Thursday, July 16, 2020

ராமாயணம் - கன்னடப் பாடல்கள்



சென்ற ஆண்டு அக்டோபர். சென்னையிலிருந்து ஒருவர் ஒரு 150 பக்க PDFஐ அனுப்பியிருந்தார். கையெழுத்துப் பிரதி. மிகவும் பழைய புத்தகம்னு புரியுது. கன்னட எழுத்துக்கள். எனக்கு கன்னடம் தெரியாது, ஆகவே, இதை படித்து தமிழில் தட்டச்சி கொடுக்க முடியுமான்னு கேட்டார். முதல் பக்கத்தை மேய்ந்தபோது, பல சொற்கள் புரிந்தும், சில புரியாமலும் இருந்தன. சரி நான் பார்த்து சொல்கிறேன்னு சொல்லி விட்டுட்டேன். 

நமக்கு ஏற்கனவே இருந்த சிலபல ப்ராஜெக்ட்ஸ்களை செய்து கொண்டேயிருக்க, அவரும் நடுநடுவே நிலவரத்தை கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் இதோ அதோன்னு சொல்லிட்டே. இந்த ஆண்டு மார்ச் அங்கிருந்து கூப்பிட்டார். அந்த டாகுமெண்ட் எனக்கு கொஞ்சம் தமிழில் கொடுங்க. எனக்கு 70 வயசு. நான் கண் மூடுவதற்குள் அதை தமிழில் புத்தகமாக பிரசுரிக்க வேண்டும். இதுவரை 10-15 கன்னடர்களை நான் கேட்டாச்சு. யாருக்கும் நேரம் இல்லை / முடியவில்லை / தெரியவில்லை / புரியவில்லை / ஆர்வம் இல்லை. நீங்க இதை முடித்துக் கொடுத்தால், இதை என் குடும்பம் என்றைக்கும் மறக்கவே மறக்காது.

என்னடா இது அவ்வளவு முக்கியமா? சரி, இதன் வரலாறு என்னன்னு கேட்டால்: 

1820-1890 வரை வாழ்ந்த இவருடைய தாத்தாவுடைய தாத்தா எழுதிய புத்தகம் (பாடல்) இது. பெயர் நரஹரி தாசர். அங்கிதம் (முத்திரை) நாமகிரீஷ. மைசூர் சமஸ்தானத்தில் புலவராக (கவிஞராக) இருந்திருக்கிறார். பிறகு ஏதோ ஒரு சமயத்தில் அவர்கள் தமிழகம் வந்துவிட, தமிழர்களாகிட்டாங்க. இப்போ இவருக்கு கன்னட கொத்தில்லா. 

சரி, இது என்ன புத்தகம்னு தெரியுமான்னா, ராமாயணம் - தீர்க்க கிருதி. (நீண்ட பாடல்). இதை தயவு செய்து... மறுபடி பழைய ராமாயணம்!!.

இப்போ இதில் ஆர்வம் வருது. ஆனா, நமக்கு அச்சிட்ட (printed) புத்தகங்கள் மட்டுமே வேகமாக படிக்க முடியும். கையெழுத்து படிக்க ரொம்ப தாமதம் / நேர விரயம் ஆகும். அதுவும் இதில் ஏகப்பட்ட அடித்தல், திருத்தல்.நம் கன்னட சந்தில் சில பேருடன் முன்னர் பேசியிருந்தாலும், மிகவும் மொக்கையான (சிறியதான) ஓரிரு உதவிகளை கேட்டு, அவர்கள் அதையே செய்யாமல் விட்டதால், அவர்களைக் கேட்காமலேயே செய்யணும்னு முடிவு. இதில் இருக்கும் சிக்கல், படிப்பவர் நேடிவ் கன்னடராகவும், சம்ஸ்கிருதம் & ராமாயணம் தெரிந்தவராகவும் இருக்கணும். அப்படி ஒருவரை தேடணும்னு பார்த்தேன். 

நம் அலுவலக நண்பர் ஒருவரைக் கேட்டு, அவரும் அவரது மனைவியும் சேர்ந்து ஒரு 40 பக்கம் வரை கடகடன்னு முடித்தனர். ஓரளவுக்கு சரியாகவே இருந்தாலும், சரி முடித்து விடலாம்னு நினைச்சா, அதன் பிறகு நீண்ட ப்ரேக் விட்டுட்டாங்க. இப்போ வேற யாரையாவது பிடிக்கணும். 

எதிர் வீட்டு சார் ஒருவர் கொரோனாக்கு முன்பாக சனி & ஞாயிறு விடுமுறையாக இருந்தாலும் தவறாமல் ஆபீசுக்குப் போய்விடுவார். ஒரே ஒரு நாள்கூட வீட்டில் இருந்தால் என்ன செய்வதென்றே தெரியல. செம போர் அடிக்குது. இப்படி சொன்னவரை கொரோனா வீட்டிலேயே பின் போட்டு அழுத்த, அவரிடம் போய் - சார் இப்படி இப்படி விஷயம். உங்க உதவி தேவைன்னு கேட்டு, வழக்கம்போல டிஸ்க்ளெய்மரும் சொன்னேன். முடியலேன்னா பரவாயில்லை. ஒன்றும் பிரச்னையில்லை. நீங்கதான் செய்யணும்னு கட்டாயமில்லை. சொல்லிடுங்க. நான் வேற ஆள் பார்த்துக்கறேன். 

இல்லேப்பா, ஒரே ஒரு வாரயிறுதி போதும். முடிச்சி கொடுத்துடறேன். ஒன்றும் வேலையெல்லாம் இல்லை. வழக்கம்போல சும்மாதான் இருப்பேன். -- அவ்வளவுதான், அடுத்து மூன்று வாரங்களுக்கு அவர் நம் பக்கம் திரும்பவேயில்லை. நேராக பார்த்தாலும், டேக் டைவர்ஷன் போட்டு திரும்பிடுவார். சரி இவரை நம்பி பிரயோஜனமில்லை. 

நம் பழைய வீட்டில் ஒரு அக்கா. பேராசிரியை. சரி அவங்களிடம் கேட்கலாம்னு கேட்டாச்சு. கண்டிப்பா செய்து தர்றேன்னு சொல்லி, ஒரே வாரத்தில் சுமார் 30-40 பக்கங்கள் வரை படித்தும் ரெகார்ட் செய்து கொடுத்தார். அவ்ளோதான் முடிஞ்சுது. வேற வேலை இருக்குன்னுட்டாங்க. பரவாயில்லை. மிக்க நன்றின்னு அந்த ரெகார்டிங்கை வாங்கினேன். 

அவங்க ரெகார்டிங்கில் ஒரே ஒரு பிரச்னைதான். வேகம் வேகம் அப்படியொரு வேகம். நமக்குத் தேவையே, சிலபல கடினமான சொற்கள், அடித்து திருத்திய இடங்களில் இருக்கும் வாக்கியங்கள் இப்படி. ஆனா இந்த அக்காவோ, 

* சிக்கலான சொற்கள் வந்தால் அதை படிக்காமல் விடுவது
* அடித்து திருத்தப்பட்ட சொற்கள் வரும் இடத்தில் மூச்சு வாங்கும் சாக்கில், அவற்றை முழுங்கிவிடுவது
* வாக்கியத்தின் கடைசி சொற்களை முழுங்கிவிடுவது.
* நடுநடுவே சில வரிகளையே விட்டுவிடுவது

என ரெகார்டிங்கைக் கொடுத்தார். 

ஆக, நம் தேவைகள் முழுமையா பூர்த்தி ஆகவில்லை. சரி மேடம், இது போதும் மிக்க நன்றின்னு சொல்லியாச்சு.

அடுத்து இன்னொருவர். அதே டிஸ்க்ளெய்மர். வாரயிறுதி மாலையில் நான் ஒரு அரை மணி ப்ரீயா இருப்பேன். அப்போ செய்யறேன். (வாரம் முழுக்க அப்படி என்னதான் செய்றார்னா, அது மிகப்பெரிய ரகசியம்!! சும்மாதான் இருப்பார்). அவரும் ஒரே ஒரு வாரம் ஒரு ஐந்து பக்கங்கள் படித்துக் கொடுத்தார். அஷ்டே.

இப்படியாக சுமார் 7-8 பேரை அணுகி, அதில் 3-4 பேர் கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொடுக்க, அவற்றைத் தொகுத்து, அலசி, அடுக்கி, ஆராய்ந்து, சிக்கெடுத்து, தட்டச்சி, தமிழில் கன்னடப் பாடல்களைப் படிக்கணும்னா போடவேண்டிய 1,2,3,4 ஆகியவற்றை போட்டு, சரிப்படுத்திக் கொடுத்து, முடிக்க வேண்டிய வேலை இந்த வாரயிறுதியுடன் முடிஞ்சிடும்(னு நம்பறேன்).

இது வரை வந்ததை படித்துப் பார்த்தால், ராமாயணத்தை - குட்டி குட்டி பாடல்களாக -  சுமார் 100 பாடல்கள் - வெவ்வேறு ராகங்களில், நல்ல எதுகை மோனை சந்தங்களுடன் இயற்றியிருக்கிறார் தாசர். அவர் கொள்ளு-கொள்ளு-பேரனின் ஆசைப்படி, தமிழில் புத்தகமாக வந்தால் நல்லது. நமக்கு அன்பளிப்பாக ஒரு தொகை தர்றேன்னு சொல்லியிருக்கார். நமக்காக இல்லைன்னாலும், நமக்கு மேற்படி உதவியவர்களுக்கு பகிர்ந்தளிக்கணும். 

ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஸ்ரீராமார்ப்பணமஸ்து.

***

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP