Saturday, April 25, 2020

என்னிடம் ஏன் குறைவான சட்டைகளே இருக்கின்றன?


சிறிய வயதில்.. என்ன சிறிய வயதில்.. என்னுடைய 22 வயது வரையே என்னிடம் இருந்தது மொத்தம் 3-4 சட்டை பேண்ட்கள்தான். அதுவும் பம்மல் கமல் சொல்கிற மாதிரி சாயம் போனதாகதான் இருக்கும். சட்டை அளவு சிறியதாக இருந்தபோது தீவளிக்கு தீவளி அப்பா சட்டை வாங்கிக் கொடுத்த நினைவு. அளவு பெரிதானபிறகு அதுவும் கிடையாது. 

ஒரு முறை உறவினர் ஒருவர், அவருடைய உறவினர் யாருடைய திருமணத்திற்கோ போகவேண்டி, என்னை துணைக்கு வரச்சொல்லியிருந்தார். அது ஒரு பெரிய IAS அதிகாரி வீட்டுத் திருமணம். அதற்காக நல்ல சட்டை, பேண்டா போட்டுட்டு வான்னு சொல்லிட்டார். நல்ல சட்டை பேண்ட்க்கு நான் எங்கே போறது?. பக்கத்து வீட்டுப் பையனிடம் சட்டை மட்டும் கைமாத்து வாங்கிக்கிட்டு போய் வந்தாச்சு. பேச்சுவாக்கில் அவரிடம் இது இரவல் சட்டைன்னு சொல்ல, நான் உனக்கு வாங்கித் தர்றேன்னு சொன்னவர், மறந்துவிட்டு, இன்று வரை அதை நினைவுபடுத்தியும் அவர் வாங்கித் தரவேயில்லை. 

பிறகு, வேலைக்கு போகத் துவங்கும்போதே உருப்படியான சட்டை வாங்கியதாக நினைவு. ஆனால், அப்போதும் ஒரு சமயத்தில் 5-6 சட்டைகள், 2-3 டி-ஷர்ட்களுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. 

நினைவு தெரிந்தும் (அப்படின்னா என்ன?) சட்டை வாங்க வசதியில்லாமல் இருந்ததாலோ என்னமோ, எப்பவும் நமக்குன்னு சட்டை வாங்குவதில் / வைத்துக் கொள்வதில் ஒரு ஈடுபாடு / ஆர்வம் (இரண்டும் ஒண்ணுதானோ?) இருந்ததில்லை. வாரத்துக்கு ஐந்து நாளில் ரிப்பீட் செய்யாமல் இருந்தால் போதும். அவ்வளவே வைத்துக் கொண்டிருந்தேன். 

நாம் வாங்கும் சட்டைகள், வேறு ஏதாவது திருமணத்திற்கு நமக்கு பரிசாக வரும் சட்டைகள், மராத்தன்களில் கொடுக்கும் பனியன்கள் என எதையும் நாம் வைத்துக் கொள்வதில்லை. மனதில் என்னுடைய சிறுவயது கொசுவர்த்தி வர, அந்த நிலையில் இருந்த அண்ணன் பையன், அக்கா பையன் இவங்களுக்குக் கொடுத்துடுவேன். (இப்போ அந்த பசங்களும் நல்ல நிலைக்கு வந்து, கொரோனா பட்டியலில் டாப்-3யில் இருக்கும் நாடுகளில் டாப்பா, நலமா இருக்காங்க). அதைத்தவிர மாமனார் வரும்போதெல்லாம் பாசமாக ஒரு ட்-ஷர்ட் வாங்கித் தருவார். அதை அப்படியே பத்திரமா வைத்திருந்து, தம்பி வரும்போது அப்படியே பார்சல். கொஞ்ச நாள் கழித்து, எங்க அப்பா வாங்கித் தந்த சட்டை எங்கேன்னு DW கேட்க, எங்கேயாச்சும் மேலே பெட்டியில் இருக்கும், அப்புறம் தேடிக்கலாம்னு சொல்லி சமாளிச்சிடுவேன். 

ஒரு காலத்தில், அமெரிக்காவில் இருந்தபோதும் அதே நிலைதான். ஒரு கிழமைக்கு ஒரு சட்டை. கருப்பு திங்கள், வெள்ளை செவ்வாய்ன்னு சன் டிவி அறிவிப்புகள் போல அந்தந்த கிழமைக்கு அந்தந்த நிற சட்டைகள். ஊருக்குப் போன புதிதில் அனைவரையும் போல, ஊருக்கு புகைப்படங்களை அனுப்பணும்ற கட்டாயத்திற்காக பல வாரயிறுதிப் பயணங்களை மேற்கொண்டோம். அப்போது நம்மிடம் இருந்த 1-2 டீஷர்ட்களையே போட்டுட்டுப் போக, இங்கிருந்த DWவின் பாட்டி (85+ வயதிலும் அவங்க கண் அவ்ளோ ஷார்ப்) - என்ன மாப்பிள்ளை எப்போவும் ஒரே சட்டையே போட்டிட்டிருக்காரு? அவர்கிட்டே ஒரேயொரு சட்டைதான் இருக்கான்னு கேட்டுவிட, ஒரே களேபரம்தான். இன்னிக்கே நிறைய சட்டை வாங்கறோம்னு DW மேலுக்கும் கீழுக்கும் (அறைக்குள்ளேயேதான்) குதிக்க, சரின்னு போய் நிறைய (2தான்) வாங்கி வந்தோம். வந்ததும், பழைய சட்டைகளை ஃப்ரிட்ஜ், அவன் இவற்றைத் துடைக்க வைத்துவிட, மறுபடி டி-ஷர்களின் எண்ணிக்கை அதே 2-3 எட்டியது!!.

இருக்கும் 5-6 சட்டைகளை மேலும் எப்படி குறைப்பதுன்னு யோசித்தபோது, செமையான ஐடியா சிக்கியது. ஒரே நிற  சட்டை மட்டும் வைத்துக் கொண்டால் எண்ணிக்கையைக் குறைக்கலாம். கருப்பு-வெள்ளை மட்டும் போதும் இதில் 2 அதில் 2ன்னு முடிவெடுத்தா, வீட்டில் தடை. கருப்பு வேண்டாம். வேற வேறன்னு சொல்ல, சரி அப்துல் கலாம் மாதிரி தலைமுடிதான் மாத்திக்க முடியல. அவர்போல நீல சட்டை?ன்னு கேட்க, அப்ரூவ்ட். ஆக, இப்போ இருக்கிறது (50 shades of blue மாதிரி) 5-6 நீல சட்டைகள் மட்டுமே. 

சட்டை ரொம்ப பெரிசாயிடுச்சு. ஐ மீன் பதிவு ரொம்ப பெரிசாயிடுச்சோ? இத்தோட முடிச்சிக்கலாம். நன்றி.

***




0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP