Monday, January 3, 2011

தலைகால் புரியாமல் - சிறுகதை மாதிரி!

அமெரிக்காலிருந்து வந்த என் நண்பன் ஒரு பல்லி மிட்டாய் கொண்டு வந்து கொடுத்திருந்தாகூட சந்தோஷப்பட்டிருப்பேன். இப்படி சொதப்புவான்னு நான் நினைக்கவேயில்லை. அப்படி என்னதான் கொடுத்தான்னு கேக்கறீங்களா? நமக்கு நாமே திட்டத்துலே தலைமுடி வெட்டிக்கிற ஒரு கருவியை கொண்டு வந்திருக்கான். அங்கே நம்மவங்க நிறைய பேர் இப்படித்தான் அவங்களே (தலைமுடியை) வெட்டிப்பாங்களாம். எனக்கு வேண்டாம்டான்னு சொன்னாலும் கேக்காமே, வெச்சிக்கோன்னு சொல்லிட்டு போயிட்டான்.

என் அறை நண்பர்கள் ரொம்பவே த்ரில்லாயிட்டாங்க. மாதா மாதம் 60-70 ரூபாய் மிச்சம். வருடத்தில் 750 ரூபாய் வரைக்கும். கண்டிப்பா இதை நாம எல்லோர் தலைக்கும் பயன்படுத்தறோம்னு சொல்லிட்டாங்க.

இப்போதான் பிரச்சினையே. முடிதிருத்தகத்துக்குப் போய் தலைய கொடுத்துட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டே பழக்கமாயிடுச்சே தவிர, எப்படி முடி வெட்டறதுன்னு யாருக்கும் தெரியல. எந்த தலையை வெச்சி சோதனை பண்றது? சுத்திமுத்தி பாத்து, விரோதிகள் (நண்பர்களுக்கு எதிர்ப்பதம்) மூவரும் என் தலையை பார்த்தார்கள். நான்தான் வீட்டிலும் எலி, சோதனைக்கும் எலி. உடனடியா சோதனை பண்றதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.

குரங்கு ஒண்ணு, ரொட்டித்துண்டை ரெண்டு பேருக்கு பிரிச்சி கொடுத்த கதை தெரியும்தானே? அதே மாதிரி, இங்கே எடுத்தா அங்கே குறையுது, அ எ இ குறையுதுன்னு - இவங்க என் தலையை ஒரு வழியாக்கிட்டாங்க. ஆபரேஷன் சக்ஸஸ் - கத்தினான் ஒருவன். எல்லோருக்கும் பரம திருப்தி. என் தலைதானே, அவங்களுக்கென்ன.


இருந்தாலும் வெளியில் பாக்கறவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரியணும்லே. இரவு சாப்பிட வெளியே போனோம். வழக்கமா சாப்பிடற ஹோட்டலில் பரிமாறுபவர் என்னை மட்டும் ரெண்டு தடவை திரும்பி பார்த்த மாதிரி இருந்தது. நண்பர்களோ, அதெல்லாம் ஒண்ணுமில்லேடான்னு சமாளிச்சிட்டாங்க. நான் இன்னும் சமாதானமடையவில்லை. இருட்டில் சரியா தெரியாது. நாளை காலை வெளிச்சத்தில் அலுவலகம் போனாதான் தலையப் பத்தி மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியும்னு சொல்லிட்டே வீட்டுக்கு திரும்பி போனேன்.

**

அடுத்த நாள் காலை.

இன்னிக்குன்னு பாத்து எல்லாரும் என் தலையை பாக்கறமாதிரியே இருக்குது. ஆனா நான் அவங்களை பாக்கும்போது, டக்குன்னு குனிஞ்சிடறாங்க.

ட்ரெயினில் தினமும் பார்க்கும் பொண்ணுங்க சிரிக்கிறா மாதிரியே இருக்குது. இதே இன்னொரு நாளா இருந்தா, நானும் அவங்கள பாத்து.. சரி விடுங்க. இப்போ எனக்கு அழுகை அழுகையா வருது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி திரும்ப வீட்டுக்கே போய் ஒரு வாரம் மறுபடி தலைமுடி வளர்ற வரைக்கும் லீவ் போட்டுடலாமான்னு ஒரு யோசனை திடீர்னு வந்து போனது.

ஆனா அதுக்குள் அலுவலகமே வந்துடுச்சு.

உள்ளே போனவுடன், ஒரு நண்பனை கூப்பிட்டு கேட்டேன் - "டேய். என்னை சரியா பாரு. ஏதாவது வித்தியாசமா தெரியுதா"?

என்னை மேலே கீழே பார்த்தவன், பகபகன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டான்.

"டேய். ஒழுங்கா சொல்லு. என் தலை அப்படி கேவலமாவா இருக்கு. எல்லாரும் ஏண்டா என்னையே பாக்கிறீங்க"?

அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னால் கோபத்தை.

"டேய்ய்ய்".

"என்னடா? உன்னால் மட்டும் எப்படி இப்படி செய்ய முடியுது"?

"மரியாதையா சொல்லு. எதுக்கு சிரிக்கிறே? தலைய பாத்துதானே"?

"என்னது. தலையா? உன் தலைய யார்றா பாத்தா"?

"அப்புறம் வேற எதுக்கு எல்லாரும் லூசு மாதிரி பாக்கறாங்க? நீ ஏன் சிரிக்கிறே"?

"ரெண்டு காலிலும் வெவ்வேறே ஷூ போட்டிருந்தா முறைச்சி பாக்காமே, என்ன கொஞ்சுவாங்களா"?


**

ஹிஹி. தலைகால் புரியாம நடந்துக்கறான்னு கேள்விப்பட்டிருக்கீங்கல்ல. அதே மாதிரிதான். தலையப் பத்தியே யோசித்துக் கொண்டிருந்ததால், இந்த ஷூவை கவனிக்காமே மாத்திப் போட்டுக்கிட்டேன் போல. போதும் ரொம்ப சிரிக்காதீங்க. ஏன், நீங்க இந்த மாதிரி செய்ததே இல்லையா? போங்க சார், போய் வேலை ஏதாவது இருந்தா பாருங்க.

*****

7 comments:

Unknown January 3, 2011 at 11:12 AM  

நல்ல நகைச்சுவை

a January 3, 2011 at 11:18 AM  

ஹா ஹா........
கடைசி வரைக்கும் தலமுடி பத்தி சொல்லவேயில்ல...

தங்கராசு நாகேந்திரன் January 4, 2011 at 12:37 PM  

நன்றாக சிரிக்க வைத்தது

cheena (சீனா) January 4, 2011 at 7:26 PM  

நச்சுன்னு முடிவோட நகைச்சுவைக் கதை - சூப்பர் -

ஸ்வர்ணரேக்கா January 5, 2011 at 12:58 AM  

//போங்க சார், போய் வேலை ஏதாவது இருந்தா பாருங்க.//

--- இதைவிட (படிச்சு, சிரிக்கறத விட)எங்களுக்கு வேற என்ன வேலை....

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP