என் வாழ்க்கைப் பாதையை மாற்றிய அந்த சுடர்மணி!!
அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும்.(இப்போ மட்டும் என்ன, ஒரு ரெண்டு மூணு வயசு கூட, அவ்வளவுதான்..). குடும்ப நண்பர்கள் ஒரு இருபது பேர் கிளம்பி பிச்சாவரம் போனோம். போயிட்டு வர்ற வழியில் சிதம்பரம் கோயிலுக்கு போயிருந்தோம். அந்தக் கோயில் குளத்தில் குளிக்க அனைவரும் இறங்கினர். (இப்போ அந்த குளத்தில் குளிக்க அனுமதி இருக்கான்னு தெரியல).
அப்போ எனக்கு நீச்சல் தெரியாது. (இப்போ? ன்னு யாரும் கேட்கப்படாது). அதனால் 'தைரியமா' மேல் படிக்கட்டுலேயே உட்கார்ந்து சொம்புலே (சிம்பு'லே இல்லே) தண்ணி மொண்டு குளிக்க ஆரம்பிச்சேன். (கேவலமாதான் இருந்துச்சு. இதெல்லாம் பாத்தா முடியுமா!). திடீர்னு கால் வழுக்கி சில படிக்கட்டுகள் இறங்கி தண்ணிக்குள்ளே போயிட்டேன். சென்ற ஆட்சியில் குளங்களை சரியாக சுத்தம் செய்யாததால்தான் நான் அப்படி வழுக்கிவிட்டேன்னு எனக்கு இப்போ புரியுது. அம்மா வாழ்க.
இந்த மாதிரி சமயத்தில், 'தலைக்கு மேல் போயாச்சு, ஜான் போனா என்ன, முழம் போனா என்ன'ன்னு பழமொழியெல்லாம் சொல்லக்கூடாது. இன்னும் 'விவரம்' தெரியாது வயசு. 'பாக்க' வேண்டியது எவ்வளவு இருக்கு? அதனால், கையை காலை உதைச்சி (என்னோட கை கால்தான்) அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யறேன்.
ஆனா முடியல. கீழே கீழே போறா மாதிரி இருக்கு. அந்த சிறு குளத்தில் இருக்கிற தண்ணி, ஒரு பெரிய கடல் மாதிரி இருக்கு. லியோ டி காப்ரியோ மாதிரி தண்ணிக்குள்ளே 'ஸ்லோ மோஷன்லே' போறேன். அந்த டைட்டானிக் இறுதிக் காட்சியே ஒரு சின்ன தண்ணித் தொட்டியில்தான் எடுத்தாங்கன்னு சமீபத்தில்தான் எனக்கு தெரிஞ்சுது. (யாருப்பா அது,
தண்ணித் தொட்டின்னவுடனே, தமிழக அரசின் புது சட்டசபையான்னு கேக்கறது? அது எண்ணைத் தொட்டி!!)
நீங்க இங்கே ஜாலியா படிச்சிட்டிருக்கீங்க. நானோ அங்கே தண்ணீரில் மூழ்கி மேலே வர கஷ்டப்பட்டுட்டிருக்கேன். அப்போ திடீர்னு என் கையில் ஏதோ தட்டுப்பட்டது. 'மூழ்கறவன் கைகளுக்கு மாட்டினதெல்லாம் தெய்வம்' என்கிற புதுமொழிக்கேற்ப (திடீர்னு நானே யோசிச்சது!), நான் அதை புடிச்சி மேலே வர முயற்சிக்கிறேன்.
ஆனால், யாரோ மேலேயிருந்து 'அதை' என்கிட்டேயிருந்து விடுவிச்சி, என்னை தள்ளி விடப் பாக்கறாங்க. ஆஹா, இது தற்கொலையோ விபத்தோ இல்லைடா சின்னபையா, இது ஒரு அப்பட்டமான கொலைன்னு நானே (மனசில்) சொல்லிக்கறேன்.
ஆனா, நான் விடலை. (பருவத்தை சொல்லலே. விடவில்லை என்பதை சுருக்கி சொன்னேன்). நல்லா புடிச்சி இழுக்கறேன். கூடவே பக்கத்தில் ஒரு 'கால்' தெரியுது. (ஏன் முழுசா தெரியலியான்னு கேக்கக்கூடாது, நான் சொன்னது நம் உடலின் ஒரு பாகம் - கால்).
நான் டக்குன்னு 'அதை' விட்டுட்டு 'காலை' புடிச்சிக்கறேன். தென்னை மரம் ஏறுவதைப் போல (உடனே மரம் ஏறத் தெரியுமான்னு கேட்ககூடாது, ஏன்னா, அதுவும் தெரியாது. அப்போ எதுதாண்டா தெரியும்னு நீங்க சொல்றது கேக்குது. ம்ம். ) ஏறி ஒருவழியா தண்ணிக்கு மேலே வந்துட்டேன். பிறகுதான் தெரிஞ்சுது, நான் புடிச்சி இழுத்தது, எங்க மாமாவோட ஜ**ன்னு.
இப்போ பதிவோட தலைப்பை ஒரு தடவை படிங்க. 'அது' மட்டும் இல்லேன்னா, நானும் இல்லே. இந்த பதிவும் இல்லே.
சரிதானே?
***
5 comments:
தலைப்பும் அதற்கு விளக்கமாக அமைந்த பதிவும்
இடையிடையே கொடுத்த கமெண்ட்டும்
மிகவும் அருமை
ரசித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
ஹாஹா ஹாஹா
க்ளாஸ்... ரொம்பநாள் கழிச்சி ச்சின்னப்பையன் ட்ரேட்மார்க் சிரிப்பு சரவெடி.. :)))))
:)))
// இப்போ மட்டும் என்ன, ஒரு ரெண்டு மூணு வயசு கூட, அவ்வளவுதான்
This may be your mental age. :-)
Post a Comment