Sunday, February 12, 2012

காலிக்கடைஃபோபியாவும் கடை சார்ந்த விஷயங்களும்




ஹிஹி. வாடிக்கையாளர்கள் யாருமே இல்லாமல் காலியாக இருக்கும் கடைக்குள் நுழைய எனக்கு பயம். அதைத்தான் சொல்ல வந்தேன். ஏன் அப்படி?



நம்ம பர்சனாலிட்டியும், முழுக்கிற முழியும் வெச்சிண்டு எந்த கடைக்குள் நுழைந்தாலும், அங்கே எதையாவது ஆட்டைய போட வந்தவன் மாதிரியே இருப்பதால், அந்த கடைச் சிப்பந்தி யாராவது ஒருவர் பக்கத்தில் வந்து நின்று விடுவார். இதை பாக்கறீங்களா சார்? இது $xyz சார். எந்த ரேஞ்ச்லே வேணும் உங்களுக்கு - இப்படி கேக்க ஆரம்பிச்சிடுவார். அதனால், கும்பல் ஏராளமாய் உள்ள, கடைச் சிப்பந்திகள் மற்றவர்களோடு மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் கடைக்குள் மட்டுமே செல்வேன்.



ஆப்பிள் ஸ்டோர் ஒரு நல்ல உதாரணம். தமிழக சட்டசபைக்கு வெளியே உள்ள இடம் போல் எப்போதும் கும்பலா இருக்கும். (த.ச'விலிருந்து வெளிநடப்பு செய்து வெளியே சத்தம் போட்டுக்கிட்டு கும்பலா நின்றிருப்பாங்கல்லே, அதைச் சொன்னேன்!). எதுவும் வாங்கலேன்னாலும் பரவாயில்லை. ஒண்ணும் சொல்லமாட்டாங்க. ஐபேட், அது இதுன்னு கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரலாம்.



இந்த ஃபோபியா என் குடும்பத்தில் உள்ள சிறிய மெம்பருக்கு சொன்னாலும் புரியாது. அவர் நினைத்த கடையின் உள்ளே போகவேண்டுமென்று அடம் பிடிப்பார். சமாதானம் செய்து இழுத்து வருவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.



இந்த பிரச்னைக்கு கொஞ்ச நாள் கழிச்சி ஒரு ஐடியா கண்டுபிடிச்சோம். எந்த கடைக்குள் போனாலும், உடனே சில பொருட்களை எடுத்து, தள்ளுவண்டியில் போட்டுக் கொள்ளணும். பிறகு ஆற அமர கடையை சுற்றிப் பார்த்துவிட்டு, வரும்போது அந்த பொருட்களை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வெளியே ஓடி வந்துவிட வேண்டியதுதான்.



அப்படியும் சில கடைகளில் விடமாட்டாங்க. வேடிக்கை பார்க்கும்போதே பக்கத்தில் வந்து, சார், உங்க மின்னஞ்சல் முகவரி / தொலைபேசி எண் குடுங்க. நிறைய கூப்பன் அனுப்பறேன். இன்னிக்கு பொருட்கள் வாங்கினா அதிகமான தள்ளுபடி கிடைக்கும் அப்படின்னு மொக்கை போட ஆரம்பிச்சிடுவாங்க. இந்த மாதிரி சமயங்களில்தான் நண்பர்கள் கை கொடுப்பாங்க. எப்படின்றீங்களா? அவங்க வீட்டு முகவரி, அவங்க தொலைபேசி எண் இதெல்லாம் என் நினைவில் 'பளிச்'னு பதிய வைக்கிறாங்களே. பிறகென்ன? அதையெல்லாம் கொடுத்துட்டு எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான். அப்புறம், அந்த கடையின் பாடு, நண்பர்கள் பாடு. எனக்கு ஒண்ணும் தெரியாது.



அதையும் மீறி சில இடங்களில் நிஜமாகவே பொருட்களை வாங்கினால், பில் போடும்போது அந்தம்மா முறைத்துக் கொண்டே - டேய், இன்னிக்கு வாங்கறே. நாளைக்கு மறுபடி வந்து இதை திருப்பிடக் கூடாதுன்னு சொல்ற மாதிரியே இருக்கும். இதனால், கொஞ்ச நாளாவது பயன்படும் என்று நினைக்கும் பொருட்களையே வாங்குவது. இல்லேன்னா வெறும் வேடிக்கைதான். என்ன நான் சொல்றது?



ஆனா அதிலும் சில விதிவிலக்குகள் வந்துவிடும். சில தவிர்க்க முடியாத காரணங்களால் (பின்னே, தங்ஸ்'ஐ திட்டவா முடியும்?) பொருட்களை திருப்பிக் கொடுக்கப் போனால், நான் போகாமல் தங்ஸ்'ஐ அனுப்பிவிடுவேன். ஹிஹி.



கடைசியில் தங்க்ஸ் ஊருக்குப் போகும் தருணமும் வந்தது. முன்னர் நாங்கள் வேடிக்கை பார்த்தபோது முறைத்துப் பார்த்த கடைகளில் போய் பொருட்களை வாங்கினோம். கத்தி-செட் வாங்கும்போது ஒரு சிப்பந்தி முன் அதை ஆட்டிக் காட்டி, பெருமையாய் வண்டிக்குள் போட்டேன். (வாங்கிட்டேன் பாத்தியா!!).



ஆனால், விதி சிரித்தது.



பெட்டிகளின் எடை அதிகமாகி விட்டதால், சில புது பொருட்களை தங்க்ஸ் விட்டுச் சென்றுவிட, அவற்றை நான் தனியாக போய் கடைகளில் திருப்பிக் கொடுக்கணும்.



யாராவது என் கூட வர்றீங்களா, ப்ளீஸ்?



****



3 comments:

சாகசன் February 12, 2012 at 7:14 AM  

நான் தான் முதல்ல !!!

சாகசன் February 12, 2012 at 7:22 AM  

வரும்போது அந்த பொருட்களை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வெளியே ஓடி வந்துவிட வேண்டியதுதான்.//

எங்கேந்து தான் இந்த மாதிரி எல்லாம் தோணுதோ ??

அப்புறம், அந்த கடையின் பாடு, நண்பர்கள் பாடு//

என் பிரண்ட போல யாரு மச்சான் ?? அவன் கடை கடையா ஆப்பு வச்சான்

தமிழக சட்டசபைக்கு வெளியே உள்ள இடம் போல் எப்போதும் கும்பலா இருக்கும். //

உள்ளார உள்ள மாதிரி சண்ட போடாம இருந்தா சரி தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi February 14, 2012 at 9:00 AM  

:)) நல்லாருக்கு இந்த போபியா..
நான் தலைப்பைப்பார்த்ததும்
எதோ இந்த ப்ளாக் கடையைத்தான் சொல்றீங்களோ.. அது அப்பப்ப கூட்டம் வந்து போய்ட்டுத்தானே இருக்குன்னு பார்த்தேன்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP