வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன் மற்றும் ஒரு நல்ல மனிதரைப் பற்றி..
சமீபத்திய சென்னை விஜயத்தில் மூன்று நண்பர்களுடன் செய்த பணவிவகாரத்தில் மூன்று விதமான அனுபவங்கள் கிடைத்தன. பதிவு போட வேறு விஷயம் இல்லாததால் அந்த அனுபவங்கள் இங்கே.
*****
நண்பர் 1 :
அவருக்கு நான் சிறிது பணம் கொடுத்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. கடன் கொடுத்தார் நெஞ்சம்போல் கலங்கி - அதைப் பற்றி மறந்தும் போனேன். ஆனால் நண்பரோ, இந்த முறை சென்றிருந்தபோது - கொஞ்சம் லேட்டாயிடுச்சு. மன்னிச்சிக்கோ - என்றவாறு அந்த தொகையை திருப்பிக் கொடுக்க வந்திருந்தார். நானோ - " நீ மறக்காமே திருப்பிக் கொடுக்க நினைச்சதே பெரிய விஷயம். எனக்கு இந்த பணம் வேண்டாம். உன் பையன் பேர்லே வங்கியில் போட்டு வெச்சிக்கோ. பிறகு பயன்படும்" என்றேன்.
அவரோட நிலைமை கொஞ்சம் சுமார்தான் என்பதால் நான் அந்த பணத்தை வாங்க மறுக்க, அவர் வற்புறுத்த, மறுக்க, வற்புறுத்த.. இப்படியே ஒரு பத்து நிமிடம் போயிடுச்சு.
எவ்ளோ வருடம் ஆனாலும், வாங்கின பணத்தை திருப்பித் தரணும்ன்ற உன்னோட நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா அந்த பணம் எனக்கு வேண்டாம். நீயே வெச்சிக்கோன்னு அடிச்சி சொல்லி, அந்த தொகையை அவரோட பாக்கெட்டுலேயே போட்டுட்டு திரும்பி வந்துவிட்டேன்.
நீதி: (தலைப்பில் முதல் பகுதி : கொடுத்தா வாங்க மாட்டேன்!).
*****
நண்பர் 2 :
"உன்கிட்டே கொஞ்சம் தனியா பேசணும். ஒரு அஞ்சு நிமிஷம் போதும். ஓகேவா?" என்று ஆரம்பிக்கும்போதே பணம் கேக்கப்போறார்னு தெரிஞ்சி போச்சு. சரி என்னதான் ஆகுதுன்னு பாத்துடுவோம்னு போனேன். இதுக்காகவே வெளியூரிலிருந்து வந்திருந்த அவர் - "என் பையனோட பள்ளிக் கட்டணம் இப்ப ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. நீ ஏதாவது உதவி செய்ய முடியுமா"ன்னு கேட்டாரு.
நண்பர்- 1 மாதிரியே இவரும் சுமாரான நிலையில் இருப்பதால் நானும் - "சரி. எவ்ளோ வேணும்னு சொல்லு. பள்ளியின் பேரில் காசோலை கொடுத்துடறேன். அதை அப்படியே நீ அங்கே கொடுத்துக்கோ" - என்று சொல்ல - அதன் பிறகு நண்பர் விட்ட கதையைக் கேட்டு கோபம்தான் வந்தது.
அ). பள்ளியில் காசோலை வாங்க மாட்டாங்க.
ஆ). எனக்கு வேறு சிலருக்கும் காசு கொடுக்கணும்.
இ). நீ உதவி செய்யறேன்னு சொன்னதால்தான் நான் இவ்ளோ தூரம் வந்தேன்.
ஈ) நீ அமெரிக்காவுலே வேலை பாக்குறே. பணம் கொடுத்தா என்னவாம்?
கோயில் கட்ட காசு வேணும்னு கேட்டாலே நயா பைசா கொடுக்காதவன் நான் - ஏதோ பையன் படிப்புக்கு கேட்டதால் கொடுக்கறேன்னு சொன்னேன் - பள்ளியின் பேர்லே காசோலை வேணும்னா வாங்கிக்கோ - இல்லேன்னா ஒரு பைசா கிடையாதுன்னு அடிச்சி சொல்லிட்டேன்.
நண்பருக்கு சரியான கோபம். ஆனா, அதெல்லாம் பாத்தா வேலைக்காகுமா? அமெரிக்காவுலே காசு சும்மாவா வருது.. அதை சம்பாதிக்க எவ்ளோ கஷ்டப்படறோம்னு இங்கே வந்து பாத்தாதான் தெரியும்னெல்லாம் சொல்லணும்னு ஆசை. ஆனா ஒண்ணும் சொல்லலை.
நீதி: (தலைப்பில் இரண்டாம் பகுதி : கேட்டா கொடுக்க மாட்டேன்!).
*****
நண்பர் 3 :
என் வீட்டுக் கடன் விஷயமா ஒருவர் ஒரு வாரம் முழுவதும் அலையா அலைஞ்சார். நிறைய தடவை தொலைபேசி, வேகாத வெயிலில் நுங்கம்பாக்கம், அடையாறு, நங்கநல்லூர், தாம்பரம் அப்படின்னு தொடர்ச்சியா அலைஞ்சி - நான் ஊருக்குத் திரும்பி போவதற்குள் முடிக்க வேண்டுமே என்ற பரபரப்போடு அந்த வேலையை வெற்றிகரமாக செய்தும் கொடுத்தார்.
அவரோட பொழப்பே அதுதான்னு தெரிஞ்சாலும், எனக்காக கஷ்டப்பட்டவருக்கு ஏதாவது செய்யலாம்னு நினைச்சி ஒரு சிறிய தொகைக்கு ஒரு பரிசுக் காசோலை வாங்கி கொடுக்க முற்பட்டேன்.
நண்பருக்கு சரியான கோபம் வந்துடுச்சு. " நான் செஞ்சது என் வேலைதான். அதுக்கு எனக்கு சம்பளம் கொடுக்கறாங்க. மேற்கொண்டு நான் யாரிடமும் பணம் லஞ்சமாக வாங்க மாட்டேன். அது மிகப்பெரிய தப்பு. இப்படி வாங்குற காசு எனக்கு ஒட்டாது" - அப்படி இப்படின்னு பொரிஞ்சி தள்ளிட்டாரு.
ஒரு அஞ்சு நிமிடம் சொல்லலாம் கடைசியில் வாங்கிடுவாருன்னு நானும் போராடி பாக்குறேன்.. ம்ஹூம். மனுசன் அசரவேயில்லை. இந்த காலத்திலும் இப்படி ஒரு ஆளான்னு என்னால் நம்பவே முடியவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவருக்கு வெறும் நன்றியை தெரிவித்து அனுப்பி வைத்தேன். வாழ்க நண்பர் - 3.
நீதி : (தலைப்பில் மூன்றாம் பகுதி : ஒரு நல்ல மனிதரைப் பற்றி!)
*****
13 comments:
நல்ல விஷயங்களை பற்றி எழுதறதே ஒரு நல்ல விஷயம் தானே
மூன்று விதமான மனித குணங்களைப் பற்றி ஒரே இடுகையில் போட்டுட்டீங்க...
ம்..
பறவைகள் பலவிதம் மாதிரி... மனிதர்கள் பலவிதம்.
நல்ல இடுக்கை.
அனுபவமே சிறந்த ஆசான்.
தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மூன்றாவது மனிதரின் எண்ணை கொடுங்க...வாய்மொழி மூலமாவது அவரை பலருக்கும் அறிமுகம் செய்துவைக்கலாம்.நல்லவர்களை ஊக்கப்படுத்த வேறு வழி தெரியலை.
//ஆனா அந்த பணம் எனக்கு வேண்டாம். நீயே வெச்சிக்கோன்னு அடிச்சி சொல்லி, அந்த தொகையை அவரோட பாக்கெட்டுலேயே போட்டுட்டு திரும்பி வந்துவிட்டேன்.//
மிஸ்டர் ச்சின்னப்பையன், கொஞ்சம் கைமாத்து தர்றீங்களா ?
//அமெரிக்காவுலே காசு சும்மாவா வருது.. அதை சம்பாதிக்க எவ்ளோ கஷ்டப்படறோம்னு இங்கே வந்து பாத்தாதான் தெரியும்னெல்லாம் சொல்லணும்னு ஆசை.//
ஹா ஹா ஹா... எங்கள நம்ப சொல்றீங்களா ?
//ஒரு அஞ்சு நிமிடம் சொல்லலாம் கடைசியில் வாங்கிடுவாருன்னு நானும் போராடி பாக்குறேன்.. ம்ஹூம். மனுசன் அசரவேயில்லை.//
அதானே, நல்லவங்களா கெடுக்காம உட்டுருவோமா ?
1. முதலாம் நண்பருக்கு எனது வாழ்த்துகள்.
//அந்த தொகையை அவரோட பாக்கெட்டுலேயே போட்டுட்டு திரும்பி வந்துவிட்டேன்.//
நீங்க ச்சின்னப்பையன் அல்ல, மனதளவில் பெரியவர்.
2. //என் வீட்டுக் கடன் விஷயமா//
அமெரிக்காவில் இருந்தாலும், வீடு வாங்குவதற்கு கடன் வாங்கும் நிலையில் தான் இருக்கின்றோம் என்பதை இரண்டாவது நண்பரிடம் தெரிய படுத்திருக்கலாம்.
3. மூன்றாம் மாமனிதருக்கு எனது பாராட்டுகள். அவரை தயவு கூர்ந்து அறிமுகபடுத்தி வையுங்கள்.
அண்ணே,
எப்படி இருக்கீங்க ,, ரொம்ப நாளா ஆளையே காணோம்.....உங்க கடை ரொம்ப காத்தாடுது......
சென்னை பயணம் நல்லா இருந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்...
//நீதி: (தலைப்பில் முதல் பகுதி : கொடுத்தா வாங்க மாட்டேன்!). //
எப்படியோ இதன் மூலம் நீங்களும் நல்லவர்ன்னு நிருபிச்சுட்டீங்க......
//அமெரிக்காவுலே காசு சும்மாவா வருது.. அதை சம்பாதிக்க எவ்ளோ கஷ்டப்படறோம்னு இங்கே வந்து பாத்தாதான் தெரியும்னெல்லாம் சொல்லணும்னு ஆசை. ஆனா ஒண்ணும் சொல்லலை.//
இந்த மாதிரி ஊருல ரொம்ப பேரு திரியிறாங்க .... நாலு கேள்வி நாக்க புடுங்கிற மாதிரி கேக்கணும்ன்னு நினைக்கிறேன்...
வெளிநாட்டுல என்ன சும்மாவா சம்பளம் கொடுக்குறாங்க......
//இந்த காலத்திலும் இப்படி ஒரு ஆளான்னு என்னால் நம்பவே முடியவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவருக்கு வெறும் நன்றியை தெரிவித்து அனுப்பி வைத்தேன். வாழ்க நண்பர் - 3.//
இந்த கலிகாலத்தில் இப்படி ஒரு நபரா.....முடிந்தால் அவருடைய நம்பர் கொடுங்க.....என்னோட நண்பர்களிடம் அவரை பற்றி சொல்லுகிறேன்.....
நல்ல இடுகை.
ஃபோன் செய்தா ஆட்டோவில் போறேன் அப்புறமா பேசுகிறேன் என்று சொல்லி விட்டு,எப்புறமும் பேசாமல் அமெரிக்காக்கு ஜூட்டா..நான் என்ன பணம் கேட்கவா ஃபோன் செய்தேன்..உங்கள் பரம் ரசிகை என்று தானே ஃபோன் செய்தேன்..
நானும் ச்சினப்பையன் கிட்ட கொஞ்சம் கடன் வாங்கலாமா?
நல்லா இருந்துச்சுங்க .பணம் வேண்டாங்க. இடுக்கை ஐடியா நல்லா பண்ணியிருக்கீங்க. மேச்செஜும் நல்லது.
வாங்க மருத நாயகம், இராகவன் அண்ணே, இராமசாமி கண்ணன், துபாய் ராஜா -> நன்றி.
வாங்க வடுவூர் குமார் -> நண்பர் - 3 பேரு அமிர்த கிருஷ்ணன். ஐசிஐசிஐ வங்கி மூலம் வீட்டுக்கடன் வாங்கித் தரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
வாங்க ஒரு காசு -> அண்ணே.. வாங்கண்ணே...
வாங்க RR, நல்லவன் கருப்பு -> அந்த நண்பர் பேரை மேலே சொல்லியிருக்கேன் பாருங்க.
வாங்க தாரணி பிரியா -> நன்றி..
வாங்க அமுதா கிருஷ்ணா -> உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். இங்கே மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்... மன்னிச்சிடுங்க...
வாங்க madscribber -> நன்றி.
"நல்ல நண்பர்"கள் அய்யா உங்களுக்கு!!
Post a Comment