Friday, February 3, 2012

எங்க அலுவலகமும் கருத்துக் கணிப்புகளும்!






எங்க அலுவலகத்தில் அப்பப்போ விதவிதமான கருத்துக் கணிப்புகள் நடக்கும். எல்லாரும் கட்டாயம் பதில் அளிக்க வேண்டுமென்று கூட்டம் போட்டு, தொலைபேசி, மின்னஞ்சல் அனுப்பியெல்லாம் கெஞ்சுவார்கள். நாங்களும் எங்க பொன்னான நேரத்தை செலவிட்டு அதில் பங்கு பெற்று பதிலளித்துவிட்டு, அந்த பதில்களுக்கேற்ப மாற்றத்தை விரும்பி
காத்திருந்தால்... காத்திருந்து காத்திருந்து காலங்கள் போய்விடும். அப்படி நாங்க எதிர்பார்ப்பது மதுரை கருத்துக் கணிப்பின் பின்விளைவுகளைப் போல மாற்றங்களை அல்ல. சிறுசிறு மேம்படுத்துகைகள் (enhancements) மட்டுமே. ஆனா அப்படி எதுவுமே நடக்காதுன்னு பல வருடங்கள் கழித்தே புரிந்தது. அலுவலகத்தில் இதெல்லாம் ஜகஜமப்பான்னு சொல்றீங்க. சரி.
மேலே (கீழே) படிங்க.


Support Departments என்று சொல்லக்கூடிய துறைகளின் வேலையை மதிப்பிடும்படியான ஒரு கக'வில் எப்போதும் ஒரு தமாஸ் நடக்கும். எங்க அலுவலகத்தில் வெளிநாட்டில் இருக்ககூடிய (ஏறக்குறைய) அனைவருக்கும் பிரச்னை தரக்கூடிய துறை ஒண்ணு இருக்கு - அதான் Visa எல்லாம் வாங்கித் தரும் துறை. நிறைய பேர் அந்தப் துறையின் மேல் செம கடுப்புலே இருப்பாங்க. ஆனா, வருடத்திற்கு இரண்டு முறை வரும் இந்த கருத்துக்கணிப்பில், அந்த துறையின் சார்பாக கேள்விகளே இருக்காது. பொத்தாம் பொதுவாக சில கேள்விகளை கேட்டுவிட்டு மிச்சத்தை சாய்ஸில் விட்டுவிடுவார்கள்.


அதுவும் நாம நீட்டி முழக்கி எழுத இடம் கொடுக்காமல், நான்கு பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் கேள்விகளாக கொடுத்து டென்சனாக்கி விடுவார்கள். எதுக்கும் பதிலே கொடுக்காமல், வெளிநடப்பு செய்தாலும் பிரச்னைதான். அடுத்த அப்ரைசல் ->  ஆப்ரைசல்.



ஒரு ஐந்தாயிரம் பேரை கக'வில் பங்கு பெறச் செய்து பதில் பெறுவதும் சுலபமானதல்ல. கொடுத்ததை பூர்த்தி செய்தோமா, அடுத்த வேலையை பார்த்தோமான்னு இல்லாமல் நம்ம ஆட்களும் அதில் சந்தேகமா கேட்டு நோண்டுவாங்க.


ஒரு முறை நடந்த விஷயம். எங்க அலுவலகத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவனம் மூலமாக ஒரு கக நடத்தினாங்க.


அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு கடவுச்சொல் கொடுத்து, அதை வைத்து தளத்தில் பதிலளிக்க வேண்டும். ஒருவருடைய கடவுச்சொல்லை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லிவிட்டார்கள். வழக்கம்போல் பலருக்கு பலவிதமான பிரச்னைகள். ஒருவருக்கு தன் கடவுச்சொல்லை பயன்படுத்தினாலும், கக'க்குள் போகமுடியவில்லை. தன் மேனேஜரிடம் சொல்ல, அவர் தன்னுடைய மேனேஜரிடம் சொல்ல, அவரோ தன் கடவுச்சொல்லை அனுப்பிவிட்டார்.


நம் நண்பரும் அதை வைத்து உள்நுழைய, அந்த மேலாளர் கொடுத்துள்ள பதில்கள் அப்படியே தெரிய வந்திருக்கிறது. அதுவும் எப்படி? அலுவலகத்தை கன்னாபின்னாவென்று திட்டுவதைப் போல், அனைத்தும் மிகக் குறைந்த மதிப்பெண்களைக் கொண்ட / கடுமையான பதில்களை கொடுத்திருக்கிறார்.


நாட்டுப்பற்றைப் போல் அலுவலகப்பற்றைப் பற்றி அருமையாக பேசும் - மிகப் பெரிய பதவியில் இருக்கும் அவரே இப்படி திட்டும்போது நாமும் அப்படியே செய்தால் என்ன என்று அப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது. அப்படி செய்தாலும், ஒன்றும் மாற்றம் இருக்காது என்று அடுத்த வருடத்தில் தெரிந்தது.


அதனால் இப்பல்லாம் கக'ன்னாலே ஜாலியாயிடும். கண்ணை மூடிக்கிட்டு ஏதோ ஒரு பதிலைக் கொடுத்து மூடிவிட்டால், அடுத்த கக வரும்வரை பிரச்னையில்லை. நிஜமான தேர்வுகளிலேயே காசை சுண்டிப் போட்டு பதிலளிச்சவங்க நாங்க. எப்பூடி?


***


பிகு: பதிவு முழுக்க கக = கருத்துக் கணிப்பு. நீங்க வேறேதும் நினைச்சிடாதீங்க.


***



3 comments:

dondu(#11168674346665545885) February 3, 2012 at 8:50 PM  

கக ககபோ!

அன்புடன்,
டோண்டு ராகவன்

Yaathoramani.blogspot.com February 4, 2012 at 6:18 AM  

சுவாரஸ்யமான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
த.ம 1

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP