பிறந்த நாள் வாழ்த்துகள்!!
நண்பர்கள் / சொந்தக்காரர்கள் அப்படின்னு பல பேருக்கு தினம் தினம் பிறந்த நாள் / திருமண நாள்னு பல சிறப்பு நாட்கள் வருகின்றன. அதில் என்ன பிரச்னைன்றீங்களா? அதில் ஒண்ணும் பிரச்னையில்லை. அதுக்கு அந்தந்த வாட்சப் க்ரூப்பில் இருக்கும் பலர் வாழ்த்துகள் / வாழ்த்துக்கள்னு (அவங்கவங்க சார்புக்கேற்ப!!) வாழ்த்துவாங்க. சரி. இதில் என்ன பிரச்னைன்றீங்களா? ஹிஹி. இதிலும் ஒண்ணும் பிரச்னையில்லை.
அப்போ எதுக்குடா இந்த பதிவுன்றீங்களா? விஷயத்துக்கு வர்றேன். இந்த வாழ்த்துக்கு நன்றி சொல்றாங்க பாருங்க. அதுதான் விஷயம்.
இப்போ கல்யாண வீடுகளில் சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருப்போம். (சரி. மடங்களில் / கோயில்களில்!!). ஒரு இனிப்போ, பாயசமோ பரிமாறிக் கொண்டிருக்கும்போது, நமக்கு முன் இலைக்கு வரும்போது அது முடிஞ்சிடும். எடுத்துட்டு வர்றேங்கன்னு போவார். எடுத்துட்டும் வருவார். ஆனா, நம் இலையை விட்டுட்டு அடுத்த இலையிலிருந்து துவங்கிப் போயிடுவார். கேட்டால், ஒருவருக்கு ஒண்ணுதாங்க / ஒரு கரண்டிதாங்கன்னு சொன்னாலும் சொல்லிடுவாரோன்னு பக்கத்து இலையையே முறைச்சிப் பார்த்திருட்டிருப்போம்.
அதுபோலவே இந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்வதும். முதலில் நான் இதை கண்டுகொள்ளவில்லை. நான் வாழ்த்து சொல்றதோட என் கடமை முடிந்ததுன்னு விட்டுட்டு வந்துடுவேன். நன்றி சொல்றாங்களோ இல்லையோ பார்ப்பதில்லை.
போன ஆண்டு ஒரு புதிய குழுவில் சேர்ந்திருந்தேன். சரி. பேரும் சொல்லிடறேன். துவக்கப்பள்ளி 1-5 வகுப்பில் கூடப் படித்தவர்கள். ஆண்/பெண் என வகுப்பில் அனைவரையும் ஒருவர் கண்டுபிடித்து சேர்த்திருந்தார். நான் சேர்ந்தபிறகு, இன்னும் ஓரிருவரே பாக்கின்னு சொல்லிட்டிருந்தாங்க.
சேர்ந்த புதிதில் அனைத்து பிநா, திநாக்கும் பறந்து பறந்து வாழ்த்து சொல்லிட்டிருந்தேன். ஒரு முறை ஒருவர் யாரோ ஒரு பொண்ணுக்கு நன்றி சொல்ல மறந்துட்டாரு போல. டக்குன்னு ஒரு கமெண்ட் வந்துச்சு. ’ஏண்டா, புதுசா வந்தவங்க வாழ்த்துக்கு நன்றி சொல்லுவே, எங்களுக்கு சொல்ல மாட்டியா?’. வந்த வேகத்தில் கமெண்ட் டெலீட்டும் ஆயிட்டுச்சு. ஆனாலும் நான் படிச்சிட்டேன்.
அன்றிலிருந்து அந்த க்ரூப்பும் ம்யூட்டில் போயிடுச்சு. யாருடைய பிநாதிநா’க்கும் வாழ்த்து சொல்வதில்லை. ஆனா வேறு பல குடும்ப க்ரூப்களில் சொல்ல வேண்டிய கட்டாயம். அந்த பொண்ணு மாதிரி, நமக்கு நன்றி சொல்றாங்களான்னு பார்ப்போம்னு சும்மா பார்க்கத் துவங்கினேன். (தேவையில்லாத ஆணின்னு பிறகே புரிந்தது!!)
ட்விட்டரிலாவது மக்கள் DMல் நன்றி / ட்வீட்டை Like போல செய்திடுவார்கள். ஆனா நமக்குன்னு வாய்ச்சிருக்கிறாப்போல வாட்சப் க்ரூப்களில்:
* நாம வாழ்த்து சொல்வதற்கு முன் தனித்தனியாக அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருப்பவர், நமக்குப் பின் ‘அனைவருக்கும் மிக்க நன்றி’ன்னு முடிச்சிடுவார். நம்ம பேர் தனியா வராது. அவ்வ்..
* சுமார் 20-25 பேருக்கு தனித்தனியா நன்றி சொல்பவர், சரியாக நம்ம பேரை மட்டும் விட்டுடுவார். இது மட்டும் 3-4 தடவை நடந்திருக்கு. சரி, நாம நம் கடமையை செய்வோம் பலன் வேண்டாம்னு விட்டாச்சு. ம்ம்..
* நமக்கு முன் அனைவருக்கும் நன்றி சொல்பவர், நாம் சொன்னபின், காணாமலேயே போய்விடுவார். ஒன்லி அப்ளை நோ ரிப்ளை. சரி போகுது.
* ஓரிருமுறை நமக்கு மட்டும் நன்றின்னு சொல்லாமல், Sure / OK & இன்னபிற பதில்லாம் போடுவாங்க. அடேய்ஸ்.. எனக்கு மட்டும் ஏண்டா இப்படி...
இது மாதிரி பல வகைகள். ஓரிரு முறை நன்றிப்பான்னு தனியா குறிப்பிட்டும் பதில் போட்டிருக்காங்க. அதையும் சொல்லிடறேன்.
சரி இவ்ளோ சொல்றியே, உன் பிநாதிநா வாழ்த்துக்கு நீ நன்றி சொல்றியான்னு கேட்டா, ஹிஹி. என் பிநாதிநாவை நான் எங்கும் ரிஜிஸ்டர் செய்யவில்லை. FBயில் / ட்விட்டரில் வராது. ட்விட்டரில் ஒரே ஒருவர் மட்டும் நினைவில் வைத்து வாழ்த்துவார். 2 நாள் முன்னாடி அவருக்கும் ஒரு warning கொடுத்து, TLல் வாழ்த்த வேண்டாம்னு சொல்லிடுவேன். பிரச்னை சால்வ்ட்.
வெகு நெருங்கிய சொந்தங்கள் கூப்பிட்டு சொல்லிடுவாங்க. பிற சொந்தக்கார வாட்சப்பில் பலருக்கு என் பிநாதிநா நினைவிருந்தாலும் சரியா அந்தந்த நாட்களில் மறந்துடுவாங்க. பிறகு வேறொரு நாளில் நேரில் பார்த்தால் வாழ்த்திடுவாங்க.
அவ்ளோதாங்க பதிவு.
படித்த அனைவருக்கும் *தனித்தனியான* நன்றி.
வணக்கம்.
***
1 comments:
அருமையா சொல்லியிருக்கீங்க. வாழ்த்து சொல்றவங்களுக்கு நன்றி சொல்வது ஒரு மரியாதை / நாகரீகம். அதை எதிர்பார்க்காததும் நாகரீகம்தானே . நாம இப்படிக்கா போவோம்.வாழ்த்துக்கள் :)
Post a Comment