தமிழர்னா தமிழ்லேதான் பேசணுமா?
எங்க ஊரே மொத்தம் 10 கிமீ சுற்றளவுதான் இருக்கும். தமிழர்கள் (எனக்குத் தெரிந்து) சுமார் 15 குடும்பங்கள் இருக்கலாம். இது ஒரு தகவலுக்காக சொல்கிறேன்.
***
நாங்க இந்த ஊருக்கு வந்த புதுசு.
அந்த நண்பரை பார்த்தாலே தமிழர் என்று தெரிந்துவிடும். தெரிந்தது. போய் பேசினேன். அட, நீங்களும் தமிழ்தானா என்று பேசினார். தொலைபேசி எண்கள் / மின்னஞ்சல் முகவரிகள் பகிரப்பட்டன. பிறகு சிறிது நாட்கள் இருவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தோம்.
இரண்டாவது சந்திப்பும் நடந்தது. ஒரு பேரங்காடியில் இருந்தவரை சென்று, ஹலோ என்றேன். உடனே ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். நானோ - அட என்னங்க, என்னைத் தெரியலியா, நாம்தான் அன்னிக்கு பாத்துக்கிட்டோமே என்றேன் தமிழில். ஓ சாரி சாரி, மறந்துட்டேன் - என்றவாறு தமிழில் பேசினார். சரி போகுதுன்னு விட்டுட்டேன்.
உலகம் உருண்டைன்னா, எங்க ஊரும் உருண்டைதானே. மூன்றாவது முறையும் பார்த்துக் கொண்டோம். இப்போதும் ஆங்கிலத்தில் கதைத்தார். எனக்கு சரியான கோபம். நான் தமிழில் பேசப்பேச, அவர் ஆங்கிலத்தில் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அது கூட பரவாயில்லை, அவர் கடைசியாக சொன்னது - ஒரு நாளைக்கு 100 பேரை பார்க்கிறோமா, அதனால், யாரு தமிழ்? யாரு ஆங்கிலம்னு தெரியல என்றார்.
இப்போது ஒரு முறை பதிவின் முதல் பத்தியை படிக்கவும். இருப்பதே 10-15 பேர்தான். அதிலும் ரெண்டு தடவை பார்த்து தமிழ்லே பேசியிருக்கோம். அதெப்படி அதுக்குள்ளே என் மூஞ்சி மறக்கும்? இனிமே இவன்கூட பேசப்போறதேயில்லை என்று தங்ஸிடம் கோபத்துடன் கூறினேன்.
இதுக்கு போய் எதுக்கு இப்படி கோவிச்சிக்கிறீங்க என்ற தங்ஸுக்கு நான் சுற்றிய கொசுவர்த்தி இதோ.
தில்லியில் இருக்கும்போது நாங்க 30 பேர் [கன்னிப்பசங்க] ஒரே வீட்டில் இருந்தோம். தமிழ், தெலுங்கு, ஒரியா இப்படி பல மாநிலங்களைச் சேர்ந்தவங்க அங்கே இருந்தோம். ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி. தெலுங்கர்கள் சமாதானமடைந்தாலும், அந்த ஒரியாக்காரர் ’இந்தி’தான் பாக்கணும்னு அடம் பிடிப்பார். இதுக்காகவே, அவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்து, மெட்டிஒலி
பார்க்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டோம்.
அப்படி ஒரியாக்காரரையே தமிழ் பேச வைத்த காலம் போய், இந்த தமிழரை தமிழ் பேச வைக்க வேண்டியிருக்குதே என்று வருந்தினேன்.
கொசுவர்த்தி முடிந்தது.
பிறகு அந்த தமிழரை பார்ப்பதையே தவிர்த்தேன். நம்ம மூஞ்சி மறந்தவங்ககிட்டே நமக்கு என்ன பேச்சு?
அப்புறம் ஒரு நாள் - ஒரு படத்தில், கேப்டனும் சிம்ரனும் ஒரு ஆற்றுப்பாலத்தில் நேருக்கு நேர் சந்தித்ததைப் போல் நானும் அவரை சந்தித்தேன். மாட்டிக் கொண்டேன். ஆனால், இன்ப அதிர்ச்சி. இப்போது தமிழில் பேச ஆரம்பித்தார்.
சிரித்துக்கொண்டே நான் கேட்டது - ஏங்க, இன்னிக்கு 99 பேரைத்தான் பாத்தீங்களா? நான் தமிழ்னு எப்படி தெரிஞ்சுது?
கோபம் வரும்னு நினைத்தாலும், அப்படியில்லை. பகபகவென்று சிரித்த நண்பர் - சரி சரி. மறுபடி மன்னிச்சிடுங்க. இனிமே மறக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.
பிறகு தமிழ் தமிழ் தமிழ்தான்.
வேலை மாறி வேறொரு ஊர் போனபிறகு மின்னஞ்சல் அனுப்ப ஆரம்பித்தார். ஆங்கிலத்தில்.
இப்போது மறுபடி தகராறு செய்ய ஆரம்பித்திருக்கிறேன். தமிழில் தட்டச்சி அனுப்புங்க. இல்லேன்னா பதில் போடமாட்டேன்.
அனுப்பறேன்னு சொல்லியிருக்கார். அனுப்புவார்.
***
7 comments:
வண்ணக்க்ம்.... எல்லோரும் நலமா ?? திகாரில்?? :)
அருமை சகோ,
வாழ்த்துகள்
30 பேர் ஒரே வீட்டில் பாவம் அந்த வீட்டுக்காரர்.
உங்களை மாதிரி ஆட்களால் தான் தமிழ் வாழுது.. ..விடாதீங்க..
வாழ்த்துக்கள்
யுவர் போஸ்ட்... சோ குட் யு நோ....
/.நம்ம மூஞ்சி மறந்தவங்ககிட்டே நமக்கு என்ன பேச்சு? //
அதானே... நம்ம முகம் அந்தமாதிரிங்க...:)
இப்படி நெறைய தொல்லைகள் இருக்கு. அதுவும் அமெரிக்கன் மாதிரி நாக்கு கொழப்பி கொழப்பி பேச முயற்சி பண்ணுவாங்க பாருங்க. ஓங்கி செவுலையே விடலாம் போல இருக்கும்.
Post a Comment