Sunday, January 9, 2011

கழுகுப் பார்வை - தர நிர்ணயம் - பகுதி 5


கீழே இருக்கிற படத்தை ஒரு தடவை பாத்துடுங்க. ஒரு கட்டிடம் மாதிரி தெரியுதா. ஒரு அடித்தளம்; நான்கு தூண்கள்; ஒரு கூரை இருக்குதா. இதுதான் 'தர'த்தின் கழுகுப்பார்வை.

ஒரு நிறுவனத்தின் அடித்தளம், அதனுடைய 'தர மேலாண் அமைப்பு'தான். அந்த அமைப்பை சரியா நிறுவியிருக்கோமான்னு அடிக்கடி பாத்துக்கதான் ISO, CMMi போன்ற வழிமுறைகள் இருக்கு.

அடுத்து நான்கு தூண்கள். நம்ம தரத்தை தொடர்ச்சியா எப்படி முன்னேற்றலாம்னா இந்த நான்கு தூண்களை வெச்சித்தான்.

(1) Tools - நமக்குத் தேவையான மென்பொருட்களை தயாரித்தோ, சந்தையில் வாங்கியோ பயன்படுத்தினால், நம் வேலைகள் சுலபமாவதோடு வெளியீடுகளிலுள்ள வேறுபாட்டையும் களையலாம்.

(2) Six Sigma - தவறுகள் எதனால் ஏற்படுதுன்னு கண்டுபிடித்து அவற்றை குறைக்க வழி செய்யும் ஒரு முறைதான் இது. புள்ளியியல் (Statistics) முறைகளைப் பயன்படுத்தி மாறும் தன்மையை (Variation) கண்டுபிடிக்கும் இந்த முறை மோட்டரோலா நிறுவனம் கண்டுபிடித்ததாகும்.

(3) Training - புதிய தொழில்நுட்பமோ, மென்பொருட்களோ அல்லது ஏற்கனவே இருக்கும் முறைவழிகளில் (Process) மாற்றங்களோ, எதுவாக இருந்தாலும் - பணியாளர்களுக்கு பயிற்சி அவசியமாகும். இதனால் தவறுகள் குறைவதோடு, தரமும் மேம்படும்.

(4) Metrics - தரத்தில் நாம முன்னேறுகிறோமா இல்லையான்னு பார்க்க எல்லா நிறுவனங்களிலும் நிறை பகுப்பாய்வு (Quantitative Analysis) செய்வார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் மெட்ரிக்ஸ். உதாரணத்துக்கு : Defect variance, Effort variance. இதுக்கெல்லாம் நிறுவனத்தில் ஒரு இலக்கை நிர்ணயித்து - இந்த மெட்ரிக்ஸ் மூலமாக அந்த இலக்கை எட்டுகிறோமா இல்லையான்னு பார்ப்பார்கள்.

இந்த நான்கு தூண்களின் உதவியுடன் பொருட்களின் தரத்தை மேன்மேலும் உயர்த்திக் கொள்ள முடியும்.

இப்போ அடுத்து இன்னொரு படத்தை பாருங்க.


தர மேலாண் அமைப்பில் என்னென்ன இருக்கணும்னு சொல்றதுதான் இந்த படம்.

கீழிருந்து மேலாக:

1. பொருளை உற்பத்தி செய்வதிலுள்ள பல்வேறு நிலைகளை எப்படி செய்வதுன்ற முறைவழிகளை (Process) தெளிவா ஆவணப்படுத்தணும்.

2. அந்த முறைவழிகளை செய்ய உதவும் படிமங்கள் (Forms), படிம அச்சுகள் (Templates), செந்தரங்கள் (Standards) போன்றவற்றை ஆவணப்படுத்தணும்.

3. மேற்கண்ட முறைவழிகளை எப்படி வகுப்பதுன்ற வழியையும் கண்டுபிடிக்கணும்.

4. எல்லாவற்றுக்கும் மேலாக தரக் கையேடு (Quality Manual) ஒன்று உருவாக்கணும். இதுதான் ஒரு நிறுவனம் எப்படி செயல்படுதுன்னு சொல்லக்கூடிய ஆவணமாகும். ஒவ்வொரு நிறுவனத்திலும் ISO பார்க்க விரும்பும் முதன்மையான ஆவணம் இது.

*****

இன்னும் அடுத்த பகுதிகளில் ISO மற்றும் CMMi பற்றி பாக்கப் போறோம். அத்துடன் இந்த தொடர் முடிந்து விடும். அதனால் கேள்விகள் இருந்தா இப்பவே கேட்டுடுங்க.

*****

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP