Sunday, March 20, 2016

தாசர் மாபியா - வாட்சப்பில் வினாடிவினா

வாட்சப்பில் வினாடிவினா

போன ஆண்டு நடுவில் ஆரம்பித்தேன் அந்த கேள்வி பதில் நேரம் - குடும்ப வாட்ஸப்பில். எதைப் பற்றி? - வேறென்ன. நம்ம தாசர் பாடல்களைப் பற்றிதான். தாசர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் எழுதிய புத்தங்கள், பாடல்கள் இன்னபிறவைப் பற்றி. அந்த வினாடிவினா நிகழ்ச்சியில், தினம் ஒரு கேள்வி கேட்கப்படும். விடையை எனக்கு தனியாக வாட்சப் செய்ய வேண்டும். பொதுவில் போட்டுவிடக் கூடாது. தினம் இந்த எச்சரிக்கையைச் செய்தும், சில நாட்கள், சிலர் தங்கள் விடையை பொதுவிலேயே போட்டுவிடுவர். பிறகு ‘மன்னிச்சு’ கேட்டும் விடுவர்.

50 நாட்கள் நடத்தியதில், தினமும் சராசரியாக 8-10 பேர் விடையளித்து வந்தனர். பலர் சரியாக. சிலர் சரியாக-தப்பாக. எனினும், மக்களின் பொதுஅறிவுக்காக போட்டியை நடத்தி, தினமும் மதிப்பெண்கள் வழங்கி வந்ததால், மக்களும் ஆர்வத்துடன் கலந்து விடையளித்து வந்தனர்.

அது போன ஆண்டு.

நிற்க.

இந்த ஆண்டு தாசர் பாடல்களைப் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டி, இதற்கான ஒரு அமைப்பில் சென்று சேர்ந்தபோது அவர்களிடம் மேற்கண்ட வினாடிவினாவைப் பற்றி சொன்னேன். உடனே இதை ஏன், நம் அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு செய்யக்கூடாதுன்னு கேட்டு, உடனடியாக ஒரு திட்டமும் தயாரிக்கப்பட்டது. இதற்கான பல்வேறு yahoo, google groupsகளில் விளம்பரம் செய்யப்பட்டு ஆர்வமுள்ள மக்களைத் திரட்டும் வேலையும் நடந்தது.

வாரம் இரு முறை (திங்கள் & வியாழன்) தலா 10 கேள்விகள் கேட்கப்படும். விடையளிக்க அடுத்த மூன்று நாட்கள் கால அவகாசம். விரிவான விடையெல்லாம் கிடையாது. ஓரிரு சொற்கள் மட்டுமே. இதெல்லாம் விதிகளாக சொல்லப்பட்டன.

சென்ற வாரம், முதல் பகுதி கேள்விகள் கேட்கப்பட்டன. இதுவரை 30 பேர் உள்ள குழுவில் 15 பதில்கள் வந்தன. அமெரிக்கா, வட இந்தியாவிலிருந்தும் சேர்ந்திருக்கின்றனர்.

கன்னட தாச சாஹித்யத்தைப் பற்றி மக்களை தினமும் ஒரு சில நிமிடங்களாவது படிக்க, யோசிக்க வைக்கணும்னு இந்த முயற்சி. எவ்வளவு நாட்கள் ஓடுதோ ஓடட்டும்னு துவக்கியாச்சு. இதில் இன்னொரு லாபம் என்னன்னு பார்த்தீங்கன்னா, கேள்விகள் கேட்பதற்காக நானும் நிறைய படிக்க வேண்டியிருக்கு. பொதுநலம் கலந்த சுயநலம். படித்து, கேள்விகளைத் தொகுத்து, வெளியிட்டு, விடைகளை சரிபார்த்து, அவற்றை வெளியிட்டு - முதல் சீசனுக்கு 3 மாதத்துக்காவது போட்டியை நடத்தணும்னு அவா. மற்றவை புரந்தரதாசர் கையில்.

***

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP