எல்லாம் அவன் செயல்?
நாளைக்கு வினாயகர் சதுர்த்தி.
வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோயில் கடந்த ஒரு வாரமாகவே சிறப்பு பூஜைகள் மற்றும் பாட்டுக் கச்சேரி என பரபரப்பாக இருந்தது. கோயிலுக்குள்ளே நடப்பதை வெளியிலிருப்போரும் கேட்பதற்காக
தெரு முழுக்க ஒலிபெருக்கி வைத்து சத்தமாக ஒலி'படுத்தி'க் கொண்டிருந்தார்கள்.
கோயில் பக்கத்திலேயே வீடு இருக்கிறது எவ்வளவு பிரச்சினைன்னு ஏதாவது விழா வரும்போதுதான் தெரியும்னு மனைவிகிட்டே படிச்சி படிச்சி சொன்னேன். அவ கேக்கலை. இதோ விழா வந்துடுச்சு. பசங்களால்
படிக்க முடியல, தூங்க முடியல.. வீட்டில் சாதாரணமாக பேசும்போது கூட, பொதுக்கூட்டத்தில் 'மைக்' முன்னால் பேசும் தலைவர் போல் கத்திக்கத்திதான் பேச வேண்டியிருக்கு.
லட்சார்ச்சனைன்னு உண்டியல் எடுத்து வந்த கோயில் விழாக்குழுவினரிடம் ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கும்படி சொல்லியும் பார்த்துவிட்டேன். அவர்களோ அதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் - மனுசன்னா கடவுள் பக்தி வேணும் சார் - என்று ஒரு மினி பிரசங்கமே செய்துவிட்டு - மறக்காமல் ஆயிரம் ரூபாய் நன்கொடை (வற்புறுத்தி) வாங்கிச் சென்று விட்டார்கள்.
இப்படியெல்லாம் சொல்வதால், எனக்கு கடவுள் பக்தி இல்லையென்று நினைக்க வேண்டாம். கண்டிப்பாக உண்டு. தினமும் ஒரு ஐந்து நிமிடம் (மட்டும்) கடவுளுக்காக ஒதுக்குகிறேன். இன்னிக்கு ஆபீஸ் போகும்போதும் கோயில் வாசல்லே நின்னு வேண்டிக்கிட்டுதான் வந்தேன். "கடவுளே... இந்த மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பா. இப்படி ஊரையே கூட்டி சத்தம் போட்டு பக்தியை காட்டினாதான் நீ ஒத்துப்பியா? இவங்க எல்லாரையும் ஒட்டுமொத்தமா உன்னால் மாத்தமுடியலேன்னா, எனக்காவது ஒரு வழி காட்டு".
****
"யப்பா சுரேஷ். மேனேஜர் ரொம்ப நேரமா தேடிட்டிருந்தாரு. போய் பாத்துடு ஒரு தடவை" - அலுவலகத்துக்குள் நுழைந்தவுடனேயே பக்கத்து சீட் ரமேஷ் சொல்லிட்டான்.
எதுக்கு இந்த ஆள் காலங்கார்த்தாலே என்னை தேடுறாரு? கணக்கு வழக்குலே ஏதாவது தப்பு கண்டுபிடிச்சிட்டாரா?. சரி போய்த்தான் பாப்போம் - கதவைத் தட் தட் தட்டி உள்ளே போனேன்.
"வாங்க சுரேஷ். உக்காருங்க".
"பரவாயில்லை சார். சொல்லுங்க. ஏதாவது பிரச்சினையா"?
"உங்க வேலையில் ஏதாவது பிரச்சினை கண்டுபிடிக்க முடியுமா என்ன? அதெல்லாம் ஒண்ணுமில்லே".
"பின்னே எதுக்கு என்னை தேடினீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா சார்"?
"இந்த ஆபீஸ்லே லஞ்சம் வாங்காத ஒரே ஆள் நீங்கதான். அது உங்களுக்கே தெரியும்".
"ஆமா சார். அதுக்கு"?
"அதுதான் பிரச்சினையே. இதோ பாருங்க சுரேஷ். நானும் உங்களை நிறைய தடவை ஜாடை மாடையா சொல்லிட்டேன். நீங்கதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்".
"அதுக்காக என்னையும் லஞ்சம் வாங்கணும்னு சொல்றீங்களா சார்? அதெல்லாம் என்னால் முடியாது? நான் மான ரோஷம் உள்ளவன்".
"உங்களுக்கு நம்ம காண்ட்ராக்டர்களையெல்லாம் தெரியும். பெரிய அளவிலே தொடர்பு வைச்சிருக்கிறவங்க. உங்களை வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்பர் போடவும் முடியும் அவங்களாலே".
"அது எப்படி ட்ரான்ஸ்பர் செய்துடுவாங்கன்னு பாத்துடறேன் நானும்".
"இவ்ளோ சொல்லியும் நீங்க பிடிவாதம் பிடிக்கறது நல்லாயில்லே சுரேஷ். சரி ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. இந்தாங்க உங்க ட்ரான்ஸ்பர் லெட்டர். நீங்க உடனடியா அங்கே போய் ஜாயின் பண்ணனும்னு கம்பெனியோட உத்தரவு".
"சரி. நான் போய்க்கறேன் சார். எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லை. லஞ்சம் வாங்கறதவிட இது எவ்வளவோ பெட்டர். ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. என்னை இந்த மாதிரி மாத்தினது யாருன்னு தெரிஞ்சிக்கலாமா"?
"உங்களுக்கு தெரிஞ்சவர்தான். கணேஷ் காண்ட்ராக்டர்ஸ் முதலாளி கணேஷ்".
*****
9 comments:
எல்லாம் பிரம்மை..:-)))
:-) nice twist at the end.
எ.கொ.ச.இது?
ஆஹா.....நல்லாருக்குதே,,,,,,,
நல்ல பதிவு
வேண்டுதலை உடனே நிறைவேற்றி விட்டாரே...நல்ல கதை ....
எதிர் பார்க்கவே இல்லை...
நச்..
அடேங்கப்பா.. என்னா மாதிரி கருத்துள்ள கதை.!
அது எப்படிங்கண்ணா ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திக்கறோம்...
க்ரேட் மென் தின்க் அலைக் அப்படின்னு சொல்றது நம்மள பார்த்துத்தானோ...
என் கடைக்கு வந்து லேட்டஸ்ட் புத்தகத்த ஒரு மே...மேஞ்சுட்டு போங்க..
அப்பனே கணேசா....
Post a Comment