Monday, October 28, 2019

கைப்பேசி வழிப்பறியா?


சமீபத்தில் ஒரு நாள், நங்கநல்லூரில், மணிரத்னம் / பிசிஸ்ரீராம் படக்காட்சி போல இருந்த, வெளிச்சம் குறைந்த ஒரு சாலையில், ரண்டக்க ரண்டக்க என்று மனதில் பாடியவாறு நடந்து கொண்டிருந்தேன்.

ஆள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. ஒரு மிக முக்கிய தொலைபேசி அழைப்பை (மோடி இல்லை. அதற்கு முந்தைய நாள்தான் அவருடன் பேசியிருந்தேன்) எதிர்பார்த்திருந்ததால், கைப்பேசியை கையிலேயே வைத்து, அடிக்கடி எடுத்து பார்த்தவாறு போனபோது, எதிரில் ஒரு ஸ்கூட்டரில் ஒரு பெண் வண்டி ஓட்ட, பின்னாடி ஒரு பையன் அமர்ந்து வந்தார். ஜானவாசக் கார் மாதிரி இது ஜானவாச ஸ்கூட்டர் போலன்னு நினைத்தேன். மிகவும் மெதுவாக ஓட்டி வந்த அந்தப் பெண், வெயிலும் இல்லையே, ஏன் இப்படி முழுக்க மூடியவாறு வண்டியை ஓட்டிப் போறாங்கன்னு நினைத்தவாறு - ரண்டக்க...

நம்மைக் கடந்து போகும்போது, அந்தப் பெண் ‘மொபைல்’னு கத்தியது கேட்டது. சரி, அவங்க மொபைல் விழுந்துடுச்சு போல; இல்லையே எதுவும் விழுந்த மாதிரி தெரியலையேன்னு நினைத்து, நான் ’பாட்டு’க்கு போயிட்டிருக்கேன். நமக்குப் பின்னால், ’க்றீச்’சென்று தரையில் கால்களை தேய்க்கும் சத்தமும் (அந்தப் பெண் வண்டியை நிறுத்தறாங்க!!), அந்தப் பையன் இறங்கி என் பின்னால் வரும் சத்தமும், எனக்கு முன்னால் அவனுடைய நிழலும் (முறையே) கேட்டது / தெரிந்தது.

இந்த இடத்தில் 5 நொடிகள் freeze பண்றோம். எவ்வளவு செய்திகளைப் படிக்கிறோம். கைப்பேசி வழிப்பறி நம் நண்பர்களுக்கே ஆகியிருக்கு என்னும் தகவல்களெல்லாம் நினைவுக்கு வர, *Freeze முடிந்தது* கையில் இருந்த கைப்பேசியை உடனடியாக பேண்ட் பாக்கெட்டில் போட்டுட்டேன்.

என்னைக் கடந்து, எனக்கு முன் ஓடிய அந்தப் பையனை, ஸ்கூட்டரில் வந்து அந்தப் பெண் வண்டியில் ஏற்றிப் போயிட்டார்.

கேள்விகள்:
* மொபைல்னு ஏன் கத்தினாங்க?
* கீழே விழுந்திருந்தா, அதைத் தேடியது போலவும் இல்லையே?
* வீட்டிலேயே மறந்துட்டு வந்ததற்கான எச்சரிக்கைன்னா, அந்தப் பையன் இறங்கி ஓடி வந்தது ஏன்?
* என் கைப்பேசியைப் பார்த்துதான் மொபைல்னு கத்தினாங்களா?
* அதைப் பறிக்கத்தான் அந்தப் பையன் ஓடிவந்தானா?

இப்படி பல சந்தேகங்கள்.

கைப்பேசி போயிருந்தாலாவது, வீட்டில் சொல்லி, ஒரு புது கைப்பேசிக்கு அனுமதி வாங்கி, வாங்கியிருப்பேன். அதுவும் இல்லை. இந்த காலத்து பசங்க, எதைத்தான் ஒழுங்கா செய்றாங்க?

ம்ஹும்.

***


0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP