேட்டர் இந்த இடுகையில் எங்கேயோ இருக்கு. அப்பத்தானே முழுக்க படிப்பீங்க?

****

உண்மைத்தமிழன் அண்ணாச்சி மற்றும் சில பதிவர்களை மாதிரியே - எங்க வீட்டிலும் ஹாத்வே இணைய இணைப்பு இருந்தது. ஒரு சுபமுஹூர்த்த நன்னாளில் அவர்கள் தொழிலையே விட்டுவிட்டு ஓடிவிட - அடுத்த இணைப்பு கொடுக்க 10-15 நாட்கள் ஆகும்னு மற்றவர்கள் சொல்லிவிட - நான் தினமும் அரை மணி நேரத்துக்கு மட்டுமே கடைக்குப் போய் இணையத்தை மேய வேண்டியதாயிற்று. நெம்ப கஷ்டம்!!!

********

சென்னையில் இருக்கும்போது, ஒரு பதிவர் நண்பர் என்னை கைப்பேசியில் கூப்பிட்டு - எங்கே இருக்கீங்க, பின்னணியில் இவ்ளோ அமைதியா இருக்கே... தூங்கிட்டிருந்தீங்களா? - அப்படி இப்படின்னு கேட்டுட்டே இருந்தாரு. பொய் சொல்லவே பிடிக்காத எனக்கு அப்போ பொய் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம். அடுத்த பத்தி படிச்சீங்கன்னா, நான் எங்கே இருந்தேன்னு புரியும்.

அலுவலகத்தில் ஒரு பெரிய மீட்டிங். தொலைபேசியிலும் (கான்ஃபரென்ஸில்) நிறைய பேர் இருந்தாங்க. ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று தொலைபேசியில் - ஓய்வறையில் தண்ணீர் ஃப்ளஷ் (flush) செய்யும் சத்தம் கேட்டது. யாரோ ஒருவர் ஓய்வறையில் இருந்துகொண்டே மீட்டிங்கில் கலந்துகொண்டிருந்தார் போல.

எங்க தலைவர் எங்களிடம் - நல்லவேளை, எல்லாரையும் வீடியோ கான்ஃப்ரன்ஸில் வாங்கன்னு நாம கூப்பிடலே. நாறிப்போயிருக்கும் - அப்படின்னவுடன், சிரித்து சிரித்து சிரித்துக் கொண்டேயிருந்தோம்.

வெ*பூ, இப்ப தெரிஞ்சுதா, அப்ப நான் எங்கே இருந்தேன்னு!!!

*****

திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு அறிவிப்பு பலகை வெச்சிருக்காங்க. அந்த பலகையில் - தஞ்சாவூருக்கு இன்னும் இவ்ளோ தூரம் இருக்கு, இப்போ இந்த ஊர்லே இருக்கோம் - இப்படியெல்லாம் விஷயம் இருக்கும்னு நினைச்சீங்கன்னா, எச்சி போட்டு உடனே அதை அழிச்சிடுங்க. அப்படி ஒரு 'தூர வழிகாட்டி' எங்கேயுமே காணலே.

அப்படின்னா அந்த பலகையில் என்ன எழுதியிருக்காங்கன்னு கேக்குறீங்களா - “ நான், நீ என்றால் உதடு ஒட்டாது. நாம் என்று சொன்னால் மட்டுமே உதடு ஒட்டும். நெடுஞ்சாலைத் துறை” அவ்வளவுதான். இதையே திரும்பத் திரும்ப நெடுஞ்சாலை முழுக்க மஞ்ச கலர்லே எழுதி வெச்சிருக்காங்க.

எனக்கு தோன்றிய கேள்விகள்:

1. குடும்பக் கட்டுப்பாடு, பெண் சிசுக்கொலை, மரம் வளர்ப்போம் - இதைப் பற்றி ஒரு வாக்கியத்தை எழுதி வைத்தாலாவது ஏதாவது பயன் கிடைத்திருக்குமென்று நம்பலாம்.

2. கலைஞர் மொத்தமே இந்த ஒரு பொன்மொழியைதான் சொல்லியிருக்கிறாரா? நாம் தெரிந்து கொள்வதற்காக வேறு எதையுமே சொல்லவில்லையா?

3. இதே அறிவிப்பு பலகைகளில், அடுத்த ஊர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று ஒரு ச்சின்ன எழுத்திலாவது எழுதியிருக்கலாமே?

4. இவ்வளவு செலவு செய்து வைத்த இந்த பலகைகளை - நாளை ஒரு வேளை ஆட்சி மாற்றம் வந்தால், விட்டு வைப்பார்களா?

5. இதே பழமொழியை ஒரு வேளை அம்மா ஆட்சிக்கு வந்தால் எப்படி உல்டா செய்து வைப்பாங்கன்னு ஒரு கற்பனை. ”சென்னை, பெங்களூர்லே ஓய்வு எடுத்தால் அது ஓய்வு கிடையாது. கோட நாட்டில் ஓய்வெடுத்தால் மட்டுமே அது ஓய்வு”.

*****

ஊருக்கு வந்தப்பிறகு எந்த பதிவரை தொலைபேசி எங்க ஏரியா நங்கநல்லூர்னு சொன்னாலும், உடனே அவங்க கேட்பது - டோண்டு ஐயாவை பாத்தீங்களா?

சரின்னு ஒரு நாள் அவருக்கு தொலைபேசினேன். அடுத்த நாள் நடைப்பயிற்சிக்கு வரும்போது வீட்டுக்கு வந்துடறேன்னு சொன்னவர், அதே மாதிரி காலை சுமார் 7.45க்கு வந்துவிட்டார்.

திருவல்லிக்கேணி, நங்கநல்லூர், நோய்டா, எங்கே பிராமணன், மொழிபெயர்ப்பு, ஃப்ரெஞ்ச், இஸ்ரேல் - அப்படி இப்படின்னு பல்வேறு விஷயங்களைத் தொட்டு படபடவென்று பேசிக் கொண்டிருந்தார் இந்த 60+ வாலிபர். பல்வேறு பதிவுகளில் படித்த மாதிரியே - செய்யும் தொழிலிலும், பதிவுகளிலும் நல்ல ஈடுபாட்டோடு இயங்கி வரும் இவரிடம் பேசும்போது - இவருடைய உற்சாகம் கண்டிப்பாக நம்மையும் பற்றிக்கொள்ளும்.

என்ன ஒரே ஒரு ஆசை இருந்தது. அவர் வரும்போது ‘போளி' (ஒரு இனிப்பு சாப்பாட்டு ஐட்டம், தெரியும்தானே?) வாங்கி அவர்கையில் கொடுத்து - ஹையா ஐயா, நான் ‘போளி' டோண்டுவை பாத்துட்டேன்னு சொல்ல நினைத்தேன்.

ஹிஹி.. உலகமறிந்த நம் ஞாபகமறதியால் அதை வாங்கி வைக்க மறந்துவிட்டேன்...

அதனால் என்ன ... அடுத்த தடவை வரும்போது இதை செய்துவிட வேண்டியதுதான்.

*****

Read more...

Monday, August 17, 2009

இரு சம்பவங்களும் பின்னே என் சபதமும்...

முதலில் ஒரு சிரிப்பான சம்பவம்.

அடுத்த நாள் வீட்டில் நடக்கவிருந்த ஒரு ச்சின்ன விசேஷத்திற்காக, சிற்றுண்டி ஆர்டர் செய்வதற்காக ஒரு ச்சின்ன உணவகத்திற்குப் போயிருந்தேன். ஒரு பத்து பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய ஒரு சிறிய ஹால். அப்போது கடை காலியாகத்தான் இருந்தது. நட்ட நடுவில்
ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நான் நுழைந்தவுடன்,

அவர்: வாங்க, வணக்கம்.

நான்: நான் ஏழாவது தெருவிலிருந்து வர்றேன்.

அவர்: சரி

நான்: நாளை காலைக்காக பதினைஞ்சு டிபன் சொல்லணும்.

அவர்: சொல்லுங்க. எவ்ளோ மணிக்கு ரெடியா இருக்கணும்? டிபன்னா என்னென்ன வேணும்?

நான்: 4 இட்லி, 1 வடை. சட்னி, சாம்பார் தனியா கொடுத்துடுங்க. ஒரு எட்டு மணிக்கு வந்து வாங்கிக்கறோம். எவ்ளோ ஆகும்னு சொல்லுங்க.

அவர்: ஒரு நிமிஷம் இருங்க. முதலாளி இப்ப வந்துடுவாரு. வந்தவுடனே நீங்களே கேட்டுக்குங்க.

நான்: அப்ப நீங்க?

அவர் (சிரித்தவாறே) : நான் இங்கே சாப்பிட வந்தவன். பாக்கி சில்லறைக்காக நிக்கறேன் அவ்ளோதான்.

(எனக்கு சரியான கடுப்பு)

நான்: அப்போ இவ்ளோ நேரம் எதுக்கு கேள்வியெல்லாம் கேட்டீங்க?

அவர்: என்னை யாருன்னு நீங்கதானே முதல்லே கேட்டிருக்கணும். நீங்க ஏன் கேக்கலே?

நான்: அது வந்து.. நீங்க பாக்கறதுக்கு மேனேஜர் மாதிரி இருந்தீங்க.. .அதான் கேக்கலே...

இதற்குள் கடையிலிருந்து ஆள் வந்துவிடுகிறார். நான் மறுபடி முதலிலிருந்து எல்லாவற்றையும் ஒப்பிக்க, கடைக்காரரோ பதிலை என் பக்கத்தில் நிற்பவரைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் கடைக்காரரைப் பார்த்து: இதோ பாருங்க. இட்லி வடை இவருக்கு (என்னைக் காட்டி). நான் இங்கே சாப்பிட வந்து, சில்லறைக்காக நிக்கறேன். என்னை முதல்லே வெளியே அனுப்பிட்டு, அவர்கிட்டே கணக்கு பேசிக்குங்க.

கடைக்காரர் சிரித்துக் கொண்டே அவருக்கு சில்லறை கொடுக்க, அவர் என்னைப் பார்த்து - ஏங்க, நான் பாக்கறதுக்கு நிஜமாவே மேனேஜர் மாதிரியா இருக்கேன்?

நான் : நான் அப்படித்தான் நினைச்சேன். நீங்கதான் வெள்ளையும் சொள்ளையுமா இருக்கீங்களே?

அவர்: மறுபடி ஒரு தடவை நல்லா பாத்து சொல்லுங்க..

நான்: அட... ஆமாங்க...

அவர்: உங்களுக்கு தெரியுது. எங்க முதலாளிக்குத் தெரியல. இன்னிக்கே ஆபீஸுக்குப் போய் என்னை மேனேஜர் ஆக்குடான்னு கேக்கப் போறேன்.

இந்த சம்பவம் முழுக்க மனுசன் சிரிச்சிக்கிட்டே இருந்தாரு. அந்த நகைச்சுவை உணர்வு, டைமிங் சென்ஸ், கலகலப்பு - இதெல்லாமே ஸ்வைன் மாதிரி பக்கத்தில் இருப்பவருக்கு டக்குன்னு ஒட்டிக்கிற அளவுக்கு இருந்தது.

வீட்டுக்கு வந்தப்புறம்கூட எல்லார்கிட்டேயும் சொல்லி சொல்லி சிரிச்சிக்கிட்டே இருந்தேன்.

*********

இப்போ ஒரு வருத்தமான சம்பவம். இது நடந்து சில வருடமாயிடுச்சு.

ஒரு தடவை ஒரு ச்சின்ன தெருவில் என் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, எதிரில் வந்த ஒரு கார், என் பக்கத்தில் வரும்போது டக்குன்னு வலது பக்கம் கொஞ்சம் திரும்ப, நான் திடீர் ப்ரேக் அடிச்சி தெருவோரத்தில் நின்றிருந்த ஒருவரை இடித்துத் தள்ளிவிட்டு
வண்டியோடு கீழே விழுந்தேன்.

என் பைக்கின் 'பின்னே பார்க்கும்' கண்ணாடி உடைந்துவிட, எனக்கு கைகளிலும், நான் தள்ளி விட்டவருக்கும் கை, கால்களிலும் சிராய்ப்பு. நான் கஷ்டப்பட்டு எழுந்து வண்டியை எடுத்து நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தால், அவரோ அழுதுகொண்டிருந்தார்.

நான் டென்சனாகி அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க என்னை மேலும் டென்சனாக்கிய விஷயம் அவர் செய்கையில் பேசியபோதுதான் தெரிந்தது. அவர் வாய்பேச இயலாதவர்.

ஒண்ணுமில்லே. நீங்க போங்கன்னு செய்கையில் காட்டியவாறே அவர் நகர, என் வண்டி நகராமல் அடம் பிடித்தது. அதைப் பார்த்த அவர், நான் மறுப்பதையும் கண்டுகொள்ளாமல் எனக்கு உதவ முற்பட்டார்.

என் வண்டியை தள்ளியவாறே பக்கத்தில் ஒரு மெக்கானிக் கடைக்கு வந்த அவர், கண்ணாடியை சரிசெய்யவும்தான் தெரிந்தது, அவர் ஒரு மெக்கானிக் என்பதும் அது அவரோட கடையென்பதும்.

அன்னிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தே ஆகணும்னு நினைச்ச அவர், வண்டியை சரிசெய்ததற்கு காசு வாங்கமாட்டேன்னு சிறிது நேரம் அடம் பிடித்தாலும், காசை அவர் பாக்கெட்டில் திணித்து, மறுபடி மன்னிப்பு கேட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அப்படிப்பட்ட ஒரு ஆளை இடித்துத் தள்ளிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அடுத்த ஒரு வாரத்திற்குப் போகவேயில்லை.

அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவெடுத்தேன். இனிமேல் இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தால், யாரையும் இடிக்காமல் தனியாக ஒரு இடத்தில் போய்தான் விழவேண்டும் என்று சபதமே செய்துவிட்டேன்.

நாமதான் ஒரு சபதத்தைப் போட்டுவிட்டால், அதை நிரூபிச்சே தீருவோம்ல... தங்கமணி பின்னால் அமர்ந்திருக்க ஓரிரு முறை ( நிறைய தடவை??) யாரையும் இடிக்காமல் நாங்க மட்டும் பைக்லேந்து விழுந்து எழுந்தோம்.

அப்புறம்தான் என் சபதத்தை தங்கமணி நம்பினார்.

அப்ப நீங்க?

********

Read more...

Thursday, August 13, 2009

சென்னையில் இரண்டாவது வாரம் (கோவை, திருப்பூர் விசிட்!)

வடிவேலுவை நல்ல்ல்ல்லவன்னு சொன்னவங்க மாதிரி - மொதல்லே ஒரு ஆறு பேரு திருப்பூர்லே... சுத்தி நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க... அப்புறம் பக்கத்து ஊர்லே (கோவை) இருக்கறவருக்கு தொலைபேசி - நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா. இங்க ஒருத்தன் மாட்டியிருக்கான்னாங்க. அவங்களும் - நாங்க எல்லாரும் இங்கேதாம் இருக்கோம். அவரை பஸ் ஏத்தி விடுங்க. நாங்க பாத்துக்குறோம்னாங்க. சரின்னு இவங்களும் பஸ்(லே) ஏத்தி அவங்களே டிக்கெட்டும் எடுத்து அனுப்பி வெச்சாங்க.. சரின்னு அங்கே போய் இறங்கினா.. அங்கே ஒரு பத்து பேரும்மா... மாத்தி மாத்தி பேசறாங்க...


இப்படி நகைச்சுவையா சொன்னாலும் நேர்லே பார்த்தேயிராத ஒருத்தனுக்காக (ஏன் பாக்க முடியல, கழுத்து வலியான்னு கேக்கப்படாது!), ஞாயிறிலும் வேலையில் பிஸியாயிருந்த திருப்பூர் நண்பர்கள் மற்றும் ஓய்வு நாளிலும் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்த கோவை நண்பர்கள் - எனக்காக சில மணி நேரங்கள் செலவழித்தது மனது நெகிழ்ந்தது.


இவர்களைப் பற்றி சில பாயிண்டுகள்... கோர்வையா எழுதாமே பின்னே முன்னேன்னு எழுதியிருக்கேன். ஏதாவது வித்தியாசம் காட்டணுமே!!!

பாசக்கார மனுசங்க. அப்படியே அன்பாலே நனைச்சிட்டாங்க... ஹிஹி அப்புறம் மழையிலும்.

விருந்தோம்பலுக்கு மறுபெயர் இவங்கதான். இவங்கள பாக்க வர்றவங்க தங்கள் பர்ஸை வீட்லேயே வெச்சிட்டு வந்துடலாம்... வெளியே எடுக்க விடவே மாட்டாங்க... :-)

கம்பங்கூழ். கேள்விப்பட்டு மட்டும் இருந்த இதை குடிக்கச் சொன்னாங்க. ஆஹா ஆஹா.. அற்புதமான சுவை. மறக்கவே முடியல.(செய்முறை இணையத்தில் கிடைக்குதான்னு பாக்கணும்!).

நான் பழகுவதற்கு ரொம்ப இனிப்பானவன்னு கோவையில் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. சந்திப்பு ஏற்பாடு செய்திருந்த பூங்காவில் ஏகப்பட்ட எறும்பு எங்களை சுத்தி!!! 'அவங்களாலேயே' வேறே இடம் தேடிப் போக வேண்டியதாயிற்று.

சஞ்சய் சுக்கு காப்பி(ன்னு) கொடுப்பாரு. (ஆனா அதை யாரும், இது உப்புமாவான்னு கேக்கப்படாது!!).

எனக்கு அல்வா கொடுக்கணும்னு கடைகளில் தேடியிருக்காங்க ஒரு சகோதரி. கருணை உள்ளம் கொண்ட கடைக்காரர் அதற்கு மறுத்துவிட்டதால், வேறு இனிப்பு ஐட்டங்களை வாங்கி வந்துட்டாங்க... அவ்வ்வ்... அடுத்த முறை வந்தா வீட்டுக்கே வரச்சொல்லியிருக்காங்க.. ஸ்பெஷல் அல்வா கொடுப்பாங்களாம்...

வந்துடறேம்மா... வந்துடறேம்மா... - இதையே ஒரு நூறு தடவை சொல்லிப்பாருங்க. என்னைப் பார்க்க ஊர் விட்டு ஊர் வந்திருந்த வால்பையன் அவரோட தங்ஸ்கிட்டே இப்படித்தான் வாங்கிக் கட்டிண்டிருந்தாரு.

திருப்பூர் மக்கள் - பதிவர் சந்திப்புக் குழுன்னே ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க.. அதுக்கு தலைவர், பொருளாளர் அப்படின்னெல்லாம் ஆட்களை நியமிச்சி, சந்திப்பின்போது பில் செட்டில் பண்ண பொருளாளர் பர்ஸில் கை வைச்சிடறாங்க!!!

எல்லாத்துக்கும் மேலே - (கோவை) பதிவர் சந்திப்பில் மொக்கையான விஷயங்களை பேசாமே - பல ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வழிமுறைகளை விவாதிக்கிறார்கள். விரைவில் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளின் அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம். வாழ்த்துக்கள் நண்பர்களே!

கடைசியானாலும் குறைவில்லாத ஹிஹி.. last but not least... பின்னிரவானாலும் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லையென்றால் மற்றவர்கள் உதவுவதும், யாராவது ஒருவருக்கு தொலைபேசினால் மற்ற நண்பர்களுக்கு கான்ஃபரன்ஸ் போட்டு உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதுமாக - கோவை பதிவர்கள் ஒரு நல்ல குழுவாக செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதொரு விஷயமே.

*****

Read more...

Monday, August 10, 2009

Lemon Tree திரைப்படம் - தமிழ் நடிகர்களின் பார்வையில்!!!

சென்ற மாதம் மொட்டை மாடியில் Lemon Tree உலகத் திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் 40 பேர் வந்திருப்பார்கள். படம் ஓடிக்கொண்டிருந்தபோதே சில பேர் வருவதும், போவதுமாக இருந்ததால் யார் யார் வந்தார்கள் என்று அப்போது தெரியவில்லை. ஆனால், இருட்டில் சில தமிழ் நடிகர்களும் அங்கு வந்து படத்தைப் பார்த்திருக்கின்றனர். அது எப்படி எனக்குத் தெரியும்னு பாக்குறீங்களா? இந்த இடுகையை படிங்க.

படத்தைப் பாத்துட்டு வந்த சில நடிகர்கள் பக்கத்துலே இருக்குற ஜுஸ் கடையில் எலுமிச்சை ஜூஸ் குடிச்சிக்கிட்டே, அந்த படத்தை எப்படி உல்டா செய்யலாம்னு பேசிக்குறாங்க. நடிகர்கள் பேரை இங்கே சொல்லவில்லை. ஆனா நீங்க கண்டுபிடிச்சிட மாட்டீங்களா என்ன?!!!

படத்தோட கதை தெரியாதவங்க, எஸ்ரா எழுதிய இந்த விமர்சனத்தை பார்த்துவிடவும்.

*****

”படத்தோட முக்கிய பாத்திரங்கள் மொத்தமே மூணு நாலு பேர்தான். எல்லாத்தையும் நானே பண்ணிடுவேன்”.

”அது சரி. உங்க லெவலே வேறே. ஆமா.. எனக்கு ஒரு சந்தேகம். படத்துலே ரெண்டு பேர் முத்தம் கொடுக்கிற மாதிரி ஒரு காட்சி வருதே. அதெப்படி எடுப்பீங்க? உங்களை நீங்களே முத்தம் கொடுத்துப்பீங்களா?”

”இதோ பாருங்க. நான் நடிக்க ஆரம்பிச்சிட்டா”..

”உங்க நடிப்பை நீங்களே பாக்கமாட்டீங்களா?”

”அட.. அது உங்க டயலாக். எனக்கு கோத்து விடாதீங்க. நான் நடிக்க ஆரம்பிச்சிட்டா பாத்திரத்தோட ஒன்றிப்போயிடுவேன். அப்போ இதெல்லாம் பிரச்சினையேயில்லை. உங்களுக்குத்தான் பயங்கர பிரச்சினை.”

”ஏன்?”

”பறக்கறா மாதிரி ஒரு சீனும் இல்லையே படத்துலே. என்ன பண்ணுவீங்க?”

”அட இதென்னங்க கேள்வி. அந்த அமைச்சர் வீட்டுக்கும், எலுமிச்சை தோட்டத்துக்கும் நடுவே வேலி இருக்கில்லே, அதை பறந்து பறந்து தாண்டறா மாதிரி சில சீன்ஸ் போட்டு, சண்டை காட்சியும் வெச்சிட்டா... பூந்து விளையாடிடுவேன்ல..”

”சண்டைன்னதும்தான் ஞாபகம் வருது. அமைச்சரை தீர்த்துக் கட்ட தீவிரவாதிங்க வர்றாங்கன்னு ஒரு சீன் வெக்கணும். எனக்கு ஒரு பெரிய மழைக்கோட்டும், ரெண்டு பெரிய துப்பாக்கியும் ஏற்பாடு பண்ணிக்கறேன். என்ன, ரெண்டு நாள் தூங்காமே இருந்து கண்ணு ரெண்டையும் சிவப்பாக்கிக்கணும். அவ்ளோதான்.”

”அண்ணே.. உங்களுக்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கு.”

”என்னப்பா?”

”உலகத்துலே எவ்ளோ எலுமிச்சை மரங்கள் இருக்கு... அதுலே எவ்ளோ காய்கள் காய்க்குது. எவ்ளோ எலுமிச்சையை ஊறுகாய்க்குப் பயன்படுத்தறாங்க.. எவ்ளோ எலுமிச்சையை தலைக்குத் தேய்ச்சிக்க பயன்படுத்தறாங்க... அப்புறம் ஜூஸ் போட, லாரிக்கு முன்னாடி மாட்ட எவ்ளோ தேவைப்படுது... அப்படி இப்படின்னு நிறைய புள்ளிவிவரங்களை எடுத்து வெச்சிக்கோங்க... ஒரு பத்து நிமிடம் தொடர்ச்சியா பேசணுமில்லே..”

”யப்பா. நல்லவேளை சொன்னே.. நான் இப்பவே போய் இந்த தகவல்களையெல்லாம் சேகரிக்கிறேன்... வர்ட்டா...”

”இந்த படத்துலே எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் புரியல...”

”ஏண்டா இந்த படத்தை பாக்க வந்தோம்னா?”

”அட அதில்லே... அடுப்பு (கேஸ்) பத்தவைக்க ஏன் லைட்டரை பயன்படுத்தறாங்க... ஒரு தடவை அதை முறைச்சி பாத்தா போதுமே... சும்மா பத்திக்குமில்லே..”

”சரி சரி தலைவா. என்னை அப்படி முறைச்சி பாக்காதீங்க... பயமா இருக்கு. ”

”என்கிட்டே சூப்பர் ஐடியா இருக்கு.”

”என்ன அது?”

”எலுமிச்சை சாம்பார், எலுமிச்சை ரசம், எலுமிச்சை கறி இப்படியெல்லாம் செய்து சாப்பிட்டா, ‘அது'க்கு நல்லது அப்படின்னு ஒரு செய்தியை படத்துலே சொல்லி, படத்தோட பேரு ‘எலுமிச்சை முடிச்சு' அப்படின்னு வெச்சிட்டா தமிழ்லே படம் பிச்சிக்கிட்டு ஓடும்.”

”என்ன ஆனாலும் சரி. இந்த படத்தை அப்படியே சுட்டு தமிழ்லே எடுத்தா நான் நடிக்க மாட்டேன்.”

”ஏம்பா? நடிக்கறதையே விட்டுடப் போறியா?”

”இல்லீங்ணா. நான் தெலுங்கு படங்களை மட்டும்தான் சுடுவேன்னு சத்தியமே செஞ்சிருக்கேன். அதனால் எலுமிச்சை மரமோ, மாங்கா மரமோ முதல்லே அதை தெலுங்குக்கு அனுப்பிட்டு அப்புறம் அதோட தமிழ் பதிப்புலேதான் நான் நடிப்பேன்.”

”விளங்கிடும். இந்த படத்தை நான் எடுத்தேன்னா அதோட டைட்டில் ‘எங்க ஊரு எலுமிச்சைக்காரன்'. மரங்களுக்கு நடுவே ஓடி ஆடி ஒரு காதல், ரெண்டு காமெடி, நாலு பாட்டு - அவ்ளோதான்.. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு.”

*****

இப்படியே இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூஸ் கடைக்காரர் - ”மொத்தம் இருநூறு ரூபா ஆச்சு. யாரு கொடுக்கப் போறீங்க” - அப்படின்னதும், டக்குன்னு எல்லோரும் தங்கள் கைப்பேசியை எடுத்து காதில் வைத்தவாறே - “அப்படியா.. ஓகே ஓகே.. ரெடியாயிருங்க. இப்பவே வர்றேன்..” என்றவாறே எஸ்கேப்பாக - ஜூஸ் கடைக்காரர் @#$$@#%%#%@.

****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP