Thursday, September 21, 2017

சென்னை - பயணக் குறிப்புகள்

சென்னை - பயணக் குறிப்புகள்

திருச்சி கல்யாணத்துக்கு (கபடி விளையாட) நான் வேணா போறேனேன்னு விஜய் சொல்வதுபோல், எந்த ஒரு சின்ன வேலை இருந்தாலும், சென்னைதானே (எந்த ஏரியாவா இருந்தாலும் ஒரு ரவுண்ட் திருவல்லிக்கேணி போயிடலாம்னுதான்!!) நான் போறேன்னு கிளம்பிடுவேன். ஆகவே இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது சென்னை வந்து போய்விடுவது வழக்கம். 

சென்ற ஞாயிறும் இப்படிதான் (சில ஆண்டுகள் கழித்து) பிருந்தாவனில் கிளம்பிப் போனேன். வீட்டிலிருந்து ரெயில் நிலையம் BMTCல் போகும்போதே பிரச்னை துவங்கிடுச்சு. பேருந்தில் யாருடையதோ பணத்தை pickpocket அடிச்சிட்டாங்களாம். ஒரே கூச்சல். பேருந்தை காவல் நிலையத்துக்கு விடுங்கன்னு சத்தம். போக 2.50, வர 2.50, சாப்பிட தயிர் சாதம்னு த்ரிஷா ஆண்டி சொல்வதைப் போல், போக வர SMS ticket, ரெயிலில் சாப்பிட உப்புமா இதைத்தவிர சில சில்லறை மட்டுமே வைத்திருந்த நான், மறுபடி இன்னொரு பேருந்து பிடிக்கணுமா, காசு இருக்கான்னு பார்க்க நினைக்கையில் - பிரச்னை எப்படியோ தீர்வாகி வண்டி சரியாக ரெயில் நிலையத்துக்குப் போயிடுச்சு. 

பிருந்தாவனில் பயணம் <எப்படி இருக்கும்னு மக்கள் நினைப்பது>



பிருந்தாவனில் பயணம் <நிஜமாக எப்படி இருக்கும்>


பயணிகளை விட அதிகமாக இருக்கும் வியாபாரிகளை வேடிக்கை மட்டுமே பார்த்து - காதில் தாசர் பாடல்களுடன் சென்னை போய் சேர்ந்தாச்சு. 

விடியலில், திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் & கடற்கரையில் ஒரு நடைப்பயிற்சி. பின்னர் ஒரு சில மடங்கள், கோயில்கள். மாலையில் பாரதி சாலையில் பழைய புத்தகக் கடைகளை ஒரு சுற்று பார்த்துவிட்டு, climaxஆக மீசைக்காரர் கோயில். இதற்கு நடுவே எந்த வேலைக்கு (விழாவிற்கு) சென்றோமோ அங்கே போய் தலைமை தாங்குவது - இதுவே நம் பொதுவான அட்டவணை. கோயிலில் புளியோதரை & வேறு ஏதாச்சும் வாங்கி சாப்பிடுவது பற்றிய தகவல் இங்கு தேவையில்லாதது.

நாம் முன்னர் இருந்த தெருக்களில் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள் இருந்த தெருக்களில் (யாருன்னு கேட்டு பழைய autographகளை கிளறக்கூடாது!) சுற்றும்போது - cinema paradiso படத்தில் 30 ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு வரும் Directorஐ பழைய முகங்கள் பார்த்து அடையாளம் கொள்ளும் - அதே போல் நம்மையும் ஓரிருவர் பார்த்து சிரித்தால் (ஹாஹான்னு இல்லை. சும்மா புன்னகை மட்டுமே), நமக்கு ஒரு திருப்தி. 

கோயிலுக்குப் போய்வருவது ஒரு நண்பர் வீட்டிற்குப் போவதுபோல். என்ன, அடியேன் மகளோடு மட்டும் அங்கு போகமுடியாது. என்ன பிரச்னைன்றீங்களா? சென்ற கோடையில் இருவரும் கோயிலுக்குப் போய் மீசைக்காரரை பார்த்துவிட்டு வந்தபிறகு, பங்கேற்கப் போயிருந்த விழாவில் அனைவரிடமும் - அப்பா, கோயிலில் அழுகிறாரு. இனி அவரோடு கோயிலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவரை (மட்டும்) பார்த்தா அது தானா வருது. நான் என்ன செய்ய? 

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கும் இடம் ஆகையால் மாடுகள் ரொம்ப அதிகமா இருக்குன்னு சொல்வாங்க. சாணிகளை ஓரமா போய் போடுங்கன்னும் அவைகளிடம் சொல்ல முடியாது. ஆகவே எல்லா தெருக்களிலும் மாடுகள் மற்றும் சாணிகள். இதுகூட ஓகேதான்(?!?). ஆனா இந்த மனுசங்க போடுற குப்பைகளையாவது ஓரமா / தொட்டியில் போடலாமே? ம்ஹும். எங்கு பார்த்தாலும் குப்பைதான். கோயில் விழா / ரதம் ஆகிய நாட்களில் மட்டுமே சுத்தம் / ப்ளீச்சிங் பவுடர் போலிருக்கு. 

திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் சுற்றியபோது கவனித்த இன்னொரு விஷயம். ஏகப்பட்ட மருத்துவர்கள் / மருத்துவமனைகள். மழை பெய்துகொண்டிருந்த அன்றைய விடியலில் ஏதாவது ஒரு மருத்துவர் கிடைத்திருந்தால் / மருத்துவமனை திறந்திருந்தால், தங்க நேரத்தை (Golden hour) தவறவிட்ட அடியேன் தந்தையாரை காப்பாற்றியிருக்கலாம். ம்ம்.

***


1 comments:

bandhu September 21, 2017 at 3:12 PM  

கடைசி வரி நெஞ்சைத் தொட்டது. உண்மையாகவே மினிமலிஸ்ட் ஆகிவிட்டீர்கள் போல இருக்கிறது? எனக்கும் ஆசை தான்! எங்கே...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP